இலங்கை முஸ்லிம்கள்: உப மரபினங்கள்
Arts
6 நிமிட வாசிப்பு

இலங்கை முஸ்லிம்கள்: உப மரபினங்கள்

January 18, 2023 | Ezhuna

இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.

இலங்கை முஸ்லிம்கள் பன்மையான மரபினக் கலவையைக் கொண்டுள்ள, மதரீதியாக தங்கள் இன அடையாளத்தை கட்டமைத்துள்ள இனம் என்பதை கடந்த அத்தியாயங்களில் எடுத்துக்காட்டினேன். முஸ்லிம்கள் எனும் இந்த இன உருவாக்கம் பண்பாட்டு ரீதியானதேயன்றி மரபணு சார்ந்தது அதாவது உயிரியல் சார்ந்தது அல்ல என்பதையும் பார்த்தோம். இலங்கையின் சமூக அரசியல், சமூக சூழ்நிலைகள் மற்றும் நலன்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக தங்களை ஒரு இனமாக முன்னிறுத்தினர். இன்றுள்ள நிலையில் சிலவேளை கலப்புத் திருமணம் போன்ற காரணங்களால் அவர்களிடையே ஒரு மரபினக் கலப்பு நடந்திருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.

origin of Sri Lankan sinhala tamil, moors family

இலங்கை முஸ்லிம்களின் இந்த இன உருவாக்கத்தில் அவர்களின் மரபின வேறுபாடுகள் (சோனகர், மலாயர், இந்தோனோசியர், ஆப்கனியர்), கலாசாரத் தனித்தன்மைகள், மொழி போன்ற பிற அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு மதம் என்ற புள்ளியில் இணைந்துள்ளனர். அது நாட்டின் சமூக அரசியல் சூழலைக் கவனத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம் அறிவுஜீவிகள் எடுத்த தீர்மானமாகவே தோன்றுகிறது. அது ஒருவகையில் சிறுபான்மைக்கான சமூகப் பாதுகாப்பாக அமையக்கூடியது. ஆயினும் இந்த இனக்கலப்பு அரசியல், சமூகப் பாதுகாப்பு போன்ற தேவைகளின் அடிப்படையில் உருவானது. இதனால், இலங்கையின் பழமையான முஸ்லிம்களான சோனகரோடு உப இனக்குழுக்களுக்கு சில பகுதிகளில் இன்னும் ஓர் ஆழமான அர்த்தத்தில் உள்ளார்ந்த இதய சுத்தியுடனான பிணைப்பு ஏற்படவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Ceylon moors

இனி இலங்கை முஸ்லிம்கள் எனும் பேரடையாளத்துள் உள்ளடங்கி இருக்கும் உப மரபினக் குழுமங்கள் பற்றி சுருக்கமாக ஆராய்வோம்.

ஆப்கனியர்கள்

இலங்கை முஸ்லிம்கள் என்ற இன அடையாளத்துள்ளிருக்கும் ஓர் உப இனக்குழுமம் ஆப்கனியர்கள். இலங்கையின் மரபினங்கள், பண்பாடு, மொழி போன்றவற்றை வைத்துப் பார்த்தால் இவர்கள் இலங்கைக்கு மிகவும் அந்நியர்கள். இவர்களின் பெயரே அந்நியத் தன்மை கொண்டது என இலங்கை முஸ்லிம் வரலாற்றியல் மற்றும் சமூகவியல் அறிஞரான எம். எம். எம். மஹ்ரூஃப் குறிப்பிடுவார். இலங்கை முஸ்லிம்களின் நடைமுறை இருப்போடு மிகவும் பொருந்தி வரக்கூடிய விஞ்ஞானபூர்வமான நோக்கோடும், புரிதலோடும் அவரது ஆய்வுகளே பொருந்தி வருவதாலும், எனது நோக்குக்கு மிக நெருக்கமாக இருப்பதனாலும் இந்த உப இனக் குழுக்கள் பற்றிய அறிமுகத்துக்கு நான் அவரது ஆய்வுகளையே பெரிதும் பயன்படுத்த விரும்புகிறேன்.

Slave island

ஆப்கனியர்கள் பலுசிஸ்தானிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஏன் இலங்கைக்கோ, தமிழ்நாட்டுக்கோ வந்தார்கள் என்பதில் தெளிவில்லை. தமிழ்நாட்டில் அவர்கள் ஈட்டிக்காரன் (Spear man) என அழைக்கப்பட்டனர். 1799 இல் திப்பு சுல்தானின் படைகளை பிரித்தானியர் தோற்கடித்தபோது, கலைந்து வர்த்தகர்களாக மாறினர். இலங்கையில் அவர்கள் பிரதான நகர்களை அண்டியிருந்த புறநகர்களில் வசித்தனர். குறிப்பாக கொழும்பு மற்றும் பிற நகரங்களிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்தனர். குறிப்பாக Slave Island தான் அவர்களின் விருப்பத்துக்குரிய உள்ளூர் நகரமாக இருந்தது. இலங்கையிலும் அவர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கையைத் தொடர்ந்தனர். இதனை அவர்கள் இரண்டு வழிகளில் மேற்கொண்டனர்.

முதலாவது- ஊர் ஊராகச் சென்று ஆடை விற்பனையில் ஈடுபடுதல். இந்த முறையில் பெரும்பாலும் பெண்கள், சிறுவர்களுக்கான ஆடைகள்,  சேலைகளை பொட்டலமாகக் கட்டி தலையில் வைத்துச் சுமந்துசென்று கொழும்பின் புறநகர்ப்பகுதிகளில் விற்றனர். பணத்தை தவணை முறையிலும் பெற்றுக்கொண்டனர். அதாவது பொருட்களை வாங்கியவர்கள் ஒரு காலப்பகுதிக்குள் பணத்தையும், அதற்கான வட்டியையும் கொடுக்க வேண்டும். இந்த வியாபார நடவடிக்கையை முஸ்லிம்களுடனும் – முஸ்லிம் அல்லாதவர்களுடனும் மேற்கொண்டனர். அவர்களது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாலியல் துஷ்பிரயோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை.[i]

moor-trader

இரண்டாவது- உயர் வட்டிக்குக் கடன்கொடுத்தல். இதுவும் ஆப்கனியர்களின் பொருளாதார வழிமுறையாக இருந்தாலும் இலங்கையில் அது பரவலான விமர்சனத்துக்குள்ளாகியது. இது தொடர்பில் ஓர் ஆங்கிலேயர் பின்வருமாறு எழுதினார் – “குறைந்தளவு பணத்துக்குக்கூட அவர்கள் வட்டி வசூலிப்பார்கள். இதன்போது வன்முறைக்குக்கூட அவர்கள் செல்வதுண்டு. அச்சுறுத்தலும் விடுப்பார்கள்”

இது பற்றி ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் அவர்களும் எழுதி இருப்பதை மஹ்ரூஃப் எடுத்துக்காட்டுகிறார். அஸீஸ் இப்படி எழுதுகிறார் “சில இலங்கையர்கள் தங்களது ஆப்கன் கடன்கொடுநர்களால் மோசமாக நடத்தப்பட்டமை குறித்த செய்திகளை உள்ளூர்ப் பத்திரிகைகள் வெளியிட்டன. அவை உண்மை எனில், அவர்கள் கடன்களைத் திருப்பிப் பெற சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர். அந்தப் பதிவுகளின்படி, ஆப்கனியர்கள் மிகக்கூடிய வட்டிக்கு கடன்கொடுத்து இந்த நாட்டு மக்களைச் சுரண்டுகின்றனர். ஆனால் மார்க்கரீதியாக நோக்கும் போது அவர்கள் முஹம்மதியர்களாவர். மார்க்கத்தில் வட்டி வாங்குவது அனுமதிக்கப்படவில்லை”

ஆப்கனியர்களின் ஆடைமுறையும் இலங்கையர்களுக்கோ, இலங்கைச் சோனகர்களுக்கோ அந்நியமானது. இலங்கையர்களைப் பொறுத்தவரை சாமானியர்கள் சாரனும் சேர்ட்டும் அணிந்தனர். படித்தவர்கள் மேற்கத்தேய ஆடையை அணிந்தனர். ஆனால் ஆப்கனியர்கள் அவர்களது சொந்தப்பண்பாட்டு ஆடைகளையே அணிந்தனர். கடினமான கால்சட்டையும் (பிஜாமா), பூட்ஸ் போன்றனவும் அணிந்தனர். தலையை முழுமையாக மழித்து குல்லா அணிந்தனர். குடைக்காம்பு போன்ற ஒரு ஊன்றுகோலை எப்போதும் தங்களுடன் வைத்திருந்தனர். தோற்றத்தில் மிகவும் அழகானவர்கள்.

கொழும்பிலும், வேறு பகுதிகளிலும் நிலைபெற்ற ஆப்கனியர் தமது குடும்பங்களை தமிழ்நாட்டில் குறிப்பாக உருது பேசப்படும் பகுதிகளில் விட்டுவிட்டே வந்தனர். இங்கு வரும்போது அவர்களது மூத்த மகன்களையே கையுடன் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் வியாபாரத்தைப் பழகியதும் தந்தையர்கள் மீண்டும் இந்தியாவுக்கே சென்றுவிட்டனர்.

moor-tailor
moor-man

பிற்பட்ட காலங்களில் இலங்கையில் ஆப்கனியர்களின் வர்த்தக நடவடிக்கைகள் சவாலுக்குட்பட்ட பல்வேறு சந்தர்ப்பங்களை மஹ்ரூஃப் எடுத்துக்காட்டுகிறார். 1930 களில் இங்கு வந்த சீன, ஜப்பானிய ஆடை விற்பனையாளர்களுடன் போட்டி போட நேர்ந்தமை, 2 ஆம் உலக மகாயுத்தத்தின் தாக்கம், இலங்கை அரசும் Lady Lochore Fund உம் இணைந்து அறிமுகம் செய்த திட்டங்கள் போன்ற காரணிகள் ஆப்கனியருக்கு இங்கு சவாலாக உருவெடுத்தன.

19th century moor merchant with sinhalese traders(Jewelers-of-Galle-1870s)

1948 இல் இலங்கை அரசாங்கம் கொண்டு வந்த Citizenship Act (No.18 of 1948) மற்றும் The Indian and Pakistani Residents (Citizenship) Act (No.3 of 1949) ஆகிய குடியுரிமைச் சட்டத்துடன் ஆப்கனியரின் வர்த்தக நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி ஆப்கனியர்கள் நிரந்தரமாக இந்தியாவுக்குத் திரும்புவது பற்றியோ அல்லது போதிய தகைமை இருந்தால் நிரந்தரமாக இலங்கையில் தங்குவது பற்றியோ தீர்மானம் எடுக்க வேண்டி இருந்தது. அதிகமான ஆப்கனியர்கள் இலங்கையில் தங்கவே முடிவெடுத்தனர். புதிய வேலைவாய்ப்புத் திட்டங்களைக் கவனத்திற்கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

பெருந்தோட்டத் தொழில் துறைகளான தேயிலை, இறப்பர், தெங்குத் தோட்டங்கள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களுக்குத் தேவைப்பட்ட காவலாளிகள் வேலையில் சேர்ந்துகொண்டனர். அவர்களின் சம்பளம் குறைவானதாக இருந்தாலும் தொடர்ச்சியானதாக இருந்தது. வேறு சலுகைகளும் கிடைத்தன. இது ஆப்கனியர்கள் இலங்கையர்களான சோனகப்பெண்களையும், மலாய்ப்பெண்களையும் திருமணம் செய்து இங்கேயே குடும்பமாக வாழ வழிவகுத்தது.[ii]

இவ்வாறுதான் ஆப்கனியர்கள் இலங்கை முஸ்லிம்கள் என்ற இன அடையாளத்துக்குள் நுழைந்தனர். இன்று இந்தப் பொது அடையாளத்துக்குள் அவர்கள் முழுமையாகக் கலந்து இலங்கை முஸ்லிம்களின் ஓர் உப மரபினக் குழுவாகியுள்ளனர்.

அடிகுறிப்பு

[i]. M.M.M. Mahroof- The sub communities of the Muslims of Sri Lanka.  (Exploring Sri Lankan Muslims: selected writing of MMM.Mahroof, edited by M.L.A. Cader, South Eastern University of Sri Lanka) p. 4.

[ii]. Ibid., p. 5.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12259 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)