வடக்கு - கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்: வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள்
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும்: வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள்

January 26, 2023 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடமாகாணத்தின் ஏனைய பயிர்செய்கைகள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் தன்னாதிக்கமுள்ள உற்பத்தித் துறையாக விளங்கும் விவசாயத்துறையில் நெல் விவசாயம் பற்றிய செயல் மதிப்பீட்டை கடந்த கட்டுரையில் பார்வையிட்டோம். இம்முறை நெல் தவிர்ந்த பழப்பயிர்கள், மரக்கறிப்பயிர்கள், ஏனைய தானியப் பயிர்கள் மூலம் இவ்விருமாகாணங்களும் கொண்டுள்ள வாழ்வாதார வாய்ப்புகளையும் உணவுப்பாதுகாப்பையும் மதிப்பிடுவதாக இந்த ஆய்வானது இடம்பெறுகிறது. இதில் முதலாவதாக தானியப் பயிர்களின் உற்பத்தி தொடர்பாக நோக்கலாம். வடக்கு – கிழக்கு ஆகிய இரு பிராந்தியங்களிலும் குரக்கன், சோளம், பயறு, உளுந்து, கௌபி, எள், நிலக்கடலை, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

மட்டகளப்பு-மாகாணத்தில்-மிளகாய்-செய்கை

இதில் பயிர்வாரியாக நோக்குமிடத்து மிளகாய்ச் செய்கையானது கிழக்கு மாகாணத்தில் 1,408.51 ஹெக்டெயர் பரப்பில் செய்கைபண்ணப்படுவதுடன், வருடாந்தம் 8,895.6 மெற்றிக்தொன் விளைச்சல் கிடைக்கப்பெறுகிறது. இதேபோல் வடக்கு மாகாணத்திலும் 2,393.4 ஹெக்டெயர் பரப்பில் மிளகாய்ச் செய்கை இடம்பெறுகிறது. மிளகாய்ச் செய்கையில் ஈடுபடும் பல விவசாயிகள் அவற்றைப் பச்சையாக அறுவடை செய்து கறித்தேவைக்காக விற்பனை செய்வதில் அதிக நாட்டம் காட்டுவதனால் செத்தல்மிளகாய் உற்பத்திக்கென மிகக் குறைந்த பகுதியே கிடைக்கப்பெறுகின்றது. இதனால் நாம் செத்தல் மிளகாயை அண்டைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய தேவையுள்ளது. இலங்கையின் மிளகாய்ச் செய்கைக்கு வாய்ப்பான இவ்விரு மாகாணங்களிலும் இந்தத் தொழிற்துறையை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. தரையமைப்பும், நிலவும் காலநிலையும் இந்தச் செய்கைக்கு உகந்ததாக உள்ளது. எனினும் இந்தச்செய்கை மீதான நாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

மகாவலி வலயத்தின் கீழும் அனுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களிலும் செய்கை பண்ணப்படும் அளவுடனும் ஒப்பிடும் போதும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக ஏற்று நீர்ப்பாசனக் கட்டமைப்புக்களுடன் மேட்டுநிலச் செய்கைக்கு வழங்கப்பட்ட பல காணிகள் போர்ச் சூழல் காரணமாக தென்னைச் செய்கைக்கு மாற்றியமைக்கப்பட்டன. புதிய ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் அறிமுகப்படுத்தாமல் இருந்தமையின் காரணமாக மேட்டு நில விவசாயச் செய்கை தொடர்ந்து இழக்கப்பட்டே வருகிறது. குறிப்பாக திருவையாறு பகுதி 1, 2, 3 படித்த மகளிர் திட்டம் கண்ணகிபுரம், விசுவமடு, புன்னைநீராவி, கனகாம்பிகைக்குளம், புதுஐயன்குளம், முத்தையன்கட்டு போன்ற பல ஏற்று நீர்ப்பாசனக் கிராமங்களில் இப்போது தென்னை மட்டுமே பயிரிடப்படுகிறது.

மன்னார்-மாவட்டத்தில்-நிலக்கடலை-பயிர்ச்செய்கை

இவ்விரு பிராந்தியங்களுக்கும் பொருத்தமான மற்றுமொரு தானியப்பயிரான நிலக்கடலை, கிழக்கு மாகாணத்தில் 3,420 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், வடக்கு மாகாணத்தில் 4,828 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. வருடாந்த விளைச்சலாக கிழக்கு மாகாணத்தில் 6,084 மெற்றிக்தொன் நிலக்கடலையும் வட மாகாணத்தில் 9,420 மெற்றிக்தொன் நிலக்கடலையும் உற்பத்தி செய்யப்படுகிறது. காலபோகத்தில் அதிகளவிலும் சிறுபோகத்தில் குறைவாகவும் உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலையானது, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்திலுமே அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுபோலவே சோளம்,   கிழக்கில் 9,892 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், வடக்கில் 942 ஹெக்டெயர் பரப்பளவிலும் உற்பத்திசெய்யப்படுவதுடன் அம்பாறை மாவட்டத்தில் 7,218 ஹெக்டெயர் பரப்பளவில் இந்தப்பயிர்செய்கை இடம்பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவிய படைப்புழுவின் தாக்கம் காரணமாக கடந்த  2021 ஆம் ஆண்டு சோளச் செய்கை பெருமளவு பாதிப்படைந்திருந்த போதும் இவ்வாண்டில் கணிசமாக அறுவடை பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் படைப்புழுவும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில்-சோளச்செய்கை

சோளப்பயிர்   மானாவாரியாக பெருமளவு பகுதிகளில் செய்கை பண்ணப்படுவதுடன் இதன் உள்நாட்டுக் கேள்வியானது மிக உயர்வாகவே காணப்படுகின்றது. கால்நடைத் தீவன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பிரதான உள்ளீடாக சோளம் காணப்படுவதுடன் மிகவும் இலகுவாக உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பயிராகவும் இது இருந்து வருகின்றது. உள்நாட்டில் தற்போது கால்நடைத் தீவனத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாட்டுக்கு சோளப்பயிர்ச் செய்கையின் குறைவே பிரதானமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக கோழித்தீவனத்தை உள்ளூரில் உற்பத்தி செய்வதில் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்து முட்டையின் விலையை உயர்வாக்கி அதனைக் கூட அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சோளச் செய்கைக்கேற்ற மிக வாய்ப்பான பிரதேசங்கள் காணப்படுகின்றன. அந்நியச் செலாவணி நெருக்கீடான தற்போதைய காலப்பகுதியில் இந்தச் செய்கையானது உள்நாட்டு உணவுப் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்புச் செய்யும் ஒரு தானியப் பயிராக இருந்து வருகிறது.

தானியப்பயிர் வகையில் உள்ளடங்கும் மற்றுமொரு போசணைப் பயிரான உளுந்து , கிழக்கு மாகாணத்தில் 343 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும், வடமாகாணத்தில் 8,212 ஹெக்டெயர் பரப்பிலும் வருடாந்தம் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில், வவுனியா மாவட்டத்தில் சிறப்புப் பயிராக 5509 ஹெக்டெயர் பரப்பில் உளுந்துச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு அடுத்ததாக 1,256 ஹெக்டெயர் பரப்பில் முல்லைத்தீவிலும் செய்கை பண்ணப்படுகிறது. வவுனியா மாவட்டத்தின் மண் அமைப்பில் சிறப்பான விளைவுதரும் இந்தப் பயிரானது பெரும்போகத்தில் அதிகளவான பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. போசாக்குப் பாதுகாப்பில் அதிகளவு புரத நுகர்வை உறுதிசெய்யக்கூடிய பயிர்களின் பிரதானமான விளைவுதரும்  பயிராக உளுந்துப் பயிரே காணப்படுகிறது. உளுந்து தனியே உணவுத்தேவைக்கானதாக மட்டுமன்றி பல்வேறு சிறு கைத்தொழில் பொருட்களாகவும், பெறுமதிசேர் உற்பத்திகளுக்கும் உள்ளீடாகப் பயன்படுத்தப்படுவதனால் இது சார்ந்து உருவாக்கப்படும் வாழ்வாதாரத் தொழில் முயற்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக பப்பட உற்பத்தியின் பிரதான உள்ளீடாக இது காணப்படுவதால் பாரிய கைத்தொழில் முனைவுகளிலும் இதன் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

கிளிநொச்சி-மாவட்டத்தில்-சிறுபோக-செய்கை

தானியப்பயிர் வகையின் மற்றுமொரு புரதவழங்கி தாவரமான பயறு உற்பத்தியை நோக்கும்போது வடமாகாணத்தில் 1,797 ஹெக்டெயர் நிலப்பரப்பில் இச் செய்கை வருடாந்தம் இடம்பெறுகிறது. அதேபோல் கிழக்கு மாகாணத்தில் 670 ஹெக்டெயர் நிலப்பரப்பிலும் இது செய்கை பண்ணப்படுகிறது. கிழக்கின் திருகோணமலை மாவட்டத்திலும் வடக்கில் மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலும் அதிகளவு பயறு உற்பத்தி செய்யப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 3,800 மெற்றிக்தொன் வருடாந்த விளைச்சல் பெறும் பயறு, இவ்விரு மாகாணத்தேவைகளினை பூர்த்திசெய்யக்கூடியதாக இருப்பினும் நாட்டின் தேவையுடன் ஒப்பிடும்போது இது இறக்குமதி செய்யப்படவேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது. பயறு மற்றும் உளுந்து செய்கையினை பொறுத்து விவசாயிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக உற்பத்திச்செலவு காணப்படுகிறது. இவ்விரு பயிர்களின் அறுவடையின் போது அதிகளவிலான மனித கூலி பயன்படுத்தியே அறுவடை செய்யவேண்டியிருப்பதால் இது இலாபகரமாக அமையவில்லை என்ற வாதம் விவசாயிகளால் முன்வைக்கப்படுவதுடன் மிகக் குறுகிய நாட்களுக்குள் இவை அறுவடை செய்து முடிக்கவேண்டிய நிலை காணப்படுவதால் தற்போதைய உயர்ந்த பட்ச மனித கூலியில் இதனை உற்பத்தி செய்து அறுவடை செய்வது சவாலாக மாறியுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி-கௌபி-பயிர்ச்செய்கை

புரதப் பாதுகாப்பை உறுதிசெய்யும் மற்றுமொரு உற்பத்திப் பயிர் கௌபி உற்பத்தியாகும். இது கிழக்கு மாகாணத்தில் 3,706 ஹெக்டெயரிலும் வடக்கு மாகாணத்தில் 1,197 ஹெக்டெயரிலும் வருடாந்தம் பயிரிடப்படுகிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் கிழக்கில் அம்பாறையிலும் இது அதிகளவில் பயிரிடப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 3,087 ஹெக்டெயர் பரப்பில் கௌபி பயிரிடப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் 5,000 மெற்றிக்தொன்னும், வடக்கு மாகாணத்தில் 1,600 மெற்றிக்தொன்னும் வருடாந்த விளைவாகப் பெறப்பட்டு வருகிறது. கௌபிச் செய்கையிலும் உற்பத்திச் செலவு தொடர்பில் அறுவடைத் தொழில்நுட்பத்தினால் தான் செலவீன அதிகரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கௌபிச் செய்கைக்கு ஏற்ற வளமான மண்ணும் காலநிலையும் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் இன்னமும் இந்தப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

அடுத்து குரக்கன் உற்பத்தியை நோக்கும் போது வடக்கு மாகாணத்தில் 449 ஹெக்டெயரிலும் கிழக்கு மாகாணத்தில் 76.5 ஹெக்டெயரிலும் இது வருடாந்தம் பயிரிடப்பட்டு வருகின்றது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவிலும் வவுனியா மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவிலும் இதன் உற்பத்தி இடம்பெற்று வருகிறது. இருபோகப் பயிராக உற்பத்தி செய்யப்படும் குரக்கன் பயிரானது, சலரோக நோயாளர்களின் விருப்புக்குரிய உணவாகக் காணப்படுகிறது. திறந்த விதைப்பு முறையிலன்றி நாற்று நடுகை மூலம் அதிக விளைச்சலை வழங்கும் இந்தப் பயிரானது யாழப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்தில் அதிக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொற்றா நோய்களில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்புக் காரணமாக அதிக கிராக்கியுள்ள பயிரான குரக்கனின் சந்தைப்படுத்தலில் குரக்கன் மாவாகவே அதிகம் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடுமிடத்து இன்னமும் அதிகளவில் இந்த உற்பத்தியை மேற்கொண்டு உள்ளூரில் காணப்படும் கேள்வியை நிரம்பல் செய்யக்கூடிய வாய்ப்பான பயிராக இருப்பதுடன் நோய் தாக்கங்களும் குறைந்த பயிராகவே இது காணப்படுகிறது. துணைத்தொழிலாகச் செய்யப்பட்டுவரும் இந்தத் தொழிற்துறையின் மீது பண்ணை முறைப்பட்ட உற்பத்தியாக்கம் உருவாக்கப்படக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

ஏனைய தாவரப் பயிர்ச்செய்கையில் உள்ளடக்கப்படும் எள்,  எண்ணெய்ப் பயிர் வகையாக இவ்விரு மாகாணங்களிலும் உற்பத்திசெய்யப்பட்டு வருகிறது. இதில் வடக்கு மாகாணத்தில் 1,272 ஹெக்டெயரிலும் கிழக்கு மாகாணத்தில் 62.5 ஹெக்டெயர் பரப்பிலும் செய்கை பண்ணப்படுவதுடன் 1,200 மெற்றிக்தொன் எள் வருடாந்தம் இவ்விரு மாகாணங்களிலிருந்தும் உற்பத்தியாகப் பெறப்பட்டு வருகிறது. தாவர எண்ணெய்த் தேவையின் பங்கில் பெருமளவு தேவைப்பாட்டை எள் பயிரிலிருந்தே இலங்கை பெற்றுக்கொள்கின்றது. எள் உற்பத்தியின் முதன்மைப் பிரதேசமாக வடமாகாணமே காணப்படுவதுடன் வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலேயே இந்தப்பயிர் உற்பத்தி அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எள்  செய்கை பண்ணப்படுவது தொடர்பில் நல்ல வாய்ப்பான நிலைமை காணப்படுகின்ற மாகாணங்களாக இவ்விரு மாகாணங்களுமே காணப்படுகின்றன. மானாவாரியாக நெற்செய்கை பண்ணப்படும் அனைத்து நிலங்களிலும் அறுவடையுடன்  விதைப்பு செய்யும் போது இலகுவாக நீர்த் தேவையை குறைந்தளவு பெற்று வளரக்கூடிய இந்தப் பயிரானது அதிக விளைச்சல் தரக்கூடியதாக அமையினும் விவசாயிகள் மத்தியில் காணப்படும் கருத்து நிலை காரணமாக பலர் இந்தச் செய்கையில் ஈடுபடுவதில்லை. குறிப்பாக நிலத்திலுள்ள அதிகளவான போசணைப் பதார்த்தங்களை இது உறிஞ்சி எடுத்து விடும் என்ற ஊகம் காரணமாக நல்ல பொருத்தப்பாடுடைய நெற்காணிகளில் இதனை விவசாயிகள் பயிரிடுவதில்  தயக்கம்காட்டி வருகின்றனர். இதனால் காலபோகம், சிறுபோகம் பயிர் செய்யும் பல நீர் வசதியுடைய நிலங்களில்  எள் செய்கை இடம்பெறாதுள்ளது. இது பற்றிய பல அறிவூட்டல்களை விவசாயத் திணைக்களம் வழங்கியபோதும் மனரீதியான நிலைப்பாட்டை மாற்றுவதில் விவசாயிகள் முன் வராதுள்ளனர். எள்ளை அடிப்படையாகக் கொண்டு பல சிறு உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.எனினும் போதிய உள்ளீடு இன்மை காரணமாக இந்தத் தொழில்கள் பருவகாலமாகவே இடம் பெற்று வருகின்றது.

மூதூர்-வெங்காய-உற்பத்தி

ஏனைய மறு வயல் பயிர்த் தொகுதியில் உள்ளடங்கும் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயச் செய்கையை நோக்கும் போது பெரிய வெங்காயச் செய்கையானது வடமாகாணத்தில் 284 ஹெக்டெயர் பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 485 ஹெக்டெயர் பரப்பிலும் செய்கை பண்ணப்படுவதுடன் கிழக்கில் 6,791 மெற்றிக் தொன்னும் வடக்கிலிருந்து 4,124 மெற்றிக் தொன்னுமாக  10,915 மெற்றிக்தொன்  பெரிய வெங்காயம் இவ்விரு மாகாணங்களிலிருந்தும் அறுவடையாகப் பெறப்படுகிறது. உள்நாட்டுத் தேவையில் இது ஒரு சிறிய பங்கை மட்டுமே நிறைவு செய்து வருவதால் சந்தைத் தேவைப்பாட்டிலிருந்து இந்த உற்பத்தியை மேலும் அதிகரிப்புச் செய்யும் வாய்ப்புக்   காணப்படுகிறது.  ஆயினும் அரசின் இறக்குமதிக் கொள்கையிலுள்ள தடுமாற்றம் காரணமாக உள்ளூர் அறுவடைக்காலத்தில் கூட வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைதலும் அனுபவமாகியுள்ளது. இதனை விட வடக்கு மாகாணத்தில் சிறப்பாக இரு போகங்களிலும் சின்ன வெங்காயமானது 3,846 ஹெக்டேயர் பரப்பளவில் வருடாந்தம் செய்கை பண்ணப்பட்டுவருகிறது. இதில் 3,268 ஹெக்டெயர் பரப்பளவுச் செய்கை யாழ்ப்பாண மாவட்டத்தில்  மேற்கொள்ளப்படுகின்றது. சின்ன வெங்காயம் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தே நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் தான் மிகச் சிறந்த சின்னவெங்காய அறுவடையை விவசாயிகள் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகிறது. இதனால் யாழ்ப்பாண விவசாயிகளின் பிரதான வாழ்வாதார மூலமாகக் சின்ன வெங்காயச் செய்கை காணப்படுகிறது.


ஒலிவடிவில் கேட்க

14807 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)