நிச்சயமற்ற கோப்பியின் வீழ்ச்சியும் நிலையான தேயிலையின் ஆதிக்கமும்
Arts
16 நிமிட வாசிப்பு

நிச்சயமற்ற கோப்பியின் வீழ்ச்சியும் நிலையான தேயிலையின் ஆதிக்கமும்

February 8, 2023 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

கோப்பியின் பரிதாப வீழ்ச்சியும் மாற்று முயற்சிகளும்

Hemileia-vastatrix

கோப்பி நோய் சுனாமி போல் ஓரிரவுக்குள் கோப்பிப் பெருந்தோட்டத்தை அழித்துவிடவில்லை. அதன் பரவல் மெதுவாக ஆனால் நிச்சயமானதாக நடைபெற்றது. கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தி முற்றாக அழிவதற்கு சுமார் 20 வருடம் பிடித்தது.  பலரும்அறியாத  ஒரு விடயம் என்னவென்றால் இந்நோய் 1861 ஆம் ஆண்டு கென்யாவில் வளர்ந்த காட்டுக் கோப்பியில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், ஸ்டூவர்ட் மெக்கூக் மற்றும் ஜான் வாண்டர்மீர் ஆகிய இருவரின் ஆய்வின்படி இலங்கையில் இருந்துதான் வீரியம் கூடிய ஹெமிலியா வஸ்டாட்ரிக்ஸ் (Hemileia vastatrix) என்ற இந்நோய் கோப்பி விளைகின்ற அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்நோயின் வேகமான பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து அவசரமாக 1880இல் அனுப்பப்பட்ட இளம் தாவர நோயியல் நிபுணர் ஹாரி மார்ஷல் வார்டு (Harry Marshall Ward) வருகையும் ஒரு காரணமாக அமைந்தது. அவர் கோப்பி நோயைத்  தடுப்பதில் வெற்றிபெறாவிட்டாலும் அவர் தாவர நோயியல் பற்றிய ஆரம்ப அறிவியலை முன்வைத்தார். பூஞ்சைக்கும் நோய்க்கும் இடையிலான காரணத் தொடர்பை அவர் கண்டறிந்து அது காற்றாலும் மழை நீராலும் பரவுவதைத் தடுப்பதற்கு உயரமான மரங்களை வரிசையாக இடைக்கிடையே கோப்பித்தோட்டங்களில் நடுவதையும் நீர் வழிந்தோடுவதைத் தடுப்பதற்காக குறுக்கே நெடுகிலும் கான்கள் வெட்டுவதையும் சிபாரிசு செய்தார். இவரது சிபாரிசு அமுல்படுத்தப்பட்டதால் கோப்பிநோய் பரவும் வேகம் தடைபட்டது. அது மாத்திரமல்ல இந்த தடுப்பு முறைகள் பின்னர் தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் பின்பற்றப்பட்டன.

சிங்காபிடிய

தோட்டத்துரைமார்  இந்நோய், கோப்பிப் பெருந்தோட்ட உற்பத்தியை அழித்து விடும் என நம்ப மறுத்தனர். அப்போது  உலக சந்தையில் கோப்பியின் விலை அதிகரித்து அது ஒரு இலாபம் தரும் துறையாக வளர்ந்திருந்ததால் அவர்கள் அதிக ஏக்கரில் புதிதாகப் பயிரிடத்தொடங்கினர். உலகின் மூன்றாவது பெரிய கோப்பி உற்பத்தி செய்யும் நாடாக  இலங்கை அப்போதிருந்தது. ஆனால் கோப்பியின் அழிவு நிச்சயமாகிவிட்டது. கோப்பிக்  காலம் முழுவதுமே விலைத்தளம்பல், காலநிலை மாற்றத்தின் பாதிப்பு, அறுவடைக்காலத்தில் தேவையான அளவு தொழிலாளர் கிடைக்காத நிலைமை போன்ற பல்வேறு காரணிகள் மனஉளைச்சல் தரும் அனுபவங்களையே தந்து கொண்டிருந்தன. எனவே கோப்பிக்கு மாற்றாக வேறு காசுப்பயிர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட்டன. கோப்பிநோய் பரவியபோது அது கட்டுப்படுத்தப்படுமா அல்லது அழித்துவிடுமா என்ற சந்தேகத்தில் முன்ஜாக்கிரதையாகவே மாற்றுப் பயிர்களை கண்டறியும் தீவிர முயற்சியில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நோயினால் கோப்பியின் ஆட்சி முடிவுக்குவர இருபது வருடங்கள் பிடித்ததால் இதற்கான அவகாசமும் அவர்களுக்கிருந்தது.

ஆரம்பத்தில் அனைத்துச் சோதனைகளும் வெற்றியடையவில்லை. முதலில் கரும்புத்  தோட்டம் 1837 இல் நிறுவப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை அது தரவில்லை. கொக்கோவும் முயற்சி செய்யப்பட்டு குறைந்த ஏற்றுமதிகளில் ஒன்றாகத் தொடர்ந்தது. இதன் சிறப்பம்சம், கிராம விவசாயிகளையும் புதிதாக காசுப்பயிர் உற்பத்தியில் ஈடுபட வைத்தது.  1837 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இறப்பர் பின்னர் முக்கிய ஏற்றுமதியாக மாறியது. ஆனால் கோப்பி விளைந்த இடங்களை அதனால் நிரப்பமுடியவில்லை.        

சிங்கோனா

மலேரியா நோய்க்கு பயன்படுத்தப்படும் குயினைன் மாத்திரை தயாரிப்பதற்கு ஆதாரமான  சிங்கோனா நடுகை, கோப்பி லாபகரமானதாக இருக்கும் வரை புறக்கணிக்கப்பட்டது. ஆனால் அதுவே கோப்பி வீழ்ச்சியுறத்தொடங்கிய காலத்தில் உயிர்காக்கும் படகைப்போல் சிறிது காலம் கை கொடுத்தது. 1873 ஆம் ஆண்டில், ஆள்பதி கிரகெரியின் கண்காணிப்பின் கீழ்  சிங்கோனாத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. உற்பத்தி அதிகரித்து. ஆரம்பத்தில் இலவசமாக வழங்கப்பட்ட சிங்கோனா விதைகள் பின்னர் விற்பனை செய்யப்பட்டன. அதன் விற்பனை அதிகரித்தது. அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனியார் நாற்றுமேடைகள் இரத்தினபுரி, மாத்தளை பகுதிகளில் அமைக்கப்பட்டன. இதற்கிடையில், 1876 ஆம் ஆண்டில், கிரிகெரி ஜாவாவிலிருந்து சிறந்த விதைகளைப் பெற முயன்றார், ஆனால் இவை போக்குவரத்தில் சேதமடைந்தன. இருப்பினும், 1872 இல் 500 ஆக இருந்த சிங்கோனாவின் பரப்பளவு 1876 இல் 6000 ஆக உயர்ந்தது. 1885 இல் சிங்கோனா உற்பத்தி செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பு  23,855 ஆகவும் உலக தேவையின் மூன்றில் ஒரு பங்கை வழங்குவதாகவும் இருந்தது. எனினும்  சிங்கோனா ஒரு சுயாதீனப் பயிராக வளர்க்கப்படவில்லை, கோப்பித் தோட்டங்களில் ஒரு துணைப் பயிராக மட்டுமே வளர்க்கப்பட்டது. ஆயினும்கூட, பெருந்தோட்டத்தை அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க  உதவுவதில் பயனுள்ள பங்கை வகித்தது. சிங்கோனாவால் கோப்பியின் இடத்தை நிரப்ப முடியாமல் போனமைக்கு அடிப்படைக்காரணம், அதற்கு உலக அரங்கில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கிராக்கியே இருந்தமையாகும்.

கோப்பி உருவாக்கிய கட்டமைப்பால் பயன்பெற்ற தேயிலை

1848 வரை, கண்டியிலிருந்து 30 மைல்களுக்குள் கண்டிப் பகுதியில் தான் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பித் தோட்டங்களும் திறக்கப்பட்டன. 1850 களில் டிம்புலவின் காடுகளால் மூடப்பட்ட மலைகள், சிவனொளிபாதமலை சிகரத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் ஹப்புத்தளை (ஊவா), மற்றும் சப்ரகமுவ காடுகள் ஆகிய உயர்மலைப் பிரதேசங்களுக்கு  பரவின. ரயில் போக்குவரத்து வசதி காரணமாக போக்குவரத்து செலவுகள் வெகுவாகக் குறைந்ததனால் 1860 அளவில் கோப்பி தோட்டங்கள் தெற்கில் மலைப்பாங்கான மொரவக கோரளைக்கு விரிவடைந்தது. இக்காலப்பகுதியில் தான் உள்ளூர் விவசாயிகள் துணை வருமானத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கி கோப்பி தோட்டங்களை  உருவாக்குவதிலும் சிங்கோனா நடுவதிலும் கொக்கோ பயிரிடுவதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தனர். 1870 களில்  கோப்பி பெருந்தோட்டம் அதன் உச்சத்தை எட்டியது. இவ்வாறு கோப்பி தனது வெற்றிநடையைத்  தொடர்ந்தபோதுதான் கோப்பி நோய் தொற்றியது.

COFFEE-CULTIVATION-IN-SRI-LANKA-1

ஏற்கனவே கோப்பிக் காலத்தில் பெருந்தோட்ட உற்பத்திக்கு தேவையான கடினமான அடிப்படைப் பணிகள் பூர்த்தியடைந்திருந்தன. வனவிலங்குகளும் அட்டைகளும் விசப்பாம்புகளும் மலிந்த அடர்ந்த காடுகள் வெட்டப்பட்டு, வேர்கள் அகற்றப்பட்டு, நிலம் செம்மைப்படுத்தப்பட்டிருந்தது. துரைமார் பங்களாக்கள், தொழிற்சாலைகள், நீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. கோப்பித்தோட்டங்களை கொழும்பு துறைமுகத்தோடு இணைக்கும்  விசாலமான  உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. பாதைகள், பெருந்தெருக்கள், ரயில்வே போக்குவரத்து, தொலைத்தொடர்பு என்பன பெரும் செலவில் அமைக்கப்பட்டிருந்தன. தென்னிந்தியாவிலிருந்து தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளர்களை கொண்டுவருவதற்கான பொறிமுறையும் தோட்ட நிர்வாகத்தில்  தேர்ச்சிபெற்ற நிர்வாகிகளும் தோட்டத் துறைக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களும், மத்திய மலைநாட்டில் விளையும் கோப்பியை கொழும்பிலிருந்து இங்கிலாந்துக்கும் ஏனைய உலகநாடுகளுக்கும் கொண்டுசென்று விற்பனை செய்யும் சந்தை வலையமைப்பும் பின்னப்பட்டிருந்தது. இவை யாவற்றையும் முற்றாக இழந்து, நாடு தனது வருவாய்க்கு அநேகமாக முழுவதுமாக நம்பியிருந்த ஒரே பொருளாதாரத்தையும் இழந்து இக்கட்டான நிலையில் நிற்கவேண்டிய ஆபத்து அப்போது உருவாகி இருந்தது.  

இந்த அவலமான நிலைமை ஏற்படாமல் தடுத்த பெருமை தேயிலையையே சாரும். அதனை அறிமுகப்படுத்தியதிலும் ஊக்கப்படுத்தியதிலும் அதற்கான விற்பனைச் சந்தையை உலகஅரங்கில் பெற்றுக்கொடுத்ததிலும் பலருக்கு பெரும் பங்குண்டு என்றாலும் அதனை வெற்றிகரமாக முதன்முதலில் பயிரிட்ட பெருமை ஜேம்ஸ் டெய்லரையே சாரும். அதற்கடுத்தபடியாக அதனை லண்டன் சந்தையில் கொடிகட்டி பறக்கவிட்ட லிப்டனைச் சாரும்.

தேயிலையின் வரலாறு –  தேயிலையில்  சீனாவின் ஆதிக்கத்தின் வீழ்ச்சி

Chinese tea caddy

சீனப் பேரரசர் ஷென்நங் (Emperor Shen Nung) சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தேநீரைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது, பல பெரிய விசயங்களைப் போலவே, அதுவும் தற்செயலாகவே கண்டுபிடிக்கப்பட்டது. வேட்டையாடச்சென்ற அவர் ஒரு மர நிழலில் இளைப்பாறும்போது அவர் பருகுவதற்கான தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்த வேளை, அம்மரத்தின் இலைகள் பானையில் விழுந்து மிதந்தன. அந்தக் கலவையைக் குடித்தபோது அவருக்கு வீரியமும் உற்சாகமும் பிறந்தது. அதன் பின்னர் அந்தப்பானம் அவரதும் அவரது அரச விருந்தினர்களினதும் ஆடம்பரப் பானமானது. படிப்படியாக இந்த ஆச்சரிய மருந்து தேநீராக உலகளாவிய நுகர்வில் தண்ணீருக்கு அடுத்தபடியான இடத்தைப்பிடித்தது.

1662 ஆம் ஆண்டில், மன்னர் இரண்டாம் சார்ள்ஸ் மணம்முடித்த கத்தரின் (Catherine) சீனத் தேநீரை விரும்பி அருந்தியதால், தேநீர் குடிப்பது இங்கிலாந்து அரச குடும்பத்தின் நாகரீகமாக மாறியது. பின்னர் படிப்படியாக இங்கிலாந்து மத்தியதர வர்க்கத்தின் நுகர்வுப்பொருளாக சீனத் தேயிலை மாறியது. அப்போது சீனத் தேநீர் ‘ட்ச்சா’ (‘Tchaa) என்று அழைக்கப்பட்டது. அதன் விலை அதிகமாகவும் அலங்காரப் பெட்டகங்களில் அடைக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடம்பரப்  பண்டமாகவும் இருந்தது. அந்தப்பெட்டகங்கள் ‘கேட்டி’ (caddy) எனப்பட்டது. இந்தப்பானம் பால் கலக்காமல் கைபிடி இல்லாத கோப்பையில் பரிமாறப்பட்டது.

இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்வதற்கு அதிக நாட்டம் அதுவரை  காட்டப்படாததற்கு சீன தேயிலையின் ஆதிக்கம் பிரதான காரணமானது. அந்த நிலைமை 19ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு சாதகமாக மாறியது. நீண்ட காலமாக உலகம் சீனாவின் பச்சைத் தேயிலையை மட்டுமே அறிந்திருந்தது. ஐரோப்பாவின் மொத்த தேயிலைத் தேவையும் 1830களின் முற்பகுதி வரை சீனாவால் பூர்த்தி செய்யப்பட்டது, சீனாவுடனான வர்த்தகச் சிக்கல்களின் விளைவாக 1833 இல் கன்டனுடனான வர்த்தகத்தின் ஏகபோக உரிமையை பிரிட்டிஷ் இழந்தது, இச்சமயத்தில் இந்திய – பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் பென்டிங்க், இந்தியாவில் தேயிலைத் தோட்டத்தைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கல்கத்தாவில் ஒரு குழுவை நியமித்தார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதைகளுடன் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆனால் அஸ்ஸாமில் காடுகளாக தேயிலை வளர்வதைக் கண்டறிந்தபோது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  விதை வகைகள் நிராகரிக்கப்பட்டு அஸ்ஸாமில் விளைந்த  உள்நாட்டு தாவரங்களின் விதைகளிலிருந்து தேயிலைப்பயிர் விளைவிக்கப்பட்டு அமோக வெற்றி பெற்றது. அசாமில் தயாரிக்கப்பட்ட கறுப்புத் தேயிலை மலிவானதாகவும் சுவையானதாகவும் இருந்ததால் விரைவில் இங்கிலாந்துச் சந்தையைக்கவர்ந்தது. இந்தச் சாதக நிலைமையை இலங்கைத் துரைமார் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

இலங்கையில்  தேயிலை

பெருந்தோட்ட-தொழிலாளர்கள்

தேயிலை இலங்கையில் நடும் முயற்சி பலராலும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. டெனன்ட் (Tennant) கூற்றுப்படி டச்சுக்காரர்களும் தேயிலையைப் பயிரிட முயன்றார், ஆனால் வெற்றி பெறவில்லை. 1805 ஆம் ஆண்டில், திருகோணமலைக்கு அருகில் தேயிலைச் செடி காடுகளாக வளர்ந்து கொண்டிருந்ததாகவும், படை வீரர்கள் இலைகளை உலர்த்தி, கொதிக்கவைத்து, கோப்பியை விட, அதனை விரும்பிக் குடித்ததாகவும் கார்டினர் (Cordiner) கூறுகிறார். இது டச்சுக்காரர்களால் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டம் எனக் கருதப்படுகிறது. தேயிலைப்  பயிர் முதன்முதலில் பிரிட்டிஷ் காலத்தில் கவர்னர் ஸ்டீவர்ட் மெக்கன்சியின் (Governor Stewart Mackenzie) வழிகாட்டுதலின் கீழ் 1839 இல் இலங்கையிலே அறிமுகப்படுத்தப்பட்டது எனினும் பின்னர் அதில் கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. கோப்பிக் காலத்தில் கூட பலர் தேயிலை நட முயன்றதற்கான ஆதாரங்கள் உண்டு. எனினும் அது பற்றி இங்கு விபரிக்கவில்லை.

இலங்கைத் தேயிலையின் ஸ்தாபகத் தந்தையாக ஜேம்ஸ் டெய்லர் (James Taylor ) மிகவும் சரியாகவே அடையாளம் காட்டப்படுகிறார். கோப்பி காலத்திலும் பின்னர் தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் பணிபுரிந்த பெரும்பாலான தோட்டத் துரைமார் முரடர்களாகவும் உல்லாசப் பிரியர்களாகவும் இருந்தனர். ஆனால் டெய்லர் ஒரு நுண்ணறிவு மிக்க  செயற்திறனும் அர்ப்பணமும் கொண்ட ஒரு சிறந்த தோட்டநிர்வாகி. ஆயினும் அவர் கோப்பிப் பெருந்தோட்டத்தின் ஸ்தாபகரான ஜார்ஜ் பேர்ட் ( George Bird) போன்று ஒரு தோட்ட உரிமையாளராக இருக்கவில்லை. எனவே அவரால் சுயமாக அனைத்தையும் செய்ய முடியவில்லை. அவரது வெற்றியில் பலருக்கு பங்குண்டு. எனினும் அந்தப் பலரால் டெய்லர் இன்றி இந்தச் சாதனையைச் செய்திருக்க முடியாது. 1852 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 17ஆவது வயதில் டெய்லர் இலங்கைக்கு வந்தார். ஆரம்பத்தில் ஹேவாஹெட்டயில் இருந்த நாரஹேனா தோட்டத்திற்கு (தற்போது லூல்கந்தர Loolecondera – தோட்டத்தின் ஒரு பிரிவு), வயது முதிர்ந்த, கோபக்காரரான, அரைக்கிறுக்கான ஒரு பெரியதுரையின் கீழ் தொழில்பயின்றார். அப்போதே அவரது பொறுமையும் புத்தி சாதுர்யமும் வெளிப்பட்டது. கணக்கியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் அவருக்கு இயல்பான ஆர்வம் இருந்தது. உதாரணமாக, அசல் லூல்கந்தர கோப்பி தொழிற்சாலையின்  இயந்திரங்களும் வெலிஓயா கோப்பி தொழிற்சாலையும் அவரால் நிறுவப்பட்டன. தொழிலாளரின் நன்மதிப்பும் அவருக்குக்கிடைத்தது.

ஜேம்ஸ்-டெய்லரின்-சிலை

1865 இல் தோட்ட உரிமை கைமாறியதும் அவரது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. புதிய உரிமையாளர்களில் ஒருவரான ஹரிசன் (G. D. B. Harrison) டெய்லரின் திறமையை நன்கு அறிந்தவர். 1866 அளவில் கோப்பியின் விலை வீழ்ச்சியடைந்தபோது மாற்றுப் பயிர்களைத் தேடுவதில் அவர் ஆர்வம் காட்டினார். அதனை நிறைவேறும் திறமை டெய்லரிடம் இருப்பதாக அவர் நம்பினார். முதலில் டெய்லருக்கு சிங்கோனாவை வளர்க்கும் பணி வழங்கப்பட்டது, அதில் அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். ஹரிசனின் பணிப்பின் பேரில் டெய்லர் (Taylor) அதே காலத்தில்  பேராதனை தாவரவியல் பூங்காவிலிருந்து தேயிலை விதைகளைப் பெற்று சாலையோரங்களில் வேலியைப்போல நாட்டினார். அவைசெழிப்பாக வளர்ந்து நம்பிக்கையளித்தன.

இதனைக் கண்காணித்த – அப்போது அரசில் மிகுந்த செல்வாக்கு செலுத்திய – தோட்டத் துரைமார் சங்கத்தின் செயலாளர் டபிள்யூ. எம். லீக், (W. M. Leake) விடுத்த கோரிக்கையை ஏற்ற ஆளுநர் அனுபவம் வாய்ந்த கோப்பி தோட்ட நிர்வாகியான திரு. ஆர்தர் மோரிஸை (Arthur Morice) தேயிலையை எவ்வாறு வளர்ப்பது என்பதை ஆய்வு செய்வதற்காக அசாமுக்கு அரசாங்க செலவில் அனுப்பிவைத்தார். அவரது 1866 ஆம் ஆண்டு அறிக்கையை துரைமார் ஏற்றுக்கொண்டனர். இதன்படி அசாமிலிருந்து பெறப்பட்ட முதலாவது தொகை விதை  லூல்கந்தரவில் விதைப்பதற்காக ஜேம்ஸ் டெய்லரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது அவர்மீது   துரைமார் சங்கத்திற்கும் இருந்த நம்பிக்கையையும் அதற்கான தகுதி அவரிடம் இருந்தது என்பதையும் காட்டுகிறது.

டெய்லர் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறவில்லை. லூல்கந்தரவில் 19 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலத்தொகுதி இதற்காக ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 10 ஏக்கரில் டெய்லர் தேயிலையைப் பயிரிட்டார். தேயிலை உற்பத்தியின் அனைத்து சிக்கல்களையும் அறிந்த அசாமின் தேயிலை தாவரவியலாளரான ஜென்கின்ஸ் (Mr. Jenkins) என்பவரின் ஆலோசனை அவருக்குக் கிடைத்தமை இவருக்கு பேருதவியாக அமைந்தது. இயல்பாகவே ஒரு தொழில்நுட்ப வல்லுநராக இருந்த டெய்லர் அசாமிலிருந்து ஜென்கின்ஸ் அவர்களிடமிருந்து பெற்ற அடிப்படை அறிவை தனது நுண்ணறிவால் அபிவிருத்தி செய்தார். புதிய சோதனைகளை மேற்கொண்டார். களிமண் அடுப்பின் மீது இரும்புக் கம்பிகளைப் பரப்பி அதன்மீது போட்டு உலர்த்திய இவரது தேயிலைத்தூள் தயாரானது. இவ்வாறு இவர் தயாரித்த முதலாவது தேயிலைத்தூளை 1872ஆம் ஆண்டு டெய்லரால் கண்டிச் சந்தையில் விற்க முடிந்தது. அடுத்தவருடம் லண்டனுக்கு அனுப்பப்பட்ட இவரின் தேயிலைத்தூள் மாதிரிகள் அங்கு நல்ல வரவேற்பைப்பெற்றன.

அவர் தனது சுய அறிவைப் பயன்படுத்தி சீக்கிரமே தேயிலை தயாரிப்பதில் ஒரு நிபுணரானார். தயாரிப்பிலும் தரத்திலும் அசாம் தேயிலைக்கு சமமான தேயிலைகளை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இவர் சார்ந்த நிறுவனம் இந்தியத் தேயிலை விதைகளை தொடர்ந்து இறக்குமதி செய்து வந்தது, சீக்கிரமே லூல்கொண்டெரா தேயிலைகள் உலகின் சிறந்த தேயிலைக்கு சமமானவை என வகைப்படுத்தப்பட்டது. அப்போது லண்டனில் தேயிலை பரிசோதனையில் தலைசிறந்த நிபுணராகத் திகழ்ந்த கலாநிதி போல் (Dr. Paul) வாசனையிலும் தரத்திலும் சுவையிலும் இத்தேயிலையே சிறந்தது என சான்றிதழ் வழங்கினார். இருபது வருடமாகும்போது 1888இல் தேயிலை மிகவும் செழிப்பாக வளர்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டது. லூல்கந்தர சீக்கிரமே உள்ளூர்த் தேயிலையைப் பயிரிடுவதில் மாதிரித்தோட்டமாகப் பாராட்டப்பட்டது. இவ்வாறு கோப்பியின் யுகம் முடிவுக்கு வரும்போது ஒரு புதிய யுகம் – தேயிலை யுகம் – வாரிசு உரிமை கோரித் தயாராக நின்றது. அதனைத் தொடங்கிவைத்தவர் ஜேம்ஸ் டெய்லர்.

லூல்கந்தரவை நேசித்த டெய்லர் பிரம்மச்சாரியாகவே தனது வாழ்க்கையைக் கழித்தார்.  இலங்கையில் இருந்து ஒரே ஒருமுறைதான் 1874 இல் விடுமுறைக்காக வெளிநாடு சென்றார். அதுவும் இந்தியாவில் தலை சிறந்த தேயிலை விளையும் டார்ஜீலிங் (Darjeeling) பகுதிக்கு தேயிலைத் தயாரிப்புத் தொடர்பான தனது அறிவை வளர்த்துக்கொள்வதற்காகத்தான். இப்படி தனது முழு வாழ்க்கையையும் தேயிலை ஆராய்ச்சியில் கழித்த அவர் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு மே 2, 1892 அன்று 57 ஆவது வயதில் இறந்தார். டெய்லர் உடல் ரீதியாக ஒரு 240 பவுண்டுகள் எடைகொண்ட பருமனான மனிதர். அவரது உடல் தொழிலாளர்களால் கண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மஹய்யாவையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்குப்பின் அவரிடத்துக்கு ஜி.எஃப். தீன் (G.F. Deen) நியமிக்கப்பட்டார்.

ஜேம்ஸ் டெய்லர் 1876 ஆம் ஆண்டில் – அதாவது கோப்பி நோய் தாக்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு – தனது தேயிலைத் தோட்டத்தைத் தொடங்கினார், இருபது ஆண்டுகளில், தீவின் முழுக் கோப்பிப் பெருந்தோட்டமும் அழிவதற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் தேயிலை கோப்பிக்கு மாற்றாக தேயிலையை அவர் உறுதியான நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக தந்துவிட்டே மறைந்தார். 1867 இல் 10 ஏக்கர் தேயிலை வணிக ரீதியாக இலங்கையில் டெய்லரால் பயிரிடப்பட்டது. அடுத்த, எட்டு ஆண்டுகளுக்குள் (1875) அது 1,080  ஏக்கராக  உயர்ந்தது, அதன்பிறகு பத்து ஆண்டுகளுக்குள், 1885 இல் தேயிலை விளைந்த நிலம் 102,000 ஏக்கராக , பத்து மடங்கு அதிகரித்தது. அதன் பின்னர் இலங்கையின் வரலாறு தேயிலையோடு பிணைந்ததாகவே 150 வருட காலம் – ஏன் அதன் பின்னரும் கூட – தொடர்ந்தது.

தேயிலை , கோப்பி விட்டுச்சென்ற அதே கட்டமைப்பின் மீது – அவற்றில் செய்யப்பட்ட முதலீடுகள் வீணாகாது காப்பாற்றி – பெருந்தோட்டப் பொருளாதாரத்தை மேலும் விரிவடையச் செய்தது, அது எப்படி அடுத்த ஒன்றரை நூறாண்டுகளுக்கு மேல் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியது ? அதன் விளைவுகள் யாவை ?என்பதை நாம் பின்னர் பார்க்கப்போகிறோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11505 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்