தமிழ் கட்சிகளும் சாதி அடையாளமும்
Arts
10 நிமிட வாசிப்பு

தமிழ் கட்சிகளும் சாதி அடையாளமும்

February 14, 2023 | Ezhuna

இலங்கையில் அதிகாரத்துக்காகவும் அதனை தக்க வைப்பதற்காகவும் சிங்கள, தமிழ் தலைவர்களினால் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டது. அது இனத்துவ அரசியலாக வளர்ச்சியடைந்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர்களின் இருப்பையும் இல்லாதொழிக்கும் அரசியலாக உச்சம் பெற்றது.இதன் தொடர்ச்சி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறு வழிவகுத்தது என்ற அடிப்படை காரணிகளை உள்ளார்ந்த ரீதியில் ஆய்வுசெய்ய ‘இலங்கையில் அடையாள அரசியல் – சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப்புரிதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் எத்தனிக்கின்றது. இதன்படி, அடையாள அரசியல் என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இத்தொடர் முனைகிறது.

தமிழரசுக் கட்சியின் இந்த சமூக சமத்துவமின்மைக்குக் காரணம் அந்தக்கட்சி ஏற்கனவே குறிப்பிட்ட ‘சைவமும் தமிழும்’ என்ற கருத்துநிலையின் அரசியல் வடிவமாக இருந்ததோடு,  அந்தக் கருத்துநிலையைப் பேணிப்பாதுகாக்கின்ற ஒரு அமைப்பாகவும் தொழிற்பட்டது. இந்த சாதி மேலாண்மை சிங்கள அரசின் தமிழ் இன, தமிழ் மொழி ஒடுக்குமுறை காரணமாக மூடிமறைக்கப்பட்டு தமிழ் இனம், தமிழ் மொழி எனும் அடையாளத்துக்குள் தமிழர்களை ஒன்று திரட்ட வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த வாய்ப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளவும் தமிழ் சமூகத்துக்குள் அகவய ரீதியாகக் கனன்று கொண்டிருந்த சமூக ஒடுக்கப்பாட்டைத் தணித்து அவர்களை இனஉணர்வுக்கு உட்படுத்தி அந்த மக்களை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கரையச் செய்ய வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது. இதன் பொருட்டு தமிழரசுக் கட்சி சமூக சமத்துவம், சமூக நீதி என்பன பற்றி வெறுமனே ஏட்டளவிலாவது பேச வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை மனம் கொள்ள வேண்டும்.  

1957 யூலையில் மட்டக்களப்பில் நடந்த மகாநாட்டில் தீண்டாமை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினரிடையே இன்றளவும் நிலவி வரும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் அநீதிகளையும் குறிப்பாகத் தீண்டாமையை ஒழிப்பதற்கு, அகிம்சை நெறி வழுவாது சத்தியாக்கிரக வழியைக் கைக்கொண்டு அதற்கென ஓர் இயக்கத்தை ஆரம்பித்து உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் வருங்காலச் சந்ததியினர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க வரும்படி தமது பூரண சுதந்திரத்துக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்தத்தேசிய சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.” (சபாரத்தினம். த)

1958 மே 25 இல் வவுனியாவில் நடந்த மாநாட்டிலும் தீண்டாமை ஒழிப்புக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டது. “சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அநீதிகளையும் அகற்றி பிளவுபட்டு நிற்கும் தமிழ் மக்களை ஒன்று திரட்டல் என்ற கட்சியின் அடிப்படை இலட்சியங்களுக்கேற்ப எமது மக்களின் ஒரு பகுதியினரை சிறப்புரிமையற்றவர்களாக வைத்திருப்பதை அகற்றி, அவர்களுக்கும் சம உரிமை வழங்க மக்களைத் தூண்டும் போராட்டத்தை நடத்துவதென்றும் அதற்கான தெரிவுக்குழுவுக்கு மக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தீர்மானிக்கிறது” (சபாரத்தினம்.த)

தமிழரசுக் கட்சியின் மேற்படி தீர்மானங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட அக்கறையினால் கொண்டுவரப்பட்டவை அல்ல. இந்தத் தீர்மானங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று வரலாற்று நிர்ப்பந்தமாகும். அத்துடன் 1957ஆம் ஆண்டு  நாடாளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுகிறது. இதன்படி சமூகத்தில் சாதியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் அநீதிகள் தண்டனைக்குரிய குற்றமாகின்றன. எனவே இதிலிருந்து சட்ட ரீதியாக கட்சி உறுப்பினர்கள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியத்தை விட்டு விலகாதிருக்கவும் கட்சி இவ்வாறான ஒரு தீர்மானத்தினையும் கொள்கையினையும் கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

மேலும் இந்தத் தீர்மானங்கள் அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வளர்ச்சியடைந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகவிடுதலையினை திசைதிருப்பி,  தங்களது யாழ் .வேளாள மேலாதிக்கத்தை அரசியலுக்கூடாக கட்டிக்காப்பதை நோக்கமாகக் கொண்டவை. இதற்கு தமிழ்த் தேசியம் எனும் கோசம் வாய்ப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் வளர்ச்சியும் செயற்பாடுகளும் இவர்களை அச்சமூட்டின. பருத்தித்துறைத் தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான பொன். கந்தையாவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்த மக்கள் ஆதரவு தமது மேலாண்மைக்கு எதிரானது என்பதை அறிந்திருந்தனர்.

யாழ். வேளாள மேலாண்மையை விடுத்து எவரும் யாழ்ப்பாணத்தில் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாகச் செயற்பட்டனர். யாழ்ப்பாணத்தில் 40 சதவீதமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் தமிழ் காங்கிரசிலோ அல்லது தமிழரசுக் கட்சியிலோ 1977 வரை எந்தவொரு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவில்லை. அந்த மக்களின் சார்பில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியவர்கள் இடதுசாரிகள் மாத்திரமேயாகும். இவ்வாறு கட்சி தனக்குள்ளே சாதித்துவத்தை பாதுகாத்துக் கொண்டுதான் மேற்படி தீர்மானங்களை எடுத்ததே தவிர தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட உண்மையான அக்கறையுடனும் அதனைச் செயற்படுத்தும் நோக்கத்துடனும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. இதனை தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நடத்தைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பிரவேசப் போராட்டத்தின் போது கோயில் விவகாரம் பற்றி எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களிடம் கேட்ட போது “ஒரு கிறிஸ்தவனாக நான் இருப்பதால் இந்துக் கோயில் விவகாரங்களில் நான் தலையிட முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்துக் கோயில்களில் மட்டும்தான் சாதிப்பாகுபாடுகள் பார்க்கப்பட்டன என்பதல்ல, சாதிவிடுதலையை வேண்டி கிறிஸ்தவத்துக்கு மதம்மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சாதிப்பாகுபாட்டிற்கு உள்ளானார்கள். “இளவாலை பெரியன்னம்மாள் தேவாலயத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு அவர்தம் கடமையை பூரணமாக செய்ய முடிவதில்லை. ‘முட்டு’ கொடுப்பது, திரு உருவம் சுமப்பது போன்ற பணிகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துக்கள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இளவாலையில் 1976 இல் அன்னம்மாள் தேவாலயத்தில் தலித் கிறிஸ்தவர்கள் அதற்கான உரிமைகோரிப் போராடியபோது பொய் வழக்குகள் பதியப்பட்டு பொலிசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.  அதற்குப் பின் நின்று செயற்பட்டவர்கள் வெள்ளாளப் பாதிரிமார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை. நிலைமை மோசமானபோது கோயிலைக் கூட பல நாட்களாக இழுத்து மூடிவிட்டனர். தமிழ் மக்களின் தானைத் தலைவர் என அழைக்கப்படும் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களிடம் சென்று தலித் மக்கள் அது குறித்து நியாயம் கேட்ட போது, யாழ். மாவட்ட கத்தோலிக்க சபையின் ஆண்டகையிடம் இது விடயமாக கவனம் எடுக்கும்படி தான் கடிதம் எழுதுவதாகக் கூறினார். பிற்பாடு ஆண்டகையும் தலித் கிறிஸ்தவர்களை அழைத்து ’உங்களுக்கென்று தனியாக சில்லாலைக் கோடாலிக் காட்டில் 10 பரப்புக் காணியும் ஒரு அந்தோனியாரையும் தந்து கோயிலையும் கட்டித்தாறம்’ என்று வாக்களித்தார். இது பற்றி தோழர் டானியல் அவர்கள் ஓர் இடத்தில் குறிப்பிடும் போது “ஓம் அவையள் தங்களுக்கு வெள்ளாள அந்தோனியாரை வைச்சுக்கொண்டு எங்களுக்கு பள்ள அந்தோனியாரைத்தானே தந்தவர்கள்” என்று வேடிக்கையாகவும் நக்கலாகவும் குறிப்பிட்டார்” (யோகரட்ணம்)

தமிழரசுக் கட்சி தனது தீர்மானத்தில் தமிழ் சமூகத்தில் இருக்கின்ற சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும் என்றே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மதநிலை கடந்து கட்சியின் கொள்கையினையும் அதன் தீர்மானத்தினையும் கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொரு கட்சித் தொண்டனுடைய கடமையாகும் ஆனால் கட்சியின் தலைவரே கட்சியின் தீர்மானத்தினைப் பொருட்படுத்தாது தான் கிறிஸ்தவன் இந்துக் கோயில் விவகாரத்தில் தலையிட முடியாது என்பதும் கிறிஸ்தவர்கள் விடயத்தில் ஆண்டகைக்கு கடிதம் எழுதியதும் அதன் பயனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியான ஒரு கோயில் கட்டிக் கொடுக்கின்ற நடவடிக்கையும் எந்த அடிப்படையில் தமிழ் சமூகத்தின் சமூக ஒடுக்குமுறையினை முடிவுக்கு கொண்டு வரும்?  என்பது தொடர்பாக எந்தவொரு தமிழரசுக் கட்சி உறுப்பினரும் கேள்வி கேட்டது கிடையாது. ஏனெனில் அந்தக் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சைவக் கருத்துநிலையின் விம்பங்களாகவே இருந்தனர். இதுதான் கட்சிக் கொள்கைக்கும் நடைமுறைக்குமுள்ள வேறுபாடாகும்.

இவை பற்றிக் கேள்வி எழுப்பாதது ஒருபுறமிருக்க “சாதியக் கலவரம் பற்றி திரு. அமிர்தலிங்கம் கூறிய பதிலோ அதைவிட வேடிக்கையானது அது சின்ன வியட்நாம் போர் அது பள்ளர் என்ற சமூகத்தவர்க்கும் கோவியர் என்ற சமூகத்தவர்க்கும் இடையேயான போர் என்றும் கூறியதுடன் இது சீன கம்யூனிஸ்டுகளின் வேலை என்றும்  நாடாளுமன்றத்தில் கூறினார்.

அடுத்து வவுனியா திரு. சி. சுந்தரலிங்கம் என்பவர். கல்விமான், அடங்காத் தமிழன், தனிநாடு கேட்ட தலைவர், லண்டன் மகாராணிக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்தவர் என்றெல்லாம் இவருக்குப் பெருமையுண்டு. இவர்தான் மாவிட்டபுரவாசலில் நின்று தன் காடையர்களுடன் சேர்ந்து கோயிலுக்குக்குள் தலித்துக்கள் பிரவேசிக்கக் கூடாதென மிக மூர்க்கமாகத் தடுத்தவர். கோயிலுக்குள் பக்தர் தம் கடமையைச் செய்யவிடாது தடுத்த குற்றத்திற்காக மல்லாகம் நீதிமன்றம், சட்டமேதை சி. சுந்தரலிங்கத்துக்கு 50 ரூபா அபராதம் விதித்தது. இந்த அபராதத்தைக் கட்ட மறுத்து பல ஆயிரம் ரூபா செலவு செய்து லண்டன் பிரிவு கவுன்சிலில் மேல் முறையீடு செய்தவர். இருந்தபோதும் மல்லாகம் நீதிபதியின் தீர்ப்பு சரியானது என்பதாகவே பிரிவுக் கவுன்சிலும் தீர்ப்பளித்தது.” (யோகரட்ணம்)  

கட்சியின் தீர்மானங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய தமிழ்த் தலைவர்களே இவ்வாறு நடந்து கொண்டபோது கட்சித் தொண்டர்களோ அனைத்து அடக்கு முறைகளின் செயல்வீரர்களாக இருந்தனர். இவ்வாறு குறிப்பிடுவதன் மூலம் கட்சி உறுப்பினர் வேறு, சமூகம் வேறு என்று அர்த்தமல்ல. எனவே யாழ். வேளாளர் என்ற அடையாளமும் அதன் அடக்குமுறையும் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் யாழ். தவிர்ந்த ஏனைய பிரதேச மக்களுக்கும் பொதுவான விடயமாக இருந்தன.

இந்த யாழ். வேளாள மேலாண்மைக்கு எதிராக 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் பதிலளித்தனர். அதாவது தமிழரசுக் கட்சியினதும் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும் முக்கியமான உறுப்பினர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அந்தவகையில் அ. அமிர்தலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம், மு. சிவசிதம்பரம், ஈ. எம். வி. நாகநாதன், ரீ. சிவசிதம்பரம் ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கம்

வட்டுக்கோட்டை தீர்மானம்

யாழ். வேளாள மேலாண்மையைப் பாதுகாப்பதற்காக தமிழ் இனம், தமிழ் மொழி என்பவற்றைப் துணைக்கெடுத்துக் கொண்டு எதிரும் புதிருமாகப் போட்டியிட்டு ,தாங்கள்தான் தமிழர்களை மீட்க வந்த மீட்பர்கள் என பேசிக்கொண்டு, ஆளுக்காள் வசைபாடிக் கொண்டு திரிந்த தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தங்கள் சாதி, வர்க்க நலனைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்று சேர்ந்து செயற்படுவதென முடிவெடுத்து அதனை மேலும் பலமுள்ளதாக்கும் பொருட்டு தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மட்டக்களப்பு மக்களால் விரும்பப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே. டபிள்யூ. தேவநாயகம் போன்றவர்களை இணைத்துக் கொண்டு 1976 ஆம் ஆண்டு ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ எனும் புதிய அரசியல் கட்சியை உருவாக்கினர்.

இதன் தலைவர்களாக எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான், கே. டபிள்யூ. தேவநாயகம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் போன்றவர்கள் நோயுற்றதைத் தொடர்ந்து கட்சியின் சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகிய இருவரும் இருந்தனர். இவ்விருவரும் எந்தவொரு தேர்தலிலும் தோற்கக் கூடாது என்பதற்காக மிகச் சாதுர்யமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டனர். அதாவது “பொதுத் தேர்தலில் (21.07.1977) தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் களமிறங்குவதென மேற்கூறிய இருவரும் தீர்மானம் மேற்கொண்டனர். இவ்விடயத்தினை அறிந்த சௌமியமூர்த்தி தொண்டமான், கே. டபிள்யூ. தேவநாயகம் ஆகிய இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறினர். வெளியேறியதற்கான காரணம் தமிழீழக் கோரிக்கையினை தாம் ஏற்பதற்கு தயாரில்லை என்பதனையும் ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டபோது அவ்வாறான கருத்துக்கள் எதனையும் தம்மிடம் கூறவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே வடக்கு- கிழக்கில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் களம் இறங்கிய நிகழ்வு இடம்பெற்றது.” (குமாரதுரை அருணாசலம்)

எனவே தமிழீழக் கோரிக்கை என்பது தமிழர்களின் சிறுபான்மையினருடையது கூடக் கிடையாது. ஆனால் ஊடகங்களும் அதற்கான பிரசாரங்களும் அதனை ஒட்டு மொத்த தமிழர்களுடைய கோரிக்கையாக, பிரகடனமாகக் கட்டமைத்தன. இதற்கு உரமூட்டும் வகையில் சிங்கள அரசின் செயற்பாடுகள்  அமைந்திருந்தன. அவை யாழ். வேளாள அதிகார வர்க்கத்துக்கு வாய்ப்பாக அமைந்தன.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

16354 பார்வைகள்

About the Author

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளமாணிப் பட்டத்தையும் முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் கலைவரலாற்றில் கலாநிதிப் பட்டம் பெற்று, தற்போது சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

கலைவரலாற்றில் மட்டுமன்றி நாடகம், இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)