அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழர் பற்றிக் குறிப்பிடும் இன்னுமோர் கல்வெட்டு துடுவ துலான என்னுமிடத்தில் அமைந்துள்ள தாமரவெவ எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தாமரவெவ கல்வெட்டும் இலங்கையை ஆட்சி செய்த 2ஆம் சேனன் காலத்தில் (பொ.ஆ. 853 முதல் 887 வரை) பொறிக்கப்பட்டுள்ளது. மன்னனின் (2ஆம் சேனன்) 31ஆவது ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. 35 ஆண்டுகள் இலங்கையின் மன்னனாக 2ஆம் சேனன் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக்கல்வெட்டு 7 அடி உயரமும், 14 அங்குல சதுரமும் கொண்ட கற்தூணின் நான்கு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. தூணின் உச்சிப்பகுதியில் தாமரை இதழ்களின் வடிவமைப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. தூணின் A பக்கத்தில் 10 வரிகளிலும், B பக்கத்தில் 17 வரிகளிலும், C பக்கத்தில் 14 வரிகளிலும், D பக்கத்தில் 11 வரிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் C பக்கத்தில் 5 ஆம், 6 ஆம், 7 ஆம் வரிகளில் தமிழர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“இச தெமழ அதிகார மஹசத்தானவன்..” இது “தமிழ் அதிகாரி மகாசாத்தான்” எனப் பொருள்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு கல்வெட்டுக்களிலும் தமிழ் அதிகாரியின் பெயர் சிதைந்து காணப்படுகிறது. ஆனால் இக்கல்வெட்டின் நான்கு பக்கங்களிலும் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் சிதையாமல் மிகத் தெளிவாக காணப்படுவதால் தமிழ் அதிகாரியின் பெயரையும் தெளிவாக வாசிக்கக் கூடியதாக உள்ளது.
தமிழ் அதிகாரி பற்றியும் வல்வெட்டித்துறை பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு
பொ. ஆ. 891 முதல் 908 வரையான காலப்பகுதியில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆட்சி செய்த மன்னனான 4 ஆம் மகிந்தனின் காலத்தில் வல்வெட்டித்துறை பற்றிய இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இக்கல்வெட்டு கொழும்பு தேசிய தொல்பொருள் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்று துண்டுகளாக உடைந்துள்ள ஒரு கற்தூணின் நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1907 ஆம் ஆண்டு முதன் முதலாக இத்தூணில் உள்ள கல்வெட்டு தொல்லியல் ஆய்வு செய்யப்பட்டது. 7 அடி உயரமும், 8 அங்குல சதுரமும் கொண்ட தூணில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. முதலாவது மற்றும் இரண்டாவது பக்கங்களில் தலா 32 வரிகளிலும், மூன்றாவது பக்கம் 33 வரிகளிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நான்காவது பக்கம் 17 வரிகளில் எழுத்துக்களும், அரிவாள், விசிறி, காகம், நாய் ஆகிய வற்றின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தக்கல்வெட்டானது சேனன் எனும் தலைமை அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க குறிப்பிட்ட ஒரு நிலத்திற்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான செய்திகளைக் கூறுகிறது. கல்வெட்டில் 6 துணை அதிகாரிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் முதல் இருவர் அரசனின் தளபதிகளாவர். மேலும் இருவர் பிரிட்டி ரட்ட எனும் பிரதேசத்தின் முதன்மை அதிகாரிகள் ஆவார். ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ளவர் தலைமை அதிகாரிக்கு உதவியாக உள்ளவர். ஆறாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர் ஒரு தமிழ் அதிகாரியாவர். இவரை “உத்தர பாண்டி ரட்ட எனும் பிரதேசத்தின் தெமழ அதிகாரி” எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது ”வடக்கு பாண்டி நாட்டை நிர்வகிக்கும் தமிழ் அதிகாரி” எனப் பொருள்படுகிறது.
தமிழ் அதிகாரி பற்றி குறிப்பிடும் முதலாவது கல்வெட்டு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. மகா பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இருந்த “ஆதிக்கா” எனும் தமிழ் அதிகாரி பற்றி சூளவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டின் சில வரிகள் இங்கே குறிப்பிட்டு கூறக்கூடியவையாக உள்ளன. முதலாவது பக்கத்தில் (Side A) 28 ஆம் வரியில் உள்ள “வல்விட்டி” எனும் சொல்லும், இரண்டாவது பக்கத்தில் (Side B) 4ஆம், 5ஆம் வரிகளில் உள்ள “தெமழ கபல்ல” எனும் சொற்களும், மூன்றாவது பக்கத்தில் (Side C) 8 முதல் 11 வரையான வரிகளில் உள்ள “தெமழ அதிகாரி உத்தர் பாண்டி ரட்ட” எனும் சொற்களும் முக்கியமானவை.
இவ்வரிகளில் கூறப்பட்டுள்ள விடயமானது, “சேனல்நாகன் எனும் தலைமை அதிகாரி தனக்கு சொந்தமான தமிழ் நிலங்களில் வட மாகாணத்தில் வல்வெட்டி எனும் பிரதேசத்தின் கீழ் இருந்த கணகாமி என்னும் கிராமத்தை அரச குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்” என கல்வெட்டின் முதலாம், இரண்டாம் பக்கங்களில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் மூன்றாம் பக்கத்தில் ஆறு அதிகாரிகள் பற்றிய குறிப்பில் “உத்தர பாண்டிநாடான தமிழர் நிலத்தின் தலைமை அதிகாரி உட்பட ஆறு அதிகாரிகளும் குறிப்பிட்ட நன்கொடைக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைமை அதிகாரியான சேனல் நாகன் என்பவன் 4ஆம் மகிந்தன் எனும் மன்னன் காலத்தில் தலைமை படைத்தளபதியாக இருந்து நாட்டை நிர்வகித்த சேனன் எனும் தமிழன் ஆவான். 4ஆம் மகிந்தனின் பின் அவனின் மகனான 5ஆம் சேனன் 12 வயதில் மன்னனாக முடிசூட்டப்பட்டான். இருப்பினும் படைத்தளபதி சேனனே நாட்டை நிர்வகித்து வந்தான்.
இக்கால கட்டத்தில் தளபதி சேனன் இந்தியாவுக்கு சென்று 95 ஆயிரம் தமிழ்ப் படையினருடன் வந்து இலங்கைப் படைகளைத் தாக்கி இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி 10 வருடங்கள் இலங்கையை ஆட்சி செய்தான் என ராஜவலிய கூறுகிறது.
அதன்பின்பு இலங்கையில் எந்தவித போர்களும் நடைபெறவில்லை. சேனனின் தமிழ்ப் படையினர் அனுராதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், பொலநறுவை, மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர். இக்காலப்பகுதியில் அநுராதபுரம் மற்றும் பொலநறுவை ஆகிய பிரதேசங்கள் தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே கல்வெட்டில் கூறப்பட்டுள்ள குறிப்புக்கள் மூலம் தமிழர் மற்றும் தமிழர் நாடு பற்றிய சில முக்கியமான விடயங்களைக் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையின் வடபகுதி உத்தர பாண்டிநாடு எனப் பெயர்பெற்று விளங்கியுள்ளமையும், வல்வெட்டித் துறை எனும் இடம் உத்தர பாண்டி நாட்டில் உள்ள தமிழர் நிலத்தின் சில ஊர்களின் தலைப்பட்டினமாக விளங்கியுள்ளமையும் தெரிய வருகிறது.
கிழக்கில் உள்ள தமிழர் நிலம் பற்றிக் கூறும் கிரித்தலே கல்வெட்டு
பொ. ஆ. 929 – 932 காலப்பகுதியில் இலங்கையின் மன்னனாக விளங்கிய 2ஆம் உதயன் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியின் வறுமையைப் போக்கி செழிப்படைய செய்யும் வகையில் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான செய்தியைப் பதிவு செய்கிறது.
பொலநறுவையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் கிரித்தலே என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஒரு உடைந்த தூண் அநுராதபுரம் தொல்லியல் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது.
4 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட இத்தூணின் இரண்டு பக்கங்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு 1905ஆம் ஆண்டு எச்.சி.பி.பெல் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு, எழுத்துக்கள் படி எடுக்கப்பட்டன. தூணின் முதலாம் பக்கம் 33 வரிகளிலும், 3ஆம் பக்கம் 33 வரிகளிலும் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 2ஆம் பக்கமும், 4ஆம் பக்கமும் எழுத்துக்கள் காணப்படவில்லை. கல்வெட்டின் முதலாம் பக்கத்தில் 31, 32 ஆம் வரிகளில் தமிழர் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“செனக் ஹுளு தெமலத் வலதெமின் ..” இதன் பொருள், “கிழக்குப்பகுதியில் தமிழர் நிலத்தில் உள்ள பரிசக்குழிய என்னுமிடத்தில்…” என்பதாகும். இக்கல்வெட்டின் மூலம் 9ஆம், 10ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர்களின் நிலங்கள் இருந்தமை பற்றி உறுதியாகக் கூறக்கூடியதாக உள்ளது.
தொடரும்.