வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு
Arts
24 நிமிட வாசிப்பு

வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு

March 17, 2023 | Ezhuna

கால ஒழுங்கு (Chronology)

  • இந்திய-இலங்கை மண்ணில் மனித இனங்கள் : இ.மு. 1800,000
  • வன்னியில் பழைய கற்கால மக்கள் : இ.மு. 125,000
  • நவீன மனிதனின் (homo sapiens) வருகை : இ.மு.  60,000
  • இடைக் கற்கால ஆரம்பம் : இ.மு.  33,000
  • இலங்கை தனித்தீவாகப் பிரிதல் : இ.மு.   7,000
  • இரும்புக்கால ஆரம்பம் : இ.மு.   3,380
  • வரலாற்றுக்கால ஆரம்பம் : இ.மு.   2,300

நிலவியல் (Geology)

இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னிந்திய நிலப்பகுதி

இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் பெயர்களும், இந் நாடுகளிலுள்ள நிலப்பகுதிகளின் வழக்கிலுள்ள பெயர்களும் வரலாற்றுக் காலத்திலேயோ அல்லது வரலாற்றுதய காலத்திலேயோ மக்கள் இந் நிலங்களுக்குக் கொடுத்த பெயர்களேயாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் இந் நிலங்கள் வேறு பெயர்களால் அக்கால மக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். அவை பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியாதாகையால் தற்காலப் பெயர்களைக் கொண்டே பூர்வீகமான இந்நிலப் பகுதிகளை நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

இ. மு. 115,000 ஆண்டு முதல் இ.மு. 12,000 ஆண்டு வரை நீடித்த கடைசிப் பனியுகக் காலத்தில் – கடல் மட்டம் இன்றிருப்பதை விட 120 முதல் 135 மீட்டர் குறைவாக இருந்த காலப்பகுதியில் – இலங்கை இந்தியாவோடு இணைக்கப்பட்ட நிலப்பகுதியாக இருந்தது.1  இந் நிலத்தின் நீள – அகல பரிமாணங்களும் இன்றிருப்பதை விடப் பெரியதாகவே இருந்தன. இந் நிலம் ‘இந்திய – இலங்கை” ஆகிய ஒரே நிலமாகும்.

இ. மு. 12,000 ஆண்டு முதலாக – கடைசிப் பனியுகம் முடிவிற்கு வந்த காலத்திலிருந்து உலகைச் சூழ்ந்திருந்த பனிப்படலங்கள் உருகி, கடல் மட்டம் சிறிது சிறிதாக மேலெழுந்த போது இந்திய-இலங்கையின் கரையோர நிலப்பகுதிகள் சிறிது சிறிதாக கடலினுள் அமிழ்ந்து போயின.

இ.மு. 7,000 காலப்பகுதியில் இலங்கை இந்தியாவிலிருந்து தனித் தீவாகப் பிரிந்து போயிற்று.2 அடுத்த ஆயிரம் ஆண்டு காலப்பகுதியில் – பனிப்படலங்கள் உருகி ஆறுகள் வழியாகப் பெருகி வரும் நீரினாலும், மழையினாலும் ஏற்படும் கடல் பெருக்கமும், கடல் நீர் ஆவியாகப் போவதால் ஏற்படும் கடல் மட்டக் குறுக்கமும் சமநிலை அடைந்த நேரத்தில் – கடல் மட்டம் சீர்நிலை அடைந்தது3.

இலங்கை தென்னிந்தியாவிலிருந்து பிரிந்து வந்ததற்கான புவியியல் ஆதாரங்கள் பலவுண்டு. தென்னிந்தியாவும் இலங்கையும் உலகின் மிகப் பழமையான கருங்கற்களைக் (granite) கொண்டிருக்கின்றன. இவை தவிர சுண்ணாம்புக் கல், பேஸோல்ற், குவாட்ஸ். அகேற், சல்ஸிடோனி ஆகிய கற்கள் இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் பொதுவானவை. இலங்கையின் மத்தியிலுள்ள பேதுருதாலகால மலையடுக்கு தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் பொதிகை மலைத் தொடரின் (Western Ghats) தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. தென்னிந்தியாவின் கிழக்குக் கரை ஓரமாக திருநெல்வேலி வரை தொடர்ந்திருக்கும் தேரி மணல்மேடுகளின் தொடர்ச்சியே இலங்கையின் வட-வடமேற்குப் பகுதியில் கடற்கரை ஓரமாக முல்லைத்தீவிலிருந்து குதிரைமலை வரை படர்ந்திருக்கும் இரணைமடு தேரித்தொடராகும்.  

வட இலங்கையில் கிளிநொச்சியின் பெரும் பகுதி, மன்னார், முல்லைத்தீவு, வுவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 7,650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பே வன்னி நாடு. பலதரப்பட்ட நீர்ப்பாசன குளங்களையும், வருடம் முழுவதும் வற்றாத ஆறுகளையும் கொண்ட வளபூமி இது. அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு, கோடாலிக்கல்லு ஆறு, மண்டேகல் ஆறு, நாயாறு, பாலி ஆறு, பல்லவராயன்கட்டு ஆறு, பறங்கி ஆறு, பேராறு, தேராவில் ஆறு என்பன இந்நிலத்தை வளமாக்கும் நீராறுகள். வன்னி நிலத்தை யாழ்ப்பாணக் கடல் நீரேரி, நந்திக்கடல், சுண்டிக்குளம் நீரேரி, கொக்கிளாய் நீரேரி, நாயாறு நீரேரி, சாலை நீரேரி ஆகிய கடல் நீரேரிகள் சூழ்ந்திருக்கின்றன. வன்னி நிலத்தின் 4,200 சதுர கிலோமீட்டர் பரப்புக் கொண்ட பெரும் பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டிருக்கிறது.  

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

பண்டைக்கால மக்கள் விட்டுச்சென்ற சான்றுகளின் அடிப்படையில் அக்கால மக்களது வாழ்க்கை முறைபற்றியும், அம்மக்களது பண்பாட்டைப் பற்றியும் எடுத்தியம்பும் இயல் தொல்லியலாகும். இச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே அம் மக்களது நாகரிக வளர்ச்சியைக் காட்டும் காலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுதய காலம் (Proto-historic Period), வரலாற்றுக் காலம் (historical Period) எனத் தொல்லியலாளர்களால் பிரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இவற்றுள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்தாதாரங்கள் பயன்படுத்தப்படாத காலகட்டத்தைக் குறிப்பதாகும். இதனால், இக்காலகட்ட வரலாறு பெருமளவிற்கு தொல்லியற் சான்றுகளின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியுள்ளது. இதற்கு அக்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், மண்படைகள், சிற்பங்கள், ஓவியங்கள், அன்றாடம் பயன் படுத்திய பாவனைப் பொருட்கள் என்பன பெரிதும் உதவுகின்றன. உலக நாடுகள் பலவற்றினதும் வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக வரலாறு இவற்றின் துணை கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளது4.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை தொல்லியலாளர்கள் பண்டைய மக்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் தோற்ற காலத்தைக்கொண்டு கீழ்க்காணும்  காலப்பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை உருவாக்கப்பட்ட காலத்திற்கேற்ப அவற்றின் பருமன், தோற்றம், செயற்திறன், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் நுட்பத் திறமை, அவற்றின் பயன்பாடு என்பன வேறுபட்டிருக்கும். மக்களின் பண்பாட்டு வளர்ச்சியோடு இக்கற்கருவிகளின் தொழில் நுட்பத்திறமை மேம்பட்டு வந்திருப்பது கண்கூடு.

  1. பழைய கற்காலம் (Paleolithic or Old Stone Age): இலங்கையில் இக் காலப்பகுதி இ.மு. 125,000 முதல் 33,000 ஆண்டுகாலம் வரை நீடித்திருக்கிறது.
  2. இடைக்கற்காலம் (Mesolithic or Middle Stone Age): பிற நாடுகளில் இடைக் கற்கற்கால ஆரம்பம் இ. மு. 12,000 ஆக இருப்பினும் இலங்கையில் உள்ள இடைக்கற்காலக் கருவிகளின் ஆரம்பகாலம் இ.மு. 33,000 ஆக வெப்ப-ஒளியேற்றுவியல் (thermo-luminescence கணிப்பின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
  3. புதியகற்காலம் (Neolithic): இக்காலத்தில் வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் ஓரிடத்தில் தங்கி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
இரணைமடு தேரிமணற் தொடர்

கற்காலத்தைத் தொடர்ந்து இ.மு. 3,380ம் ஆண்டளவில் இலங்கையில் இரும்புக்காலம் ஆரம்பமாகியது5.

ஆதிகாலக் குடியிருப்புகள்:

பழைய கற்காலம்

இந்தியாவில் இ.மு. 1800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன6. நெடுங்காலமாக இலங்கையும் இந்தியாவும் நிலத்தொடர்பு கொண்டிருந்தமையால் இலங்கையிலும் இக்காலகட்டத்திற்குரிய மனித எச்சங்கள் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். இன்றைய தொல்லியல் ஆய்வுகளின்படி இ.மு. 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இலங்கையில் மக்கள் வாழ்ந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன7. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பழைய கற்காலத்தைச் சேர்ந்த மக்களாவார்.  

வட இலங்கையில் முல்லைத்தீவின் வடபகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காக பரந்தன், பூநகரி, மாந்தை, புத்தளம், குதிரைமலை வரை கடற்கரையோரமாகப் பரந்திருக்கும் தேரி-மேடு, இரணைமடு அமைப்பு (Iranamadu Formation) என அழைக்கப்படுகிறது. இந்த மேடுகள், பரந்து கிடக்கும் சரளைக்கற்களுக்கு   (gravel) மேலுள்ள களிமண் கலந்த மணல் மேடுகள் பல்லாயிரம் ஆண்டுகால சீதோஷ்ண வெப்ப-தட்பத்தில் சிவப்புநிறமாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த இரணைமடு மணல் மேடுகளில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் இடைக்கற்காலம்வரை பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன8.

இக்கால மக்கள் தமது ஆகாரத்திற்காக நாடோடிகளாக இடம்விட்டு இடஞ்சென்று வேட்டையாடியும், கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும்  மீன்பிடித்தும் வாழ்ந்தமையால் இவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் காணப்படுகின்றன. இவர்கள் உபயோகித்த மற்றைய பாவனைப் பொருட்களும் உடுத்திய உடுப்புகளும், ஏன்- அவர்களின் எலும்புக்கூடுகளும்  அழிவுற்றுப் போனபின் எஞ்சியிருப்பவை அவர்கள் விட்டுச்சென்ற கற்பொருட்களே.

இரணைமடு தேரிமணல் மேடுகளில் கண்டெடுக்கப்பட்ட சில கல்லாயுதங்கள், கல் உபகரணங்கள்

ஆதியில் வன்னிப்பகுதியில் வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற கல்லாயுதங்களும், கல்லுபகரணங்களும் கடற்கரையோரமாக உள்ள   இரணைமடு தேரிமணற் குன்றுகளிடையே காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இயற்கையாகக் கிடைத்த கற்களை உபயோகித்த மனிதன் பின்னர் இந்நிலையிலிருந்து ஒருபடி முன்னேறித் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலவாறு அவற்றைச் செப்பனிடத் தொடங்கினான். இவ்வாறு செய்யும்போது முழுக்கல்லையும் செப்பனிடுவதற்குப் பதிலாக தனது தேவைக்காகப் பயன்படுத்தும் முனையை மட்டுமே செப்பனிட்டான்.

இயற்கையாக ஆற்றோரங்களிலும் மற்றிடங்களிலும் பாறையாகக் காணப்பட்ட “குவாட்ஸ்” (quartz) கற்களைக் கொண்டே இக்கருவிகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டன. இப்பாறைகளை நெருப்பைக் கொண்டு சூடாக்கி பின்னர் அவற்றின் மேல் நீரை ஊற்றியோ அல்லது மற்றொரு பெருங்கல்லால் அடித்தோ பிளக்க வைத்து, பின்னர் அவற்றை உடைத்து வேண்டிய ஆயுதங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள்9. இவ்வாறு பாறையை உடைக்கும்போது வெடித்துச் சிதறும் செதில்கள் (flake tools) மிகவும் கூர்மையாக இருப்பதனால் சவரம் செய்வதற்கும் நுணுக்கமாக வெட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்பட்டன. முழுக்கற்களையும் சிறப்பாகச் செப்பனிட்டு கைக்கோடரிகள் (hand axe) தயாரிக்கப்பட்டன. தட்டைக் கற்களைக்கொண்டு பிளப்பிகள் உருவாக்கப்பட்டன. கைக்கோடரிகளும் பிளத்தற் கருவிகளும் மரங்களை வெட்டுவதற்கும், மிருகங்களைக் கொன்று இறைச்சியை வெட்டி எடுப்பதற்கும், நிலத்தில் விளையும் கிழங்கு வகைகளை அகழ்ந்து எடுப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன.  

பழையகற்கால மக்கள் 20 முதல் 40 பேரைக் கொண்ட குழுக்குடும்பமாக 50சதுர மீட்டர் அளவான ஓரிடத்தில் தங்கி வேட்டையாடியும், உணவு சேகரித்தும் வாழ்ந்தார்கள் எனக் கணிக்கப்படுகிறது. இவர்களது பிரதான தொழிலாக வேட்டையாடுதல் அமைந்திருந்தாலும் தமது உணவிற்காக மிருகங்கனின் இறைச்சியோடு மீன், கிழங்கு வகைகள், பழவகைகள் ஆகியவற்றையும் உட்கொண்டார்கள். ஓரிடத்தில் உணவு குறைந்ததும் கூட்டமாக வேறிடம் சென்று இவர்கள் தங்கினார்கள். வட இலங்கையின் உலர்ந்த வலயத்தில் (வன்னிப்பகுதி) ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.8 மனிதர்கள் வரை வாழ்ந்தார்கள் எனக் கணக்கிடப்படுகிறது10.  கடலிலிருந்து கிடைக்கும் கடலுணவுகளின் தாராளத்தால் இலங்கையின் வடக்கு – கிழக்கு கடற்கரையோரங்களில் சதுர கிலோமீட்டருக்கு 1.5 பேர் வரை வாழ்ந்தார்கள்.

இடைக்கற்காலம்

இடைக்கற்கால மக்களின் பிரதான தொழில்களாக வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல் போன்ற தொழில்களே அமைந்தன. பழைய கற்கால மனிதனைவிட இவனது வாழ்க்கை சற்று முன்னேற்றமடைந்து காணப்படுகிறது. ஆதியில் நாடோடியாகத் திரிந்த இம் மனிதன் ஓரளவு தொடர்ந்து ஓரிடத்தில் இருந்தது பற்றியும், தான் வாழ்ந்த சூழலை முன்னரைவிடக் கூர்மையாக அவதானித்து அதை மாற்ற முற்பட்டதையும் அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.11

இக்கால மனிதனால் காடுகள் அழிக்கப்பட்டதை, தாவரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப்பொடியின் (pollen) படிவங்கள், எச்சங்கள் ஆகியவை எடுத்துக் காட்டியுள்ளன. இக்காலத்தில் காட்டு மரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் எண்ணிக்கையிற் குறைய, சிறு பற்றைகள், புல், பூண்டு ஆகியவை விட்டுச் சென்ற மகரந்தப் பொடியின் எச்சங்கள் மேலோங்கிக் காணப்படுவதை ஆதாரமாகக் கொண்டு இக்கால மனிதன் காட்டை அழித்துச் சூழலை வளம்படுத்த முற்பட்டான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள்.12   

பழைய கற்காலத்தில் வாழ்ந்த பெரிய மிருகங்களின் இனங்கள் பெருமளவுக்கு அழிந்துபோக, காடுகளில் காணப்பட்ட மான், மரை, முயல் ஆகிய சிறிய மிருகங்களை வேட்டையாட இக்கால மனிதன் கற்றுக் கொண்டான். கூர்மையாக்கப்பட்ட சிறிய (குறுணி) கற்களை அம்புகளிலும் ஈட்டிகளிலும் முனையாகப் பொருத்தி அவற்றைக் கொண்டு வேட்டையாடியதை அறிய முடிகிறது. இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களிலிருந்து தானியங்களை அறுக்கவும், உணவுப் பண்டங்களை சிறு துண்டுகளாக வெட்டவும் தட்டையான பிளேட் போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தினார்கள்.

இரணைமடு-தேரியில்-கண்டெடுக்கப்பட்ட-இடைக்கற்கால-குறுணிக்கல்-ஆயுதங்கள்

இச்சிறிய கற்கள் குறுணிக்கற்கள் (microliths) என தெல்லியலாளர்களால் அழைக்கப்படுகிறது. வட இலங்கையில் பல இடங்களில் காணப்படும் வரலாற்றுக்கு முற்பட்டகாலத் தெல்லியற் சான்றுகள் குறுணிக்கற்காலப் பண்பாட்டிற்குரியனவாகும். இதன் காரணமாக இலங்கையின் இடைக்கற்காலத்தை குறுணிக்கற் பண்பாட்டுக் காலம் எனவும் அழைப்பார்கள். இக் குறுணிக் கற்கள் வன்னியில் இரணைமடு தேரிமணற் குவியல்களிலிருந்தும், மாந்தை (மாதோட்டம்), குருத்தன்குளம், பனங்காமம், உருத்திரபுரம், பூநகரி அகிய இடங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கின்றன.

இடைக்கற்கால மனிதன் நாயை தனது நண்பனாகப் பழக்கக் கற்றுக் கொண்டான். தவிர, மந்தை வளர்ப்பிலும் இக்கால மனிதன் ஈடுபட்டிருந்ததை இக்காலக் குடியிருப்புகளிற் காணப்படும் எலும்புக்கூடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மிருகங்களில் ஆடு, எருது, பசு, செம்மறி ஆடு என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு மந்தை மேய்ப்பில் இக்கால மனிதன் அக்கறை காட்டியது அவனது நாகரிக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

பூநகரிப் பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குடியேற்றங்கள் குறுணிக்கற்காலப் பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதற்கான சில ஆதாரங்கள் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது கிடைத்துள்ளன. இவ்விடங்களில் இப் பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய சிறிய குவாட்ஸ் (quartz) கல்லாயுதங்களும், குவாட்ஸ் கற்களைக் கொண்டு கல்லாயுதங்கள் ஆக்கும் போது  ஏற்படும் செதில்கள் (flakes)) பலவும் கிடைத்துள்ளன. வெட்டுக்காட்டில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மற்றொரு வகையான சேட் (chert) கற்கள் சில கிடைத்திருக்கின்றன. இவ்விடத்திலிருந்து குவாட்ஸ் கல்லாயுதங்களோடு உலோகத்தாலான மீன் பிடிப்பதற்குரிய ஊசியும் (metal fish-hook) (பிற்காலத்திற்குரியது), பிளேட் போன்ற தட்டையான ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன13.      

மற்றைய நாடுகளில் இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் புதிய கற்காலம் எனப்படும். நாடோடிகளாக இடத்திற்கு இடம் பெயர்ந்து வேட்டையாடி. உணவு சேகரித்து வந்த மனிதன் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விவசாயத்திலும், பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்ட காலம் இது. மனிதர்கள் கூட்டாக ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க, அங்கே முதல்-கிராமங்கள் உருவாயின. இக்காலத்தில் செம்பு, ஈயம், வெண்கலம் (bronze) போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. இதைத் தொடர்ந்து இரும்பு அறிமுகமான காலம் இரும்புக்காலம் எனப்பட்டது.

 இலங்கையில்புதிய கற்காலம் தெளிவாக நிறுவப்படவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இங்கே இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாக அறியத்தருகின்றன.      

ஆதி இரும்புக்காலம் :

பெருங்கற்காலப் பண்பாடு

வன்னியில் இடைக்கற்காலத் தொல்லியல் மையங்கள்

இக்கால, விஞ்ஞான ரீதியான, காலக் கணிப்புகளின்படி இலங்கையில் இரும்பின் உபயோகம் இ.மு. 3380 ஆம் ஆண்டு காலத்தில் ஆரம்பமாகியிருக்கிறது. இக்காலம் முதல் கல்லாயுதங்களுக்குப் பதிலாக இரும்பினாலான ஆயுதங்களையும், கருவிகளையும் மக்கள் தமது அன்றாட வாழ்வில் பெருமளவு பயன்படுத்தினார்களாகையால் இக்காலம் இரும்புக்காலம் எனப் பெயர் பெற்றது. இக்காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகையால், இதை வரலாற்று உதயகாலம் என்றும் அழைப்பார்கள்.15   

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஆதி இரும்புக்காலம் பெருங்கற்காலப் பண்பாட்டுக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இப்பண்பாட்டு மக்கள் இறந்தோரை அடக்கம் செய்ய ஈமச் சின்னங்களுக்குப் பெரிய கற்களைப் பயன்படுத்தியமை ஆகும். பெருங்கற்களினாலான இச் சமாதிகளுடன் மற்றும் பல வாழ்வியல் அம்சங்கள் பின்னிப் பிணைந்து இருப்பதனால் இது பெருங்கற் கலாசாரம் எனப் பெயர் பெறுகிறது.

புதிய கற்காலத்தில், கிழக்கு மத்தியதரை நாடுகளில் (Eastern Mediterranean) இறந்தோரின் சடலங்களை பெரிய கற்களினால் செய்யப்பட்ட குழிகளிலும், சமாதிகளிலும் புதைக்கும்  வழக்கம் ஆரம்பமாகியது. இ.மு. 4,500 – 5.000 ஆண்டுகளில் மத்தியதரை நாடுகளில் வழக்கிலிருந்த இப் பண்பாடு இ.மு. 3,550ம் ஆண்டுகாலப் பகுதியில் தென்னிந்தியாவில் திராவிட மக்கள் மத்தியில் பரவியது. அங்கிருந்து இ.மு. 3.400 ஆண்டு காலப்பகுதியில் இப் பண்பாடு இலங்கையை வந்தடைந்தது.

தென்னகத்திலும் இலங்கையிலும் இறந்தோரைப் புதைக்கும் பண்பாட்டோடு வேறு சில அம்சங்களும் அவசியமான கூட்டாக இணைந்து ஒரு பெருங்கற்காலக் கலாசாரமாக உருவாகின. இக் கலாசாரத்தின் சிறப்பியல்புகளாக பின்வரும் ஆறு அம்சங்களும் அமைகின்றன:

  1. நீர்ப்பாசனக் குளம்
  2. நெல் வயல்கள்
  3. குடியிருப்புகள்
  4. இறந்தோரை அடக்கம் செய்த பெருங்கற் கல்லறைகள்
  5. இரும்பு உபயோகம்
  6. கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம்.

இப் பெருங்கற் கலாசாரக் கல்லறைகளோடு தொடர்புடைய அடக்க முறையே தாழிப்புதையல் ஆகும். “மூன்றடி ஒன்பது அங்குல உயரமும், மூன்றடி ஆறு அங்குல விட்டமும் கொண்ட பெரிய தாழிகளில் (பானை) உட்கார்ந்த நிலையில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன” என்கிறார் ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றங்கரை மேடுகளில் இத் தாழிகளை அகழ்வாய்வு செய்த தொல்லியலாளர் அலெக்ஸாந்தர் ரியா (Alexander Rea)16.  

பெருங்கற்காலப் பண்பாடு பற்றிய சான்றுகள் தென்னாசியாவிலே பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது திராவிட மொழிகள் பேசும் தென்னிந்தியாவிலேதான் செறிந்து காணப்படுவதோடு சில தனித்துவமான அம்சங்களையும் கொண்டு விளங்குகிறது. இப்பண்பாட்டக்குரிய ஈமச்சின்னங்களின் வகையான முதுமக்கள் தாழிகள் (urn burials), கல்லறைகள் (cist burials), கற்கிடைகள் (rock-cut burials)) என்பன விளங்குகின்றன. தென்தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் சங்க காலத்தில் புதைகுழியும், தாழி அடக்க முறையுமே பெருமளவு பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது17.

பெருங்கற்காலப் பண்பாட்டு அடக்க முறைகள் பண்டைய தமிழிலக்கியங்களில் பல இடங்களில் கூறப்படுகின்றன. இப் புதையல் முறைகளை-

சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுவோர்
தாழ் வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்”
என்கிறது மணிமேகலை.18

தென்னிந்தியாவில் இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன் கூடிய பயிர்ச் செய்கை, கறுப்புச்சிவப்பு மட்பாண்ட உபயோகம், கட்டமைப்புடைய சமூகத்தோற்றம், அரச அமைப்பு என்பன இப் பண்பாட்டுடன் தோற்றம் பெறுகின்றன. சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் இப்பண்பாட்டின் பின்னணியிலே தோன்றியவையாகும்19.  இத்தகைய ஒரு பண்பாடே கிறிஸ்துவிற்கு முற்பட்ட ஆயிரத்தாண்டு காலப் பகுதியில் இலங்கையிலும் பரவி நீர்ப்பாசன நாகரிகத்தை மையமாகக் கொண்ட நகரங்களும், அரசுகளும் தோற்றம் பெறக் காரணமாக இருந்தது என்பதை இந்நாட்டின் முக்கிய பண்பாட்டு மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட   சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையின் பெருநிலப்பகுதியில் இப்பண்பாடு நிலவியதற்கான சான்றுகள் அநுராதபுரம், கதிரவெளி, பொம்பரிப்பு, வவுனியா, திசமஹாரகம, மாந்தை போன்ற இடங்களில் கண்டபிடிக்கப்பட்டுள்ளன. இப் பண்பாட்டோடு கூடிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் இலங்கை முழுவதுமே பரந்து காணப்படுகிறது. தென்னிந்தியாவில் கி.மு. 1500ஆம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற இப் பண்பாடு எவ்வாறு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல்வேறு பண்பாடுகளைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்ததோ, அதே போல இலங்கையிலும் தமிழ், சிங்களப் பண்பாடுகள் தோன்றுவதற்கு இப் பெருங்கற்கால பண்பாடே காரணமாக இருந்தது என்ற கருத்தை பேராசிரியர் சிற்றம்பலம் முன்வைத்திருக்கிறார்.20  

பொம்பரிப்பு

     இலங்கையின் மேற்குக் கடற்கரைக்குச் சமீபமாக மன்னாரிலிருந்து தெற்கே 89 கி.மீ. தொலைவிலும், புத்தளத்திற்கு வடக்கே 32 கி.மீ. தூரத்திலும் அமைந்திருப்பது     பொம்பரிப்பு. இக்காலத்தில் வில்பத்து தேசிய சரணாலய வனத்தினுள் அமைந்திருக்கும் இவ்விடத்தில் மனிதர்கள் வசிப்பதில்லை. ஆனால், கிறிஸ்துதசாப்தத்திற்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளாக தாழிப் புதையல்களை புதைக்கும் பெரியதொரு இடுகாடாக – ஈமவயலாக விளங்கியது பொம்பரிப்பு. 1970ஆம் ஆண்டில் பொம்பரிப்பில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட அமெரிக்காவின் பென்ஸில்வேனிய பல்கலைக்கழக ஆய்வாளர் திருமதி விமலா பேக்லி, நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடுகாட்டில் 8,000 தாழிகளில் 12,000 பேர்வரை புதைக்கப்பட்டிருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்.21 1990ஆம் ஆண்டில் இந்த இடுகாட்டை மேலாய்வுசெய்த சிற்றம்பலம் இந்த இடுகாட்டின் பரப்பளவு நான்கு ஏக்கரைவிட மேலும் மிகப் பெரியது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.22  

0.66 மீட்டர் முதல் 1.22 மீட்டர் உயரமும் 40 செ.மீ. முதல் 90 செ.மீ. வரை விட்டமும் கொண்ட தாழிகள் நில மட்டத்திற்கு ஒரு மீட்டர் முதல் அரை மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன. சில சமயம் ஒரே தாழியினுள் ஒரு வயதானவரதும், ஒரு சிறு பிள்ளையினதும் எலும்புக் கூடுகள் காணப்படுகின்றன. வயதானவர்கள் உட்கார்ந்த நிலையிலே புதைக்கப்பட்டிருக்கிறார்கள். தாழிகளின் அடியிலே இறந்தோர் வாழ்ந்த காலத்தில் உபயோகித்த பொருட்கள், சமயச் சின்னங்கள் ஆகியனவும் காணப்படுகின்றன. இத்தாழிகள் அதன் வாய்களுக்குப் பொருந்தக்கூடிய அளவான மூடிகளால் மூடப்பட்டிருக்கின்றன.23   

இப் பெரிய தாழிகளைச் சுற்றிவர சிறிய குடங்களில் உணவுப்பொருட்கள், அன்றாடப் பாவனைப் பொருட்கள் என்பன காணப்படுகின்றன. குடங்கள், சட்டிகள், குவளைகள், தட்டுகள் பலதரப்பட்ட உருவங்களிலும், பருமன்களிலும் காணப்படுகின்றன. இம் மட்பாத்திரங்கள் கறுப்பு-சிவப்பு, தனிக் கறுப்பு, தனிச் சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.24 இத்தாழிகளில் காணப்படும் எலும்புகளை ஆராய்ந்த மானிடவியல் விற்பன்னரான கென்னெத் கென்னடி தென்னிந்தியாவின் பெருங்கற் புதைகுழிகளில் காணப்பட்ட எலும்புகளை இவை ஒத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.25 மேலும், இலங்கையில் வாழும் இன்றைய மக்கள் இப் பெருங்கற்கால மக்களின் வம்சாவளிகளே என்பதையும் அறியத்தருகிறார் பேராசிரியர் கென்னடி.26

இப்பெருங்கற் கலாசாரத்தின் ஓர் அங்கமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் பற்றிய ஒரு வார்த்தை: பண்டைய திராவிட மக்களின் தனித்துவமான இம்மட்பாண்டங்கள் புதிய கற்காலத்தின் இறுதிப்பகுதியிலும், இரும்புக்காலத்தின் முற்பகுதியிலும் வழக்கத்திலிருந்தன. தென்னாசியாவில் சிந்துவெளியில் ஹரப்பா அகழ்வுகளின் போது இம் மட்பாண்டங்களை நாம் முதன் முதலாகச் சந்திக்கிறோம். தொடர்ந்து திராவிட மக்கள் வாழ்ந்த தென்னகமெங்கும் பெருங்கற்காலத்தில் இவை புழக்கத்திற்கு வந்தன. களிமண்ணினால் பானைகளை உருவாக்கி வனைந்த பின் அவற்றை தலைகீழாகப் புரட்டி கழுத்து வழியாக சூளையில் சுடவைக்கும் போது, சுடப்படும் பானையின் உட்பகுதி கறுப்பாகவும், வெளிப்பகுதி சிவப்பாகவோ அல்லது கறுப்பும் சிவப்பும் கலந்தோ அமையும் என்கிறார் இவற்றை ஆராய்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மோட்டிமர் வீலர் (Sir Mortimer Weeler).  

மாந்தை (மாதோட்டம்)

இலங்கையிலுள்ள துறைமுக நகரங்களில் மிகப் பழைமையானது மாந்தை. தேவார காலத்தில் இது மாதோட்டம் என்றும் பெயர் பெற்றிருந்தது. மனித நாகரிகம் வளர்ச்சி பெற்ற காலத்தில் உலகெங்கும் பெரும்பாலும் துறைமுகங்களே ஒரு நாட்டின் முதல் நகரங்களாக உருவாகின. இந்து சமுத்திரத்தின் மத்தியில், இந்திய உபகண்டத்தின் தென்முனையில், இந்து சமுத்திரத்தின் மேற்கிலும் கிழக்கிலுமிருந்து வரும் கடற்பாதைகள் சங்கமிக்கும் கேந்திர நிலையமாக விளங்கியது மாந்தை. சீனாவிலிருந்து பட்டுத்துணிகளையும், பீங்கான் பாண்டங்களையும் கொண்டு கிழக்கு ஆபிரிக்கா நோக்கிச் செல்லும் கப்பல்களும், ரோமாபுரியிலிருந்து மதுச்சாடிகளை ஏந்தி வந்து பின் வாசனைத் திரவியங்களை ஏற்றிச் செல்லும் மரக்கலங்களும், அரேபியாவிலிருந்து வந்து கீழைத்தேச பண்டங்களையும் சரக்குகளையும் ஏற்றிச்செல்லும் பாய்க்கப்பல்களும் கடல்பாதையின் மத்தியிலிருந்த மாந்தைத்துறைக்கு குடிநீர் பெறவும், உணவுப்பண்டங்களைப் பெற்றுக்கொள்ளவும் வந்தவண்ணம் இருந்தன.

புராதன மாந்தைத்துறையிருந்த நிலப்பகுதி இன்று கடலிலிருந்து 200 மீட்டர் தள்ளி 30 ஹெக்டயர் பரப்பளவிலான மண்மேடாகக் கிடக்கிறது. இந்த மண்மேட்டின் மத்தியில் திருக்கேதீஸ்வரம் ஆலயம் அமைந்திருக்கிறது. 1980, 1982, 1984 ம் ஆண்டுகளில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி ஜோன் காஸ்வெல் (John Carswell) தலைமையில் இந்த மண்மேட்டில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இம்மண்மேட்டின் மேற்பகுதி உலகின் பலநாடுகளுக்குரிய வரலாற்றுக்காலக் கருவூலங்களைக் கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை சீன, அரேபிய, கிரேக்க. ரோம, பாரசீக நாடுகளுக்குரியனவாகும். அகழ்வுக் கிடங்குகளின் அடிப்பகுதியில் இவ்விடத்தில் இடைக்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்பட்டன. குறுணிக்கல் ஆயுதங்கள், மீன்களின் எலும்புகள், கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன. அகழ்வுக்கிடங்குகளின் அடியில் நீர் ஊறிக்கொண்டு வந்தமையால் மேற்கொண்டு அகழ்வுகளைத் தொடர முடியவில்லை.27   சமீபகாலத்தில் வெளிவந்த மாந்தையின் அகழ்வாராய்ச்சி பற்றிய விரிவான நூலில் இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட குறுணிக்கற்களின் காலம் இ.மு. 3800 (1800 B.C.) ஆகக் கணிக்கப்பெற்றிருக்கிறது.28 

பூநகரி

தென்னிந்தியாவிலே பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்கள் வாழ்ந்த இடங்களில் வதிவிடம், இடுகாடு, குளம், வயற்பரப்பு, கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம் ஆகியன முக்கியமான அம்சங்களாக விளங்கின. பூநகரியிலும் இத்தகைய பண்பாடும், ஈமச்சின்ன அமைப்பு முறையும் கிறிஸ்தாப்தத்திற்கு முந்திய நூற்றாண்டுகளிலிருந்தே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. பெருமளவு மணற்பாங்கான இப்பிராந்தியத்திலே பெருங்கற்கள் காணப்படாததனால் அவ்விடங்களிலே தாழிகளும், குழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.29

பூநகரியில் பள்ளிக்குடா, ஈழவூர் ஆகிய இடங்களிலே புதியனவாகக் கிணறுகள் வெட்டியபோது சில சந்தர்ப்பங்களில் மனித எலும்புகளுடன் கூடிய முழுமையான தாழிகளும், நீளப்புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூட்டைச்சுற்றி பல மட்பாண்டங்களும் வெளிவந்திருக்கின்றன. அக் கிணறுகள் பின்னர் இடையிலே கைவிடப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வாறு கைவிடப்பட்ட ஒரு கிணற்றின் மேற்பாகங்களிலிருந்து மட்பாண்ட ஓடுகள், மணிகள், கைவளையல்கள், இரும்பாணிகள், முழுமையான மட்பாண்டம் என்பன கிடைத்திருக்கின்றன.  

பூநகரியிலே பல வருடங்களுக்கு முன்னர் காடுகளாக இருந்து தற்போது பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தியாகம், குதிரை கட்டின தீவு, பல்லவராயன் போன்ற இடங்களிலும் இந்த அம்சங்களை அவதானிக்க முடிகிறது. இங்கு கைவிடப்பட்டுள்ள சிறு சிறு குளங்களை அடுத்துள்ள மேட்டுப்பாங்கான நிலங்களிலும், வயற்காணிப்பரப்புகளிலும் பெருந்தாழிகளின் உடைந்த பாகங்களும், சிறிய மட்பாண்ட ஓடுகளும், சுடுமண் உருவங்களும், மணிகள், கைவளையல்கள் முதலியவையும் மேலாய்வின்போது கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்விடங்களிலே புதிதாகப் பயிர்ச் செய்கைக்கு வயல்கள் திருத்தப்படும்போது பரந்து காணப்படும் தாழிகளின் உடைந்த பாகங்களைப் பொறுக்கி எடுப்பதற்காகவே தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதுண்டு. இவ்வாறு பொறுக்கி எடுக்கப்பட்ட ஓடுகள் வயற்கரைகளிலே குவிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவற்றை நோக்கும் போது ஆதிச்சநல்லூர், பொம்பரிப்பு போன்ற இடங்களைப் போல இங்கும் பரந்த அளவில் பெருங்கற்காலத் தாழிக்காடு இருந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்விடங்கள் முழுமையான அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படுமானால் மேலும்பல புதிய வரலாற்று உண்மைகள் வெளிவர இடமுண்டு.30

 பூநகரியில் வெட்டுக்காடு, மண்ணித்தலை என்பன பெருங்கற்காலப் பண்பாட்டின் முக்கியமான தொல்லியல் மையங்கள் எனக் கூறலாம். இவ்விரு இடங்களிலுமிருந்தே இப்பண்பாட்டிற்கே சிறப்பாய் உரிய கறுப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களை பெற முடிந்தது. இச் சான்றுகள் காணப்பட்ட இடங்களிலிருந்து மேலும், தனிக் கறுப்பு, சிவப்பு, நரைநிற ((grey ware மட்பாண்ட ஓடுகள், சிவப்பு நிறமான முழுமையான இரு பானைகள், மண் விளக்குகள், சுடுமண் பாவைகள் (terracotta figures)) என்பன கிடைத்துள்ளன. இப்பண்பாட்டு மக்கள் ஓரளவுக்கு விவசாயத்தையும், பெருமளவிற்கு மீன் பிடித்தொழிலையும் மேற்கொண்டிருந்ததை அறிய முடிகிறது. இதை இச்சின்னங்கள் காணப்பட்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரும்பினாலான கொழுவும் ((plough share), கத்திகளும், பரவலாகக் கிடைத்த மீன்பிடி ஊசிகளும் (fish hooks) உறுதிப்படுத்துகின்றன. இவை தவிர பலவடிவங்களிலே செய்யப்பட்ட மணிகள் (beads), கைவளையல்கள்(Bangles), எலும்பினால் செய்யப்பட்ட கழுத்து மாலைகள் (necklaces)), உலோகத்தால் செய்யப்பட்ட காற்சலங்கைகள், அலங்காரப் பெருட்கள் ஆகியவையும் இவ்விடங்களில் கிடைத்திருக்கின்றன31.          

வடஇலங்கையைப் பொறுத்தவரையில் பெருங்கற்காலப் பண்பாடானது ஆதி இரும்புக் காலம் முதலாக, வரலாற்றுதயகாலம் ஈறாக, வரலாற்று ஆரம்ப காலம் வரை நீடித்திருக்கிறது. கி.மு. 300 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பெருங்கற் காலத்தை ஆரம்ப பெருங்கற்காலம் என்றும், கி.மு. 300ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட பெருங்கற் காலத்தை பிற்காலப் பெருங்கற்காலம் என்றும் தொல்லியலாளர்கள் அழைப்பது வழக்கம்.32 

முடிவுரை

இதுவரை கூறப்பட்ட விவரங்கள் வன்னிப் பகுதியில் வரலாற்றுக் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றி தொல்லியல் ரீதியாக நாம் அறிந்து கொள்ளக்கூடிய   தகவல்களாகும். இவ்விடங்களில் காணப்படும் பெருங்கற் கலாசாரச் சின்னங்கள் இங்கே திராவிட மக்களின் செறிவான குடியிருப்புகள் இருந்தமைக்கான உறுதியான ஆதாரங்களாகும். இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் (கி.மு. 300ல்) வன்னிநாட்டில் வரலாற்றுக்காலம் ஆரம்பமாகியது. வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்தை வன்னியில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. 300 ஆம் ஆண்டுக் காலத்திற்குரிய  தமிழ்ப் பிராமிச் சாசனங்களும், பிராகிருத பிராமிச் சாசனங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்

  1. MACDOUGAL, DOUG (2004): Frozen Earth: The Once and Future Story of the Ice Ages,
    University of California Press. THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre,
    London.
  2. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective; Dept. of Archaeology, Colombo, p.167
  3. THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, London: 38-39.
  4. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.12
  5. DERANIYAGALA, S.U. (2013): General Conclusions in Mantai City by the Sea by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aichwald, Germany, p.511
  6. MISHRA, S. (1995): Chronology of the Indian Stone Age, Man and Environment 20 (2): 11-16.
  7. DERANIYAGALA, S.U. (1996): Pre and Protohistoric Settlements in Sri Lanka, in The Prehistory of Asia and Oceania Vol.5, Section 16, pp 277-285.
  8. DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka (as above): pp 686-688. The gravel at Iranamau Formation had given varying dates of 125,000 BCE (M.Abeyaratne 1996), and 80,000 BCE (Oxford Archaeological Laboratory) from different sites. ABEYRATNE, M. (1996): Multi-dating Studies of Archaeological Sites, Unpublished Ph.D. dissertation, Australian National University, Canberra.
  9. ALLCHIN, BRIDGET & ALLCHIN, RAYMOND (1968): The Birth of Indian Civilization, Harmondsworth, London: pp 96-99.
  10. DERANIYAGALA, S.U. (1996): as above. pp 277-285.
  11. சிற்றம்பலம், சி.க. (1999): பண்டைய தமிழகம், குமரன் பப்ளி~ர்ஸ்: பக். 50-51.
  12. DERANIYAGALA, S.U. (1996): as above.
  13. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.14
  14. DERANIYAGALA, S.U. (2013): General Conclusions in Mantai City by the Sea by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aichwald, Germany, p.511
  15. GOONATILAKE, SUSANTHA (1981): The Formation of Sri Lankan Culture, Ancient Ceylon, No.4
  16. REA, ALEXANDER (1915): Catalogue of Prehistoric Antiquities of Adichanallur and Perumbiar, Govt. Publications, Madras.
  17. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.15
  18. மணிமேகலை: அதி. 6, வரி. 66-67.
  19. SITRAMPALAM, S.K. (1980): The Megalithic Culture of Sri Lanka, Ph.D. Thesis, University of Poona.
  20. SITRAMPALAM, S.K. (1980): ibid p.384.
  21. BEGLEY, VIMALA (1981): Excavations of Iron Age Burials at Pomparippu; Part One: Excavations at Pomparippu 1970; Ancient Ceylon, No. 4, Colombo.
  22. SITRAMPALAM, S.K. (1990): The Urn Burial site of Pomparippu of Sri Lanka, Ancient Ceylon, No. 7, Vol. 2., pp 237-307.
  23. DERANIYAGALA, P.E.P. (1958): Report of the Archaeological Survey of Ceylon for 1957, Part IV, Colombo. BEGLEY, VIMALA (1981): as above, pp. 69-75.
  24. BEGLEY, VIMALA (1981): ibid.
  25. KENNEDY, K.A.R. (1975): The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, Canberra.
  26. KENNEDY, K.A.R. (1975): ibid pp. 75-80.
  27. CARSWELL, JOHN & PRICKETT, MARTHA (1984): Manthai 1980: Ancient Ceylon No.5.
  28. CARSWELL, JOHN; DERANIYAGALA, SIRAN; GRAHAM, ALAN (2013): Mantai City by the Sea, Linden Soft Verlag, Germany, p. 511.
  29. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.18.
  30. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.16-17.
  31. புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்.18-20.
  32. RAGUPATHY, PONNAMPALAM (1987): Early Settlements in Jaffna: An Archaeological Survey, Madras: p.181.

(இ.மு. இற்றைக்கு முற்பட்ட ஆண்டுகள்)


ஒலிவடிவில் கேட்க

22594 பார்வைகள்

About the Author

சிவ தியாகராஜா

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)