வடக்கு - கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும் : வடக்கு - கிழக்கில் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி
Arts
10 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும் : வடக்கு – கிழக்கில் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி

March 18, 2023 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வாய்ப்பான தொழில் வளமாகக்  காணப்படும் விவசாயத்துறையில் அதிக பங்கை நிர்ணயிக்கும் நெல் மற்றும் தானியப் பயிர்களின் பங்களிப்புத் தொடர்பாக கடந்த இரு தொடர்களில் நாம் பரிசீலித்தோம். இன்று இதே துறையில் கணிசமான வாய்ப்பைக் கொண்டிருக்கும் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி தொடர்பாக ஆராய்வோம்.

இலங்கைத் திருநாட்டின் தேசிய நெருக்கடியாக உருப்பெற்றுள்ள பொருளாதாரப் பின்னடைவை வெற்றி கொள்வதில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் உள்நாட்டு விவசாயத்துறையில் இப்போது பல விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பொருளாதாரப் பின்னடைவு என்பது இலங்கைக்கு மட்டும் உரிய ஒன்றல்ல. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குத்  தொடர்பான 2018 ஆம் ஆண்டின் அறிக்கை,  821 மில்லியன் மக்கள் உலகளாவிய நிலையில் பசி பட்டினிக்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரிவித்ததுடன் இது தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றியும்  விளக்குகின்றது. அதிலும் 150 மில்லியன் சிறுவர்கள் மந்த போசணைக்கு உட்பட்டிருப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை தொடர்பில் உலக உணவுத்திட்ட அமைப்பின் 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி 6.3 மில்லியன்  பேர், அதாவது  இலங்கையின் 30% சனத்தொகையினர்  உணவுப்பாதுகாப்பின்மைக்கு உட்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியும் பணவீக்கம் காரணமாக உணவுப்பாதுகாப்பின்மையும் தொடரும் எனவும் இதனால் பாதிப்படைவோரது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பே காணப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்கம் 70% மாகக் காணப்பட்டது. தற்போது 2023 ஜனவரியில் இது 54 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.  எனினும் இதன் போக்கை தொடருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படாத நிலையில் உணவுப்பாதுகாப்புக்கு அடிப்படையான விவசாயத்துறையின் பங்குபற்றுதலை செயல்திறனுடையதாக்குவது தவிர்க்க முடியாததாகிறது.

இவ்வகையில் மரக்கறி உற்பத்தி துறையின் செயற்பாடுகளை நோக்கும் போது கிழக்கு மாகாணத்திலும் வடமாகாணத்திலும் காணப்படும் மண் அமைப்பின் அடிப்படையில் கத்தரி, பயிற்றங்காய், உருளைக்கிழங்கு, கறிமிளகாய், தக்காளி, கோவா, கரட், பீற்றூட், வெண்டி, பூசணி, பாகல், புடோல், மரவள்ளி, வற்றாளை, சட்டிக் கரணை, போஞ்சி, கெக்கரி, முள்ளங்கி, லீக்ஸ், பீர்க்கு, டுபாய் பூசணி, சிறகவரை என்பன போன்ற பலவகையான மரக்கறிப்பயிர்வகைகள் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. இந்த மரக்கறிகளின் பங்களிப்புடன் போசணைக்கூறில் உள்ளடங்கும் புரதம் மற்றும் விற்றமின்கள், கனியுப்புகள் என்பன இலகுவாக பெறக்கூடியதாக இருக்கிறது.

வட மாகாணத்தில் கத்தரி செய்கை

கத்தரி

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் மரக்கறிப் பயிர்களின் உற்பத்தியில் அவற்றின் பங்களிப்பின் அடிப்படையில் பயிர்வாரியாக நோக்கும் போது  முதன்மையான மரக்கறிப் பயிராக கத்தரியே காணப்படுகின்றது. வருடாந்தம், கிழக்கு மாகாணத்தில் 806 ஹெக்டேயர் பரப்பில் 13,731 மெற்றிக்தொன்னும்,  வடமாகாணத்தில் 1712 ஹெக்டேயர் பரப்பிலும்  24432 மெற்றிக்தொன்னுமாக   மொத்தம்  38,163 மெற்றிக்தொன் கத்தரி, இவ்விரு மாகாணங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மரக்கறிப் பயிர்களில் கத்தரியின் பங்களிப்பே  முதன்மையாகக் காணப்படுவதுடன் வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.

வெண்டி

 வெண்டிப் பயிர், வடக்கில் 878 ஹெக்டேயர் பரப்பிலும் கிழக்கில் 605 ஹெக்டேயர் பரப்பிலுமாக  மொத்தம் 1,483 ஹெக்டேயர் பரப்பில் செய்கைபண்ணப்படுவதுடன்,  கிழக்கு மாகாணத்தில் வருடாந்தம் 7,495 மெற்றிக்தொன்னும் வடக்கில் 11,320 மெற்றிக்தொன்னும் விளைவாக கிடைக்கப்பெறுகிறது. வாழ்வாதார தொழில் முயற்சியில் அதிக வருமானத்தை பெறக்கூடிய பயிர்ச்செய்கை வகையாக காணப்படும் கத்தரி, வெண்டி, பயிற்றை என்பன வடக்கு -கிழக்கின் பிரதான பயிர்களாக இருந்து வருகின்றன. வெண்டி விளைவிக்கப்படும் இடங்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களே முதன்மையானவையாகக் காணப்படுகின்றன. குறுகிய பயிர்ப்போகத்தை கொண்ட வெண்டிச் செய்கையில் அதிக உற்பத்தி குறித்த காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்படுவதால் விவசாயிகள் இந்தப்பயிர்ச் செய்கை மீது அதிக நாட்டமுடையவராகவே உள்ளனர். கலப்பு பிறப்பாக்கத்தின் மூலம் தாய்த் தாவரங்கள் பெறவேண்டிய கம்பனித் தனியுரிமைக்கு உட்படாத பயிராக இது இருந்து வருவதால்,  சுய நுகர்வுக்காக பல விவசாயிகள் வீடுகளில் பயிரிட்டு பலன் பெறுவது  மதிப்பீட்டுக்குள் உட்படுத்தப்படவில்லை என்பதால் , உண்மை உற்பத்தியானது  புள்ளிவிபரங்களை விடவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

பயிற்றங்காய்

மரக்கறிப்பயிர்களில் மற்றுமொரு முக்கியமான பயிர் பயிற்றங்காய். இது  வட மாகாணத்தில் 9,487 மெற்றிக்தொன்னும் கிழக்கு மாகாணத்தில் 4,674 மெற்றிக்தொன்னுமாக மொத்தம் 14,174 மெற்றிக் தொன் வருடாந்த விளைச்சலைக் கொடுக்கின்றது. இரு போகங்களிலும் விளைவிக்கப்படும் இந்தப்பயிரானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. பல்வேறு பயிர் மாற்ற தொழில்நுட்பங்களூடாக உருவாக்கப்பட்டுள்ள பல வகையான பயிற்றங்காய்கள் காணப்படுகின்றன. நோய்த்தாக்கம் ஒரு பிரச்சினையாக இருந்த போதும் தரமான விவசாயிகளினால் இது வெற்றிகரமாகப் பயிரிடப்பட்டு வருகின்றது.

பூசணி

மன்னாரில் பூசணி உற்பத்தி

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மற்றுமொரு பிரபல மரக்கறிப்பயிராக பூசணிச் செய்கை இருந்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் 838 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 249 ஹெக்டேயர் பரப்பிலும் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இப்பயிரிலிருந்து வட மாகாணத்தில் 13,125 மெற்றிக்தொன்னும் கிழக்கு மாகாணத்தில் 4,411 மெற்றிக்தொன்னும் வருட விளைச்சலாக கிடைக்கப்பெறுகிறது.

இலங்கையில் அதிகளவில் பூசணிச் செய்கை இடம்பெறும் மகாவலி வலயத்துக்கு அடுத்ததாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தே பூசணி அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பூசணியின் பருவகாலத்துக்கேற்ப இதன் அறுவடையானது ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இடம்பெறும் என்பதால் சந்தையின் நிரம்பல் ஒரே அளவில் காணப்படுவதில்லை. அறுவடைக்காலத்தில் அதிக விளைச்சல் சந்தைக்கு வரும் போது அதன் விலை தானாகக் குறைவடைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெறும் விலைக்கும் சந்தை விலைக்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் காணப்படுவதுடன் மொத்த வியாபாரிகளுக்கு இதன் நன்மை சென்று சேர்வதாகவும் அமைந்து விடுகிறது. மாறாக உள்ளூரில் இதனை முறையாகப் பதப்படுத்தி மாற்று வடிவத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் பொறிமுறையும் காணப்படாமையால் பூசணிச் செய்கை,  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இல்லை என்பதும் அனுபவமாகவுள்ளது. இதற்கு மேலதிகமாக, பூசணிச் செய்கைக்காக மூல விதைகளை தாம் பயிரிடும் பூசணிக்காயில் இருந்து பெறக்கூடிய நிலை இப்போது இல்லாமல் போய் விட்டது. மூல விதைகளின் தனியுரிமை, கம்பனிகளின் கைகளுக்குச் சென்று விட்டதால் இதற்கென விதை ரின்கள் வாங்கித்தான் உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது. பூசணிச் செய்கையில் கிழக்கில் திருகோணமலையிலும் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகளவு உற்பத்தி கிடைத்து வருகிறது.

கறிமிளகாய்

பாலசிங்கம் பாஸ்கரன், தனது கைவிடப்பட்ட தோட்டத்தில் -7 மே 2020

அடுத்து கறிமிளகாய்ச் செய்கையை எடுத்துக் கொள்ளும் போது வட மாகாணத்தில் 739 ஹெக்டேயர் பரப்பிலும் கிழக்கில் 75.6 ஹெக்டேயர் பரப்பிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் 10 மில்லியன் மெற்றிக்தொன் விளைச்சல் வடக்கிலும் கிழக்கிலும்  வருடாந்தம் பெறப்பட்டு வருகிறது. இது இலங்கையின் மகாவலி வலயம் மற்றும் உயர் மலைநாட்டு பகுதிகளிலும் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பயிரானது சிறுபோகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிக விளைச்சலை வழங்கி வருகிறது.

தக்காளி

தக்காளி செய்கை  வட மாகாணத்தில் 603 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 110 ஹெக்டேயர் பரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றது. வருடாந்த விளைச்சலாக கிழக்கில் 2,256 மெற்றிக்தொன்னும் வடக்கில் 12,836 மெற்றிக்தொன்னும் விளைவாகப் பெறப்பட்டு வருகிறது. தக்காளியை  சந்தைப்படுத்தும் போது  நெருக்கடிகள் இருந்த போதும் சந்தைத் தேவையின் பெரும்பங்கை வடக்கு – கிழக்கு மாகாணங்களே தொடர்ந்து நிரம்பல் செய்து வருகின்றன. பருவகாலப் பயிரான இதன் செய்கைக்காலத்தில் விளைவும் ஒரேயடியாகப் பெறப்படுவதால் விலை குறைவுக்குட்படுவது தவிர்க்க முடியததாகிறது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கிழக்கில் திருகோணமலையிலும் அதிகம் பயிரிடப்பட்டாலும் இது வடபுலத்தின் பிரதான பயிர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

புடோல்

கொரோனாவினால் வடக்கு – கிழக்கில் கைவிடப்பட்ட மிளகாய் தோட்டம்

அடுத்து புடோல் செய்கையின் பங்களிப்பு குறித்து நாம் ஆராயும் போது கிழக்கில் 271 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் வடக்கில் 430 ஹெக்டேயர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருவதுடன் வடக்கிலிருந்து 8,726 மெற்றிக்தொன்னும் கிழக்கிலிருந்து, 4369 மெற்றிக்தொன்னும் வருட விளைவாக கிடைத்து வருகிறது. வடக்கில் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களிலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகம் உற்பத்தி செய்யப்படும் இப்பயிரானது அனுபவம் மிக்க விவசாயிகளின் பயிராக மட்டுமே இருந்து வருகிறது. கொப்பி ஈயின் தாக்கம் காரணமாக பாதிப்படையும் இப்பயிரை முறைப்படுத்தி விளைவு பெறுவதில் தந்திரங்களுடன் கூடிய அனுபவ விவசாயிகளின் பயிராக மட்டுமே இந்த உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கொடிப் பயிர்களில் பாகல், புடோல் என்பவற்றுக்கு இட ஒதுக்கீட்டை செய்யும் போது பெருமளவு நிலப்பரப்பும் தேவைப்படுவதால் குறுகிய நிலமுடைய விவசாயிகள் இதில் ஈடுபடமுடியாத நிலைமையும் காணப்படுகிறது.

பாகல்

கொடிப்பயிர்களின் மற்றொரு வகையான பாகல்  வடமாகாணத்தில் 502 ஹெக்டேயர் பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 264 ஹெக்டேயர் பரப்பிலும்  உற்பத்தி  செய்யப்படுகின்றது. வருட உற்பத்தியாக கிழக்கிலிருந்து 4,137 மெற்றிக்தொன்னும் வடக்கிலிருந்து 8,237 மெற்றிக்தொன்னும் விளைவாகப் பெறப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகளவில் உற்பத்தி இடம்பெறுகின்றது. நிலப்பரப்பின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தேவையான நிலமும் நீர்வசதிக்கான பாசனக் குளங்கள், திறந்த கிணறுகள் என்பனவற்றை இன்னமும் உச்சமட்டத்தில் பயன்படுத்தினால், இந்தப்பயிர்களின் உற்பத்தியில் அதிகரிப்பை கொள்ளமுடியும்.

பீர்க்கு

கொடிப்பயிர்களில் உள்ளடங்கும் இன்னொரு வகையான பீர்க்கு  மாகாணத்திலேயே அதிகளவில் பயிரிடப்படுகின்றது. கிழக்கில் 218 ஹெக்டேயர் பரப்பிலும்  வடக்கு மாகாணத்தில் 63 ஹெக்டேயர் பரப்பிலும் பீர்க்கு பயிரிடப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்திலிருந்து 3,519 மெற்றிக்தொன்னும்,  வடமாகாணத்தில் 712 மெற்றிக் தொன்னும் விளைவாகப் பெறப்பட்டு வருகிறது. குடும்ப மட்டத்தில் சுயதேவைக்காக அதிகம் பயிரிடப்படும் பயிர்களில் ஒன்றாக இது காணப்படுவதால் சுய நுகர்வின் பங்களிப்பு சந்தைப்பங்களிப்பை விட உயர்வாகக் காணப்படுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் இந்தப்பயிரானது லாபகரமான ஒரு பயிராக இருந்தும் பண்ணை முறையில் பயிரிடுவதில் அதிக பண்னையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை அத்துடன் வடக்கு- கிழக்கில் வாழும் தமிழர்களை விட ஏனைய சமூகத்தினரேஇதனை அதிகம் நுகர்வதால் இது எமது பகுதியில் அதிகம் பயிரிடப்படாமலும் உள்ளது. சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இந்தப்பயிரின் உற்பத்தியில் சமூக வழக்காறுகள் காரணமாக விரிவாக்கம் இடம்பெற்றுள்ளது.

இலை மரக்கறிகள்

இலைமரக்கறிகள் என்ற வகையில் கீரைகளின் உற்பத்தியானது இவ்விரு மாகாணங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வடமாகாணத்தில் 729 ஹெக்டேயர் நிலப்பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 236 ஹெக்டேயர் பரப்பிலும் இந்தப் பச்சை இலை உற்பத்தி இடம்பெற்று வருகிறது. வட மாகாணத்தில் 600 மெற்றிக் தொன்னும் கிழக்கு மாகாணத்தில் இருந்து 152 மெற்றிக் தொன் விளைவும் வருடாந்தம் பெறப்படுவதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இது அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மந்த போசணைக்கு எதிராகவும் குள்ளமாதல் மற்றும் நிறைகுறைவுக்கு எதிராகவும் எம்மவர்களை இலகுவாக பாதுகாப்பதில் மிகக் குறைந்த செலவுடன் இந்தப் பச்சை இலை தாவர வகை பங்களித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இந்த உணவு உற்பத்தியானது பல வறிய குடும்பங்களின் உணவுப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பங்களிப்புச்செய்து வருகிறது.

மரக்கறி வகையில் உள்ளடங்கும் கிழங்கு பயிர்கள்

மரக்கறி வகையில் உள்ளடங்கும் கிழங்குப்பயிர்கள் என்ற பகுதியின் கீழ் மரவள்ளி, கருணைக்கிழங்கு என்பவற்றை நோக்கும் போது வட மாகாணத்தில் தான் மரவள்ளிக் கிழங்கு அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1,332 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இது வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுவதுடன் 9,324 மெற்றிக்தொன் விளைவைப் பெற்றுத்தருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்தப் பயிர்ச்செய்கைக்கு சார்பான மண்வளம் இம் மாவட்டங்களில் காணப்படுகின்றது.  இதே போல் கருணைக்கிழங்கும் 68.2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வட மாகாணத்தில் பயிரிடப்பட்டு வருகிறது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12597 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்