கதிர்காம முருகன்:சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும்
Arts
10 நிமிட வாசிப்பு

கதிர்காம முருகன் : சூழலியல் பண்பாட்டுத் தொன்மையும் தொடர்ச்சியும்

April 14, 2023 | Ezhuna
Kathirgama-Murugan-temple

இலங்கையின்  தனித்துவ வழிபாட்டிடமாக கதிர்காம முருகன் ஆலயம் விளங்குகின்றது. வேடர்கள், இந்துக்கள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மக்களினதும் சங்கமமாகத் திகழும் கதிர்காமத்தின் தோற்ற மூலமானது வரலாற்றுத் தொன்மையுள் அமிழ்ந்துள்ளது. கடவுளரின் வரலாறானது குறித்த சமூக வரலாற்றுடனும் சூழலியல் சார் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்துள்ளது என மானிடவியலாளரான Pettezzoni (1956) குறிப்பிடுவார். இந்த வகையில் கதிர்காம முருகன் ஆலயத்தின் சூழலியல் பண்பாட்டுத்தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய ஒரு சமூக மானிடவியல் தரிசனமாக இந்தக்கட்டுரை அமைகின்றது.

கதிர்காமம் தொடர்பான எனது ஆர்வம் என் இளமைக் காலத்திலேயே  என் பெற்றோர் வழி என்னைப்பற்றிக்கொண்டது. தந்தையின் தோள் மீதிருந்து சுவாமி தரிசனம்  செய்தது, மொட்டை அடித்து – நேர்த்திக்காவடி  எடுத்தது முதல் பின்னர் சமூக மானிடவியல் மாணவனாக, ஆய்வு உதவியாளராக பேராசிரியர் கணநாத்  ஒபயசேகர  அவர்களுடன் மேற்கொண்ட ஆய்வுத் தரிசனங்கள் (Gombrich & Obeysekere,1990) என தொடரும் காலத்து  ஒரு சமூக மானிடவியல் பேராசிரியனாக கண்ட ஆய்வனுபவத் தேடல்கள் யாவும் இந்த ஆக்கத்தின் தரவு மூலங்களாகும்.

Kathirgama-old-temple

வழிபாட்டிடங்களில் சூழலியல் பண்பாட்டின் செல்வாக்குத்  தொடர்பான இன்றைய ஆய்வுகளில் முதன்மை பெறும் புனித புவியியல், புனித நிலவுரு என்ற கருத்தாக்கங்கள், கதிர்காமம் தொடர்பான இந்தத் தேடலிலும்  முக்கிய இடம் பெறும். தீவின் தென் கிழக்குக்கரையில், ஊவா மாகாணத்தின் புத்தள பிரிவிலுள்ள  ’தியனகம’ காட்டின் மத்தியில் கதிர்காமம் அமைந்துள்ளது.

கதிர்காமத்தின் சூழலியல் பண்பாட்டுத் தொன்மை, தொடர்ச்சி தொடர்பான இன்றைய கருத்தாடல்கள் இடப்பெயர் ஆராய்ச்சியுடனேயே தொடங்கி விடுகின்றதெனலாம். தத்தமது இனத்துவ அடையாளங்களை நிறுவும் முயற்சியாகவே இவை அமைந்தாலும் சூழமைவின் இயற்கையுடன் கொண்ட தொடர்பு இவற்றிடை துலங்கக் காணலாம். செந்தினைக் கதிர்கள் நிரப்பிவைத்த கமம், கதிர்+கமம் என்பதே கதிர்காமமானது என்பது அ. சி. சிவம்(1954:5) தரும் விளக்கமாகும்.  

vedda-rock

“கதிர்காமம் என்பது சிங்கள மொழிச் சொல்லின் மரூஉவாய்த் தமிழ் மொழியின் கண் திசைச் சொல்லாய் பிற்காலத்தில் வழக்கில் வந்ததென்பதே எமது கொள்கை. அக்கொள்கைக்கேற்ப, கதிரு மரங்களையுடைய ஊர் எனப் பெயர்க் காரணம் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது”என்பார் குல. சபாநாதன் (1965:24).

“தமிழ் மக்கள் குறிஞ்சி நிலத்திலே, குறிஞ்சி நில வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பண்டைப் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயிலே கதிர்காமம் எனல் வேண்டும். சமஸ்கிருத மணமின்றி, மக்கள் வழிபாடியற்றும் முறை இன்றும் அத்திருக்கோயிலிலே வழக்கில் உள்ளது. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் ‘கந்தவழி’ வழிபாடே அது எனலாம்” என்பார் மு.கணபதிப்பிள்ளை (1967).          

தேசத்தில் நிகழும்  நவீனமயமாக்க பாய்ச்சலிடையேயும் இயற்கையுடன் இயைந்த கதிர்காம ஆலயத்தின் எளிமையான தோற்றமும் ஆண்டுதோறும் திருவிழாக்காலத்து வன இலை குழைகளால் வேயப்படும் அதன் முகப்பும் கதிர்காமச் சூழலியல் தொடர்ச்சியின் அடையாளக் குறிகாட்டிகள் எனலாம்.

katharagama-vedda

உண்மையில், கதிர்காமத்தின் தொன்மையும், அது சிங்கள – தமிழ் உரிமை உணர்வுகளுக்கு அப்பால் பொதுப் பண்பாட்டு மையமாக நின்று நிலைப்பதன் பின்னணியும், வேடர்களின் தெய்வமாக, அவர்களின்  வழிபாட்டு மரபுகளின் மூலமாகக் கதிர்காமம், இன்னமும் விளங்குதலின் வழிதான் புரிந்துகொள்ளப்படலாம். தத்தமது இனத்துவ வட்டங்களுக்குள் கதிர்காமத்தை அடக்கும் முயற்சிகளிடையேயும், ஏனையோர் ‘கதிர்காம – வேடர்’ உறவினை ஏற்றுக்கொள்ளுவதும் இங்கு சிறப்பான கவனத்திற்குரியது.

கதிர்காம மலைத்தொடர்கள் அமைந்திருக்கும் பான்மையில் இது சப்பிரகாம மாகாணத்தைச் சேர்ந்த பிரதேசமாகும் என்பது அறிஞர் கருத்தாகும். ‘சப்பிரகாமம்’ என்பது சபரர்  கிராமம் என்பதன் திரிபாகும் எனக்காட்டி, சபரர் என்பார் வேடசாதி வகுப்பைச் சேர்ந்த ஒரு கிளையினர் எனவும் அவர்களுடன் தொடர்புபட்டெழுந்ததே இத்தலம் எனவும் நிறுவுவார் வ. குமாரசாமிப்பிள்ளை (1935).

இன்றைய கதிர்காம ஆலயத்திலிருந்து 3.5 கிலோமீற்றர் துரத்து அமைந்துள்ள தொன்மையான மலை அல்லது வேடர்களின் மலைஎன் நம்பப்படும் கதிரமலையே ஆதிக் கதிர்காமம் என்ற கருத்தாக்கம் எம் கவனத்திற்குரியது.  மலைகளை, மலைத் தொடர்களை, வழிபடும் ஆதி இயற்கை வழிபாட்டின் தொடர்ச்சியாகவே இன்றைய கதிர்காம ஆலயமும், புதிய ஆலயத்தின் தோற்றத்தின் பின்னரும் நூற்றாண்டுகாலமாகத் தொடரும் கதிரைமலை-கதிர்காம மலைக்கான புனித யாத்திரையின் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொள்ளலாம்.

veddas-women

இந்தவகையில்  வேடர் தலைவன் மகள் வள்ளியைக் களவு மணம் புரிந்த, இடமாக கதிர்காமத்தைக்காணும் இலங்கை மக்களின் ஐதீகமும் குறிப்பிடத்தக்கது.
“வள்ளி எனது அக்கா, கந்தன் எனது   மைத்துனன்.  வள்ளிபரம்பரையில் வந்தவர்கள் நாங்கள்.அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும்  எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது  எமது கடமை” எனக் கூறும் வேடர் தலைவர் பண்டில ஹெத்தோவின்(1997) உணர்வுகளிடையே கதிர்காமத்துடனான வேடர்களின் ஈடுபாடு துல்லியமாக வெளிப்படக்காணலாம்.

“வனமுறை வேடர் அருளிய பூஜை
மகிழ் கதிர்காம முடையோனே”

 எனப் பின்னாளில் அருணகிரிநாதர் பாடுவார்.இன்றைய பூசகர்களான கப்புராளைமார் தம்மை வள்ளியின் வழித்தோன்றல்களாக சொல்லிக் கொள்வதும் கதிர்காம முருகன் ஊர்வல வேளையில் ஆரத்தி எடுத்து வரவேற்கும் முறைமை வேட்டுவப்பெண்களிடமே இன்றுவரை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திருவிழா வேளையில் வள்ளியம்மனுக்கே முக்கியத்துவம் தரப்படக் காணலாம். அன்றாட விழாக்கால வீதியுலா வள்ளியம்மன் சந்நிதியை நோக்கியே செல்வதும் தீர்த்தத்திற்கு முதல் நாள் இரவு முருகன் வள்ளியம்மன் சந்நிதிதானத்தில் சில பொழுது தங்கிவருகின்றமையையும் முருகன் – வள்ளி நெருக்க இணைவினை  குறியீட்டு ரீதியாய் உணர்த்தி நிற்பன.

இவற்றுக்கு அப்பால் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட  இலங்கையின் வன வேடர்கள் தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்தும் வேடர்களின் பிரதான வழிபாடு தெய்வமான ‘கலேயக்க’, வடக்குக்கரை தமிழ் வேடரின் மலையன், மலையசாமி  யாவுமே கதிர்காம இயற்கை வழிபாட்டினை ஒத்தனவே. மலையினைப் போலவே இயற்கை வளம் கொழிக்கும் ஆறுகளும் தென்னாசிய சமயங்களில் பெறும் முக்கியத்துவமும் இங்கு எம் கவனத்துக்குரியது. கதிர்காம ஆலயத்தின் மருங்கிலே புனித தீர்த்தமாய் பாயும் மாணிக்க கங்கைச் சூழமைவும் கதிர்காம வழிபாட்டு மரபின் தொடர்ச்சியிலே கொண்ட இடம் குறிப்பிடத்தக்கது.

Kathirgama

மாணிக்க கங்கையின் மாசுபடு நிலை பற்றிய  இன்றைய  சூழலியலாளர்களின் கவலை-கவனிப்புகளில் மத்தியிலும்   அதன் புனித தீர்த்த மகத்துவம் குறைந்ததில்லை.
இதனையொத்த வழிபாட்டு நடைமுறைகளை கதிர்காமத்துடன் தொடர்பான மட்டக்களப்பு ஆலயங்களிலும் காணமுடியும். சின்னக்கதிர்காமம் எனப்படும் மண்டூர்க் கந்தசுவாமி கோயில், உகந்தை முருகன் கோயில் என்பன இந்தவகையில் குறிப்பிடத்தக்கன. உகந்தை முருகன் கோயிலில் வள்ளியம்மனுக்கு தனி ஆலயம் உள்ளமையும் தெய்வயானையம்மனுக்கு இடம் தரப்படாமையும் இங்கு கவனத்திற்குரியவை. யாழ்ப்பாணத்து தொண்டமானாற்றங்கரை  செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் வரை இயற்கையுடன் இசைந்த இந்தத் தொன்மை வழிபாட்டு மரபின் தொடர்ச்சியைக் காணலாம்.

Pilgrimage

இந்தவகையில் வருடந்தோறும் நடைபெறும் கதிர்காமத்துக்கான ’கரையாத்திரையும்’ கவனத்துக்குரியது.  வடக்கு யாழ்ப்பாணத்தின் செல்வச் சந்நிதியில் ஆரம்பித்து கதிர்காமம் வரையான பிரதான புனித ஆலயங்களின் நிலவுருவினை ஊடறுத்த  புனித புவியியல்  யாத்திரையாக ’கரையாத்திரை’ இன்றுவரை முக்கியத்துவம் பெறும்.

யாத்திரை மேற்கொள்ளமுடியாத வேளைகளில் சின்னக் கதிர்காமங்கள் என கதிர்காம சூழமைவைக் கட்டமைத்துக் கொண்டாடுதலும்  கவனத்துக்குரியது. யானை இல்லாத யாழ்ப்பாணத்து  நல்லூர் சின்னக்கதிர்காமத் திருவிழா ஊர்வலத்தில் நிஜ யானையை ஒத்த மரயானைப் பவனி இடம் பெறுகின்றமையை  எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

இயற்கைச் சூழமைவின் இந்தத் வழிபாட்டுத் தொடர்ச்சியுடன் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்கள், மேலாண்மை இடர்களைத் தாண்டிய மக்கள் சமயம் என்ற பரந்ததோர் உணர்வுச் சூழமைவில் அனைத்துப் பண்பாடுகளையும்  இசைவாக்கி, தானே ஒரு தனித்துவ சூழலியல் – பண்பாட்டுத் தொகுதியாய் கதிர்காமம் விளங்குகின்றதெனலாம்.


ஒலிவடிவில் கேட்க

14703 பார்வைகள்

About the Author

நாகலிங்கம் சண்முகலிங்கன்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)