வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும்
Arts
8 நிமிட வாசிப்பு

வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும்

May 11, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – பௌதிக ரீதியாகவும் கைப்பற்றுவதற்காக அண்மைக் காலத்தில் களமிறக்கி விடப்பட்டுள்ள புதிய படையணி தொல்லியலாய்வாகும். அது அறிவியல் ஆடைக்குள் தன்னை உருமறைப்புச் செய்துக்கொண்டு வனவளத் திணைக்களம்,  வன சீவராசிகள் திணைக்களம் முதலான உப படையணிக் கட்டமைப்புக்கள் சகிதம் முன்னரங்கிற் தொழிற்படுகின்றது. இது வெறுமனே தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றல், அவற்றுக்கு இடையிலான நிலத் தொடர்ச்சிகளை அறுத்தல் அதன்மூலமாக அவர்களால் முன்மொழியப்படும் பாரம்பரிய வாழிடக் கோரிக்கையைப் பௌதிக ரீதியாகச் சிதைத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அத்துடன், தமிழர்களது பாரம்பரிய வாழிடப் பகுதிக்குரிய மிகப் பெரிய இயற்கை மரபுரிமைப் பிராந்தியத்தை  அதனூடாக ஈட்டக்கூடிய பொருளாதார நலன்களைக் கைப்பற்றுதல் முதலான வெளிக்காட்டப்படாத உள்நோக்கங்களையும் உள்ளடக்கியது. மிகக் கவனமாக ஆக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை வழங்காத அல்லது வழங்குவது போல வழங்கி,  அதன் அதிகாரத்தை இறுதியில் மத்தியோடு முடிச்சுப் போட்டிருக்கின்ற அரசியல் அதிகார முறைமை சிறுபான்மைச் சமூகத்திடமும் அதன் தலைவர்களிடமும் காணப்படும் விழிப்பின்மை, தூர தரிசனத்துடன்  கூடிய தயாராகாமை முதலான பலவும் இந்த நிலவரங்களை விரும்பத்தகாத வகையில் மேலும் வளர்த்தெடுத்த வண்ணம் உள்ளன.

வன்னி கோணாவில் மரதோப்பு

வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு.  ஆறுகளும், கடல்களும், குளங்களும்,  நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப்பட்டன. கனகராயன்குளம், மருதங்குளம், இராசேந்திரன் குளம், புளியங்குளம், மூன்றுமுறிப்பு, உடையார்கட்டு முதலியன இதற்கான சில உதாரணங்களாகும்.  இவ்வகையில் ஊரென்பது குளம்,  வயல்கள், பெருமரச் செறிவுகள், தெய்வங்கள் குடியிருப்புக்களைப் பிரதான உறுப்புக்களாகக் கொண்டதொரு பண்பாட்டுக் கட்டமைப்பாகக் காணப்பட்டன. ஆதிக் கிராமங்கள் தொடக்கம் பிற்பட்ட காலங்களில் உருவான புதிய ஊர்கள் வரை வன்னியில் நிலம் முழுவதும் நீர் கிளைவிட்டுப் பரவி நிலங்களின் பகுதியாகவும் நிலங்களை ஒன்றோடொன்று பின்னும் நூற்பாவையாகவும் தொழிற்படுகின்றன. அணைக்கட்டுகள், பாலங்கள், தொங்குபாலங்கள், கலிங்குகள் என அவற்றோடு இணைந்த பழைய நீர் மேலாண்மைக் கட்டுமானங்களும் அதன் பகுதியாக உள்ளன. அவ்வகையில் வன்னிப் பண்பாட்டு உருவாக்கத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. நீண்ட வரலாற்றையுடைய நீர் முகாமைத்துவ வெளிப்பாடுகள் அவ்வகையில் வன்னியின் மரபுரிமைச் சொத்துக்களின் முதுகெலும்பாக உள்ளது.

வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகளால் உருவாகியுள்ள அதன் நிலவுரு ஒருபுறம் மனிதனால் உருவாக்கப்படாததும்   இயற்கையால் தரப்பட்ட ஆறுகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன. தேக்கு, கருங்காலி, மலைவேம்பு,  மகிழ், பாலை, வீரை, சூரை, வாகை,  வெடுக்குநாறி, விண்ணாங்கு முதலான பலவகை மரங்களும் காணப்படுவதுடன் காடை, கௌதாரி, மயில் செண்பகம்,  கானாங்னோழி, காட்டுக்கோழி,  தூக்கணாங்குருவி,  கல்லுப் புறா ஈறான பலவகைப் பறவைகளையும் உடையவை. குறிப்பாக, இலங்கைத் தீவில் நீர்ப் பறவைகள் செறிந்த இடமாகக் காணப்படும் வடபுலத்தில் வன்னியும் பிரதான பகுதியாகக் காணப்படுகிறது. இவற்றுடன் யானை, முள்ளம்பன்றி, கலைமான் வகைகள், மரை, காட்டுப் பூனை, உக்கிளான், சருகுபுலி என்பவற்றோடு இலங்கையில் சிறுத்தைகள் அதிகமுள்ள இடமாகவும் வன்னி காணப்படுகிறது. பெருங் கூட்டமாக கதிர்காமத்திற்கும் மடுவுக்கும் புறப்பட்டுச் செல்வதாக நம்பப்படும் வண்ணத்துப்பூச்சிப் படைகளும் வன்னியின் சிறப்பம்சங்களுள் சிலவாகும்

இவற்றைப் பாதுகாப்பது என்பது வன்னியின் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படைகளைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் பிரதான நோக்கமாகக் கொண்டது. அவ்வகையில் அவை  விவசாயத்திற்கு மட்டுமின்றி, கடலுணவு உற்பத்தி, குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்தல் முதலான பலவற்றோடும் இணைந்தது. ஒருவகையில் நீர்வளமும் வனவளவும் ஒன்றையொன்று பாதுகாத்து மேம்பாட்டையச் செய்வது. இதற்கப்பாலும் பொருளாதார ரீதியாக புதிய திசைகளை நோக்கி இவற்றைப் பயன்படுத்தலாம். இவை தொடர்பான சில முன்வாசிப்புக்கள் – திட்டங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் இவற்றோடு தொடர்புடைய அரச திணைக்களங்களாலும் முன்மொழியப்பட்டுள்ளன.

வன்னியின் இயற்கைவளம்

இது மட்டுமன்றி, இவை வன்னியின் வரலாற்று மூலாதாரங்களும் கூட Manual of the Vanni Districts (1895) அதற்கு முற்பட்ட எழுத்தாவணங்கள், வாய்மொழி வரலாறுகள் – புராணங்களின் சாட்சியமாகவும் காணப்படுகிறது.  இவை பண்டைய வாழ்க்கை – வரலாற்றுச் சம்பவங்களின் தொல்லியல் தலங்களாகவும் உள்ளன. உதாரணமாக, பாலி ஆறு வெறும் நீர் முனையம் மட்டுமல்ல, அது வரலாற்று முனையமும் – பண்பாட்டுத் தலமும் கூடத்தான். இவற்றைப் பாதுகாத்தல் என்பது அதன் சமூகத்தையும் – அதன் கூட்டு வாழ்வையும் கூட்டுப் பிரக்ஞையையும் கட்டிக்காத்தலும் – கட்டி எழுப்புதலுந்தான்.

இந்தவகையில் மிகவும் விபர நுட்பம், தீர்க்க தரிசனம், துறைசார் அறிவு என்பவற்றுடன் இப்பிராந்தியம் அணுகப்பட வேண்டும். வெறுமனே அபிவிருத்தி என்ற ஆடம்பரமான சுலோகத்துள் எத்தகைய கேள்விகளும் விவாதங்களுமின்றி நுழையவும் அதன் நுண்ணரசியற் செயற்பாடுகள் ‘அப்பாவித்தனமாக’ அடிபட்டுப் போகாமல் இருக்கவும், எம்மை அறியாமலே எமது வீழ்ச்சிக்கான முகவர்களாகத் தொழிற்படாது இருக்கவும், இவை பற்றிய பூரண விழிப்பும் தயார்நிலையும் பரந்துபட்ட வெளிப்படையான கலந்துரையாடல்களும் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முன்கூட்டியே இருக்க வேண்டும். அல்லது இனவாதத் தேவைகளுக்கோ ,  உலகளாவிய பல்தேசியக் கம்பனிகளது நலன்களுக்கோ எம்மை நாமே பலியிட வேண்டிவரும்.

வன்னியின் இயற்கை மரபுரிமைகளை ஒரு வலைப்பின்னலாக்கி ஒரு பரந்துபட்ட இயற்கை மரபுரிமைப் பிரதிநிதித்துவத்தை உருவாக்கும். அதேவேளை சூழற் சுற்றுலாவுக்கான மிகப் பொருத்தமான ஒரு பெருங்களத்தையும் நிறுவலாம்.

அதன் முதலடியாக இந்த ஒட்டுமொத்த இயற்கை மரபுரிமைகளையும் பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் முதலிற் கவனஞ் செலுத்தப்படவேண்டும். துறைசார் நிபுணத்துவம், அதனைப் பங்கிடல் என்பன உறுதி செய்யப்பட வேண்டும். அதனோடு கூடிய கட்டுமானங்களை வெறும் குரூரமான கொங்கிறீட் கட்டுக்களாக அல்லாமல் அதன் நிலத்தோடும் பண்பாட்டோடும் கூட்டிணைந்த  ஒன்றாக  ஆக்கச் சிறப்புடன் வடிவமைக்க வேண்டும். வெறும் பொறியியல் அறிவையும் தாண்டிக் கட்டடக் கலைஞர்களது சிறப்பாற்றல் அவற்றுள் இணைக்கப்பட வேண்டும். அது இயற்கை மரபுரிமையின் மறுபகுதியாக இத்தகைய கட்டுமானங்களைப் பண்பாட்டு மரபுரிமையாக்கும்.

வேறுபட்ட நீர் முனையங்கள் அவற்றின் இயல்புகள், அதன் சூழல்சார்ந்த தனிப்பண்புகள் முதலியவற்றால் அரண் செய்யப்பட்டு ஏனையவற்றோடு சங்கிலிக் கோர்வையாகப் பிணைக்கப்பட வேண்டும். உதாரணமாக, சில நீர்முனைகள் குளியல், வேறு உல்லாசத் தோணித் துறைகள், இன்னும் சில விருந்தினர் மீன் தூண்டிற் துறைகள், ஆரோக்கிய மரபுக் குளியற் துறைகள் முதலான சிறப்பு மையங்கள் இணைக்கப்பட வேண்டும். இதனையொட்டி மேலும் புத்தாக்க நடைமுறைகளை நீர் முனைகளது சிறப்புக் கருதி உருவாக்கலாம். பாலி ஆற்றங்கரையில் பாலி அம்மன் பள்ளுப் படிக்கும் ஆற்றுகைக் களத்தை – ஒரு பண்பாட்டு மரபுரிமைக் களத்தைத் திறக்கலாம்.

மேலும் ஒரு திறந்த வன அரும்பொருளகத்தை (open forest museum) நிர்ணயம் செய்யலாம். அதனைவிட வனப் பூங்காக்கள், சிறுவர் வனக் கல்வி மற்றும் விளையாட்டு வலயங்களை மற்றும்  புதிய வகையான பிராந்தியத் தனித்துவத்தை முன்னிறுத்திய வனவிலங்குச் சரணாலயங்களையும், பறவை மையங்களையும் உருவாக்கலாம்.

தமிழ் விவசாயத்திற்கான அரும்பொருளகத்தை – விவசாயக் கருவிகள், விவசாய முறைகள், பயிர்கள், விதைகள் உள்ளிட்ட பலவற்றைக் கொண்டமைக்கலாம். அது வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் அதேசமயம் காட்சி இடமாகவும் கல்விக் கூடமாகவும் செயற்படும்.

இவற்றை சூழல் சுற்றுலாவிற்கான வேறுபட்ட அலகுகளாக முன்மொழியும் போது சில புத்தாக்க நடைமுறைகளையும் கண்டடையலாம். ‘திருப்பள்ளி எழுச்சி’ முதலான பண்பாட்டுப் பெயர்களுடன் அதிகாலை நேரச் ‘சூழல் சுற்றுலா நடை’ (Eco Tourist Walk) அறிமுகப்படுத்தலாம். அதனை தேகாரோக்கியத்திற்கும் ஆனந்த மனத்திற்குமான ஒன்றாக முன்மொழிய முடியும். மதங் கடந்த வனத் தியான கூடங்கள், நீர் மலர்த் தடாகங்கள் எல்லாம் இதன் பகுதியாகலாம்.

இத்தகைய இயற்கைச் சூழல்சார்ந்த வன்னியின் ஆற்றுகைக் கலைகளது (கோவலன் கூத்து, பறைமேனக் கூத்து, மகிடிக் கூத்து  தொடக்கம் பன்றிப் பள்ளு, கண்ணகி வழக்குரை உள்ளிட்ட அனைத்தும்) மடுவங்களை அமைக்கலாம். அவை மேலும் சுற்றுலாவின் தரத்தையும் முழுமையையும் அதிகரிக்கும். இவற்றின் பகுதியாகப் பாரம்பரிய உணவுகள், பானங்களது மையங்களை உருவாக்கலாம்.

சுருங்கக்கூறின்,  மேற்படி இயற்கை மரபுரிமை – அதன் விரிவாக்கமாகப் பண்பாட்டு மரபுரிமை என்பவற்றைக் காத்தல் மற்றும் குறிப்பாக, பொருளாதார மேம்பாட்டிற்காக அவற்றை முன்மொழிதல்  – அதற்காக வன்னியை ஒரு சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்குதல் என்பவற்றை முன்னிறுத்தும்போது கவனிக்கக் கூடிய இன்னொரு விடயம் அதன் பகுதியாக 2000களின் பிற்பகுதியில் அமெரிக்காவை மையப்படுத்தி உருவாகிய ‘ஓய்வுத் தங்கிடம்’ (staycation) எனும் கோட்பாட்டு நிலையிலும், எமக்குரிய முறையிலும் அதனை விருத்தி செய்யலாம். அதனைப் பாரம்பரியமான உல்லாசப் பணிகள் தங்கிடங்கள் போலன்றி, அதன் நாட்டுப்புறத்துப் பண்புகளோடு கூடிய மாற்றுப் பண்புகள் நிறைந்த ஒன்றாக நிலை நிறுத்தல் வேண்டும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8164 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)