தொழிலாளர் பலமும், பிரயோகிக்கத் தவறிய இலங்கை இந்திய காங்கிரஸும்
Arts
7 நிமிட வாசிப்பு

தொழிலாளர் பலமும், பிரயோகிக்கத் தவறிய இலங்கை இந்திய காங்கிரஸும்

April 26, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

revolution

உலக வரலாற்றில் தொழிற்சங்க இயக்கத்தினால் சாதிக்கப்பட்ட சாதனைகள் விரல் விட்டு எண்ண முடியாத அளவுக்கு கணிசமானவைகளாக உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் மற்றும் மேலும் சில மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் வளர்ச்சியும்  பெருமளவில் உலகெங்கும் தொழிலாளர் படைகளைத் தோற்றுவித்தன. அதேபோல் மறுபுறத்தில் லாபம் என்ற ஒன்றை மட்டுமே மூல நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரங்கள் எழுச்சி பெற்றன. இவை இரண்டுக்குமான முரண்பாட்டின் போது தொழிலாளி – முதலாளி மோதல்களும் போராட்டங்களும் வெடித்தன. வழக்கம்போலவே முதலாளித்துவம் தம் இரும்புக் கால்களால் தொழிலாளர்களின் குரல்வளையை நசித்தபோது உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழுச்சி அடைந்தன.

இக்காலத்தில் இலங்கையும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு காலனித்துவ நாடாக இருந்ததால் இலங்கையிலும் முதலாளித்துவம் ஆழக் கால்பதிக்கத் தவறவில்லை. இலங்கையில் வளர்ச்சி அடைந்த பெருந்தோட்ட விவசாய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் துறைமுக வளர்ச்சி,  பெருந்தெருக்கள் மற்றும் ரயில்வே போக்குவரத்து  உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் , கப்பல் போக்குவரத்து, இயந்திர மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகள் என்பன பாரிய அளவில் வளர்ச்சி அடைந்தன. ஆரம்பத்தில் கொழும்பு மாநகரம் ஏனைய மற்ற சிறு நகரங்களிலும் இந்த விடயம் வளர்ச்சி கண்டாலும் இறுதியில் அது பெருந்தோட்டத் துறையையும் சென்றடையத் தவறவில்லை.

old-Colombo

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டே கொழும்பு நகரத்தில் உருவாகியிருந்த பாரிய தொழிற்படையினை ஸ்தாபனப்படுத்துவதில் தொழிற்சங்கத் தலைவர்கள் வெற்றி கண்டதுடன் பல போராட்டங்களை நடத்தி அவற்றால் பல உரிமைகளை வென்றெடுத்தது தொடர்பில் இந்தக்கட்டுரைத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டிருந்தேன். அந்தத் தொழிற்சங்கள் படிப்படியாக வளர்ச்சி அடைந்து 1930களினை அடுத்து வந்த தசாப்தத்தில் பெருந்தோட்டப் பகுதியில் ஆழக் காலூன்றி இருந்தன. அநேகமாக அவை இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தொழிற்சங்கங்கள் ஆகவும் அதனை தவிர கோ. நடேசய்யரை தலைமையாகக் கொண்ட இலங்கை தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனமும் இலங்கை – இந்திய காங்கிரஸுமாகும்.

strike-Ceylon-workers

இவர்கள் 1947 பொதுத் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதியில் கணிசமான தொழிற்சங்க போராட்டங்களை நடத்தி பல கோரிக்கைகளை வென்றெடுத்த துடன் தொழிலாளர் மத்தியில் மிகுந்த நன்மதிப்பையும் ஆதரவையும் பெற்றிருந்தனர். இக்காலத்தில் இவர்கள் நடத்திய போராட்டங்களில், 1939ஆம் ஆண்டு பொகவந்தலாவைக்கு அருகிலிருந்த கொட்டியாகலை என்ற தோட்டத்தில் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டம், 1940 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற கண்டிக்கருகாமையில்,  ஹேவாஹெட்ட பிரதேசத்தில் அமைந்திருந்த முல்லோயாத் தோட்டத்தில் இடம்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டம்  (லங்கா சமசமாஜக் கட்சி), 1942 ஆம் ஆண்டு புலத்கொகுப்பிட்டிய என்ற இடத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த நேவ்ஸ் மயர் என்று அழைக்கப்பட்ட    உருளவல்லி தோட்டப் போராட்டம் என்பன மிக முக்கியமானவை. அதன் காரணமாகவே 1947 பொதுத்தேர்தலில் 8 ஆசனங்களை அவர்களால் வெல்ல முடிந்தது. மற்றும் இலங்கை சமசமாஜக் கட்சி,  போல்ஷெவிக் லெனினிசக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து மொத்தம் 18 ஆசனங்களை கைப்பற்றி இருந்தன. மொத்தத்தில் சில சுயேச்சை அங்கத்தவர்களும் சேர்ந்து 33 ஓட்டுக்கள் இவர்களுக்கு  நாடாளுமன்றத்தில் காணப்பட்டது. மறுபுறத்தில் 1947ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட  கோ. நடேசய்யரை மக்கள் தோல்வியுறச் செய்தனர். இதனால் மனம் நொந்து போன நடேசய்யர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்து  பின் 1947, நவம்பர் 7 ஆம்  திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

strike-Ceylon-workers

இத்தகு நிலையில் ஒரு சக்திவாய்ந்த தொழிற்சங்கமும் அரசியல் கட்சியுமான இலங்கை இந்திய காங்கிரஸ் என்ன செய்திருக்க வேண்டும்…?  என்ற கேள்வி எழுவது நியாயமானதே. தொடர்புடைய காலத்தில் இலங்கை இந்தியக் காங்கிரசின் தொழிற்சங்கமே இலங்கையின் மிகப்பெரிய தொழிற்சங்கமாகவும் தெற்காசியாவின் அதிக அங்கத்தினர்களைக் கொண்ட தொழிற்சங்கமாகவும் இருந்தது. தொழில் ஆணையாளரின் கூற்றுப்படி 1941 ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது அதற்கிருந்த மொத்த அங்கத்தினர் தொகை 96,000  மட்டுமே என்றபோதும் அது படிப்படியாக அதிகரித்து 1947 ஆம் ஆண்டு அதன் அங்கத்தவர்களின் தொகை 1,17,000 ஆக அதிகரித்திருந்தது.

ஒரு தொழிற்சங்கத்தின் வெற்றி அதற்கு இருக்கும் பேரம் பேசுகின்ற சக்தியிலேயே தங்கியிருக்கின்றது என்பது அடிப்படைக் கோட்பாடு . அது    தமது கோரிக்கை  ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டால் என்ன விளைவுகள் எல்லாம்  ஏற்படும் என்பதை எதிர்த்தரப்பினருக்கு அறிவிக்கவேண்டும். அவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பட்சத்தில் எதிர்த் தரப்பினர் அடிபணிவார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்கப் போவதில்லை.  இந்தக் கூற்றுக்கு சமகால அரசியல் நிலைமை மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகும் . ஆனால் இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம், வேலை நிறுத்தம் என்று சாக்கடை அரசியல் ஆகிப் போய்விட்டது. அதிபர் ஆசிரியர் போராட்டங்கள்,  மருத்துவர், தாதியர்,  சுகாதார ஊழியர் போராட்டங்கள்,  ரயில்வே போக்குவரத்து போராட்டங்கள்,  விவசாயிகளின் உரப் போராட்டம்,  மின்சாரத்துறைப் போராட்டம் என்று எந்தவிதமான பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும் இல்லாமலேயே வேலை நிறுத்தங்கள் அறிவிக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள மிகச் சரியான காரணங்களும் அதுவே தொழிற்சங்கத்தின் கடைசி ஆயுதமென்ற போர்வியூகத்தைக்  கொண்ட உயரிய தொழிற்சங்கக் கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

அன்று இலங்கை இந்திய காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் தனது நட்பு சக்திகளை அழைத்துக்கொண்டு மேற்படி பிரஜாவுரிமை பறிப்பு சட்டங்களுக்கு எதிராக பாரிய வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை  முன்னெடுக்க முனைந்து இருந்தால் அவர்கள்  வெற்றி அடைந்து இருக்க பின்வரும் காரணிகள் சாதகமாக அமைந்திருக்கும் என்று சுட்டிக் காட்ட முடியும் :-

  • அன்றைய இலங்கை பொருளாதாரம்  தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி, அந்நியச் செலவாணி உழைப்பு  என்பவற்றிலேயே முற்றிலும் தங்கியிருந்தது. ஒரு பத்து நாட்களுக்கு தேயிலை உற்பத்தி இடம்பெறாது போயிருந்திருந்தால் தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகள், தேயிலை உற்பத்தி கம்பெனிகள், அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள், பாரிய ஏற்றுமதி வருமானம் அனைத்துமே முடங்கிப்போய் அரசாங்கம் ஆட்டம் கண்டிருக்கும்.
  • முதலாளித்துவ உற்பத்தி உறவு முறைகள் முற்றிலும் இலாபத்தையும் சுரண்டலையும் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் உச்ச பலனைப் பெறுவதையே முக்கிய நோக்கமாக கொண்டது. அவர்கள் இந்த பாரிய நட்டத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். கட்டாயம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி அரசாங்கத்தை நெருக்குவார்கள்.
  • அத்துடன் தேயிலை உற்பத்தி கம்பெனிகள் அனைத்துமே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு சொந்தமானவைகளாக இருந்தன. எனவே அவை நஷ்டமடைவது தொடர்பில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கரிசனை கொண்டு இலங்கை அரசு மீது அழுத்தங்கள் கொண்டு வந்திருக்கும்.  
  • தேயிலைச் செடிகளில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொழுந்து பறிக்காமல் விட்டால் அவை முற்றி வீணாகிப் போய் விடுமேயொழிய அவற்றை மீண்டும் பறிக்க முடியாது என்பது தோட்டக் கம்பனிகள் நன்கு அறிந்த விடயமே.
  • கொழும்புத் துறைமுகம் முற்றிலும்  ஸ்தம்பிதம் அடையும். ஏற்றுமதி – இறக்குமதி செயற்பாடுகள் இடம்பெறாது தடுக்கப்படும்.

  தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7111 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)