யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – பகுதி 2
Arts
10 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் சாதி, சமயம், சடங்கு – பகுதி 2

April 29, 2023 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம் : றொபேர்ட் எஸ் பேரின்பநாயகம்

பெருநெறிக் கோயில்களின் ஆகமுறைப்படியான சடங்குகளும் விழாக்களும்

நாட்டார்-தெய்வங்கள்-3

ஆகம முறைப்படியான சடங்குகளும் விழாக்களும்  சிவன், விநாயகர், சுப்பிரமணியர், காளி முதலிய பெருநெறித் தெய்வங்களுக்கான கோயில்களிலேயே இடம்பெறும்.  இவ்வகைக் கோயில்கள் பொது உடைமையான கோயில்களாக இருப்பதில்லை. செல்வாக்குள்ள வேளாளக் குடும்பம் ஒன்றின் உடைமையாக இவ்வகைக்கோயில் ஒன்று இருக்கும். இக்குடும்பத்தின் மூதாதையர் ஒருவர் இக்கோயிலை கட்டியிருப்பார். பிற எல்லா உடைமைகளும் பரம்பரைவழி எப்படி உரிமை கொள்ளப்படுகின்றனவோ அவ்வாறே கோயிலும் அதனைக் கட்டியவரின் பரம்பரையினரின் உடைமையாக இருக்கும். குறித்த கோயில் பிரசித்தமான கோயிலாக இருப்பின் அதற்கு நிறைய வருமானம் கிடைத்துக்கொண்டிருக்கும். அவ்வருமானத்தைப் பெறுவதும், நிருவகித்து முகாமை செய்வதும் உடைமையாளர்களின் பொறுப்பாக இருக்கும். கோயில் தனியுடமையாக இருப்பினும் அது  ஒரு சமூக நிறுவனமும் ஆகும். சமூக நிறுவனம் என்ற வகையில் கோயிலை வழமைச் சட்டங்களின் விதிப்புரைகளின்படி நடத்தும் கடப்பாடு கோயில் உடைமையாளர்களுக்கு உள்ளது. இவ்வழமைச் சட்டங்கள்  சமய அற நியமங்களும் ஆகும்.

கிராமத்தின் ஒவ்வொரு சாதிக்கும் அவ்வச் சாதிகளின் வட்டாரத்தில் குறைந்தது ஒரு நாட்டார் தெய்வக்கோயிலாவது இருக்கும். பொதுவாக நாட்டார் தெய்வக்கோயில்கள் சமூகக் குழுவின் பொறுப்பில் இருக்கும். அங்கு பூசை செய்பவர், அச்சமூகக்குழுவின் உறுப்பினராக இருப்பார். ஒரு சமூகக் குழுவின் வட்டாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டார் தெய்வக்கோயில்களும் காணப்படும். ஒரு கிராமத்தில் காணப்படும் பெருந்தெய்வக்கோயில்களை விட  நாட்டார் தெய்வக்கோயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

பெருநெறிக்கோயில்கள் பெரியவனாக இருக்கும், அவற்றின் கட்டடங்கள் தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலைப்பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். நாட்டார் தெய்வக்கோயில்கள் சிறியன. தென்னோலையால் வேயப்பட்ட கூரையைக்கொண்டவை.

பெருநெறிக்கோயில்களின் பூசைகளும், சடங்குகளும் சமஸ்கிருதநெறிப்படியான புனித நூல்களில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி பிராமணர்களால் நிகழ்த்தப்படும். இப்புனித நூல்களில் கூறப்பட்ட விதிமுறைகள் சமஸ்கிருத அறிவுடைய பிராமணர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயமாகும். ஏனையோர் அவ்விடயம் பற்றிய அறிவுடையவர்களல்லர். கோயில் கருவறைக்குள் சென்று பூசை செய்தல் பிராமணர்களுக்கு உரிய உரிமையாகும். பிற ‘உள்ளக’  சமூகக் குழுக்கள்  கோயிலுக்குள் சென்று வழிபடும் அடியார்களாக இருப்பர். அவர்கள் கருவறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. புறச்சமூகக் குழுக்களைச் சேர்ந்தோர் கோயிலுக்கு வெளியே நின்றபடி வழிபடுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பெருநெறிக் கோயில்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் பூசை இடம்பெறும். இப்பூசைகளில் வழிபடுவோர் கலந்துக்கொள்வதில்லை. விதிவிலக்காக ஓரிருவர் பூசைநேரம் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு. வாரத்தின் புனித நாளான வெள்ளிக்கிழமைகளில் விசேட பூசைகள் நடைபெறும். அத்தினத்தில் காலையிலும், மாலையிலும் பலர் கலந்துக்கொள்வதுண்டு.

நாட்டார்-தெய்வங்கள்-2

பெருநெறிக்கோயில்களின் ஆண்டுத் திருவிழாக்கள் முக்கியமானவை. வெவ்வேறு கோயில்களில் வெவ்வேறு மாதங்களில் ஆண்டுத் திருவிழாக்கள் நடைபெறும். ஆண்டுத்திருவிழா ஏறக்குறைய 20 நாட்கள் நடைபெறும். ஆண்டு திருவிழாக்களில் பக்தர்களாக வழிபடுவோர் விழா உபயக்காரர்கள், (குறித்த நாளில் பூசைக்குரிய செலவையும், விழாச்செலவையும் பொறுப்பேற்பவர்) அமைப்பாளர்கள் என்போர் பங்குபற்றுவர். இவர்களை  விட பார்வையாளர்கள் பலரும் விழாக்களில் இரவுநேர நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகக் கூடுவர். அயற் கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். கோயிலின் பெருமையையும் சிறப்பையும் பொறுத்து அயல் கிராமங்களிலும் தூர இடங்களிலும் இருந்து வருவோர் தொகை அமையும்.  திருவிழா உபயம் கிராமத்தின் வசதிபடைத்தவர்களான வேளாளர் குடும்பங்கள் சிலவற்றிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். சிலநாட்களின் விழாக்கள் சில சமூகக்குழுக்களிற்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கும். (உதாரணம்- சலவைத் தொழில் செய்யும் சமூகக்குழு ஒருநாள் விழாவை பொறுப்பேற்றிருக்கலாம்). சமூகக்குழுக்களின் திருவிழாக்களின் செலவுகளைச் சம்பந்தப்பட்ட சமூகக்குழு பொறுப்பேற்கும், அச்சமூகக்குழுவின் முதியவர் ஒருவர் விழா அமைப்பாளர்களோடு தொடர்புகொண்டு அன்றைய நாள் பூசைகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்துவிப்பார். திருவிழாக்கள் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். இரவுவேளை தான் உச்சம். விடியும் வரை இசை, நடன நிகழ்ச்சிகள் இரவுக் கலைநிகழ்ச்சிகளில் கதாகாலேட்சேபம் என்பதும் ஒரு முக்கிய கலை நிகழ்ச்சி,  கதாகாலேட்சேபம் ஒரு கதை சொல்லல் ஆகும். கதைகளை பாடல்களுடன் சேர்த்து இசைகலந்த சொற்பொழிவாக இதனை நடத்திச் செல்வர். கதைகள் பக்தி உணர்ச்சி மிகுந்தனவாகவும், சமயக்கருத்துக்களை கூறுவனவாகவும், இந்துக்கடவுள்கள் பற்றியதாகவும், நாயன்மார்களைப் பற்றியதாகவும் இருக்கும். பக்தர்கள் கோயிலுக்கு வந்து குவிந்த வண்ணம் இருப்பார்கள். சிலர் கற்பூரத்தை கொளுத்தி வழிபடுவர்.  வேறு சிலர் தமது பெயரில் அருச்சனை செய்யும்படி பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றைக் கொடுப்பார்கள். சமய வழிபாட்டுச் சடங்குகள் கோயிலுக்குள் நடந்து கொண்டிருக்கும் வேளை வெளியே அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும். ஆயினும் இவை இரண்டிற்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதில்லை. இரண்டும் ஒத்திசைவாக விழா என்ற முழுமையில் இணைந்திருக்கும். கோயிலில் குழுமியிருக்கும் மக்களின் கவனம் விழாவின் இசை ,நடன நிகழ்ச்சிகளில் குவிந்திருக்கும். திருவிழாவின் இசை, நடன நிகழ்ச்சிகள் சமயச் சடங்குகளோடு நேரடித்தொடர்புடையனவல்ல. அந்நிகழ்ச்சிகளில் பாலியல் உணர்வுத் தூண்டல் மிகுந்து காணப்படும். ஆயினும் பக்தி உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கும் வெளிப்படையான முரண்பாடு இல்லாத வகையில் விழா நிகழ்ச்சிகள் இடம்பெறும். விடியற் காலையில் நடனமும், இசையும் உச்சக்கட்டத்தை தொடும். சுவாமியை பட்டாடையாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து வீதி ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். வீதியின் முக்கிய இடங்களில் சுவாமியை வைத்திருந்து இசை மழை பொழியப்படும், அருச்சனை தீப ஆராதனை என்பனவும் இடம்பெறும். வீதிஉலா முடிந்து சுவாமியை உள்ளே எடுத்துச் சென்றபின் அங்கு சமயச் சடங்குகள் நிகழ்த்தப்படும். இச்சடங்குகள் முடிவதுடன் அன்றைய விழா முடிவுக்கு வரும்.

விழாவின் இறுதியில் தேர்த்திருவிழா இடம்பெறும். காலை வேளையில் ஆரம்பிக்கும் இவ்விழாவில் தேர் இழுத்தல் முக்கியமான நிகழ்வாகும். பகல்நேரம் தேர் இழுத்தல் நடைபெறும். கோயிலின் தேரைச் செய்து கொடுத்த முன்னோரின் பரம்பரையினரான குடும்பத்தினர் தேர்த்திருவிழாவின் உபயகாரர்களாக இருப்பர். தேர்த்திருவிழாவில் குறித்த ஊரைச்சேர்ந்தவர்களும், அயல் ஊரவர்களான பக்தர்களும் பங்குபற்றுவர். தேர்த்திருவிழாவிற்கு அடுத்த நாள் இடம்பெறும் தீர்த்தத் திருவிழாவின் போது சுவாமியைத் தீர்த்தமாடுவதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்வர்.  தீர்த்தக்கிணறு அல்லது தீர்த்தக் குளத்தில் அல்லது ஆற்றில் தீர்த்த திருவிழாச் சடங்குகள் இடம்பெறும். விழாக்காலம் முழுவதும் முழுக்கிராமத்தவர்களும் ஒருவித பரவச உணர்ச்சிக்கு ஆட்பட்டவராகக் காணப்படுவர். அசைவ உணவை இக்காலத்தில்  விலக்குவர். சாராயம் அருந்துவதும் விழா நாட்களில் தவிர்க்கப்படும். ஒவ்வொரு நாட்களின் திருவிழா நிகழ்வுகளும் பிற நாட்களின் திருவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுபேசப்படும். ‘மிகச் சிறந்த இசை’ ‘மிகச் சிறந்த சோடனை அலங்காரம்’ பற்றிய மதிப்பீடுகள் பரிமாற்றப்படும். விழா அமைப்பாளர்கள் தமது திருவிழா மற்றையோரின்  திருவிழாவை விடச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அயராது உழைப்பர். ‘போட்டி’ திருவிழாவின் முக்கிய கூறாக அமைந்து காணப்படும்.

நாட்டார் தெய்வக்கோயில்களின் சடங்குகள்

நாட்டார் தெய்வக் கோயில்கள் வெவ்வேறு சாதியினரின் உடைமைகளாக உள்ளன. இவற்றின் நிருவாகமும் அவ்வச் சாதிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இக்கோயில்களின் சடங்குகளில் பலியிடுதல் முதன்மையிடத்தைப் பெறுகிறது. பலியிடுதல் இருவகையாகும்.

  • சைவப் படையல்
  • அசைவப் படையல்
படையல்

பொங்கல் செய்து படைத்தல், பூசணி, பலாப்பழம் என்பனவற்றைக் கூறிட்டுப் பிளந்து படைத்தல், ஏனைய பழவகைகளையும், உணவுப்பொருட்களையும் படைத்தல் சைவப்படையலாகும். இந்தச் சடங்குகளில் கிராமத்தில் எல்லாச் சாதியினரும்  பங்கு கொள்வர். இச்சடங்குகளில் நிறுவன ஒழுங்கமைப்பு இருப்பதில்லை. ஒவ்வொரு சமூகக்குழுவும் தமது கோயிலின் சடங்குகளை தாமாகவே நடத்துவர். ஆனால் ஒரு கோயில் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருப்பின் பிறசமூகக்குழுக்களும் அக்கோயிலிற்கு வந்து சடங்குகளில் பங்குபற்றுவர். மிருகபலி கொடுக்கப்படும் கோயில்களிலும், இதே நடைமுறை பின்பற்றப்படும். ஆடுகளதும், கோழிகளதும் தலையை அறுப்பது மிருகபலியாகும். இந்த அறுவை ஒரு சடங்கியல் சார்ந்த பலியிடுதல் ஆகும். அறுவை வேலையில் பயிற்சியுடைய ஒருவர் இச்சடங்கை நடத்துவார். பெரியம்மை, சின்னம்மை முதலிய நோய்கள் கிராமத்தை தாக்காதிருப்பதற்காக இப்பலியிடல் நடைபெறும். ஒவ்வொரு கோயிலிற்கும் உரிய நாளொன்றில் இச்சடங்கு முடிந்த பின்னர் நோய் பரவுவதுண்டு. பலியிடலில் பங்குபற்றுவதும், பலியில் வெட்டப்பட்ட மிருகங்களின் இறைச்சியை உண்பதும் நோய்பரவலுக்கு காரணமாகிவிடும் (WHITEHEAD, 1916).

நோய் பரவும் காலம் கிராமம் நெருக்கடியை எதிர்க்கொள்ளும் காலமாகும். சின்னம்மை, பொக்குளிப்பான் ஆகிய நோய்கள் பரவும்போது நவீன மருத்துவமுறைகள் பரவாத அக்காலத்தில், வேற்றுமைகளைக் கடந்த ஒற்றுமை சமூகக்குழுக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும். இவ்விரு தொற்றுநோய்களுக்கான காரணங்களை மரபுவழி வைத்தியத்தினால் விளக்கமுடிவதில்லை. தீமை பயக்கும் சக்திகள், ஆவிகள் என்பன தான் நோய்க்கான காரணம் என மக்கள் நம்புவர். பொங்கல் போன்ற சாந்திப்படுத்தல் சடங்குகளை நாட்டார் சமயக்கோயில்களில் நடத்துதல் மூலம் தெய்வங்களைச் சாந்திப்படுத்துவர்.

வீட்டுச்சடங்குகள்

திருமணம், இறப்பு என்னும் இரு சடங்குகள் வீட்டுச்சடங்குகளில் முக்கியமானவை. வேளாளர் வீடுகளில் இச்சடங்குகளின் ஆற்றுகையில் சில சமூகக்குழுக்கள் முக்கிய வகிபாகத்தை பெறுகின்றன.  வேளாளர் சமூகப்பிரிவின் குடும்பத்தின் திருமணச் சடங்கில் பிராமணர், சலவைத்தொழில் செய்வோர், முடித்திருத்துவோர், மேளக்காரர், வீட்டுப்பணியாளர் என்னும் ஐந்து சமூகக்குழுக்களுக்கு முக்கியமான பங்கு உள்ளது. ஆறாவதாக பொற்கொல்லர் சமூகக்குழுவைச் சேர்ந்த ஒருவரும் திருமணத்திற்கு முந்திய பொன்னுருக்குச் சடங்கில் பங்கேற்பார். திருமணம் சார்ந்த சடங்குச் சேவைகள் மரபுவழிப்பட்ட கடமைகள் (traditional duties) என்ற இயல்பை உடையன. திருமணத்தின் சமயப் புனிதம் சார்ந்த சடங்குகளை பிராமணக்குருக்கள் நிறைவேற்றி வைப்பார். அவரின் மந்திர உச்சரிப்பு திருமணத்திற்குப் புனிதத் தன்மையை உண்டாக்குகிறது. சலவைத் தொழில் செய்பவர் வீட்டிற்கும், திருமணப் பந்தலுக்கும் வெள்ளை கட்டுவார், பந்தலை அலங்கரிப்பார், சடங்குகளின் போது மணமகனும், மணமகளும் நடந்து செல்வதற்கு நிலப்பாவாடை விரிப்பார். முடிதிருத்துபவர் மணமகனுக்கு சடங்கியல் முறையான முகச்சவரம் செய்வார். மேளகாரர் திருமணத்தின் போது மங்கல இசையைப் பொழிவார். வீட்டுப்பணியாளர்கள் உணவு சமைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளைச் செய்வார்கள். திருமணச்சடங்குகளில் சாதிகளின் பங்கேற்பு (caste participation) எவ்விதம் அமைகிறது என்பதை மேலே விபரித்தோம். இவை வேளாளர் வீட்டுத் திருமணங்களுக்கு உரிய நடைமுறைகளேயாகும். பிற சமூகக்குழுக்களின் திருமணச் சடங்குகளில் மேற்குறிப்பிட்ட சடங்குச் சேவைகள் இடம்பெறுவதில்லை.

மரணச்சடங்கு

மரணச்சடங்குகளிலும்  ஒரு நடைமுறை ஒழுங்கு இருப்பதை அவதானிக்கலாம். வேளாளர் வீட்டு மரணச் சடங்கில் முடி திருத்துபவர் (நாவிதர்), சலவைத் தொழில் செய்பவர், வீட்டுப்பணியாளர் ஆகியோர் முக்கியமான பணிகளை ஆற்றுவர். மரணச்சடங்கில் பங்குபற்றும் பூசகர் கோயில் சடங்குகளை நடத்துவதில்லை. அவர் திருமணத்தை நடத்தும் பூசகரை விட தரத்தில் தாழ்ந்தவராகவே கருதப்படுவார். மரணச் சடங்கு வீட்டிற்கு வெள்ளை கட்டப்படும். பிரேதத்தைக் குளிப்பாட்டுதல் முதலிய சடங்குகள் சடங்கியல் முறையில் ஆற்றப்படும். மரணச்சடங்கில் முக்கிய வகிபாகம் பெறும் முடித் திருத்துபவரை ஹோகார்ட் ‘சுடலைப் பூசாரி’ (HOCART, 1938) எனக்குறிப்பிடுகிறார். சுடலைக்கு எடுத்துச் செல்லப்படும் தீச்சட்டியை அவர் தயார்செய்வார். இறந்தவரின் மூத்தமகன் சடங்கினைச் செய்வார். அவர் சுடலைக்குக் கூட்டிச் செல்லும்போது தீச்சட்டி உடன் எடுத்துச்செல்லப்படும். இறந்தவர் தாயாராக இருப்பின் இளைய மகன் சடங்குகளைச் செய்வார். சுடலையில் தீமூட்டல் சடங்கு இடம்பெறும். சுடலைச் சடங்குகளின் முழுமையான நிருவாகிப் பொறுப்பு  முடிதிருத்துபவருக்கு உரியதாக இருப்பதை அவதானிக்கலாம்.

சடங்கின் போதும் மேளமடித்தல் இன்னொரு சமூகக் குழுவால் (பறையர்) நிகழ்த்தப்படும். மரணச்சடங்கின்போது சடங்கியல் அழுதல் (CEREMONIAL WEEPING), ‘புறச் சமூகக் குழுவொன்றின் (பள்ளர்) பெண்களால் நிகழ்த்தப்படும். சுடலையில் பிணத்தை எரிப்பதில் இச்சமூகக்குழுவின் ஆண்கள் முக்கிய பங்கேற்பைச் செய்வார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு புறச்சமூகக் குழுவின் (நளவர்) ஆண்களும் பங்கேற்பதுண்டு. பிணம் எரிக்கப்பட்ட மறுநாள் அதன் சாம்பலை மண்ணாலான முட்டி ஒன்றினுள் போட்டுக்கொடுக்கும் பணியை முடித்திருத்துபவர் செய்வார். 31 ஆம் நாள் சடங்குகளின் போது சாம்பல் கடலிலோ, ஆற்றிலோ அல்லது குளத்திலோ கரைக்கப்படும்.

புதுமனைக் குடிபுகுதல் யாழ்ப்பாணத்தில் இன்னொரு முக்கியமான சடங்காகும். இச்சடங்கில் சில சமூகக்குழுக்கள் பங்கேற்கின்றன. இவற்றுள் தச்சர் சமூகத்தின் பிரதிநிதி முக்கியமான சடங்கியல் பணியை ஆற்றுபவராக விளங்குகிறார். யாழ்ப்பாணத்தின் கைவினைச் சமூகங்களின் ஓர் உபபிரிவாக தச்சர் சமூகம் உள்ளது. வீட்டைக் கட்டுவதும் கைவினைஞரான இச்சமூகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. புதிதாகக் கட்டிய வீட்டை சடங்கியல் முறையில் உரிமையாளரிடம் பொறுப்பளித்தலே புதுமனை புகுவிழாவாகும்.  வீட்டைக் கட்டிய மேசனும் இந்நிகழ்வில் பங்கு பெறுவதுண்டு. வீட்டு உரிமையாளர் வீடு கட்டியவர்களுக்கு சடங்கியல் முறையான அன்பளிப்புகளை இந்நிகழ்வின்போது வழங்குவார். தச்சர் சமூகத்தவர்கள் வேளாளர்களின் வீடுகளை கட்டிக்கொடுக்கும்போது மட்டும் இச்சடங்கினை நிகழ்த்துவர். ஏனைய சமூகக்குழுக்களிற்கும், அவர்களால் வீடு கட்டிக்கொடுக்கப்படுவது உண்டே ஆயினும் புதுமனை புகுதல் சடங்கை அவர்கள் நிகழ்த்துவதில்லை. ஏனைய சமூகத்தவர் தாமாகவே அந்நிகழ்வை நடத்துவர்.

முடிவுரை

யாழ்ப்பாணத்தின் சாதிக்கட்டமைப்பை மேலே விபரித்துக் கூறினோம். இந்தக்கட்டமைப்பு யாழ்ப்பாணப் பண்பாட்டின் தொடர்ச்சிக்கும் பேணுகைக்கும் பலவகையில் பங்களிப்பு செய்கின்றது என்பது உண்மையே. கோயில் திருவிழாக்கள் கிராமத்தின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தும் செயல் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக   எந்தவொரு சமூக முறைமையிலும் இவ்வாறான செயல்முறை இருப்பது அச்சமூகத்தின் உறுதிநிலையைப் பேணுவதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பிளவுப்பட்ட சமூகக் கட்டமைப்பைக் கொண்ட சமூகங்களில் இத்தகையதொரு செயல்முறை பயன்தருவது. இந்துக்கோயில்களின் சடங்கியல் கட்டமைப்பு, நாட்டார் தெய்வக்கோயில்களிலும், கிராமத்தின் (வேளாளர்) வீடுகளிலும் இடம்பெறும் சடங்குகள் என்பன அக்கிராமத்தின் சாதிகள் அனைத்தினதும் பங்கேற்பிற்கு இடமளிக்கிறது. அச்சடங்குகள் அனைவருக்கும் பொதுவான விடயமாகவும் அமைகிறது. ஆயினும் இப்பங்கேற்பின்போது, சாதிமுறையின்படி யார் ,யார் எவற்றைச் செய்யலாம், எவற்றைச் செய்யக்கூடாது என்பன மறக்கப்படாமல் நினைவுறுத்தப்படுகிறது.  சாதிவிதிகளும், தடைகளும் பங்கேற்பின்போது நெகிழ்ந்து கொடுப்பதில்லை. கணநாத் ஒபயசேகர எழுதிய சிங்களவர் சடங்குகளின் கட்டமைப்பு (THE STRUCTURE OF SINHALESE RITUALS) (GANANATH OBEYESEKERE 1958) என்ற தலைப்புடைய கட்டுரையில் பௌத்தர்களின் சடங்குகளில் சாதிவிதிகளும், தடைகளும் விழாக்களின்போது தற்காலிகமாகத் தளர்த்தப்படுகின்றன –  என்று குறிப்பிட்டுள்ளார். சிங்களவர்களின் சாதிமுறை இறுக்கம் குறைந்தது (RYAN 1954) என்றும், சாதிக்கட்டமைப்பு நெகிழ்ச்சியுடையது (RYAN  AND STRAUS 1954) என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ் இந்துக்களின் சாதிமுறையும், சாதிக் கட்டமைப்பும் ஒப்பீட்டளவில் இறுக்கமானது; நெகிழ்ச்சியற்றது. இவ்வாறான சாதிமுறை கிராமத்தின் புறச்சாதிகளை (EXTERIOR CASTE) சடங்குகளில் பங்கேற்பதை அனுமதிக்கிறது. ஆயினும் எல்லைக் கோடுகளைத் தாண்டக்கூடாது, விலக்கப்பட்டவற்றைச் செய்யக்கூடாது, தடைகளை பங்கேற்பின் நிபந்தனையாக விதிக்கிறது. இச்சாதிமுறை பற்றிய நூல்களைப் படித்தவர்களுக்கு இந்து ஜய்மனி (HINDU JAIMANI SYSTEM) முறையின் இன்னொரு வகையே  யாழ்ப்பாணத்தில் காணப்படும் சாதிமுறை என்ற உண்மை புரியும் (WISER 1936).

உசாத்துணை

  1. BANKS, M. 1960-Caste in Jaffna. In Aspects of Caste in South India, Pakistan and Ceylon. E. R. Leach (ed.) Cambridge University Press, Cambridge. 
  2. CARTMAN, R. 1952-Hinduism in Ceylon. M. D. Gunasena and Company, Colombo, Ceylon. 
  3. HOCART, A. M. 1938-Les Castes. Translated by E. J. Levy and J. Auboyer. Paul Guenthner, Paris.
  4. HUTTON, J. H. 1946-Caste in India. Cambridge University Press, Cambridge.
  5. OBEYESEKERA, G. 1958-The Structure of a Sinhalese Ritual. The Ceylon Journal of Historical and Social Studies. Vol. 1, University of Ceylon, Peradeniya, Ceylon. 
  6. RYAN, BRYCE  1953-Caste in Modern Ceylon. Rutgers University Press, New Brunswick, N. J. 1952-Socio-Cultural Regions of Ceylon. Rural Sociology 17:9-28. 
  7. RYAN, BRYCE F. and MURRAY A. STRAUS 1954-The Integration of Sinhalese Society. Research Studies of the State College of Washington XIII:4.
  8. SRINIVAS, M. N. 1952-Religion and Society Among the Coorgs of South India. Clarendon Press, Oxford. 
  9. WHITEHEAD, HENRY 1916-Village Gods of South India. Humphrey Milford, London.
  10. WISER, WILLIAM HENRICHS 1936-The Hindu Jajmani System. Lucknow Publishing House, Lucknow.

குறிப்பு  : ’Caste, Religion and Ritual in Ceylon’  என்ற தலைப்பில் 1965 ஆம் ஆண்டு  Anthropology Quarterly  (1965.38(4): 218 -227)  என்னும் பருவ இதழில் றொபேர்ட் எஸ். பேரின்பநாயகம்  அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.


ஒலிவடிவில் கேட்க

16653 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)