தொல்லியல் காட்டும் சங்ககாலப் பெருங்கற் பண்பாடு
Arts
30 நிமிட வாசிப்பு

தொல்லியல் காட்டும் சங்ககாலப் பெருங்கற் பண்பாடு

May 1, 2023 | Ezhuna

அறிமுகம்

    இன்று தமிழகத்தில் உள்ள இலக்கியங்களில் மிகப் பழமையான இலக்கியங்கள் சங்ககால இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பதில் அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துகள் காணப்பட்ட போதிலும் மொழியியல் ஆய்வுகள், ஆரம்பகாலக் கல்வெட்டுகள், நாணயங்கள், கிரேக்க-ரோமானியர்களின் பதிவுகள், அகழாய்வுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவ்விலக்கியங்களின் காலத்தை கி.மு. மூன்றாம்  நூற்றாண்டிற்கு முன்பாக எடுத்துச்செல்லலாம்.

     இச் சங்ககால இலக்கியங்களில் முச்சங்கங்கள் பற்றிய குறிப்பு எதிலுமே காணப்படவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இறையனார் அகப்பொருளுரையிலேயே முச்சங்கங்கள் பற்றிய குறிப்பு முதன்முதலாக இடம்பெறுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் எதிலும் முதல் இரு சங்கங்களுக்குரிய தொல்லியல் படிவங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் கடைச்சங்கம் காட்டுகிற தமிழர் சமூகத்தை கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுச் சான்றுகள் என்பன வெளிப்படுத்துவனாக உள்ளன.

     இந்தப் பின்னணியில் தொல்லியல், பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை – இன்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. புதையுண்டு கிடக்கும் புராதன பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சான்றுகளை முன்வைக்கும் முக்கியமான சாதனங்களில் ஒன்று தொல்லியலே ஆகும்.

வேளாண்மையின் வருகை

     இற்றைக்கு 12-10,000 ஆண்டுகளுக்கு முன்னர் மொஸப்பத்தேமியா, சீனா போன்ற நாடுகளில் ஆரம்பமான விவசாய-வேளாண்மை நடவடிக்கைகள் படிப்படியாக இந்திய உபகண்டத்தையும், தமிழகத்தையும் அடைந்தபோது அது மக்களின் பொருளாதாரம், தொழில்நுட்பம், சமூகப்பரவல் ஆகிய நிலைகளில் சடுதியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. தமிழகத்தின் கற்கால சமூகங்கள் வேட்டையாடி- உணவு சேகரித்து வந்த காலங்களில் (hunting-gathering societies) காடும், மலையும், பாறை நிலங்களுமே அவர்களுக்கு உணவு பெறக்கூடிய வதிவிடங்களாக விளங்கின. விவசாயத்தின் அறிமுகம் காடுகளைவிட்டு வெளியேறி நீர்நிலைகள் கொண்ட வண்டல் சார்ந்த இடங்களுக்கும், சமதரைகளுக்கும் அவர்களை இடம்பெயர வைத்தது. அந் நிலங்களில் மழையையும், காற்றையும், புயலையும் தாங்கக்கூடிய வதிவிடங்கள் தோற்றம் பெற்றன.  

     இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் கர்நாடகப் பிரதேசத்திற்கு முதல் தடவையாக நீர்ப்பாசன விவசாயம் அறிமுகமானதை கதிரியக்க ஆய்வுகள் (Radio-Carbon and Thermoluminescence dating)  திட்டமாக எடுத்துக்காட்டுகின்றன. ஏற்கனவே விவசாயக்கலையில் பரிச்சயமான சிலர் இந்தியாவின் மேற்குமலைத்தொடர் வழியாக இந்துநதிப் பள்ளத்திலிருந்து தென்னிந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் வந்து, அங்கே காடுகளில் வளர்ந்திருந்த தானியப் பயிர்களை இனம் கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தி (domestication), ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் நீர்ப்பாசன விவசாயத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தாம் பேசிய விவசாய மொழியையும் தங்களோடு கொண்டுவந்தார்கள்.

     அக்காலப் பகுதியில்தான் காடுகளுக்குள் வேட்டையாடி-உணவு சேகரித்து  (hunter-gatherers) நாடோடிகளாக வாழ்ந்து வந்த குலமரபுக் குழுக்கள் (tribes), இவற்றைக் கண்ணுற்று, இத்தனை சுலபமாக உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதை அறிந்து, தாங்களும் ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் நீர்ப்பாசன விவசாயத்தில் ஈடுபட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் அனைவரும் அவ்விவசாய நிலங்களுக்கருகே குடிசைகள் அமைத்துத் தங்கவேண்டியதாயிற்று. அவ்வாறு தோன்றிய குடிசைக் கூட்டங்களே பின்னர் ஊர்களாக, கிராமங்களாக உருவெடுத்தன.

     அக்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளுவதற்கும், தங்கள் வயல்களில் விளைந்த மேலதிக விளைச்சல் பொருட்களை அயல் கிராமங்களில் விற்பனை செய்வதற்கும் பேசப்பட்ட பேச்சு வழக்குகளிலிருந்து, அப்பகுதிக்கு வந்தோர் கொண்டுவந்த விவசாய மொழியும் (agricultural language),  அங்கு  ஏற்கனவே இருந்த உள்ளூர் மரபுக்குழுக்கள் பேசிய பேச்சு வழக்குகளும் (local dialects) இணைந்து அவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு பொதுமொழி உருவாகியது. விவசாயம் அறிமுகமாகி ஆயிரம் ஆண்டுகளான பின்னால் இம்மொழி அம்மக்கள் அனைவராலும் பேசி விளங்கக்கூடிய பொதுமொழியாக இருந்திருக்கும்.

     அடுத்து வந்த முக்கியமான கண்டுபிடிப்பு அவர்கள் பேசிய மொழியைப் பதிவு செய்யும் எழுத்துக் கலையாகும். எழுத்தைக் கண்டுபிடித்ததன் பின்னரே தமிழ் மொழியானது தரப்படுத்தப்பட்ட (standardised), அனைவராலும் வாசித்து விளங்கக்கூடிய மொழியாக உருவெடுத்தது.

பெருங்கற் பண்பாட்டுக் காலம் கி.மு. 1200 – கி.பி. 200.

     சங்ககாலச் சமூகம் அறிவியல், எழுத்தறிவு, தொழில்நுட்பம், பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தக கலாசாரத் தொடர்புகள், அரச உருவாக்கம் ஆகிய பலதரப்பட்ட தளங்களில் சிறப்புற்று விளங்கியது. அவர்களது சமூக எழுச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும் அடித்தளம் அமைத்தவர்கள் அவர்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் வாழ்ந்த பெருங்கற்படைக்கால மக்களே ஆவர்.

     புதிய கற்காலத்தில் கிழக்கு மத்தியதரை நாடுகளில் (Eastern Mediterranean) இறந்தோரின் சடலங்களை பெரிய கற்களினால் செய்யப்பட்ட குழிகளிலும், சமாதிகளிலும் புதைக்கும் வழக்கம் கி.மு. 3000–2500 ஆண்டளவில் ஆரம்பமாகியது. அங்கிருந்து இப் பண்பாடு கி.மு. 1500 ஆண்டளவில் தென்னிந்தியாவை வந்தடைந்தது.(Possehl, G.L. 1994; Moorty, U.S. 1994).    

     இறந்தவர்களைப் புதைத்து அவர்களை வழிபடும் வழக்கம் திராவிடப் பண்பாட்டின் முக்கியமான ஒரு கூறாக விளங்கியமையினால் தென்னிந்தியாவில் திராவிட மக்கள் வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் இப்பண்பாடு விரைவில் பரவலாயிற்று. கி.மு. 1500 ஆண்டுகாலப்பகுதியில் கர்நாடகத்தை வந்தடைந்த இப் பண்பாடு (Possehl, G.L. 1994; Moorty, U.S. 1994) கி.மு. 1200 ஆண்டளவில் தமிழகத்தில் அறிமுகமானதை சமீபகால C–14 கதிரியக்க காலக்கணிப்பு முறைகள் அறியத்தருகின்றன.

     பெருங்கற்களினாலான இச் சமாதிகளுடன் மற்றும் பல வாழ்வியல் அம்சங்கள்  பின்னிப் பிணைந்து இருப்பதனால் இது ‘பெருங்கற் பண்பாடு’ என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இப்பண்பாட்டின் சிறப்பியல்புகளாக பின்வரும் அம்சங்களைக் குறிப்பிடலாம்: 1. நீர்ப்பாசனக் குளம் 2. நெற் செய்கை 3. குடியிருப்புகள் 4. இறந்தோரை அடக்கம் செய்யும் இடுகாடுகள் 5. இரும்பு உபயோகம் 6. கறுப்பு-சிவப்பு மட்பாண்ட உபயோகம் 7. மட்பாண்ட கீறல் எழுத்துகள் 8. உழுவதற்கான ஏர் 9. மட்பாண்டம் வனையும் சில்

    இப்பெருங்கற் பண்பாட்டுக் காலம் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருந்ததால் இது பலதரப்பட்ட பண்பாட்டு வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருந்தது. கற்திட்டைகள் (dolmens),  கல்லறைகள்(cists), நினைவுச்சின்ன குத்துக்கற்கள் (menhirs),  ஈமத் தொட்டிகள் ; (sarcophagus), பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள் என பல வகையான புதைவடிவங்கள் காணப்படுகின்றன. கேரள நாட்டில் (பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதி) குடைக்கல், தொப்பிக்கல், பத்திக்கல் என்பன உள்ளன.

     இப் பண்பாட்டுக் காலத்திற்குரிய சில சிறப்பம்சங்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால் இதன் இறுதிக்காலம் சங்க காலம் வரை நீடித்திருந்ததை அறிய முடிகிறது.  

     இப் பெருங்கற் பண்பாட்டின் பண்பியல்புகளை சான்றாகக் கொண்டு இப் பண்பாட்டின் படிநிலை வளர்ச்சியை மூன்று காலப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்:    

  1. இரும்புக்கு முற்பட்ட பெருங்கற் பண்பாடு     கி.மு. 1200 – கி.மு. 1000      
  2. ஆதி இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு     கி.மு. 1000 – கி.மு. 300.    
  3. பின் பெருங்கற் பண்பாடு கி.மு.  300 – கி.பி.  200

     இப்பண்பாடு மேலோங்கியிருந்த காவிய காலத்தில் (Classic Megalithic) இதன் முக்கிய கூறுகளில் இரும்பின் உபயோகம் ஒன்றாக இருந்தமையால், இப்பண்பாடு மேலோங்கியிருந்த காலத்தை இரும்புக்காலம் என்றும், இப் பண்பாட்டை இரும்புக்காலப் பண்பாடு என்றும் சில அறிஞர்கள் அழைத்து வருகிறார்கள்.

     இப்பண்பாட்டை கர்நாடகத்தில் கதிரியக்க கார்பன் C-14 துணையுடன் ஆய்வுசெய்த இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) ஆய்வாளர் டொரியன் ஃபுல்லர், கர்நாடகத்தில் குமரனகல்லி, தடகனகல்லி ஆகிய இடங்களில் காணப்படும் கி.மு. 1500, கி.மு. 1450 ஆண்டுகளுக்குரிய பெருங்கற் சமாதிகளில் இரும்பு காணப்படவே இல்லை என்பதை உணர்ந்தார். மேலும், கர்நாடகத்தில் கி.மு. 800 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பெருந்தொகையான பெருங்கற் பண்பாட்டுடன் இரும்பு காணப்படவே இல்லை. எனவே, கிமு. 800 க்கு முற்பட்டகால பெருங்கற் புதையல்களை ‘இரும்புக்கு முற்பட்ட பெருங்கற் பண்பாடு’ (Pre-Iron Megalithic) என்றும், இரும்புக்கால பெருங்கற்களை ‘காவியகால பெருங்கற் பண்பாடு’ (Classic Megalithic)  என்றும் குறிப்பிடுகிறார். (Fuller, D. ; Possehl, G.L. 1990, 1994) தமிழகத்தில் கிமு. 1000 ஆண்டளவிலேயே இரும்பின் உபயோகம் பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     இப்பெருங்கற் பண்பாடு எவ்வழியாக தென்னிந்திய தீபகற்பத்தை அடைந்தது என்பதையிட்டும், இதை யார் பரப்பினார்கள் என்பதைப் பற்றியும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப் பண்பாட்டைப் பரப்பியவர்கள் திராவிட மொழிகளைப் பேசியோர் எனப் பலரும், இந்து-ஆரிய மொழிகளைப் பேசியோர் என ஒரு சிலரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இப் பண்பாட்டைப் பரப்பியவர்கள் இந்தோ-ஆரியர்களாக இருக்க முடியாது என்பதற்கான சான்றுகள் இவை:

  1. இப் பண்பாடு கி.மு.1500 ஆம் ஆண்டளவில் கர்நாடக மாநிலத்தில் ஆரம்பமான காலத்தில், தென்னிந்தியாவை இந்தோ-ஆரியர் எவரும் வந்தடையவில்லை. அக் காலகட்டத்தில்தான் அவர்கள் முதன்முதலாக இந்திய உபகண்டத்தில் நுழைய ஆரம்பித்திருந்தார்கள்.
  2. ஒருகால் அவர்கள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவை வந்து அடைந்திருந்தாலும், தமது வாழ்நிலமான வட இந்தியாவில் ஆரம்பிக்காத பெருங்கற் பண்பாட்டை எதற்காக தென்னிந்தியாவில் பரப்பவேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
  3. ரிக் வேத காலத்திலிருந்தே இந்தோ-ஆரியர்கள் சடலங்களை எரித்து வந்திருக்கிறார்கள்; புதைப்பது அவர்களது கலாசாரத்திற்குப் புறம்பானது.

     ‘இப் பண்பாடு வடமேற்குத் தக்கணமான மஹாராஷ்டிராவில் முதலில் பரவி அங்கிருந்து தென் தக்கிணமான கர்நாடகத்திற்குப் பரவி, அங்கிருந்து பின்னர் கிருஷ்ணா நதிக் கரையோரமாக ஆந்திரப் பிரதேசத்தையும், கோதாவரி மற்றும் பெண்ணாறு வழியாகத் தமிழகத்தையும் வந்தடைந்தது’ என்பதே தற்போது வழங்கி வரும் கருத்து.

     இந்தக் கருதுகோளில் உள்ள ஒரு சிக்கல் இது: கர்நாடகத்தில் குமரனகல்லி, தடகனகல்லி ஆகிய இடங்களில் காணப்படும் பெருங்கற் புதையல்கள் இ.மு. 3,500 ± 60; 3, 400 ± 60 ஆகிய கதிரியக்க கார்பன் C-14  திகதிகளைத் தந்திருக்கின்றன (Moorti, U.S. 1994: 123). இத்தனை பழமையான திகதிகள் மஹாராஷ்டிராவின் புதைகுழிகளிலிருந்து இதுவரை பெறப்படவில்லை. எனவே, இப் பண்பாடு முதலில் கர்நாடகத்தில் ஆரம்பமாகி வடக்கே மஹாராஷ்டிராவிற்கும், தெற்கே திராவிட மக்கள் வாழுந்த பகுதிகளுக்கும் பரவியதாகக் கருதவே இடமிருக்கிறது.  

     தென் கர்நாடகத்தில் பெங்களூர் மற்றும் கோலார் மாவட்டங்களில் பெருந்தொகையான ஆதிப் பெருங்கற்கால சவ அடக்கங்கள் உள்ளன. அவை வெளிப்படுத்தும் பண்பாட்டின் பரம்பலாகவே கிழக்கே தமிழ்நாட்டின் வடபகுதியில் தர்மபுரி மாவட்டத்திலும், வட ஆற்காட்டிலும் உள்ள சவ அடக்கங்களைக் கருத வேண்டும். இவை பொன்னையாறு, பாலாறு, காவேரி ஆகிய நதிகளின் கரைகளை அடுத்துக் காணப்படுகின்றன. இந்த நதிகள் தென் கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டை நோக்கிப் பாய்கின்றன. இந் நதிகள் வழியாகத் தென் கர்நாடகத்திலிருந்து இப் பண்பாடு தமிழகத்திற்குப் பரவிய முறையை சுலபமாக விளங்கிக்கொள்ளலாம்.

     வட தமிழகத்தின் வளம் மிகுந்த நிலப்பகுதிகளிலிருந்து இப் பெருங்கற்- பண்பாடு நதிகளின் வழியே தென் தமிழ்நாட்டுக்கும் பரவியது. சேலம் மாவட்டத்திலிருந்து வடக்கு நோக்கித் தென் ஆற்காடு மற்றும் செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் இப் பண்பாட்டின் பரம்பலைக் காணலாம். சுருங்கக்கூறின், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் பெருநதிகள் வழியே இப் பண்பாடு கர்நாடகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தமிழகத்தின் பெருநதிகளான காவேரி, பாலாறு, பொன்னையாறு, தாமிரபரணி ஆறு ஆகியவை வளம்படுத்தும் நிலப்பகுதிகளில் இப் பண்பாடு வேரூன்றியது (இந்திரபாலா, கா 2006: 93).

தாமிரபரணித் தாழிகள்

     இப் பெருங்கற் பண்பாட்டோடு தொடர்புடைய – ஆனால் கற்கள் ஏதும் இல்லாத – ஓர் அடக்க முறையே தாழிப்புதையலாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆதிச்சநல்லூரில் – தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் – கல்மேடாக இருந்த ஒரு குன்றை வீதியமைப்பிற்கான கற்களை எடுக்கும் பொருட்டு வேலையாட்கள் தோண்டியபோது, அது ஆதிகால மக்களைப் புதைத்துவைத்த ஓர் இடுகாடு என்பது தெரிய வந்தது.

     1876 ஆம் ஆண்டில் டாக்டர் பிஃரெட்றிச் ஜாகோர் (Dr Friedrich Jagor) என்ற ஜேர்மன் இயற்கையியலாளர் இந்த இடத்தில் முதல் தடவையாக அகழ்வுகளை மேற்கொண்டார். இவ்வகழ்வுகள் பற்றிய அறிக்கை சென்னை அரசின் பொதுத்துறை இலகாவின் நடவடிக்கைகள் பதிவேட்டில் வெளியாகியிருக்கிறது.  (Proceedings of the Madras Government Public Department: No. 329 of 27 March, 1876).   

     ஆற்றங்கரையில் கல்மேடாக இருந்த குன்றை அகழ்ந்தபோது, முதலில் வரிசையாக அடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் காணப்பட்டன. அவற்றின் கீழே அகழ்ந்தபோது மூன்றடி ஆழத்தில் முப்பது சதுர அடிகளுக்கு உட்பட்ட நிலத்தில் மட்டும் 28 பெரிய மட்குடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு உருவங்களில் காணப்பட்ட இக் குடங்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட, செவ்வனே வனையப்பட்டு சூளையில் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட தாழிகளாகும். இவற்றில் பெரியவை மூன்றடி ஒன்பது அங்குல உயரமும், மூன்றடி ஆறு அங்குல விட்டமும் கொண்ட பெரிய தாழிகள்.

     டாக்டர் ஜாகோர் மேற்கொண்ட அகழ்வில் பெரிதும் சிறிதுமாக 50 க்கும் மேற்பட்ட தாழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. பெரிய தாழிகளில் இறந்தவர்களின் சடலங்கள் உட்கார்ந்த நிலையிலே அடக்கம் செய்யப்பட்டிருந்தன. சில தாழிகளில் எலும்புகளின் சில பகுதிகளே காணப்பட்டன. இவற்றிற்கு அருகிலிருந்த சிறிய குடங்களில் நெல், வரகு, சாமை ஆகிய தானியங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை தவிர இரும்பினால் ஆன கத்திகள், வாட்கள், வெண்கலத்தினாலான உருவங்கள் என்பனவும் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

     டாக்டர் ஜாகோர் கண்டெடுத்த தாழிகள், எலும்புகள், தொல்பொருட்கள் அனைத்தும் அவரால் ஜேர்மனிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அன்றைய ஆங்கில அரசின் கீழ் இது எப்படிச் சாத்தியமாக இருந்ததோ தெரியவில்லை. (ஆங்கில அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவற்றைக் கடத்திச் சென்றார் என்கிறார்கள் கால்டுவெல் போன்ற சில அறிஞர்கள்). ஜாகோர் எடுத்துச்சென்ற ஆதிச்சநல்லூர் தாழிகளும், கருவூலங்களும் இன்றும் பேர்லின் அரும்பொருட் காட்சிமனையில் (Berlin Museum für Vōlkerkunde)   பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

     1970 ஆம் ஆண்டில் இத்தொல்பொருட்கள் C – 14 கதிரியக்க-கார்பன்  திகதிக்கணிப்பு செய்யப்பட்டன. டாக்டர் ஜாகோர் கண்டெடுத்த புதையல்களில் எலும்புகள், தானியங்கள் என்பன கி.மு. 900 க்கும் – கி.மு. 700 க்கும் இடைப்பட்ட காலத்தவை என கணிக்கப்பட்டிருக்கின்றன.(Archaeological Survey of India- Reports: Govt. Press, New Delhi, 1972).

அலெக்ஸாந்தர் ரியாவின் ஆய்வுகள் –    Alexander Rea’s Excavations

ஆதிச்சநல்லூர் அகழ்வுகளைப் பற்றி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்த போதிலும், அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது அலெக்ஸாந்தர் ரியா என்ற ஆங்கில அகழ்வாராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வுகளும், 1915 இல் அவர் எழுதி வெளியிட்ட “ஆதிச்சநல்லூர், பெரும்பையார் ஆகிய இடங்களில் கண்ட வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்ட தொல்பொருட்களின் பட்டியல்” என்ற நீண்ட தலைப்புக்கொண்ட நூலாகும். (Rea, A. 1915).

     1899 க்கும்- 1904 க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டிலும் ஆறுமாத காலங்கள், ஆதிச்சநல்லூரில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டார் ரியா. அவரது கண்டுபிடிப்புகள் அனைத்தும் இன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

     திருநெல்வேலி நகருக்குத் தென்கிழக்கே 12 மைல் தொலைவில், தாமிரபரணியின் தென்கரையில் வடக்குத்-தெற்காக அமைந்த குன்றில், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் முதலாவது அகழ்வை மேற்கொண்டார் ரியா. நீர்ப்பாசன நிலங்களுக்கு அருகாமையில், ஆனால் விவசாயம் செய்ய முடியாத கற்பாறைகள் கொண்ட மேட்டு நிலங்களில் இந்த இடுகாடுகள் அமைந்திருந்தன. இந்த இடுகாடுகளுக்குச் சமீபமாக மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களும், ஆற்று நீரைக்கொண்டு விவசாயம் செய்ததற்கான தடயங்களும் காணப்பட்டன. இடுகாடுகள் பொதுவாக குடியிருப்புகளின் தென்புறத்தில் அமைந்திருந்தன. தென்புலம் மரணதேவன் வதியும் இடம் என்பது ஐதீகம்.

     ரியா மேற்கொண்ட அகழ்வுகளில் நிலத்தின் கீழே மூன்று அடியிலிருந்து பன்னிரண்டு அடி ஆழம்வரை தாழிகள் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். ஒவ்வொரு தாழியும் தனித்தனிக்  குழிகளில் காணப்பட்டன. சில இடங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக வெவ்வேறு ஆழ மட்டங்களில் தாழிகள் காணப்பட்டன. ஒரு ஏக்கர் பரப்பில் ஆயிரம் தாழிகள் வரை புதைக்கப்பட்டிருப்பதாக ரியா கணக்கிட்டார். தமிழ்நாட்டில் பல இடங்களில் பல தாழிகள் பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும்,  தொகையில் ஆதிச்சநல்லூர் தாழிகளுக்கு இணையாக இதுவரை வேறு எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆதிச்சநல்லூரில்   ரியா சேகரித்த 4,000 வரையான கருவூலங்களுக்கும் பட்டியல் தயாரித்து தனி நூலாக வெளியிட்டார்.

தாழிப் பொருட்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்

     இத்தாழிகள் யாவும் களிமண்ணினால் செய்யப்பட்டு நெருப்புச் சூளையில் சுடப்பட்டவையாகும். இம் மட்பாண்டங்கள் கறுப்பிலும், சிவப்பிலும், கறுப்பு – சிவப்பு இரண்டும் கலந்த வர்ணங்களிலும் செய்யப்பட்டிருந்தன. பெரிய தாழிகளில் எலும்புக்கூடுகளும், சிறியவற்றில் மற்றைய புதைவினை, மற்றும் ஈமப் பொருட்களும் காணப்பட்டன. முழுமையான எலும்புக்கூடுகள் காணப்பட்ட தாழிகளில் சடலங்கள் உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தன. இத் தகவல்கள் அலெக்ஸாந்தர் ரியாவின் அகழ்வு அறிக்கையில் காணப்படுகின்றன.

     இத் தாழிகளோடு காணப்பட்ட சிறு குடங்களில் தங்கம், வெண்கலம், இரும்பு ஆகிய உலோகப் பொருட்களோடு நெல், அரிசி, வரகு, சாமை போன்ற தானிய வகைகளும் காணப்பட்டன.

     தங்கப் பொருட்களில் இரு முனைகளிலும் துவாரமிடப்பட்ட நீள்வடிவமான தங்கத் தகடுகளும், தங்க முக்கோணங்களும் முக்கியமானவை. இத்தகைய ஆபரணங்களை தென்னிந்தியக் கோவில்களுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் வாய்மூடிகளாக  (diadems)  இன்றும் அணிந்து கொள்கிறார்கள்.

     வெண்கலம் பல வகையான பாத்திர வகைகள் செய்யவும், வளையல்கள், மோதிரங்கள் (manipulation), சங்கிலிகள், பதக்க அணிகலன்கள் செய்யவும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. பாத்திரங்களின் மூடிகளில் பல வகையான மிருகங்களின் உருவங்கள் காட்சிதருகின்றன. இவை தவிர வெண்கலத்தினால் செய்யப்பட்ட வளர்ப்பு மிருகங்களான ஆடு, மாடு, எருமை, கோழி (சேவல்) போன்றவையும், காட்டு மிருகங்களான யானை, புலி, மான் ஆகியவையும், பல வகையான பறவை இனங்களும் இடம் பெறுகின்றன.

     வெண்கலப் பொருட்களின் வேலைப்பாடுகளை விமர்சனம் செய்த ரியா – அந்த உலோகத்தை வளைத்து வேலை செய்த தொழில் நுட்பத்தையும்  வேலைப்பாட்டின் திறமையையும் புகழ்கிறார். வெண்கலப் பகுப்பாய்வில் – செம்பு 75 சத விழுக்காடும், வெள்ளீயம் 23 சத விழுக்காடும் காணப்பட்டன. செப்புத் தொழில் பாரம்பரிய மரபுவழித் தொழிலாக நடைபெற்று வந்திருப்பதாக ரியா கருதுகிறார்.

     இரும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் கத்திகள், வாட்கள், குறு வாட்கள் போன்ற  ஆயுதங்களும்; வேல், திரிசூலம் போன்ற வழிபாட்டுப் பெருட்களும்; முக்கால் நிலைகளும் (stands), தொங்கு விளக்குக் கொளுக்கிகளுமாகும். கத்திகள், குறுவாட்களின் முனை கீழ் நோக்கி மண்ணில் நேராகப் புதைக்கப்பட்டிருப்பதால், இறந்தவர்களின் இறுதிச் சடங்கின்போது வருகை தந்த மக்கள், சடலத்தாழிகள் புதை குழிகளுக்குள் தாழ்த்தப்பட்ட சமயம் இவற்றை நிலத்தில் புதைத்திருக்க வேண்டும் என ரியா அபிப்பிராயம் தெரிவிக்கிறார். பண்டைக்கால ஈமச் சடங்கின் பண்புகளில் ஒன்றாக அல்லது வீரன் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட இறுதி மரியாதையாக இது இருக்கலாம்.

     இப் புதையல்களில் கண்ட உலோகப் பொருட்களினாலான திரிசூலம், வேல், சேவல், வாய்மூடி இவற்றிலிருந்து சிவ வழிபாடும், முருக வழிபாடும் இ.மு. 3000 ஆண்டுக் காலத்திலேயே வழக்கிலிருந்ததை அறிய முடிகிறது. இக் காலகட்டத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட சமயம் என்று ஒன்று இல்லாத போதிலும், பிற்காலத்தைய சமய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் காட்டும் சின்னங்கள் காணப்படுகின்றன.

     பல தாழிகளில், எலும்புகளுடன் பருத்தியினால் செய்யப்பட்ட துணிகள் கண்டெடுக்கப்பட்டன. இப் புதைபொருள்களில் நெல், சாமை, தினை, வரகு ஆகிய தானிய வகைகளையும் – சந்தனக் கட்டைகள், சந்தனக் கட்டைகளைத் தேய்க்கும் கற்கள் – இவற்றையும் ரியா கண்டெடுத்தார்.

    ஆதிச்சநல்லூர் தாழிகளை ஆராய்ந்து எலும்புகளையும், தானியங்களையும் பரிசோதனை செய்த டாக்டர் தேஸ்டன் (Dr Thurston) இத் தாழிப் பொருட்களில் பழமையானவை கி.மு. 1200 ஆம் ஆண்டு காலத்திற்குரியவை எனக் கணிப்பிட்டார். சமீபகால வெப்பீட்டுவியல் (Thermo – luminiscence TL) காலக் கணிப்பீடுகள் இதை உறுதிப்படுத்தும் வகையில் இப் புதையல்களின் காலம் இ.மு. 1400 முதல் – 800 வரை என அறியத்தருகின்றன(Sasisekaran, B. et al. 2010: 369-394).

     மட்பாண்டங்களில் புடைத்து நிற்கும்  (embossed)  வட்ட வடிவங்கள், கோடுகள், வளையங்கள், முக்கோணங்கள் என்பன இத்தாழிகளை வனைந்தவர்களின் ஆற்றலையும் – பருத்தியை உற்பத்தி செய்து, அதை நூலாக நூற்று, துணியாக நெய்தவர்களின் திறமையையும் – கல்லிலும் மரத்திலும் கடைந்த பொருட்கள் அவற்றைச் செதுக்கிய மனிதர்களின் தச்சுத் திறனையும் – தானிய வகைகள் அம் மனிதர்களின் விவசாய வாண்மையையும் – வெளிப்படுத்தி நிற்கின்றன.

2004 – 2005 ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்

     அலெக்ஸாந்தர் ரியாவின் ஆய்வுகளின் பின்னர் நூறு ஆண்டுகள் கழித்து இந்தியத் தொல்லியல் ஆய்வின் சென்னைக் குழு (ASI, Chennai Circle) அதன் இயக்குநரான சத்தியமூர்த்தி தலைமையில் 2004 – 2005 ஆண்டுகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு 169 தாழிகளை அகழ்ந்தெடுத்தார்கள். இத்தாழிகள் மூன்று முதல் ஆறு மீற்றர் ஆழமான குழிகளில், மூன்று மட்டங்களில் புதைக்கப்பட்டிருந்தன. இத்தாழிகளில் காணப்பட்ட தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கி.மு. 500 ஆம் ஆண்டுகளுக்குரியனவாக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டன.(Subramanian, T.S. 2004).     

     இத் தாழிக்காடு  இருக்கும் இடத்திற்குச் சமீபமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் மக்கள் வாழ்ந்த, காப்பரண்களைக் கொண்ட, ஒரு ஆதி நகரம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். இந்த நகரம் அதிகமான உலோகத் தச்சர்களையும், பானை வனைபவர்களையும் கொண்ட சுறுசுறுப்பான தொழில்துறை நகரமாக இருக்கலாம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.

     இதைத்தொடர்ந்து ஆதிச்சநல்லூர் நிலத்தொல்லியல் geo-archaeological study) ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. சமுத்திரத் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்தைச் (National Institute of Ocean Technology : NIOT)  சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆதிச்சநல்லூர் தாழித் தலம் இருக்கும் இடம் அடிப்படையில் உலோகப் பொருட்களை அகழ்ந்தெடுத்த இடம் எனக் கண்டறியப்பட்டது. இங்கே செம்பு, இரும்பு, தங்கம் ஆகிய உலோகங்களின் கனிமங்கள் பெறப்பட்டு, இவற்றை உருக்குவதற்கான சிறு சிறு  தொழிற்சாலைகள் இருந்த இடமாக ஆதிச்சநல்லூர் விளங்கியிருக்கிறது.(Sasisekaran, B. et al. 2010). ஆதிச்சநல்லூர் உலோக கனிமப்பொருள் அகழ்ந்தெடுத்த, உலோகத்தொழில் மேற்கொண்டிருந்த ஓர் ஆதி மையமாகும். (ancient centre for mining and metalwork) 

     ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த செப்புக் கருவூலங்களை ஆய்வுசெய்த NIOT நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சசிசேகரன், இங்கு காணப்படும் செம்பில் அது ஆதிகளவு சூடாக்கினால்கூட உடைந்து போகாது கடினமாக இருப்பதற்காக ஆர்ஸனிக் (arsenic)  என்ற உலோகப்பொருள் (metalloid) அதனோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் இந்தியா முழுவதிலும் சிந்துவெளிப் பள்ளத்தாக்கிலும், ஆதிச்சநல்லூரிலும் மட்டுமே காணப்படுகிறது. ஆதிச்சநல்லூர் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை ஓர் உலோகத் தொழில் மையமாக விளங்கியதாக ஆய்வாளர்கள் கணிப்பிடுகிறார்கள்.

     இந்த உலோகக் கனிமங்கள் எடுப்பதற்காக வெட்டிய குழிகளில் 6 முதல் 3 மீட்டர் குழிகளைத் தேர்ந்தெடுத்து ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஈமத்தாழிகளில் காணப்பட்ட உலோகக் கருவூலங்கள் செம்புக்கலவை, இரும்பு, தங்கம் ஆகியவற்றால் ஆனவை. இந்த உலோகக் கருவூலங்களும், அவை பெறப்பட்ட தாழிகளும் காலக் கணிப்பிற்காக மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

     மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இந்த மாதிரிக்கூறுகள் (samples)  டாக்டர் ராஜ் கார்ஷியாவினால் வெப்பீட்டு ஒளிவீச்சு (Thermoluminiscence: TL), காட்சியொளி தூண்டும் ஒளிவீச்சு (Optically Stimulated Luminescence: OSL) ஆகிய காலக்கணிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டன. அதில்காணப்பட்ட ஒரு செப்புப் பொருள் கி.மு. 1400±700 ஆண்டுகளுக்குரியதாகக்  கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த காலக்கணிப்பு அட்டவணை கீழே தரப்படுகிறது.

பையம்பள்ளி

     வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராமம் பையம்பள்ளி. இந்திய தொல்லியல் துறை 1906 இல் இங்கே மேற்கொண்ட அகழ்வுகளில் பெருங்கற் புதையல்கள், அதனோடு தொடர்புடைய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவற்றை வெளிக்கொணர்ந்தது. இப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஈமத்தாழிகளும் கண்டறியப்பட்டன. இப்பண்பாட்டின் காலம் ஊ-14 ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் கி.மு. 1000 எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கொடுமணல்

     காவிரி ஆற்றின் கிளைநதியான நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் கிராமம் கொடுமணல். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் சேர அரசனுக்குரிய ஊராக குறிப்பிடப்படும் ‘கொடுமணம்’தான் இன்றைய கொடுமணல் எனக் கருதப்படுகிறது. 1980 களிலும்,  1990 களிலும்,  2012 இலும் இங்கே அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஈமக் குழிகள், ஈமத் தாழிகள், கற்படுக்கைப் புதைப்பு எனப் பலவகைப் புதைமுறைகள் இங்கே காணப்படுகின்றன. இவற்றோடு பண்டைய மக்கள் உபயோகித்த ஆயுதங்கள், கருவிகள், அணிகலன்கள், செம்மணிக் கற்கள், ரோமானிய நாணயக் குவியல்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.    

பிற ஆய்வுகள்

     வைகை ஆற்றுக்கு வடக்கே பெண்ணையாறு, பாலாறு ஆற்றுப்படிகை ஊர்களான அப்புக்கல், பையம்பள்ளி, மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வட தமிழகம் புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்திற்கு மாறியதை எடுத்துக் காட்டுகின்றன.(Rao 1964-65: 22-23; 1968: 26-30; Rajan 2003: 120-126).

வைகை ஆற்றிற்குத் தெற்கே மாங்குடி, தேரிருவேலி, கல்லுப்பட்டி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தென் தமிழகம் நுண்கருவிகாலப் பண்பாட்டிலிருந்து நேரடியாக பெருங்கற்கால அல்லது முதுமக்கள் தாழிப் பண்பாட்டிற்கு மாறியதை எடுத்துரைக்கின்றன .

சங்க இலக்கியங்கள் காட்டும் புதையல் பண்பாடு

     சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், புறநாநூறு முதல் பின்னால் வந்த காப்பியங்களான மணிமேகலை வரை இந்த ஈமத்தாழிகளைப் பற்றிக் கூறுகின்றன.

“வியன்மல ரகன் பொழி லீமத் தாழி
யுகலி தாக வனைமோ”

– புறநானூறு 256: 5-6

“அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வுனைதல் வேட்டனை யாயி னெனையதூஉ”

                           புறநானூறு 228: 12-13

இத் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்கள் ‘காடு’ என வழங்கப்பட்டதை பின்வரும் செய்யுட்கள் தெரிவிக்கின்றன.

“கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன் காட் டதுவே”

– புறநானூறு 225: 7-8

“வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடிப்
பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்குங் காடு”

– புறநானூறு 238: 3-4

இப் புதையல்கள் உயர்குடி மக்கள், சாதாரண மக்கள், ஆண், பெண் எனப் பல்திறத்தாருக்கும் எழுப்பப்பட்டதாக சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பிய போதிலும் அச் சின்னங்கள் அமைக்கப்பட்ட விதத்தினையும், அதனுள்ளே பெரும் படையலாக வைக்கப்பட்ட பொருள்களின் தன்மையினையும், அளவினையும் பார்க்கும்பொழுது அவை பெரும்பாலும் உயர்குடி மக்களுக்கே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

     சோழ மன்னனான குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலமான போது அவனது உடலை அடக்கம் செய்ய வேண்டியதற்குத் தகைமையான ஒரு தாழியை வனைந்து தரும்படி குயவனிடம் வேண்டி நிற்கிறார் புலவர் ஆய்யூர் முடவனார்.

“கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத்திரள் பருஉப்புகை
அகல் இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை கொல்?

நிலவரை சூட்டிய நீளநெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கோடிநுடங்கு யானை நெடுமா வளவன் –

தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்
அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ நினக்கே? “

– புறநானூறு 228: 1-15

     விரிகதிர் ஞாயிறு விசும்பிலே செல்வதுபோல, உலகெங்கும் நிலவிப் புகழ் பெற்றவன், செம்பியன் மரபினனான கிள்ளி வளவன். அவன் தேவருலகம் எய்திய படியினால் அவனது உடலினை அடக்கம் செய்வதற்கு உகந்த தாழியை வேண்டி நிற்கிறேன். கலஞ்செய் கோவே! உன்னால் அது ஒருபோதும் இயலாது.

நில வட்டமே சக்கரமாகவும், மேரு மலையையே மண்ணாகவும் கொண்டு வனைந்தாலன்றி, அப் பெருந்தகையானை அடக்கும் தாழியை உன்னால் வனைய முடியவே முடியாது.

சங்ககாலத்தில் தாழிப் புதையல்களைத்தவிர வேறு வகையான சவ முடியமைதி முறைகளையும் செய்யுட்கள் கூறியிருக்கின்றன. பாண்டியன் நம்பி நெடுஞ்செழியனின் அவையிலிருந்த புலவர் பேரையில் முறுவலார் தமது புறநானூற்றுப் பாடலில்

“இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
படு வழிப்படுக . . .”

– புறநானூறு 239: 20-21

எனக் குறிப்பிடுகிறார். இதில் ‘இடுக’ என்பது இறந்தோரை ஓரிடத்தில் வைப்பதையும் , ‘சுடுக’ என்பது எரியூட்டுதலையும் , ‘படு வழிப்படுக’ என்பது இறந்தோரை நேரடியாக ஈமக்குழியில் இடுவதையும் குறிக்கிறது.

     இச் சவ அடக்க முறைகள் சங்கம் மருவிய காலம்வரை வழக்கத்திலிருந்து வந்திருக்கின்றன. இதனைப் புகார் நகரத்துச் சக்கரவாளக்கோட்டத்தில் நிலவிய பல்வேறு நீத்தார் நினைவுக் கடனைக் கூறும் மணிமேகலை வரிகளில், சாத்தனார் கூறுகிறார்.

“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்”

                              – மணிமேகலை 6.111.11.66-67.

எனச் சுடுபவர்களையும் (cremation), இறந்தவர்களை ஓரிடத்தில் இட்டு வைப்பதையும் (post-excarnation burial), குழியிலிட்டுப் புதைப்பதையும் (rock chamber or cist burial), நிலத்திற்கடியில் கல்லறை அமைத்து வைப்பதையும் ,  தாழிகள் இட்டு அதன் மேல் மூடி கொண்டு மூடுவதையும் (urn burial uncapped with lid) தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது (ராஜன், கா. 2010: 23).

     மத்திய காலத் தமிழகத்தில் (Medieval period)  பிராமணியத்தின் ஆதிக்கம் காரணமாக சடலங்களைப் புதைக்கும் வழக்கம் கைவிடப்பட்டு, எரியூட்டுதல் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.

பெருங்கற்காலப் பண்பாட்டின் பரவல்

     இந்தியாவின் மற்றைய மாநிலங்களைப் போலல்லாது தமிழகத்தில் செப்புத்தாது (copper ore)  அதிகம் இல்லாமையால் தமிழகத்தில் வெண்கலக் காலம் (Bronze Age)  பரவலாக இடம்பெறவில்லை. ஆனால் மற்றைய மாநிலங்களைவிட இங்கே இரும்புத்தாது அதிகமாகக் காணப்பட்டதனால் கி.மு. 1200 ஆண்டுக் காலத்திலிருந்தே இரும்பை உருக்குவதற்கான தொழில் நுட்பம் ஆரம்பமாகி, கி.மு. 1000 ஆண்டளவில் இரும்பின் உபயோகம்  நாடெங்கும் பரவலாகி, தமிழகத்தின் வளர்ச்சி பன்மடங்காகப் பெருகியிருப்பதை அனைத்து அகழாய்வுகளும் அறியத்தருகின்றன. தமிழகம் இரும்பின் பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வரை பலதரப்பட்ட பண்பாட்டு வளர்ச்சி நிலைகளில் இருந்திருக்கிறது. ஆனால் இரும்பின் பயன்பாட்டின் மூலம் பெற்ற உற்பத்திப் பெருக்கம் தமிழகம் ஒருமுகப் பண்பாட்டினை நோக்கி அடியெடுத்து வைக்க உதவியது .(Rajan, K. 2010: 20-21).

     பெருங்கற் பண்பாட்டுடன் இடம் பெறும் கருவூலங்களும், தாழிப் புதையல்களோடு காணப்படும் இணைப் பொருட்களும் ஒரே வகையினதாக இருப்பதனால், பெருங்கற்கள் காணப்படாத போதிலும் தாழிப் புதையல்கள் பெருங்கற்காலப் பண்பாட்டு வகையினதாகவே பல ஆய்வாளர்களால் இதுவரை கருதப்பட்டு வந்திருக்கின்றன. இன்றைய சில ஆய்வாளர்கள் இவை இரண்டையும் வேறாகப் பார்க்கிறார்கள். இந்த மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவ்விரண்டையும் உள்ளடக்கிய ‘இரும்புக் காலப் பண்பாடு’ என்ற பதம் சில ஆய்வாளர்களால் உபயோகிக்கப்படுகிறது.

காவேரித் தாழ்நிலம்

     பெருங்கற்காலப் பண்பாடு தமிழகத்தில் பரவிய முக்கியமானதொரு வழி காவேரி நதி வழியாகும். தென் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்குள் பாயும் இந் நதி வழியே இப் பண்பாடு கர்நாடகத்திலிருந்து நேராகப் பரவ முடிந்தது. காவேரி வளம்படுத்திய மேல்நிலப் பகுதிகளிலிருந்து கிழக்கு நோக்கி சேலம் மாவட்டம் வழியாகப் பரவியது போல், இப்பண்பாடு மேற்கிலிருந்து கொங்குநாடு வழியாகவும், தென் மேற்கிலிருந்து பழனி மலைப் பகுதி வழியாகவும் பரவியிருக்க வேண்டும்.

     காவேரி நதி கடலுக்குள் சேருமுன் பாய்கின்ற நிலமாகிய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெருமளவு பெருங்கற்காலத் தொல்லியல் தலங்கள் காணப்படுகின்றன. இத்தலங்களில் கரூர், உறையூர் என்பன ஆதி வரலாற்றுக் காலத்தில் இரு முக்கியமான அரச மரபுகளின் ஆட்சிப்பீடங்களாக அமைந்தன. கரூர் ஆதிச் சேர மன்னர்களின் ஆட்சி நிலையமாக அமைய, உறையூர் ஆதிச் சோழருடைய ஆட்சிப்பீடமாக எழுந்தது. இவற்றிற்குக் கிழக்கே மேலும் ஒரு பிரசித்தி பெற்ற நகர மையம், வரலாற்றுக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழருடைய தலைநகர் தஞ்சாவூர் ஆகும். தமிழகத்தின் கிழக்குக் கரையில், காவேரியின் கழிமுகப் பகுதியில், பிரசித்தி பெற்ற ஆதி வரலாற்றுக்காலத் துறையாகிய காவேரிப் பட்டினமும் காணப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்துறை சோழ நாட்டின் கடல் வர்த்தகத்தில் முக்கியமான பங்கு பெற்றிருந்தது (இந்திரபாலா, கா. 2006: 95).  

     காவேரிப்பட்டினத்திற்குத் தெற்கே மேலும் ஒரு பிரசித்திபெற்ற துறையாகிய நாகபட்டினம் காணப்படுகிறது. இவ்விடத்திலும் பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. இவை உள்ளூர்ப் பகுதிகளில் கிடைக்கும் சான்றுகளுக்குப் பிற்பட்டவை போலத் தெரிகிறது. தஞ்சாவூருக்குத் தெற்கே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல பெருங்கற்காலத் தொல்லியல் தலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை நெற்பயிர் செய்கைக்கு உகந்த இடங்களில் காணப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது (இந்திரபாலா, கா. 2006: 96).

     காவேரிக்கு வடக்கே ஓடும் நதிகளான பொன்னையாறு, பாலாறு ஆகியவை கர்நாடகத்து ஆதிப்பெருங்கற்காலத் தலங்களையும் தமிழ்நாட்டுத் தலங்களையும் நேரடியாக இணைக்க உதவின. இந்த இரு நதிகளாலும் வளம்படுத்தப்படும் தமிழ்நாட்டு நிலப்பகுதிகளில் கர்நாடகத்தில் காணப்படுவது போன்ற பல்வகைச் சவ அடக்கங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றை ஆய்வு செய்யும்போது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னிருந்து இந் நிலப் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்கும், குளநீர்ப்பாசன வளர்ச்சிக்கும், மக்கள் தொகை பெருகத் தொடங்கியமைக்கும் சான்றுகள் காணப்படுகின்றன (இந்திரபாலா, கா. 2006: 96).

வைகைச் சமவெளி  

     தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஓடும் நதிகளுள் வைகை ஒரு முக்கியமான நதியாகும். இந்நதிப் படுகைகளிலும் வைகைச் சமவெளியிலும் பெருங்கற்கால தொல்லியல் தலங்கள் பரவிக் காணப்படுகின்றன. பழனிமலைப் பகுதியிலிருந்து பாயும் இந்நதி வளம்படுத்தும் சமவெளியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர மையமாகிய மதுரை உன்னத நிலையில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் மிக முற்பட்ட பண்பாட்டு முன்னேற்றங்கள் காணப்பட்ட ஓர் இடம் வைகைச் சமவெளியாகும். இச் சமவெளியின் மேற்குப் பகுதியில் வரலாற்றிற்கு முற்பட்ட காலத் தொல்லியல் தலங்கள் காணப்படுகின்றன. இடைக்கற்கால மக்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதைக் காட்டும் வகையில் குறுங்கற் கருவிகள் பல இடங்களில் கிடைத்துள்ளன. இந்த இடைக்கற்காலத் தொல்லியல் தலங்களில் அடுத்து வரும் ஆதி இரும்புக் காலத்துச் சான்றுகள் காணப்படுவதால், ஆதி இரும்புக்காலப் பண்பாடு முன்னர் அங்கிருந்த இடைக்கால மக்கள் மத்தியில் பரவியது என ஊகிக்கலாம் (இந்திரபாலா, கா. 2006: 94).

     பழனிமலைப்பகுதியிலிருந்து மதுரை வரையுள்ள நிலப்பகுதியில் ஆங்காங்கே பெருங்கற் சவ அடக்கங்களும், கல் வட்டங்களும் காணப்படுகின்றன. மதுரைப் பகுதியில் பல ஆதிப் பெருங்கற்காலச் சவ அடக்கங்கள் நெருக்கமாகக் காணப்படுகின்றன. இவற்றைச் சான்றுகளாகக் கொண்டு, இத் தலங்களின் தொன்மையையும், ஒரு முக்கியமான நகர மையம் அங்கே எழுவதற்கு வழிகோலிய நாகரிக வளர்ச்சியையும், அது பின்னர் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகப் பரிணமித்ததையும் புரிந்து கொள்ள முடிகிறது.  

தாமிரபரணி – சிற்றாறு – வைப்பாற்றுப் படுகை நிலங்கள்  

     தமிழ்நாட்டின் தென்பகுதியில் காணப்படும் பெருங்கற்காலத் தொல்லியல் தலங்களை நோக்கினால் இப் பண்பாடு எவ்வழிகளால் தென்கிழக்கு நோக்கிப் பரவி இறுதியில் தாமிரபரணி, சிற்றாறு, வைப்பாறு ஆகியவற்றின் கழிமுகப் பகுதியை வந்தடைந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

     சிற்றாறு தமிழ்நாட்டுக்குள் பாயத் தொடங்கும் மேல்மலைப் பகுதியை நோக்கினால், இலஞ்சி மற்றும் குற்றாலம் ஆகிய இடங்களில் தாழி அடக்கங்கள் காணப்படுகின்றன. குற்றாலத்தில் தாழிகளுடன் கற்படுக்கைகளும் (cairns)     காணப்படுகின்றன. வைப்பாறு ஆரம்பமாகும் மேல் மலைப்பகுதியில் சிவகிரி, பனையூர், மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய இடங்களில் தாழி அடக்கங்கள் காணப்படுகின்றன. அகத்திய மலையின் அடிவாரத்தில், தாமிரபரணியின் மேல் பகுதியில், சிவசைலம் தாழி அடக்கங்கள் காணப்படும் ஒரு முக்கியமான தொல்லியல் தலமாக அமைகின்றது. தாமிரபரணி ஆறு தென்கிழக்கு நோக்கி பாம்பன் கரையை அடையும் வழியில் பிரசித்திபெற்ற ஆதிகாலத் தாழிப்புதையல் தொல்லியல் தலமாகிய ஆதிச்சநல்லூர் இருக்கின்றது. இத் தலமும் அருகாமையிலுள்ள பெரும்பாயூர் (Perumbair)  தலமும்  1870 களிலே முதன் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. தாமிரபரணியின் கழிமுகத்தை அண்டிய காயல்பட்டினம், கொற்கை ஆகிய இடங்களில் முக்கியமான சவ அடக்கங்கள் உள்ளன (இந்திரபாலா, கா. 2006: 94). இப்பகுதியிருந்த கொற்கை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்புமிகு துறையாகத் தூர வர்த்தகர்களுக்கு உதவியது. கொற்கையில் நடைபெற்ற அகழ்வுகளில் கண்டெடுத்த துறைமுக மரத்துண்டுகளிள் கதிரியக்க கார்பன் ஊ-14 ஆய்வுகள் கி.மு. 785 ம் ஆண்டிலேயே  கொற்கை ஒரு துறையாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. (assigned to 785 BCE by the Tata Institute of Fundamental Research, Mumbai).

பெருங்கற் பண்பாட்டுப் பரவலின் விளைபயன்கள்

     பொன்னையாறு, பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி ஆகிய பேராறுகளும், அவற்றின் கிளை நதிகளும் வளப்படுத்தும் கிழக்குச் சமவெளி நிலத்தில் ஆதிப் பெருங்கற்பண்பாட்டுத் தலங்கள் பரவலாக இருப்பதை நோக்கினால், புதிதாகப் பரவிக்கொண்டு சென்ற இப் பண்பாட்டிற்கும் குளநீர்ப்பாசனத்துடன் கூடிய நெற்பயிர்ச் செய்கைக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதை அவதானிக்கலாம். தாழிச் சவ அடக்கங்களில் ஈடுபட்ட மக்கள்தான் குளநீர்ப்பாசனத்தையும், நெற்செய்கையையும் அறிமுகப்படுத்திய மக்கள் என்பதை (முக்கியமாக அந்த அடக்கங்களோடு காணப்பட்ட நெற்களைக் கொண்டு) பல ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  

     வைகை – தாமிரபரணிப் பகுதியிலிருந்து பரவிய தென் குழுவினர் காவேரிச் சமவெளியின் தாழிச் சவ அடக்கக் குழுவுடன் கலந்து வடகிழக்கில் தென் ஆற்காடு – செங்கற்பட்டுப் பகுதியை அடைந்து குளநீர்ப்பாசனத்தோடு கூடிய நெற் பயிர்ச் செய்கையை பரவலாகத் தொடக்கி வைத்ததோடு, சிறு அளவிலான பண்டமாற்ற நடவடிக்கைகளுக்கு உகந்த கரையோரப் பகுதிகளில் வாழத் தொடங்கியிருக்கலாம். அத்தகைய பண்டமாற்றத் மையங்களில் ஒன்றாகவே காவேரிப்பட்டினம் தோன்றியிருக்க வேண்டும் (Seneviratne, S. 1984, 1985; இந்திரபாலா, கா. 2006: 96).        

உசாத்துணைகள்

  1. Agrawal, D.P., Kusumgar.S., Sarna, R.P., (1964): ‘Radio Dating of Archaeological Samples’ Current Science, No.2, JN.20, 1964, pp. 40-41.
  2. Agrawal, D.P, ‘The Copper Bronze Age in India’, Munshiram Manoharlal, New Delhi. 1971.
  3. Agrawal, D.P., (2001): ‘Prehistoric Copper Technology in India: A Review’ Metallurgy In India A Retrospective, ed. by Ramachandra Rao,P, Goswami,N.G, NML Golden Jubilee Commemorative Volume, India International Publisher, pp. 143-162.
  4. Allchin, Bridget & Allchin, Raymond  (1988): ‘The Rise of Civilization in India and Pakistan’, Cambridge University Press 1988.
  5. Allchin, F.R. (1995): The Archaeology of Early Historic South Asia – The emergence of Cities and States, Cambridge University Press, Cambridge.
  6. Badrinarayanan,S., Venkata Rao, D, Sasisekaran, B. (2005):  Report on Geo-Archaeological Investigations of Ancient Burial Site of Adichanallur, Tirunelveli District, TamilNadu, National Institute of Ocean Technology, Submitted to the Archaeological Survey of India, Chennai Circle. 2005.
  7. Chakrabarti, Dilip K. (2006): ‘The Oxfords Companion to Indian Archaeology, The Archaeological Foundation of Ancient India’, Oxford University press.
  8. Kennedy, Kennath A.R. (1986): ‘Hauntings at Adicanallur: An Anthropological Ghost Story’, edited by Jerome Jacobson, Studies in the Archaeology of India and Pakistan,  pp 257-296.
  9. Krishnamurthy, R. (2004): ‘The Pallava Coins’, Garnet Publishers, Chennai, pp, 168-175. Moorti, U.S. (1994): Megalithic Culture of South India, Ganga Kaveri Publishing House,Varanasi.
  10. Possehl, G.L. (1990): Scientific Dates for South Asian Archaeology, University Museum Asia Section1, University of Pennsylvania, Philadelphia.
  11. Possehl, G.L. (1994): Radiometric Dates for South Asian Archaeology, An Occasional Publication of the Asia Section; University Museum, University of Pennsylvania, Philadelphia.
  12. Rea, Alexander (1906): ‘Prehistoric Antiquities in Tinnevelly’, Archaeological Report, Archaeological Survey of India.  
  13. Rea, Alexander (1915): Catalogue of Prehistoric Antiquities of Adichanallur and Perumbiar, Govt. Press, Madras.
  14. Rea, Alexander (1998 reprint): ‘Catalogue of the Prehistoric Antiquities from Adichanallur and Perumbair’, Government Museum, Chennai.
  15. Senevitatne, S. (1984): The Archaeology of the Megalithic Black and Red Ware Complex in Sri Lanka, Ancient Ceylon 5: 237-307.
  16. Senevitatne, S. (1985): Social Base of Early Buddhism in South-East India and Sri Lanka (c.3rd Century B.C. – 3rd Century A.D.), Jawaharlal Nehru University, New Delhi: Ph.D. Thesis, Department of History.
  17. Srinivasan, Sharada (1998): ‘The use of Tin and Bronze in Prehistoric South Indian Metallurgy’, Journal of Metals, 50, 7: 44-47, 49.
  18. Srinivasan, Sharada (2002): ‘Chronology and Metal Sources of South Indian Images: Some Insights and Scientific Analysis’, Archaeology as History in Early South Asia, ed. by.Himanshu Prabha Ray & Carla, M. Sinopoli, Indian Council of Historical Research, Aryan Books International, New Delhi, pp. 219-256.
  19. Sasisekaran, B., Sundararajan, S., Venkata Rao, D., Ragunatha Rao, B.Badrinarayanan, S. & Rajavel, S (2010): Adichanallur: A Prehistoric Mining Site, Indian Journal of History of Sciences, 45.3 (2010): 369-394.
  20. Subramanian, N. (1980): Sangam Polity: The Administration and Social life of the Sangam Tamils, Ennes Publications, Madurai.
  21. Subramanian, T.S. (1984): Urn Burials at Adichanallur, The Hindu 26 May 1984.
  22. Subramanian, T.S. (2005): Iron Age habitational site found at Adichanallur, The Hindu, 03 April 2005.
  23. Subramanian, T.S. (2012): Urn burial site discovered near Kancheepuram, The Hindu 04 September 2012 (2012-04-09)
  24. இந்திரபாலா, கா (2006): இலங்கையில் தமிழர், குமரன் புத்தக இல்லம், சென்னை.
  25. ராஜன், கா (2010): தொல்லியல் நோக்கில் சங்ககாலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 

ஒலிவடிவில் கேட்க

16068 பார்வைகள்

About the Author

சிவ தியாகராஜா

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)