பயனின்றி முடிந்த சாத்வீகப் போராட்டம்
Arts
6 நிமிட வாசிப்பு

பயனின்றி முடிந்த சாத்வீகப் போராட்டம்

May 23, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவழி தமிழ் மக்களுக்கு எதிரான பிரஜாவுரிமைப் பறிப்புச் சட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படாமல்  சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பிக்க இலங்கை இந்திய காங்கிரஸ் தீர்மானித்தது  தொடர்பில் அரசாங்கம் உள்ளூர மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும், இலங்கையின் தலை நகரமான கொழும்பு மாநகரத்தின் சுமுகமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதை அரசாங்கத்தால் கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை.  பொலிசாரையும் காடையர்களையும்  குதிரைப் படையையும் ஏவிவிட்டு,  என்னதான் தடியடிப் பிரயோகம் நடத்தினாலும் அந்தப் பெரும் கூட்டத்தினரை பொலிசாரால் கலைக்க முடியவில்லை. ஆதலினால் அந்தக் கூட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய தலைவர்கள் மீது அவர்கள் இலக்கு வைத்தார்கள்.  தலைவர்களை அங்கிருந்து அகற்றி விட்டால் சத்தியாக்கிரகிகள் கலைந்து போய் விடுவார்கள் என்பது அவர்களது திட்டமாக அமைந்தது .

அதன் பிரகாரம் பொலிஸ் மோட்டார் வண்டிகளை வரவழைத்து கூட்டத்தின் தனிநாயகமாக அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக பலாத்காரமாக தூக்கிச் சென்று  தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வண்டிகளில் அடைத்தார்கள். தலைவர்களைக் கடத்துவதற்கு எதிராக தொண்டர்கள் மத்தியிலிருந்து பெரும் கோஷம் எழுந்த போதும் அதனைப் பொருட்படுத்தாத பொலிசார் விரைந்து மோட்டார் வண்டிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். தலைவர்களை கடத்திக் கொண்டு போய் என்ன செய்யப்போகிறார்கள் என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் பீதியாகப் பரவியபோதும்  அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத  கையறு நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மறுபுறத்தில் பொலிஸ் மோட்டார் வண்டியில் ஏற்றப்பட்ட தொண்டமான் உள்ளடங்கலான  தலைவர்களை ஏற்றிக்கொண்டு மோட்டார் வாகனம் கொழும்பு நகரத்திற்கு வெளியே காலி வீதியில் விரைந்து சென்றது . அவர்களை உடனடியாகத் திரும்பி வர முடியாத தொலை தூரத்துக்கு கொண்டுபோய்  விட்டுவிட்டு வந்து விடுமாறு மேலிடத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர்கள் அனைவரையும் காலிக்கு செல்லும் வழியில் பாணந்துறைக்கப்பால் கொண்டு சென்று ஆளரவமற்ற பொட்டல் வெளியில் விட்டு விட்டு வந்துவிட்டார்கள். உண்மையில் தாங்கள் எந்த இடத்தில் விடப்பட்டிருக்கிறோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. இவ்விதம் தமிழர்களே வசிக்காத ஒரு ஊரில் முற்றிலும் சிங்களவர்கள் நிறைந்த இடத்தில் அவர்களைக் கொண்டு போய் விட்டமை அவர்களுக்கு அச்சம் தருவதாக இருந்தது. அவ்வழியாகச் சென்ற மோட்டார் வண்டிகளும் பேருந்துகளும் அவர்களை ஏற்றிச் செல்லத் துணியவில்லை .  இதனால் அவர்கள் கால்நடையாகவே கொழும்புக்குச் செல்ல நேரிட்டது.

எனினும் அவர்கள் சத்தியாக் கிரகங்கள் செய்வதைக் கைவிடவில்லை. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் தொடர்ந்து அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ச்சியான அந்த சத்தியாகிரகத்தினதும் சாத்வீக போராட்டத்தினதும் நடவடிக்கைகள் 100 ஆவது நாளை எட்டியபோது 1952 ஆம் ஆண்டு  ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு மாநகர சபைக்கு அருகாமையில் பாரிய கூட்டம் ஒன்றை இலங்கை இந்திய காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற அங்கத்தவர்கள்மற்றும்  இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். அவ்விதம் உரை நிகழ்த்துகையில்   ஒட்டுமொத்தமாக பத்து லட்சம் மக்களைக் கொண்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் பிரஜா உரிமையை பறித்தது பற்றியும் அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது அரசாங்கத்தாலும் பொலிசாராலும் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான அடாவடித்தனங்கள் தொடர்பிலும்  காரசாரமாக  குறிப்பிடப்பட்டு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் கருத்துத் தெரிவித்த கொல்வின் ஆர். டி. சில்வா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக  தெரிவித்ததுடன் இது வெறுமனே இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் பிரச்சினை அல்லவென்றும் இதுதொடர்பில் இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும் ஒன்று திரட்டிப் போராட வேண்டிய  தேவை ஒன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். பிலிப் குணவர்த்தன அவர்கள் உரையாற்றும் போது,  இந்தச் செயல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதியானதும் மனிதாபிமானமற்ற செயலுமாகும் என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.  இவர்களைத் தவிர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பீட்டர் கெனமன்,  இலங்கை பெடரல் கட்சியைச் சேர்ந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம்,  மலையகத்தொழிற்சங்கத் தலைவர்களான தொண்டைமான், ஏ. அசிஸ் ஆகியோர்களும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

மேற்படி சட்டத்திற்கு எதிராகவும் இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்களுக்கு சார்பாகவும் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் கம்பளை  “பிரபுத்த பிக்கு மண்டலய” என்ற அமைப்பைச் சேர்ந்த வண. கே. இந்தசார தேரர். இவர் தன்னுடன் இருபத்தி ஒன்பது பிக்குகளை ஆதரவாக சேர்த்துக்கொண்டு இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் மனு ஒன்றைக் கையளித்தார். அவரது கோரிக்கை மனுவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: –

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டத்தினரையும் வெறுமனே  தொழிலாளர்கள் என்று மட்டும் பார்க்க முடியாது. அவர்கள் இந்த நாட்டின் கைத்தொழில் வளர்ச்சிக்கும் விவசாய உற்பத்தி அபிவிருத்திகளுக்கும் பாரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளனர். நீண்ட காலமாகவே அவர்கள் உழைப்பைப் பெற்று அதில் பயனடைந்த நாடும் இந்நாட்டு மக்களும் இன்று அவர்களை அன்னியர் என்று நாமகரணம் சூட்டி வேண்டாப் பொருளாக்கி ஒரு நொடியில் தூக்கி எறிந்து விடுவது அநீதியும் நன்றிகெட்ட செயலுமாகும். அவர்கள் மட்டும் இல்லாது இருந்தால் இந்த நாட்டில் பொருளாதாரம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. ஆதலினால் இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு அவர்கள் கோருகின்ற அவர்களின் அடிப்படை உரிமையான பிரஜாவுரிமையை மீண்டும் அவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.”

இத்தகைய  ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கையில் வசித்த இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் பறிக்கப்பட்ட பிரஜாவுரிமையை மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசாங்கத்தை நோக்கிய நெருக்குதல்கள் அதிகரித்திருந்தன. என்றபோதும் அரசாங்கம் ஒருபோதும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. இலங்கை இந்திய காங்கிரசின் தொடர் உண்ணாவிரத சாத்வீகப் போராட்டம் 140  நாட்களை எட்டிய நிலையில் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தீர்மானிப்பதற்காக இலங்கை இந்திய காங்கிரஸ்  ஹட்டனில் மாநாடு ஒன்றை 1952 செப்ரெம்பர் மாதம் கூடியது. அந்த மாநாட்டின் முக்கியமான தீர்மானமாக தாம் இதுவரை நடத்தி வந்த சக்தியாகிரகப் சாத்வீகப் போராட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7761 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)