பேர்சிவல் ஆக்லண்ட் டைக் “வடக்கின் ராஜா”
Arts
27 நிமிட வாசிப்பு

பேர்சிவல் ஆக்லண்ட் டைக் “வடக்கின் ராஜா”

May 25, 2023 | Ezhuna

ஆங்கிலத்தில் : பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை

இலங்கையின் வட மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரித்தானியாவின் அயலிடப் பிரதிநிதி  (PROCONSUL) என்ற பதவியில் (பின்னர் அரசாங்க அதிபர் பதவி) பேர்சிவல் ஆக்லண்ட் டைக் பணியாற்றினார். இவரே வடக்கின் ராஜா என்ற புகழ் பெற்ற மனிதர் (RAJA OF THE NORTH) யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடபகுதியிலும் தமிழர்களிடையே டைக்  மரபுக் கதை நாயகன் போன்று வாய்மொழி மரபுகளால் வியந்து போற்றப்படும் ஒருவராக  இருந்துள்ளார். தலைமுறை தலைமுறையாக யாழ்ப்பாணத்தவர் மத்தியில் டைக் பற்றிய கதைகள் பரவலாகப்  பேசப்பட்டுவந்துள்ளன. இளைய தலைமுறையினர் அவர் பற்றிய துணுக்குகளையும் சாசகச் செயல்களையும் முதியோர் வாய் மூலமாகக் கேட்டு அறிந்து வைத்திருந்தனர். டைக் 1867 ஆம் ஆண்டு காலமானார். நாட்டார் வழக்காறாக அவரது பெயரும், புகழும் வாழ்க்கைச் சம்பவத்துணுக்குகளும், கதைகளும் பேசப்பட்டு சாதாரண மக்கள்  மனதில் பதிந்திருந்தன. ஆயினும் அண்மைக்காலத்து வளர்ச்சிகளும் மாற்றங்களும் பழைய கதைகளை மக்களின் நினைவில் இருந்து மங்கி மறையச் செய்துவிட்டன.  கடந்து போன ஒரு காலத்தின் கவர்ச்சி மிகு வீர புருஷனின் தனிப்பட்ட வரலாறு பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களைப் பெறுவது இப்போது கடினமாகி விட்டது.  வடக்கில்  பணியாற்றிய காலத்தில் தன் ஆட்சிக்கு கீழ் இருந்த மக்களில் இருந்து விலகித் தனிமையில் வாழ்ந்து தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த டைக்,  பிறர் அணுகுவதற்கு அஞ்சிய ஒரு மனிதராக இருந்தார். அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பல ஆவணப்பதிவுகளும் சமகாலத்தவர்களான உத்தியோகத்தர்கள் விட்டுச்சென்ற குறிப்புக்களும் உதவியாக உள்ளன. மிக குறைந்தளவான தகவல்கள் மூலம் டைக் பற்றி சுவாரஸ்யமான ஒரு சித்திரம் எமக்குக் கிடைக்கின்றது.

acland-dyke

பேர்சிவல் ஆக்லண்ட் டைக் 1805 ஆம் ஆண்டில் பிறந்தார். இங்கிலாந்து நாட்டின் டெவன் என்ற பகுதியில்  வாழ்ந்த குடும்பம் ஒன்றில் உதித்தார். டெவன் பகுதி மக்கள் கடலோடிகள். டைக்கின் தந்தை சேர் தோமஸ்  ஆக்லண்ட் SOMERSETSHIR என்ற இடத்தின் பிரபுவான தோமஸ் டைக் என்பவரின் மகளை மணம்புரிந்தார். 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அத்திருமணத்தின் பயனாக உதித்தவரே பேர்சிவல் ஆக்லண்ட் டைக். டைக் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை யாழ்ப்பாண மாவட்டத்தின்  உயரதிகாரியாகப் பணி செய்து கழித்ததோடு  இப்பகுதியிலேயே வாழ்ந்து மறைந்தார்.

டைக் பிரித்தானியக் கடற்படையில் இணைந்து தன் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் 1882 மே மாதம் 15 ஆம் திகதி இலங்கைச் சிவில் சேவைக்கு (C. C. S) நியமிக்கப்பட்டார். அவர் சிவில் சேவையில் இணைந்தமை சுவையான ஒரு கதையாகும். டைக் இளவயதினராக இருந்தபோது பிரித்தானியக் கடற்படையின் கப்பலில் ஒரு பணியாளராகக் கடமையாற்றினார். ஒரு தடவை கப்பல் இலங்கை நோக்கிப் பயணித்த போது அக்கப்பலில்  பணி செய்த மேல்நிலைப்பதவியில் இருந்த ஹோக்கின்ஸ் என்ற பெண்மணி டைக்கிற்கு உதவியும் ஆறுதலும் வழங்கினார். பின்னாளில் யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராகப் பதவி வகித்த துவைனம் அவர்களின் தாயாரே ஹோக்கின்ஸ் அம்மையார். இலங்கைச் சிவில்சேவையில் இணைந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி டைக்கிற்கு வழிகாட்டியவர் ஹோக்கின்ஸ் ஆவார்.

எட்வார்ட் பார்ண்ஸ் (1824-1831) தேசாதிபதியாக இருந்த காலத்தில் டைக், காலனிய அரசின்  அதிகாரியாகப் பதவிஏற்றார். 1824 ஜனவரி 18 ஆம் திகதி அவர் கொழும்பில் இருந்த குடியேற்ற நாட்டுச்  காரியதரிசி அலுவலகத்தில் துணை உதவியாளராகப் பொறுப்பேற்றார். 1824 மார்ச் 1 ஆம் திகதி அவர் யாழ்ப்பாணத்தின் உதவிக் கலக்டராக நியமனம் பெற்றார்.  1825 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அவர் அங்கு நிதி வதிவிட மஜிஸ்திரேட் பதவிக்கும் நியமிக்கப்பட்டு 1827 பெப்ரவரி வரை கடமையாற்றினார். 1829 ஒக்டோபரில் டைக் திருகோணமலையின் மாகாண மஜித்திரேட் ஆகவும்,  கலக்டர் ஆகவும் பணியாற்றினார். அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் கலக்டராக மீண்டும் யாழ்ப்பாணம் சென்றார். டைக்கின் வடஇலங்கையின் நிர்வாக அதிபதி என்ற பதவியின் சிறப்புமிகு வரலாறு இவ்வாறு ஆரம்பித்தது. டைக் 1867 இல் இறக்கும் வரை யாழ்ப்பாணத்தில்  கடமையாற்றினார் .

1843 ஜனவரி மாதம் டைக் கணக்காளர் நாயகம் பதவியை ஏற்றுக் கொழும்பு செல்லுமாறு வேண்டப்பட்டார். இவரது உத்தியோகத்துறை நண்பரான பிலிப் அன்ஸ்றூதர் (PHILIP ANSTRUTHER) என்பவர் அப் பதவியை ஏற்குமாறு டைக்கைத் தூண்டினார். அன்ஸ்றூதர் டைக்கின் திறமைகளை மதித்துப் போற்றிய ஒருவர். ஆயினும் அப்பதவியில் டைக் நாட்டம் கொண்டவராக இருக்கவில்லை. கணக்காளர் நாயகமாக கொழும்பில் சட்டசபை,  நிர்வாக சபை என்ற இரண்டிலும் சேவையாற்றும் மதிப்பிற்குரிய உயர்பதவியில் அமர்த்தப்பட்ட டைக் அப்பதவியில் தொடர விருப்பம் கொள்ளவில்லை. அவ்வாண்டு முடிவதற்குள்ளேயே திரும்பவும் யாழ்ப்பாண கச்சேரிக்கு வந்து வடமாகாணத்தின் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஆகவே அவர் கணக்காளர் நாயகமாகவும், வருமானக்கட்டுப்பாட்டாளர் ஆகவும் 1843 பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் குறுகிய காலம் மட்டும் கடமையாற்றினார். ஆயினும் இக்குறுகிய காலப்பகுதியிலும் அவர் மிகத் திறமையாகப் பணியாற்றினார்.

இலங்கையின் வடபகுதியில் டைக் 4 ஆண்டுகள் உதவி கலக்டர் பதவியிலும், 34 ஆண்டுகள் அரசாங்க அதிபர் பதவியிலும் கடமையாற்றினார்.  யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள கோப்பாய் என்ற  இடத்திற்கு பணிநிமித்தம் சென்று தங்கியிருந்த போது 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதி அவர் மரணமடைந்தார்.

1795 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக் காலம் முதல் டைக் யாழ்ப்பாணத்திற்கு 1824 இல் வரும் வரை அங்கு நான்கு நிர்வாக அதிகாரிகள் கடமையாற்றினார்கள். இதைவிட 12 கலக்டர்களும் அவ்விடைக்காலத்தில் பணியாற்றினர். 1867 இல் டைக் காலமானார். ஒரு மாகாணத்தில் இவ்வாறு நீண்டகாலம் ஒரு நிர்வாக அதிகாரி பணியாற்றுவதென்பது பிரித்தானிய காலனித்துவ நிர்வாக  வரலாற்றில் தனித்துவம் மிக்க நிகழ்வு என்றே கூறலாம். டைக்கின் தொடக்க காலப் பணிகளையும் சேர்த்து நோக்கும் போது 40 ஆண்டு காலம் இலங்கையில்  அவர் கடமையாற்றினார்.

1867 இல் டைக் திடீரென மரணமானார், அவரின் மரணத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருடை உடல்நிலை நலம் பற்றிய கவலைதரும் செய்திகள் பல முன்னரே வெளிவந்தன. ஆயினும் அவர் வேலைகளை ஒழுங்காகக் கவனித்துக்கொண்டு வந்தார். ஆதலால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றே பலர் நம்பினர். ஆனால் டைக் தனக்கு வரக்கூடிய ஆபத்துப் பற்றிய உள்ளுணர்வு ஒன்றினால் தூண்டப்பட்டிருக்கவேண்டும். தனது முதன்மை உதவியாளராக இருந்தவரும் மன்னாரில் கடமையாற்றியவருமான வில்லியம் குநொவற்ரொன்  துவைனத்தை அவர் அழைத்துத் தமது நோய் மோசமாகிப் போனால் தனக்கு உதவியளிப்பதற்குத் தயாராக இருக்கும்படி கூறிவைத்தார். துவைனம் 1869 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் டைக்கின் இடத்திற்கு நியமிக்கப்பட்டார். ஒக்டோபர் 1967 முதல் செப்டெம்பர் 1969 வரையான இடைக்காலத்தில் H.S.O ரஸ்ஸல் என்பவர் இப் பதவியை வகித்தார். 1869 முதல் 1895 வரை துவைனம் வடமாகாணத்தின் அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார். துவைனமும் டைக் போன்றே நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றினார். இதுவும் தனித்துவமான ஒரு விடயம் ஆகும். வட இலங்கையின் தமிழர்கள் துவைனம் பற்றியும் பல கதைகளை ஞாபகத்தில் வைத்திருந்து கூறலாயினர்.

கொழும்பு சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் டைக்கின் நினைவாக நினைவுக் கல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கூட்டாளியான சிவில் சேவை உத்தியோகத்தர் ஒருவர் இந்நினைவுக் கல்லை அங்கே நிறுவினார். சிவில் சேவை என்ற உயர் உத்தியோகத்தர்களின் குழுவில் ஒருவராக 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்புடன் பணியாற்றிய  டைக் அக்குழுவினரிடம்  பெற்றிருந்த மதிப்பை இது எடுத்துக்காட்டுகின்றது. இந்த நீண்டகால சேவையில் டைக் பல தேசாதிபதிகளின் கீழ் வேலை செய்து, அவர்களின் மதிப்பைப் பெற்றார். பொதுச்சேவையில் அவர் கொண்டிருந்த அளவற்ற பற்று அவரது நிர்வாகத்திறன், தன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களின் நலன்கள் பற்றி அவர் கொண்டிருந்த அக்கறை என்பன அவருக்கு மதிப்பையும் புகழையும் தேடிக்கொடுத்தன; டைக்கின் உடல் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் சென். ஜோன்ஸ் சவக்காலையில் புதைக்கப்பட்டது. டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கச்சேரி, நீதிமன்றங்கள், சுங்க அலுவலகம் போன்ற ஏனைய அலுவலகங்கள் என்பன 5 நாட்களுக்கு மூடப்பட்டு இருந்தன. இவ்வாறு நீண்ட காலம் விடுமுறை வழங்கப்பட்டமை வழமைக்கு மாறான ஒரு நிகழ்வாகும்.

டைக்கைப்பற்றி புகழாரம் சூட்டும் ஒருவர் பின்வருமாறு எழுதினார். “அவரை மக்கள் அன்போடு நினைவுகொள்வார்கள், சுதேசிகளை அவர் பக்கச்சார்பில்லாமலும், நீதியாகவும் நடத்தினார்.”

டைக் நீண்டகாலம் வடபகுதியில் சேவையாற்றினார் என்பது  முக்கியமானதன்று.  அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரின் சேவையின் பண்புநலன் சிறப்புடையது என்பதே அவருக்குப் புகழைத்தந்தது. அவரை வடக்கின் ராஜா என்றே கூறலாம். மக்களும் வடக்குப் பகுதியின் அரசனாகவே அவரைப் போற்றினர் என்றும் மேற்குறித்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். படிப்பறிவற்ற சனங்களுக்கு டைக் “கண்கண்ட தெய்வம்” போன்றே தோன்றினார். அக்காலத்தில் மக்கள் டைக்கின் பாதுகாப்பில் தாம் அச்சமின்றி வாழலாம் என நம்பினர். அவர் மீது விருப்பம் கொண்டனர். சட்டம் ஒழுங்கில் கண்டிப்பான மனிதரான டைக்கின் சில செயல்கள் பலருக்கு அதிர்ச்சியை அளித்தன. டைக்கை கண்டு மக்கள் அஞ்சினர் “இவரைப்போன்று அச்சத்தை ஊட்டிய அரசாங்க அதிபர் வேறு எவரும் இருந்திருக்க முடியாது” மேற்குறித்த மதிப்பீடு சரியானதே. ஏனெனில் டைக்கிற்கு பின்னர் துவைனம் காலத்தில் யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் மாற்றமடைந்திருந்தன. சட்டசபையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் இருந்தார். அவர் நியமன உறுப்பினராக சட்டசபையில் பதவிவகித்த போதும் அவரின் அதிகாரங்கள் மெல்ல மெல்லக் கூடிச்சென்றன. அரசாங்க அதிபரின் அதிகாரம் குறிப்பிடத்தக்க அளவு  குறைந்தது. யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் தோன்றியதும் மக்கள் கல்வியறிவு  பெறத் தொடங்கியதும், அரசாங்க அதிபரின் அதிகாரம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாயிற்று. கல்வி அறிவு பெருகியதால் மக்கள் தமது உரிமைகளைப் பற்றி அறிந்து கொண்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக போக்குவரத்தும் தொடர்பாடலும் விருத்தியடைந்ததால் வடமாகாணம் பிற இடங்களோடு தொடர்பில்லாது தனிமைப்பட்டதாக இருந்த நிலை மாறியது. இவற்றின் பயனாக டைக்கிற்கு பின்னர் அரசாங்க அதிபராக பதவிவகித்த துவைனம் மீது கட்டுப்பாடுகள் இருந்தன. அவரால் டைக் போன்று மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருந்து விடுபட்டுச் செயற்பட முடியவில்லை. இதனால் துவைனம் அணுகமுடியாதவராக டைக் போன்று தூரத்தில் வைக்கப்பட்டு அச்சத்தோடு பார்க்கப்பட்ட ஒருவராக இருக்க முடியவில்லை.

 டைக்கின் மறைவின் பின்னர் 1906 இல் கூட “அரசாங்கம் என்றால் அக்காலத்தில் திருவாளர் டைக் என்றே கருதப்பட்டது” என்று ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டார். “டைக்கை காணும்போது துணிச்சல் மிகுந்த ஒரு இளைஞன் கூடத் திகைத்து போய் அடங்கி ஒடுங்கிப்போய் நிற்பான்”. டைக் என்ற மகாவீரன் ஒரு அரசனைப் போலவே பவனி வருவார். யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு அவர் சென்ற போது, அவரது வருகை அச்சத்தோடு நோக்கப்பட்டது. ஆனால் அவர் வந்து போனதை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்திருந்தனர். டைக் கடுமையான போக்கும் நடத்தையும் கொண்டவராய் இருந்த போதும் வடபகுதியின் மக்கள் டைக்கை தமது நண்பனாகப் போற்றினர். இதற்குக் காரணம் டைக் மக்களின் நலன்களில் காட்டிய அக்கறையும், மக்களது நலன்களுக்காக அவர் பிறரோடு எதிர்த்து நின்றமையுமேயாகும். டைக் யாழ்ப்பாணத்தில் சாதாரண மக்கள் மத்தியிலும் பிரபல்யம் பெற்ற ஒருவராக இருந்தார் என்பதை அங்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சிவில் சேவை உத்தியோகத்தராய் பணியாற்றிய லியனாட் வூல்வ் (LEONARD WOLF) எழுதியுள்ள குறிப்புக்கள் உணர்த்துகின்றன. “வடக்கின் ராஜா” (RAJA of the North) என்று அழைக்கப்பட்ட அரசாங்க அதிபர் என்று லியனாட் வூல்வ் குறிப்பிட்டார். நீண்ட காலம் பணியாற்றிய டைக் ஒரு சர்வாதிகாரி போன்றே நடந்தார் என்பதை லியனாட் வூல்வின் கூற்று எடுத்துக் காட்டுகின்றது. இலங்கையில் வாழ்ந்த 40 ஆண்டு காலத்தில் டைக் ஒரே ஒரு  தடவை மட்டும் தனது பிறந்த நாடான இங்கிலாந்துக்கு விடுப்பில் சென்று திரும்பினார்.

இங்கிலாந்து சென்ற அவர் விக்டோரியா என்ற இடத்தில் ரெயில் வண்டியில் இருந்து இறங்கித் தமது ஊருக்குப் போவதற்கு ஒரு மோட்டார் வண்டியைப் பிடித்தார். அவ் வண்டியின் சாரதி டைக்குடன் கடுமையாகவும் குஷியாகவும் நடந்துகொண்டானாம். அதனால் மிகுந்த கோபமடைந்த டைக் உடனடியாகவே யாழ்ப்பாணம் திரும்பினாராம். அதற்குப் பின்னர் அவர் தம் சொந்த ஊரான இங்கிலாந்திற்கு ஒரு போதும் திரும்பிப் போவதற்கு யோசிக்கவே இல்லை. இக்கதையை லியனாட் வூல்வ் தனது குறிப்பில் சொல்லியிருக்கின்றார். இக்கதை உண்மைதானா என்று ஐயத்தை எழுப்புவதாக இருந்தாலும் வடமாகாணத்தில் டைக் காலத்தின் நிர்வாகத்தின் இயல்பை எடுத்துக்காட்டக்கூடிய சிறந்த உதாரணமாக இக் கதை உள்ளது. பிரித்தானிய அதிகாரம் டைக்கின் பெயரோடு இணைந்திருந்தது, டைக் என்றால் அது பிரித்தானிய அதிகாரத்தைக் குறிப்பிடுவதாக இருந்தது. அவர் சர்வதிகாரம் படைத்தவர் போன்று செயல்பட்டார். அவரது செயல்களைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கு யாரும் துணியவில்லை. அவரிற்கு எதிர்ப்பும் இருக்கவில்லை. டைக் வடக்கு மக்களின் மனதில் ஆழமான பதிவுகளை விட்டுச் சென்றார்.

டைக் வடக்கின் மாவட்டங்களிற்கு உத்தியோக முறைச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கு எல்லையில் உள்ள காட்டின் ஊடாக பயணிப்பதுண்டு. அப்போது கிழக்கு நாடுகளின் ராஜாக்கள் போன்றே அவர் பயணிப்பார். குதிரைகள், எருதுகள் பூட்டிய வண்டிகள், பல்லக்குகள் என்பன  அவருடன் அணிவகுத்துச் செல்லும். கூடாரமடித்துத் தங்குவதற்குரிய கூடாரங்களும், பெட்டிபடுக்கைகளும் கூலியாட்களால் சுமந்து செல்லப்படும். சமையற்காரர்கள், சேவகர்கள், கூலிகள், இருட்டின் போது தீப்பந்தங்களைப் பிடித்துச் செல்வோர், பரிசாரகர்கள், வண்டிக்காரர்கள் என்று ஒரு பெரும் பட்டாளம் அவருடன் செல்லும். பின்னாளில்  நீதிபதியாக இருந்த யோசப் கிரெனியர் என்பவர் டைக்கை கண்டிருக்கின்றார். டைக் “வடக்கின் ராஜா” என்றே அழைக்கப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார். கிரெனியர்  யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது தாம் தமது கண்களால் கண்டதைக் குறிப்பிட்டிருக்கின்றார். ‘டைக் ஒரு ஆங்கிலக் கனவானின் தோற்றத்தை உடையவர்; அவர் உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை ஒவ்வொரு அங்குலமும் உயர்குல பிரபுவாகவே காட்சி தந்தார்’ என்றும் கிரெனியர் வருணிக்கின்றார். டைக்கைக் கண்டதும் யாழ்ப்பாணத்தில் பறங்கியர் இனத்து இளைஞர்கள் தமது தொப்பியைத் தலையில் இருந்து கழற்றி மரியாதை செலுத்துவர். அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் டைக் தலையை அசைப்பதோடு அன்போடு புன்னகை செய்வார் என்றும் கிரெனியர் எழுதுகின்றார். யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபர் என்ற முறையில் டைக் அப்பகுதியின் மீது இறுக்கமான பிடியை வைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர்களாக இருந்தவர்களில் டைக்கிற்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்று கிரெனியர் குறிப்பிடுகின்றார்.

தமது வியாபார, தொழில் அலுவல்கள் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்ற ஐரோப்பியத் தோட்ட முதலாளிகளும், தரகர்களும்  டைக்கின் அகம்பாவமும், அலட்சியமும் மிக்க நடத்தையைப் பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். அவர்கள் அப்படி முறையிட்டதற்குப் போதிய காரணங்கள் இருந்தன என்பதற்கான சான்றுகள் சில இருக்கின்றன. தேவையில்லாமல் தலையிடுபவர்களைத்  தூரத்தே வைக்க வேண்டும் என்ற கொள்கையில் டைக்கிற்கு நம்பிக்கை இருந்துள்ளது. ஐரோப்பியர்களான இக் கனவான்கள் சிலரது நடத்தை காரணமாக டைக் இவ்வாறாக அவர்களை ஒதுக்கியதில் தவறில்லை என்றே கூறவேண்டும். ஆயினும் காலப்போக்கில் டைக்கில் மாற்றம் ஏற்பட்டது. அவர் சாதுவான மனிதர் போன்று பழகவும் ஆரம்பித்தார். தோட்டமுதலாளிகள், வர்த்தகர்கள் ஆகியோரோடு பின்னர் இணக்கமாக நடந்துகொண்டார்.  அவர்களும் டைக் உண்மையானவர், மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட ஒரு உத்தியோகத்தர் என்பதைக் கண்டு அவரை மதித்தனர். அவருடைய குணஇயல்பு வெளியார் மீது அகங்காரத்தைக்  காட்டும் ஒருவராக அவரை மாற்றியது. கொழும்பில் இருந்த உயர்அதிகாரிகளிடம் கூட அவர் தன் சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து நடந்தது கிடையாது. மாகாணம் ஒன்றின் அரச பிரதிநிதி என்ற முறையில் தனது முடிவுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் போதெல்லாம் அவர் விட்டுக்கொடுக்காமல் தனது தரத்து உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டார்.

அன்ஸ்ரூதர் கொழும்பில் குடியேற்ற நாட்டுச் செயலாளர் பதவியில் இருந்து நீங்கியபோது அப்பதவியை ஏற்றுக்கொள்வதற்கு டைக் மறுப்புத்  தெரிவித்தார். வடபகுதி மக்களின் மீது அவர் கொண்டிருந்த பற்றுதலும் அக்கறையும் அவர் அப் பதவியை  ஏற்கமறுத்ததற்கான காரணமாகும். அக்காலத்தில் ஒரு சிவில் சேவை உத்தியோகத்தர் அடையக்கூடிய உயர்ந்த பதவியை அவர் நிராகரித்தார். பதவி உயர்வுகளை விடாப்பிடியாக  மறுக்கும் இயல்பு அவரிடம்  காணப்பட்டது. இதனால் யாவரதும் பெரு விருப்புக்குரிய பதவிகளையும் அப்பதவிகளால் கிடைக்கக்கூடிய சலுகைகளையும், அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளலாமல் டைக் ஒதுங்கிக்கொண்டார். லண்டன் மாநகரில் டவுனிங் வீதியில் அமைந்திருந்த தலைமை அலுவலகத்தினர் டைக் மீது நல்ல மதிப்பை வைத்திருந்தனர். ஆகையால் அவர் காலனியின் அதிகாரப்படிநிலைகளில் மிகஉயர்ந்த இடங்களுக்கே சென்றிருக்கலாம். டைக்கின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்ச்சி ஆகிய குணங்கள் அவரை அக்காலத்தின் சகபாடிகளில் இருந்து வேறுபடுத்திக்காட்டியது.

டைக்கிற்கு நண்பர்கள் என்று கூறக்கூடியவர்கள் சிலரே இருந்தனர். அவர்களுள் அவரை நன்கு அறிந்தவர்களுள் அன்ஸ்றூதர் முதன்மையானவர், டைக் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய தகுதியைப் பெற்றவர் என்று அன்ஸ்றூதர் கருதினார். அவரது உத்தியோகக் கூட்டாளிகளும் டைக்கின் தொலைநோக்குச் சிந்தனை, ஆற்றல் தர்க்கமுறையில் ஆராயும் திறன், திறனாய்ந்து மதிப்பிடுவதில் முதிர்ச்சி என்பவற்றை அறிந்து வைத்திருந்தனர். அவர் காலனிய அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு ஏற்ற தகுதியுடையவர் என்றும் கருதினார். டைக் மட்டும் தன்னைப் பற்றி அளவுக்கு மீறிய மதிப்பை வைத்திருக்கவில்லைப் போலும், அல்லது அவர் வடபகுதி மக்கள் மீது கொண்டிருந்த பற்றுதல் காரணமாகத்தான் அன்ஸ்ரூதரின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவதை ஏற்க மறுத்தார். அன்ஸ்றூதர் பன்னிரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த பின் விட்டுச்சென்ற பதவி வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுவதைத் தவிர்த்து டைக் வடக்கின் ராஜாவாகவே தொடர்ந்து இருந்தார். ஏறக்குறைய முழு வாழ்க்கையையுமே வட பகுதியில் உத்தியோகப் பணியில் கழித்த டைக், அப்பகுதியின் நலன்களை நன்கு உணர்ந்தவராக அவற்றை நிறைவேற்றுவதற்காக உழைத்தார். அக்காலத்தில் தொலைவிடமான ஒருபகுதியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதை விருப்போடு அவர் தேர்ந்து கொண்டார். சம்பள உயர்வுடன் கூடிய ஊக்குவிப்புக்கள் எதனாலும் அவரைக் கவர முடியவில்லை. அதிகாரத்தையும், சலுகைகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.

டைக் ஒரேயொரு தடவை இங்கிலாந்திற்குச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து உடல்நலத்தைப் பேணவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் விடுப்பில் சென்றார். ஆனால் தனது விடுப்புக் காலம் முடிவதற்கு முன்னரே அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தார். காலனியப் பதிவேடுகளில் டைக்கின் இங்கிலாந்துப் பயணம் பற்றி நகைச்சுவையான குறிப்புகள் உள்ளன. தன் சொந்த ஊரில் இருந்தே டைக் அந்நியப்பட்டுப் போய்விட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1860 ஒக்டோபர் மாதம் டைக் விடுப்பில் சென்றபோது யாழ்ப்பாணத்தின் பதில் அரசாங்க அதிபராகத் தமக்கு நம்பிக்கையான ஒருவரையே நியமிக்க வேண்டும் என விரும்பினார். பிளான்செர்கா என்ற பெயருடைய அதிகாரியை அவர் தெரிவுசெய்தார். பிளான்செர்கா இலங்கையரான பறங்கி இனத்தவர். டைக்கின் வற்புறுத்தலால் அரசாங்கம் பிளான்செர்காவை பதில் அரசாங்க அதிபராக நியமித்தது.

William-Hendry

டைக்கின் அரசாங்க சேவையை மதிப்பிடும் போது அவர் சேவை செய்த வடமாகாணம் பிரித்தானியர் ஆட்சியில் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட பழைய மாகாணங்களில் ஒன்று என்பதையும் 1873 வரை அம் மாகாணம் பெரும்நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தேசாபதி வில்லியம்  கிரகரி (1822-1877) புதிதாக வடமத்திய மாகாணத்தை உருவாக்கிய போது வடமாகாணத்தின் ஒருபகுதியைப் பிரித்து புதிய மாகாணத்துடன் சேர்த்தார். அதனால் வடமாகாணத்தின் நிலப்பரப்புச் சுருங்கியது. அரசாங்க அதிபர் டைக்கின் சமகாலத்தவர்கள் எழுதிய குறிப்புகளில் இருந்து டைக்கின் மாகாண நிர்வாகத்தின் தனித்துவமான பண்புகளை அறிய முடிகின்றது. தோமஸ் ஸ்கின்னர் அரசாங்க அதிபர்களையும் அவரது உதவியாளர்களையும், குறைகூறும் முறையிலான அறிக்கையொன்றை 1848 கலகத்திற்குப் பின்னர் பிரதிநிதிகள் சபைக்குச் சமர்ப்பித்தார். அவர் அரசாங்க அதிபர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாத ஒருவராவர். ஆயினும் வடமாகாண அரசாங்க அதிபர் பற்றி அவர் தமது அறிக்கையில் பின்வருமாறு பாராட்டியிருந்தார்,  ஒரு அரசாங்க அதிபரின் நற்பணியினால், மாகாணத்தின் எல்லாத்தரத்து மக்களும் நன்மை பெற முடியும் என்பதற்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். ஒரு தனிமனிதனின் செல்வாக்கினால் மக்களின் வாழ்வில் பொதுவான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு அவரின் பணி சிறந்த எடுத்துக்காட்டாகும். வடபகுதியில் பொதுவேலைகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற போது அவை தொடர்பாக தோமஸ் ஸ்கின்னருக்கும் டைக்கிற்கும் தொடர்ந்து சச்சரவுகள் எழுந்தன. அப்படிப்பட்ட தோமஸ் ஸ்கின்னரிடம் இருந்து கிடைத்த இப்புகழுரை டைக்கின் நிர்வாகத் திறனுக்கு சிறந்தவோர் சான்று என்பதில் ஐயமில்லை.

டைக்கிற்கு பின்னர் பணியாற்றியவர்களும் டைக் பற்றி உயர்வாகவே குறிப்பிட்டுள்ளனர். டைக் உருவாக்கிய ’விதிவிலக்கான நிர்வாகி ’என்ற விம்பம் மங்காமல் நிலைத்து நின்றது. டைக்கின் உத்தியோக வாழ்க்கை மறக்க முடியாது நிர்வாகத்தின் தொடக்கம்: அவர் மாகாண நிர்வாகிகளுள் தனித்துவம் மிக்கவர்; நாற்பது ஆண்டுகள் அரசாங்க அதிபராக அவர் கடமையாற்றினார்; அவரிற்கு “வடக்கின் ராஜா” என்ற பெயர் கிடைத்தது என்றும் ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

டைக்கிற்கு கிடைத்த மதிப்பும் கௌரவமும் அவரது சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமேயாகும். அதனை அக்காலப் பதிவுகள்  சான்றுப்படுத்துகின்றன. இந்திய சிவில் சேவையுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கைச் சிவில் சேவைக்குத் தகுதியுடையவர்கள் சேர்ந்து கொள்வது அரிதாகவே இருந்தது. காரணம் பதவி ஏற்றத்திற்கான வாய்ப்புகள், சம்பளம் என்பன குறைவாக இருந்தன. இதனால் இலங்கைச் சிவில் சேவைக்கு டைக் போன்ற  வித்தியாசமான நிர்வாகி கிடைத்தமை அரிதான விடயமாகும். அவருடைய சேவையின் சிறப்புத்தன்மையை எடுத்துக்காட்டும் சில உதாரணங்கள் உள்ளன.

கோல்புறுக் – கமரன் சிபாரிசுகள் அறிமுகம் செய்யப்பட்டதனால் இலங்கைச் சிவில்சேவையின் தரம் வீழ்ச்சியடைந்தது. அதன் தரம் தாழ்ந்திருந்த ஒரு கட்டத்தில் அரசாங்கம் சிவில் சேவையின் தரத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி இரு உத்தியோகத்தர்களை நியமித்தது. சிவில் சேவையை முன்னேற்றுவதற்கு என்ன திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ஆலோசனை கூறும்படியும்  இக்குழு வேண்டப்பட்டது. இவ்வாறு விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டோர் அன்ஸ்ருதரும் டைக்கும் ஆவர். திறமையின் அடிப்படையில்  அல்லாது சேவை மூப்பின் படி பதவி உயர்வு வழங்குதல், சம்பளம் குறைவாக இருத்தல், ஓய்வூதியத்தை இல்லாது ஒழித்தமை, சிவில்சேவைக்குள் இருந்தே பதவி உயர்வுகள் வழங்கப்படவேண்டும் என இருந்த விதியைக் கைவிட்டமை ஆகியன சிவில் சேவையின் தரத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என இவர்கள் சுட்டிக்காட்டினர். மேற்குறித்த காரணங்களால் சிவில் சேவை உத்தியோகத்தர்களிடையே ஒழுக்கம் குறைந்தது என்றும் இவர்கள் குறிப்பிட்டிருந்தனர். குடியேற்ற நாட்டுச்செயலாளரும் இவ்விருவரும் கூறிய கருத்துக்களை ஏற்றுத் தமது கருத்தைக் கூறினார். அன்ஸ்றூதர் – டைக் அறிக்கை சிவில் சேவையின்   பிரச்சினைகளை நன்றாக அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தியது. 1845 இல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களின் மூலம் அன்ஸ்றூதர் – டைக் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. ஓய்வூதியம் மீளவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சம்பள உயர்வும் அறிவிக்கப்பட்டது.  சிவில் சேவைக்கு அச்சேவைக்கு  வெளியே உள்ளவர்களைச் சேர்க்கக்கூடாது என்ற விதியும், சேவைமூப்பின்படி, திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் விதிமுறையும் உள்ளடக்கப்பட்டுத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு அவ்வறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்படுத்தியமையும் அவரது  அறிவுக் கூர்மையையும், விடயத்தெளிவையும் நிரூபிக்கும் சான்றுகளாகும்.

இலங்கைக் காலனியின் தலைவர் என்ற வகையில் தேசாதிபதியே மாகாண அரச அதிபர்களின் சேவையை மதிப்பீடு செய்வதற்கு ஆகக்கூடிய தகுதியுடைய ஒருவராக விளங்கினார். 19 ஆம் நூற்றாண்டின் தேசாதிபதிகளுள் சிறப்பு மிக்க நிர்வாகிகளுள் ஒருவரான ஹென்றிவாட் வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் நிர்வகித்த விதம் பற்றி ஒப்பீட்டு மதிப்பீடொன்றைச் செய்தார். இவ்விரு மாகாணங்களும் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாகாணங்களாகும். கிழக்கு மாகாணத்தில் நிர்வாகக் கடமைகளும், நிதிக்கடமைகளும் ஒன்றிணைக்கப்பட்டிருந்தமையினால் ஊழலும், கடமைகளில் கவனமின்மையும் ஏற்பட்டிருந்தன. இதனால் நிர்வாகத்தில் கட்டுப்பாடு குலைந்தது. கச்சேரி உத்தியோகத்தர்களும், கிராமத்தலைமைகாரரும் தாம் நினைத்தபடி நடக்கத்தொடங்கினர்.  30 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பில்  கிராமமட்டத்திற்கு சென்று நேரடிப்பரிசோதனைகள் நிகழ்த்தப்படவில்லை. வட மாகாணத்தின் அரசாங்க அதிபரான டைக் உற்சாகமும் திறமையும் மிக்க நிர்வாகியாகத் திகழ்ந்ததை வார்ட் குறிப்பிடுகின்றார். செயல்துடிப்பு மிக்க உத்தியோகத்தரால் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு வட மாகாணம் சான்றாக விளங்கியது. வார்ட் பரிசோதனைக்காக வட பகுதிக்கு சென்ற போது அவர் சென்ற இடங்களில் உள்ள மக்கள் டைக்கின் சேவையைப் பாராட்டியதையும், எல்லா வகுப்பு மக்களுக்கும் பேதமின்றி டைக் சேவை செய்ததை தமிழ் மக்கள் நன்றியுணர்வோடு  போற்றியதையும், நேரில்கண்டும், கேட்டும், வார்ட் திருப்தியுற்றார். டைக் போன்ற கண்டிப்பு மிக்க உத்தியோகத்தர்களே மக்களை மிகவும் கவர்ந்தவர்களாக இருந்தனர். டைக் தாமாக முன் வந்து தமது வாழ்நாளின்  பெரும்பகுதியை யாழ்ப்பாணத்தில் சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார். “நான் அன்றும் இன்றும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் பற்று உள்ளவனாக இருந்துவருகிறேன்” என்று குறிப்பிடும் டைக் யாழ்ப்பாணத்தில்  சேவை செய்தபடியால் பணவருவாயினைக் குறைந்த அளவில் பெற்ற போதிலும் அதனை பற்றிப் பொருட்படுத்தவில்லை.

டைக் ஒரு சர்வாதிகாரி போல் நடந்துகொண்டார் என்பதைக் குறிப்பிட்டோம். இச் சர்வாதிகாரம் பொறுத்துக்கொள்ளப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன. வடமாகாணத்தின் செழிப்புக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் வகையில் டைக் திறமையோடு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஆண்டில் இரு முறை மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று அவர் களப்பரிசோதனைகளைச் செய்தார். அவ்வாறு பரிசோதனைக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தான் அமைத்த கூடாரங்களில் வாழ்ந்ததை அவர் பெருமைக்குரிய விடயமாகவே கருதினார்.  “என்னிடம் கூடாரங்கள் அமைக்கும்  வசதிகள் உள்ளன. இவ்வாறு கூடாரங்களை அமைத்து வேலை செய்யும் அரசாங்க அதிபர் நான் ஒருவன் மட்டுமே. அயலில் உள்ள இந்தியாவில் உத்தியோகத்தர்கள் அவ்வாறு கூடாரம் அமைத்து தங்குவது கட்டாயமானது. அதற்காக உத்தியோகத்தர்களுக்கு விசேட படி நிறைய வழங்கப்படுகின்றது.” என்று டைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், தலைநகர்  கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில் அரசாங்க அதிபர் டைக் கொழும்பின் கட்டுப்பாடுகளில் இருந்து விலகித் தனியாகச் செயற்படமுடித்தது. மத்திய அரசின் கட்டுப்பாடுகள் யாழ்ப்பாணத்தின் மீது குறைவாகவே இருந்தன. மேற்பார்வையும் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் டைக் நினைத்தபடி நடந்துகொள்ள முடிந்தது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான காட்டுப்பாதைகளுடான பயணம் கடினமானது. அக் காலத்தில் தரைப்பயணத்தை விட கடற்பயணம் மூலம் யாழ்ப்பாணத்தை விரைவில் அடைந்துவிடலாம். இச் சூழ்நிலையில் தனித்து இயங்கிய டைக் “டைக் அரசன்” என்று அழைக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை. யாழ்ப்பாணம் என்ற தொலைதூர இடத்தில் பிரித்தானிய ஆட்சியை வலுப்பெறச் செய்த டைக் அப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.

டைக்கிடம் பல குறைபாடுகள் இருந்தன. “டைக் வளைந்து கொடுக்காத பிடிவாதக்காரன். அவருக்கு பொழுதுபோக்கு என்று எதுவும் இருக்கவில்லை. அதனால் அவர் வாழ்க்கையில் பல நன்மைகளை இழந்திருக்கிறார். சுதேசிகளின் நல்வாழ்வு பற்றியே அவர் தனது முழுக் கவனத்தையும் செலுத்தி உழைத்தார். பிறரையும் அவ்வாறே உழைக்கத் தூண்டினார். இதயசுத்தியுடன் பணியாற்றினார். இக் காரணத்தால் அவரிடம் இருந்த குறைகளை விட நற்குணங்கள் ஏராளம். இதனால் குறைகள் பெரிதுபடுத்தப்படவில்லை. டைக் மறைந்த பின்னர் 1930 களில்  தேசாதிபதியாக இருந்த சேர் வில்லியம் ஹென்ரி கிரகெரி அவரைப் பற்றிப் பாராட்டிக் கூறினார். ”அவரது சேவைக்காலம் நீண்டதாக இருந்தது. ஒரு தந்தையைப் போன்று வடமாகாணத்தை நிர்வகித்தார். யாழ்ப்பாணத்தில் இருந்து சில மைல் தொலைவில்  உள்ள கோப்பாயில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த போது அவரது மரணம் நிகழ்ந்தது“ என்று கிரகெரி குறிப்பிட்டுள்ளார். பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் மக்கள்  அவரை டைக் பிரபு என்ற மரியாதையோடு குறிப்பிட்டனர் என்றும் குறிப்பிடும் கிரகெரி டைக் எவ்வளவுக்கு  மக்களால் மதிக்கப்பட்டார் என்பதையும் எடுத்துக்கூறினார்.

OLD-PARK


மக்களிடம் வாய்மொழியாக உள்ள கதைகளின் படி டைக்கிற்கு கோப்பாய் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தமை தெரியவருகிறது. அவருக்கு ஒரு ஆசைநாயகி  அக்கிராமத்தில் இருந்தார். அவரை முறைப்படி திருமணம் செய்யாதபோதும் அவ்விடத்திற்கு வந்து அவருடன் இருந்துவிட்டுச் செல்வார். உதவியாளர்கள் புடைசூழ்ந்து வரப் பல பல்லக்குகளும் அணிவகுத்து வரும் டைக் ஆடம்பரமாக கோப்பாய்க்கு வருவார் என்று  அதிகார் நாகநாதர் கூறியதாக பெரரா குறிப்பிட்டுள்ளார். இக் கதை உண்மையானதென்றே கொள்ளலாம். டைக்   பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்த நிர்வாகி அல்ல என்பதை இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம். அவர் தன்னுடைய சிவில் சேவையைச் சேர்ந்தவர்களான பின்வந்த அரசாங்க அதிபர்களுக்கு ஒரு தனிப்பட்ட பழங்கால மாளிகை வீட்டை விட்டுச்சென்றமை அவரது தனிப்பட்ட வாழ்வோடு தொடர்புடைய இன்னொரு சுவையான செய்தி.  “பழைய பூங்கா” (Old Park) என அழைக்கப்படும் இம் மாளிகை வீட்டை இன்றுவரை அரசாங்க அதிபர்கள் வாடகை எதுவும் செலுத்தாமல் தமது  வாழிடமாக உபயோகித்து வருகின்றனர். பழம்பாணியில் கட்டப்பட்ட மாளிகையில்  அரச அதிபர்கள் மட்டும் இவ்வாறு வாடகை இன்றி வாழ்வது டைக்கின் தாராண்மைக்குச் சான்றாகும்.

மேலேகூறியவை டைக்கின் குணஇயல்புகளை நன்கு எடுத்துக்காட்டுவன. இவை அவரது நிர்வாகத்தின் சிறப்பியல்புகளையும் எடுத்துக்காட்டுகின்றன. டைக்கின் வாழ்க்கையைப் பற்றிய ஆராய்வு உண்மையில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் காலனித்துவ நிருவாகம் எவ்வாறு செயற்பட்டது என்பதை காட்டுவதாக உள்ளது.

THE RAJAH OF THE NORTH – PERCIVAL ACLAND DYKE – PRO-CONSUL OF THE BRITISH IN MID NINETEENTH CENTURY NORTHERN SRI LANKA’ என்ற தலைப்பில் 1987ஆம் ஆண்டு Modern Sri Lanka Studies, Vol. 2 ,No. 1& 2, pp. 173-184 என்னும் இதழில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்.


ஒலிவடிவில் கேட்க

13325 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)