பௌத்தமும் இலங்கை அரசியலும்
Arts
13 நிமிட வாசிப்பு

பௌத்தமும் இலங்கை அரசியலும்

June 1, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கிலத்தில் : எச். எல். செனிவிரத்தின

1943 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். பௌத்த பிக்கு ஒருவர் தேர்தல் அரசியலில் இறங்கிய முதலாவது உதாரணமாக இது அமைந்தது. ஆயினும் அவர் அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 1977ம் ஆண்டில் தான் முதன்முதலாக பிக்கு ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவரும் அந்தத்தேர்தலில் தோல்வியுற்றார். அதன் பின்னர் பத்தேகம சமித்த என்ற பௌத்த பிக்கு 2001ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் இனப்பிரச்சினையை இணக்கமாகத் தீர்க்கவேண்டும், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்துக்களை உடையவரான பத்தேகமசமித்த 2004 ஆம் ஆண்டின் தேர்தலில் தோல்வியுற்றார். அவரின் இடத்திற்கு தீவிரவாதம் பேசிய இன்னொருவர் தெரிவுசெய்யப்பட்டார். 2004 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் “ஜாதிக ஹெல உறுமய” என்ற சிங்கள பௌத்த அரசியல் கட்சி புத்தபிக்குகளின் கட்சியாகத் தோற்றம் பெற்றதோடு, 200 வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்தியது. அந்தத்தேர்தலில் 9 பிக்குகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். பௌத்த குருமாரின் அரசியல் பிரவேசம் பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம். பிக்குகளின் அரசியல் பிரவேசத்தைத் தூண்டிய சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் யாவை என்பது ஆழமான ஆய்வுக்குரியது.

Religion-in-Context-Buddhism-and-Socio-Political-Change-in-Sri-Lanka

இலங்கையில் பௌத்த குருமாரின் அரசியல் பிரவேசம் பற்றிய மானிடவியலாளர்களின் ஆய்வுகள் பல உள்ளன. இப்பொருள் குறித்து ஆய்வு செய்தவர்களில் எச். எல். செனிவிரத்தின முக்கியமான ஒருவர். 1999ம் ஆண்டில் அவரது ‘The Work of Kings’ என்ற நூல் வெளிவந்தது. அவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “Buddhist Monks and Ethnic Politics” (பௌத்த பிக்குகளும் இனக் குழும அரசியலும்) என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் உள்ள கருத்துக்களைத் தொகுத்துக் கூறுவதாக எனது இக்கட்டுரை அமைந்துள்ளது.

மரபுச் சமூகத்தில் பிக்குகளின் வகிபாகம்

பௌத்த சமய புனித நூல்களின் நோக்கில் மரபுச் சமூகத்தில் பிக்குகளின் வகிபாகத்தை ‘உலகைத் துறந்தோர் குழுமம்’ (Community of Renouncers) என்ற தொடரால் வரையறை செய்யலாம். மக்ஸ் வெபர் என்ற சமூகவியலாளர் கூறிய மேற்குறித்த வரைவிலக்கணம் ஓர் இலட்சிய மாதிரியாகும். இவ்வரைவிலக்கணத்தில் பிக்குவின் சமூகத் தொடர்புகள் அழுத்தம் பெறவில்லை. இலங்கையில் வனவாசிகளான பிக்குகள் (Forest Monk), கிராமவாசிகளான பிக்குகள் என இருவகையினர் இருந்து வந்தனர். இவ்விரு வகையினரும் இல்வாழ்வோரான பெளத்த சமயிகளின் ஆதரவுடன் தமது துறவு வாழ்க்கையை மேற்கொண்டனர்.

மரபுவழிச் சமூகத்தில் துறவி – இல் வாழ்வோர் உறவுகளை (Monk/ Lay Relations) கொடைப்பரிவர்த்தனை (Gift Exchange) உறவு என செனிவிரத்தின விளக்குகிறார். இல்வாழ்வோன் துறவியின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை (Material Goods) கொடையாக வழங்குகிறார். இதற்குப் பதிலீடாக துறவி ஆன்மீக வழிகாட்டல் (Spiritual Guidance) என்ற சேவையை வழங்குகிறார். அவர் வழங்கும் சேவை/கொடை எல்லாவகைக் கொடைகளிலும் உயர்ந்தது. துறவி தன் முழு நேரத்தையும் பிறப்பு, இறப்பு என்ற தளைகளில் இருந்து விடுவிப்பதற்கான ஆன்மீகத் தேடலில் செலவிடுகிறார். கொடைப் பரிவர்த்தனையின் அடிப்படையிலான இவ்வுறவு சமூக உறவுப் பிணைப்பாக மலர்ச்சி பெற்றது. துறவியின் ஒழுக்கம் மடாலய ஒழுக்க விதிகளால் (Code of Monastic Discipline) வரையறை செய்யப்பட்டது. ‘விநய’ என அழைக்கப்பட்ட இவ்விதிகள் மீது பிக்குகளின் பற்றுதல் உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. இல்வாழ்வோருடன் துறவிகள் கொள்ளும் உறவும் தெளிவான எல்லைகளால் வரையறை செய்யப்பட்டன என்றும் செனிவிரத்தின கூறுகிறார்.

புத்தபிக்குகளும் ‘சமூகசேவையும்’

புத்த பிக்குகள் வழங்கிய ‘ஆன்மீக வழி காட்டல்’ என்ற யாவற்றிலும் உயர்ந்த கொடையை விட, அவர்களுக்கு சமூகசேவை என்ற கடப்பாடும் உள்ளதாக நவீன காலத்தில் விளக்கங்கள் எழுந்தன. 

பௌத்தசமய சீர்திருத்தவாத இயக்கத்தினர் பிக்குகளுக்கு ‘சமூக சேவை’ என்ற கடமையை வலியுறுத்தினர். வல்பொல ராகுலதேரர் ‘பிக்குவின் பாரம்பரியம்’ (பிக்சுகே உறுமய) என்ற பிரசித்தமான நூலில் ‘பௌத்தம் பிறருக்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டது’ என்ற விளக்கத்தைக் கூறியதோடு, துறவிகள் சமூகவேலை செய்தவற்காக, ‘நிர்வாணம்’ என்ற உயர் இலக்கை இன்னொரு பிறப்பிற்கு ‘ஒத்தி்’ப் போடுவதான தியாகத்தைச் செய்தல் வேண்டும் என்ற கருத்தையும் கூறினார். எச்.எல். செனிவிரத்தின ‘சமூகசேவை’ என்ற இப்புதிய விளக்கத்தின் விளைவுகளை பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார். 

‘சமூக சேவை (சமாஜசேவய)’ என்ற சொற்தொடர் உலகியல் சார் அனைத்து நடவடிக்கைகளிலும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதை உள்ளடக்குகிறது. அரசியல் நடவடிக்கைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானது. அரசாங்கங்களை ஆட்சியில் இருத்துவதும், அவற்றை ஆட்சியில் இருந்து அகற்றுவதும் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதும் துறவிகளின் சமூக சேவைகளில் உள்ளடங்குகின்றன. மேற்குறித்தவாறான சமூக சேவைகளும் அரசியல் வகிபாகமும் இலங்கையில் ‘இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பௌத்தம் கால்பதித்த காலம் தொட்டு’ புத்த பிக்குகளுக்கு உரியதாக இருந்து வந்துள்ளதென்றும் இன்றைய படித்த பிக்குகள் சிலர் கூறுவதாக செனிவிரத்தின குறிப்பிடுகின்றார். பிக்குகள் சிலரின் இக்கருத்தை பெளத்த சமயத்தினரின் பெரும்பகுதியினர் மௌனமாக ஏற்றுள்ளனர் என்றும், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தனர்களிடம் ஏற்கப்பட்டதொரு கருத்தாக இது மாறியுள்ளதெனவும் அவர் குறிப்பிடுகிறார். அவர் தொடர்ந்து கூறுவதாவது:

இவ்விடயத்தை நுணுகி நோக்கும் போது, இது பண்டைக் காலத்தில் இருந்து வந்த ஒரு கருத்து அன்று. இது தேசிய சீர்திருத்தவாதியான அநகாரிக தர்மபால (1864 – 1933) கண்டுபிடித்துக் கூறிய புத்தாக்கம். தேசிய மறுமலர்ச்சி என்ற அவரது செயற்திட்டத்தை இயக்குவதற்கு சுதேசியத் தலைமைத்துவம் ஒன்று அவருக்குத் தேவைப்பட்டது. துறவிகள் இதற்கு மிகச் சிறந்த தெரிவு என அவர் கருதினார். பௌத்த துறவிகளை அவர்கள் முன் எப்போதும் வகித்திராத பீடத்தில் தர்மபால உயர்த்தி வைத்தார். குறித்ததொரு உலகியல் வகிபாகம் அவர்களிற்கு வழங்கப்பட்டது. அவ்வகிபாகம் மரபுரிமை என அவர்கள் கருதத் தொடங்கினர். ‘சமூக சேவை’ என்ற வடிவில் உருப்பெற்ற இக்கருத்து துறவிகளின் அரசியல் செயற்பாட்டை நியாயப்படுத்தும் கருத்தியலாக வடிவமைக்கப்பட்டது.

வித்தியோதய, வித்தியாலங்காரப் பிரிவேனகள்

1930களிலும் 1940களிலும் கொழும்பு மாவட்டத்தில் வித்தியோதய பிரிவேன, வித்தியாலங்கார பிரிவேன என இரு கல்வி நிறுவனங்கள், பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் மையங்களாகச் செயற்பட்டன. தர்மபாலவின் தேசிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் செயல்திட்டத்தில் இவ்விரு பிரிவேனக்களும் பங்கேற்றன. 1933 இல் தர்மபாலவின் மறைவிற்குப் பின்னர் இவை பெளத்த சமய நடவடிக்கைகளின் முக்கியமான நிறுவனங்களாக இருந்தன. தேசிய மறுமலர்ச்சியும் சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதுமான தர்மபாலவின் செயற்திட்டம் இருவழிமுறைகளைக் கொண்டதாக இருந்து.

  1. கிராம அபிவிருத்தி மூலமான பொருளாதார முன்னேற்றம்.
  2. பண்பாட்டு மறுமலர்ச்சி

என்பனவே இவ்விரு வழிமுறைகளாகும். விஞ்ஞான அடிப்படையிலான விவசாயம், சுகாதார மேம்பாடு, கிராம மக்களிடையே முரண்பாடுகளைத் தீர்த்தல் ஆகியன கிராம அபிவிருத்தி என்ற வழிமுறையில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மந்திர தந்திர நடைமுறைகளை நீக்கிச் சுத்திகரிக்கப்பட்ட பெளத்த சமயமும் கிராமிய அபிவிருத்தி வழிமுறையின் முக்கியமானபாகமாக அமைந்தது. கிராம அபிவிருத்தி என்ற வழிமுறையை வித்தியோதய பிரிவேன பிக்குகள் ஏற்றுச் செயற்படுத்தினர். இலங்கை பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட பல்லினச் சமூகம் என்ற யதார்த்தத்தையும் இப்பிரிவினர் ஏற்றுக்கொண்டோராகவும், அரசியலில் இருந்து விலகியும் செயற்பட்டனர். வித்தியோதயப் பிரிவினரை நடைமுறைவாதிகள் (Pragmatic Monks)  என எச். எல். செனிவிரத்தின குறிப்பிடுகிறார்.

தர்மபாலவின் பண்பாட்டு மறுமலர்ச்சி என்ற வழிமுறையில் வித்தியாலங்கார பிக்குகள் அதிதீவிர கவனம் செலுத்தினர். ‘நாடு, தேசியம், சமயம் (Country, Nation and Religion)’ என்ற தர்மபாலவின் கோஷம் வித்தியாலங்காரப் பிரிவினரை கவர்ந்து ஈர்த்த மந்திரச் சொற்களாயின. தமிழர்களும், ஏனைய சிறுபான்மை இனங்களும் இலங்கையில் சம உரிமையோடு வாழ்வதை மறுக்கும் முறையிலான செயற்பாடுகளை வித்தியாலங்கார பிரிவேன பிக்குகள் முன்னெடுத்தனர். 1930 களிலும் 1940 களிலும் தீவிரம் பெற்ற வித்தியாலங்கார பிரிவேனவின் செயற்பாடுகள் 1956 இல் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றியுடன் உச்சக்கட்டத்தை எய்தின. மேலே குறிப்பிட்டுள்ள வல்பொல ராகுலதேரர் வித்தியாலங்கார பிரிவேனவைச் சேர்ந்தவர். அவர் எழுதி வெளியிட்ட ‘பிக்சுகே உறுமய 1946 இல் வெளியாகி,  இருவாரங்களுக்குள் முற்றாக விற்றுத் தீர்ந்தது, ‘ஒரு நாட்டை உலுக்கிய நூல்’ என இது விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியலங்கார பிக்குகளை ‘கருத்தியல் பிக்குகள்’ (Ideological Monks) என்று எச். எல். செனிவிரத்தின குறிப்பிடுகிறார்.

வித்தியோதய (நுகேகொட) வித்தியாலங்கார (காணி) என்ற அடையாளங்கள் இடஅமைவு சார்ந்து பிக்குகள் இரு அணியினராகப் பிரிந்தனர் என்ற தவறான கருத்தை தரலாம். உண்மையாதெனில் வித்தியோதயவில் கிராம அபிவிருத்தி என்று நடைமுறைவாதம் மேலோங்கிய போக்காகவும், வித்தியாலங்காரவில் பண்பாடு அரசியல் என்பன மேலோங்கியனவாகவும் இருந்தன. ஆகையால் நடைமுறைவாதிகள், கருத்தியல் பிக்குகள் என்ற வகைமைகள் இருபிரிவேனக்களிலும் மேலோங்கிய போக்குகளைச் சுட்டுவதோடு இரு வகையினரும் இரண்டு பிரிவேனக்களிலும் இருந்துள்ளனர் என்பதையும் உணர்த்துகின்றன. வித்தியாலங்கார பிக்குகள் அல்லது கருத்தியல் பிக்குகளின் நடவடிக்கைகள் பிக்குகளை உலகியல் விவகாரங்களுக்குள்ளும், அரசியலுக்குள்ளும் எவ்வாறு ஈர்த்தது என்பதை செனிவிரத்தின அடுத்து விளக்குகிறார்.

தர்மபாலவின் பண்பாட்டுத்துறைகள் திட்டங்களை 1940களில் வித்தியாலங்கார பிக்குகள் முன்னெடுத்தனர். இவர்களது நடவடிக்கைகளால் ஏற்பட்ட பௌத்த தேசியவாத எழுச்சி 1956 இல் பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு உதவியது. தர்மபாலவின் ‘நாடு, தேசியம், சமயம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்த வித்தியாலங்கார கருத்தியல்வாதிகளின் செயற்பாடுகள் தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களிற்கும் சமத்துவமான குடியுரிமைகளை மறுப்பதான அரசியல் மேலாதிக்கம் பெற வழிவகுத்தது. வித்தியோதயப் பிக்குகளின் கிராம அபிவிருத்தி, சமய நல்லிணக்கம் ஆகிய செயற்திட்டங்கள் பின்தள்ளப்பட்டு வித்தியாலங்கார பிக்குகளின் கருத்தியல்வாதம் முன்னிலை பெற்றது. பின்னாளில் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்பு நிலை சிவில் யுத்தம், பொருளாதார நெருக்கடி என்பனவற்றிற்கு பிக்குகளின் அரசியல் பிரவேசம் ஒரு காரணியாக அமைந்தது. 1956 இல் பதவிக்கு வந்த அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு வழங்கிய வெகுமதிகளில் வித்தியாலங்கார, வித்தியோதய என்ற இரண்டு பிரிவேனக்களையும் பல்கலைக்கழகங்களாகத் தரமுயர்த்தியமை முக்கியமான ஒன்றாகும்.

மேற்குறித்த இரு பல்கலைக்கழகங்களும் இளம் துறவிகளுக்கு சமயச்சார்பற்ற பாடங்களில் (Secular Subjects) கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பைத் திறந்து விட்டன. இதன் விளைவுகள் சமூகத்தளத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டன.

  • சம்பளம் பெறும் உத்தியோகப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு பட்டப்படிப்பு உதவியது. குறிப்பாக ஆசிரியர் சேவையில் பெருந்தொகையான பிக்குகள் இணைந்து கொண்டனர்.
  • சுயமாக வருமானத்தைத் தேடும் நிலைக்கு மாறிய இளம் பிக்குகள் தமது தேவைகளுக்காக இல்வாழ்வோரில் தங்கியிருக்கும் நிலையில் இருந்து விடுபட்டனர்.
  • இளம் பிக்குகளின் சுயமதிப்பு உயர்ந்தது. அவர்கள் தம்மிடம் இருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்தக் கூடிய உலகியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

மேற்கூறிய காரணங்களால் பிக்குகள் தமது சமய ஒழுக்க நெறிகளில் இருந்த விலகி உலகியல் வாழ்விலும், அரசியலும் ஈடுபடத் தொடங்கினர். இதன் பயனாக சங்க அமைப்பு உலகியல் சார்புடையதாதல் (Secularisation of the Sangha) என்ற செயல்முறைக்கு ஆளானது. உலகியல் சார்புடையதாதல் செயல்முறை பிக்குகளின் அரசியல் பிரவேசத்தை வேகப்படுத்தியது.

பிக்குகள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், லாபம் தரும் தொழில் முயற்சிகளைப் பொறுப்பேற்று நடத்துவதும் சமூகத்தில் பிக்குகள் பற்றிய பிம்பத்தை முற்றாக மாற்றியது. செனிவிரத்தின இது பற்றிக் கூறுவன வருமாறு:

“இன்று பிக்குகள் சம்பளத்திற்காக ஆசிரியர் வேலை செய்கிறார்கள். சிலர் பெரு முதலீட்டுடன் கூடிய முன்பள்ளிகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் முதலீட்டுத் துறை நிபுணர்களாக உள்ளனர். சிலர் மோட்டார் வாகனத்திருத்த வேலை செய்யும்  ‘கராஜ்’ உரிமையாளர்களாகவும், வேறு சிலர் ‘டாக்சி’ சேவை நிர்வாகிகளாகவும் உள்ளனர். ஒருவர் தாதிமார் சங்கத் தலைவராக இருக்கிறார். வேறு ஒருவர் இசைப்பாடல்களை எழுதுபவராக பெரும் ரசிகர் கூட்டத்தைத் தன் பின்னால் வைத்திருக்கிறார். இன்னொரு பிக்கு ஓவியர். வேறு ஒருவர் சிற்பக் கலைஞர். ஒரு பிக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்குத் தியான வகுப்பு நடத்துகிறார். இன்னொருவர் ‘றோட்டரி கிளப்’ தலைவராக இருக்கிறார்.” 

எச். எல். செனிவிரத்தினவின் கட்டுரை 1990 களின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது. பிக்குகளின் வாழ்வியல் மாற்றங்களை மேற்கண்டவாறு விபரிக்கிறார். இந்த விபரிப்பைத் தொடர்ந்து அவர் முக்கியமான குறிப்பு ஒன்றைப் பின்வருமாறு பதிவு செய்கிறார்.

‘ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களே பிக்குகளில் அதிகமானவர்கள். அது தவிர்ந்த, பிற தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவாகும். ஆயினும் குறைந்த எண்ணிக்கையுடையவர்களாதலால் இவர்களின் நடவடிக்கைகள் மடாலயப் பண்பாட்டில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறைக்கும் தன்மையுடையதாக இருக்கிறது’.

பிக்குகளில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தொழில் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்றால் அது விதிவிலக்கான ஒரு விடயம் என்ற வாதம் தவறானது என்பதையே செனிவிரத்தின அழுத்திக் கூறுகிறார்.

நாடு, தேசியம், சமயம்

இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பிக்குகள் மடாலய ஒழுக்கவிதிகள் சார்ந்த பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்றால் அது பௌத்த சமயத்தின் உள்ளகப் பிரச்சினையாகக் கொள்ளலாம். ஆனால் அது ஓர் உள்ளகப் பிரச்சினை மட்டுமல்லாமல் இலங்கையில் சிறுபான்மைத் தேசியங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலான விடயமாக அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. காரணம் அநகாரிக தர்மபாலவின் வழிவரும் ‘நாடு, தேசியம், சமயம்’ என்ற கருத்தியல் ‘இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு, இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு சமத்துவமான உரிமைகளுக்கு இடம் இல்லை’ என்ற இனவாதமாக சிங்கள பௌத்த மேலாண்மையை அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நிலை நிறுத்தும் அரசியல் இயக்கமாக வளர்ச்சியுற்றிருப்பது தான். இலங்கை பல சமயங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் கொண்ட தேசம் என்ற கருத்தை இவ்விவாதம் முற்றுமுழுதாக நிராகரிக்கிறது.

அரசியல் பௌத்தத்தின் கருத்தியலை ‘நாடு, தேசியம், சமயம்’ என்ற தர்மபாலவின் கோஷம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

உசாத்துணை

  1. செனிவிரத்தினவின் இக்கட்டுரை ஜயதேவ உயன்கொட பதிப்பித்த இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்க (S.S.A) வெளியீடான Religion in context, Buddhism and Socio- Political Change in Sri Lanka’ என்ற நூலில் சேர்க்கப்பட்டுள்ளது (பக்கம் 88 . 101).
  2. Richard F. Gombrich Theravada Buddhism A Social History from Ancient Benares to modern Colombo ரவட்லெட்ஜ்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலின் இரண்டாம் பதிப்பின் (2006) இறுதியான எட்டாவது அத்தியாயமான CURRENT TRENDS என்ற கட்டுரையும் (பக் 196 – 210)  அண்மைக்காலப் போக்குகளின் புரிதலுக்கு உதவக்கூடியது. 

தொடரும்.

எச். எல் செனிவிரத்தின எழுதிய “Buddhist Monks and Ethnic Politics” (பௌத்த பிக்குகளும் இனக் குழும அரசியலும்) என்னும் கட்டுரையை அறிமுகம் செய்யும் வகையில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை.


ஒலிவடிவில் கேட்க

18928 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)