அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம்
Arts
18 நிமிட வாசிப்பு

அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் – பகுதி 1

June 13, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : ரஞ்சித் அமரசிங்க

இலங்கையில் மாகாணசபை முறை 13 ஆவது அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்டபோது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரு அலகாகவும் ஏனைய 7 மாகாணங்கள் தனித்தனி அலகுகளாகவும் கொள்ளப்பட்டன. இந்த எட்டு அலகுகளிற்கு இடையிலும் அதிகாரப்பகிர்வு சமத்துவமான முறையில் பகிரப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் மாகாணசபையிடம் சமமான முறையில் பகிர்தல் சமத்துவமான அதிகாரப்பகிர்வு எனப்படும். இதற்கு மாறான அதிகாரப்பகிர்வு முறையொன்று ஸ்பானியா (Spain) நாட்டில் பின்பற்றப்பட்டது. இதனை அசமத்துவ அதிகாரப்பகிர்வு (Asymmetrical Devolution) என்பர். “Asymmetrical Devolution: Understanding The Spanish Experience” எனும் தலைப்பில் Rangith Amerasinghe எழுதிய கட்டுரை “Power Sharing- International Experience” (2011) என்ற நூலில் எட்டாவது அத்தியாயமாக அமைந்துள்ளது. (பக் 143-168) பதினொரு கட்டுரைகளின் தொகுதியாக அமையும் இந்நூலில் உலகின் பல்வேறு நாடுகளின் அதிகாரப்பகிர்வு அனுபவங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மாகாணசபைகள் ஏற்படுத்தப்பட்டபோது அதிகாரப்பகிர்வை கோரிநின்ற தமிழர் பெரும்பான்மையாளராகவுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும், ஏனைய 7 மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் சமத்துவமான முறையில் பகிரப்பட்டமை இலங்கையில் இம் முறையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததென வாதிடுவதற்கும் இடம் உள்ளது. வேண்டா வெறுப்பாக மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களை திருப்திப்படுத்தத் தவறியதோடு, மாகாணசபை உள்ளீடற்ற வெறும்கோது என்ற விமர்சனத்திற்கும் ஆளானது. இப் பின்னணியிலேயே நாம் ரஞ்சித் அமரசிங்க அவர்களின் ஸ்பானிய அசமத்துவ அதிகாரப் பகிர்வு (Asymmetrical Devolution) பற்றி நோக்குதல் பொருத்தமானது எனக்கருதுகின்றோம். இந்த அறிமுகக் குறிப்புக்களுடன் ரஞ்சித் அமரசிங்க ஸ்பானிய நாட்டின் அதிகாரப் பகிர்வு அனுபவங்கள் பற்றி கூறியிருப்பனவற்றை நோக்குவோம். 

இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடன் மாகாணசபைகள் முறை ஏற்படுத்தப்பட்டது. ஏறக்குறைய இருபது ஆண்டுகள் காலத்தில் மாகாணசபைகளின் செயற்பாடுகளின் அனுபவம் பலவித குறைகளையும் இம் முறையின் மட்டுப்பாடுகளையும் பற்றிய விமர்சனத்திற்கு இடமளித்தது. இக் குறைகள் பற்றிய புலமைத்துவ ஆய்வுகள் பலவும் வெளியாயின. அவற்றுள் 2010 ஆம் ஆண்டில் “Institute For Constitutional Studies” (ICS) கொழும்பு நிறுவனம் வெளியிட்ட கட்டுரைத்தொகுதி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய நூலாகும். 

Spain

மாகாணசபைகளை நிறுவியபோது அம்மாகாணசபைகள் யாவற்றிற்கும் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் சமமான முறையில் பகிர்வு செய்ததில் போதிய காரணம் இருக்கிறதா (Justification) என்ற வினா பொருத்தமானதே. குறிப்பாக பிரிவினை கோரிய யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னணியில் தமிழ் சமூகத்திற்கு பிராந்திய சுயாட்சியை (Regional Self Government) வழங்கிப் பிரச்சினையை தீர்ப்பதுதான் நோக்கமாகவிருந்தது. இக் காரணத்தினால் அடையாளப் பிரச்சினைகளின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை கோரிநிற்காத பெரும்பான்மை இனத்து மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களிற்கும் சமத்துவமான அதிகாரங்களை வழங்கியதற்கான தேவை யாது என்ற வினா எழுகின்றது. இதன் பின்னர் 1990 களில் பதவியில் இருந்த அரசாங்கம் மீண்டும் அதிகாரப்பகிர்வு பற்றி மிகுந்த அக்கறை செலுத்தியதோடு அப்போது நடைமுறையில் இருந்த மாகாணசபை முறைக்கு (Provincial Councils System) அப்பால் செல்வதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட வேளையில், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மாற்று யோசனைகளை முன்வைத்தது. அம்மாற்றுயோசனைகளில் மாகாணங்களுக்கு அசமத்துவமான முறையில் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் பகிர்தல் (Asymmetrical Distribution) என்ற யோசனையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதாவது தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சிங்கள மக்கள் பெருபான்மையாக வாழும் மாகாணங்களை விட கூடிய அதிகாரங்கள் வழங்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. அப்போது வழங்கப்படவேண்டிய அதிகாரங்களின் அளவு பற்றியே கருத்துச் சொல்லப்பட்டது. அதிகாரப் பகிர்வு அசமத்துவம் இருக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி அப்போது விவாதம் எழவில்லை, ஆகையால் அசமத்துவமான அதிகாரப்பகிர்வு என்ற விடயம் போதிய கவனத்தைப்  பெறவில்லை. இன்று பல ஆண்டுகள் கடந்த பின்னர் அசமத்துவமான வகையில் அதிகாரத்தை பகிர்தல் என்னும் விடயம் கவனத்திற்குரியதொன்றாக ஆகியுள்ளது. இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள அதிகாரப் பரவலாக்கல் முறையில் பொருத்தமான வகையில் எவ்வித மாற்றங்களைப் புகுத்தலாம் என்று சிந்திக்கும் போது இவ்விடயம் முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது. இப்பின்னணியில் 1978 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் புதிய அரசியல் யாப்பின் படி பிராந்திய அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்பட்டதை ஆராயவுள்ளோம். அப்போது அந்நாட்டில் வெவ்வேறு பிராந்தியங்களுக்கு அதிகாரத்தையும் பொறுப்புக்களையும் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வழிமுறைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பிராந்திய மட்ட அதிகாரத்தில் பிராந்தியங்களுக்கிடையே சமத்துவமின்மை அல்லது அசமத்துவம் எற்பட்டது. இவ்விடயம் இலங்கை பற்றிய விவாதத்திற்குப் பொருத்தமுடையது.

1.  அசமத்துவ அதிகாரப் பகிர்வு எண்ணக்கரு

சமஷ்டி முறை அல்லது வேறு முறைகளில் அதிகாரப் பகிர்வு இடம்பெறும். இந்த அதிகாரப் பகிர்வு இரு வகையான அசமத்துவத்தை கொண்டிருக்கலாம்.

அ) நாட்டில் பல்வேறு பிராந்திய அலகுகள் இருக்கும். இந்த அலகுகளிடையே அதிகாரம் வேறுபட்ட அளவில் இருக்கும். இது ஒருவகை அசமத்துவம்.

ஆ) மத்தியில் இருக்கும் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட அலகு தொடர்பாக இருக்கும் அதிகாரம் இன்னொரு அலகு தொடர்பாக இருக்கும் அதிகாரத்திலிருந்து வேறுபடலாம், இது இரண்டாவது வகை அசமத்துவம்.

சமஷ்டி முறைமையில் அசமத்துவம் இருப்பது அம் முறையை உருவாக்குவதற்கான சமத்துவமான பங்கேற்பு என்ற தத்துவத்திற்கு முரண்பட்டது. ஆதலால் சமஷ்டி அலகுகளிடை சமத்துவமின்மைப்  பங்கேற்பில் சமநிலையைக் குலைத்து, அதன் குலைவிற்கு வழிவகுக்கும் எனக் கருதப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் யேர்மன் தேசத்து சமஷ்டி இணைப்பு ஓர் அலகு அதிக அதிகாரம் படைத்ததாய் ஏனைய அலகுகளைவிட மேலாதிக்கம் பெற்றதால் தோல்வியுற்றதை ஒரு வரலாற்று உதாரணமாகக் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே சமஷ்டி அலகுகளிடையே சமத்துவம் இருக்க வேண்டும் என்ற கருத்தை சமஷ்டி பற்றி எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள் வலியுறுத்தினர். K. C Wheare என்ற எழுத்தாளர் எழுதிய சமஷ்டி அரசாங்கம் என்ற நூலில் சமஷ்டி அலகுகள் ஒன்று மற்றதற்கு அதிகாரப் பகிர்வில் சமத்துவமாக இருப்பதோடு ஏனைய அலகுகளுக்கோ அல்லது மத்திய அரசாங்கத்திற்கோ கீழ்ப்பட்டதாகவும் இருக்கக்கூடாது என்று சமஷ்டி பற்றி வரைவிலக்கணம் கூறினார். கே. சி. வியர் கூறிய கருத்தின் ஓர் அம்சமான சமஷ்டி அலகுகளிற்கிடையில் அதிகாரப் பகிர்வில் சமத்துவம் என்பதைப் பொதுவாக சமஷ்டி முறைமை ஏற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அம்சமான சமஷ்டி அலகு மத்திய அரசுக்கு கீழ்ப்பட்டதாக இருத்தலாகாது என்ற கருத்து இன்று ஏற்கப்படுவதில்லை.

எல். வாட்ஸ்

சமஷ்டி அரசு முறை என்ற விடயத்தில் நிபுணரான ரொனால்ட் எல். வாட்ஸ்  என்பவர் அ) அரசியல் அசமத்துவம் ஆ) அரசியல் யாப்பு அசமத்துவம் என்ற இருவகை அசமத்துவங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அல்லது மாநில அரசுகளின் செல்வாக்கும் ஒப்பீட்டளவிலான அதிகாரமும் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய காரணிகளின் பாதிப்பால் வேறுபடும். இவ்வாறு ஏற்படும் வேறுபாட்டை அரசியல் அசமத்துவம் என்று குறிப்பிட்டார். எல்லா சமஷ்டி நாடுகளிலும் இவ்விதமான அரசியல் அசமத்துவம் உள்ளது. பரப்பளவில் பெரியதான மாநிலம் சனத்தொகையில் பெரிய மாநிலம் ஆகியன கூடிய செல்வாக்கும் அதிகாரமும் கொண்டிருக்கும். இவ்வாறே ஏனைய வளங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். வளங்கள் மிக அதிகமாக உள்ளவை தேசிய அலுவல்களில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தும். வளங்கள் குறைந்த வறிய மாநிலங்கள் தேசிய அலுவல்களில் குறைந்தளவு செல்வாக்குடையனவாய் இருக்கும். பெல்ஜியம் சமஷ்டியில் பிளமிஷ் பிராந்தியம் நாட்டின் சனத்தொகையின் 57% சனத்தொகையைக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலம் மொத்த மக்கள் தொகையின் 16% கொண்ட பெரிய மாநிலம். இவை சிறந்த சமகால எடுத்துக்காட்டுகள். ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, றோட்ஸ் தீவு என்ற இரண்டையும் ஒப்பிட்டால் சமூக, பொருளாதார, அரசியல் அசமத்துவத்தின் இயல்பு தெள்ளெனப் புலப்படும். சமஷ்டி நாடுகளின் பொருளாதார சமத்துவமின்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்வது வழமை. (இந்தியா நல்ல உதாரணம்). இரண்டாவது சபையான மேற்சபையில் எல்லா அலகுகளிற்கும் சமத்துவமான உறுப்புரிமையை வழங்குவது (ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து) போன்ற அரசியல் யாப்புக் காப்பீடுகள் பல நாடுகளில் உள்ளன. இக்காப்பீடுகள் சமத்துவமின்மையின் பாதக விளைவுகளைக் குறைக்க உதவுகின்றன. 

வாட்ஸ் கருத்துப்படி சட்ட ஆக்கம், நிர்வாகம் ஆகிய இரு துறைகளின் அதிகாரம் வெவ்வேறு அலகுகளிற்கு வெவ்வேறு அளவுகளில் பங்கிடப்பட்டிருக்கும் போது அரசியல் யாப்பு அசமத்துவம் தோன்றும். இவ்வாறான அரசியல் யாப்பு அசமத்துவம் சமஷ்டிகளிடையே காணப்படும் பொதுவான இயல்பு எனக் கூறமுடியாது. பிராந்தியங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்கும் வரலாற்று பண்பாட்டு காரணங்களுக்காகவும் சில நாடுகளில் அரசியல் யாப்பு அசமத்துவம் ஏற்படுத்தப்படும். அதிகாரப் பகிர்வில் மூன்று வகையான அணுகுமுறைகள் சமஷ்டி நாடுகளில் பின்பற்றப்படுகின்றன என்றும் வாட்ஸ் கூறுகின்றார். 

  1. சில மாநில அரசுகள் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரத்தை கூடுதலாக அல்லது குறைவாக ஆக்குதல். 
  2. சில குறிப்பிட்ட மாநில அரசுக்களின் நியாயாதிக்கத்தை பொதுவான நியமத்தில் இருந்து வேறாக வகுத்தல். 
  3. சில மாநில அரசுகளின் அதிகாரங்களும் நியாயாதிக்கமும் அசமத்துவமான முறையில் இருப்பதை அனுமதித்தல்.

என மூன்று அணுகுமுறைகளையும் குறிப்பிடும் வாட்ஸ் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்களையும் தருகின்றார்.

அரசியல் யாப்பு அசமத்துவத்தை உருவாக்கும் அவசியம் உணரப்பட்டுள்ளது. ஆயினும் இத்தகைய அசமத்துவங்கள் சமஷ்டி அலகுகளிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம். கனடாவின் கியுபெக், இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் என்பன அரசியல் யாப்பு அசமத்துவங்களுக்கு உதாரணங்களாகும். ஒரு மாநில அரசு அசமத்துவமான ஒழுங்குமுறை தேவையென கேட்கும் போது இன்னொரு மாநில அரசு அப்படிச் செய்யக் கூடாது என்று பிரச்சினை கிளப்பும். இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு விசேட அந்தஸ்து வழங்கியமை இந்தியாவில் சர்ச்சைக்குரிய விடயமாக தொடர்ந்தது. பிரச்சினைக்குரிய காலம் முழுவதும் ஜம்மு – காஷ்மீர மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளது. இருப்பினும் அரசியல் யாப்புச் அசமத்துவம் மாநில அரசுகளிடையேயான ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1987இன் ஸ்பானிய அரசியல் யாப்பு இவ்வகையில் தனித்துவம் மிக்கது. ஸ்பெயினில் இவ் அரசியல் யாப்பின் கீழ் உள்ள அசமத்துவமான உறவுகளும் அசமத்துவமான நிறுவன அமைப்புக்களும் அதற்கு இத்தகைய தனித்துவத்தை வழங்கியுள்ளன. 

2.  ஸ்பெயின் நாட்டின் அரசாங்கக் கட்டமைப்பும் அதிகாரப் பகிர்வும்

1978 ஆம் ஆண்டின் புதிய அரசியல் யாப்பு ஸ்பெயின் நாட்டின் பெரும்பான்மை மக்களால் அவ்வாண்டு டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப்பின் போது அங்கீகரிக்கப்பட்டது. 87.9 வீத வாக்காளர்கள் “ஆம்” என வாக்களித்தனர். இது ஜனநாயக முறையொன்றையும் அதிகாரப் பகிர்வு முறையையும் ஸ்பெயின் நாட்டிற்கு வழங்கியது. இந்த அரசியல் யாப்பு ஆக்கப்படுவதற்கு முந்திய கால அரசாங்கம் பிராங்கோ என்ற சர்வாதிகாரியின் கையில் இருந்தது. பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி மிகையான மத்தியப்படுத்திய  ஆட்சி முறையாக இருந்தது. பிராந்திய அரசியல் அலகுகளுக்கு சிறு விடயங்களில் கூட அதிகாரம் இல்லாமல் மத்தியிலிருந்து முடிவுகள் எடுக்கப்படும் ஆட்சி முறையாக இது விளங்கியது. ஜனநாயகச் சீர்திருத்தங்களைக் கோரியும் அதிகாரத்தைப் பரவலாக்கும் படி கோரியும் மக்கள் நடத்திய கிளர்ச்சிகள் நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்தன. பிராங்கோவின் வீழ்ச்சியுடன் இந்தக் கோரிக்கைகள் மீண்டும் உயிர்பெற்று ஜனநாயக அமைப்பு ஒன்றை உருவாக்கும் அரசியல் யாப்புச் செயல்முறை தொடங்கியது. 

அரசியல் யாப்பினை வரைவதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது. இதன் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு அரசியல் போக்குகளையும் பிரதிபலிப்பவர்களாய் இருந்தனர். புதிய அரசியல் யாப்பு அடிப்படையானதும், ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப்பார்க்க முடியாததுமான இரண்டு சமூகக் கோரிக்கைகளை உள்ளடக்கியதாய் இருந்தது. அவையாவன:-

  • குடிமக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் ஜனநாயக நிறுவனக் கட்டமைப்பு ஒன்றினுள் நிலைபெறச் செய்தல்.
  • சுயாட்சியை கோரி நிற்கும் சமூகங்களையும் அரசியல் சுயாட்சியுடையனவாய் ஆக்கி அவற்றின் கோரிக்கைக்கு மதிப்பும் அங்கீகாரமும் வழங்குதல். 

முதலாவது கோரிக்கையான நாடாளுமன்ற முறையில் அமைந்த ஜனநாயக நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்றினர். அரசியல் யாப்பின் முதலாவது உறுப்புரை ஸ்பெயின் நாட்டினை விடுதலை, நீதி, சமத்துவம், பன்மைத்துவம் ஆகிய உயர் விழுமியங்களைக் கொண்ட சமூக ஜனநாயக அரசியல் சட்டத்தை உடைய நாடு என்பதாக வருணித்தது. ஸ்பெயின் நாடு “நாடாளுமன்ற முடியாட்சி” ஆக அமைந்ததோடு முழுமையுடைய உரிமைகள் சாசனமும் யாப்பில் உள்ளடக்கப்பட்டது. மன்னர் நாட்டின் அரசியல் தலைவர் எனவும் ஐக்கியத்தின் அடையாளக் குறியீடு எனவும் கருதப்பட்டார். மத்திய சட்டசபை இரு வகைகளை கொண்டது. கீழ்ச்சபை பிரதிநிதிகள் சபை  எனவும் மேற்சபை “செனற்” எனவும் அழைக்கப்பட்டன. செனற் சபையின் ஒரு பகுதியினர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டோராய் இருந்தனர். அச்சபை அரசியல் சட்டவாக்கத்தில் துணைநிலை வகிபாகத்தை கொண்டதாய் இருந்தது. அரசாங்கம் நிர்வாக அதிகாரத்தை உடையது. அது நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு பொறுப்புக் கூறும் கடப்பாடுடையது. அரசாங்கத் தலைவரான பிரதமர் கீழ்ச்சபையினால் தெரிவு செய்யப்படுவார். அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் அரசுத் தலைவரான பிரதமரின் சிபார்சின் படி அரசரால் நியமிக்கப்படுவார். நீதித்துறை அதிகாரம், நீதி அதிகாரத்திற்கான பொதுசபை என்ற அமைப்பினால் பிரயோகிக்கப்படும். 

இந்தச்சபையில் உச்ச நீதிமன்றத்தின் தலைவரும் பிற நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், திறமைவாய்ந்தோராக ஏற்புடைமை பெற்ற சட்டவாளர்கள் ஆகியோரில் இருந்து தெரிந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகிப்பர். 12 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் யாப்பு நீதிமன்றம் ஒன்றும் இருக்கும். உறுப்புரை 159 இன் படி அரசியல் யாப்பு நீதிமன்றம்,

அ). ஸ்பெயின் நாடு முழுமையிலும் நியாயாதிக்கம் உடையதாகவும் 

ஆ). சட்டங்கள் பிரமாணங்கள் என்பன அரசியல் யாப்பிற்கு அமைவானவையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உடையதாகவும்

இ). தனிநபர்களின் உரிமை மீறல்களை விசாரிக்கும் அதிகாரம் உடையதாகவும்

ஈ). அரசுக்கும் சுயாட்சியுடைய சமூகங்களுக்கும் இடையிலான பிணக்குகள்  என்பவற்றையும் தீர்மானிக்கும் நியாயாதிக்கம் உடையதாகவும் இருக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சுருங்கக்கூறின் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு நாடாளுமன்ற ஜனநாயக மாதிரியில் வடிவமைக்கப்பட்டதாகும். 

இரண்டாவது அடிப்படையான சமூகக்கோரிக்கை அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஸ்பெயின் மக்கள் சமூகங்களிடமிருந்து எழுந்ததாகும். பிராந்திய மட்டத்தில் சுயேச்சையான சமூகங்களிற்கு தனித்துவம் மிக்க புத்தாக்கமான அதிகாரப் பகிர்வுகள் திட்டத்தை அரசியல் யாப்பு வழங்கியது. மாகாண அரசாங்கங்களும் உள்ளூர் மட்டத்தில் உள்ள நகரசபைகளும் (முனிசிப்பல் சபைகள்) சுயாட்சி அதிகாரமுடையனவாக அமைக்கப்பட்டன. மாவட்ட நிர்வாக அலகுகள் “கவுண்டி”  எனப்படும் சிறு அலகுகள் என்பன ஆட்சி அமைப்பில் பங்கு கொண்டன. இவ்வாறான பல அமைப்புக்களில் எமது கவனத்திற்குரிய அமைப்புக்களாக 1978 அரசியல் யாப்பின் படி உருவாக்கப்பட்ட பிராந்தியங்கள், சுயாட்சியுடைய சமூகங்கள்  என்ற புதிய நிறுவனங்களாக விளங்குகின்றன. இவை ஸ்பெயினின் வெவ்வேறு பிராந்தியங்களினதும், தேசிய இனங்களினதும் இருப்பையும் அவற்றின் சுயாட்சிக்கான உரிமையின் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தி நிற்பன. ஆயினும் அரசியல் யாப்பு ஸ்பெயின் நாட்டின் தேசிய இனங்கள் எவையெனக் குறிப்பிடவில்லை. அவற்றுக்கான அதிகாரங்கள் எவையெனவும் அரசியல் யாப்பு குறிப்பிடவில்லை. அரசியல் யாப்பில் பின்வரும் வாசகங்கள் உள்ளன. 

‘வரலாறு, பண்பாடு, பொருளாதாரம் ஆகிய இயல்புகளையுடைய எல்லைப்புற மாகாணங்களும் வரலாற்றுப் பிராந்தியம் என்ற அந்தஸ்து உடைய தீவுப்பகுதிகளும் மாகாணங்களும் சுயாட்சிச் சமூகங்களாக தம்மை அமைத்துக் கொள்வதன் மூலம் சுயாட்சியைப் பெற்றுக்கொள்ளலாம்.’

மேற்குறித்த வாசகம் அரசியல் யாப்பின் உறுப்புரை 143 (1) இல் காணப்படுகிறது. மேற்குறித்த வரைவிலக்கணப்படி தகுதியுடைய சமூகங்கள் சுயாட்சியுடைய சமூகங்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளும் நடவடிக்கையைத் தாமே தொடங்குதல் வேண்டும். தமது பிராந்தியத்தின் மக்களின் அங்கீகாரத்தையும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டு  தமக்குத் தேவையான அதிகாரங்களை “Statues Of Autonomies” என்ற சட்டங்களின் வடிவில் நிறைவேற்றிப் பெறுதல் வேண்டும். அரசியல் யாப்பு பின்வரும் இரு பிரிவுகளான தேசியங்களைக் குறிப்பிடுகிறது.

 அ.) வரலாற்று தொடர்ச்சியுடைய தேசிய இனங்கள்

 ஆ.) வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தேசிய இனங்கள், இனக் குழுமங்கள் 

இவற்றுள் வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள தேசிய இனங்கள் கூடிய அளவு சுயாட்சியைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உடையவை. ஸ்பெயின் நாட்டின் அரசியல் யாப்பின் படி ஒவ்வொரு அலகுகளின் அதிகாரங்களும் பொறுப்புக்களும் அந்த அலகுகளாலேயே சுயமாக தேர்ந்து கொள்ளப்படவேண்டியவை. அந்நாட்டின் அதிகாரப் பகிர்வு சமத்துவமற்றதாக, அசமத்துவம் என்ற இயல்பைக் கொண்டதாக இருப்பதற்குரிய பிரதான காரணம் இதுவே. அசமத்துவமான அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய்வதற்கு முன்பு ஸ்பெயின் எவ்வாறு மிகையான மத்தியப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி முறையாக நீண்ட காலம் இருந்து வந்ததென்பதையும் அங்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கும் தேவை எழுந்த சூழலையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.

தொடரும்.

குறிப்பு :

பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க : இக்கட்டுரை ஆசிரியர் ரஞ்சித் அமரசிங்க பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் (1998 – 2008), கலைப்பிரிவின் பீடாதிபதியாகவும் (2003 – 2006) பணியாற்றினார். இலங்கையின் இன முரண்பாடுகள் அதிகாரப் பகிர்வு, சமாதான உடன்படிக்கைகள், இடதுசாரி அரசியல் என்பன தொடர்பான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இலங்கையின் றொட்ஸ்ரிய இயக்கத்தின் வரலாறு பற்றியதான புரட்சிகர இலட்சியவாதமும் பாராளுமன்ற அரசியலும் : இலங்கையின் றொட்ஸ்ரிய இயக்கம் பற்றிய ஓர் ஆய்வு  (Revolutionary Idealism and Parliamentary Politics: A Study of Trotskyism in Sri Lanka – 1998 – ISBN : 9559102250) என்னும் வெளியீடு இவரது குறிப்பிடத்தகுந்த ஆய்வு நூலாகும். 2014ஆம் ஆண்டு இவர் காலமான போது இவரின் மாணவரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான லக்சிறி பெர்ணாண்டோ “கல்வி என்பது மேல்நோக்கிய சமூக இயக்கத்திற்கான கடவுச் சீட்டல்ல, சமூக சேவைக்குரிய முதன்மையான ஒரு சமூக ஒப்பந்தமாகும் எனும் கோட்பாட்டை அவரது ஆசிரியப் பணியில் பின்பற்றினார்” என்று இவரது தனித்துவமிக்க அர்ப்பணிப்பான சேவை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். Power Sharing- International Experience என்னும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பின் இணைப் பதிப்பாசிரியரான இவர், அத்தொகுப்பில் இடம்பெற்ற எட்டாவது அத்தியாயமாக அமையும் கட்டுரையின் ஆசிரியருமாவார். குறித்த அக்கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கு குறைந்த பட்சம் சமஷ்டி முறையிலான தீர்வொன்றே பொருத்தமானதென்று என ரஞ்சித் அமரசிங்க நம்பிக்கை கொண்டிருந்தார்.


ஒலிவடிவில் கேட்க

8593 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)