உணர்ச்சி நுண்ணறிவும் (EQ) புது வணிகத்தை மேம்படுத்தலும்
Arts
10 நிமிட வாசிப்பு

உணர்ச்சி நுண்ணறிவும் (EQ) புது வணிகத்தை மேம்படுத்தலும்

June 26, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது” – திருக்குறள் (29)

விளக்கம்:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள்உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

உலகிலுள்ள அரசியல் தலைவர்களையோ அல்லது வணிகத் தலைவர்களையோ பார்த்தால் அவர்கள் தத்தம் துறைகளில் சிறப்பான கற்றல் அறிவையும்,  வாழ்க்கையின் அனுபவங்களையும் இணைப்பதனூடான தொழில் தேர்ச்சியையும், தலைமைத்துவத்தையும்  அடைந்திருப்பார்கள். அவர்களின்   அறிவுத்திறனின் நுண்ணறிவு (IQ) மிகவும் அதிகமாக இருக்கும். அத்தகைய அறிவுத்திறனோடு, உணர்ச்சி நுண்ணறிவும் வாய்க்கப்பெற்றவர்களே அதியுன்னதமான வெற்றிகளை அடைவார்கள். இந்தவிடயம் பற்றி எனது நண்பரான சிவா நடராஜா குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானவை. சிவா நடராஜா, இலங்கையில் மலையகத்தில் பிறந்து அங்கே பெரும் சிரமத்தின் மத்தியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, இலங்கையில் பேராதனைப் பல்கலைகழத்தில் மின்னணுப் பொறியியல் பட்டம் பெற்றவர். அதன் பின் வட அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து பல தொழில் நிறுவனங்கள் ஆரம்பித்து வெற்றி பெற்றவர். 

“செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நாம் உணர்ச்சி நுண்ணறிவு (EQ) பற்றி அறிந்து இருப்பது இல்லை. சொந்த வாழ்க்கை மற்றும் புதுத்தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் நான் இதனை செயற்கை நுண்ணறிவை விட முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்” என்று அவர் சொல்கிறார்.

அவர் சொன்னது போல் உணர்ச்சி நுண்ணறிவானது மனித வரலாற்றின் ஆரம்ப காலங்களில் இருந்தே தொடர்ச்சியாக இருக்கவே செய்கின்றது. இந்த உணர்ச்சி நுண்ணறிவினைச் சரியான வழியில் ஒரு கருவியாகப் பிரயோகித்தே மிகப்பெரும் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வாகப் பல புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். சாதாரண மக்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையேயான வேறுபாட்டை இந்த உணர்ச்சி நுண்ணறிவே தீர்மானித்தது.

emotional-intelligence

“ஆரம்பகட்ட நிலையிலுள்ள நிறுவனங்களில் (Startup Companies) தினமும் ஏதாவது  பிரச்சினை உருவாகிக்கொண்டே இருக்கும். அடுத்த நாள் எப்படி இருக்கும் என்று தெரியாது. எனவே எமது கோபங்களை வெளியே காட்டாது எமது குழுவை நிதானமாக அவதானித்து பணி செய்யவேண்டும். நான் கடைபிடிப்பது ஒரு எளிய விடயம். ஒரு காட்டமான மின்னஞ்சல் அல்லது விடயத்தைச்  சொல்ல வேண்டுமென்றால் அதனை 24 மணி நேரம் தள்ளி போடுவேன். அடுத்த நாள் அந்த விடயத்தைக் கொஞ்சம் நிதானமாக வெளிப்படுத்தக்கூடிய சொற்கள் எனக்கு கிடைக்கும். அதனால் உணர்ச்சிவசப்படுவதைத் தடுக்க முடியும்” என்று சிவா நடராஜா சொல்வதைப் போல் எனக்கும் பல சந்தர்ப்பங்களில் கோபம் வரும் அல்லது விரக்தி வந்திருக்கிறது. ஆனால் அந்நேரங்களில் மனத்தை அடக்கி, சூழலுக்கேற்ப நடத்தையை இயல்பாக்குவதன்  மூலம் நிறுவனங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லலாம்.

 உணர்ச்சி நுண்ணறிவு பற்றி   கீழ்வரும் நான்கு அம்சங்களால் வரையறுக்கப்படுகின்றது.

  • சுய மேலாண்மை (Self-management): ஒருவர் தனது மனக்கிளர்ச்சி உணர்வுகள் மற்றும் நடத்தைகளைக் கட்டுப்படுத்தலாம். ஆரோக்கியமான வழிகளில் தன் உணர்ச்சிகளை அடக்கி அணுகலாம்.  மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களின் செயல்களை மாற்றிக்கொள்ளலாம்.
  • சுய விழிப்புணர்வு (Self Awareness): ஒருவர் தன் உணர்ச்சியானது,   எண்ணங்களையும், நடத்தைகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்று அடையாளம் கண்டு, தன் பலம் மற்றும் பலவீனங்களை  உணர்ந்து தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும்.
  • சமூக விழிப்புணர்வு (Social Awareness): ஒருவர் தன்  உணர்வு மூலம் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் அவர்களின் இடர்பாடுகளையும் சரிவர உணர்ந்து செயல்புரிந்தால், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு குழு உணர்வு தோன்றும். நிறுவனப் பணிகள் இதன் மூலம் சிக்கலற்றதாக நடைபெறும்.
  • உறவுநிலை மேலாண்மை (Relationship Management): ஒருவர் தனது குழுவுடன்   நல்ல உறவுநிலையைப் பேணுவதனூடாக, அசாத்தியமான காரியங்களைக் கூடச் செய்துமுடிக்கலாம். (சிவா நடராஜா இவ்வாறு குழுமட்டம், முதலீட்டாளர் மட்டம் என சகலரிடத்தும்  மேன்மையான உறவுநிலையைப் பேணி, நிறுவனத்தைத் திறம்பட நடத்துவதில் வல்லவர்)

உணர்ச்சி நுண்ணறிவைப் பற்றி அறிந்து,  அதை உணர்ந்து வாழ்க்கையை நடத்துவதன் மூலம் பல இழுபறிகளைக் குறைக்க முடியும். இதை வாழ்க்கையில் பின்பற்றும் ஒருவர், தான்மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் புரிந்து செயற்படுவதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள், முரண்பாடுகளைத்  முடியும்.

எனது நண்பரொருவர், அப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜொப்ஸுடன் வேலை செய்தார். அவர் 1980 ஆம் ஆண்டுகளில் ஸ்டீவ் ஜொப்ஸோடு வேலை செய்யும் போது, ஸ்டீவ் ஜொப்ஸின் செயல்களை தெரிந்து அதற்கேற்ப கவனமாக நடந்தார்களாம். எனது நண்பர் விபரிக்கும் போது ஸ்டீவ் ஜொப்ஸ் நல்ல உணர்ச்சி நுண்ணறிவு கொண்டவர் என்று தெரிந்தது. அவரது பிரமண்டமான மற்றும் வித்தியாசமான படைப்புகளுக்கு இந்த உணர்ச்சி நுண்ணறிவும் ஒரு காரணமாகும்.

  உணர்ச்சி நுண்ணறிவு வாழ்க்கையின் பல விடயங்களைப் பாதிக்கும். அவற்றில் சில:

  1. பள்ளி மற்றும் வேலை செயல்திறன்: பள்ளியில் மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறுவார்கள். அத்தோடு நண்பர்களைச் சேர்த்து அவர்களுடன் வாழ்நாள் முழுதும் நெருக்கமாக இருப்பார்கள். இதற்கு உணர்ச்சி நுண்ணறிவு ஒரு காரணம். நாங்கள் ஐம்பது வயது கடந்தும் மனம் விட்டு வெளியாக கதைப்பது எங்கள் பாடசாலை நண்பர்களிடம் தான். அதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்திருக்கும் வட்ஸப் (WhatsApp) குழுக்களே ஆதாரம். வேலை இடங்களைப் பார்த்தால் இயற்கையாகவே தலைவராக வருபவர்களுக்கு நல்ல உணர்ச்சி நுண்ணறிவு இருக்கும். அதன் மூலம் அப்படி இருப்பவர்கள்  பணிபுரியும் இடத்தில் எழும் சிக்கல்களை சுலபமாக கையாள்வார்கள். மற்றவர்களின் உணர்ச்சியை அறிந்து செயல்படுவார்கள். அதோடு எல்லோரையும் ஊக்குவித்து நன்றாக வேலை செய்யவைப்பார்கள்.  தற்போது, ஒருவரை பணிக்குத் தேர்வு செய்யும் போது,  உணர்ச்சி நுண்ணறிவையும் பரீட்சிக்கிறார்கள்.
  2. உடல் நலம்: உணர்ச்சி நுண்ணறிவானது அதை அனுசரித்து கவனமாக செயற்படாதுவிட்டால் ஒருவரது உடல் நலத்தை பெரிதாகத் தாக்கலாம். அதனால் உடல் அழுத்தங்கள் வரலாம். அது மட்டுமன்றி இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போல் பலவிதமான நோய்களும்  ஒருவரைத் தாக்கலாம். அதனால் உணர்ச்சி நுண்ணறிவில் சீராக வைத்திருக்க, மன அழுத்தங்களை கட்டுப்படுத்த பழக வேண்டும்.
  3. மன நலம்: கட்டுப்பாட்டுக்குள் இல்லாத உணர்வுகளும், அடக்கி வைக்க்கப்படும் எண்ணங்களும் மன நலத்தை பெரிதாக தாக்கும். அதனால் கவலை, ஏக்கம், மன அழுத்தம் போன்ற விளைவுகள் ஒருவருக்கு வரலாம். இவற்றால் மற்றவர்களுடன் தொடர்புகள் குறையும். அதனால் ஒருவர் தன்னைத் தனிமைப்படுத்தி விடுவார்.   உடற்பயிற்சி,  தியானம் என்பவற்றின் மூலம் அழுத்தங்களைக் குறைக்கலாம். இதற்குத்தான் எம் மூதாதையார் தியானப்பயிற்சியைத்  தினமும் செய்து வந்தார்கள்.
  4. சமூக தொடர்/அறிவு: ஒருவர் தனது உணர்ச்சிகளைச் சரிவரக் கணித்துச் செயற்படுவதால் அவரால் பிறரது மனங்களில் ஓடும் எண்ணங்களையும் உணர்ந்து அதற்கேற்ப செயற்படக் கூடியவராக  இருப்பார். இந்தப் பண்பின் மூலம் நம்பிக்கையானோர், நம்பிக்கையற்றோர் என்போரைப் பிரித்தறிந்து செயற்படுவார்கள்.  இது வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் முக்கியமான பண்பு.

தொடக்கத்தில் சிவா நடராஜா சொன்னதைப் போன்று, உணர்ச்சி நுண்ணறிவு ஆரம்ப தொழில் நிறுவனங்கள் தொடங்கி அதை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு முக்கியமானதானதாகும். உணர்ச்சி நுண்ணறிவின்படி, எமது மனத்தையும் உடலையும்  பயிற்சிமூலம் இசைவாக்கி, அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தொழில் துறையில் மட்டுமல்லாது, குடும்ப வாழ்க்கையிலும் வெற்றிபெற்று மகிழ்வோடு இருக்க முடியும். யோகாசனம், தியானம் என்பவற்றை சிறுவயதில் இருந்தே கடைப்பிடிப்பதனூடாக உணர்ச்சி நுண்ணறிவைப் படிப்படியாக வளர்த்து, அனைவரும் வெற்றியாளர்களாக மாறவும் முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8359 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்