நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு
Arts
11 நிமிட வாசிப்பு

நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்பு நிலை – கால்நடை மருத்துவத்தின் நிலைப்பாடு

June 30, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

அறிமுகம்

மனிதர்களிலும் விலங்குகளிலும் நோய் சிகிச்சைக்கும் நோய்கள் வராமல் தடுப்பதற்கும் நுண்ணுயிர்க் கொல்லிகள் [Antibiotics] பயன்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக ஆபத்தான நுண்ணுயிர்களால் [Bacteria] ஏற்பட்ட மிகக் கொடிய  நோய்களில் இருந்து மனிதர்களையும் விலங்குகளையும் பாதுகாத்த மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் அண்மை நாட்களில் பயனற்றவையாக மாற்றமடைந்து  வருகின்றன. குறிப்பாக, நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை [Antibiotic resistant] பெரும்பாலான நுண்ணுயிர்க்  கொல்லி மருந்துகளுக்கு தோன்றியுள்ளது.

Route of Antibiotic from Farm Animals to Humans

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பான நுண்ணுயிர்களின் அதிகரிப்பு மனித மற்றும் விலங்குகளின் சுகாதாரத்தில் பாரிய சவாலாகும். பல நோய்களுக்கு ஒரே தீர்வாக இருந்த நுண்ணுயிர்க் கொல்லிகள் பயனற்றுப் போகின்றமை அதிக  உயிரிழப்புகளுக்குக்  காரணமாக அமைவதாக உலக  சுகாதார அமைப்பு [world Health Organization] கூறுகிறது. அதி சக்தி வாய்ந்த முதலாம் தலைமுறை நுண்ணுயிர்க் கொல்லிகள் [1st Generation] பயன்படுத்துகை நிறுத்தப்பட்டு இரண்டாம், மூன்றாம்  தலைமுறை [2nd, 3rd Generation]  மருந்துகளின் பாவனைக்கு மனித  மருத்துவ உலகமும் கால்நடை மருத்துவ உலகமும் தள்ளப்பட்டுள்ளன. நுண்ணுயிர்க் கொல்லிகளின் உருவாக்கத்துக்கு நீண்ட கால ஆய்வும் அதிக செலவும்,அதி உச்ச தொழில் நுட்பமும் தேவைப்படும் அதேவேளை அந்த நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு எதிரான எதிர் நுண்ணுயிர்கள் தோன்ற சில நொடிப் பொழுதுகளே தேவைப்படுகின்றன. கடந்த பதினைந்து வருடத்தில் புதிதாக எந்தவித நுண்ணுயிர்க் கொல்லிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆபத்தான விடயமாகும்.

மனிதர் மருத்துவத்தில் முறையற்ற விதத்தில் நுண்ணுயிர்க் கொல்லிகளை  பயன்படுத்துதலே நுண்ணுயிர்க் கொல்லிகளின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைகின்ற அதேவேளை ஆடு, மாடு, கோழி போன்ற உணவு உற்பத்தி விலங்குகளில் முறையற்ற விதத்தில் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்துதல் மறைமுகமான விதத்தில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பைத் தோற்றுவிக்கும் காரணியாக அமைகிறது. அண்மைக் காலத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு  மற்றும் தாவரப் பயிர்ச் செய்கையிலும் நுண்ணுயிர்க் கொல்லிகள் பரவலாகப் பயன்படுவதை அவதானிக்க முடிகிறது. அதிகரித்த மனித உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள கோழி, மாடு மற்றும் பன்றிகளின் இராட்சதப் பண்ணைகள் [mega Farms]  சுகாதாரமாக இருக்க வேண்டிய காரணத்தால் அதிகளவு நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்துவதோடு மிக சிறிய பண்ணையாளர்களுக்கும் இலகுவாகக் கிடைக்கக்கூடியதாக சக்திமிக்க நுண்ணுயிர்க் கொல்லிகள் காணப்படுவதும் இந்த நிலையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. மேற்படி பண்ணைகளின் பால், முட்டை, இறைச்சியை நுகரும்  மனிதன் தனக்கு தெரியாமலேயே நுண்ணுயிர்க் கொல்லிகளையும் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு  நுண்ணுயிர்களையும் தனக்குள் அனுமதித்து விடுகிறான்.

இன்று உலகில் இடம்பெறும் கணிசமான மரணங்களில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பினால் நிகழும் மரணங்களும் அமைவது அதிர்ச்சிகரமான விடயமாகும். இன்றைய திகதியில் அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த மருத்துவத்துறையைக் கொண்ட நாடுகளில் கூட பல ஆயிரக்கணக்கான மரணங்கள் இந்த நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பால் நிகழ்கின்றன. பல வளர்முக நாடுகள் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனையை, குறிப்பாக உணவு விலங்குகளில் கட்டுப்படுத்திய போதும் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் வகைதொகையின்றி விலங்கு வளர்ப்பில் பாவிப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தப் பாரதூரமான விடயத்தை பொதுமக்களுக்கும் பண்ணையாளர்களுக்கும்  விழிப்புணர்வைத் தரும் விதமாகவும்  சுகாதாரமான விலங்கு உணவு உற்பத்தியை  ஊக்குவிக்கவும் ஒரே சுகாதார எண்ணக்கருவை [One Health Concept] வலுப்படுத்தவும் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. இதனை வாசிக்கும் பண்ணையாளர்களும் பொதுமக்களும் தாம் சார்ந்த சமூகத்தை விழிப்புணர்வு செய்வதோடு கடைப்பிடிக்கவும் வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நுண்ணுயிர்கள் என்பவை யாவை?

நுண்ணுயிரிகள் எனப்படுபவை கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய ஒற்றைக் கல உயிரினங்களாகும். இவை நிலம், நீர், தாவரம், விலங்கு என உலகில் சகல இடங்களிலும் பரவிக் காணப்படுவதோடு உலகில் அதிகமாகப் பரவி வாழும் உயிரினங்களாகவும் அமைகின்றன. இவை உலகில் முதலில் தோன்றிய உயிரினமாகவும்  நம்பப்படுகின்றன.

இவை இறந்த தாவர விலங்குகளை, கடினமான கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து உக்கச் செய்கின்றன. வளிமண்டல நைதரசனைப் பிரித்து மண்ணை வளப்படுத்துகின்றன. தமது செயற்பாடுகள் மூலம் பல உணவுப் பொருட்களை  உருவாக்கவும் செய்கின்றன.

நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை நன்மை பயப்பவை. சில நன்மையோ தீமையோ செய்யாதவை. சில, சந்தர்ப்பம் வரும் போது தீமை செய்பவை. மிகச் சிறிய தொகையின்  எப்போதும் தீமையே செய்பவை. தீமை விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உடலின் நோய் எதிர் சக்தி நலிவடையும் போது உடலின் பாதுகாப்பு அரண்களை  உடைத்து, மனிதன் மற்றும் விலங்குகளில் நோயை ஏற்படுத்துகின்றன. சில உயிரிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை [Immune System] தாக்கி நோயை ஏற்படுத்துகின்றன.

நுண்ணுயிர்க் கொல்லி என்றால் என்ன?

நுண்ணுயிர்களை தமது உயிர் இரசாயன செயல்கள் மூலம் அழிவடையச் செய்யும்  அல்லது அவற்றின் வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்யும் பதார்த்தங்கள்  நுண்ணுயிர்க் கொல்லிகள் எனப்படும். இவை பக்டீரியோ சைடல், பக்டீரியோ ஸ்டாடிக் என இரண்டு வகைப்படும். பக்டீரியோ சைடல், நுண்ணுயிர்களை முற்று முழுதாக அழிக்கும் அதேவேளை பக்டீரியோ ஸ்டாடிக், நுண்ணுயிர்களின் வளர்ச்சியைப் பாதிப்படையச் செய்கின்றன.

நுண்ணுயிர்க் கொல்லிகளின் சுவையான வரலாறு

his-discovery-of-penicillin-Alexander

அலெக்ஸாண்டர் பிளமிங் என்னும் உயிரியலாளர் 1928 ஆம் ஆண்டில் staphylococci  மற்றும் streptococci   நுண்ணுயிர்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் நடுவே அவசர  விடுமுறையில் செல்ல வேண்டி ஏற்பட்டதால் பரிசோதனைத் தட்டினை மூடாமல் சென்று விட்டார். விடுமுறை முடிந்து வந்த போது penicillium notatum என்னும் மதுவத்தால் மாசுபட்ட நிலையில் அந்தத் தட்டு காணப்பட்டது. அதிசயமாக அந்த மதுவ வகை உயிரினம்  காணப்பட்ட பகுதியில் மேற்படி  நுண்ணுயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தான் பென்சிலின் நுண்ணுயிர்க் கொல்லியின் கண்டுபிடிப்பின் அடிப்படையாகும்.  

இரண்டாம் உலக யுத்தத்தில் காயப்பட்ட பல இராணுவ வீரர்களின் கடவுளாக இந்த பென்சிலின் நுண்ணுயிர் விளங்கியது. பென்சிலின் மட்டும் இல்லாது இருந்திருந்தால் அவர்கள் மரணித்து இருப்பார்கள். பென்சிலினின் அதிசயத்தால் மருத்துவத்துக்கான நோபல் பரிசினையும்   அலெக்ஸாண்டர் பிளமிங் பெற்றுக் கொண்டார்.  

Antibiotic Deployment

ஒவ்வொரு நுண்ணுயிர்க்கொல்லிகளும் உருவாகிய காலப்பகுதி கடந்த பதினைந்து வருட காலத்தில் புதிதாக எந்தவித நுண்ணுயிர்க் கொல்லிகளும்  கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு [Antibiotic resistant] என்றால் என்ன?

நுண்ணுயிரிகள், நுண்ணுயிர்க் கொல்லிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல் ஆகும். தமது மூலக்கூற்று அதாவது மரபணு மட்டத்தில் எதிர்ப்பை உருவாக்கி விடுவதோடு மிக விரைவாகவும் அடுத்த சந்ததிக்கு கடத்தியும் விடுகின்றன.

Antibiotic resistant

இந்த நிலையை நவீன மருத்துவத்தின் சாவு மணி [End of modern medicine] என அழைக்கின்றனர். மிகச் சிறிய முள்ளு குத்தினால் கூட நீங்கள் மரணிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. சத்திர சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற நவீன மருத்துவ சிகிச்சைகள் நடைபெறாது பல உயிரிழப்புகள் மனித மற்றும் விலங்குகளில் இடம்பெறக் கூடும். இன்றைய திகதியில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புக் காரணமாக பல உயிரிழப்புகள் மற்றும் அதிக மருத்துவச் செலவுகளும் ஏற்படுகின்றன.

நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலைக்கு காரணங்கள் எவை?

  1. சுய மருத்துவம்.
  2. ஒழுங்கற்ற கண்காணிப்பு முறை மற்றும் ஒழுங்கமைக்கப்படாத கண்காணிக்கும் அமைப்புகள்
  3. நுண்ணுயிர்க் கொல்லிகள் மற்றும் அவற்றின் எதிர்ப்புத் தொடர்பான போதிய விழிப்புணர்வு இன்மை.
  4. சர்வதேசப் பயணம் மற்றும் வர்த்தகத்தின் அதிகரிப்பு.
  5. மருத்துவர் பரிந்துரைத்த அளவு  மற்றும் சரியான கால அளவில் மருந்துகளை உட்கொள்ளாமை.
  6. கால்நடைத் துறை, மீன் வளத்துறை மற்றும் வேளாண்மையில் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் முறையற்ற பாவனை.
  7. புதிய நுண்ணுயிர்க் கொல்லிகள் கண்டுபிடிக்கப்படாமை மற்றும் மிக விரைவாக நுண்ணுயிர்கள், நுண்ணுயிர்க் கொல்லிகளுக்கு எதிர்ப்பைப் பெறுதல். [விரைவான மரபணு மாற்றம் செய்வது மூலம்]
  8. பொதுச் சுகாதாரமின்மை.

கால்நடைகளில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை

கால்நடை மருத்துவத்தில் நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனை அதிகளவில் காணப்படுவதால் அங்கு நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு உயிரிகளின் அளவும் அதிகமாக உள்ளது. உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் கால்நடை வளர்ப்பில்தான் பாவிக்கப்படுகின்றன. விலங்குகளில் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்படும் அதேவேளை வளர்ச்சி ஊக்கிகளாகவும் பாவிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் மிகக்குறைந்த வலுவில் தொடர்ச்சியாக மேற்படி நுண்ணுயிர்க் கொல்லிகள் பயன்படுவதால் பல நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் இலகுவாக எதிர்ப்பு சக்தியைப் பெறுவதோடு தமது சந்ததிகளை எதிர்ப்புமிக்கவையாக உருவாக்கி விடுகின்றன. மனிதர்களைப் பாதிக்கும் சிலவகை சல்மோனெல்லா[salmonella], கம்பெய்லோபக்டர் [campylobacter], என்ரிறோகொக்கஸ் மற்றும் ஈ–கோலை [E.coli] நுண்ணுயிர்களின் மூலமாக கால்நடைகளே காணப்படுகின்றன. பல நாடுகளில் மேற்படி நுண்ணுயிர்களுக்குப் பாவிக்கப்படும் நுண்ணுயிர்க்  கொல்லிகளுக்கு எதிருயிர்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஆய்வுகளின் அடிப்படையில் விலங்குகளில் பாவிக்கப்பட்ட முறையற்ற நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனைதான் காரணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல நாடுகளில் மனித சுகாதாரத்தில் சவால் விடும் நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனை தடை செய்யப்பட்டுள்ள போதும் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இன்றும் ஆபத்தான மனித சுகாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் நுண்ணுயிர்க் கொல்லிகள் விலங்கு மருத்துவத்தில் பாவிக்கப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது.

விலங்குகளில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புக்குரிய காரணிகள்

  1. பெரிய பண்ணைகளில் [mega farms] நோய் சிகிச்சை மட்டுமின்றி வளர்ச்சி ஊக்கியாகவும் நோய்த் தடுப்பாகவும் காணப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனை.
  2. பண்ணையாளர்கள்  தமது அனுமானத்தின் அடிப்படையில் தமது விலங்குகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகளை கால்நடை மருத்துவரின்  ஆலோசனையின்றிப் பாவித்தல்.
  3. சக்திமிக்க நுண்ணுயிர்க் கொல்லிகள் சகல இடங்களிலும் கிடைத்தல். [விலங்கு உணவுக் கடைகள் தாராளமாக  தமது வாடிக்கையாளர்களுக்கு கடுமையான நுண்ணுயிர்க் கொல்லிகளை விற்பது  அவதானிக்கப்பட்டுள்ளது.]
  4. சட்ட விரோதச் சிகிச்சையாளர்களின் செயற்பாடு. [கால்நடை மருத்துவர்  தவிர்ந்த இதர கால்நடை மருத்துவ அலுவலக ஊழியர்கள், செயற்கை முறை சினைப்படுத்துநர்கள் சிகிச்சை செய்வது அவதானிக்கப்பட்டுள்ளது.]
  5. சில மருந்து நிறுவனங்கள் பண்ணையாளர்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்குதல்.
  6. மீள் பெறுகைக் காலம் [withdrawal period] சரியாக கடைப்பிடிக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்பட்ட விலங்குகளின் முட்டை, பால், இறைச்சி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படல்.
  7. நுண்ணுயிர்க் கொல்லிகளின் கலப்படத்தை கொண்ட பண்ணைகளின் கழிவுகள், குடிநீர் மற்றும் காய்கறித் தோட்டங்களை மாசுபடுத்தல்.
  8. இலங்கை போன்ற நாடுகளில் கால்நடைத் துறையில் நுண்ணுயிர்க் கொல்லிகளின் பாவனையை, விற்பனையைத் தடுப்பது தொடர்பான நடைமுறைச் சாத்தியமான இறுக்கமான சட்ட நடைமுறைகள் இல்லாமை.

கால்நடைகளில் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பை தடுப்பது எவ்வாறு?

  1. முடிந்தவரை பண்ணைகளைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருத்தல்.
  2. நோய் நிலைகளுக்கு சட்ட விரோதச் சிகிச்சையாளரை நாடாமல் கால்நடை மருத்துவரை  அணுகுதல்.
  3. சுய மருத்துவத்தைத் தவிர்த்தல்.
  4. நுண்ணுயிர்க் கொல்லிகள் பாவிக்கப்பட்ட விலங்குகளின்  உற்பத்திகளை அவற்றின் மீள்பெறுகைக் காலத்தின் பின்னரே விற்பனை மற்றும் பாவனைக்குப் பயன்படுத்தல்.
  5. விலங்குணவு கடைகள் மற்றும் இதர கடைகளில் கிடைக்கும் சக்திமிக்க ஆபத்தான நுண்ணுயிர்க்கொல்லிகளின் பாவனையை ஒழுங்குபடுத்தல். வைத்தியரின் பரிந்துரையின்றி விற்பதைத் தடுத்தல், மீறுபவர்களுக்குத் தண்டனை அளித்தல், விற்பனை உரிமங்களை இரத்துச் செய்தல்.
  6. பாடசாலை மட்டம் முதல் சகல பொதுமக்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு அளித்தல்.
  7. விலங்குகளுக்கு நோய் ஏற்படும் போது கால்நடை மருத்துவர் மூலம் முறையான ஆய்வு, பரிசோதனைச் செய்து சரியான மருந்தை, சரியான அளவில் சரியான கால அளவுக்கு முழுமையாக வழங்குவதோடு தேவையற்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.
  8. பல நோய்கள் சிகிச்சை அளிக்கத் தேவையற்றவை. விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறான நோய்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மூலம் சிகிச்சை செய்யத் தேவை இல்லை.
  9. சில நோய்களுக்கு இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்கள் மூலம் சிகிச்சை அளிக்கலாம். அவற்றுக்கு ஆரம்ப நிலையில் நுண்ணுயிர்க் கொல்லிகள் தேவைப்படாது. [உதாரணம்: வயிறு ஊதுதலின் ஆரம்ப நிலை] எனினும் கால்நடை வைத்தியரின் பரிந்துரையுடன் இவற்றைச் செய்தல் சிறப்பானது.
  10. பல நோய்கள் ஒரே மாதிரி அறிகுறிகளைக் காட்டுவதால் தன்னிச்சையாக வழமையான மருந்துகள் மூலம் சிகிச்சையாளிக்காது கால்நடை மருத்துவரின்  மூலம் சிகிச்சை செய்வது பொருத்தமானது.

உசாத்துணை

  1. Antibiotic use in food animals; Indian over view, ReAct Asia-pacific, Christian medical college, vellore, tamil nadhu,india.2018
  2. Antibiotic – growth promoters in feed animals. Peter hughs and John heritage, division of microbiology, school of biochemistry and bio chemistry, university of leeds
  3. Antimicrobial resistance [AMR];current situation and practical problems, srilanka medical associaltion newsletter November 2016. Dr.kushali jeyathilake, consultant microbiologist sri. jeyawardanapura, GH, Nugegoda.
  4. Drivers, dynamics and epidemiology of antimicrobial resistance in animal production FAO publication, B.A.Wal l,  A.Matous, L.Marshal  and  D.U.Pieffer 2011
  5. உழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல் பன்னாட்டு கருத்தரங்கு மலர். 2019
  6. கால்நடை கதிர் – தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாதாந்த சஞ்சிகை
  7. கோழி நண்பன் – சஞ்சிகை


ஒலிவடிவில் கேட்க

6890 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்