இருப்பு, இழப்பு, நினைவு – ஊர்களைச் சுவடியாக்கஞ்செய்தல் - விரிவான உரையாடலுக்கான முற்குறிப்பு
Arts
21 நிமிட வாசிப்பு

இருப்பு, இழப்பு, நினைவு – ஊர்களைச் சுவடியாக்கஞ்செய்தல் – விரிவான உரையாடலுக்கான முற்குறிப்பு

July 5, 2023 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

“ஊரான ஊரிழந்தோம் ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்”
(கவிதா நிகழ்வு – எங்கள் மண்ணும் இந்தநாட்களும் :1985)

ஊர்களைச் சுவடிப்படுத்தல் என்பது ஊரை அதன் அனைத்து அம்சங்களோடும் அவதானித்தல்,  அடையாளம் காணல், அது தொடர்பான அனைத்து விடயங்களையும் சேகரித்தல், அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட முறையிற் பதிவுசெய்தல் ஆகியவற்யோடு கூடிய ஒரு செயற்பாடாகும். அது ஊர்களை வரலாற்று நிலைப்படுத்தி, உள்ளூர் வரலாற்றுச் சட்டகத்திற்கு வலுச்சேர்க்கிறது. அத்துடன் ஊர்களை ஆற்றல்மிக்க முறையில் பராமரித்தல், நிர்வகித்தல், பயன்படுத்துதல், பாதுகாத்தல்  முதலியவற்றுக்கான முதலீடாகவும் காணப்படுகிறது.


எப்போது நாம் ஊரை இழந்தோம்? எப்போது ஊர் நினைவாகியது? அது எப்போது கழிவிரக்கமாயும், முடிவடையாத – இனிச் சென்றடையவே முடியாத புலமாயும், மன வலியுமாகவும் மாறியது?

இத்தகைய கேள்விகளின் பகைப்புலத்திற்றான் ஊரை சுவடியாக்கஞ் செய்தல் என்ற செயற்பாட்டின் இன்றியமையாத தேவை முதன்மை பெறுகிறது. பொதுப்படையாகவே ஊர் என்பது ஒரு மாறும் பொருண்மை (changing phenomenon). ஊர்கள் தலைமுறைகள் தோறும் மாறுகின்றன. பலவேளைகளில் ஒரு தலைமுறைக்குள்ளாகவே  பலவேறுபட்ட சமூக, அரசியல், பொருளாதார, வரலாற்று நிலைமாற்றங்கள் மற்றும் இயற்கைக் காரணிகள் அவற்றை மாற்றியமைத்து விடுகின்றன.  இத்தகைய பின்னணியில் ஊரைச் சுவடியாக்கஞ் செய்தல் என்பது சமூகமொன்றை – அதன் சிறப்புடைமைகளை வரலாற்றக்கஞ் செய்யுமொரு செயற்பாடாகும். அது சமகாலத்திலிருந்து கடந்தகாலத்தையும், எதிர்காலத்தையும் நோக்கும் முறையாகும். இன்னொருவகையில் அது தேசக்கட்டுமானத்தினது அடிப்படைகளில் ஒன்றாகவும் அமைகிறது. ஏனெனில் நாடென்பது ஊர்களின் கூட்டமைப்பாகும். இப் பின்னணியில் ஊர் வரலாறும், ஊர்களது வலுவுடைய இருப்பும் தேசமொன்றின்  மிக முக்கியத்துவமுடைய தேவைப்பாடாகும். இத்தகைய பின்னணியிற்றான் UNESCO மற்றும் ICOM முதலிய சர்வதேச அமைப்புக்கள் மரபுரிமை – வரலாற்று முதன்மையுடைய கிராமங்களைச் சுவடியாக்கஞ் செய்தலில் கவனஞ் செலுத்தியுள்ளன.  

ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை ஊரைச் சுவடியாக்கஞ் செய்தல் என்பதற்கான தேவை UNESCO மற்றும் ICOM முன்வைக்கும் காரணங்களை விடவும் அதிகப்படியானது. குறிப்பாக பல்லாண்டுகால அரச ஒடுக்குமுறை ஈழத்தமிழர்கள் மத்தியில் அவர்களது ஊர்களை சுவடியாக்கஞ் செய்தலது தேவையை அதிகரித்துவிட்டிருக்கிறது. அந்தவகையில் அதன் கனபரிமாணமும் அதிகம். எனவே அதனை உள்ளூர் அனுபவங்களது வழிகாட்டலில் முன்னெடுக்கவேண்டும். அது சரியாகச் செய்யப்படும் இடத்தில் ஊரைச் சுவடியாக்கஞ் செய்தலின் புதிய பரிணாமங்களை ஈழத்தமிழர்கள் உலகத்திற்கு ஒரு பதிய அனுபவமாகத் தரலாம். அவ்வகையில், இலங்கையில், சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் உருவாக்கிவிட்ட முடிவடையாத உள்ளூர் யுத்தமும், அதன் உடன்விளைவுகளான இடவழிவுகள்,  இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகள், உயர்பாதுகாப்புவலய உருவாக்கம் முதலான காரணங்களும், மற்றும் மகாவலி அபிவிருத்தித் திட்டம், தொல்பொருளியற்துறை, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், முப்படைகள் என்பனவற்றிற்கு ஊடான  சிறுபான்மையினரின் நிலங்களை அபகரிக்கும் அரச திட்டங்களும் உருவாக்கிவிட்டுள்ள நிலைவரங்கள் யாவும் சேர்ந்து பகுதியாக அல்லது முழுமையான ஊரிழப்பு என்ற விடயத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் கூர்மையான பிரச்சினையாக்கி விட்டிருக்கின்றன.  இது ஊர்களது சமூக வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் முதன்மைப்படுத்தியதுடன் அதனைச் சுவடிப்படுத்தலையும் முதன்மைப்படுத்துகிறது.  

அதுமட்டுமின்றி பல தசாப்தகாலமாக ஊரைவிட்டு வெளியேற வேண்டியிருந்த நிர்ப்பந்தங் காரணமாக ஊர்கள் பலவாண்டுகள் கழித்து இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டாலும் அவை சிதைந்து – உருக்கெட்டு போயுள்ளமையும், இடப்பெயர்வும், புலப்பெயர்வும் மக்களை புதிதான வேறிடத்தில் பதியன் செய்துவிட்ட காரணத்தாலும் மீள்குடியேற்றம் என்பதும் சவால்மிக்க ஒன்றாகவே நடைமுறையில் உள்ளமை பல ஊர்களை பெரும்பாலும் மக்களற்ற தரிசுகளாக்கி விட்டுள்ளது.  ஊர் பலருக்கு இன்று நினைவாகியும் – சிலவேளை குற்றவுணர்வாயும் ஆகிப்போயுள்ளது. மக்களை அரசியல் மயப்படுத்தாத விடுதலைப்போராட்டம், தமிழரசியற் கட்சிகளது அரசியல் வறுமை என்பனவும் ஊர்களின் அழிவின் இன்றைய காரணங்களாயுள்ளன.

இத்தகைய அரசியற் பின்னணியில் மட்டுமின்றி பண்பாட்டுரீதியாக தமிழ்பேசும் ஊர்களை அவற்றின் பண்பாட்டு மரபுரிமைத் தனித்துவத்துடன் இனங்காணவும் – அடுத்த தலைமுறைக்கு அறிவிக்கவும் உலகளாவிய தேசப்படமாக்கலின் ஒரு பகுதியாக எமது ஊர்களை நிலை நிறுத்தவும், சிறுபான்மையினரிடம் இருந்து கைப்பற்றபட்டு அடையாளம் மாற்றப்பட்ட முன்னைய தமிழ் பேசும் ஊர்களைக் கோரவும், நினைவு கூரவும் – அவற்றின் வரலாற்றை அறிவிக்கவும் சுவடியாக்கம் முக்கியத்துவமுடைய செயற்பாடாகும். இன்னொருவகையில் இது தமிழ் பிராந்தியங்களின் பரந்துபட்ட அபிவிருத்திக்கான முதலீடுமாகும்.

இத்தகைய பகைப்புலத்தில் ஊரை சுவடியாக்கஞ் செய்தலுக்கான பரந்துபட்ட அடிப்படைகளை இக்கட்டுரை முன்வைக்கிறது. இதனுடைய அணுகுமுறையானது பரந்துபட்ட ஒரு சட்டகத்தை வலியுறுத்துகிறது. அந்தவகையில் சமூக, பண்பாட்டு, மானுடவியல், புவியியல், சமூகமொழியல், நகரவடிவமைப்பு, வரலாறு, மரபுரிமை, மொழியில், சுவடியாக்கம் முதலிய பலவேறு துறைசார் ஒழுக்கங்கள் கலந்தொட்டியவொரு கலப்பொட்டு முறையியலை இச் செயற்பாடு வேண்டிநிற்கிறது.

ஊர் ஒன்றை வாசிப்பதற்கான மூலங்களாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.

table 1

ஊரைச் சுவடியாக்கஞ் செய்தலின் முதற்படியாக ஊரை பொதுநிலையில் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் பின்வரும் அறிமுகத் தரவுகள் முன்வைக்கப்படவேண்டும். அவ்வகையில்,

  • ஊர் உருவாக்கம்: குறிப்பிட்ட ஒரு இடம், குடியிருக்கும் ஒரு இடமாக மாறியது என்பதும், எவ்விதம் அது புவியியல்ரீதியாக மேலும் விரிந்து சென்றது என்பதும், ஒரு ஊரை வாசிப்பதற்கான முதலடிப்படையாகும். உதாரணமாக வன்னிக் குடியிருப்புக்கள் அல்லது ஊர்கள் எவ்விதம் குளங்களை மையமாகக் கொண்டு விரிந்தன என்பது அதற்கான தக்க உதாரணமாக அமையும்.
  • சன ஏற்றம் எவ்விதம் எங்கிருந்து நடந்தேறியது என்பது அதன் அடுத்த கட்ட ஆர்வமாக இருக்கும்.
  • ஊர் பெயர் – ஊரின் பெயர் தொடர்பிலான பல்வேறு விளக்கங்களுடன் அதனை இடப்பெயர் ஆய்வு முறையியலைப் பயன்படுத்தியும் பதிவுசெய்யவேண்டும்.
  • இட அமைவு, காலநிலை, ஊரமைப்பு நிலப்படம், கூகுள் தரைப்படம் தொடக்கம் வரலாற்று ரீதியான ஊரின் எல்லை மாற்றங்கள் மற்றும் ஊரின் உட்பிராந்தியப் பெயர்கள், தெருப் பெயர்கள் – அவற்றின் மாற்றங்களுடன் பதிவுசெய்யவேண்டும்.
  • மக்கள் தொகை: விபரமாகவும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களுடனும் பதிவு செய்யப்படவேண்டும்.அவர்களது கல்விநிலை, சமயம், தொழில் மரபுகள் அவற்றின் காலந்தேறும் எற்பட்ட மாற்ற விபரங்களுடன் பதிவுசெய்யவேண்டும்.
  • வரலாற்றறிமுகம் – வாய்மொழி வரலாறுகள், எழுத்தாதாரங்கள் உட்பட்ட அனைத்தும் காலரீதியான வகைப்பாடுகளுடன் பதிவுசெய்யப்வேண்டும்.

அவ்வகையில், நகர வடிவமைப்பாளர்கள் ஊர்/நகரத்தைக் கட்டமைத்தல் – கற்றல் தொடர்பில் முன்மொழியும் ஆறு விடயங்களை ஊர்களைச் சுவடியாக்கஞ் செய்தலுக்கான மூல அடிப்படையாகக் இச் செயற்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு மேலதிகமான பொருத்தப்பாடான சுவடியாக்கக் கூறுகளை உள்ளெடுப்பதன் மூலம் இந்த வாசிப்பு முறையை மேலும் செழுமைப்படுத்தலாம்.

table 2

ஊர் / நகரம் : உருவவியல் ஆய்வு

ஊர்/நகர்ப்புற உருவவியல் என்பது ஊர்/நகர்ப்புற வடிவங்கள் மற்றும் வடிவமைப்புக்கள் பற்றியது. அது காலந்தோறும் அவற்றில் ஏற்பட்ட உருமாற்றங்கள், அம்மாற்றங்களிற்குக் காரணமான முகவர்கள் மற்றும் அதன் மாற்றப் படிமுறைகள் பற்றிய ஆய்வு ஆகும். அவ்வகையில் அது ஊர்த் தெருக்கள், சதுக்கங்கள் (பொது இடம்), தெருத் தொகுதிகள், காணிகள் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட நகரத்தை கட்டமைத்து வடிவமைக்கும் முக்கிய பௌதீக அம்சங்களைப் பற்றிச் சிந்திப்பதாகும் (Scheer, 2016).

architecture-of-jaffna-1024x912-1
architecture-of-jaffna-2

இதனை மேலும் அகலப்படுத்தினால் அது ஒருவகையில் இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுரிமைகளின் ஒரு பெரும் பகுதியை உள்ளடக்கியதாக இருக்கும். மேற்படி வரிசைப்படுத்தப்பட்ட உருவவியல் கூறுகளை மேலும் ஆழப்படுத்தினால் இதனைத் தெளிவாக எம்மால் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் பௌதீகப் பொருண்மைகள் (Objects) என்ற வகைப்பாட்டுள் நடைபாதைகள், மணல் மற்றும் பாறைப் படிவுகள், புல்வெளிகள், நிழற்குடைகள், தடைகள், பயிர் நிலங்கள், பூந்தோட்டங்கள், மரஞ் செடிகள், நீர்முனைகள், கம்பங்கள், சமிக்ஞைகள் முதலான பலவும் இடம்பெறும்.

கட்டடங்கள் என்பவற்றுள் குடியிருக்கும் கட்டடங்கள் – கட்டடவகைகள் (types of buildings), பெட்டிக்கடைகள், வாகன இடங்கள், கொட்டில் முதலானவை இடம்பெறும். அதேபோல உட்கட்டுமானங்கள் என்ற வகையில் பாலங்கள், நகர வாயிலமைப்புக்கள் – வளைவுகள், மணிக்கோபுரம், விளையாட்டரங்கங்கள், நினைவுச்சின்னங்கள் முதலியவற்றையும், பாதைகள் என்ற வகைப்பாட்டுள் தண்டவாளங்கள், துறைமுகங்கள், நீர்மடுக்கள், இயற்கை இடங்கள் முதலியனவும் கவனித்தில் எடுக்கப்படும். காலந்தோறும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களும் முடிந்தவரை சுவடியாக்கத்துள் எடுத்துவரப்பட வேண்டும். அத்துடன் இவை யாவற்றையும் மரபுரிமைக் கண்கொண்டு மேலும் விரிவுபடுத்தி அணுகவேண்டும்.

kallady-bridge3

ஊர் / நகரம் : செயற்பாட்டியற் பரிமாணம்

ஊரினது அல்லது நகரத்தினது செயற்பாட்டுப் பரிமாணம் என்பது அவற்றின் இடப் பரப்புக்கள் மற்றும் கட்டமைப்புகள் மக்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன – இடையூடாடுகின்றன (communicate & interact) என்பது பற்றியதாகும். சமூக நம்பிக்கைகளோடும் – பண்பாட்டுக் கோலங்களோடும் இவை தொடர்புபட்டுள்ளன. மக்களது ஓய்வுச் செயற்பாடு (rest) முனைப்புடைய இயங்குநிலை (active), செயல் முனைப்பின்மை (passive), கண்டுபிடிப்புச் செயற்பாடுகள் (discovery) முதலியவற்றோடு இது தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. இவை சூழலமைவு, பௌதீக – உளவியல் மற்றும் சமூக இடையூடாட்டத் தன்மைகள் மற்றும் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிப்பன. கண்டுபிடிப்புச் செயற்பாடுகள்  பரந்த வீச்சுடையவை. சந்தைகள், கலைக் கூடங்கள், ஊர்வலங்கள், சடங்குகள், விளையாட்டுக்கள், தெரு ஆற்றுகைகள் முதலான அனைத்துக் கலைச் செயற்பாடுகள், விழாக்கள் உட்பட்ட சமூக நிகழ்ச்சிகளை இவை குறிக்கும் இக் கூறுகள்தான் ஒரு  ஊரை உயிர்ப்புடன் பேணும் ஊக்கிகளாக அமைவன.

ஊர் / நகரம் : புலக்காட்சிப் பரிமாணம்

புலக்காட்சிப் பரிமாணம் என்பது ஊர்/நகரச் சூழலானது, தனது பௌதீகப் பரிமாணங்களால் சமூகத்திற்குத் தருகின்ற மனப்படிவு (mental image) ஆகும். அதாவது குறிப்பிட்ட இடம் (Place) பற்றிய சமூகத்தினது அனுபவம் அல்லது உணர்வாக இது காணப்படும். இன்னொருவகையில் மேற்படி, இட உணர்வானது, குறிப்பிட்ட வட்டாரங்கள் மற்றும் பிராந்தியங்களின் தனித்துவம் அல்லது தனித்துவமான தன்மையை விபரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. லிஞ்ச் இந்தப் பௌதீக அனுபவம் அல்லது மனப்படிவமானது பாதைகள் (தெரு, காலவாய்) ஓரங்கள் (கடைகள், மதில், நீரோட்டம்) மாவட்டங்கள் (ஒரேவகையாக கருப்பொருட் தொடர்ச்சியுடைய மத்திய  அல்லது பெரும் அளவிலான பரப்புக்கள் (பல கடைகளை உள்ளடக்கிய வாகன உதிரிப்பாக அல்லது ஆபரணத் தயாரிப்பு இடப்பரப்பு) முனையங்கள்(சந்தி) மற்றும் மைல்கற்கள் (சிலைகள், கோபுரங்கள்) எனும் ஐந்துவிடயங்களினால் தூண்டப்பெறுவது என்கிறார் (Lynch:1990). சூழல் பற்றிய புலணுணர்வும் – இடவுணர்வும் எமது ஐந்து புலன்களால் குறிப்பிட்ட இடச்சூழலில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களால் உருவாக்கப்பட்டது ஆகும். குறிப்பாக இடவுணர்வானது,  குறித்த இடத்திற்கும் மக்களிற்குமிடையிலான இடையுறவு பற்றியதாகும். அது குறிப்பிட்ட இடத்தின் அமைவிடம் – சூழல் சார்ந்துருவான உணர்சிபூர்வமான பிணைப்பாகும்.

building-landform-and-statue-of-Sri-Lanka

ஊர் / நகரம் : சமூகப் பரிமாணம்

வெளியும் சமூகமும் நெருக்கமான தொடர்புடையவை: சமூக உள்ளடக்கம் இல்லாமல் வெளியை கருத்திற் கொள்வது கடினம் அதேபோலவே, வெளியை விடுத்து சமூகத்தை கருத்திற் கொள்வதும் கடினம். ஊர்/நகரம் வடிவமைப்பிலுள்ள சமூகப் பரிமாணத்தைப் புரிந்துகொள்ளவதற்கு  ஐந்து முக்கியமான அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலாவது மக்களுக்கும் வெளிக்கும் இடையிலான உறவு. இரண்டாவது, ‘பொதுப் புலம்’ மற்றும் ‘பொது வாழ்க்கை’ ஆகியவற்றின் ஒன்றோடொன்று தொடர்புடைய நிலைமைகள்; மூன்றாவது அண்டைய பகுதிகளது எண்ணங்கள். நான்காவது பாதுகாப்பு மற்றும் பாதுகாத்தல் பற்றிய விடயம். ஐந்தாவது அணுக்கத்தன்மை (accessibility). அணுக்கத்தன்மையானது காண்பியரீதியாக, குறியீட்டு ரீதியாக மற்றும் பௌதீகரீதியாகவெல்லாம் அணுக்கத்தன்மை கொண்டிருக்க வேண்டும் என கார் ஈற்ரல் (Carr et al: 1992 ) கூறுகிறார்

cultural-center-Jaffna

ஊர் / நகரம் : காலரீதியான பரிமாணம்

காலரீதியான பரிமாணம் என்பது மூன்று பிரதான அம்சங்களை உள்ளடக்கியவை. அவை காலச் சுழற்சி, தொடர்ச்சியும் நிலைபேறும், மாற்றம் என்பவற்றாலானவை. அதாவது, ஊரொன்றின் பண்பாட்டுத் தினக்காட்டியாக (cultural calendar) இது அமையும். விழாக்கள், பண்டிகைள், சமய நடவடிக்கைள் முதலான குறிப்பிட்ட கால ஒழுங்கில் நடைபெறும் பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றியதாக அமையும். அவை எவ்வாறு வெளியில் பரிணமிக்கும், நிலை மாறும், ஊரை உருமாற்றும் என்பனவெல்லாம் இதன் கரிசனையாக இருக்கும்.

ஊர் / நகரம் : காண்பியப் பரிமாணம்

காண்பியப் பரிமாணம் என்பது முற்றுமுழுதாக ஊர்/நகர வெளியுருவாக்கும் காட்சியனுபவமாகும். ஊர் / நகரம் பற்றிய வாசிப்பில் இதனை ‘காட்சி அசைவழகியல்’ பற்றிய அனுபவம் என்றும் அழைப்பர். ஏனெனில் ஒரு நகரத்தின் காட்சிரீதியான அனுபவம் என்பது வெளியலுள்ள கட்டுமானங்கள் பற்றியது மட்டுமல்ல. அந்தக் கட்டுமானங்களோடு சேர்ந்த மனித அசைவுகளது இணைப்பினையும் உட்கொண்டிருப்பது. எனவே அசைவு, தூரம், கோணம், ஒளிமாற்றங்கள் வழியே உருவாகின்ற காட்சி வேறுபாடுகளால் அது உருவாகிறது. கட்டுமானங்களது மொத்தமானதன்மை (Bulk) தோற்றப்பாடு அளவு (scale) திணிவு (mass), பாணி (style) முதலான விடயங்கள் மீது இங்கே கவனங்குவிக்கப்படுகிறது. மேலும் அதன் இயற்கையோடான உறவுடைமை, ஊடகப் பாவனை முதலியனவும் இதனுள் அடங்கும். அதனூடாக குறிப்பிட்ட ஊரின் அழகியற் தெரிவுகள், வெளியை நயக்கின்ற தன்மை, அவற்றை அவர்கள் ஒத்திசைய வைத்திருக்கும் முறை யாவும் கவனத்தில் எடுக்கப்படும்.

buildings-in-Sri-Lanka

இத்தகைய நகரமைப்புச் சார்ந்த அடித்தளத்தை மையமாகக் கொண்டு, ஊரைச் சுவடியாக்கம் செய்தலை மேலும் வலுவாக்க நாளாந்த வாழ்வுநிலைப் பரிமாணம், மரபுரிமை – வரலாற்றுப் பரிமாணங்களை இணைக்க வேண்டும். ஏற்கனவேயுள்ள  மேற்படி நகர அமைப்பு சார்ந்த கட்டமைப்பு நாளாந்த வாழ்வு சர்ந்த விடயங்கள் மற்றும் மரபுரிமை சார்ந்த விடயங்களின் பிரதானவொரு பகுதியை உள்ளே எடுத்து வந்துவிட்டதாயினும் – அதனை மேலும் விரிவும் – ஆழமும் செய்ய வேண்டி தனியான வகைமையாக இணைக்க வேண்டியுள்ளது. அந்தவகையில், மேற்படி நகர வடிவமைப்புநிலைப்பட்ட சட்டகத்தின் ஆறு உறுப்புக்களுக்கு மேலதிகமாக புழங்குபொருள் பரிணாமம், மரபுரிமை பரிமாணம் என்ற இரண்டு விடயங்களை மற்றும் ஆளுமைகள் – நிறுவனங்கள்- வரலாற்று நாட்காட்டி முதலான விடயங்களை இணைத்துக் கொள்ளலாம்.

ஊர் / நகரம் : புழங்குபொருள் பரிமாணம்

மானுடச் சமூகங்கள் எல்லாம் தாம் வாழும் சுற்றுச் சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப தத்தம் இயற்கை வளங்களைப் பண்பாட்டு உற்பத்திப்பொருட்களாக மாற்றிக் கொண்டு, காலங்காலமாக அவ்வவ் கால நிலைவரங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி வருவதையே புழங்கு பொருள் பண்பாடு என்கிறோம்; அவ்வகையில், இது குறித்த ஊர்/நகரத்தின் பாவனைப்பொருட்கள் அனைத்தையும் வகைபிரித்துப் பட்டியற்படுத்துச் செயற்பாடாகும். வீட்டுத்தளபாடங்கள், சமையல் – உணவருந்தல் சார்ந்த பொருட்கள், சமயம் – சடங்கு – விழாக்கள் சார்ந்த புழங்குபொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள்,  குறித்த ஊரின் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட புழங்கு பொருட்கள்  (விவசாயப், மீன்பிடி, உள்ளுர் வைத்திய, பன்னவேலை, நெசவு, புகையிலை வர்த்தகம் உட்பட்ட பல தொழில்சார் விடயங்கள் சார்ந்த புழங்குபொருட்கள்) என இப் பட்டியல் மேலும் விரிந்து செல்லும். ஊர்களைப் பொறுத்து அவை வேறுபடவுஞ் செய்யும்.

ஊர் / நகரம் : மரபுரிமைப் பரிமாணம்

மரபுரிமைப் பரிமாணம் என்பது குறிப்பிட்ட பிராந்தியத்தின் அடையாளமாக அமைவதும், தலைதுறைகளுக்கூடாகக் கைமாற்றப்படுவதுமான குறிப்பிட்ட இடத்திற்கே உரித்தான சிறப்புடைமைகளைக் குறிப்பதாகும். இது ஏற்கனவே மேலே பட்டியற்படுத்தப்பட்ட விடயங்களோடு பல இடங்களிற் ஒன்றுகலக்கக்கூடிய வாய்ப்புடையதாயினும், அதனது முதன்மை, மற்றும் முன்னுள்ள பட்டியலில் விடுபடக்கூடிய விடயங்களை உள்ளெடுப்பதற்கான  அடிப்படைத்  தேவை என்பவற்றைக் கவனத்தில் கொண்டு  தனியொரு பிரிவாக உள்வாங்கப்படுகிறது.

table-3

இயற்கை மரபுரிமையானது குறிப்பிட்ட ஊரின் தனிச்சிறப்புடமையாக உள்ள மனிதர்களால் ஆக்கப்படாத இயற்கையாற் தரப்பட்ட சொத்துக்களைக் குறிப்பதாகும். அவை தாவர வர்க்கங்கள், நீர் முனைகள், பாறைப் படிவுகள், நீர் வீழ்ச்சிகள், நிலத்தோற்றங்கள், நீர்க்கீழ் இயற்கை அமைப்புக்களைக் குறிப்பதாகும்

பண்பாட்டு மரபுரிமையானது குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்தல் காரணமாக மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டதும், அருந்தற் பெறுமானங் காரணமாக அரும்பொருளாகியுள்ளதுமான, குறிப்பிட்ட மக்கட்கூட்டத்தின் தனிச்சிறப்பு அடையாளமாக உள்ள பேறுகளைக் குறிப்பதாகும். இவற்றிற் தொட்டுணரக்கூடியன பௌதீகரீதியான பொருட் கூட்டத்தையும், தொட்டுணரமுடியாதவை ஆற்றுகை மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் – மொழி மரபுகளைக் குறிப்பதாகவும் அமையும்.

ஊராளுமைகள் மற்றும் நிறுவனங்களைச் சுவடிப்படுத்தல்

ஊர்கள் தோறும் பலவேறு துறைகள் சார்ந்துருவாகிய ஆளுமைகளை மற்றும் நிறுவனங்களைச் சுவடியாக்கஞ் செய்தல் இந்தப் பணியின் மிக முக்கியமான இன்னொரு  வேண்டுகையாகும். இவ் வகையில் தனியாள் ஒருவரைச் சுவடியாக்கம் செய்தலின் போது பின்பற்றப்படுகின்ற அனைத்து விபரங்களோடும்  தனிமனித ஆளுமைகள் பதிவு செய்யப்படவேண்டும். அவ்வாறு செய்யப்படும்போது காலந்தோறும் உருவாகிய நபர்கள் – கடந்தகாலம் முதல் சமகாலம் வரையும் உள்ளெடுக்கவேண்டும். அவ்விதமான உள்வாங்கலுக்கான ஜனநாயரீதியான பொதுவான சட்டகம் ஒன்று காணப்படவேண்டும்.

அதனைப்போலவே பாடசாலைகள், சங்கங்கள் (வெங்காயச் சங்கம், வாழைக்குலைச் சங்கம்.) முதல் நெசவு நிலையங்கள், வாசிகசாலைகள், மடங்கள், வைத்தியசாலைகள்  என விரிவாக இவை பட்டியலாக்கம் செய்யப்படவேண்டும்.

வரலாற்று நாட்காட்டி ஒன்றைத் தயாரித்தல்

திகதி, மாதம், ஆண்டு அடிப்படையிலான பெருந்தரவு நாட்காட்டிகளை ஊருக்கு ஊர் தயாரித்தல். இது  ஊரின் வரலாற்றில் நடந்தேறிய முக்கியமான சம்பவங்களது தினக்குறிப்புப் போல அமைய வேண்டும். பெருவிழாக்கள், ஊர் ஈட்டிய பலதுறைசார் சாதனைகள், இயற்கைப் பேரழிவுகள், இடப்பெயர்வுகள், படுகொலைகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.

எண்மிய மரபுரிமையாக்கமும் (digital heritage) உள்ளூர் வரலாற்றை எழுதுதலும்

ஈழத்தமிழர்களது அரசியல் நிலைவரம், யுத்தம், தொடர்ச்சியாக சிறுபான்மையினரது நிலங்களை பறிக்கும் இலங்கை அரச இயந்திரத்தின் செயற்பாடுகள் மற்றும் இயற்கை அழிவுகள், சமூக நிலைமாற்றங்கள் என்பன இன்று ஈழத்தமிழ் பண்பாட்டினை எண்மியமயமாக்கஞ் செய்தல் என்பதை முக்கியமான தேவைப்பாடாக்கியுள்ளது. இத்தகைய நிலைவரங்கள் உலகளாவிய ரீதியில் எண்மிய மயமாக்கம் என்பதை முக்கியமான செயற்பாடாக்கியுள்ளது. ஆகவே ஊர்களை எண்மியச் செயற்பாடுகளுக்கு உள்ளாக்குதல் என்பது அவசரமான ஒரு செயற்பாடாக (activism) முன்னெடுக்கப்படவேண்டும். துரதிர்ஷ்டவசமாக  ஈழத்தமிழர்கள் தமது  பாரம்பரியமான ஊர்களில் பலவற்றை முழுதாகவோ அல்லது பகுதியளவிலோ இழந்துள்ளனர். அவற்றிற் சில தேசப்படத்தில் பெயர்மாறி தம்மை இழந்துள்ளன. சில தேசப்படத்தில் மட்டும் காணப்படுகின்றன. அவ்வகையில் குறைந்தபட்சம் ஊர்களை நினைவாக பூச்சியவெளியில் (cyber space) வசிக்கும் ஒன்றாகவேனும் மாற்ற வேண்டும்.

இதனூடாக, தேசவரலாறு என்ற பெருங்கதையாடலுள் மறைந்து போகின்ற உள்ளூர்  வரலாறுகள் (local histories) என்ற விளிம்புநிலை வரலாறுகளை முதன்மைப்படுத்துவதன் மூலம் பன்மை வரலாறுகள் என்ற விரிவான சட்டகம் நோக்கி நகர்ந்து செல்வதற்கு ஊர் வரலாறுகள் உதவுகின்றன. அவை அவ்வகையில் ஈழத்தமிழ் அடையாளத்தினை இடைவிடாது அதன் பன்மைத்தன்மையுடன் உரிமை கோருகின்றன. தேச வரலாற்றை மேலும் ஜனநாயகப்படுத்தலுக்கான அடிப்படைகளைத் தருகின்றன.

அவ்வகையில், ஊரைச் சுவடியாக்கம் செய்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒருவகையான எதிர்ப்பு அரசியற் செயற்பாடாகும். மறதிக்கு எதிரான நினைவுகூரலை முன்னிறுத்தும் இச்செயற்பாடு ஈழத் தமிழ் பண்பாட்டு வரலாற்று உருவாக்கத்திற்கும், நிலைபேற்றிற்கும் இன்றியமையாத ஒரு பெருஞ் செயற்பாடாக அமையும்.

குறிப்பு

Document / Documentation ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலீடாக ஆவணம் / ஆவணமாக்கல் முதலான சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. ஆனால், பண்டைத் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் பேரகராதிகள் ஆவணம் என்ற சொல்லிற்குத் தரும் பொருளும், எம்முடைய இன்றைய பொருள்கோடலும் வேறுபட்டவை. ஆவணம் என்ற சொல் உரிமைப் பத்திரம் (deed) என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அவ்வகையில் Document / Documentation முதலான சொற்களுக்கு சுவடி / சுவடியாக்கம் என்ற சொற்களே பொருத்தப்பாடுடையதாகின்றன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு முன்பதாக இந்தக் குழப்பம் இருக்கவில்லை. National archives அதனாற்றான் தேசிய சுவடிக்கூடம் என்றழைக்கப்பட்டது. இத்தகைய பின்னணியிற்றான் இக் கட்டுரை சுவடியாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விடயம் தொடர்பில் தெளிவைத் தந்த சான்றோருக்கு நன்றி.

உசாத்துணை

  1. Brenda Sheer, (2017) Urban morphology as a research method in Sanchez, T. W. (Ed.).  Planning knowledge and research.
  2. Kabilan Sundaramoorthy (2018) Spaces of Conflict: Emerging Built Environment in Post-war Era Urban Development in the City of Jaffna, Sri Lanka. Thesis for: Master of Spatial Planning, Management and Design,University of Moratuwa. 
  3. Carr et al (1992) Dimension of Urban Design. Urban design lab.
  4. Kevin Lynach , (1990) The Image of the City, The M.I.T Press, England.
  5. Dana Thweek , Noor Almajed, 2023, Visual dimension.
  6. Documenting Traditional Knowledge – A Toolkit, 2017, World Intellectual Property Organization, Switzerland.
  7. பாக்கியநாதன் அகிலன், 2016, காலத்தின் விளிம்பு: யாழ்ப்பாணத்து மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்தலும், யாழ்ப்பாணம், பேறு வெளியீடு.
  8. பாக்கியநாதன் அகிலன், மரபுரிமைகளைப் பறைதல், எழுநா.

 


ஒலிவடிவில் கேட்க

13702 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)