தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம் போன்ற விடயங்களின் அடிப்படையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான விடயங்களை 1892இல் முதன் முதலில் பேச முற்பட்டது
1865ம் ஆண்டு ஈழத்தின் திருகோணமலையில் தி.த சரவணமுத்துப்பிள்ளை பிறந்தார். தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றிருந்தார். “மோகனாங்கி” என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியவராவர். 1902 இல் தனது 37வது வயதில் இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனையானது ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டினால் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. ஈழத்து அறிஞர்களின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசப்படும்போதும், எழுதப்படும்போதும் சிறுப்பிட்டி வை.தாமோதரம்பிள்ளை, நல்லைநகர் ஆறுமுகம்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் ஆகியோரின் பணிகள் தமிழுலகில் பெரிதும் அறியப்பட்டவை. யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான தமிழறிஞர்களின் தமிழ்ப்பணிகள் பற்றிய செய்திகள் பல அப்பிரதேசங்களைத் தாண்டித் தமிழுலகின் பரவலான கவனிப்பைப் பெறாது போனமை ஒரு தீநேர்வாகும். நற்பேறாக, வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராஜா அவர்களின் “ஈழமும் தமிழும்” என்ற நூல் நமக்கு யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான ஈழத் தமிழறிஞர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பேருதவியாக அமைகிறது. யாழ்ப்பாணத்தைப் போலவே ஈழத்தின் ஏனைய பிரதேசத்தவர் களும் தத்தமது பிரதேச தமிழறிஞர்களின் பணிகளை தமிழ் உலகிற்கு அறியப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்தவகையில் மட்டக்களப்பு நகர் அரும்பெரும் கொடையாக முத்தமிழறிஞர் சுவாமி விபுலானந்தரைத் தந்து தமிழுலகில் தன்னை நிராகரிக்கப்பட முடியாததாக ஆக்கிக் கொண்டது. ஈழத்தின் பழைமைமிக்க தமிழ் நகரான திருகோணமலை நகரின் தமிழறிஞர்களின் பணிகள் பற்றிய தேடலில் திருகோணமலை தமிழ் ஆர்வலர்கள் ஈடுபட்டபோது சி.வை.தாமோதரம்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், உ.வே.சாமிநாதையர், கலியாணசுந்தர முதலியார் ஆகியோரால் நன்கு மதிக்கப்பெற்றவரும், அவர்களின் தமிழ்ப்பணிகளில் உறுதுணையாக இருந்தவருமான தி.த. கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணிகள் பற்றி அறிந்து வெளிக்கொணர்ந்தார்கள். திருகோணமலை த.சித்தி அமரசிங்கம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியமான கலை இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய பதிவுகளைச் செய்வதில் முன்னின்று உழைத்திருக்கிறார். அவரே தி.த.கனகசுந்தரம்பிள்ளை பற்றிய தொகுப்பினை வெளிக்கொணர்ந்தவருமாவார். இதில் திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினதும் அதன் முன்னைநாள் பொதுச் செயலாளர் செ.சிவபாதசுந்தரம் அவர்களதும் பங்களிப்பு கனதியானது.. திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையே வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராஜா அவர்களைக் கொண்டு தி.த.கனகசுந்தரம்பிள்ளை பற்றிய நூலை எழுதி வெளியிட்டதுடன், தி.த. கனகசுந்தரம்பிள்ளை நினைவு நூலகத்தையும் உருவாக்கி நடாத்தி வருகிறது. தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் தமிழ்ப்பணிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தவேளை தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் இளைய சகோதரரும் தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதியவருமான தி.த.சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் அறிய முடிந்தது. சென்னை மாநிலக் கல்லூரி நூலகத்தின் கீழைத்தேய சுவடி நிலையத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றிய சரவணமுத்துப்பிள்ளை ஆங்கிலப் புலமையுடன் தமையனார் போலவே நிறைந்த தமிழறிவும் பெற்றிருந்தார். தீநேர்வாக இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டதால் தமிழுக்கு அன்னாரின் பணி மிகக்குறைந்தளவே கிடைத்தது. தன் வாழ்நாளினுள் சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புக்களை நூலாகக் கொண்டுவரும் ஆசை இருந்தபோதும் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கு இருந்த சூழ்நிலைகளால் அவரது வாழ்நாளுக்குள் அதனைத் தனி நூலாக வெளிக்கொணர முடியாது போயிற்று. சித்தி அமரசிங்கத்தின் உதவிகொண்டு சரவணமுத்துப்பிள்ளை பற்றிய தகவல்களை “தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும்” என்ற தமது நூலில் தனி அத்தியாயமாக க.செபரத்தினம் அவர்கள் வெளிக்கொணர்ந்தார்கள். தி.த.கனசுந்தரம்பிள்ளை பற்றிய தொகுப்பு நூலைக் கொண்டுவர சித்தி அமரசிங்கத்தை ஊக்குவித்தவரும் அறிஞர். க.செபரத்தினம் அவர்களே. சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புகளிலே புகழ்பெற்றவை தமிழின் முதலாவது வரலாற்று நாவலான ‘மோகனாங்கியும், தத்தைவிடுதூது’ எனும் பிரபந்தமும் ஆகும். 1919ஆம் ஆண்டில் “சொக்கநாத நாயக்கர்” என்னும் பெயரில் இரண்டாம் பதிப்பு கண்ட மோகனாங்கியோ, அதன் மறுபதிப்பான சொக்கநாத நாயக்கரோ இன்று கிடைப்பதற்கில்லாமற் போயிற்று. நவீன பெண்விடுதலைச் சிந்தனை கொண்டதும் இதில் பாரதிக்கு முன்னோடியாக இருந்தது என்று கொள்ளத்தக்கதுமான ஓரு நூல் தத்தைவிடுதூது ஆகும். இதுபற்றித் தமது “ஈழத்து இலக்கிய முன்னோடிகள்” நூலில் மிகவும் விதந்தெழுதியிருப்பார் பேராசிரியர் க.கைலாசபதி. தத்தைவிடு தூதில் உள்ள பாடல்களை உள்ளடக்கி ஒரு குறுநாவல் வடிவில் “தத்தைவிடு தூது” என்ற நூலாக திருகோணமலையின் முதல் பெண் நாவலாசிரியர் ந.பாலேஸ்வரி அவர்கள் எழுதி வெளியிட்டார்கள். இதற்கு பேராசிரியர் செ.யோகராசா கனதியான ஆய்வுரை ஒன்றை வழங்கியுள்ளார். தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் உறவினர் வழிவந்த ந.பாலேஸ்வரி அவர்களிடமிருந்து தான் சரவணமுத்துப்பிள்ளையின் மற்றொரு படைப்பான “தமிழ்ப் பாஷை” கிடைத்தது. ந.பாலேஸ்வரி அவர்கள் இந்நூல் பற்றி பேராசிரியர் செ.யோகராசா அவர்களிடம் குறிப்பிட்டதுடன், அந்நூலின் பிரதியையும் அவருக்கு வழங்கி இருந்தார்கள். இந்நூலை வாசித்த பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் தி.த.சரவணமுத்துப்பிள்ளை வரலாற்று நாவலாசிரியர் மற்றும் முன்னோடிப் பெண்விடுதலைச் சிந்தனையாளர் மட்டுமல்லாது மொழியியல் பார்வையும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்ட தமிழியற் சிந்தனையாளர் என்பதை அவரது “தமிழ்ப் பாஷை” என்ற கட்டுரை மூலம் அறிந்து அதை அறிவுலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார். 1892ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியினுள் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கும் போது சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய தொடக்க உரையே “தமிழ்ப் பாஷை” என்னும் ஆய்வுக் கட்டுரையாக அமைகிறது. இக்கட்டுரையின் முக்கியத்துவத்தைப் பல இடங்களிலும் அழுத்தமாக வலியுறுத்தியதுடன் இவ்வுரை பற்றிச் சிறந்த கட்டுரைகளையும் எழுதியவர் பேராசிரியர் செ.யோகராசா ஆவார். அவரின் முயற்சியால் 2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விழா மலரில் “தமிழ்ப் பாஷை” கட்டுரை இடம்பெற்றதுடன் 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விழாவில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் பெயரால் ஒரு ஆய்வரங்கும் நடாத்தப்பட்டது. கிழக்கு மாகாணம் பெருமையுடன் மீட்டெடுத்த தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் பணிகளில், தமிழியல் ஆய்வுப் பணிகளின் தொடக்கமாக அமையும் “தமிழ்ப் பாஷை” கட்டுரையைத் தமிழுலகின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியம் கருதி அக்கட்டுரை அடங்கிய நூலான இதனை மீள் பதிப்பு செய்கின்றோம். இந்நூலில் ‘தமிழ்ப் பாஷை’ தவிர்த்து சரவணமுத்துப்பிள்ளை இயற்றிய செய்யுள்களும், ஆங்கிலக் கவிதை ஒன்றும் உள்ளடங்கியுள்ளது. மோகனாங்கி தவிர்ந்த தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் படைப்புகள் அடங்கிய இந்நூல், அவரது சகோதரரான தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் புதல்வரான தி.க.இராஜசேகரன் அவர்களால் தொகுக்கப்பட்டது. திருகோணமலை பொதுநூலகத்திலிருந்து எமக்கு கிடைத்த மூலநூலில் வெளியிடப்பட்ட ஆண்டு முதலிய வெளியீட்டு விபரங்கள் இல்லை. 1892இல் சி.வி.சாமிநாதன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் இருந்து வெளிவந்த ‘விவேக சிந்தாமணி’ என்ற பத்திரிகையில் ‘தமிழ்ப்பாஷை’ தொடர் கட்டுரையாக வெளிவந்ததாக பேராசிரியர் செ.யோகராசா தெரிவித்தார். விவேக சிந்தாமணியில் வெளிவந்த சிறந்த கட்டுரைகளில் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் ‘தமிழ்ப்பாஷை’யையும் ஒன்றாக “இந்திய விடுதலைக்கு முந்திய தமிழ் இதழ்கள்” என்ற நூலில் ‘விவேக சிந்தாமணி’ என்ற இதழ்பற்றிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் மயிலை சீனி. வேங்கடசாமி அவரது “19ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம்” என்ற நூலில் 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த நூற்களின் விபரப்பட்டியலில் உரைநடை நூல்களில் ‘தமிழ்பாஷை’ என்ற நூலையும் குறித்துள்ளார். ஆய்வறிவில் நிகரற்ற புகழுடைய மயிலை சீனி. வேங்கடசாமியின் பதிவின்படி தமிழ்ப்பாஷை என்ற கட்டுரையின் முதல் வெளியீடு 1892இல் நிகழ்ந்திருக்கிறது. அவர் அதன் அருகில் அடைப்புக்குறிக்குள் கட்டுரை என்ற குறிப்பிட்டுள்ளதால் தமிழ்பாஷை என்ற கட்டுரை பிரசுரமாக 1892ல் வெளிவந்தது என கொள்ளமுடியும் எனினும் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இரு தகவல்களும் தமிழ்ப்பாஷை என்ற கட்டுரை 1892இல் வெளிவந்தது என்றே குறிப்பிடுகின்றன. சென்னை துரைத்தனக் கல்லூரி தமிழ்ச்சங்கம் 1892ல் தொடங்கப்பெற்றது என்பதாலும், அதன் போது ஆற்றிய தொடக்கவுரை பின்னர் தமிழ்ப்பாஷை என்ற கட்டுரையாக அமைந்தது என்பதை இந்நூலின் முதல் பதிப்பாசிரியர் தி.க.இராஜசேகரன் குறிப்பிட்டுள்ளதாலும் ‘தமிழ்ப்பாஷை’ என்ற கட்டுரை 1892இலே எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. ந.பாலேஸ்வரியின் ‘தத்தைவிடு தூது’ நூலின் மதிப்புரையில் பேராசிரியர் செ.யோகராசா தத்தைவிடு தூது 1892இல் எழுதப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ‘திருக்கோணமலை தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை’ என்னும் நூலில் மகாவித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசா அவர்கள் தத்தைவிடு தூது, வாகைமாலை, பிரிவாற்றாமை, காதலாற்றாமை ஆகியவை 1892ஆம் ஆண்டிற்கும் 1895ஆம் ஆண்டிற்கும் இடையில் வெளியிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1842இல் தொடங்கப்பட்ட பச்சையப்பன் நிறுவனத்தின் பொன்விழா 1892இல் நடைபெற்றதால் பச்சையன் பொன்விழாச்செய்யுள் 1892இலே எழுதப்பட்டது. 1895இல் தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் சகோதரரான தி.த.கனகசுந்தரம்பிள்ளைக்கு திருமணம் நடைபெற்றது. ஆகவே திருமண ஊஞ்சல் 1895இல் எழுதப்பட்டது. இன்றுவரை திருகோணமலை முத்துக்குமராசுவாமி கோயிலின் ஊஞ்சல் திருவிழாவின்போது இந்நூலில் உள்ள ‘கோணை முத்துக்குமாரசுவாமி ஊஞ்சலே’ பாடப்பட்டு வருகிறது. அதுவும் ஏறக்குறைய இக்காலத்திலேதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மொத்தமாக இந்நூலில் உள்ள ஆக்கங்கள் 1892இற்கும் 1895இற்கும் இடையில் எழுதப்பட்டவையாகவே பெரும்பாலும் உள்ளன. தி.க.இராஜசேகரனால் எழுதப்பட்ட பதிப்புரையில் இந்நூலை குகன் அச்சகம் அச்சிட்டுள்ளது என்பது தெரிகிறது. எனினும் இது இந்தியாவில் இருந்து வெளியானதா இல்லை இலங்கையில் வெளியானதா போன்ற விபரங்களை அறியமுடியவில்லை. தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் நான்கு புதல்வர்களில் இரண்டாவது புதல்வரான தி.க.இராஜசேகரன் இந்தியாவில் தனது கல்வியைத் தொடங்கி எம்.ஏ பட்டம் பெற்று சென்னை கிறிஸ்த்தவக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிவர். தம் தந்தையார் போலவே தமிழறிவு நிரம்ப்ப் பெற்றவர். ஏடுகளையும் அக்காலத்தில் வெளிவந்த நூல்களின் பிரதிகளையும் பேணிப்பாதுகாத்தவர். அவற்றை வேண்டுபவர்க்கு கொடுத்து உதவியும் புரிந்துள்ளார். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் சிற்றிலக்கியத்திரட்டு வெளியீடுகளுக்கு தி.க.இராஜசேகரன் உதவிபுரிந்துள்ளார். கயாதரம், நான்மணிக்கடிகை ஆகிய நூல்களில் அவர் பெயர் குறித்து வையாபுரிப்பிள்ளைக்கு நன்றி தெரிவித்துள்ளார். நான்மணிக்கடிகை ஏடு எழுதி முடிந்தது தி.க.இராஜசேகரன் எனக்குறிப்பிட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண வைபவ மாலை நூலின் ஏட்டுப்பிரதிகளையும் அதன் முதற்பிரதியையும் சென்னை சென்றபோது தம்மிடம் தி.க.இராஜசேகரன் தந்ததாக குல.சபாநாதன் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் பின்னர் அவரும், அவரது இளைய சகோதரர் இராஜமார்த்தாண்டனும் ஈழநாடு திரும்பி யாழ்ப்பாணத்து கல்லூரிகளிலே கடமையாற்றினார்கள் என்று தி.த.கனகசுந்தரம்பிள்ளையின் நெருங்கிய உறவினர் வழிவந்த ந.பாலேஸ்வரி குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தியாவில் இருந்தபோதா அல்லது இலங்கையில் இருந்தபோதா இந்நூல் வெளிவந்தது என்பதை அடையாளங்காண முடியவில்லை. தி.க.இராஜசேரனால் வெளியிட்டதற்கு பின்னர் இந்நூல் பதிப்புச் செய்யப்பட்ட முயற்சிகள் விபரங்களை எனது தேடலுக்குட்பட்டவரையில் அறிய முடியவில்லை. ஆயினும் இந்நூல், இந்நூலாசிரியர், மூலநூலின் பதிப்பாசிரியர் ஆகியோர் பற்றிய முடிந்தளவு தகவல்களை கூடியவரையில் இப்பதிப்புரையில் குறித்துள்ளேன். இவை முடிந்த முடிபானவை அல்ல. இன்னும் வளர்ந்து செல்லலாம். புதிய தகவல்கள் அவைபற்றிய விபரங்கள் தெரியவந்தால் அடுத்துவரும் பதிப்புகளில் சேர்த்துக்கொள்ள நாம் ஆவலுடன் இருக்கின்றோம். காலமும், சூழலும், மொழிநடைகளும், கருத்தியல்களும் தமிழியல் ஆய்வுகளில் முக்கியமானதாகையால் தி.க.இராஜசேகரன் பதிப்பித்த நூலில் உள்ளவாறே எவ்வித மாற்றங்களுமின்றிப் பதிப்பிக்கின்றோம். வாசகர்கள் இந்நூலைக் கருத்திற் கொண்டு தி.த.சரவணமுத்துப்பிள்ளைக்குத் தமிழியல் ஆய்வுப் பணிகளில் உரிய இடத்தை வழங்குவார்கள் என்றும் நம்புகிறோம். 2003ஆம் ஆண்டு தி.த.கனகசுந்தரம்பிள்ளையவர்களின் நூற்தொகுப்பு வெளிவந்த போது அவர்தம் தம்பியான தி.த.சரவணமுத்துப் பிள்ளை யின் படைப்புக்களும் நூலாகத் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் திருகோணமலை ஆர்வலர்களால் விடுக்கப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து அந்த வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதில் நாம் மனநிறைவை அடைகின்றோம். எழுநா, நுாலகம் சார்பில் சற்குணம் சத்யதேவன் திருகோணமலை உதவிய நூல்கள் 1. திறனாய்வாளர் திருக்கோணமலை த.கனகசுந்தரம்பிள்ளை, த.சித்தி அமரசிங்கம், ஈழத்து இலக்கியச் சோலை, திருகோணமலை, 2003 2. திருக்கோணமலை தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை, F.X.C..நடராசா, திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை, திருகோணமலை, 1991. 3. தமிழ் நாடும் ஈழத்து சான்றோரும், க.செபரத்தினம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை. 4. ஈழத்து இலக்கிய முன்னோடிகள், க.கைலாசபதி, மக்கள் வெளியீடு, சென்னை, 1986. 5. தத்தைவிடு தூது, ந.பாலேஸ்வரி, மகளிர் நலன்புரி மன்றம், திருகோணமலை, 1992. 6. ஈழமும் தமிழும், F.X.C..நடராசா, கலைமகள் வெளியீடு, 7. யாழ்ப்பாண வைபவமாலை, குல.சபாநாதன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995. 8. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், மயிலை.சீனி.வேங்கடசாமி, மெய்யப்பன் தமிழாய்வகம், 2001. 9. 19ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள், அ.மா.சாமி, நவமணி
தமிழின் நிலை தாழ்வுற்ற 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் அதற்குப்பின் வந்த 18 ஆம் நூற்றாண்டிலும் தனித்தமிழ்மொழி பொருட்டான பல்வேறு கருத்தியல்கள் தமிழ்ச் சிந்தனையாளர்களுக்கிடையே ஏற்படலாயிற்று. 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் அயலவர்களான விஜயநகர நாயக்கர்கள் முதலாய தெலுங்கு மன்னர்களின் ஆதிக்கம் கோலோச்சிய வேளை தமிழ்மொழி காக்க சைவத்தின் பேரால் அரண்செய்யப்பட்ட ஆதீன மடங்களின் தமிழ் வளர்ச்சிக்குப் போக்குகளில் ஏற்பட்ட தோய்வும் போதாமையும் தமிழ்ச்சிந்தனையாளர்களிடையே ஆய்வு நிலையில் உயர்ச்சியுடைய தமிழியல் நிறுவனமயப்படுத்தலைத் தேடியதெனலாம். இளம்பூரனர், காக்கைப் பாடினியார், சிறுகாக்கைப் பாடினியார், அவிநயர், பல்காயனார் மயேச்சுவரர் கால்லாடனர், சேனாவரையர் தெய்வச்சிலையார், குனசாகரர் அமிர்தசாகரர் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலாய பல பேராசிரியமாரின் சிந்தனைப்பள்ளிகளின் வழி பரந்து வளர்ந்த தமிழியல் ஆய்வுமரபு சிலதேக்க நிலைகளுக்குப்பின் காலனிய காலக் கல்விநிலையில் ஏற்பட்ட மாறுதலுக்கேற்ப தானும் ஒரு மறுகட்டமைவிற்கு உட்படுவதாயிற்று அதனையடியொட்டியே மாணவர்களால் தமிழ்ச்சங்கங்கள் மீளவும் உருவாக்கப்பட்டது. அவ்வகையிலேயே தமிழ் மொழியைக் கற்றறிதல்ப் பொருட்டும் உயர்மட்ட ஆராய்ச்சிநிலையில் தமிழ்மொழியை ஆய்தல் குறித்தும் தமிழ்ச்சங்கங்கள் தோன்றிவளரலாயின. அவ்வகையில் தமிழ்மொழியைக் கற்றல் தொடர்பாக மாணவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சங்கமாக அமைவது சென்னைத்துரைத்தன பாடசாலைத் தமிழ்ச்சங்கமாகும். இச்சங்கத்திலேயே சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் தமது சிறப்புமிக்க தமிழ்பாஷை எனும் சொற்பொழிவினை நிகழ்த்துவாராயினர். இச்சங்கம் தொடங்கிய 1892 ஆண்டிற்கு இராண்டுகளுகு முன்பு 1890 ஆம் ஆண்டு அன்றைய முதுபெரும் அறிஞர்மார் பலர் ஒன்றுகூடி ஆய்வுநிலையில் ஒரு தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தினர் என்பதினை ஏ.கே.செட்டியாரின் தமிழ்நாடு பயணக்கட்டுரைகள் எனும் நூலின் வழி பின்வருமாறு அறியலாம். தென்னாட்டுத் தமிழ்ச் சங்கம் : மேற்குறித்த பேரால் தமிழ் பாஷாபிவிருத்தியை நாடிய சங்கமொன்று ஸ்தாபிப்பதற்காகச் சென்ற மாதம் பட்டணம் தொண்டை மண்டலம் ஸ்கூல் ஹாலில் கூடிய கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டியார் நாளது மாதம் க-தேதி “காஸ்மாபொலிடன் க்ளப்” கட்டடத்தில் ஒரு கூட்டம் கூடினார்கள். அப்பொழுது ம-ள-ஸ்ரீ சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் தற்கால அக்கிராசனாதிபதியாக விருக்கப் பின்வரும் கனவான்கள் கமிட்டி மெம்பர்களாக ஆஜராயிருந்தார்கள் ராவ்பகதூர் பூண்டி அரங்கரநாத முதலியார் அவர்கள் எம்.ஏ ம-ள-ஸ்ரீ பி.விஜயரங்க முதலியார் அவர்கள் சேஷகிரி சாஸ்திரியார் அவர்கள் எம்.ஏ சி.டப்ள்யூ.தாமோதரம் பிள்ளை அவர்கள் பி.ஏ.பி.எல் ராவ்பகதூர் சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் எம்.ஏ.பி.எல் எம்.வீரராகவாச்சாரியார் அவர்கள் பி.ஏ டி.பாலசுந்தர முதலியார் அவர்கள் பி.ஏ (தற்கால காரியதரிசி) மேற்படி சங்கத்தின் நோக்கங்கள் பின்வருவனவாக இருக்கத் தக்கதென்று தீர்மானிக்கப்பட்டது. அவை: (க) தமிழ்ப் புத்தகசாலையொன்று ஏற்படுத்தி அதற்கு இதுவரையில் தமிழில் அச்சாகியிருக்கும் கிரந்தங்களையெல்லாம் சேகரித்தல் (உ) இதுவரையில் அச்சிடப்படாத கிரந்தங்களின் ஏட்டுப் பிரதிகளையும், அச்சிடப்பட்டுள்ள நல்லகிரந்தங்களை இனிமேல் எப்போதாவது இன்னும் நன்றாய்ச் சீர்திருத்துவதற்குபயோகமாகும்படி அவைகளின் ஏட்டுப் பிரதிகளையும் சேகரித்து வைத்தல் (ங) தமிழில் சுயமாகவேணும், மொழிபெயர்ப்பினாலேனும் எளிய செந்தமிழ் நன்னடையில் ஜனங்களுக்கு அனுபவத்திலுபயோகப்படத் தக்கதாகலாவது சாஸ்திர சம்மந்தமானதாகவாவதுள்ள நூல்களை வசன ரூபமாகச் சித்தஞ்செய்து பிரசுரிக்க வேண்டிய ஏற்பாடுகள் செயல் (நு) தமிழில் பிரபலமாயுள்ள எல்லா கிரந்தங்களினுடைய பேர்களும் கூடுமான வரையில் அவற்றிலடங்கிய விஷயங்களின் விவரமும், அவைகள் இன்னார் வசமிருக்கிறதென்கிற விவரமுமடங்கிய சரியான ஜாபிதாவொன்று தயார் செய்யல் (ரு) தத்துஞான சம்பந்தமாகவாவது, வித்தியா சம்பந்தமாகவாவது அருமையாயுள்ள விஷயங்களைப் பற்றிச் சிறந்த பிரபந்தங்கள் எழுதி வாசிக்க அல்லது உபந்நியாசங்கள் செய்ய ஏற்பாடு செய்யல் (சா) இதுவரையிலும் அச்சிடப்படாது இப்போது கையேட்டுப் பிரதிகளாயிருக்கும் நூல்களில் பிரசுரிக்கத் தகுந்ததைப் பார்த்தெடுத்து அவற்றைப் பிரசுரிக்க உதவி செய்யல் ஆகிய இவைகளேயாம் சுதேசமித்திரன் 10.05.1890 , பக்கம் – 146 இவ்வாறு திட்டமிட்டு நிறுவப்பட்ட இச்சங்கத்தினைக்குறித்த வேறு செய்திகள் கிட்டாதவாயினவாகின. இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பின் மதுரைமாநகரிலே வள்ளல் பாண்டித்துரைச்சாமித்தேவரால் நிறுவப் பெற்ற மதுரைத்தமிழ்ச்சங்கமே முழுமையான கட்டமைவுடன் தமிழ் ஆய்வுப்பணியாற்றியதாக அமைகிறது. சென்னைத்துரைத்தனக் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பரிதிமார் கலைஞரவர்கள் தமிழ் உயர்தனிச் செம்மொழி எனும் ஆய்வுக்கட்டுரையின் வழி தமிழின் வடமொழிக்கு முற்பட்ட தனித்தன்மைகளையும் அதன் செவ்வியல் சிறப்புகளையும் வெளிப்படுத்தினார். இக்கட்டுரை 1902 ஆம் ஆண்டு வெளிவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் வெளிவந்தது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அதே சென்னைத் துரைத்தனக் கல்லூரியின் (பிறசிடென்சி கல்லூரி) தமிழ்ச்சங்கத்தில் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்களால் தமிழ்பாஷையின் செம்மைகள் குறித்த இக்கட்டுரை மொழியப் பெற்றுள்ளது. தமிழியல் ஆய்வுகளிலும் பதிப்புகளிலும் அன்றைய ஈழத்து அறிஞர்கள் ஒரு படிமேலே நின்றனர் என்பதற்கு இவைபோன்ற பலகாட்டுகளைக் கூறலாம். தமிழியல் வரலாற்றாய்வுகளில் வி.கனகசபைப்பிள்ளையும், பதிப்பு முன்னோடி நிலையில் ஆறுமுகநாவலரும் அவருக்குப் பின் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களும் அரச கோசரி தொடக்கம் அ.குமாரசாமிப்புலவர் வரையிலான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளை வழங்கிய இலக்கிய இலக்கண செம்மல்கள் கோலோச்சிய காலகட்டம். 1906 ஆம் ஆண்டு ரா.ராகவையங்கார் அவர்களால் எழுதப்பட்ட வணத்தமிழ் வீரமாதர் எனும் கட்டுரை செந்தமிழ் இதழில் வெளிவந்தது. புறநானூறு முதலாய சங்க இலக்கியங்கியப் பால்களின் தரவுகளைக் கொண்டு பண்டைத்தமிழ் மாதரின் வீரவுணர்வுகள் இக்கட்டுரையின் வழி வெளிப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் இக்கட்டுரையை நோக்கும் ஆய்வாளர்களுக்கு இதுமிகவும் எளிய கட்டுரையாகத் தோன்றினும், சங்க இலக்கிய நூல்கள் வெளிவந்து கொண்டிருந்த அக்காலகட்டத்துடன் இவ்வாய்வுப் பணியினை வைத்து நோக்கும் போது அக்கட்டுரை அரியகட்டுரையாக அமைவதனை உணரலாம். அதற்கமைய அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய வரலாற்றினை முறைப்படுத்தியும் அதன் செவ்வியல் இலக்கிய வளத்தினை ஆராய்ந்தும். தமிழ் வளர்ச்சிக்கான தேவையினை ஆய்ந்து உணர்த்துவமான நோக்கில் இக்கட்டுரை இன்றியமையாததாக அமைகிறது. தமிழ்வடமொழியில் இருந்து தோன்றியதென்றும் வடமொழிமரபினை முற்றாகத்தழுவிய தென்றும் கருத்துக்கள் உச்சத்தில் நின்ற காலகட்டத்தில் செந்தமிழில் வெளிவந்த ‘பானினிய வகுதீபிகை ‘எனும் நூலின் முகவுரையில் பேராசிரியர்.எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் தமிழின் செவிலித்தாய் ஆரியம் எனக்குறிப்பிட்டுச் செல்வார். இதற்கு ஆய்வியல் நிலையில் மறுதலை முடிவொன்றைக் கட்டுரையாக்கி விடையளிப்பார் ஈழத்து வவுனியாவின் இராசையனார். அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் வடமொழியில் இருந்து தமிழ் தோன்றிய கதைகள் ஒவ்வாதன என சான்றுவழி விளக்குவார். ஆயினும் வடமொழியால் தமிழ் திருத்தியது எனும் கருத்தையும் கூறிச்செல்வது அன்றைய தொடக்கநிலை ஆய்வுகளின வழியே.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரது ஆட்சி காரணமாக தமிழ் பேசும் நல்லுலகில் உருவான நவீனமயவாக்கச் சூழலில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் ஈழத்து அறிஞர்கள் பலர் பல்வேறு மட்டங்களிலும் காத்திரமாக பங்களிப்பைச் செய்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துக்குரிய காலம் என்று கூட, தமிழறிஞர்கள் சில குறிப்பிட்டுள்ளனர். ஆறுமுகநாவலர், சைமன் காசிச்செட்டி, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, சபாபதி நாவலர், மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை, தி.த. கனகசுந்தரம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை என்றவாறு நீண்டு செல்கின்ற அவ்வறிஞர் வரிசையில் ஒருவராலும் குறிப்பிடப்படாதிருக்கின்ற திருக்கோணமலை தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் குறிப்பிடத்தக்க இலக்கிய முயற்சிகளுள் ஒன்றான “தமிழ்ப்பாஷை” என்ற நூலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதே என் நோக்கமாகின்றது. தி.த. சரவணமுத்துப்பிள்ளை ஈழத்தில் திருக்கோணமலையை பிறப்பிடமாகக் கொண்டவர் முற்குறிப்பிட்ட தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரர், இளம்பிராயத்திலேயே தமது தமையனாருடன் சென்னைக்குச் சென்று பச்சையப்பன் கல்லூரி, பிறசிடென்சி கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்று, தமது தமையனாரைப் போலவே தத்துவ சாஸ்திரத்தில் பீ.ஏ. பட்டம் பெற்று தமிழிலும் பாண்டித்தியம் பெற்றவர். பிறசிடென்சி கல்லூரியில் (சென்னை துரைத்தனப்¬ பாடசாலை) நூல் நிலைய அதிபராகக் கடமை புரிந்தவர். இவரது முக்கிய இலக்கியப் பணிகளாகிய ,நவீன உள்ளடக்கம் கொண்ட தத்தை விடு தூது (1892), ஆரம்பகால வரலாற்று நாவல்களும் முக்கியமான மோகனாங்கி (1895) ஆகியன அறியப்பட்டளவிற்கு தமிழ்பாஷை என்ற நூல் பற்றி அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். தமிழ்ப்பாஷை, தி.த. சரவணமுத்துப்பிள்ளை கடமைபுரிந்த சென்னை துரைத்தனப் பாடசாலைத் தமிழ்ச் சங்கத்தில் அன்னார் ஆற்றிய உரையின் நூல்வடிவமாகும். தி.த. சரவணமுத்துப்பிள்ளை, தான் தமிழ்ப்பாஷை என்னும் தலைப்பிலே உரையாற்ற முற்பட்டமைக்கான அவசியம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘தற்கால தமிழ்ச் சங்கங்கள் பலவுள, அவை பெரும்பாலும் மாணவர்களால் ஏற்படுத்தபட்டவையே. ஆகவே, தற்கால தமிழ்ச் சங்கங்கள் தமிழ்ப்பாஷையைக் கற்றறியும் பொருட்டேற்படுத்தப்பட்டவைகளே. நமது சென்னைத் துரைத்தன பாடசாலைத் தமிழ்ச் சங்கமும் அவற்றுளொன்றேயாகும். ஒரு பாஷையைக் கற்பதினால் ஊதியம் உண்டாயின் அன்றோ அப்பாஷையை யறிவுடையோனொருவன் கற்கப் புகுவான். அப்பாஷையிலுள்ள நூல்கள் சிறந்தவையினானனோ அவற்றை யிறந்து படாமற் காப்பாற்ற ஒரு சங்கம் ஏற்படுத்த வேண்டும். யாவருக்கும் பிரயோசனமில்லாவொரு வேலையைச் செய்து வாணாளை வீணாய்க் கழிப்பதறியாமையாம். ஆகவே தமிழ்ப்பாஷை சிறந்ததென்பதும், தமிழ் நூல்கள் அழியாது காப்பாற்றப்படும் தகுதியுடையனவென்பதும், நிருபிக்கப்பட்டவன்றைக்கன்றே தமிழ்ச் சங்கங்களவசியம் வேண்டுமென்பது புலப்படும். ஆகவே சென்னைத் துரைத்தன பாடசாலைத் தமிழ்ச் சங்க மேற்படுத்திய நமக்குத் தமிழ் நூல்களின் சிறப்பெடுத்துரைத்தலவசியமாம். அது பற்றியே இவற்றைக்குத் தமிழ்ப் பாஷையின் சிறப்பைச் சிறிது என்னால் இயன்றளவு எடுத்துரைப்பான் றுணிந்தனன்.‘ மேலே தமிழ்ப்பாஷையில் சிறப்பு என கட்டுரையாளர் குறிப்பிடுவதனால், அது தமிழ்ப்பாஷையின் அதாவது, தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி மட்டும் குறிப்பிடுகின்றனது என ஒருவர் கருதக்கூடும். அன்றைய ஆய்வாளர் சிலர் தமிழ்ப்பாஷை என்கிறபோது தமிழ்மொழியோடு தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஒருசேர உள்ளடக்கி தமிழ்பாஷை என்ற பொதுப்பெயரால் குறிப்பிட்டுக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ்ப்பாஷை என்ற இந்நூல் முக்கியமாகப் பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றது. தமிழ்ப்பாஷையின் பிறப்பு, தமிழ் என்ற பெயர் ஏற்பட்டமைக்கான காரணம், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா? தமிழ்ப் பாஷையில் இருக்கும் இலக்கியங்கள், சமகாலத் தமிழ் மொழியின் நிலை, சமகாலத் தமிழ்ப் புலவரின் நிலை, மொழி பெயர்ப்பின் முக்கியத்துவம், தமிழ் மொழிப் பற்றின் அவசியம். மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுணுகி நோக்குகின்ற போது தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான சில விடயங்கள் பற்றி இந்நூல் முதன் முதலாகப் பேச முற்படுவது புலப்படுபடுகின்றது. அதாவது முற்குறிப்பிட்ட சமகால ஆய்வாளார்களை மனம் கொள்வோம் ஆயின் ஆறுமுகநாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, தி.த. கனகசுந்தரம்பிள்ளை ஆகியோர் நூற்பதிப்பு விடயத்தில் மட்டும் கூடிய கவனமெடுக்கின்றனர். சைமன் காசிச் செட்டியும் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையும் தமிழ்ப் புலவர்களின் வரலாறு பற்றியே அக்கறை கொள்கின்றனர். அத்துடன் சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலகட்ட அடிப்படையில் அணுகும் முயற்சியிலும் ஈடுபடுகின்றார். மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை தமிழர் சமூக வரலாறு பற்றிச் சிந்திக்கின்றார். ஆக, இத்தகைய ஆய்வாளர்களிடமிருந்து விலகி, தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான முக்கியமான சில விடயங்கள் பற்றி, தி.த. சரவணமுத்துப்பிள்ளை சிந்திக்க முற்பட்டிருப்பதனை இந்நூல் வெளிப்படுத்துவது மனங்கொள்ளத்தக்கது. மேற்கூறிய விடயங்களை தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக முக்கியமான புதிய சில சிந்தனைகள் அல்லது கருத்துக்களை இந்நூல் வெளிப்படுத்துவது பற்றி இங்கு சுட்டிக் காட்டுவதன் ஊடாகவே தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப் பாஷையின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ள முடியும். அன்றைய ஆய்வுச் சூழலில், தமிழ்மொழியின் பிறப்பு அல்லது தோற்றம் பற்றி பாரம்பரியமான சிந்தனையே தெய்வீகக் கொள்கையே அதாவது அது கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தே ஆழமாக வேரூன்றியிருந்தமை கண்கூடு. பலவிடயங்களில் முற்போக்கான பார்வையைக் கொண்டிருந்த பாரதியாரே தமிழ்மொழியின் தோற்றம் பற்றி இவ்வாறுதான் சிந்தித்துள்ளார். ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான். மேலுள்ள பகுதி கவிதையானமையின் கவிதையில் கற்பனைக்கிடமுண்டென்று அமைதிகூற முற்படுவோமாயின் பாரதியார் தமிழ்நாட்டு மாதருக்கு என்ற தமது கட்டுரை ஒன்றிலே கூட பின்வருமாறு குறிப்பிடும்போது அதற்கு எதுவித அமைதியும் கூறமுடியாதிருக்கின்றது. ஆதியில் பரமசிவனால் படைப்புற்ற மூலம் பாஷைகள் வடமொழியென்று சொல்லப்படும் சமஸ்கிருதமும் தமிழுமே யாம் என்று பண்டைத்தமிழர் சொல்லியிருக்கும் வார்த்தை வெறும் புராணக் கற்பனையன்று தக்க சரித்திர ஆதாரமுடையது. தமிழ்நாட்டினர் மத்தியில் மட்டுமின்றி ஈழத்தவர் மத்தியிலும் மொழியின் தோற்றம் பற்றி மேற்குறித்த கருத்தோட்டமே காணப்பட்டது. இன்னொரு விதமாகக் கூறுவதாயின், மொழி பற்றிய முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தும் போது ஒருவித எதிர்ப்புக்குள்ளாகும். சூழ்நிலைகூட நிலவியது. மேற்குறித்தவாறான ஆரோக்கியமற்ற ஆய்வுச் சூழலிலேயே தி.த.சரவணமுத்துப்பிள்ளை மொழி குறித்து விஞ்ஞானபூர்வமான கருத்துக்கள் பலவற்றைக் கூறிவிட்டு, இவ்வாறு எழுதுகின்றார். தமிழ் கடவுள்பேசும் பாஷையெனராயின் மறுபாஷைகள் கடவுகட்குத் தெரியாதா? மறு பாஷைகள் பேசுவோரிடத்து கடவுள் பேச வேண்டுமாயின் தமிழிலேயா பேசுவார்? அல்லது அவரவரிடத்து அவரவர் பாஷையைப் பேசுவாராயின் தமிழைக் கடவுள் பேசினார் என்பதால் தமிழுக்கென்ன பயன்? மேற்கூறியவாறு குறிப்பிட்ட பின்னர், தமிழ்மொழியின் தோற்றத்தினைக் கடவுளோடு தொடர்புப்படுத்திப் பேசுவோர் ஆதாரமாகக்காட்டும் நூற்கருத்துக்களை மறுதலித்துவிட்டு, மொழியின் தோற்றம் பற்றி விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கூறிகின்றார் தி.த.சரவணமுத்துப்பிள்ளை. தமிழ் என்ற பெயர் உருவானமை பற்றிச் சிந்திக்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அது பற்றிய பலரது கருத்துக்களையும் கூறி, இறுதியில், போப்பையர், கால்ட்வெல் ஆகியோர் கருத்துக்களைக் குறிப்பிட்டு விட்டு, அவ்விருவரில் ஒருவரது கருத்துச் சரியாகலாமென்று கூறிச் செல்கின்றார். தமிழ், சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என்ற கருத்தும் தி.த.சரவணமுத்துப்பிள்ளையினால் மறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இனி, தமிழ் இலக்கியம் தொடர்பான தி.த.சரவணமுத்துப் பிள்ளையின் கருத்துக்களும் கவனத்திற்குரியவை. அகத்தியம் தமிழின் முதல் இலக்கணநூலென்று கருதுவோர் இன்றுமுளராக தி.த.சரவணமுத்துப்பிள்ளை அன்றே அதை மறுத்துவிடுகின்றார். தமிழ்ப்பாஷை தொடங்கியவுடன் ஒரு பேரிலக்கணந் தமிழிலெழுதிய விந்தை நம் பண்டிதர்மார்க்கே புலப்படும். யாதொரு சிறுகாரியத்திற்கும் சூத்திர மெடுத்துக்காட்டும் பண்டிதர், வித்துவான்கள் முதலியோர் இலக்கியங் கண்டதற்கிலக்கணமியம்பலில் என்னுஞ் சிறு நன்னூற் சூத்திரத்தை மறந்து தமிழிலக்கிய முண்டுபடுவதற்கு முன்னேயே அகத்தியர் தமிழிலேயொரு பேரிலக்கணமெழுதினாரெனக் கூறலும் ஒரு பெரும் விந்தையே அகத்தியர் தமிழிலேயொருமெழுந்தன வாக்கியுள்ளங் கையில்லைத் தாசமனஞ் செய்தருளிய அகத்தியருக்கு இலக்கிய மின்றி யிலக்கணமெழுதல் ஒரு பெருங்காரியமோவெனச் சமாதானங்கூறலும் பண்டிதர் பாண்டியத்திற்கெட்டியதன்றிச் சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினராகிய நமக்குப் புலப்படும் பொருளோ? முதல் மூன்று சங்கங்களுமிருந்தமை பற்றி அலசுகின்ற தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆழமாகச் சிந்திக்க பின்னர் இவ்வாறான முடிவிற்கு வருகின்றார். ஆயின் உள்ளதை யுள்ளபடி கூறல் தமிழ்ப்பண்டிதர் குணமின்னையின் உண்மையும் அவர் வாயில் வரும் பொழுது உண்மை நிறம் மாறிப் பொய்யாயிகின்றது. ஆகவே சங்கங்களைப் பற்றிக் கூறியவற்றுள் உண்மை யெவ்வளவு பொய் புளுகு எவ்வளவெனக் கண்டுபிடிக்கத் தொடங்கல் பகீரதப் பிரயத்தனமாகும். இச்சங்கங்களுள் ஒவ்வொன்றும் பல்லாயிர வருடமிருந்ததாகவும் இச்சங்கங்களில் சிவன், சுப்பிரமணியர் முதலிய கடவுளர் அங்கத்துவராய் வீற்றிருந்தனரெனவும் இச்சங்கங்கட்குத் தெய்வீகமான சங்கப் பலகையொன்றிருந்ததாகவும் இவ்வித பல கதைகளைக் கூறுவதனால் உள்ள உண்மையும் மறைந்து போகின்றது. தமிழ் இலக்கிய நூல்கள், தமிழ்ப் புலவர்கள் பற்றி விஞ்ஞான பூர்வமான முறையில் வித்தியாசமான முறையில் சிந்திக்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழிலிருக்கின்ற புராணங்கள் எழுந்த காலத்தை இருவகைப்படுத்தி விட்டு, முற்கூற்றுப் புராணங்களை (எடு:பெரியபுராணம்) ஏற்றுக்கொண்டு, பிற்கூற்றுப்புராணங்கள் பற்றி பின்வரும் கருத்தை முன்வைக்கின்றமை கவனத்திற்குரியது. பிற்கூற்றுப் புராணங்களின் காலமே தமிழ்க்குங் கலிகாலம்! விருத்தாப்பியமடைந்த தமிழணங்கிற்குப் பஞ்சப் புலனும் இக்காலத்துக் கெட்டனபோலும். இப்புராணங்களே தமிழைப் பாழாக்கின பெரும் பேறுடையின. ஆலையில்லாவூருக்கு இலுப்பை பூ சர்க்கரை போலவும் தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டைப் பிரசண்டனென்பது போலவும் காரிகைகற்று சொற்றொடர் கற்கப் பழகினோர் யாவரும் புராணம் எழுதத் தொடங்கின தமிழ் - என்ன பாடுதான் படாது. தனது காலத் தமிழரின் தமிழின் நிலை பற்றியும் ஆழமாகச் சிந்திக்கின்ற தி.த.சரவணமுத்துப்பிள்ளை ஆங்கில மொழியின் பால் மிகுந்த பற்றும் தமிழ்மீது வெறுப்பும் காணப்படுகின்ற நிலை கண்டு சினமும் கவலையும் கொள்கின்றார். தற்காலத் தமிழருக்கும் நிலைமையெடுத்துரைக்கவும் வேண்டுமா? அருமறையோதுமந்தணாளர்க்கெல்லாம் ஆங்கிலேயே பாஷை சுயபாஷையும் அன்னிய பாஷை தமிழுமானது இக்கலிகாலத்தின் கூத்தோ@ ஆங்கிலேய பாஷையிலோர் சிறு கிரகந்தெரியாதிருத்தல் அவமானமாக, கம்பர் பாடியது இராமர் கதையோ தருமர் கதையோவென வினாவில் மரியாதையாவது கலிகால விநோதமே ஆங்கிலேய பாஷையை அடுப்படியிற் கேட்பேமேல் தமிழ்தானெங்கு போயிற்றோ! தந்தைக்குத் தலையிடிக்க மயானத்தில் விறகடுக்கிய சண்டாளன் கெதியாயிற்றன்றே தமிழர் கெதி! தொட்டில் பழக்கஞ் சுடுகாடுமட்டும் என்னும் பழமொழியும் பாஷைவிஷயத்திற் தவறிற்றன்றோ!..... சமகால இலக்கியம் பற்றிச் சிந்திக்கின்றபோது, குறிப்பாக கவிதை உலகில் அவலநிலை பற்றிப் பலப்படக் கூறி, ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றமை மனங்கொள்ளத்தக்கது. தமிழ் திருந்த வேண்டுமெனும் விருப்பமுடையோர் அந்தாதி, கலம்பகம் முதலியவை எழுதுவதாலென்ன பயன்? அவ்வாறு எழுதினும் அதிலும் புதிதேதாவது சொல்வாரா? சொல்வார். அந்தோ அது தவறென்பார். கூறும் பொருளும் கூறும் விதமும் முன்னோர் கூறிய விதமே கூற வேண்டுமாயின் திருந்துவதற்கு வழி எங்கனோ? உருவகம் உவமை முதலியனவும் முன்னோர் கூறியவற்றிற் பிறிது கூறிற்றவறென்பரேல். ஐயன்மீர், தமிழுய்யும் வழிதானெவ்வாறோ? முன்னொருகால், யான் இயற்றிய செய்யுளொன்றில் காக்கையிற் கரிய கூந்தல் என்றெழுதியதற்கு பண்டிதர் மூவர் முன்னோர் யாவரும் இவ்வாறு கூறவில்லையே இது தவறு என்றனர். முன்னோர் காக்கை கரிது என்று சொல்லாவிடிற் காக்கை கரிதல்ல என்று கூறக்கூடிய பண்டிதருடன் யாம் யாது செய்யலாம்... சமகால தமிழிற்கு முக்கியமான தேவை என்று தி.த.சரவணமுத்துப்பிள்ளை கருதுபவை புதிய செய்யுள் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புகள், வசன கிரந்தங்கள் என்பனவாம். மேற்குறிப்பிட்ட தமிழ்ச் சூழலில் தவிர்க்கவியலாதவாறு தமிழபிமானம் பற்றி வற்புறுத்துகின்றார். தி.த. சரவணமுத்துப்பிள்ளை: தமிழர்களே உங்கள் சுதேசாபிமானம் எங்கு போயிற்று? தமிழின் ஆயுள் முடிந்ததென்பீரோ? அவ்வாறு கூறற்க. அதைரியப்படாது தமிழை விருத்தி பண்ண வேண்டியதே சுதேசாபிமானிகளின் கடமை. சுருங்கக்கூறின் ஈழத்தவரான தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் தமிழ்ப்பாஷை என்ற நூல் தமிழ்மொழி வரலாற்று உருவாக்கத்திலும் தமிழ் இலக்கிய வரலாற்று உருவாக்கத்திலும் முக்கியமான நூலாகும். கலாநிதி செ. யோகராசா மொழித்துறை - கிழக்குப் பல்கலைக்கழகம்