அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் - பகுதி 4
Arts
12 நிமிட வாசிப்பு

அசமத்துவ அதிகாரப்பகிர்வு : ஸ்பானிய நாட்டின் அனுபவம் – பகுதி 4

July 17, 2023 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஸ்பானியாவில்  வரலாற்றுத் தேசிய இனங்களது சுயாட்சியின் 25 ஆவது ஆண்டு நிறைவு 2004 இல் கொண்டாடப்பட்டது. அப்போது பஸ்க், கற்றலோனியா, ஹலீசியா என்பன தமது அதிகாரப் பகிர்வு அனுபவங்களை மீளாய்வு செய்தன. ஐரோப்பிய சமூகத்துடன் ஸ்பெயின் தன்னை இணைத்துக் கொள்வதற்காகச் செய்த இசைவினைத் தவிர அதன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் எதுவும் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. சுயாட்சி சமூகங்கள் மத்தியில் அதிருப்தி காணப்படுவது இம் மீளாய்வில் அறியப்பட்டது. தமக்குரிய அதிகாரங்களின் அளவு போதியதாக இல்லை எனவும் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்திருப்பதாலும் திருப்தியின்மை வெளியிடப்பட்டது. அரசியல் யாப்பு நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கும்போது சுயாட்சிச் சமூகங்களை நட்புணர்வுடன் நோக்கவில்லை. அதனிடம் மத்தியவாதம் (Centralism) எனும் பக்கச் சார்பு இருத்தலும் சுட்டிக்காட்டப்பட்டது. சுருங்கக் கூறின், ஸ்பானிய அரசின் ஒற்றைத் தேசியக் கொள்கைகள் (Mono – National Policies) இம் மீளாய்வுகள் ஊடாக வெளிப்பட்டன. ஸ்பெயின் அதிகாரப் பகிர்வு முறையில் மாற்றம் வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. வரலாற்றுத் தேசிய இனங்கள் என்று கூறக்கூடிய சுயாட்சி சமூகங்களில் இருந்து மட்டுமல்லாமல் சுயாட்சி கோரிப் போராட்டம் நடத்திய வரலாறு இல்லாத சுயாட்சி சமூகங்களில் இருந்தும் இக்கோரிக்கைகள் எழுந்தன.

ஸ்பானியாவின் இன்றைய அரசியல் யாப்பில் மட்ரிடின் மத்திய அரசுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டுள்ளது. இது சுயாதீனச் சமூகங்கள் தம்மைக் வகைப்படுத்திக் கொள்வதற்குத் தடையாகவுள்ளது. மத்திய அரசு சுயாட்சி அலகுகளின் அலுவல்களில் தலையிடும் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றது. இது அரசியல் யாப்பின் நோக்கங்களுக்கு முரணானது. முழு நாட்டினதும் பாதுகாப்பு, நாட்டின் நலன்கள் என்பனவற்றிக்கும் பாதமானது. சுயாட்சிச் சமூகங்களுக்கு அரசியல் யாப்பு நீதி மன்றத்தின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அரசியல் யாப்புக்குக் கூறும் விளக்கங்களையே அந்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய அரசிற்குச் சாதமான தீர்ப்புகளை வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரசியல் யாப்பில் எஞ்சிய அதிகாரகள் (residual powers) பற்றிக் குறிப்பிடப்படுள்ளது. வெளிப்படையான சொற்களில் எடுத்துரைக்கப்படாத அதிகாரங்கள் என இவற்றை விளங்கிக் கொள்ளலாம். இவை சுயாட்சிச் சமூகங்களுக்கு உரியனவாதல் வரவேற்புக்குரியது. ஆனால் நடைமுறையில் இவை மத்திய அரசாலேயே பிரயோகிக்கப்படுகின்றன.

சுயாட்சி சமூகங்களின் இயக்கம் தொடர்பான பிரச்சனைகள்

ஸ்பெயின் நாட்டின் அரசியல் யாப்பில் செனற்சபை என்னும் இரண்டாவது சபை பிராந்தியங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உள்ளது. ஆயினும் அது பெயரளவில் இரண்டாவது சபை என அமைந்த போதும், பிராந்தியங்களின் நலன்களைப் பேணுவதற்கான ஆணையைப் பெற்ற ஒரு சபையாக அது உருவாக்கப்பட்டிருக்கபடவில்லை. அதன் அதிகாரங்கள் குறுகியவை. உறுப்பினர்கள் பிராந்தியங்களோடு பிணைப்பு உடையவர்களாக இருக்கவில்லை. உறுப்பினர்களில் 20% மட்டுமே பிராந்தியங்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் கிடையாது. மத்தியிலுள்ள அதிகாரங்கள் சுயாட்சி சமூகங்களிற்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தும் அவை பங்கேற்பதற்கு வழி செய்யவில்லை. சுயாட்சிச் சமூகங்களுக்கு மத்திய அரசோடு தொடர்புகள் இருக்கவில்லை. அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கும், நீதி அதிகாரப் பொதுச் சபைக்கும்  (General Council of Judicial Power) உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் சுயாட்சி சமூகங்களுக்கு பங்கேற்பு இருக்கவில்லை. மத்திய அரசே அவ்விடயத்தில் தீர்மானம் எடுத்தது.

ஸ்பெயின் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக மாறியுள்ளது. இப்பொழுது ஐரோப்பிய யூனியன் மேற்கொள்ளும் முடிவுகள் ஸ்பெயினின் சுயாட்சிப் பிரதேசங்களின் நலன்களை பாதிப்பனவாய் அமைகின்றன. ஆனால் இவ்விடயங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமை சுயாட்சி சமூகங்களுக்கு இல்லை. குறிப்பாகப் பொருளாதார உறவுகள் தொடர்பான விடயங்களில் சுயாட்சிச் சமூகங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஸ்பெயினின் குடிவரவு கொள்கை நடைமுறைகளில் முழுமையான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. ஆயினும் சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, நலன்புரிச் சேவைகள் என்பன சுயாட்சி சமூகங்களின் அதிகாரங்களாக உள்ளன. இதனால் குடியேறிகளின் வரவு பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லாத சுயாட்சிச் சமூகங்கள், குடிவரவாளர்களின் நலன்களைக் கவனிக்கும்படி தேவைப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு வகையான மீள் மத்தியமயமாக்கல்  (Re-Centralisation) எனக் குற்றஞ் சாட்டப்படுகிறது.

சுயாதீன சமூகங்களுக்கு போதிய நிறுவனங்கள் இல்லை. அவை தாமாகவே சுதந்திரமாக நிதியைத் தேடிக் கொள்ளும் வாய்ப்புகளும் இல்லை. உறுப்புரை 156 சுயாட்சிச் சமூகங்கள் தமது அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்கு வேண்டிய நிர்வாகத்தை உடையனவாய் இருக்கும் எனக் குறிப்பிடுகிறது. நடைமுறையில் இது பொருளற்றதாக உள்ளது. புள்ளிவிபரங்கள் நடைமுறை எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

  • 1981 இல் பிராந்திய அரசுகளின் பொதுச் செலவுகள் (Public Expenditure) : 3.096 %.
  • 2002 இல் பிராந்திய அரசுகளின் பொதுச் செலவுகள் : 35.5 %.

மேற்படிப் புள்ளி விபரங்கள் அதிகாரப் பகிர்வு செயற்படுத்தப்பட்டதன் பயனாக சுயாட்சிச் சமூகங்களின் பொதுச் செலவுகள் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. இதே காலத்தில் மத்திய அரசின் பொதுச் செலவுகள் குறைந்து சென்றதையும் காண முடிகிறது.

  • 1981 இல் மத்திய அரசின் பொதுச் செலவுகள் : 87.3 %.
  • 2002 இல் மத்திய அரசின் பொதுச் செலவுகள் : 48.7 %.

இப்புள்ளி விபரங்களைக் கொண்டு சுயாட்சி சமூகங்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன எனக் கொள்ள முடியாது. இந்த நிலைக்கு காரணம் வருமானத்தின் பெரும் பகுதியை மத்திய அரசே அறவிட்டுக் கொண்டிருப்பது தான். அரசியல் யாப்பில் நிதிச் சுயாதீனத்திற்கான ஏற்பாடுகள் இருந்த போதும், நடைமுறையில் சுயாதீனச் சமூகங்கள் நிதி விடயத்தில் பெருமளவில் தங்கி இருப்பனவாய் (High Dependency) உள்ளன. 2006 ஆம் ஆண்டில் கற்றலோனியாவின் சுயாட்சி நியதிச் சட்டம் (Statute of Autonomy) திருத்தப்பட்டது. அப்போது கற்றலோனியா கூடியளவு நிதி அதிகாரங்களைக் கோரியது. ஏனைய சுயாட்சி பிராந்தியங்களும் கற்றலோனியாவின் முன்மாதிரியைப் பின்பற்றின.

அசமத்துவம் குறைதல்

ஸ்பெயினின் அதிகாரப் பகிர்வு தொடங்கி 30 ஆண்டுகள் (1981-2011) முடிந்துவிட்டன. இக்காலத்தின் அனுபவம் ஸ்பெயினின் பிராந்தியச் சமூகங்களில் அசமத்துவம் குறையத் தொடங்கி இருப்பதைக் காட்டுகிறது. வரலாற்றுத் தேசங்களுக்கும் ஏனைய சுயாட்சிச் சமூகங்களுக்கும் ஆரம்பத்தில் இடைவெளி பெரிதாக இருந்தது. காலப்போக்கில் சுயாட்சி சமூகங்களின் சுயாட்சி அதிகரித்துச் சென்றது. இதனால் 1990 இன் பின்னர் சுயாட்சிச் சமூகங்களிடையே இருந்த சமத்துவம் குறையலாயிற்று. அண்மைக் காலத்தில் சுயாட்சிச் சமூகங்களின் தேசியவாத உணர்வை மழுங்கடிக்கும் நடைமுறைகள் பல மத்திய அரசால் செயற்படுத்தப்பட்டன. இவை அசமத்துவ அதிகாரப் பகிர்வு செயல்முறையை பின்னோக்கி நகர்த்தும் முயற்சி எனக் கண்டிக்கப்பட்டது. சமூகங்களிடையே அசமத்துவம் குறைக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் ஸ்பெயினின் அதிகாரப் பகிர்வு முறையில் சிறப்புக் கூறாக இன்றும் அசமத்துவம் முக்கியம் பெற்று விளங்குகிறது.

autonomous communities

பஸ்க், நவரே ஆகியன பொருளாதார நிதிச் சுதந்திரம் உடையனவாய் இருந்து வருகின்றன. சுயாட்சி சமூகங்களான கற்றலோனியா, ஹலிசியா, அரகன்,  பெலாரிக் தீவுகள், வலன்சியா, பஸ்க் என்பன தத்தம் பகுதிகளுக்குரிய குடிச் சட்டத்தை (Civil Law) நடைமுறையில் வைத்திருக்கின்றன.

பஸ்க், கற்றலன், ஹலிசியா என்னும் மூன்று தேசியங்களின் மொழிகள் உத்தியோக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் உத்தியோக மொழிகள் (Official Languages) அடிப்படையிலான அசமத்துவம் ஸ்பெயினின் அரசியல் யாப்பினால் உருவாகியுள்ளது.

பஸ்க், கற்றலோனியா, நவரே ஆகிய சுயாட்சிச் சமூகங்கள் தனியான பொலிஸ் சேவையை நடத்துகின்றன. மட்டுப்படுத்திய அளவு அதிகாரமுடைய பொலிஸ் சேவையை அன்டலூசியாவும் நடத்துகின்றது. பிந்திவந்த சுயாட்சிச் சமூகங்களுக்குப் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

சுயாட்சிச் சமூகங்களின் தனித்துவ அடையாளங்களை ஏற்று அங்கீகரிக்கும் நெகிழ்வுத் தன்மையும், அரசியற் பண்பாடும் (Political Culture) ஸ்பெயினில் இருப்பதால், அங்கு அசமத்துவம் நிலைத்த ஒரு பண்புக்கூறாக அமைந்துள்ளது. மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

பிந்திவந்த சுயாட்சிச் சமூகங்கள் சுயாட்சி நியதிச் சட்டங்களை இயற்றத் தொடங்கியதும், அசமத்துவம் குறைவது எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் முன்பே தம்மை தாபித்துக் கொண்ட சமூகங்கள் தமது சுயாட்சி அந்தஸ்தையும் உயர்த்திக் கொண்டன. முதலில் தாபித்துக் கொண்ட சுயாட்சி சமூகங்களில் ஒன்றான கற்றலோனியா தனது நியதிச் சட்டத்தை 2005 இல் மறு சீரமைத்து திருத்தம் செய்தது. இத்திருத்திய சட்டத்தின் மூலம் அதிகாரத்தை மேம்படுத்த அது முயற்சித்தது.

இத்திருத்தத்தின் ஐந்து நோக்கங்கள் வருமாறு:

  1. கற்றலோனியாவை ஒரு தேசியம் (Nation) என வரைவிலக்கணப்படுத்தல். அதன் அரசியல் அடையாளத்தையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்தல்.
  2. குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வகுத்துரைக்கும் சட்டத்தை இயற்றுதல்.
  3. கற்றலோனியாவின் பிரத்தியேக அதிகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதைத் தடுத்தல்.
  4. கற்றலோனியாவின் நீதித் துறையை மறுசீரமைத்தல்.
  5. கற்றலோனியா ஐரோப்பிய யூனியன் அலுவல்களில் பங்கேற்பதற்கும், ஸ்பானியாவின் கொள்கை வகுப்பு செயல் முறையில் பங்கேற்பதற்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குதல்.

மேற்படி நியதிச் சட்ட முன்மொழிவு கற்றலோனியாப் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இதனைப் பாராளுமன்றமும் சட்டமாக ஏற்றுக் கொண்டது.

கற்றலோனியாவின் 2005 நியதிச் சட்ட மாதிரியை ஏனைய சுயாட்சிச் சமூகங்களும் பின்பற்ற ஆரம்பித்தன. ஆயினும் கற்றலோனியாவின் முன்முனைவு அரசியல் யாப்பு நீதிமன்றத்தில் அரசியல் யாப்புக்கு முரணானது என்ற அடிப்படையில் விசாரணைக்கு விடப்பட்டது. ஒரு முடிவை எடுப்பதற்கு 5 ஆண்டுகள் காலம் கடத்திய பின்னர், அரசியல் யாப்பு நீதிமன்றம் நியதிச் சட்டத்தின் சில பகுதிகளும் பிரிவுகளும் அரசியல் யாப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளித்தது. இவ்விடைக்காலத்தில் ஏனைய பல சுயாட்சிச் சமூகங்களும் நியதிச் சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தன.

ஸ்பானியாவின் அதிகாரப் பகிர்வு மாதிரி அசமத்துவத்தை முடிவுறாத ஒரு தொடர் அம்சமாக கொண்டிருக்கும் நிலையை உருவாக்கியுள்ளது எனலாம். அம்மாதிரி, அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய சுயாட்சிச் சமூகங்கள் உருவாகின்றன. முன்னரே தம்மை தாபித்துக் கொண்ட சுயாட்சி சமூகங்கள் மேலும் மேலும் அடுத்த படிகளை நோக்கி தம்மை உயர்த்திச் செல்கின்றன. அதிகாரப் பரவலாக்கம் தடைக் கதவுகள் இல்லாத திறந்த பாதையாக இருக்கிறது. பிராந்தியங்களது முன்முனைவுகளாலும் மத்தியின் நடவடிக்கைகளாலும் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆதலால் அசமத்துவம் இன்று எந்தளவில் இருக்கிறதோ அதனைவிட நாளை அதன் அளவு வேறுபடும்.

ஸ்பானியா தீவிர மத்தியபடுத்தலுக்குள்ளான ஓர் அரசு ஆகும். மத்தியப்படுத்தல் ஒரு சிறந்த விடயம் என்னும் கருத்து ஸ்பானியாவின் ஆட்சியாளரிடம் இருந்து வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியை உடைய நாட்டில் மத்தியப்படுத்தல் மேலோங்கிய மரபாக இருந்தது.  இத்தகைய நிலையில்தான் பகுத்தறிவுக்குப் பொருத்தமான தீர்வாக அதிகாரப் பகிர்வு முறைமை தெரிவு செய்யப்பட்டது.

ஸ்பானியாவில் பல சமூகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் தமக்கு எந்தளவுக்கு சுயாட்சி வேண்டும் என்பதை தாமே தீர்மானித்துக் கொள்ள முடியும். அங்கு மேலிருந்து திணிப்பதாக அதிகாரப் பகிர்வு அமையவில்லை. சில சுயாட்சிச் சமூகங்கள் உயர் அளவிலான சுயாட்சியைக் கோரின. அவ்வாறு அவை கோருவதற்கு சமூக பண்பாட்டு காரணங்களும், புவியியல் காரணங்களும் இருந்தன. சில சமூகங்களில் இது போன்ற சுயாட்சிக்கான வேணவாவும் எழுச்சியும் இருக்கவில்லை. அத்தகைய சமூகங்கள் குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி முறையைத் தெரிவு செய்ய அனுமதிக்கப்பட்டன. ஸ்பானியாவில் சில இனக்குழுமத் தேசியங்களின் பிராந்தியங்கள் வரலாற்று ரீதியாக சுயாதீனமாகச் செயற்பட்டு வந்தன. இவை தமக்குச் சுயாட்சி வேண்டும் என்று கோரின. வேறு சில சமூகங்களில் இவ்வாறான நிலை இருக்கவில்லை. அவை குறைந்தளவு அதிகாரப் பகிர்வைத் தேர்ந்து கொண்டன. காலப் போக்கில் அவை படிப்படியாக, கூடிய அதிகாரப் பகிர்வை நோக்கிச் செல்ல முடியும். ஸ்பானியாவில்  இனக் குழும அடிப்படையில்லாத புவியில் பிராந்தியங்களும் இருந்தன. அத்தகைய பிராந்தியங்களும் அதிகாரப் பகிர்வைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டன.

ஸ்பானியாவில் சில சமூகங்கள் சுயாட்சி தமக்கு வேண்டுமென தீவிரமாகப் போராடி வந்தன. வேறு சில சமூகங்களில் சுயாட்சிக்கான அபிலாசை தீவிரமானதாக இருக்கவில்லை. இத்தகைய வேறுபாட்டின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு ஸ்பானியாவில் வேறுபட்ட அளவில் இடம்பெற்று வருகிறது. சில சமூகங்கள் வேகமாகவும் வேறுசில சமூகங்கள் மந்த வேகத்திலும் இந்த இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. கடந்த 30 ஆண்டு காலத்தில் (1981-2011) ஸ்பானியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகார பகிர்வு முறையின் அனுபவங்களைக் கூர்மையாகப் பரிசீலித்தல் வேண்டும். இதன் மூலம் இலங்கையர்களாகிய நாம் அரிய அரசியற் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

Ranjith Amerasinghe

குறிப்பு : இது ” POWER SHARING INTERNATIONAL EXPERIENCE – ed. RANJITH AMARASINGHE, JAYAMPATHY WICKREMARATNE ” எனும் நூலில் இடம்பெற்ற ரஞ்சித் அமரசிங்க அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தழுவலாக்கம். ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பு : ASYMMETRICAL DEVOLUTION : Understanding The Spanish Experience (pages: 143-168).

பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க : “ கல்வி என்பது மேல்நோக்கிய சமூக இயக்கத்திற்கான கடவுச் சீட்டல்ல, சமூகச் சேவைக்குரிய முதன்மையான ஒரு சமூக ஒப்பந்தமாகும் எனும் கோட்பாட்டை அவரது ஆசிரியப் பணியில் பின்பற்றினார்” என்று இவரது தனித்துவமிக்க அர்ப்பணிப்பான சேவை பற்றி இவரின் மாணவரும் கொழும்புப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான லக்சிறி பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6266 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (18)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)