இலங்கை முஸ்லிம்களின் மற்றொரு உப மரபினமாக போஹ்ராக்கள் விளங்குகின்றனர். ‘போஹ்ரா’ (Bohras) என்ற சொல்லின் பொருள் ‘வர்த்தகர்’ என ஒரு ஆய்வுத்தகவல் குறிப்பிடுகிறது. அவர்களது சமூக வாழ்வியலுக்கும் இந்தச் சொல்லுக்குமான தொடர்பு உண்மையில் ஆழமானது. இந்த அர்த்தத்தில் பார்த்தால் ‘போஹ்ரா’ என்பது ஒரு காரணப்பெயராகவே இந்த சமூகத்தினருக்கு சூட்டப்பட்டிருப்பதை அவர்களது உலக வர்த்தகச் செயல்பாடுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. உலகின் பல பாகங்களிலும் சிறப்பான முறையில் வர்த்தகம் மேற்கொள்கின்ற ஒரு சமூகப்பிரிவினராகவே போஹ்ராக்கள் பார்க்கப்படுகின்றனர். குறிப்பாக வட இந்தியாவிலேயே பெருமளவில் அவர்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்தியாவின் வர்த்தக சமூகங்கள் இலங்கைக்கு வருகை தரவும், இலங்கையில் தங்கியிருப்பதற்குமான வாய்ப்பை 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ அரசு உருவாக்கிக் கொடுத்தது. இந்தச் சந்தர்ப்பம் வடமேற்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த போஹ்ராக்களுக்கும் வாய்த்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையில் தங்களின் இருப்பை அமைத்துக் கொண்டு இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் முக்கியம் வாய்ந்த சக்தியாக அவர்கள் மாறினர். போஹ்ராக்கள் தங்களது இனத்துவ மூலத்தை மேமன்களைப் போலவே குஜராத் வரைக்கும் நீட்டிக்கின்றனர். தங்களின் முன்னோர்கள் குஜராத்திகள் என அவர்கள் நம்புகின்றனர். அவர்களின் வீட்டு மொழியாகவும் குஜராத்திகளின் ஓர் உள்ளூர் மொழியே இருந்து வந்தது. தாவித்-நி-கபான் எனப்படும் இப்பேச்சு மொழி அவர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.
போஹ்ராக்கள் அவர்களது சமூக ஒழுங்கமைப்பு, அடிப்படைகள் சார்ந்து இரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.
- தாவூதிகள் (Dawoodis)
- சுலைமானிகள் (Sulaimanis)
இதில் தாவூதிகள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். இலங்கையில் போஹ்ராக்களின் மொத்தக் குடித்தொகையே 2500 பேர்தான் என்று ஒரு ஆய்வுத் தகவல் சொல்கிறது. இலங்கையின் பிரதான நகரங்களில் குறிப்பாக கொழும்பில்தான் இவர்கள் காணப்படுகின்றனர். பம்பலப்பிட்டியில் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர். போஹ்ராக்கள் கொழும்பில் விசாலமான பெரிய வீடுகளையே தங்கள் வசிப்பிடங்களாக நிர்மாணித்துள்ளனர். அல்லது முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து பெரிய பங்களாக்களை விலைக்கு வாங்கியுள்ளனர் என எம். எம். எம். மஹ்ரூஃப் குறிப்பிடுகிறார். இன்றும்கூட கொழும்பிலுள்ள பெரிய பங்களாக்கள் போஹ்ராக்களுக்குச் சொந்தமானவைதான்.
போஹ்ராக்கள் பெரும்பாலும் பாரிய வர்த்தக நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர். அவர்களின் நூற்றாண்டுகால பொருளாதார நடவடிக்கையாக இருந்தது மிக அன்றாடத் தேவையான பொருட்களின் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகும். அதிலும் குறிப்பாக அடிப்படைத் தேவையான பொருட்கள் ஏற்றுமதியே அவர்களின் பிரதான வர்த்தகமாக இருந்தது. உலக அரிசி ஏற்றுமதி, குதிரைகளுக்கான தீவனம், காகிதாதிகள் வர்த்தகம், தீக்குச்சித் தொழிற்சாலை, தேயிலை – ரப்பர் வர்த்தகம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் அவர்கள் மிகவும் ஈடுபட்டனர். T.A.J. Noorbhai, Moosajees, Akbar Alys, Adamalays, Akbar Bros, Jafferjees போன்ற வர்த்தக நிறுவனங்கள் மூலம் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கையின் பெரும் வர்த்தக கட்டமைப்பில் நுழைவதற்கான வாய்ப்புகளை போஹ்ராக்களுக்குத் திறந்துவிட்டன. 1970 – 71 இல், இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை வருவதற்கு முன்பு, இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் பதினொரு போஹ்ரா நிறுவனங்கள் இருந்தன. அவற்றின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை முந்நூறு பேர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பாளர்களின் பட்டியலில் பின்வரும் உற்பத்திகளுக்கான போஹ்ராக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் : தென்னை நார், உள்ளூர் விளைபொருட்கள், தேங்காய் எண்ணெய், கொப்பரை, கொக்கோ, ஏலக்காய், தேங்காய், தேங்காய் துருவல் , கரி, மாசி, சாதிக்காய், மிளகு மற்றும் கிராம்பு. பல போஹ்ரா நிறுவனங்கள் டைரக்டரியின் வணிகப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. கொழும்பு வர்த்தகப் பட்டியலில் போஹ்ராக்களும் நன்கு பிரதிநிதித்துவம் பெற்றனர். 1980 கள் மற்றும் 1990 களில், போஹ்ரா நிறுவனங்கள் உயர்மட்ட சுற்றுலா, மருத்துவ மருந்துகள் விநியோகம், அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சோப்பு, பற்பசை மற்றும் பல் தொடர்பான பொருட்கள், ஐஸ்கிரீம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் போன்ற துறைகளில் நுழைந்தன.[ii]
இந்தப் பொருளாதார விருத்தியானது போஹ்ராக்களை உயர் கல்வி நோக்கி உந்தியது. அதன் விளைவு, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் இலங்கை முஸ்லிம் சட்டமானிப் பட்டதாரி (LL.B.) போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே என்கிற தகவலை Calendar of the University of Ceylon for Sessions 1955 – 1956 மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இலங்கையின் போஹ்ராக்களின் பொருளாதார முக்கியத்துவம் எப்போதும் இலங்கை அரசாங்கங்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. உதாரணமாக, 1920 – 1924 இலங்கை சட்ட சபையில், ஈ. ஜி. ஆதமலி இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதேபோன்று 1953 இல் இலங்கை சட்டசபையின் செனட்டுக்கான நியமன உறுப்பினராக போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த கே. ஆதமலி நியமிக்கப்பட்டார்.
போஹ்ராக்கள் இவ்வாறு பொருளாதாரம், கல்வி, அரசியல் என முக்கியமான தளங்களில் தங்களின் இருப்பைப் பலப்படுத்திக் கொண்டு வந்த அதேநேரம் மதம் சார்ந்த நடவடிக்கைகளிலும் கவனம் எடுத்துக் கொண்டனர். மதம் சார்ந்து போஹ்ராக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆயினும் இஸ்லாத்தினுள் ஒரு சமய உட்பிரிவாகவே (Sect) அவர்கள் பார்க்கப்படுகின்றனர்.
அவர்களின் மதத் தலைவருக்கு அல்லது டாய்-எல்-முத்லக்கிற்கு (Dai-el-Mutlaq) முழுமையான ஆன்மீகக் கீழ்ப்படிதலைச் செலுத்துவது அவர்களின் இன்றியமையாத பண்பாக விளங்கியது. இச்சமூகத்தின் ஒரு விசித்திரமான நம்பிக்கை என்னவென்றால், இமாம் எப்போதும் இருக்க வேண்டும், அவரே எப்போதும் ‘Dai’ ஐ வைத்திருக்க வேண்டும்; ஆனால் இமாம் ஒதுக்கமாக (Seclusion) இருப்பதால், டாய்க்கு மித்தாக் (Mithaq – விசுவாசப் பிரமாணம்) உரிமை உண்டு. அத்துடன், மதத்தின் அனைத்து நடைமுறை நோக்கங்கள் சார்ந்து மதத்தின் அதிகாரபூர்வமான விளக்கவுரையாளராகவும், சமூகத் தலைவராகவும் அவரே விளங்குவார் என மஹ்ரூஃப் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் போஹ்ரா சமூகத்தினர், 1985 ஆம் ஆண்டில், டாய்-எல்-முத்லக் ஒருங்கிணைப்பு மசோதாவை நிறைவேற்ற விரும்பியபோது, அவர்கள் மித்தாக்கின் தன்னார்வத் தன்மையை வலியுறுத்தினர். இந்த மசோதா சட்டப்பூர்வமாக அவர்களின் மத மற்றும் சமூக நடவடிக்கைகள் அனைத்தையும் பம்பாயிலுள்ள டாயின் கீழ் கொண்டு வந்திருக்கும். பொதுவாக, கொழும்பிலுள்ள தாவூதி தூதுக்குழுவே அவர்களின் மைய நிர்வாக அமைப்பாகும். இதற்கு பம்பாயைச் சேர்ந்த ஆமில் (Amil) தலைமை தாங்குகிறார். ஆமில் டாயால் நியமிக்கப்படுகிறார். ஜகாத் மற்றும் ஃபித்ரா (நோன்பு கால தர்மங்கள்) உட்பட அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்க ஆமில் பொறுப்பாக உள்ளார். டாய்க்கும் இலங்கை போஹ்ராக்களுக்கும் இடையிலான இணைப்பாக ஆமில் செயற்படுவார். பம்பாயைச் சேர்ந்த போஹ்ரா அறிஞர்களால் நடத்தப்படும் மத வகுப்புகளையும் அவரே இங்கு வழிநடத்துகிறார்.[iv]
இலங்கையில் போஹ்ரா சமூகமானது அவர்களின் பிரபலமான குடும்பப் பெயர்களாலும் அறிந்துகொள்ளப்படுகிறது. அந்தவகையில் ‘ஆதமலி’ குடும்பம் பிரபலமானது. பெரும்பாலும் ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜீ என்பதைச் சேர்த்துக் கொள்கின்றனர். கரீம் ஜீ, ஜாபர் ஜீ என அழைக்கப்பட்ட ஆண்கள் போஹ்ரா சமூகத்தில் காணப்பட்டனர். அவர்களின் பெயரில் உருவான குடும்பங்கள் பிற்காலத்தில் போஹ்ரா சமூகத்தில் பிரபலமான குடும்பங்களாக வளர்ந்திருந்தன.
அடிக்குறிப்பு
- asianimage.co.uk
- M.M.M. Mahroof- The sub communities of the Muslims of Sri Lanka. (Exploring Sri Lankan Muslims: selected writing of MMM. Mahroof, edited by M.L.A. Cader, South Eastern University of Sri Lanka) p. 11
- W.G. Goonaratne and R.S. Karunaratne, Tenth Parliament of Ceylon. p.725
- M.M.M. Mahroof- The sub communities of the Muslims of Sri Lanka. (Exploring Sri Lankan Muslims: selected writing of MMM. Mahroof, edited by M.L.A. Cader, South Eastern University of Sri Lanka) p. 10