மட்டக்களப்பின் பூர்விக வரலாறும், பூர்விக வழிபாட்டு முறைகளில் ஒன்றான குமார தெய்வ வழிபாடும் இந்நுாலில் ஆய்வு செய்யப்படுகின்றன. பண்பாடு சார்ந்த அம்சங்களைக் கொண்ட வரலாற்றெழுதியல் முறைமை என்ற போதிலும், இந்நுாலில் பெரும்பாலான தர்க்கங்களும் தகவல் மூலங்களும் கடந்தகால ஆவணங்களில் இருந்தும் அனுபவம் மற்றும் கள ஆய்வு சார்ந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன.
எ. விஜயரெட்ண (விஜய்) மட்டக்களப்பு, கிரான் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். 1980 களில் தேசிய விடுதலைப்போராட்டச் சூழலில் அது சமூக விடுதலைக்கான போராட்டமாகவும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தியலுடன் செயற்பட்டவர். மட்டக்களப்பில் நிலவிய அசாதாரண சூழலால் மலையகத்திற்கு இடம்பெயர்ந்து அங்கேயே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பண்பாடு, வழிபாட்டுமுறைகள், தொன்மங்கள் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டும் எழுதியும் வருகின்றார்.
மேற்கத்தேய கல்விப்புலத்தில் வரலாற்றெழுதியல் என்னும் துறையானது பலவித தளங்களில் தன்னை விருத்தி செய்துகொண்டுள்ளது. இதன் தாக்கம் கீழைத்தேய கல்விப்புலங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கின்றோம். முக்கியமாக, தமிழ்நாட்டில், கல்விப்புலத்தில் மட்டுமல்லாது சிற்றிதழ்ப்பரப்பிலும் இதன் தாக்கத்தை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இனத்துவ அடிப்படையிலான / சட்டகத்திலான வரலாற்றெழுதியலுக்கு மாற்றாக இதர வரலாற்றெழுதியல் அணுகுமுறைகள் தோற்றம் பெற்றன. இவற்றின் ஓர் அம்சமாக, பண்பாட்டு வரலாற்றெழுதியலைக் குறிப்பிடலாம். ஈழத்தைப் பொறுத்தவரை, வரலாற்றெழுதியலானது இனத்துவ அடிப்படையிலான அணுகுமுறைகளைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு நகராத நிலமையையே இன்றும் காணலாம். இனத்துவ அடிப்படையிலான முரண்பாடு தொடர்ச்சியாக முன்னிலையிலிருந்த காரணத்தால், ஈழத்துக்கல்விச்சூழலுங்கூட இனத்துவச்சட்டகத்தைத் தாண்டமுடியவில்லை. இனத்துவ அடிப்படையிலான பொதுமைப்படுத்தலுக்கு மாற்றீடான அணுகுமுறைகளின் அவசியத்தை உணர்ந்துகொள்ளமுடியாத நிலமையே இன்றுவரைக்கும் தொடர்கின்றது. பண்பாட்டு அடிப்படையிலான புலமைத்துவ மரபுக்கும் ஈழத்திற்கும் நீண்ட காலத்தொடர்பும் உறுதியான அத்திவாரங்களும் இருந்த போதிலும் அவை தொடரப்பட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஈழத்தமிழர் வரலாறு என்பதைக் கவனத்தில் கொண்டால், பெரும்பாலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றையும் அதன் நீட்சியில் அமைந்த இனத்துவ வரலாற்றையும் கருதும் போக்கே காணப்படுகின்றது. பிற்காலங்களில் 'மட்டக்களப்பு மான்மியம்' மற்றும் 'மட்டக்களப்பு தமிழகம்' போன்ற பிரதிகளை முன்வைத்து மட்டக்களப்புப்பிரதேச வரலாறு அணுகப்பட்டு வந்தாலும், பண்பாட்டு அடிப்படையிலான வரலாறு என்னும்போது பெரும்பாலும் யாழ்ப்பாணப்பண்பாட்டை அடியொற்றியதாகப் பொதுமைப்படுத்தி அணுகும் போக்கே இன்றுவரைக்கும் தொடர்கின்றது. இவ்வகையில், விஜய் (எ) விஜயரத்தின அவர்கள் மட்டக்களப்பு சமூகத்தின் வழிபாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பிரதியை ஆக்க முனைந்துள்ளார். மட்டக்களப்பின் பூர்விக வழிபாட்டு முறைகளில் ஒன்றான குமார தெய்வ வழிபாடு, மட்டக்களப்பு மக்களுக்குரிய தனித்துவ வழிபாட்டு முறையாகும். மட்டக்களப்பின் கிரான் பகுதியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த விஜய் அவர்கள் தன்னுடைய சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வந்து, தற்போது அருகிக்கொண்டிருக்கும் வழிபாட்டு முறையை தனது சக்திக்குட்பட்ட வகையில் ஆய்வு செய்து எழுத்தில் வெளிக்கொணர்ந்துள்ளார். பண்பாடு சார்ந்த அம்சங்களைக் கொண்ட வரலாற்றெழுதியல் முறைமை என்றபோதிலும், பெரும்பாலான தர்க்கங்களும் தகவல் மூலங்களும் கடந்தகால ஆவணங்களில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு மேலதிகமாக, தன்னுடைய அனுபவம் சார்ந்தும் கள ஆய்வு சார்ந்தும் பெற்றுக்கொண்ட தகவல்களை நேர்மையாக முன்வைத்துள்ளார். குமார தெய்வ வழிபாட்டு முறைக்கும் கிழக்கு மாகாண வழிபாட்டு முறைக்கும் கிழக்கு மாகாணத்தை அண்டியுள்ள சிங்கள சமூகங்களுடைய பூர்விக வழிபாட்டு முறைக்குமுள்ள ஒற்றுமைகளையும் தன்னுடைய ஆய்விலே தயங்காமல் வெளிக்கொணர்கின்றார். இதிலிருந்து, இவர் பண்பாட்டுக்கூறுகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய ஆய்வுமுறையை வடிவமைத்துள்ளார் என உறுதியாகக் கூறமுடிகின்றது. இதுவரை காலமும் இனத்துவ அடிப்படையிலான வரலாற்றெழுதியல் புலமைத்துவ மரபும் அதனூடாகக் கட்டமைக்கபப்ட்டிருந்த சட்டகமும் இவ்வணுகுமுறையை, ஆரோக்கியமாக எதிர்கொண்டு முன்னகர்த்தவேண்டும். இந்நூலைப்போன்ற பண்பாட்டு வரலாற்றெழுதியல் முறைமைகளின் அறிமுகமானது, பிற வரலாற்றெழுதியல் முறைகளையும் ஊக்குவித்து வரவேற்கும் என்று கருதுகின்றோம். அதுமட்டுமல்லாது, பண்பாட்டு அம்சங்கள் சார்ந்த ஆய்வுகளுக்கான ஊக்கியாகவும் அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆசிரியராகக் கடமையாற்றும் விஜய், ஆய்வை முழுநேரப் பணியாகக் கொண்டவர் அல்ல. தனது பல்கலைக்கழகக்காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயற்பட்டவர்களுள் ஒருவர். பிற்காலத்தில், இயக்க அரசியலில் இருந்து விலகி மனித உரிமைச்செயற்பாட்டாளராக பணியாற்றியவர். அவருடைய ஆய்வு, தனது சமூகம் மீதான நேசத்துடனான தேடலிலிருந்தே வெளியாகின்றது. மட்டக்களப்பு மக்களின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட இவருடைய ஆய்வுகள், இன்னுமின்னும் அதிகளவான தகவல்களுடனும் கள ஆய்வின் மூலமும் விருத்தியாக வேண்டும். பண்பாட்டு வரலாற்றெழுதியலின் ஆரம்ப முயற்சி என்ற வகையில் இப்பிரதியைப் பதிப்பிக்கின்றோம். இப்பிரதி உருவாக்கும் அசைவியக்கம் எதிர்காலத்தில் இவ்வாய்வு முறைமை விருத்தியாகவும் மேலும் பல புதிய ஆய்வாளர்கள் தோன்றவும் வழிசமைக்கும் என்றும் நம்புகின்றோம். எழுநா ஜனவரி 2013
மட்டக்களப்பு வரலாறு தொடர்பான கட்டுரை ஒன்றினை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அக்கட்டுரையினை வாசித்த நண்பர் யோகன் கண்ணமுத்து (அசோக் - பிரான்ஸ்) “இனியொரு” இணையத்தில் அதனை வெளிவரச் செய்தார். நண்பர் யோகன் கண்ணமுத்துவும், இனியொரு சபா நாவலனும் தந்த உற்சாகத்தினால் மட்டக்களப்பு வரலாறு தொடர்பாக தொடர்ந்தும் எழுதத் தொடங்கினேன். அஃது, “இனியொரு”வில் தொடராக வெளிவந்தது. இத்தொடரே ''மட்டக்களப்பு வரலாறு'' என்னும் பெயரில் எழுநா ஊடக நிறுவன ஏற்பாட்டில் நூலுருவில் வெளிவருகிறது. எனது கட்டுரைகள் இனியொருவில் வெளிவந்த காலத்தில், பின்னூட்டங்கள் வழியாக பல நண்பர்கள் வழங்கி வந்த உற்சாகமான வரவேற்பும், கருத்தப் பரிமாற்றங்களும் கட்டுரையை சிறப்புற எழுத உதவி புரிந்தன. எனது பாடசாலைக் கால நண்பரும், “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள்” நூலாக்கக்குழுவில் ஒருவனாக இருந்தவருமான அஜந்தா ஞானமுத்து, கட்டுரைப்பொருள் குறித்து அதிக ஈடுபாடு கொண்டவர்களான அன்ரன் ஜோசாம்பி, சீவகன் பூபாலரெட்ணம் போன்றோர் எனது தொடர்புகளைத் தேடிப்பெற்றுக் கொண்டு, நேரடியாகத் தொடர்பு கொண்டு கட்டுரைகள் சிறப்பாக அமைய ஆலோசனைகளையும், தேவையான தகவல்களையும் தந்து உதவியாக இருந்தனர். மட்டக்களப்பில் களப்பணிகளை மேற்கொண்டு விடயம் குறித்து தகவல்களைப் பெற வேண்டிய நிலையேற்பட்ட போது, அதற்கான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாதிருந்த நிலையில், எனது நீண்டகால நண்பரான ரெட்ணம் கஜேந்திரகுமார் (கண்ணன்) அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். எனது சகோதரரும் அவருடைய துணைவியாரும் பல உதவிகளைச் செய்தனர். கட்டுரைப் பொருள் குறித்து, குறிப்பாக பூர்விக குடிகள் - வேடர்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள் குறித்து மட்டக்களப்பில் தேடலை ஆரம்பித்து தடுமாறிய வேளையில், நண்பர்களான ஜீவராஜா, நல்லதம்பி, நந்தகுமார் ஆகியோர் மறைக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இருந்த பல இடங்கள், சம்பவங்கள் பற்றி தகவல்களைத் தந்து அவற்றை அறிந்து கொள்ள வழிகாட்டினார்கள். நண்பர்களான சௌந்தரராஜன், குமார் பல்வேறு இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று தகவல்களைப் பெறுவதற்கு பேருதவி புரிந்தார்கள். குமார கோவில்களின் பணிகளுடன் தொடர்புபட்ட அன்பர்கள் பல தகவல்களைத் தந்து உதவினார்கள். எனது முயற்சி பற்றி அறிந்த சிதம்பரநாதன், பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் நூலை வாசிக்கத் தந்தமை தற்செயலானதொரு நிகழ்வாயிருந்தபோதும், அந்த நூலே எனக்கு ஒரு தற்றுணிவினையும் புதிய வழிகாட்டலையும் தந்தது. பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் கட்டுரைப்பொருள் குறித்து விரிவானதொரு விளக்கத்தினைத் தந்ததுடன், எனது கட்டுரைகள் வெளிவந்தபோது அவற்றை வாசித்துப் பாராட்டுக்களையும் தெரிவித்து வந்தார். எனது கட்டுரைகள் பெருமளவிற்கு மௌனகுரு அவர்களின் வழித்தடத்திற்றான் சென்றிருக்கிறன. கட்டுரைகள் வெளிவந்த காலத்தில்தான் நான் எழுதுகின்ற விடயம், வரலாறு சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் சமூகவியல் சார்ந்தும் முக்கியமானதொன்று என்ற உணர்நிலை ஏற்படத் தொடங்கியது. அந்த உணர்நிலையைச் சபா.நாவலன், நூலகம் அமைப்பின் சசீவன் ஆகியோர் தொடர்ந்து நடாத்திய கலந்துரையாடல்கள் மூலம் ஏற்படுத்தினர். ஆரம்பத்தில், மட்டக்களப்பின் வரலாறு தொடர்பில் நிலவிய சர்ச்சைகள், மயக்கங்கள் குறித்து ஆர்வம் கொண்டிருந்ததனால், அவற்றை மையமாகக் கொண்டு எழுதும் நோக்கிலேயே எழுதத் தொடங்கினேன். ஆயினும் மேலே விபரிக்கப்பட்ட முறையிலமைந்த தொடர்புகள் என் நோக்கினை மாற்றியமைத்தன. அதனாற்றான் கட்டுரைகள் மட்டக்களப்பின் பூர்விககுடிகள் எனும் விடயத்திற்குள் வரையறைப்பட்டன. அதிலும், வரலாற்றை ஆராய்வதற்கப்பால் பண்பாட்டம்சங்கள் குறித்து ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. எனவே, இந்தக் கட்டுரைகள் பலருடைய கூட்டு விருப்பினால், கூட்டு முயற்சியினால் அமைந்தவை என்றே கூறமுடியும். கட்டுரைகள் வெளிவந்த காலத்தில், பலரும் அதனை நூல்வடிவில் கொண்டு வரவேண்டும் என்ற விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அதற்கான முழு உதவிகளையும் புரிவதாகவும் கூறியிருந்தார்கள். சபா நாவலனும் சசீவனும் தொடர்ந்து கொடுத்து வந்த உத்வேகத்தினால், கட்டுரைகளை நூலுருவில் வெளியிடச் சம்மதித்தேன். ஆயினும் கட்டுரைகள் நூல்வடிவில் வெளிவருவதற்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டிருக்கவில்லை. “இனியொரு”வில் கட்டுரை தொடர்பான பின்னூட்டங்கள், மற்றும் விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு, அவற்றிற்கான தெளிவைக் காணும்வகையில் பின்னர் வந்த கட்டுரைகள் அமைக்கப்பட்டிருந்தன. முன்னைய கட்டுரைகளிற் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் பின்னர் வந்த கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளது. பல கேள்விகளுக்கான விடைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. பல வினாக்கள் முன்வைக்கப்பட்டுமிருந்தன. எனவே, கட்டுரைகளை நூலுருவிற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. கட்டுரைகளைத் திருத்தி மாற்றியமைத்தபோது, அது வழமையான ஒரு வரலாற்றுநூல் அமைப்பில் அமைந்திருந்தது. எனவே, இனியொருவில் வெளிவந்த அமைப்பிலேயே, ஆனால், சில மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்து கட்டுரைகளை நூலுருவிற்கு ஏற்றவகையில் அமைத்துள்ளேன். ஆயினும், இஃது ஒரு முழு நிறைவான முயற்சியாகப்படவில்லை. பல விடயங்கள் இன்னமும் வினாக்களாகவே உள்ளன. கள ஆய்வும் முழுமையானதொன்றல்ல. திருப்தியானது எனவும் கூறமுடியாது. பல புதிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகளும் பின்னர் வெளிவந்துள்ளன. இருப்பினும் இக்கட்டுரைகள் எழுநா ஊடாக வெளிவருகின்றன. கட்டுரைகளை எழுதிய சந்தர்ப்பத்திலும், இந்த நூல் வெளிவரும் சந்தர்ப்பத்திலும் இருவரை நினைவு கூர வேண்டியுள்ளது. மட்டக்களப்பு வரலாறு தொடர்பில் எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தியவரும் தொடர்ந்து சந்தித்த வேளைகளில் மட்டக்களப்பு வரலாறு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தவரும் என் முன்னாள் நண்பரும் பின்னாளில் கொள்கையிலும் நடைமுறையிலும் நேரெதிர் நிலையில் முரண்பட்டு நின்றவருமாகிய அமரர் டி. சிவராம் ஒருவர். மற்றவர், இலங்கையின் முதுபெரும் எழுத்தாளரும் கவிஞரும் முற்போக்கு இயக்கங்களின் முன்னோடியும் சர்வதேச ரீதியில் மக்கள் சார்பான எழுத்துலகிலும் இலக்கிய அமைப்புக்களிலும் தொடர்பு கொண்டவரும் மொழிபெயரப்பாளரும் வாழ்வை தனது கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துமுடித்தவருமான கே.கணேஷ் அவர்கள். எனது எழுத்துக்களின் பாணி அவருடைய செல்வாக்கிற்கு உட்பட்டது. எழுத்துக்கள் சாதாரண வாசகர்களும் விளங்கும் வண்ணம் எளிமையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அவ்வாறு எழுதச் செய்தவர் அவர்தான். கண்டியில் ''அறிவியல் கழகம்'' சார்ந்த வெளியீடுகளுக்கு, எழுதியவற்றைப் பொறுமையாகவிருந்து திருத்தி எளிமையாக்கம் செய்துதந்து வழிகாட்டியவர் கே.கணேஷ் அவர்கள். கணனி தட்டச்சு பணி கடினமானதொன்றாக இருந்தது. கட்டுரைகளை தட்டச்சு செய்வது, பிழை திருத்தம் செய்வது போன்றவை எனக்கு இலகுவாக இருக்கவில்லை. அதிகநேரத்தினைச் செலவிட வேண்டியுமிருந்தது. அகால வேளைகளிற் பணியாற்ற வேண்டியுமிருந்தது. அப்பணிகளில் எனது துணைவி சிவனேஸ்வரியும் மகள் தஷீகாவும் உதவியாக இருந்தனர் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கட்டுரைகளின் ஆக்கத்திற்கும் வெளியீட்டிற்கும் நூலுருவாக்கத்திற்கும் நூல் வெளியீட்டிற்கும் உதவியவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்நூல் கூறும் விடயம் எனது கிராமம் சார்ந்தது. நான் பிறந்து, வளர்ந்த பண்பாட்டுச் சூழல் பற்றியே இந்நூல் விவரிக்கிறது. குமாரர் ஆலயச்சடங்கு இளமைக்காலம் முதல் எங்கள் வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம். இன்று அவற்றைப் புதியபார்வையில் நோக்குவதற்கும், அவற்றை எழுதிப் பதிவு செய்வதற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இது மனமகிழ்வுக்குரிய விடயமே. கட்டுரைகளை எழுதும் போது, கட்டுரை ஒரு சமூகம் சார்ந்தது என்பதனை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, தவறான கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கூடுதலான கவனம் செலுத்தியிருந்தேன். அதனால், தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இருந்த போதிலும், மட்டக்களப்பின் பூர்விககுடிகள், வேடர்கள் என்ற கருத்து கட்டுரையில் முன்வைக்கப்பட்ட போது பல விமர்சனங்கள் தோன்றவே செய்தன. எனினும் வரலாற்று உண்மைகளை மறைத்து எழுதிவிடமுடியாது. குமார தெய்வம் மற்றும் குமார சடங்குகள் குறித்து முக்கியப்படுத்துவதனைச் சிலர் முக்கியமானதாக கருதவில்லை; விரும்பவும் இல்லை. களப்பணிகளை ஆரம்பித்தபோது மட்டக்களப்பில் தற்போது குமார தெய்வவழிபாடு நடைபெறுவது இல்லை என்ற கருத்தே முன்வைக்கப்பட்டது. மாறாக, பிரதான சில கோவில்களுக்கும், அவற்றின் பழம்பெருமைக்கும், பெருந்தெய்வவழிபாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தே வலியுறுத்தப்பட்டுவருகிறது. கண்ணகி வழிபாட்டிற்கு வழங்கப்படுகிற முக்கியத்துவங்கூடக் குமார தெய்வச்சடங்கிற்கு வழங்கப்படுவதில்லை. பல இடங்களில் குமார தெய்வமும் சடங்கும் தற்போது அருகி வருவதனையே காணமுடிகிறது. “குமாரர்” ஒதுக்கப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது. புதிய தலைமுறையினர் இந்த வழிபாட்டுமுறைகள் குறித்து ஆர்வம் அற்று இருப்பதனையே காணமுடிகிறது. ஆயினும் அந்த வழிபாட்டுமுறையை மட்டக்களப்பு சமூகம் இன்னமும் முற்றாக கைவிடவில்லை. மறந்துவிடவுமில்லை. காலமாற்றங்களை எதிர்த்து நின்று இன்னமும் தொடர்கிறது. அதனைப் பின்பற்றி வருகிறவர்கள் சமூகநிலையில் வலுவற்றவர்களாக இருப்பதனால் இத்தகைய பண்பாட்டம்சங்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே. கடவுள் குற்றம் தொடர்பாக நிலவிவருகிற நம்பிக்கைகள், யுத்தகால அழிவுகள் இத்தகைய வழிபாட்டுமுறையில் மக்களை ஈடுபட வைத்திருக்கிறது என்பது துயரத்திற்குரியதே. மட்டக்களப்பு மக்களின் பிரதான பண்பாட்டம்சங்களாக இருந்த இத்தகைய கூறுகளே மட்டக்களப்பு மக்களைத் தனித்துவமானதொரு சமூகமாக அடையாளப்படுத்தியிருந்தது. அந்தப் பண்பாட்டம்சங்கள் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் காலத்தில், இந்நூல் காத்திரமானதொரு பதிவாகவும் புதிய போக்கொன்றின் தொடர்ச்சியாகவும் அமையும் என்றே கருதுகிறேன். மட்டக்களப்பு மக்களின் பண்பாட்டம்சங்கள் குறித்து ஒரு விழிப்பணர்வை இந்நூல் ஏற்படுத்துமானால் அதுவே இம்முயற்சியின் வெற்றியாக அமையும். அதுவே, இம்முயற்சியுடன் இணைந்து நின்றவர்களை மகிழ்வடையச்செய்யும். எ.விஜயரெத்தின (விஜய்)