கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் II
Arts
16 நிமிட வாசிப்பு

கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் II

July 24, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரமோ முழுக்க முழுக்க செட்டிபாளையம் கணபதிப்பிள்ளை புலவரின் படைப்பாக இருந்துவிடமுடியாது என்பதற்கான சில சான்றுகளை கடந்த தொடரில் பார்த்தோம். ஆனால், ஈழத்துப் பூராடனாரின் வாதங்களிலிருந்து நாம் முற்றிலும் மறுக்கமுடியாதிருக்கின்ற ஒரு விடயம் என்னவென்றால், இன்று மட்டக்களப்பு மான்மியம் என்ற பெயரில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூலில் கணபதிப்பிள்ளை புலவரின் தாக்கம் ஓரளவுக்கேனும் இருக்கிறது என்பதைத் தான். அவரிடமிருந்தே எஃப். எக்`ச். சீ. நடராசா பதிப்பித்த மட்டக்களப்பு மான்மியத்திற்கான மூலப்பிரதி பெறப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தைப் பதிப்பித்த கமலநாதன் தம்பதியினரால் (அ), (ஆ) எனப் பெயர் சூட்டப்பட்ட இரு பிரதிகள் கணபதிப்பிள்ளை புலவரின் மருமகளிடமிருந்து பெறப்பட்டவை.

மகிழடித்தீவில் கிடைத்த கையெழுத்துப்பிரதியின் மூலம் மட்டும் சரியாகத் தெரியவில்லை. அது மட்டக்களப்பு மான்மியம் அச்சான பின்னர்தான் கைப்பட எழுதப்பட்டது என்று கூறி, அப்பிரதியும் கணபதிப்பிள்ளைப் புலவரின் படைப்பே என்று ஈழத்துப் பூராடனார் மறுக்கிறார். ஆனால், அந்தப்பிரதி மட்டக்களப்பு மான்மியத்தை அன்றி, பாண்டிருப்பில் கிடைத்த (அ) பிரதியையே பெருமளவு ஒத்துள்ளதை கமலநாதன் தம்பதியினர் உறுதிசெய்துள்ளனர். அவர்களுக்கு வேறு சில பிரதிகளும் கிடைத்திருந்ததையும் அவை மேற்படி பிரதிகளில் ஒன்றையே படியெடுத்திருந்ததால் அவற்றை பாடபேதம் பார்க்க இணைத்துக்கொள்ளவில்லை என்பதையும் கூட தம்பதியினர் தங்கள் நூலில் ஒத்துக்கொண்டுள்ளனர்.

சரி, அந்த இரு நூல்களிலும் புலவரின் பங்களிப்பாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கக்கூடியவாறு, ஏதும் சான்றுகள் கிடைக்கின்றனவா?

மட்டக்களப்பு மான்மியத்தையும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தையும் ஆராய்ந்தால் இரு விடயங்கள் புலப்படுகின்றன.

முதலாவது, கமலநாதன் தம்பதியினரின் பதிப்புரையில் (2005:viii) “மட்டக்களப்பு மான்மியம் எனும் அச்சுப்பிரதியின் முதலொன்பது பக்கங்களிலுமுள்ள விடயங்கள் ஏனைய ஏட்டுப்பிரதிகளிலும் ஓலைச்சுவடிகளிலுமில்லை” என்று சொல்லப்படுகின்றது. அந்தப்பகுதியில் வரும் ஆசியாக்கண்டத்தில் இலங்கை அமைந்திருக்கின்றமை, இலங்கையில் வழக்கிலுள்ள கண்டிச்சட்டம், தேசவழமைச்சட்டம், முக்குவர் ஏற்பாடு ஆகிய சட்டங்கள் முதலிய விடயங்கள் சமகாலத்துக்குரியவை. இந்தப்பகுதி, இறுதியில் செட்டிபாளையத்தின் பெயர்க்காரணத்தைச் சொல்லி நிறைவுறுகின்றது. பிறந்தகத்தைப் போற்றாத மேதைகள் எவரும் இலர். எனவே இந்த ஒன்பது பக்கங்களும் செட்டிபாளையப் புலவராலே எழுதப்பட்டவையாகலாம்.

அடுத்து, “கல்வெட்டு என்பது கல்லில் வெட்டினபடியால்” என்ற வரி நூலினுள்ளே காணப்பட்டாலும், மான்மியத்திலோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்திலோ குறிப்பிடப்பட்டுள்ள எந்தக் கல்வெட்டுப் பாடல்களுமே கல்லில் வெட்டப்பட்டவையாக இன்று கிடைக்கவில்லை. இந்நூலுக்கு மொழிநடையால் முந்திய “கோணேசர் கல்வெட்டு” நூலும் பாட்டும் உரையும் சேர்த்து எழுதப்பட்ட நூல். எனவே கல்வெட்டு என்பதை ஒரு சிற்றிலக்கிய வகையாகக் கொள்வதே பொருத்தமானது.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் உரைநடைப் பகுதியில் “ மைல், லோ, இங்கிலீசு, இந்தியர் ” முதலிய மிக அண்மைக்காலச் சொற்கள் இடம்பெறுகின்றன. அதேபோல் “ முக்குவரில் ஏழுகுடி வந்த வரல்முறை ” என்ற கல்வெட்டில் “ இந்தியா ” என்ற சொல்லும், “ வடமதுரையிலிருந்து முக்குகர் வந்த கல்வெட்டு ” எனும் கல்வெட்டில் “ இந்துமதம் ” என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு சொற்களும் 20 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே கீழைக்கரைத் தமிழர் மத்தியில் பொதுப்புழக்கத்துக்கு வந்த சொற்கள். எனவே உரைநடைப் பகுதியிலோ கல்வெட்டுப் பகுதியிலோ புலவரால் எழுதப்பட்ட அல்லது திருத்தப்பட்ட சில பகுதிகள் இடம்பெற்றிருக்கக் கூடும்.

திருப்படைப் பத்ததிகளின் மூல ஏட்டுச்சுவடிகள் கிடைக்காத நிலையில், இந்த ஒப்பீட்டைக் கறாராக மேற்கொண்டு, அந்நூலில் கணபதிப்பிள்ளைப் புலவரால் எழுதப்பட்ட பாகங்களை வேறுபிரித்து அறியமுடியாதுள்ளது. இதை மேலும் ஆராய ஆர்வமுள்ளவர்களுக்காக கீழுள்ள அட்டவணை 1, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலின் உரைநடை மற்றும் கல்வெட்டுப் பகுதிகளுக்கிடையிலான ஒற்றுமையை விளக்குகின்றது. இதில் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் எழுதப் பயன்பட்ட (அ), (ஆ), (க) என்று பெயரிடப்பட்ட மூன்று பிரதிகள், மட்டக்களப்பு மான்மியம் (ம.மா) எனும் நான்காவது பிரதி என்பவை பற்றிய ஒப்பீடு “குறிப்பு” நிரலில் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 01. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் நூலின் உரைநடைப்பகுதியும், அதில் கூறப்பட்ட விடயங்கள் முழுமையாக அல்லது பகுதியாக அடங்கிய கல்வெட்டுப் பாடல்களும் அடங்கிய ஒப்பீடு. அடைப்புக்களில் உள்ளவை, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்  நூலிலுள்ளவாறு (கமலநாதன் & கமலநாதன், 2005) பக்க எண்கள்.

history table 1
history table 2
history table 3

அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதன்படி, பெரும்பாலான உரைநடைப்பகுதிகள் கல்வெட்டுப் பாடல்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் சில கல்வெட்டுப்பாடல்கள் எல்லாப் பிரதிகளிலும் கிடைக்கவில்லை என்பது ஊன்றிநோக்கத்தக்கது. சில இடங்களில் கல்வெட்டுப்பாடல்களும் உரைநடைகளும் சொல்லும் விடயத்தில் முரண்படுவதால், இவை ஒன்றை ஒட்டியே இன்னொன்று எழுதப்பட்டதா என்பதையோ ஒருவராலே எழுதப்பட்டதா என்பதையும் உறுதிபடக் கூறமுடியாதுள்ளது. அவற்றில் இடம்பெற்றுள்ள சமகாலத்தமிழ் மற்றும் ஆங்கிலத் திசைச்சொற்கள் அவற்றின் தோற்றக்காலம் பற்றிய சந்தேகத்தையும் உறுதிப்படுத்துகின்றன.

எது எப்படியோ, சந்தேகத்துக்குரிய பல இடைச்செருகல்கள் அடங்கியிருந்தாலுமே கூட, மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தை பிற்கால நூல் என்று முற்றிலும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அந்நூலிலுள்ள பெரும்பகுதி கீழைக்கரைத் தொன்மங்களையும் குலவழக்கங்களையும் தொகுத்து எழுதப்பட்டவை என்பது முன்பும் சுட்டிக்காட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக, பெயர் குறிப்பிடப்படாமல் ஆடகசவுந்தரி சந்தனப்பேழையில் மட்டக்களப்புக்குத் தெற்கே கிடைத்ததும் அவள் வடக்கிலிருந்து வந்து திருக்கோணமலையில் கோவில்கட்ட முனைந்த அரசனொருவனை மணந்ததும் 1867 இல் ஒரு ஆங்கிலேயப் பாதிரியாரால் பதிவுசெய்யப்பட்டுள்ளது (Robinson 1867:1718).

ஆக, மட்டக்களப்பு மான்மியமோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்திரமோ விவரிக்கும் செய்திகளில் பொருட்படுத்தக்கூடிய வரலாற்றுச் செய்திகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து நாம் முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, மட்டக்களப்புப் பூர்வ சரித்திம்  நூலில் பயன்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமான கலியுக ஆண்டு வரிசை, அரசன் அரசியரின் பெயர்கள் என்பவற்றை இயன்றவரை தவிர்த்து, கிடைக்கும் தொன்மங்களை மொத்தமாகத் தொகுத்து அந்நூல் கூறவரும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வோம்.  

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் கூறுவதன்படி, இராவணன் காலத்துக்குப் பிறகு இலங்கையில் இயக்கர், நாகர் என்போரின் தொல்லரசுகள் நீடித்திருக்கின்றன. கலிங்கநாட்டின் தலைநகரான சிங்கபுரத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விசயன் மூலம் இலங்கையில் ‘விசயதுவீப அரசு’ [1] உருவாகின்றது. விசயனுக்கு பிள்ளைப்பேறின்மையால் கலிங்ககுலத்தவன் ஒருவன் இலங்கைக்கு அனுப்பப்பட்டு பட்டம் சூட்டப்படுகிறான். இவனது வருகையை மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் “ கலிங்கனின் முதல் வருகை ” என்கின்றது. இப்படி, இயக்கரும் நாகரும் ஆண்ட இலங்கையில் சிங்கர், வங்கர், கலிங்கர் எனும் முக்குலத்தாரின் [2] ஆட்சி ஏற்படுகின்றது. இராமாயண குகன் வம்சத்தைச் சேர்ந்த இந்த முக்குலத்தவரே முக்குகர் ஆகினர் என்றவாறு இத்தொன்மம் விரிகின்றது.

இலங்கை இந்த முக்குலங்களுக்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டமை அடுத்துச் சொல்லப்படுகின்றது. இத்தொன்மம் இலங்கையை இராசநாடு, உரோகணம், மாயநாடு ஆகிய திரிசிங்களநாடு என்று மூன்றாகக் காணும் பாளி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மறுபுறம் பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோற்றம் பெற்ற “ திரிசிங்கள தேசம் ” என்ற எண்ணக்கரு சேர – சோழ – பாண்டிய முத்தமிழ் நாட்டிலிருந்தே பெறப்பட்டிருக்கக் கூடும் என்ற ஊகமும் ஒப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் முதலாவது அரசு உருவாவது சிங்காரத்தோப்பு அணைக்கு மேற்கிலேயே. அங்கு முன்பு விசயனால் கொல்லப்பட்ட இயக்கர் அரசன் இரகு வம்ச காலசேனனின் இளைப்பாறல் மண்டபம் இருந்ததால், அதை மீள நகராக்கக் கருதி குடியேற்றங்களைச் செய்கின்றான் கூத்திக மன்னன். புதிய நகரொன்றை அமைப்பதற்காக அங்கிருந்த மேட்டுக்களப்பு எனும் ஏரி, மண் கல் கொண்டு நிரப்பி மூடப்பட்டு மாளிகை அமைக்கப்பட்டு, “ மட்டக்களப்பு ” எனும் நகரம் உண்டாகின்றது.

இப்படி நீர்நிலையொன்றை நிரப்பி காவலரணாக மாற்றி கோட்டையமைத்த செய்தியொன்று ‘முக்கார ஃகதன’ முதலிய சிங்கள நூல்களிலும் வருகின்றது. அவை சொல்வதன்படி, வடமேற்கு இலங்கையின் “ நல்ல முதலியார் ” எனும் முக்குவர் குலத்தலைவன் கலா ஓயா ஆற்றுக்கும் மகாஓயா ஆற்றுக்கும் நடுவே, கல்முறிவு எனும் இடத்திலிருந்த குளத்தைத் தூர்த்து மாளிகை அமைத்து, அதன் அணைக்கட்டை கோட்டைச்சுவராக மாற்றி வன்னியருக்கு எதிராக போர் புரிந்தான் (De Silva, 1996:166). வடமேற்கிலங்கையின் கலா ஓயா, மகா ஓயா, கல்முறிவு எனும் பெயர்களோடு ஒப்பிடத்தக்க வகையில், கூத்திகனின் மட்டக்களப்பு அமைந்ததாகச் சொல்லப்படும் தென்கிழக்கிலங்கையிலும் இன்று கல் ஓயா, மகா ஓயா, கல்லரிச்சல் ஆகிய இடங்கள் அமைந்துள்ளன [3].

mattakallappu tharavai

மூன்றாகப் பிரிக்கப்பட்ட இலங்கையில் “இயக்கரும் நாகரும் மேலெழும்பி” ஏனைய முக்குலத்தோரை அடக்கியாண்டதால் இலங்கைக்குப் படையெடுத்த இரணாசலன் எனும் கலிங்கனால் இலங்கை பன்னிரண்டாகப் பிரிக்கப்பட்டதும், இரணாசலனுக்கு உதவியாக வந்த படையாட்சி குலத்தவர் மட்டக்களப்பில் நான்காவது அரச குலமாக ஆட்சியில் அமர்ந்ததும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் அடுத்து விவரிக்கப்படுகின்றது. இப்படி பன்னிரண்டாய் இலங்கை பிரிக்கப்பட்டபோது, மண்ணாறும் மணற்றிடரும் (மன்னாரும் யாழ்ப்பாணமும்) குருகுல நாகருக்கும், தெட்சணாபதி இயக்கருக்கும், மட்டக்களப்பு படையாட்சியருக்கும் எஞ்சிய எட்டும் சிங்க குல அரசருக்கும் பிரிக்கப்பட்டன என்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம்.

ancient places of Sri Lanka

இதன் பின்னர் மட்டக்களப்பில் கோவில்களை மையமாக வைத்து ஏற்பட்ட வளர்ச்சிகளை மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் விவரிக்கின்றது.  ஒரு கலிங்க இளவரசனின் பின்னணியில் மட்டக்களப்பின் தெற்கே உண்ணாசகிரி [4] எனும் அரசு உருவாவதும், அவனால் நாகர்முனைச் சுப்பிரமணியர் கோவில் (திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம்) அமைக்கப்படுவதும், அக்கோவில் சார்ந்து புதிய குடியேற்றங்கள், அந்தக் கோவிலுக்கும் மக்களுக்குமாக காடழித்து உருவாக்கப்பட்ட வயல்கள், அவற்றுக்கான நீர்ப்பாசன ஏரி, என்பன உருவாக்கப்பட்ட சம்பவங்கள் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் விவரிக்கப்படுகின்றன.

திருக்கோவிலைப் போலவே, பின்னர் தெட்சணாபதியில் திருக்கோணேச்சரம் அமைக்கப்பட்டமையும், அதன் பின்னணியில் ஏற்பட்ட குடியேற்றங்கள், காந்தளை ஏரி, மீனேரி முதலிய நீர்ப்பாசன ஏரிகள் பற்றியும் கூறப்படுகின்றது. இப்படி உக்கந்தகிரி, மண்முனை, கொக்குநெட்டி, போர்முனை நாடு (முறையே இன்று உகந்தை, மண்முனை, கொக்கட்டிச்சோலை, போரதீவு) ஆகிய நான்கு இடங்களில் புதிதாகக் கோவில்கள் கட்டப்பட்டதையும், அவற்றின் அருகே உருவான குடியிருப்புகள், மருதநிலங்கள், நீர்ப்பாசனக் கட்டுமானங்களும் மிக விரிவாக மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் விளக்கப்படுகின்றன.

இந்த வளர்ச்சியினூடே யாழத்துறை, கந்தபாணத்துறை, சிங்காரத்தோப்பணை, பாலநகைத் துறை, கல்முனை முதலிய பல துறைமுகங்கள், கடற்கழிமுகங்கள் கப்பல் போக்குவரத்துக்கும் அரசியல் பொருளாதார காரணங்களுக்காகப் பயன்பட்டதும்,  வடநாட்டு வர்த்தகர் இங்கு வந்து வணிகம் செய்ததும், சில இடங்களில் சொல்லப்படுகின்றது. இராமநாட்டிலிருந்து [5] வந்து குடியேறிய ஏழு மறவர் குலப் பெண்கள், இங்கிருந்தோருக்கு நவநாகரிக ஆடையணிகளையும் கலைகளையும் கற்பித்ததும், வேடருக்கு வேளாண்மை சொல்லிக் கொடுக்கப்பட்டதும் கூறப்படுகின்றது. பெண்களுக்கு பூப்புநீராட்டுச் சடங்கையும் மறவர் குலப் பெண்களே இங்கு அறிமுகப்படுத்தினார்கள் என்பதும் ஊடே கிடைக்கும் சுவையான குறிப்பு.

குலமோதல்கள், மதமோதல்களும் ஆங்காங்கே பதிவாகின்றன. முக்குலத்தார் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து அன்னியோன்னியமாக இருந்த நாகர் – இயக்கருக்கு எதிரான அரசுகளை அமைத்து ஆள்கிறார்கள். நாகர் – இயக்கர் ஒன்றுகூடி அடிக்கடி முக்குலத்தாரின் அரசுகள் மீது படையெடுப்பதும், தமிழகத்திலிருந்து வரும் கூளங்கை ஆரியன் முதலிய அரசர்கள் நாகருக்கு உதவிபுரிவதும் விவரிக்கப்படுகின்றது.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் இலங்கையின் ஆட்சியுரிமை மூன்று குகன் குலத்தாருக்கும் படையாட்சியருக்குமே உரியது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அவர்களது ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கப்படும் போது கலிங்க நாட்டிலிருந்தோ தமிழகத்தில் இருந்தோ படையெடுப்புகள் நிகழ்ந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்கின்றது அது. இப்படி கலிங்கச்சார்பாக நிகழ்ந்த பெரும்படையெடுப்பாக   மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் விவரிப்பது மாகோன் வருகையை.

மணிபுர [6] வணிகர்கள் பலர் மட்டக்களப்பு எங்ஙணும் குடியேற்றப்படுகின்றனர். (அவர்களால்) மட்டக்களப்பில் தமிழ்மதம் அருகி சமண மதம் பெருகுகின்றது. சிங்கர் குலத்தைச் சேர்ந்த அரசன் வங்கரும் கலிங்கரும் அமைத்த கோவில்களை இடிப்பித்து அதன் செல்வங்களை சோழநாட்டுக்கு அனுப்பி பொருளீட்டி வந்தான். சோழத்தொடர்புள்ள சிங்க குல மன்னர்கள் தங்களை ஒடுக்கி ‘நாமதாரிகளாக மாற்றி’ தங்கள் கோவில்களையும் இடித்தழிப்பதை மட்டக்களப்பு அரசன் கலிங்க நாட்டுக்கு அறிவிக்க அங்கிருந்து படையெடுத்து வருபவனே மாகோன். அவன் சிங்கர் படைகளை அழித்து, சிங்கரின் அரச குடும்பத்தினரின் “கண்களைப் பறித்து முழங்கால் சில்லுகளை எடுத்து குதிகாலை வெட்டி சிலரை வாளுக்கு இரையாக்கினான்.”

தொடர்ந்து அவன் புத்தாலயங்களை இடிப்பித்ததும் நாமதாரிகளைக் கொடூரமாகக் கொன்றதும் விவரிக்கப்படுகின்றது. உரைநடைப்பகுதியில் இல்லாத வேறு சிலவிடயங்கள் கல்வெட்டுப்பகுதியில் மாகோன் பற்றி வருகின்றது. அதன்படி, மாகோன் (வீர) சைவம் சார்ந்து பல சமூகப்புரட்சிகளை ஏற்படுத்தியதுடன், கோவில் வழிபாடுகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினான்.  இத்தகவல்கள் சிங்கள – பாளி நூல்கள் கூறும் மாகோன் பற்றிய குறிப்புகளோடு கிஞ்சித்தும் மாறுபடவில்லை என்பதும், அவன் மட்டக்களப்போடு கொண்டிருந்த நெருக்கமும் தெளிவாகின்றது.

மாகோனுக்கு ஐந்து தலைமுறைகளுக்குப் பின்னர் மட்டக்களப்பு நான்கு பங்காக்கப்பட்டு, மண்முனை வடபகுதி படையாட்சியருக்கும் மண்முனை காலிங்க குலத்தவருக்கும் மட்டக்களப்பு வங்க குலத்தவருக்கும் உண்ணாசகிரி சிங்க குலத்தவருக்கும் ஆட்சியுரிமை வழங்கப்படுகின்றது. பின்னாளில் கண்டி பேரரசாக எழுச்சி கண்டபோது  மட்டக்களப்பு அதிபர்கள் கண்டியின் கீழ் தங்கள் அதிகாரத்தை ஒப்புக்கொடுக்கின்றனர். பின்னாளில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் வந்ததும், வடநாட்டு (தமிழ்நாட்டு) செட்டிகள், துலுக்க வணிகர்கள் இங்கு வந்து குடியேறியதும், போர்த்துக்கீசருக்கு எதிராக கண்டி மன்னன் மலாய வீரர்களை மட்டக்களப்பில் காவல் வைத்ததும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணமிருந்து போர்த்துக்கீசரை அஞ்சி ஓடிவரும் மக்கள் குடிபுகும் இடமாக மட்டக்களப்பு விளங்கியது. அப்படி மண்முனை திக்கதிபனின் அனுமதியுடன் குடிபுகுந்த ஒத்துக்குடாக் கந்தப்பன், மட்டக்களப்புத் திக்கதிபனின் தவறான தகவலால் கண்டி அரசனின் ஆணையின் கீழ் கொல்லப்பட்டதும், கந்தப்பன் கொணர்ந்த கண்ணகி விக்கிரகங்களும் குடிகளும் மட்டக்களப்பில் ஏழு ஊர்களில் குடியேறியதும் அடுத்து விவரிக்கப்படுகிறது.

போர்த்துக்கீசரை அடுத்து ஒல்லாந்தர் வருகை தந்ததும், அவர்கள் போர்த்துக்கீசரை அகற்றி கண்டி அரசனுக்கு மட்டக்களப்பைப் பாரம் கொடுத்ததும், அக்காலத்தில் பஞ்சமேற்பட ஒல்லாந்தர் குறைந்த விலைக்கு நெல் கொடுத்து மட்டக்களப்பு மக்களைக் காப்பாற்றியதும், மட்டக்களப்புத் திக்கதிபர் ஒல்லாந்தருக்கு மட்டக்களப்பைக் கொடுக்கச் சம்மதித்ததும் தொடர்ந்து வருணிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த ப`ச்கோல் முதலி இங்கு கிறிஸ்தவம் பரப்பியதும், ஒல்லாந்தருக்கெதிராகச் சதி செய்ததும், அவர் ஒல்லாந்த அரசால் நீக்கப்பட்டு அரசதண்டனை வழங்கப்பட்டதும் கூறப்பட்டு, இறுதியில் மட்டக்களப்பு இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒல்லாந்தரின் கீழ் கந்தப்போடி, அறுமக்குட்டிப்போடி ஆகிய இருவருக்கு நிலைமைப்போடிப் பட்டம் வழங்கப்பட்டு, இராசாதிராசசிங்கன் காலத்தில் ஒல்லாந்தர் மட்டக்களப்பை கண்டியரசிடம் ஒப்படைத்து நீங்கியதும் சொல்லப்படுவதுடன் உரைநடைப்பகுதி நிறைவுறுகின்றது.

அடிக்குறிப்பு 

  1. இலங்கை முழுதுக்கும் அரசனாகும் விசயன் “வடநாட்டு விசயநகரம் போல ஒரு மலைநாட்டைப் பட்டணமாக்கி விசயதுவீபம் என நாமஞ்சாற்றினான்” என்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். தென்னகத்தில் 14ஆம் நூற்றாண்டிலிருந்து 17ஆம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை பலத்துடன் விளங்கிய விசயநகரப் பேரரசோடு விசயதுவீபம் ஒப்பிடப்படுவதைக் கவனிக்கவேண்டும்.   
  2. சிங்கர், வங்கர், கலிங்கர் ஆகியோரின் பூர்வீகம் மற்றும் கொடிவழி தொடர்பில் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் தரும் விவரணங்களில் தெளிவில்லை. வங்கர் குல அதிலோகனுக்கும் கலிங்க குல விடமணிக்கும் பிறந்த சிறிமதிக்கு பஞ்சவடியின் ‘வேடக்குகன்’ சிங்கன் மூலம் பிறந்த மகன் வழிப்பேரனே விசயன்.  ஆக, விசயன் வங்கர், கலிங்கர், சிங்கர் ஆகிய முக்குலங்களின் கலப்பின் வழியே பிறந்தவன் ஆகின்றான். மட்டக்களப்பில் குடிகள் எனும் சமூக உட்பிரிவுகள் தாய்வழியில் கடத்தப்பட, குடிவழி அல்லது வம்சம் அல்லது குலம் பற்றிய போதுமான விளக்கங்களெதையும் மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் காணமுடியவில்லை. 
  3. இத்தொடரில் முன்பே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போல், கூத்திகன் அமைத்ததாகச் சொல்லப்படும் மட்டக்களப்பு இன்றைய சம்மாந்துறையின் அருகே அமைந்திருந்தது. பழைய மட்டக்களப்பின் எச்சமாக சம்மாந்துறையின் கிழக்குப்புறம் ‘மட்டக்களப்புத் தரவை’ என்றோர் இடம் இன்றும் உள்ளது.
  4. ஃகுன்ன`ச்|கிரிய (hunnasgiriya) என்றோரிடம் கண்டிக்கு அருகில் இன்று உள்ளது. உண்ணாசகிரி / உன்னரசுகிரி / உன்னாசகிரி என்ற பெயர்களில் கீழைக்கரையில் இடமேதும் அமைந்திருந்ததாகத் தகவலில்லை.  எனினும் குமுக்கனாற்றுக்குத் தெற்கே வியாழை எனும் அரசு அமைந்திருந்ததும், அது மட்டக்களப்பு அரசுடன் நெருக்கத்தைப் பேணியதும் மலேரியாப் பரவலால் சனத்தொகை குறைந்து அவ்வரசு மறைந்தமையையும் பதினாறாம் நூற்றாண்டுப் போர்த்துக்கேயக் குறிப்புகள் சொல்கின்றன (Codrington 1994:74).
  5. இராமநாடு என்பது தமிழ்நாட்டின் இராமேச்சரத்தைச் சூழ 16 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற ஒரு சிற்றரசு. ஐரோப்பியக் குறிப்புகள் அதை “மறவர் அரசு” என்கின்றன (Stein 1990:135)
  6. மணி என்பதை முத்து எனக் கொண்டால், மணிபுரம் – முத்து+ஊர் =  முத்தூர் >> மூதூர் ஆகும். மூதூர் தமிழில் கொட்டியாரம் என்றும் சிங்களத்தில் கொத்தசாரம் என்றும் அறியப்பட்ட கீழைக்கரையின் பழைய வணிக நகரங்களில் ஒன்று. மகாவம்சத்திலும் இராசராசனின் தஞ்சைப்பெருங்கோவில் கல்வெட்டுகளிலும் கொட்டியாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

உசாத்துணைகள்

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு, சென்னை : குமரன் புத்தக இல்லம்.
  2. நடராசா, எஃப்.எக்`ச்.சீ. (1998). மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு : மாவட்ட கலாசார பேரவை.
  3. Codrington, H.W. (1994). A Short History of Ceylon, New Delhi – Madras : Asian Educational Services.
  4. De Silva (1996). Hugh Nevill Memorial Lecture – Ii: New Light On Vanniyās And Their Chieftaincies Based On Folk Historical Tradition As Found In Palm-Leaf Mss. In The Hugh Nevill Collection, Special Number : Sesquicentennial Memorial Lectures 1995 – 1996, JRASSL New Series, 41, pp. 153-204
  5. Robinson, E.J. (1867). Hindu Pastors: A Memorial, London: Wesleyan Conference Office.
  6. Stein, B. (1995). “The New Cambridge History of India: Vijayanagara”, Cambridge University Press.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

11310 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)