17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் - பகுதி 1
Arts
17 நிமிட வாசிப்பு

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 1

July 22, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம்

பேராசிரியர் சின்னப்பா அரசரத்தினம் வட இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வரலாறு பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். இந்தக் கட்டுரைகள் யாவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. இவை தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது பெரும் குறையே. 1982 ஆம் ஆண்டில் அவரின் ‘The Historical Foundation of the Economy of Tamils of  North Sri Lanka‘ எனும் சிறுநூல் வெளியாயிற்று. அந்நூலில் 17 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையான பொருளாதார வரலாற்றை பகுப்பாய்வு நோக்கில் அவர் விபரித்திருந்தார். இந்தத் தமிழ்க் கட்டுரை அந்நூலின் முற்பகுதியில் எடுத்துரைக்கப்பட்ட 17 ஆம்,18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கூறுகிறது.

arasarathinam

குடாநாட்டின் சன அடர்த்தி

வடக்கு வாழ் தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சியில் 16 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு தொடர்ச்சியை அவதானிக்க முடிகிறது. வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதான யாழ்ப்பாணக் குடாநாடு, வட பகுதியின் சனப் பரம்பலின் குவிமையமாக இருந்தது. இவை நான்கும் மிக அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டிருந்தன. ஆனையிறவுக்குத் தெற்கே பூநகரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் பரவலாகச் சிதறியிருந்த கிராமங்களில் யாழ்ப்பாணத்தவர்கள் இடம்பெயர்ந்து குடியேறத் தொடங்கினர். இதனால் 20 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிகளின் சன அடர்த்தி உயர்ந்தது. இருப்பினும் வன்னிப் பெருநிலப்பரப்பின் நெல் வயல்களை நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து உழைப்பாளர்களின் பருவகால இடப்பெயர்வு இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இடம்பெற்று வந்தது.

யாழ்ப்பாணத்தின் குடியிருப்புக்கள் சன அடர்த்தி மிக்கனவாய் இருந்தன. இவ்வாறு சனத்தொகை அடர்த்தியும் செறிவும் இருந்த காரணத்தால் அங்கு மக்களிடையே பொருளாதார உறவுகள் விருத்தியுற்றன. பிராந்திய ரீதியான சிறப்புத் தேர்ச்சியும் அங்கு ஏற்படலாயிற்று. அத்தோடு பண்டங்களதும், சேவைகளதும் பரிவர்த்தனையும் வளர்ச்சியடைந்தது. இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்பட்டதாக பொருளாதாரம் வளரவும், பிற இடங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புக்களிற்கு உட்படாது இருக்கவும் இது உதவியது. 17 ஆம் நூற்றாண்டு முதல் யாழ்ப்பாணத் தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி பற்றிய சில சான்றுகள் கிடைத்துள்ளன. இது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். டச்சுக்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 1658 இல், முதல் வேலையாக அதன் சனத்தொகையைக் கணக்கிட்டனர். இதனை அப்போதைய முதலாவது கொமாண்டர் நிறைவேற்றினார். அக் கணிப்பின்படி அங்கு 120,000 மக்கள் இருந்தனர். 1680 களில் இதனைவிட ஒழுங்கான சனத்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டபோது மொத்தச்சனத்தொகை 169,299 என்று மதிப்பிடப்பட்டது. இன்னொரு சனத்தொகை மதிப்பீடு 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடத்தப்பட்டபோது 187,599 எனக் கணிப்பீடு செய்யப்பட்டது. இத்தொகையில் 85% யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசித்தனர். ஆகவே 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் சனத்தொகை ஏறக்குறைய 150,000 ஆக இருந்துள்ளது. ஒரு சதுரமைலிற்கு 350 பேர் அப்போது வாழ்ந்தனர். நவீன காலத்திற்கு முற்பட்ட சமூகங்களில் இத்தகு சனஅடர்த்தி, அதிக அளவினது என்றே கூறலாம்.

பிரித்தானியர் காலத்தில் சனத்தொகை மதிப்பீடுகள்

பிரித்தானியர் ஆட்சியின் போது முதலாவது சனத்தொகை மதிப்பு 1814 இல் நடத்தப்பட்டது. இம்மதிப்பீட்டின்படி யாழ்ப்பாணப் பட்டணத்தில் (யாழ்ப்பாணத்தின் டச்சு கொமாண்டரின் எல்லைக்குள்) 103,849 பேர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டது. இது 18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர் செய்த மதிப்பீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. பிரித்தானியர் இதைத் தொடர்ந்து 1827 இல் ஒரு மதிப்பீட்டை நடத்தினர். அவ்வேளை சனத்தொகை யாழ்ப்பாணப்பட்டணத்தில் 123,188 ஆகக் காணப்பட்டது. பிரித்தானியர் ஆரம்பகாலத்தில் நடத்திய இம்மதிப்பீடுகளின்படி சனத்தொகை குறைவாகக் காணப்பட்டதற்குரிய காரணம் யாது என்பது சிந்தனைக்குரியது. டச்சுக்காரர் தவறாகக் கணக்கிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. 1871 ஆம் ஆண்டில் பிரித்தானியர் ஆட்சியில் முறைப்படுத்தப்பட்ட சனத்தொகைக் கணிப்பீடு நடத்தப்பட்டது. அப்போது வடமாகாணத்தின் சனத்தொகை 281,666 ஆகவும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை 246,063 ஆகவும் காணப்பட்டது. 1871 மதிப்பீடுகள், டச்சுக் கொமாண்டர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நடத்திய சனத்தொகை மதிப்பீடோடு ஒத்துப்போவதைக் காணமுடிகிறது. 1827 இல் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 1.3% வீத அதிகரிப்பு ஏற்பட்டது எனக் கொண்டால் மட்டுமே 1871 இன் மதிப்பீடு 1827 இன் மதிப்பீட்டோடு பொருந்தக் கூடியதாய் இருக்கும்.

ஆனால் 1871 இற்கும் 1931 இற்கும் இடையில் நடத்தப்பட்ட பத்தாண்டுக்கு ஒரு தடவையான சனத்தொகை மதிப்பீட்டின் அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிட, 1.3% வீத அதிகரிப்பு உயர்வானதாக இருப்பதால், டச்சுக் கொமாண்டரின் மதிப்பீடு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகத் தெரிகிறது. 1871 இன் பின்னர் வடக்கில் தமிழர் சனத்தொகை அதிகரித்துச் சென்றது. இந்த அதிகரிப்பின் பெரும் பகுதி யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கே உரியதாகவும் இருந்தது. வடக்கே தமிழர் மாவட்டங்களில் சனத்தொகை அடர்த்தியில் முன்னரைவிட அதிகளவு வேற்றுமைகள் ஏற்படவில்லை.

குடியிருப்பு முறையும் கிராமங்களும்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் குடியிருப்பு முறையில் அதிகளவுமாற்றங்கள் கடந்த 400 ஆண்டுகளில் ஏற்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள்ளே உள்ளக இடப்பெயர்வுகளும் பெரிய அளவில் ஏற்படவில்லை. உவர் நீர் பிரச்சினை காரணமாக உற்பத்தி வளம் குறைந்த பகுதிகளில் இருந்து அருகே உள்ள பகுதிகளிற்கு மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம். இது விதிவிலக்கானதே. போத்துக்கேயரின் காணிப் பதிவேடுகளின்படி யாழ். குடாநாட்டில் 128 கிராமங்கள் இருந்தன.

வலிகாமம் 61
தென்மராட்சி 24
வடமராட்சி 15
பச்சிலைப்பள்ளி 28
மொத்தம் 128


யாழ்ப்பாணத்தில் டச்சுப் பிரிடிகண்ட (மதபோதகர்) ஆக 1658 முதல் 1664 வரை கடமையாற்றிய வண.பால்தேயு என்பவர் தனது தேசப்படத்தில் 44 கிராமங்களைக் குறித்துள்ளார். இவற்றுள் 29 கிராமங்களின் பெயர்களையும் விபரங்களையும் தந்துள்ளார். போர்த்துக்கேயர் காலத்திற்கு சுமார் 50 வருடங்கள் கழிந்த பின் வண வலண்டஜின், (Valentijin) குடாநாட்டின் நான்கு பிரிவுகளிலும் இருந்து 42 கிராமங்களின் பெயர்களைத் தந்துள்ளார். இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுவது யாதெனில் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இவ்விடைக் காலத்தில் ஏற்படவில்லை என்பதே. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் வலிகாமம் பிரிவுதான் அதிக சன அடர்த்தியுள்ள பகுதியாக இருந்து வந்துள்ளது. அங்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் சன அடர்த்தியுடையனவாக இருந்த கிராமங்கள் இன்றுவரை அவ்வாறே இருந்து வருகின்றன. பச்சிலைப்பள்ளிப் பிரிவில் முன்பு குடியிருப்புக்கள் நிலைத்திருந்தன. பின்னர் அங்கிருந்து இடப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். அங்கிருந்து வடமராட்சிக்கு மக்கள் சென்றிருக்கலாம். வடமராட்சியில் குடியேற்றங்களும் புதிய நிலம் பயிர்ச்செய்கைக்குக் கொண்டு வரப்பட்டதும் இடம்பெற்றன. காரைநகர், ஊர்காவற்றுறை ஆகிய தீவுகளை நோக்கியும் இடப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. வன்னிப் பகுதிக்கு 20 ஆம் நூற்றாண்டிலேயே மக்கள் இடம்பெயர்ந்தனர். இதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சனத்தொகை அதிகரிப்பால் நிலத்தட்டுப்பாடு நிலவியது. அடுத்ததாக அரசாங்கம் குளங்களைப் புனரமைத்து வன்னியின் நிலங்களை மக்களைக் குடியேற்றுவதற்காகத் தயார் செய்தது. இப்பகுதிகள் சிலவற்றிற்கு இந்தியத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சென்றதும் வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைந்தது. 

சமூக நிறுவனங்களும் சட்ட முறைமையும்

சனத்தொகை வளர்ச்சிக்கு அடுத்ததாக யாழ். மாவட்டத்தில் சமூகநிறுவனங்கள் வளர்ச்சியுற்றமை ஒரு குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும். அத்தோடு அங்கு மக்களிடையே நிலையான உறவுகளைப் பேணுவதற்கேற்ற சட்டமுறைமையும் வளர்ச்சியுற்றது. இலங்கைத் தமிழர் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்களாதலால், குடியேறிகள் சமூகம் ஒன்றின் வளர்ச்சிக்கு நிறுவனங்களும், சட்டமுறைமையும் வளர்ந்திருப்பது அவசியமானதாகும். நிலத்தில் தனிச் சொத்துரிமை கோரும் நிலை வளர்ந்ததும் முக்கியமானது. 17 ஆம் நூற்றாண்டிலேயே இத்தகைய நிலை ஏற்பட்டிருந்ததா என்பதைக் கூறமுடியவில்லை. ஆயினும் 1675 இல் டச்சுக்காரர் காணிகளைப் பதிவு செய்யத் தொடங்கிய போது நிலத்தில் சிற்றுடைமை என்பது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில், வீடும் அதனைச் சுற்றித் தோட்டக்காணியும் இருக்கும். இவ்வாறு பல வீடு வளவுகளின் தொகுதியாக கிராமக் குடியிருப்புக்கள் இருக்கும். இந்நிலமும் பல துண்டுகளாகப் பிரிவுபட்டு தனியாட்களின் உடைமைகளாக இருக்கும். நிலத்தில் தனியுரிமையின் வளர்ச்சி நீண்ட காலத்திற்கு முன்பே ஏற்பட்டிருந்தது. தம் நிலங்களைச் சுற்றி மக்கள் வேலியடைத்துக் கொள்ளும் முறை நீண்டகாலத்திற்கு முன்பே ஏற்பட்டு விட்டது என்பதைக் கொண்டு இதனை அறியலாம். குடியேற்ற நாட்டுக் காரியதரிசியாகவிருந்த ரெனன்ற் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிங்களப் பகுதிகளோடு இதனை ஒப்பிட்டு அங்கு தமக்குச் சொந்தமான நிலத்தைப் பற்றி மக்கள் இவ்வளவு அக்கறை காட்டுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

சொத்துரிமை, யாழ்ப்பாணத்தில் வளர்ச்சியுற்ற நீதி நிறுவனங்களாலும் பேணப்பட்டது. தேசவழமையில் கூறப்பட்ட வழமைகளும் நடைமுறைகளும் யாழ்ப்பாணத்தில் எப்போது வேரூன்றின என்பதைக் கூறுவதற்கு இயலாதுள்ளது. 1707 ஆம் ஆண்டில் டச்சுக்காரர் முதலியார்களை அழைத்து இச்சட்டத்தைத் தொகுக்கும்படி கூறியபோது, வழமைச் சட்டம் ஒன்றிற்கு நிலையான பாதுகாப்பை அவர்கள் வழங்கினர். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் இருந்தே இச்சட்ட முறையின்படி நீதிபரிபாலனம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அக்காலத்தில் இருந்தே ஒரு தரப்பினருக்காக இன்னொருவர் வாதாடுவதும், நீதிபதி போன்ற ஒருவர் தீர்ப்பு வழங்குவதுமான முறைமை வளர்ச்சியுற்றிருந்தது. தேசவழமை மூன்று வகைச் சொத்துரிமையை ஏற்றிருந்தது. பெண்கள் விவாகம் செய்து கொள்ளும்போது பெற்றுக்கொண்ட சீதனம், பெற்றோரிடமிருந்து ஆண் மகன் பெற்றுக் கொண்ட முதுசொம், விவாகத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் தேடிக் கொண்ட சொத்துக்களான தேடிய தேட்டம் என்ற மூன்று வகைச் சொத்துக்கள் இருந்தன. மூன்று வகைச் சொத்துக்கள் என்ற வகைப்பாடு சொத்தினை உடைமை கொள்ளுதல், அதனைமாற்றுதல் அல்லது விற்றல் என்பனவற்றில் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்தியதோடு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பையும் உறுதி செய்தது. இவ்விதமான சிக்கல் நிறைந்த உரிமைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்ட சட்டமுறைமை யாழ்ப்பாணத்தவர்களை வழக்காடும் தன்மையுடையவர்களாய் ஆக்கியது எனலாம். இப் பண்பினை 17 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆயினும் அது சமூகத்தின் நிலைபேற்றுக்கும், அதன் பழமை பேணும் இயல்புக்கும் காரணமாயிற்று. அடுத்தடுத்து வந்த காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சியின் போது சமூகம் உருக்குலையாமல் நிலைத்து நிற்கவும் இது உதவியது. 

யாழ்ப்பாணச் சாதி முறையின் தனித்துவம்

தாம் எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்தினின்றும் வேறுபட்ட இயல்புகளையுடைய சாதி முறை யாழ்ப்பாணத்தவர்களிடம் உருவாகியிருந்தது. பிராமணர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாதிருந்தமையால், தென்னிந்தியாவின் பிராமணிய நியமங்கள் இங்கு முழுமையாகப் புகவில்லை. சாதிகள் வழமையான தொழில்களையே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. ஓரளவுக்கு சமூக பொருளாதார அசைவியக்கம் ஏற்பட்டது. தென்னிந்தியாவில் இருந்தது போன்ற சாதித் தொழில்களும், அவற்றைச் சார்ந்த நியமங்களும் பின்பற்றப்படவில்லை. விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களும் மதிப்புக்குரிய தொழில்களாக இருந்தன. மீன்பிடித் தொழிலும், கடல் சார்ந்த உற்பத்திகளும் தென்னிந்தியாவை விட இங்கு மதிப்பில் உயர்ந்தனவாக இருந்தன. இதனால் மீன்பிடித் தொழில் வளர்ச்சியுற்றது. மீன்பிடித் தொழில் சார்ந்த சமூக அசைவியக்கம் ஏற்படுதல் சாத்தியமாயிற்று. சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருந்த வேளாளர், விவசாயத் தொழில் சாதியினராக இருந்தனர். இது அவர்களின் மேலாதிக்கம் வளரக் காரணமாயிற்று. அவர்களின் இத்தகைய மேலாண்மை சமூக உறுதி நிலைக்கு வழியேற்படுத்தியது. சமூகத்தின் உறுதியான முன்னேற்றத்திற்கும் பொருளாதார உறவுகளின் வளர்ச்சிக்கும் இது உதவியது.

வர்த்தக நோக்கிலான பண்ட உற்பத்தி

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பழைய குடியிருப்புப் பகுதிகளில் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தக்கூடிய காணிகள் யாவும் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற காணிகளாக மாற்றப்பட்டன. கிராமங்களுக்கு அருகேயுள்ள காட்டுப்பூமியில் குடியிருப்புக்களும் தோட்டங்களும் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டன. உவர் நிலங்களை மீட்கும் திட்டங்களும் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டன. உவர் நீர் உள்நுழையாமல் தடுப்பணைகள் போடப்பட்டன. டச்சுக்காரர் நாவற்குழிப் பகுதியில் இது தொடர்பாகப் பயனுள்ள திட்டத்தைச் செயற்படுத்தினர். தரிசு நிலங்களின் ஏல விற்பனை மூலமும் பயிர்ச்செய்கைக் காணிகளின் அளவு கூடியது. 1670 கள் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை தரிசு நில விற்பனை ஒழுங்காக நடைபெற்றது. யாழ். மாவட்டத்தில் நிலத்திற்கான தேவை மிகப் பெரிய அளவில் இருந்ததால் நிலங்களைப் பணம் கொடுத்து ஏல விற்பனையின் போது மக்கள் கொள்வனவு செய்தனர். தெற்கேயுள்ள வன்னிப் பகுதிக்கும் மக்கள் குடிபெயர்ந்து சென்றமை ஓரளவுக்கு நிலத்தட்டுப்பாட்டைத் தீர்க்க உதவியது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இவ்வாறு தெற்கே இடம்பெயர்தல் நடைபெற்றது. ஆயினும் 20 ஆம் நூற்றாண்டில் அரசாங்கம் நீர்ப்பாசனப் புனரமைப்பு வேலைகளைச் செய்ததால் இவ்விடப்பெயர்வு துரிதப்படுத்தப்பட்டது. 

மண்ணின் இயல்புக்கும் காலநிலைக்கும் ஏற்ற பயிர்ச் செய்கைத் தொழில்நுட்பத்தை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். மழைக் காலத்தில் பயிரிடப்படும் நெல்லின் உற்பத்திக்காகப் பெரும் பகுதி நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. நெல் அறுவடை முடிந்ததும் பலவகைத் தானியங்கள் பயிரிடப்பட்டன. இத்தானியங்கள் மக்களுக்கு உணவாகப் பயன்பட்டதோடு, கால்நடைக்கான தீவனத்தையும் வழங்கின. யாழ்ப்பாணத்தவர்கள் நெற் செய்கைக்குரிய நிலத்தைப் படிப்படியாக காசுப் பயிர்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தும் முடிவை நீண்ட காலத்திற்கு முன்பே செய்தனர். இது எப்போது நிகழ்ந்தது என்பதைத் திட்டவட்டமாக கூறமுடியாது. 17 ஆம் நூற்றாண்டிலேயே தோட்டப் பயிர்ச்செய்கை யாழ்ப்பாணத்தில் வளர்ச்சியுற்றிருந்தது. வலிகாமம் வடக்கிலும், கிழக்கிலும், வடமராட்சியிலும் சந்தைக்கான தோட்ட உற்பத்தி வளர்ச்சி பெற்றிருந்தது. 17 ஆம் நூற்றாண்டில் தான் இங்கு புகையிலை உற்பத்தியும் பெருகியது. காசுப் பயிர்களில் இது தலைமையிடத்தையும் பிடித்தது. யாழ்ப்பாணத் தமிழர்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பன்முகப்படுத்தலும், சிறப்புத் தேர்ச்சியும் மிகுந்த முக்கியம் வாய்ந்த விடயமாகும். சந்தையை நோக்கிய பண்ட உற்பத்தி பெருகிறது. அது பணப் பொருளாதாரத்தின் விருத்திக்கு வழியமைத்தது. பிழைப்பூதியப் பயிர்களின் உற்பத்தி கிராமங்களுக்கிடையிலான பரிவர்த்தனையை அதிகரித்தது. பருத்தித்துறை, சாவகச்சேரி, அச்சுவேலி, சுன்னாகம், சங்கானை முதலிய கேந்திர சந்தைப்பட்டணங்கள் குடாநாட்டில் தோன்றின. இவற்றால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தின் முக்கியமான அம்சமாக வர்த்தகம் அமைந்தது. யாழ்ப்பாணம் வர்த்தகப் பரிவர்த்தனைக்குரிய மையமாயிற்று. இறுதியில் யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடனும் இலங்கையின் தென்பகுதியுடனும், கிழக்குப் பகுதியுடனும் கடல் வர்த்தகத்தை வளர்த்துக்கொள்வதற்கு இது உதவியது. 

இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகம்

சனத் தொகைப் பெருக்கமும், அதிகரித்த சனத்தொகைக்கு வேண்டிய உணவை உள்ளூரிலேயே முழுமையாக உற்பத்தி செய்ய முடியாத நிலையும் வர்த்தகத்தின் தேவையை அதிகரித்தன. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாக யாழ்ப்பாணம் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்தது. வங்காளம், கருநாடகக் கரை, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து அரிசி யாழ்ப்பாணத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதியில் தங்கியிருத்தல் காலப்போக்கில் அதிகரித்தது. 17ஆம் நூற்றாண்டிலும் 18 ஆம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தின் நுகர்வுத் தேவையின் அரைப் பங்கு, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மூலம் நிறைவு செய்யப்பட்டது. இறக்குமதி தடைப்பட்ட வேளையில் உணவுப் பற்றாக்குறை, விலைகளின் உயர்ச்சி ஆகிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்சியாளர்கள் அரிசியின் விலையைத் தாழ்ந்த மட்டத்தில் வைத்திருப்பது நன்மையானது என்பதைக் கண்டனர். அரிசியின் விலையின் ஏற்ற இறக்கங்கள் ஏனைய பொருட்களின் விலைகளையும் பாதித்ததோடு கூலியின் ஏற்ற இறக்கமும் அரிசியின் விலைக்கு ஏற்ப அமைந்தது. நெற்செய்கை நடைபெறாத பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியையும் தம் நுகர்வுத் தேவைக்காகக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்ததால் நாட்டில் பணப் புழக்கம் இருந்தது. பணப் புழக்கம்,  வசதிபடைத்த செல்வந்த வகுப்பினர் மத்தியில் மட்டுமல்லாது சாதாரண மக்கள் மத்தியிலும் இருந்தது. இது நவீனத்திற்கு முந்திய சமூகங்களில் காணப்படாத ஒரு இயல்பாகும். யாழ்ப்பாணத்தில் காசுப் புழக்கம் அதிகரித்ததற்குக் காரணம் இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்தமையாகும். புழக்கத்தில் இருந்த நாணயம் முழுவதும் அந்நிய நாணயங்களாக இருந்தன. அவற்றுள் இந்திய நாணயங்களே அதிகம். தங்க நாணயங்களும், பகோடா, பணம் (Fanam) என்பனவும் உயர் பெறுமதியுடையனவாய் இருந்தன. செப்பு நாணயங்கள் குறைந்த பெறுமதி உடையவை. காசு என்பது செப்பு நாணயமாகும். இவை உள்ளூரிலும் அச்சிடப்பட்டன. மலபார், கருநாடகம், வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து வந்த வர்த்தகர்கள் பகோடா, பணம், காசு ஆகிய வகை நாணயங்களை இங்கு கொண்டு வந்தனர்.

புகையிலை உற்பத்தியும் ஏற்றுமதியும்

யானை, புகையிலை என்ற இரண்டினதும் ஏற்றுமதியால் உயரிய வருமானம் கிடைத்தது. யாழ்ப்பாணத்து அரசர்கள் காலம் முதல் யானையின் ஏற்றுமதி நல்ல வருவாயைத் தரும் வர்த்தகமாக இருந்தது. இவ் வர்த்தகம் போர்த்துக்கேயர், டச்சு ஆட்சிக் காலங்களிலும் தொடர்ந்தது. 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் யானைகளிற்குக் கிடைத்த ஏற்றுமதி விலை மிக உச்ச நிலையை அடைந்தது. மொகலாய அரசும் தெற்கேயுள்ள நாயக்கர் அரசும் யானைகளைப் பெரும் தொகையில் கொள்வனவு செய்தன. ஆண்டுதோறும் 200,000 புளேரின் (ஏறக்குறைய ரூ. 160,000) யானை ஏற்றுமதியால் கிடைத்தது. வங்காளம், கோல்கொண்டா, தஞ்சாவூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த செல்வந்த வணிகர்கள் இவற்றைக் கொள்வனவு செய்தனர். அவர்கள் இவற்றுக்காக வெள்ளி, தங்க நாணயங்களைச் செலுத்தினர். டச்சு ஆட்சியில் யானை ஏற்றுமதி கொம்பனியின் ஏகபோக உரிமையாக இருந்தது. இதனால் ஏற்றுமதி வருமானம் முழுவதும் டச்சு அரசின் திறைசேரிக்கு வரவு வைக்கப்பட்டது. தரகுப் பணம், ஏற்றியிறக்கல் செலவுகள், கூலி உழைப்பு என்பனவற்றின் மூலம் சிறிய பங்கு வருமானம் சமூகத்திற்குக் கிடைத்தது. 18 ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதியில் யானை ஏற்றுமதி வருமானம் குறையத் தொடங்கியதால் யாழ்ப்பாணக் கொமாண்டர் பிரிவின் அரசு வருமானம் அரசுச் செலவைவிடக் குறைந்ததால் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் விளைவாக நாணயத்தின் நிரம்பல் அளவும் குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.

வருமானத்தைத் தேடித்தந்த இன்னொரு ஏற்றுமதிப் பொருள் புகையிலையாகும். 17 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு பின்னரும் புகையிலை சிறிய அளவில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆயினும் 18 ஆம் நூற்றாண்டிலேயே இது உச்சத்தையடைந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏற்றுமதிகளில் பிரதான இடத்தையும் பெற்றது. தென்மலபார் பகுதியில் யாழ்ப்பாணப் புகையிலைக்கான கேள்வியும் இக்காலத்திலேயே அதிகரித்தது. திருவிதாங்கூர் அரசு எழுச்சி பெற்றது. அதன் மன்னன் புகையிலை வியாபாரத்தின் தனியுரிமையைத் தன்னிடம் வைத்திருந்தான். அப்போது யாழ்ப்பாணப் புகையிலைக்கு திருவிதாங்கூரில் நல்ல சந்தை வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தோடு நிலையான வர்த்தக உறவு ஏற்பட்டது. திருவிதாங்கூர் மன்னனின் பிரதிநிதிகளாகவிருந்த வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களிற்குக் கப்பல்களில் வந்து புகையிலையைக் கொள்வனவு செய்து கொண்டு சென்றனர். இவர்கள் புகையிலை உற்பத்தியாகும் பகுதிகளில் தமது முகவர்களை வைத்திருந்தனர். வர்த்தகர்கள் தமது முகவர்கள் ஊடாக கமக்காரர்களுக்கு முற்பணத்தை வழங்கி அறுவடையின் போது புகையிலையைக் கொள்வனவு செய்தனர். குடியான் விவசாயிகளான புகையிலைச் செய்கையாளர்களிற்கு கடன் தேவைப்பட்டது. இக்கடனை வழங்கிய வர்த்தகர்கள் மிகவும் குறைந்த விலையில் புகையிலையைக் கொள்வனவு செய்தனர். சில கமக்காரர்கள் பிறரின் உற்பத்தியையும் தாம் கொள்வனவு செய்து புகையிலையைப் பதனிட்டு சந்தை விலையில் தரகர்களுக்கு விற்கக்கூடியவர்களாயும் இருந்தனர். இத்தரகர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தின் முயற்சியாளர்களாய் இருந்தனர். செட்டிகளும் பிறரும் கூட இத்தரகுத் தொழிலில் ஈடுபட்டனர். தரகர்கள் மலையாளி வர்த்தகர்களுக்குப் புகையிலை விற்றும் லாபம் அடைந்தனர். புகையிலை உற்பத்தியால் பணம் உழைக்கலாம் என்பதை உணர்ந்த விவசாயிகள் புகையிலையை கூடியளவு நிலத்தில் பயிரிடத் தொடங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகையிலைச் செய்கை நிலத்தின் அளவு அதிகரித்தது. வடமராட்சி, வலிகாமம் கிழக்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் புகையிலையைப் பயிரிடத்தொடங்கினர். மன்னார், வன்னி ஆகிய இடங்களிலும் புகையிலை பயிரிடப்படலாயிற்று.

fanam-coin-1
pogoda coin

1783 ஆம் ஆண்டின் அறிக்கையொன்று புகையிலை உற்பத்தி பற்றிய விரிவான புள்ளி விபரங்களைத் தருகின்றது. ஆண்டுதோறும் 1 மில்லியன் முதல் 1.3 மில்லியன் இறாத்தல் அளவான புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. 19,500 இறாத்தல் கொண்ட ஒரு சிப்பம் புகையிலை தரத்தைப் பொறுத்து ரூ.40 முதல் ரூ.120 வரை வேறுபடும் விலைகளில் ஏற்றுமதி செய்யப்பட்டது. தரகர்களுக்குப் 10 வீதம் தரகுப் பணமாகக் கிடைத்தது. திருவிதாங்கூர் அரசர் தனியுரிமையைத் தானே வைத்துக் கொண்டிருந்தபடியால் யாழ்ப்பாணத்து வர்த்தகர்களால் ஏற்றுமதி வியாபாரத்தைச் செய்ய முடியவில்லை. டச்சுக்காரர் 20 வீத ஏற்றுமதி வரியை அறவிட்டனர். வரியை அறவிடுதல் ஒப்பந்தக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது. 1790 களில் டச்சு அரசாங்கத்தின் புகையிலை ஏற்றுமதிக் குத்தகை வரி வருமானம், ஆண்டுக்கு ரூ.50,000 ஆக இருந்தது. 20 மலையாள ஏற்றுமதியாளர்கள் புகையிலைக்குரிய விலையை பகோடா, பணம் (Fanam) ஆகிய நாணயங்களில் கொடுத்தனர். இதனால் இந் நாணயங்கள் நாட்டிற்குள் புழக்கத்தில் வந்தன. யானை வர்த்தகம் போலல்லாது புகையிலை வர்த்தகம் சமூகத்தின் பல்வேறு பகுதியினருக்கும் நன்மையைத் தந்தது. கமக்காரர்கள், கூலி உழைப்பாளர்கள், (வண்டிகள், படகுகள் மூலம்) புகையிலையை ஏற்றி இறக்குவோர், புகையிலைத் தரகு வியாபாரிகள் எனப் பல பிரிவினர் இதனால் நன்மை பெற்றனர். புகையிலைப் பயிர் யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் உயிர்நாடியான உற்பத்தியாக விரைவில் மாற்றம் பெற்றது. இவ்வாறு முக்கிய உற்பத்தியாக மாறிய புகையிலை வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள், யாழ்ப்பாணத்தின் வாழ்க்கையைப் பாதிப்பதாக மாறியது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12558 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (18)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)