மஞ்சுள வெடிவர்தன
தமிழில் ரிஷான் ஷெரீப், பஹீமா ஜஹான்
எழுநா + நிகரி வெளியீடு
எழுநா வெளியீடு 7
ஜனவரி 2013
மஞ்சுளவின் கவிதைகள் நுட்பமானவை. சிங்கள சமூகத்தின் இயலாமையையும் மௌனத்தையும் நோக்கிச் சொல்லடிகளை வீசுபவை. சிறகுகள் வெட்டப்பட்ட பறவைகளைப் பாடுபவை. உடையாத கனவுகளின் கண்ணாடிகளைத் தேடுபவை. கரைந்து போகும் புன்னகைகளைத் துயருடன் பாடுபவை. தமிழ்த் தோழர்களுடனான நெருக்கத்தை இரங்கலுடனும் அளப்பரிய துயரத்துடனும் வடிப்பவை. சுற்றிவர அடைக்கப்பட்ட கொடுமை சூழ்ந்த தடுப்பு முகாம்களின் முட்கம்பிகளைச் சுட்டெரிப்பவை. உணர்வுத் தோழமையின் கவிதா வெளிப்பாட்டிற்கு மஞ்சுளவின் கவிதைகளை மீறி எவருக்காவது வண்ணம் தீட்ட முடியுமா என்னும் மொத்தக் கேள்வி என் மனதில் எழுகிறது. வாழ்க்கைக்கும் போராட்டத்துக்கும் நம்பிக்கை தர வேறெதுவும் இல்லையெனினும் நம்மிடையே இருக்கிறது: கவிதை.
– சேரன்
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சுள வெடிவர்த்தன கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு படைப்புத் தளங்களில் செயற்பட்டு வருபவர். படைப்பாளியாக, ஊடகவியலாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பல்வேறுபட்ட பரிமாணங்களிலும் தொழிற்படுபவர். அவருடைய சிறுகதைத் தொகுதி இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அவரது படைப்புக்கள் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருப்பவர்களுக்கு எப்போதுமே அசெளகரியம் தருபவை. 2008இல் இலங்கை ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறி தற்போது பிரான்சில் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகிறார்.
2009 மே மாதத்திற்குப் பின்னர் இனசமத்துவம், இன ஐக்கியம் குறித்த சொல்லாடல்கள் அதிகளவில் உச்சரிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் முதல் அரசியற்கட்சியினர், அரசசார்பற்ற நிறுவனத்தினர், ஊடகத்தினர் என்று அவற்றை உச்சரிக்காதார் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு நிலைமை இருக்கிறது.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு சந்தர்ப்பமாகும். தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் கவிதையெழுதும் மனித னொருவனின் புத்தகம்.