17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் - பகுதி 2
Arts
18 நிமிட வாசிப்பு

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் வடஇலங்கையின் தமிழர் பொருளாதாரம் – பகுதி 2

July 27, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : சின்னப்பா அரசரத்தினம்

ஏற்றுமதி வர்த்தகம்

17 ஆம் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வேறு பல பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டன. இவை ஒவ்வொன்றும் சிறிய அளவு உடையனவாயினும் யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது கணிசமான அளவுடையனவாக அவை இருந்தன. யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்திற்கு இவற்றின் பங்களிப்பும் கணிசமான அளவினதாக இருந்தது. இப்பொருட்களில் பனை மரமும், பனை உற்பத்திகளும் முக்கியமான ஏற்றுமதிகளாக இருந்தன. மலையாளம், கருநாடகம், மதுரை ஆகிய இடங்களிற்கு பனை மரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தினதும், தென்னிந்தியாவினதும் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பனை மரங்களின் ஏற்றுமதியில் ஈடுபட்டனர். பனங்கிழங்கு, பனாட்டு என்பன கொழும்புக்கும், காலிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பனை மரம், இந்தியாவில் நல்ல விலையில் விற்பனையாயிற்று. ஒருகாலத்தில் பனை மரத்தின் ஏற்றுமதி அதிகரிப்பால் யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் உள்ள பனந்தோப்புக்கள் அழியும் நிலை ஏற்பட்டது. ஊர்மக்களும், முதலியார்கள் தலைமைக்கார்களும் முறைப்பாடு செய்ததை அடுத்து டச்சுக்காரர் பனை மரங்களைத் தறிப்பதைத் தடைசெய்யும் பிரமாணங்களை இயற்றினர். யாழ்ப்பாணத்தின் இன்னோர் ஏற்றுமதியாக சாயவேர் விளங்கியது. காரைநகர், தீவுப்பகுதிகள், மன்னார் ஆகிய இடங்களில் உற்பத்தியான சாயவேரைக் கொண்டு துணிகளுக்குச் சாயமிடுவதற்கான சாயம் தயாரிக்கப்பட்டது. இந்தச்சாயம் தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலாளர்கள் கிராமங்களில் விற்பனையாகியது. 17ஆம் நூற்றாண்டில் சாயவேர் ஏற்றுமதி பெருமளவில் நடைபெற்றது. சாயவேர்ச் செடியை அதிக அளவில் ஏற்றுமதிக்காகப் பிடுங்கிய காரணத்தால் அது அழிவுற்றிருக்கலாம். இதனால் 18 ஆம் நூற்றாண்டில் இது ஏற்றுமதி செய்யப்படவில்லை. உள்ளூரில் கிடைக்கும் மரத்தடிகளையும், பனை ஓலைகளையும்  கொண்டு தயாரிக்கப்படும் பாய்கள், கூடைகள் போன்ற கைவினைப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பனங்கட்டி, தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் என்பனவும் ஏற்றுமதியாயின. 1680 ஆம் ஆண்டில் ஒரு வருட காலத்தில் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களில் இருந்து 256 கப்பல்களில் பல்வேறு வகைப் பொருட்கள் ஏற்றி அனுப்பப்பட்டன. 

நெசவுத் தொழில்

map of jaffna town

டச்சுக்காரர் யாழ்ப்பாணத்தில் நெசவுத் தொழிலை வளர்ப்பதற்கு விரும்பினர். யாழ்ப்பாண அரசர் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் சிறிய அளவில் நெசவுத் தொழில் வளர்ச்சியுற்றிருந்திருத்தல் வேண்டும். போத்துக்கேயர் ஆட்சியில் இது ஊக்குவித்து வளர்க்கப்படவில்லை. நெசவுப்பொருட்களின் வர்த்தகத்தில் பெருமளவில் ஈடுபட்ட டச்சுக்காரர், யாழ்ப்பாணத்தில் ஏற்றுமதிக்கான நெசவு உற்பத்தியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். 1659 – 60 காலத்தில் தென்னிந்தியாவில் பஞ்சம் ஏற்பட்ட போது மதுரையைச் சேர்ந்த கைக்கோளர் சாதி நெசவாளர்கள் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு தூண்டுதல் அளிக்கப்பட்டது. கைக்கோளர் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தின் துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள கிராமங்களிலும், மன்னார் தீவிலும் குடியேறின. இந்தியாவிலிருந்து பருத்தி நூல் இறக்குமதி செய்து, நெசவு செய்வதற்காக கைக்கோளர் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் உற்பத்தி செய்த துணியினை டச்சுக்காரர் கொள்வனவு செய்தனர். தென்னிந்தியாவின் நிலமையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் இலங்கைக்கு குடிபெயர்வோர் தொகை குறைந்தது. யாழ்ப்பாணத்தில் நெசவுத் தொழில் தனித்த ஏற்றுமதித் தொழில்துறை என்று கூறுமளவிற்கு ஒருபோதும் வளர்ச்சியடையவில்லை. யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் உள்ளூர்த் தேவைக்கே போதுமானதாக இருக்கவில்லை. வங்காளத்திலிருந்தும், கர்நாடகக் கரையிலிருந்தும் நெசவுப் பொருட்கள் இங்கு இறக்குமதியாயின. இந்தியாவைவிட இங்கு சாயவேர் மூலம் கிடைத்த சாயம் தரத்தில் உயர்ந்ததாக இருந்ததால், டச்சுக்காரர் துணிகளுக்குச் சாயமிடும் தொழிலை யாழ்ப்பாணத்தில் ஊக்குவித்தனர். தென்னிந்தியாவில் இருந்து துணியை இறக்குமதி செய்து அதற்குச் சாயம் இட்ட பின்னர் ஐரோப்பாவிற்கும், பட்டேவியாவிற்கும் ஏற்றுமதி செய்தனர். தென்கிழக்காசிய நாடுகளிற்கும் இது பட்டேவியா ஊடாகச் சென்றது. இத்தொழிலில் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன. சாயவேரை உரலில் போட்டு இடித்துச் சாயத்தைப் பெறும் முறை முன்னர் இருந்தது. டச்சுக்காரர் வேரை அரைப்பதற்கு ஒரு இயந்திரத்தை அறிமுகம் செய்தனர். இந்த இயந்திரத்தை இரண்டு எருதுகளைக் கொண்டு இழுத்து இயக்க முடிந்தது. மண் பானைகளில் வேரைப் அவிப்பதற்கு பதிலாக செம்பினால் ஆன கேற்றல்கள் உபயோகப்பட்டன. வேரைச் சுத்தம் செய்வதற்கு குளத்தின் நீரை உபயோகித்தனர். அக்குளம், சேறு வாரி ஆழப்படுத்தப்பட்டது. இத் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உற்பத்திச் செலவு குறைத்தது. சாயமிடுதல், வர்ணம் தீட்டுதல் ஆகிய தொழில்களும் வளர்ச்சியுற்றன. டச்சுக்காரர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை சாயமிட்ட துணிகளின் ஏற்றுமதியில் லாபம் பெற்று வந்தனர். நெசவாளர்களுக்கும், சாயமிடுவோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அவர்களின் உற்பத்திப் பொருட்கள் உள்ளூர் சந்தையிலும் விற்பனையாயின. கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கும் அவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ் ஏற்றுமதிகளாலும் குறிப்பிடத்தக்க அளவு லாபம் கிடைத்தது. 

யாழ்ப்பாணத்தின் வர்த்தக சமூகம்

map of jaffna fort

யாழ்ப்பாணத்தில் பல் தேசங்களிலிருந்தும் வந்த வர்த்தகர்கள் குடியேறி இருந்தனர். வங்காளியர், தமிழ்ச் செட்டிகள், தெலுங்குச் செட்டிகள், தென்னிந்தியப் பரதவர்கள், மலையாளிகள், சோழியர், தமிழ் முஸ்லிம்கள், மாப்பிள்ளை முஸ்லிம்கள் என்ற பல அந்நிய தேசத்தவர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தைச் செய்தனர். யாழ்ப்பாணத்தின் துறைமுகத்திற்கு அருகில் இருந்த இடத்தில் போத்துக்கேயர் முஸ்லிம்களைக் குடியிருத்தினர். அவர்கள் இன்றும் அப்பகுதியில் இருந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தின் நில உடைமையாளர் குடும்பங்கள் சிலவும், கரையோரப் பகுதிகளில் வாழ்ந்தோரும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். உள்ளூரைச் சேர்ந்த இவ்வர்த்தகர்கள் ஏற்றுமதியாளர்களுக்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் நடுவே இடைத்தரகர்களாகச் செயற்பட்டனர். யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதி மக்கள் சிறு வள்ளங்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிற்குச் சென்று வந்தனர். டச்சுக்காரர்களின் கொள்கைகள் உள்ளூர் வர்த்தக முயற்சிகளை வளரவிடாது தடை செய்வனவாய் இருந்தன. தாம் வர்த்தகம் செய்த பொருட்களை உள்ளூர் வர்த்தகர்களும் போட்டியிட்டுக் கையாள்வதை டச்சுக்காரர் அனுமதிக்கவில்லை. பொருட்களுக்கு தீர்வை உயர்வாக இருந்தது. கப்பல் போக்குவரத்திற்கும் அனுமதி பத்திரங்களைப் பெறவேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

முத்துக் குளிப்பு

முத்துக் குளிப்பு மூலம் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைத்தது. அத்தோடு அதன் மூலம் உள்நாட்டுக்குள் பணம் வந்து சேர்ந்தது. முத்து குளிப்பு நடைபெறும் வேளைகளில் அதனோடு இணைந்த பல தொழில் முயற்சிகளும் நடைபெற்றன. முத்துக் குளிப்பு ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில் அன்று. முத்துக்கள் எந்த அளவு விளைந்திருக்கின்றன, அவை வளர்ந்து முதிர்ச்சி பெற்றுள்ளனவா என்பனவற்றைப் பொறுத்து முத்துக் குளிப்பு ஆரம்பிக்கப்படும். மாதோட்டத்திற்கும் குதிரைமலைக்கும் இடைப்பட்ட கரையோரப் பகுதிகளில் முத்துக் குளிப்பு ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறப் போவதாக அறிவிப்பு செய்யப்பட்டதும், அப்பகுதியில் பல தொழில்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தூத்துக்குடியையும், மன்னாரையும் சேர்ந்த சுழியோடிகளான முத்துக் குளிப்போர் அங்கு வந்து சேர்வார்கள். நல்ல விளைச்சல் உள்ள சந்தர்ப்பத்தில் 700 வரையான படகுகள் அங்கு முத்துக் குளிப்பில் ஈடுபடுத்தப்படும். 50 நாட்கள் வரை முத்துக் குளிப்போர் அங்கு தங்கித் தொழில் புரிவர். கரையோரங்களில் தங்களின் கொட்டில்களை அமைத்து பத்தாயிரம் பேர் வரை அக்காலத்தில் அங்கு தங்கி இருப்பர். அங்கு பலவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் வியாபாரிகள் கடைகளை வைத்திருப்பர். யாழ்ப்பாணம், மன்னர் ஆகிய இடங்களில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் அங்கு கூடுவர். பொருட்களின் கொள்வனவும் விற்பனையும் அங்கு இடம்பெறும். இந்தியா, பாரசீகம், அராபியா ஆகிய தேசங்களின் துறைமுகங்களில் இருந்து புறப்பட்டு செல்வம் படைத்த வணிகர்கள் முத்துக்களை கொள்வனவு செய்வதற்காக அங்கு வந்து சேர்வார்கள். இக்காலத்தில் அரசாங்கத்திற்கு வரி மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவைக் கொண்டு அங்கு நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளின் அளவை மதிப்பிடலாம். 1753 ஆம் ஆண்டில் அரிப்புக் கடற் பகுதியில் நடைபெற்ற முத்துக் குளிப்பின்போது 65000 டச் புளோரின்கள் அரசாங்க வருவாயாக கிடைத்தது. யாழ்ப்பாணக் கொமாண்டரின் வரவு செலவு நிலை 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் உறுதியானதாக இருந்தது. அரசாங்கம் தனிப்பட்ட வரிகள் என்ற வகையில் பலவித வரிகளை அறவிட்டது. காணிகளுக்கும் காணிகளில் இருந்து கிடைக்கும் விளைபொருட்களிற்கும்  வரிகள் அறவிடப்பட்டன. 

ஒல்லாந்த அரசின் வரவும் செலவும்

ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் மூலமும் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்தது. வீதிக் கடவைகளிலும், இறங்கு துறைகளிலும் வரிகள் விதிக்கப்பட்டன. நகரப் பகுதிகளின் கடைவீதிகளில் உள்ள கடைகளிலிருந்தும், பலவித கைவினைத் தொழில் செய்வோரிடமிருந்தும் வரிகள் அறவிடப்பட்டன. முத்துக் குளிப்பு எப்போது நடைபெறுகிறதோ அவ்வாண்டில் பெருந்தொகைப் பணம் அரச வருவாயாக கிடைக்கும். இவற்றை விட சில பொருட்களின் வர்த்தகம் அரசின் தனி உரிமையாக இருந்தது. யானைகள், சில துணி வகைகள், மிளகு, வாசனைப் பொருட்கள் என்பன அரசின் தனி உரிமை வர்த்தகப் பொருட்கள் ஆகும். வருவாயுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாண கொமாண்டர் பிரிவில் செலவுகள் குறைவு. டச்சுக்காரர்களின் நிர்வாக அமைப்புகளிலும் ராணுவ தளவாடங்களிலும் அதிக அளவில் செலவு செய்யும் தேவை இருக்கவில்லை. சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் குறிப்பிடும் படியாக இருக்கவில்லை. சுதேசிகளான அதிகாரிகளைக் கொண்டு உள்ளுர் நிர்வாகம் நடத்தப்பட்டது. அவர்களின் சம்பளம் மிகக் குறைவானதாகும். 

யாழ்ப்பாணத்தை முதன் முதலில் கைப்பற்றிய ஆண்டு தொடக்கம் டச்சுக்காரர்களுக்கு செலவிற்கு மிஞ்சிய அளவில் வருமானம் அங்கு கிடைத்தது. டச்சு ஆட்சியின் முடிவு வரை இந்நிலை நீடித்தது. விதிவிலக்காக சில சந்தர்ப்பங்களில் அரசாங்கக் கொள்கைத் தவறு காரணமாக அல்லது எதிர்பாராத நிகழ்வு காரணமாக ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது துறையில் இருந்து வருவாய் குறைவடைந்த சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆயினும் பொதுவாக அரச வருவாய் உயர்வாக இருந்தது. 1660 களில் ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்தின் வருமானம் 200000 முதல் 290000 டச் புளோரின்களாக இருந்தது. செலவுகள் 93000 முதல் 200000 வரை புளோரின் இருந்தது. மற்ற இரு மாகாணங்களினதும் வரவு செலவுகளோடு இதனை ஒப்பிடுதல் பயனுடையது. 1660 களில் இந்த இரு மாகாணங்களும் பற்றாக்குறையை வெளிப்படுத்தின. வருவாயை விட செலவுகள் கூடுதலாக இருந்தன. ஏனைய இரு மாகாணங்களில் இந்த பிரச்சனைகள் ஓரளவு தீர்க்கப்பட்ட பின்னர் 1670 களில் காலி மாவட்டத்தில் செலவை விட கூடிய வருவாய் ஈட்டப்பட்டு மேன்மிகை காட்டப்பட்டது. இருப்பினும் காலியின் மேன்மிகையை விட யாழ்ப்பாணத்தின் மேன்மிகை மிக உயர்வானதாக இருந்தது. யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது மற்ற இரு மாகாணங்களும் பரப்பளவில் பெரியனவாக இருந்தன. கொழும்பு, காலி என்ற இரு துறைமுகங்களின் ஊடாக நடைபெற்ற வர்த்தகத்தின் அளவு கூடியதாக இருந்தது. ஆயினும் அவற்றிலிருந்து கிடைத்த மொத்த வருமானம் சில வேளைகளில் யாழ்ப்பாணத்தை விட குறைவாக இருந்தது. சில ஆண்டுகளில் வருமானம் செலவிற்குப் போதிய அளவாக இருக்கவில்லை. ஆகையால் முழு இலங்கையிலுமாக ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த வருமானம் உதவி செய்தது.

இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்ப்பாணத்தில் இருந்து ஒல்லாந்தர் அதிகளவு வருமானத்தை ஈட்டினர். தனிநபர் வரியாகவும், நிலவரியாகவும் கூடிய அளவு வருமானம் அவர்களுக்குக் கிடைத்தது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளல் வேண்டும். யாழ்ப்பாணத்தின் நிலப் பரப்பளவும், சனத்தொகையும் ஒப்பீட்டு அளவில் குறைவு. நிலவளமும் குறைவு. ஆனால் டச்சுக்காரர்கள் அங்கு கூடிய அளவு வரியை அறவிடக்கூடியதாக இருந்தது. தென்பகுதியில் தொடர்ச்சியான யுத்தங்களால் விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும் இன்னல்களை அடைந்தனர். தென்பகுதியுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் அத்தகைய சீர்குலைவு ஏற்படவில்லை. ஒல்லாந்தர் போர்த்துக்கேயருடன் யாழ்ப்பாணத்தில் நடத்திய யுத்தங்கள் குறுகிய காலத்தில் முடிவடைந்தன. யாழ்ப்பாணம் விரைவில் வழமை நிலைக்குத் திரும்பியது. புதிய எஜமானர்களுக்கு ஏற்றபடி நடந்து கொள்ள யாழ்ப்பாணத்தவர்கள் முனைந்தனர். கிராம மட்டத்திலும் மாவட்ட நிலையிலும் நிர்வாக முறையில் தொடர்ச்சி இருந்தது. குறிப்பாக சட்டங்களிலும் நீதி ஒழுங்கமைப்பிலும் அதிக மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால் வரி விதிப்பிலும் அதனை அளவீடு செய்வதிலும் தொடர்ச்சி இருந்தது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் அறவிடப்பட வேண்டிய வரி விபரத்தை போர்த்துக்கீசர் குறித்து வைத்தனர். டச்சுக்காரர் திட்டவட்டமான முறையில் நிர்வாக ஆவணப் பதிவுகளை பேணுவதில் கவனம் செலுத்தினர். 1674 ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர் ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியான வரிப் பதிவேடுகளை எழுதி வைத்துக் கொண்டனர். தோம்புகள் என்று கூறப்படும் இப் பதிவேடுகள், யாழ்ப்பாணத்தில் தான் முதன்முதலில் எழுதப்பட்டன என்பது முக்கியமானது. இதனைவிட யாழ்பாணத்தின் வரிமுறையில் தனிநபர் மீதான வரி, சிங்கள கிராமங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. தனிநபர் வரிகள் கூட ஊழியம் செய்வதற்கு பதிலாக பணத்தால் ஈடுசெய்யக்கூடியனவாக இருந்தன. வரியை பணமாக அறவிடுதல் முறை சரியாக கணக்கு வைப்பதற்கு உதவியது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் வரவேண்டிய வரிகளை திட்டவட்டமாகக் கணக்கிடவும் அறவிடவும் முடிந்தது.

டச்சு ஆட்சியில் வரி விதிப்பு

டச்சு ஆட்சியின் போது பல தனிநபர் வரிகள் பணக் கொடுப்பனவாக மாற்றப்பட்டன யாழ்ப்பாணத்தின் நான்கு பிரிவுகளிலும் தீவுப் பகுதிகளிலும் ஒவ்வொரு வயது வந்த ஆண்மகனும் செலுத்த வேண்டிய தலைவரி என ஒரு வரி இருந்தது. இதனை பணமாக (ஊழியமாக அல்லாது) செலுத்த முடிந்தது. பெரும்பான்மையினர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பணம் வரியாக செலுத்தினர். வியாபாரிகளும் கைவினைத் தொழில் செய்பவரும் ஆறு பணம் வரை செலுத்தினர். விவசாயத் துறையை சேர்ந்த மக்களில் பணக்காரர்களும் ஏழைகளும் ஏறக்குறைய ஒரே அளவுத் தொகையையே தலைவரியாகச் செலுத்தினர். 1677 இல் யாழ்ப்பாணத்தில் தோம்புகள் எழுதும் வேலை நிறைவெய்தியது. அக்காலம் முதல் டச்சுக்காரர் தலைவரியை ஆண்டுககு 8 பணமாக உயர்த்தினர். போத்துக்கேயர் காலம் முதல் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன. காணிகளின் விலை உயர்வடைந்திருந்தது. பணப் புழக்கம் அதிகரித்து இருந்தது. மக்கள் வரிகளை பணமாகவே செலுத்தக்கூடிய நிலையில் இருந்தனர். 1677 இல் வரியை உயர்த்திய போது பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அடுத்த ஆண்டில் வரியில் கழிவு கொடுத்து, விதிக்கப்பட்ட வரியை டச்சுக்காரர் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர் பெரும்பான்மையான வரியிறுப்பாளர்கள் 2 அல்லது 3 பணம் வரியாக செலுத்தி வந்தனர்.

கைவினைத் தொழில்களை செய்யும் தொழில் செய்பவரிடம் டச்சுக்காரர் வரியை அறவிட்டனர். இவ்வரி சேவைக் கடமையிலிருந்து விலக்களிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞரிடமிருந்தும் அறவிடப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வரி, குறித்த தொழில்களைச் செய்யும் சாதிக்குரிய வரியாக இருந்தது. குறித்த சாதியின் கிராமத் தலைமைகாரன் இதனை அறவிட்டு வழங்க வேண்டும். தலைமைக்காரனிடம் குறிப்பிட்ட ஒரு தொகை அறவிடப்படும். அதனை அவர் தன் சாதிக்காரர்களிடம் பங்கு போட்டு அறவிட்டுக் கொள்ளுதல் வேண்டும். தலைமைகாரர்களும் வரி அறவிடுவோரும் இம்முறையினை துஷ்பிரயோகம் செய்தனர். இதனால் ஊழல் மலிந்தது. டச்சுக்காரர் 1696 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தனி நபரிடமும் இருந்து அறவிடப்படும் வரியாக இதனை மாற்றினர். தோம்பு அட்டவணையில் வரி செலுத்த வேண்டியவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு தனிநபர்களிடம் வரி அறவிடப்பட்டமையால் சனத்தொகை பெருக்கத்திற்கேற்ப அறவிடப்பட்ட வரியின் தொகை உயரலாயிற்று.

அதிகாரி வரி என்றும் இன்னொரு வரி அறவிடப்பட்டது. இதுவும் தனிநபர் வரியாகும். கிராமத்தவர்கள் அதிகாரி என்னும் பதவியில் உள்ளவரின் பராமரிப்புக்காக இவ்வரியைச் செலுத்தினர். காலப்போக்கில் இவ்வரி மூன்று சாதியினரால் மட்டும் செலுத்தப்படும் வரியாக இருந்தது. குறித்த சாதியினரிடம் இருந்து ஒரு ஆளுக்கு ஒரு பணம் அதிகாரி வரியாக அறவிடப்படும். யாழ்ப்பாண இராச்சியக் காலத்தைய பழமையுடைய மூன்று சாதிகள் இவ்வரியை செலுத்தினர். இவ்வாறு செலுத்துவதை அச்சாதியினர் தமது அந்தஸ்தைக் குறிக்கும் கௌரவமாக கருதினர். தமது சாதி அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள விரும்பிய வேறு சில சாதிகளும் இவ்வாறு வரி செலுத்த விருப்பியதை அறிய முடிகிறது.

ஊழியம்

தனியார் வரிகளை விட தேக ஆரோக்கியமுள்ள ஒவ்வொரு ஆணும் கட்டாய உழைப்பைச் சேவையாக வழங்க வேண்டியிருந்தது. இது “ஊழியம்” என அழைக்கப்பட்டது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொது வேலைகளின் போது இவ்வூழியம் உடல் உழைப்பாக வழங்கப்பட்டது. இச் சேவையைச் செய்யத் தவறுவோர் ஆண்டுக்கு ஒரு றிக்ஸ் டொலர் அல்லது 12 பணம் தண்டப் பணமாக செலுத்த வேண்டும். பணம் படைத்த விவசாய சாதியினரும், பரதேசிகள் எனப்படும் வெளிநாட்டவர்களும், செட்டிகளும், பிறவர்த்தகர்களும், முஸ்லிம்களும் உடல் உழைப்பாக ஊழியம் செய்யாது பணமாக இவ்வரியை செலுத்தினர். இவர்கள் தவிர பிற யாவரும் ஊழியம் செய்தனர். டச்சுக்காரர் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பொது வேலைகள் பல இக்கட்டாய உழைப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அணைக்கட்டுகளையும், கால்வாய்களையும் திருத்தல், புதிதாக அமைத்தல், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏற்றி இறக்குதல், பல்லக்குகளில் ஆட்களைச் சுமந்து செல்லல், வீதிகளை அமைத்தல், கோட்டைகளையும் பாதுகாப்பு அரண்களையும் கட்டுதல், மரங்களைத் தறித்து கொடுத்தல், வேறு பல சேவைகளை செய்தல் என்பன ஊழிய வேலைகளில் அடங்குவனமாக இருந்தன. 

ஆரம்பத்தில் ஊழியத்திற்கு பதிலாக தண்டப் பணத்தை வசதி படைத்தவர்கள் செலுத்தினர். காலப்போக்கில் பணமாக செலுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. நாட்டில் அக்காலத்தில் பணப் புழக்கம் அதிகரித்துச் சென்றதை இது எடுத்துக் காட்டுகிறது. ஊழியம் செய்ய முன்வருவோர் தொகை, குறைவதைக் கண்ட டச்சுக்காரர் தமது வேலைகளை செய்விக்க ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்று எண்ணி வரியை இருமடங்காக அதிகரிப்பதற்கு யோசனை செய்தனர். ஊழியத்திற்கு பதில் தண்டப்பணத்தை அறவிடும் முறையை முற்றாக ஒழிப்பதைப் பற்றியும் சிந்தித்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஊழிய தண்டப் பணமாக கிடைத்த வருமானம் 75000 புளோரின்களாக இருந்தது.

தோம்பு எனப்படும் நிலவரி அட்டவணைகள்

வேறு பல வகை வரிகளும் ஒல்லாந்தர்களால் அறவிடப்பட்டன. இவ்வரிகள் நிலத்திலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருட்கள் மீதான வரிகளாகும். நில வாடகைக்கான பதிவேடுகள் தமிழில் எழுதப்பட்டன. இவை யாழ்ப்பாண அரசின் காலத்தில் இருந்து பேணப்பட்டு வந்தன. நிலத்தின் உரிமை, குறித்த நிலத்திற்கான வாடகை என்னும் இரு விடயங்களில் டச்சுக்காரர் கவனம் செலுத்தினர். அவர்களது ஆட்சிக்காலத்தில் கடைசி ஐம்பது வருடங்களில் நிலவரி அட்டவணைகள் ஒழுங்காகப் பேணப்பட்டன. நில அளவையாளர்கள் குழு ஒன்று ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராமத் தலைமைக்காரர் வைத்திருந்த நிலப் பதிவேடுகளை பரிசோதித்தது. நிலத்தை அளந்து நிலம் பற்றிய விவரங்களை பதிவு செய்தது. நிலவரைபடம் ஒன்றை தயாரித்தது. இந்த வேலையின் நோக்கம் யாதெனில் கிராமங்களில் செல்வாக்குள்ள மனிதர்கள் வரி கொடுக்காமல் மறைத்து வைத்திருக்கும் நில உடைமை விபரங்களை வெளிக்கொணர்வதாகும். இவர்கள் இவ்வாறு மறைத்து வைத்திருந்ததன் மூலம் அரசுக்கு வர வேண்டிய வரியை கொடுக்காது ஏய்த்து வந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய தோம்புகளை எழுதிய பின்னர் டச்சு அரசின் வருமானம் 70000 புளோரின்களாக அதிகரித்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும் உரிய நிலம் அந்த கிராமத்திற்குரிய மரபு வழி பெயரால் குறிப்பிடப்பட்டது. ஒருவருக்கு உடைமையாக உள்ள நிலத்தின் நெற்காணி எவ்வளவு, தோட்டக்காணி எவ்வளவு என்ற விபரங்களும் குறிப்பிடப்பட்டன. குறித்த நிலத்தில் வீடு உள்ளதா, அங்கு எவ்வளவு பனை – வேம்பு – இலுப்பை மரங்கள் உள்ளன போன்ற விடயங்களும் இத்தோம்புகளில் பதியப்பட்டன.

நிலத்திற்காக ஒரு வரி அறவிடப்பட்டதோடு அந்நிலத்தில் உள்ள தோட்டம் அங்குள்ள பழ மரங்கள் என்பனவற்கும் வரி அறவிடப்பட்டது. தோம்புகளில் மரங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டதால் அதன்படி வரியைக் கணக்கிட முடிந்தது. பனை, வேம்பு, இலுப்பை ஆகிய மரங்கள் ஒவ்வொன்றிற்கும் வரி சேர்க்கப்பட்டு நிலத்தின் வரியுடன் கூட்டி கணக்கிடப்பட்டது.

arasathinam's book

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9815 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)