யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - பகுதி 3
Arts
16 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – பகுதி 3

August 8, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

9.5.1895 ‘உதயதாரகை’ பத்திரிகையில் பாடசாலை நூலக விருத்தி பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்று காணப்படுகின்றது. 

“கோப்பாய் வித்தியாசாலையார் புத்தகசாலை ஒன்றுக்கு அடியிடக் காண்பது சந்தோட கருமம். பிள்ளைகள் துண்டு கொண்டு பணம் தண்டலிற் திரிகின்றனர். வீட்டுக்கு வீடு ஒவ்வொரு புத்தகசாலை இருந்தாலோ என்றும் ஆசை என் மனதில் நெடுங்காலம் குடி கொண்டது. வாய்ச்சியளி இல்லாத தபதியும், கலப்பை நுகமில்லாத வேளாளனும் புத்தகமில்லாத ஆசிரியனும் ஒருவருக்கொருவர் சமம். பாடசாலையோட்டம் முடிந்தால் புத்தகங்கள் ஓட்டம் தொடங்கும். வேலை கிடைத்தால் புத்தகம் நஞ்சாகும். ஒரு விஷயத்தின் பேரில் யோசிக்க வேண்டுமானால் கற்றாருமருமை. புத்தகமுமருமை. பாடசாலைகளோடு புத்தகசாலை இருத்தலவசியம். பிறரும் தெண்டிப்பாராக.” என்று அந்தச்செய்தி விரிகின்றது. 

இந்தச் செய்தி அக்காலத்துப் பொதுமக்களிடையே புத்தக சாலைகளின் தேவையை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. மாணவர்கள் பாடசாலையிலிருந்து புத்தகசாலை பற்றிய துண்டுப் பிரசுரங்களுடன் பணம் சேகரித்தமையால் போதுமான நிதி வசதியில்லாதிருந்தமையும் இப்புத்தகசாலைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தியிருப்பதும் புலனாகின்றது. இந்நிலை அடுத்த வருடத்தில் இன்னும் தீவிரமடைந்தது. 

“இப்படியோர் புத்தகசாலை இருக்கிறதாக அறியாதவர்கள் இருப்பார்களானால் அவர்கள் இதனால் உண்டு பண்ணக் கூடிய நன்மைகள் எத்துணையின என்பதைப் பார்க்கும் படி இதனை ஒரு நாளாயினும் தரிசிப்பார்களாக. அநேக சிறந்த புத்தகங்களும் இலங்கைப் புதினப் பத்திரிகைகளும் ஆங்கிலோ பத்திரங்களில் விசேசித்த சிலருக்கும் இதைச் சேர்ந்தோருக்கும் எல்லையற்ற இலாபத்தை உண்டு பண்ணி வருகின்றன.” என ஒரு செய்தி ‘உதயதாரகை’ பத்திரிகையின் 6.2.1896 ஆம் திகதிப் பதிப்பில் காணப்படுவது, அக்காலத்தில் இருந்த யாழ்ப்பாணப் புத்தகசாலை பற்றிய குறிப்பாகும்.  

யாழ்ப்பாணப் புத்தகசாலை

மாணவர்களுக்குரிய பாடப் புத்தகசாலை என்ற வளர்ச்சி முறையினில் இருந்து அடுத்த படிமுறை வளர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் எழுந்திருந்ததே சந்தா செலுத்தும்  ‘யாழ்ப்பாணப் புத்தகசாலை’ யாகும். பதிவுபெற்ற அங்கத்தவர்கள் சென்று படிக்கக்கூடிய சந்தா செலுத்திப் பயன்பெறும் ஒரு புத்தகசாலையாக இந்த யாழ்ப்பாணப் புத்தகசாலை இயங்கிவந்துள்ளது. 

சென்ற நூற்றாண்டில் 1842 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து நீதிமன்றக் காரியதரிசி கிறினியர் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு நூலகத்தை ஆரம்பித்திருந்தார். யாழ்ப்பாண நீதிமன்றத்துச் சட்டத்தரணிகள் தங்கள் உபயோகத்துக்கென இதனை ஒரு சட்ட நூலகமாக, தமது அங்கத்தவர் பாவனைக்காக வளர்த்தெடுக்கத் தொடங்கினார்கள். 1842 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் எல்.சி.கிரீனியரினால் தனது சேர்க்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாசிகசாலையே இவ்வாறு விரிவாக்கப்பட்டது. படிப்படியாக 1848 இல் துவைனம் துரையினால் (William Crofton Twynam 1827-12.3.1922) இது அங்கத்தவர்களுக்கான பல்துறை நூல்நிலையமாக மாற்றப்பட்டது. 

வில்லியம் துவைனம் காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் இறுதிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்து 1922 ஆம் ஆண்டில் தனது 95 ஆவது வயதில் யாழ்ப்பாணத்திலேயே மறைந்தவர். தனது ஆவணச் சேகரிப்புக்கள் அனைத்தையும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியவர் இவர். 1845 இல் இலங்கை சிவில் சேவையில் (Ceylon Civil Services) உதவி அரச அதிபராக இணைந்த இவர், தனது பணிகளைத் தொடங்கி மூன்றாண்டுகளிலேயே (1848 ஆம் ஆண்டு) ‘யாழ்ப்பாண நூல்நிலையம்’ என்ற பெயரில் சந்தா நூலகமொன்றை முன்நின்று உருவாக்கியிருந்தார். தன் வாழ்நாட் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வில்லியம் துவைனம் 1869 முதல் தொடர்ந்து 27 ஆண்டுகள் அரசாங்க அதிபராகப் பணியாற்றியிருந்தார். தனது பதவிக் காலத்தில் 05.04.1894 அன்று யாழ். பொதுசன நூலக அபிவிருத்திக்கென கூட்டமொன்றைக் கூட்டியிருந்தார். அப்போது துவைனம் யாழ். பொதுசன நூலக போஷகராயுமிருந்தார். 1896 இல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் வரை அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நூலகங்கள் பற்றிய விழிப்புணர்வினை எப்போதும் ஊட்டிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

The Overland Ceylon Observer என்ற ஆங்கிலப் பத்திரிகையின்  10.04.1894 ஆம் திகதிய செய்திக் குறிப்பொன்றின் பிரகாரம், இந்த நூலகம் எவ்வாறு இயங்கியிருக்கக் கூடும் என்ற தகவல்கள் தெளிவாகப் புலப்படுகின்றன. ‘Jaffna Library’ என்ற தலைப்பில் வழங்கப்பட்டிருந்த அந்தச் செய்திக் குறிப்பு பின்வருமாறு அமைந்திருந்தது. 

“யாழ்ப்பாண நூலக அமைப்பின் பொதுக்கூட்டம் ஒன்று இம்மாதம் 5 ஆம் திகதி (05.04.1894) மாலை 7 மணிக்கு இடம்பெற்றது. யாழ்ப்பாண அரச அதிபரும், யாழ்ப்பாண நூலக அமைப்பின் போஷகருமான திரு. W. C. துவைனம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பின்வருவோர் பிரசன்னமாகியிருந்தார்கள். டாக்டர் கிரேனியர், வணக்கத்திற்குரிய திரு.லெப்ரோய், திருவாளர்கள் F.போவ்ஸ், T.சங்கரப்பிள்ளை, S.T.ஆர்னோல்ட், B.சந்தியாகுபிள்ளை, எஸ்.உலகசேகரம், அலெக்ஸ் டூசைன்ட், எஸ்.பி.லோட்டன், ஏ.கனகசபை, சார்ள்ஸ் ஸ்ட்ரான்டன்பெர்க் மற்றும் W.வுட்ஹவுஸ்.

செயலாளர் அறிக்கையை வாசிக்க அது அவையினரால் திருப்திகரமானதென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை திரு.அலெக்ஸ் டூசைன்ட் முன்மொழிந்தார். எஸ்.பி.லோட்டன் அதனை வழிமொழிந்தார். இச்சங்கத்தில் கடந்த காலங்களில் அளப்பரிய சேவையாற்றி இவ்வாண்டு முதல் தமது பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெறும் நிர்வாகிகளுக்கும், கடந்த ஆண்டின் அங்கத்தவர்களுக்கும், அவர்களது பெறுமதிமிக்க சேவையை கௌரவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. சார்ள்ஸ் ஸ்ட்ரான்டன்பெர்க் – செயலாளரும் தனாதிகாரியும்; திருவாளர்கள் அலெக்ஸ் டூசைன்ட், எஸ். ஏ.அழகக்கோன், எஸ்.நாகலிங்கம், ஏ.கனகசபை – நிர்வாக சபையினர். இதனை டாக்டர் கிரேனியர் முன்மொழிய வணக்கத்திற்குரிய திரு.லப்ரூய் வழிமொழிந்தார். 

திருவாளர்கள் ரி.சங்கரப்பிள்ளை நடப்பாண்டிற்கான புதிய செயலாளராகவும் எஸ்.பி.லோட்டன் புதிய தனாதிகாரியாகவும் தெரிவு செய்யப்பட்டனர். பின்வரும் சந்தாதாரர்கள் இந்த ஆண்டுக்கான குழுநிலை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சந்தா செலுத்தும் உறுப்பினர்களின் பொதுக்கூட்டம் வரை பணியில் இருப்பார்கள்: திருவாளர்கள் எப்.போவ்ஸ், அலெக்ஸ் டூசைன்ட், சி.ஸ்ரான்ற்பேர்க், எஸ்.உலகசேகரம், பி.சந்தியாகுபிள்ளை, எஸ்.ஏ.அழகக்கோன், எஸ்.நாகலிங்கம், கனகசபை மற்றும் ஆர்னோல்ட். 

யாழ்ப்பாண நூலக அமைப்பின் போஷகரான தலைவர் டபிள்யூ.சி.துவைனம் அவர்கள் கனிவோடு இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதையிட்டு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஏ.கனகசபை முன்மொழிந்தார். சி.ஸ்ரான்ற்பேர்க் அதனை வழிமொழிந்தார். திரு.வூட்ஹவுஸ் அவர்கள் மாதாந்த சந்தா கட்டணத்தை ரூபாய் 1.50 சதமாக்கும் திட்டத்தை முன்மொழிந்தார். அதனை திரு.ஸ்ரான்ற்பேர்க் வழிமொழிந்தார். கனகசபை அவர்கள், சந்தாதாரர்கள் ஒரு ரூபா மாத சந்தா செலுத்துபவராகவும், ரூபாய் 1.50 மாத சந்தா செலுத்துபவராகவும் இரு பிரிவினராக பிரிக்கப்படவேண்டும் என்றும், மாத சந்தா ஒரு ரூபாய் 50 சதம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி பத்திரிகைகளும் பருவ இதழ்களும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் பிரேரணையொன்றை முன்வைக்க திரு. எப்.போவ்ஸ் அதனை வழிமொழிந்தார். திருத்தப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அரசினால் வழங்கப்படும் உதவித்தொகையை 50 ரூபாயினால் அதிகரிக்க குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரேரணையை திரு.அலெக்ஸ் டூசைன்ட் முன்வைக்க அதனை திரு பி.சந்தியாகுபிள்ளை வழிமொழிந்தார். திரு.எப்.போவ்ஸ் பாடசாலைக் கட்டடங்களைப் பரிசோதிக்கும் அதிகாரியிடம் (Inspector of School’s building) நூலகத்திற்கான ஒரு இடத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை பரிசீலனைசெய்ய குழுவினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார். டாக்டர் கிரேனியர் அதனை வழிமொழிந்தார்.

நூலகக் குழுவினர், Messrs Mudie & Bros இடமிருந்து புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னோடியாக அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற பிரேரணையை திரு W.வுட்ஹவுஸ் முன்வைக்க, டாக்டர் கிரேனியர் அதனை வழிமொழிந்தார். அவைத் தலைவர் திரு.W.C.துவைனம் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தவர்களுக்கு, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் 1894 ஜுன் 30 வரையிலான மூன்று மாதங்களுக்கு மேலாக சந்தா நிலுவை வைத்திருப்பவர்களின் உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர் வெளியிட்டார். அதுவும் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.”

இந்த நூலகத்தை பின்னாளில் நீதிமன்றக் காரியதரிசியாகவிருந்த க.மு.செல்லப்பா அவர்கள் உருவாக்கி யாழ்ப்பாண மாநகரசபை பொறுப்பேற்ற யாழ்ப்பாண நூலகத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. அது 1933 ஆம் ஆண்டு கந்தர்மடம் முதல் நூற்றுவர் என்னும் இளைஞர் முன்னேற்றச் சங்கத்தினரின் உதவியுடன் க.மு.செல்லப்பா அவர்கள் உருவாக்கி வழிநடத்திய நூலகம். இது பற்றி தனியானதொரு அத்தியாயத்தில் விபரமாகப் பதிவுசெய்துள்ளேன். 

மேற்கண்ட செய்திக் குறிப்பு எமக்கு முன்னைய யாழ்ப்பாண நூலகம் பற்றிப் பல செய்திகளை அள்ளி வழங்குகின்றன. 

  1. இந்த நூல்நிலையம் 1894 இலேயே யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கி வந்துள்ளது. 
  2. அரசினால் வழங்கப்படும் உதவித்தொகையை 50 ரூபாயினால் அதிகரிக்க குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரேரணையின் பிரகாரம், இந்நூல் நிலையத்திற்கு காலனித்துவ அரசாங்கத்தின் ஆதரவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது.
  3. திரு எப்.போவ்ஸ் பாடசாலைக் கட்டடங்களைப் பரிசோதிக்கும் அதிகாரியிடம் (Inspector of School’s building) நூலகத்திற்கானதொரு இடத்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை பரிசீலனைசெய்ய நூல் நிலையக் குழுவினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறார். இதன் மூலம் நூலகம் எதிர்காலத்தில் தனிக்கட்டட வசதியோடு விரிவாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சி.டி.வேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘எஸ்.ரி.ஆனல்ட் நியாயதுரந்தரர் அவர்களின் சீவிய சரித்திரம்’ என்ற நூலில் (யாழ்ப்பாணம் : 1909. பக். 10) உள்ளபடி, 1900 ஆம் ஆண்டில் இந்தப்புத்தகசாலை மிகவும் சீரான முறையில் நடைபெற்றதாகத் தெரிகின்றது. நியாயதுரந்திரரான எஸ்.ரி.ஆனல்ட் அவர்கள் இந்தப் புத்தகசாலையின் காரியகாரருள் ஒருவராக இருந்திருக்கின்றார். “1900 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் புத்தகசாலையின் காரியகாரருள் ஒருவராயும் 1903 ஆம் ஆண்டு மாசி மாதம் 26 ஆம் திகதி அதன் சோதனைக் கணக்காளராயும் நியமனம் பெற்று அந்தக்கடமைகளைச் செவ்வையாகப் பார்த்து வந்தார்.” என்று சி.டி.வேலுப்பிள்ளை குறிப்பிடுகிறார். 

Handbook of Jaffna (2)

இத்தகைய தனிப்பட்ட நூலகங்கள் வேறு இடங்களிலும் பிற்பட்ட காலங்களில் வளர்ச்சி பெற்றிருந்தமையினை எஸ்.கதிரேசு அவர்கள் 1905 இல் எழுதிய ‘A Handbook to the Jaffna peninsula’ என்ற கைநூலில் பட்டியலிட்டுள்ளார். 

Libraries and Reading Rooms

  1. Jaffna Public Library opposite the Jaffna Rest House receives a Government subsidy of Rs 200 a year. There are about 92 members on the Roll.
  2. St.Joseph’s Catholic Library on the Main Street, Jaffna is under the Roman Catholic Mission.
  3. Victoria Reading Hall was started in commemoration of the Golden Jubilee of our Late Queen Victoria.
  4. Point Pedro Reading Room is at Point Pedro 21 miles from Jaffna.
  5. Y.M.C.A. reading Room is at Main Street, Jaffna.

(Source : A HandBook to the Jaffna Peninsula and a Souvenir of the Opening of the Railway to the North/ By S.Karthigesu, Proctor, District Court, Jaffna. Tellippalai : American Ceylon Mission Press, 1905: pp 78.)

எஸ்.கதிரேசு அவர்கள் 1905 இல் எழுதிய ‘A Handbook to the Jaffna peninsula’ என்ற கைநூலின் படி 1905 இல் இந்நூல் யாழ்ப்பாணப் பொதுசன புத்தகசாலை பற்றியும், சென்.ஜோசப் கத்தோலிக்க புத்தகசாலை, விக்ரோறியா வாசினை நிலையம், பருத்தித்துறை வாசினை நிலையம், வை.எம்.சி.ஏ.வாசினை நிலையம் என்பன பற்றியும் குறிப்பிடுகிறது. இதில் வாசிக்கின்ற அங்கத்தவர்கள் தொகையும் குறிப்பிடப்பட்டிருப்பதனால் இப்புத்தகசாலை அங்கத்தவர்கள் பெயர்களைப் பதிகின்ற பதிவேடுகளை வைத்து நூலக நிர்வாகத்தினையும் ஒழுங்காக நடத்தி வந்துள்ளன என்பதும் தெரிய வருகின்றது. இதனால் இக்காலப் பகுதியை யாழ்ப்பாண நூலக படிமுறை வளர்ச்சியின் ஆரோக்கியமான காலகட்டம் என்று குறிப்பிடலாம். 

கீரிமலை நகுலேஸ்வரா படிப்பகம்

யாழ்ப்பாணத்தில் தோன்றிய கீரிமலை நகுலேஸ்வரா படிப்பகம் 1915 இல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்து ஓர்கன் (Hindu organ) என்ற ஆங்கில ஏட்டின் (1916 ஜனவரி 17 ஆம் திகதி இதழின்) மூலம் அறிய முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் முதலாவது பொது நூலகம் என மகுடமிடப்பட்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கம் மூலம் அரிய பல தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இந்த நூலகத்தை நிறுவியவர், புகழ் பூத்த தமிழ் அறிஞரும் சைவப் பெரியாருமாகிய திரு.சி.நமசிவாயம் அவர்களாவார். இந்த நூலகத்தைத் திறந்து வைத்தவர் ஆத்மீகத் துறவி ஸ்ரீமத் சர்வானந்த அடிகளார். இந்தத்திறப்பு விழா 1915 டிசம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள கீரிமலையில் நிகழ்ந்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறைக்கு அண்மையில் மாவிட்டபுரத்திலிருந்து சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கடற்கரையை அண்டிய புனித பூமியாகும்.

இலங்கையில் பழம் பெருமை கொண்ட சிவனுக்கே உரிய ஈஸ்வரங்களுள் ஒன்றான நகுலேஸ்வரம் கீரிமலையில்தான் இருக்கின்றது. போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேய ஆட்சியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நகுலேஸ்வரக் கோவிற் சூழலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகத்துக்கு ‘நகுலேஸ்வர படிப்பகமும் நூல்நிலையமும்’ எனப் பெயரிட்டுள்ளனர். கீரிமலையிலுள்ள நீரூற்றும், நீச்சல் குளமும் அதனையொட்டி அமைந்துள்ள இறந்தவர்களுக்கான கிரியைகள் நடத்தும் மண்டபங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் பிரசித்தமானவை. 

சமய வரலாற்று ரீதியாக தமிழகத்திலிருந்து தவ சிரேஷ்டர்களும் முனிவர்களும் வந்து தங்கி வழிபட்டுச் சென்ற புனித பூமி அது. பல ஆண்டு காலமாக நோயாளிகளும் ஓய்வை நாடும் மக்களும் கீரிமலைக்கு வந்து அங்குள்ள விடுதிகளில் தங்கிச் செல்வர். ஆடி மாதம் பிறந்து விட்டால் இங்கு ஒரே மக்கள் கூட்டம்தான். மாவிட்டபுரம் கந்தன், தீர்த்தமாட கீரிமலைத் திருக்கடலில் இறங்கும் காட்சியை காண்பதற்காகவே பக்தர்கள் அங்கு அதிகம் வருவதுண்டு.

பரோபகாரியும் இந்து சமய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தவருமான திரு.நமசிவாயத்தின் தந்தையுமான திரு.கதிரவேற்பிள்ளையால் நிறுவப்பட்ட மடமும் தண்ணீர்ப் பந்தலும் அடிக்கடி அங்கு நடக்கும் அன்னதானமும் சைவ உலகத்தில் மிகவும் பிரசித்தமானவை.

ஆக, ஆத்மீகவாதிகளும், ஓய்வையும் தேக நலத்தையும் தேடி வருபவர்களும், அன்னதானத்துக்காக திரள்பவர்களுமாக அலை மோதும் மக்கள் கூட்டத்தின் அறிவுப் பசியைத் தீர்க்கும் நிறுவனமாக நகுலேஸ்வரா படிப்பகமும் நூலகமும் செயற்பட்டு வந்துள்ளது. சரியானதோர் இடத்தில் இப்படியான படிப்பகத்தையும் நூலகத்தையும் நிறுவிய நம் ஆன்றோரின் செயற்பாடு ஊன்றிக் கவனிக்க வேண்டியதொன்றாகும். இந்த நூலகம் ஆரம்பிக்கப்படுவதற்குச் சரியாக ஒரு வாரத்துக்கு முன் 1915 டிசம்பர் 18 ஆம் திகதி அன்றைய பிரபல அரசியல்வாதியும் பருத்தித்துறைப் பிரதிநிதியுமான திரு.கே.பாலசிங்கம் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பின்போது ஆற்றிய சொற்பொழிவு (1916 ஜனவரி 17 ஆம் திகதி – இந்து ஓர்கன்) மேலும் புதிய சில தகவல்களைத் தருகின்றது.

“கொழும்பு நகரில் ஒரு பொதுமக்கள் நூலகம் இன்று வரை ஆரம்பிக்கப்படாமல் இருப்பது மிகவும் வருந்தக்கூடியது. இங்கு இயங்கும் பல்வேறு இலக்கிய அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு பொது நூலகத்தை நிறுவ முன்வரவேண்டும். நீண்ட தூக்கத்தில் இருந்து நம் மக்கள் விடுபட்டுத் துடிப்பும் ஆற்றலும் மிக்க ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நூலகங்கள் பெரும்பயனைத் தரவல்லன. ” என திரு.கே.பாலசிங்கம்  கொழும்பில் குரலெழுப்பியிருந்தார். அவரது இந்த வேண்டுகோள் காற்றோடு கலந்து மறையுமுன் சரியாக ஒரு வாரத்துக்குள் நகுலேஸ்வரா நூல்நிலையம் கீரிமலையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அன்று கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த 3 தினசரிகளும், தமிழகப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஏடுகளும், பல நூற்றுக்கணக்கான ஆங்கில-தமிழ் நூல்களும், ஆத்மீக வெளியீடுகளும் மக்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன என இந்தப்பத்திரிகை தகவல் தருகிறது. 1925 இல் தான் கொழும்பு நூலகமும், பெட்டா நூலகமும் இணைந்து கொழும்பு பொது நூலகம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9191 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)