இடதுசாரிகள் இழைத்த துரோகம்
Arts
9 நிமிட வாசிப்பு

இடதுசாரிகள் இழைத்த துரோகம்

August 14, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து அதிக காலம் ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரே இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பயமுறுத்திய மிகப்பெரிய பூச்சாண்டியாக இருந்திருக்கிறார் என்பதை அவரது அரசியல் காய் நகர்த்தல்களை கவனிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். சாரைப்பாம்பு ஒன்றினை நன்கு புடைத்து அதன் உயிரைப் போக்கி உச்சிவெயிலில் போட்டதுபோல் பிரஜாவுரிமை பறிப்பால் நொந்து நைந்து போயிருந்த இம்மக்களை அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்காமலேயே இந்தியாவுக்கு அனுப்பி விடத் தீர்மானித்தது நவீன உலகம் கண்டறியாத மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். சுமார் பத்து லட்சம் பேரின் பிரஜாவுரிமையை ஒரே இரவில் இல்லாமலாக்கியபோது இந்த முழு உலகமே அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர ஏன் என்று தட்டிக் கேட்கவில்லை. இப்போது அந்த மக்களில் மூன்றில் இரண்டு பங்கினரை இந்தியாவுக்கு அனுப்பிவிடத் திட்டமிட்ட போது கூட கண், வாய் பொத்தி ஊமையாகத் தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அதனை அடுத்து வந்த காலப்பகுதியில் இந்த மக்களின் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இடதுசாரிக் கட்சிகளையும், இந்த மக்களின் தலைவன் என்று சொல்லிக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானையும், சமஷ்டிக் கட்சி தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தையும் இலகுவாக விலைகொடுத்து வாங்கக் கூடிய சுயேட்சைகளையும் தன் வலையில் சிக்க வைத்துக் கொண்ட அம்மையார் அடுத்த தேர்தலுக்குத் தயாரானார்.

இதில் மிக வருந்தத்தக்கதும் மனதைக் குத்திக் கீறி குடையும் அவலம் என்னவென்றால் ஆரம்பத்திலிருந்தே மலையக மக்களுடன் ஒன்றாகக் கூடித் திரிந்து அவர்களின் சுக துக்கங்களில் கலந்துகொண்டு போராட்டங்களின் போது குரல்கொடுத்த இடதுசாரிக் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் 90 பாகையில் செங்குத்தாக குட்டிக்கரணம் அடித்து இடதுசாரிக் கொள்கைகளை ஓரமாக கட்டி வைத்துவிட்டு பண்டாரநாயக்கா அம்மையாரின் சிங்கள பௌத்த இனவாத கொள்கைக்குள் தலையை நுழைத்துக் கொண்டதுதான். இந்த இடதுசாரி தலைவர்களின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் அப்போது ஐரோப்பியர்களுக்கான நியமன அங்கத்தவராக இருந்த சிங்கிள்டன் சல்மான் (Singleton Salmon) பின்வருமாறு கருத்து தெரிவித்தார் :

sinkildan

” இந்த நாட்டு இடதுசாரித் தலைவர்கள் தாம் வரித்துக்கொண்டிருந்த இடதுசாரிக் கருத்துக்களை எப்போது காட்டிக் கொடுத்து அம்பலப்பட்டுப் போனார்கள் என்று கேட்டால் அது அவர்கள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் கூட்டு அரசாங்கத்தில் இணைந்தபோது அல்ல. மாறாக அவர்கள் எப்போது இனவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த நாட்டின் தொழிலாள வர்க்கத்தை இன, மத, மொழி ரீதியாக பிரித்துப் பார்த்தார்களோ அப்போதே அவர்களது இடதுசாரித்தனம் செத்துப் போய்விட்டது. இப்படிச் செய்ததன் காரணமாக அவர்கள் இதுவரை காலமும் கடைப்பிடித்த மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கையான இனவாதம் மற்றும் பாரபட்சத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து தோற்றுப் போனார்கள். “

1930 களை தொடர்ந்துவந்த தசாப்தங்களில் இருந்து 1948 ஆம் ஆண்டு பிரஜா உரிமை பறிக்கப்படும் வரை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மேற்படி இடதுசாரிக் கட்சிகளுடனேயே தோளுடன் தோள் சேர்ந்து தம்முடைய பல்வேறு பிரச்சினைகளின் போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவ்விதமாகப் பல போராட்டங்களில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். அவர்களது மிகப்பெரிய வெற்றி 1948 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியாகும். அந்தப் பாரிய வெற்றியே அவர்களுக்குப் பின்னர் எமனாகவும் வந்து வாய்த்தது. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் சக்தியை இழந்து விட்டனர் என்று தெரிந்த உடனேயே இடதுசாரிக் கட்சிகள் அவர்களை விட்டு மெல்ல மெல்ல தூர விலகிச் செல்ல ஆரம்பித்தனர். அத்தகைய சந்தர்ப்பத்தில் வஞ்சகமாக நேசக்கரம் நீட்டிய சிறிமாவோ அம்மையாரின் முந்தானை முடிச்சுக்குள் இவர்கள் முழுதாக மூழ்கிப் போய்விட்டனர்.

இந்திய வம்சாவளித்தமிழர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்துள்ளது. அது இவர்கள் எப்போதுமே இலங்கை நாட்டின் மீது தேசப்பற்று வைக்காமல் இந்திய நாட்டின் மீது தேசப்பற்று வைத்திருந்தனர் என்பதாகும். இதில் ஓரளவாயினும் உண்மை இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் இந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த இந்திய வர்த்தக வர்க்கத்தினர் இந்தியாவுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணி வந்ததாகும். மறுபுறத்தில் அவர்கள் இலங்கையின் செல்வங்களைச் சுரண்டி இந்தியாவுக்கு எடுத்துச் செல்கின்றனர் என்றும் கூறப்பட்டது. ஆரம்பத்தில் இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள் கூட, தாம் இலங்கையில் உழைத்து சேமித்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர். 1915 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து மலையாள தொழிலாளர்களுக்கும் சிங்களத் தொழிலாளர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டபோது மலையாளிகள் அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்று பெரும் கோஷம் எழுந்தது. மலையாளிகளுக்கு எதிரான வன்முறைகளும் தூண்டி விடப்பட்டன.

இதன் விளைவால் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தியாவுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட அனேகமான மலையாளிகள் தமது ‘மலையாளி’ அடையாளத்தை இழந்து சிங்கள மொழி கற்று சிங்கள அடையாளத்துக்குள் மறைந்து போனார்கள். ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் அப்படி ஒரு போதும் தம் அடையாளத்தை இழந்து போய் விடவில்லை. அவர்கள் இலங்கைத் தமிழரை விட சற்றே மேலே சென்று தமது பாரம்பரியக் கலாசாரங்களையும் மொழி, சமயம், கலை, இலக்கியங்களையும் பேணி வந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களுக்கு மிக அருகிலேயே எட்டி கால்வைக்கும் தூரத்தில் அவர்களது தாய்நாடான தமிழ்நாடு காணப்பட்டமைதான். அதனால் தமிழ்நாட்டில் ஏற்படுகின்ற சகல மாற்றங்களும் இவர்களிலும் பிரதிபலித்தன. இந்தப் போக்கு இன்றுவரை அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே இவர்களால் இலங்கைத் தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாமலும் இருக்கிறது.

ஸ்ரீமாவோ அம்மையார், ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்குச் சற்று முன்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையில் “ஏன் இந்திய வம்சாவளித் தமிழர் அனைவருக்கும் பிரஜாவுரிமையை இல்லாதொழிக்க வேண்டும்?” என்பதற்கான காரணங்களைக் காட்டி இருந்தார். அதனைச் சுருக்கமாகப் பார்ப்பதன் மூலம் அவருக்கு இந்திய வம்சாவளியினரின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் கழற்றி எறிந்து விடவேண்டும் என்பது தொடர்பில் எந்த அளவுக்கு ஆவேசம் காணப்பட்டது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.

” இந்தியத் தமிழர்கள் ஒருமித்த ஒரு குழுமமாக வாக்களித்து வந்ததால் அவர்களது இன ரீதியான பிணைப்பு எவ்வளவு நெருக்கமானது என்பதைக் கடந்த தேர்தல் (1948) முடிவுகள் காட்டின. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாகக் காணப்பட்ட தொகுதிகளில் அவர்கள் தங்களது சமூக அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியையே தெரிவு செய்தனர். இதன்மூலம் 7 தொகுதிகளில் கண்டிச் சிங்களவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. தமது சமூக அமைப்பின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட சிங்கள வேட்பாளருக்கே அவர்கள் வாக்களிக்கப் பழகியிருக்கின்றனர். அதன்மூலம் 13, 14 தொகுதிகளில் இந்தியர்கள் தங்களுக்கு சாதகமானவர்களைப் பிரதிநிதிகளாக தெரிவு செய்தனர். இந்தியர்களின் ஒருமித்த குழும வாக்களிப்பே ஒவ்வொருவரும் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு இலங்கையின் ஐந்தில் ஒரு பங்கு தொகுதிகளில் ஒரு அந்நிய மக்கள், தேர்தல் முடிவில் பாதிப்பினை ஏற்படுத்தி, கண்டி மாகாணங்களில் சிங்கள – பௌத்த மக்களுக்கு  எதிரான பாரதூரமான அரசியல் பிரச்சினை ஒன்றை  ஏற்படுத்தியுள்ளனர். “

எப்படியோ சுமார் 40 ஆண்டு காலம் இந்த மக்கள் இந்த நாட்டில் எந்தவித உரிமையும் அற்றவர்களாக வெறும் ‘புள்ளபூச்சி’ போல், இருக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் விழுந்து கிடந்து விட்டார்கள். ஆனால் அப்படி விழுந்து கிடந்தவர்கள் அப்படியே செத்தொழிந்து போய்விடவில்லை. அதற்கு அடுத்து வந்த மூன்று தசாப்த காலங்களில் அவர்கள் நிமிர்ந்து எழுந்து நின்றார்கள். அரசாங்கத்தால் தமக்கு எந்த உதவியும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும், தமது தலைவர்களே தமது மக்களை எட்டி உதைத்துத் தள்ளிய போதும், லயக் காம்ராக்களே உனது குடியிருப்பு என்று ஓங்கி நெற்றியில் அடித்தபோதும், அவர்கள் எழுந்து நின்றார்கள். தம்மை எட்டி மிதித்து கீழே தள்ளியவர்களின் முதுகின் மேல் ஏறி அமரும் உத்வேகம் இப்போது அவர்களுக்கு வந்துவிட்டது. இனிமேல் அவர்களுக்கு யாரும் வழிகாட்டத் தேவையில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8450 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)