ஆங்கில மூலம் : பேராசிரியர். ஏ ஜே. வில்சன்
ஏ.ஜே வில்சன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையின் அரசியல் பற்றி ஆய்வு நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் இவர் 1950 களின் முற்பகுதி முதல் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2000 ஆம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட SRI LANKAN TAMIL NATIONALISM எனும் நூல் இவரது வாழ்வு காலத்தின் இறுதியில் எழுதிய நூலாகும். 1980 களில் இவர் பேராதனை பல்கலைக்கழகத்தை விட்டு நீங்கி கனடா நாட்டின் நியூ பிரண்ட்ஸ்விக் (New Brunswick) பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானமும் பொதுக் கொள்கையும் பகுதியின் பேராசிரியராக பதவியேற்று பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார். இலங்கை தமிழ் தேசியவாதம் என்னும் இவரது மேற்குறித்த நூலின் இரண்டாவது அத்தியாயம் இலங்கை தமிழர்களின் சமூக கட்டமைப்பும் இன வரைவியலும் (Ethnography) என்பதாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் என இவ்வத்தியாயத்தின் தலைப்பு அமைந்திருப்பினும் இருபதாம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியலிலும் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வாழ்வியலிலும் முதன்மையான வகிப்பாகத்தைப் பெற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியும் யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் சமூகத்துடன் கொண்டிருந்த உறவுகளையும் இனவரைவியல் நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. இனவரைவியல் நோக்கிலான விளக்கம் தென்னாசியப் பின்புலத்தில் சாதிகள் பற்றிய ஆய்வாகவே அமையும் என்பது மானுடவியல் அறிவுடையோர் அறிந்த உண்மை. இதற்கமைவாக பேராசிரியர் அவர்களின் மேற்குறித்த அத்தியாயம் பல தசாப்த காலமாக விவாதத்திற்குரிய பொருளாக இருந்து வரும் யாழ்ப்பாணத்து வேளாளர் என்ற விடயம் பற்றிய விளக்கமாக உள்ளது. நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் கருத்துக்களை தொகுத்து கூறுவதையும் அறிமுகம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அறிமுகம்
பதினோராம் நூற்றாண்டில் இலங்கையில் சோழர் ஆட்சியின் பின்னர் தமிழர்கள் தனித்துவமுடைய இனக்குழுமமாக (A Separate Community of Their Own) உருவாகினர். பதினோராம் நூற்றாண்டிற்கும் 13 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கே தமிழர் அரசு உருவாவதற்கான சூழல் உருவானது. பாண்டிய நாட்டில் இருந்து வந்த ஆரிய சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தில் ஓர் அரசை நிறுவினர். இவ்வரசு போர்த்துக்கேயரால் 1620 இல் வெற்றி வெற்றிக்கொள்ளப்படும் வரை அங்கு நிலைத்திருந்தது. இவை யாவும் அண்மைக்கால வரலாற்று ஆராய்ச்சிகளால் உறுதி செய்யப்பட்ட உண்மைகள் ஆகும். நூலின் 14 ஆம் பக்கத்தில் ஒரு பந்தியில் பேராசிரியர் ஏ.ஜே வில்சன் அவர்கள் பேராசிரியர் சி. பத்மநாதனின் THE KINGDOM OF JAFFNA (1978) நூலை மேற்கோள்காட்டியுள்ளார். பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் நூல் வட இலங்கைத் தமிழர்கள் 8 ஆம், 9 ஆம் நூற்றாண்டுகளின் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் வரலாறை ஆதாரப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர்களின் இடப்பெயர்ச்சி
யாழ்ப்பாணம் சன அடர்த்தி கூடிய இடமாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் முதலில் வடமாகாணத்தின் பிற மாவட்டங்களுக்கும், பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளின் நகரப் புறங்களுக்கும், அவற்றைச் சூழ உள்ள கிராமங்களுக்கும் சென்று குடியேறினர். இவ்வாறு கிழக்கின் பகுதிகளுக்குச் சென்று குடியேறியவர்களை விட, கொழும்பிற்கும் கணிசமான எண்ணிக்கையில் குடிபெயர்ந்து சென்றனர். இவ்வாறு கொழும்பு சென்றோர் அரச பணிகளிலும், வர்த்தக நிறுவனங்களின் உத்தியோகத்தர்களாகவும் பணியாற்றினர். வேறு பலர் சிறு வர்த்தக முயற்சிகளில் முதலிட்டு கொழும்பிலும் இலங்கையின் ஏனைய ஏழு மாகாணங்களிலும் குடியேறினர். தமிழர்களில் இவ்வாறு குடியேறி வாழ்ந்த நகரங்களில் கண்டி நகரம் கொழும்புக்கு அடுத்த முக்கியத்துவம் உடையதாயிற்று. கே எம் டி சில்வா அவர்களின் A HISTORY OF SRI LANKA (1981) நூலின் பக் 368-9 இல் இருந்து மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டியுள்ளார். தமிழர்களின் இடப்பெயர்வின் தூண்டல் விசையாக (MOTIVATION) தொழில் வாய்ப்பு அமைந்துள்ளதைத் தெளிவுபடுத்துகிறார்.
சிங்களவர் வாழும் பகுதி ஈர வலயமாகும். ஆனால் தமிழர் வாழும் பகுதி வறண்ட வலையம் ஆகும். இது வளம் குறைந்ததும் ஆகும். தமிழர்கள் பெருந்தோட்டத் துறையிலும் வர்த்தகத்திலும் ஓரளவு முதலீடுகளை செய்தனராயினும் அவர்களால் இத்துறைகளில் கரைநாட்டு சிங்களவர்கள் அளவுக்கு முன்னேற முடியவில்லை. படித்த தமிழர்கள் சட்டம், மருத்துவம் போன்ற துறை வேலைகளிலும் (PROFESSIONS) அரசாங்க சேவையின் எழுதுநர் போன்ற கீழ்மட்ட பதவிகளிலும் இடம் பிடித்தனர். யாழ்ப்பாணத்தில் ஆங்கில கல்வியின் தரம் உயர்வாக இருந்தது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உத்தியோகங்களைப் பெறுவதில் போட்டி இருக்கவில்லை. அக்காலத்தில் சிங்களவர்களிடையே படித்தவர்களின் வேலையின்மை என்பது ஒரு பிரச்சினையாக உருவாகி இருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களிலும் சிங்களவர்களிடையே படித்தவர்களின் வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. 1940 களின் பின்னர் இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் செயற்படுத்தப்பட்டதால் சிங்களவர்களிடையே கல்வி வாய்ப்பு பெருகியது. அவர்கள் கல்வியில் முன்னேறியதோடு தமிழர்களை விட கூடிய அளவில் உயர் பதவிகளில் இடம்பிடித்துக் கொண்டனர். சிங்களவர்கள் அதிக எண்ணிக்கையில் உயர் பதவிகளில் இடம் பிடிக்கத் தொடங்கினர். இதனால் உத்தியோகப் பதவிகளுக்கான போட்டியால் சிங்களவர் – தமிழர் உறவு பாதிப்புறத் தொடங்கியது.
மலாயா இடம்பெயர்வு
1940 களில் உத்தியோக வாய்ப்புகள் இலங்கையில் அருகிச் சென்ற நிலையில், யாழ்ப்பாணத்தவர்களில் ஆங்கில கல்வி கற்றவர்கள் மலாயா நோக்கி இடம்பெயர்ந்தனர். மலாயா, பர்மா, இந்தியா ஆகிய இடங்களில் ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாணத்தவர்கள் உத்தியோகம் பெற்று வாழ்ந்து கொண்டு யாழ்ப்பாணத்திற்குப் பணம் அனுப்பினர். அரசாங்க உத்தியோகம், சட்டத்துறை, ஆசிரியர் ஆகிய தொழில் வாய்ப்புகள் அந்நாடுகளில் இவர்களுக்குக் கிடைத்தன. இவர்கள் அனுப்பிய பணத்தால் யாழ்ப்பாணத்தின் வாழ்க்கைத் தரம் தென்னிந்தியாவை விட உயர்வாக இருந்தது. 1930 களில் யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதிய பலர் யாழ்ப்பாணத்தில் காணிகளின் விலைகள் அதிகரித்திருப்பதைப் பற்றி குறிப்பிட்டனர். காணிகளின் செயற்கையான விலை ஏற்றம் மலாயாவின் பணம் வந்து சேர்வதால் ஏற்பட்டதெனவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
ஏற்றத்தாழ்வுகள் உருவாகுதல்
மேற்குறித்த இடப்பெயர்வுகளும் பண ஈட்டமும் இலங்கைத் தமிழர்களின் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் தோன்றின. இவ்வேற்றத் தாழ்வுகள் மூன்று பிரதேசங்கள் சார்ந்ததாக இருந்தன. அவையாவன:
- குடநாட்டிற்குள் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்
- கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புத் தமிழர்கள்
- கொழும்புத் தமிழர்கள்
மூன்றாவதாக குறிப்பிட்ட கொழும்புத் தமிழர்கள் ஏறக்குறைய முழுமையாகவே யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று குடியேறிய இத்தமிழர்கள் தமது கல்வி அறிவு காரணமாகவும், வாழ்க்கைச் சூழல் காரணமாகவும், வித்தியாசமான உலக நோக்கைக் கொண்டிருந்தனர்.இதனால் தம்மைப் பற்றி உயர்வான மனப்பாங்கைக் கொண்டிருந்தனர். இவர்களால் சிங்கள உயர் வகுப்பினர்களுடன் சமூக வாழ்வில் கலந்துறவாடவும், பங்கேற்கவும் முடிந்தது. இவர்களுள் கொழும்பு நகரின் 7ஆம் வட்டாரம் (கறுவாக்காடு), 3 ஆம் வட்டாரம் கொள்ளுப்பிட்டி, 4 ஆம் வட்டாரம் பம்பலப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழ்ந்தோர் செல்வமும், செல்வாக்கும் உள்ள உயர் குழுவினராக விளங்கினர். இவர்களில் இருந்து வேறுபட்டு செல்வத்திலும் செல்வாக்கிலும் குறைந்த “வெள்ளவத்தை தமிழர்” என்னும் தமிழ்ச் சமூக குழுமம் ஒன்று கொழும்பில் உருவானது. வெள்ளவத்தைத் தமிழர் யாழ்ப்பாணத்தின் மணிஓடர் பொருளாதரத்தின் (Money Order) முதுகெலும்பு போன்று விளங்கினர். இவர்கள் சிக்கனமாக வாழ்ந்து தம் சேமிப்புகளை யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் உறவுகளுக்கு அனுப்பினர். கொழும்பில் வாழ்ந்த இவ்விரு பிரிவினர்களையும் கொழும்புத் தமிழர் என்ற பொதுப் பெயரால் குறிப்பதுண்டு. ஆயினும் அரசியல் தலைமைத்துவம் செல்வமும், செல்வாக்குமுள்ள கொழும்பு 7ஆம் வட்டார தமிழர்களிடம் இருந்தே தோன்றியது. இவ்வுயர் குழாம் வெள்ளவத்தை தமிழர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மையுடையவராய் இருந்து வந்தனர். அரசியல் தலைவர்களாகவும், உயர் பிரிவினர்களாகவும் விளங்கிய இக்குழுவின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைவர்கள் முன்னிலைக்கு வரத் தொடங்கியதும் வீழ்ச்சியுற்றது. இலங்கைத் தமிழரசு கட்சியின் அரசியல் அதிகார கட்டமைப்பில் யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் மேலிடத்தை பெற்றனர். “யாழ்ப்பாணம் சார்பான சண்டையை கொழும்பில் இருந்து நடத்துதல்” என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதிகள் தமிழர் அரசியலை தம் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். கொழும்பின் தலைமைத்துவம் யாழ்ப்பாணத்திற்கு கை மாறியது. இவ்வேளை மட்டக்களப்பு தமிழர்கள் யாழ்ப்பாணத்தவர்களில் இருந்து விலகி சிங்களக் கட்சிகளின் தலைவர்களுடன் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டுச் சேர்ந்து இயங்கினர். ஆயினும் குறுகிய காலத்திற்குள் 1956 இன் சிங்களம் மட்டும் சட்டம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தமிழர்களை வடக்கின் தமிழர்களுடன் ஓரணியில் திரள வழி சமைத்தது.
யாழ்ப்பாணத் தமிழர் சமூக உருவாக்கம்
யாழ்ப்பாணத்தில் வேளாளர்கள் தவிர்ந்த ஏனைய 17 சாதிகள் இருந்தன என அரசரத்தினம் கூறுகிறார். இந்தச் சாதிகள் யாவற்றையும் ஒன்று சேர்த்த தொகையிலும் கூடிய பெரும்பான்மைச் சாதியாக வேளாளர் உருவாக்கம் பெற்றனர். யாழ்ப்பாணத்தில் எத்தனை சாதிகள் இருந்தன என்பதைப் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள் வேறுபடுகின்றன. அரசரத்தினம் -18சாதிகள் எனவும், கென்னத் டேவிட் – 24 சாதிகள் எனவும், மைக்கல் பாங்ஸ் – 48 எனவும் வேறுபட்ட எண்ணிக்கைகளை கூறிய போதும் பாங்ஸ் கூற்று கவனிக்கத் தக்கது. அவர், 48 சாதிகளில் எந்த ஒரு கிராமத்திலும் 17 இற்கு மேல் சாதிகள் ஒருங்கே காணப்படவில்லை என்று கூறினார். யாழ்ப்பாணத்தில் 18 கிராமங்கள் ஒரு சாதிக் கிராமங்களாக இருந்தன. பெரும்பாலான கிராமங்கள் பல சாதிக் கிராங்களாக இருந்தன. ஆயினும் 10-12 சாதிகளே சாதி உறவுகளில் முக்கியத்தவம் உடையனவாக இருந்தன என்றும் பாங்ஸ் குறிப்பிட்டுள்ளதை வில்சன் எடுத்துக் காட்டுகிறார்.
வேளாளர் சாதியின் வரலாறு
டேவிட், பாங்ஸ் ஆகிய இருவரும் மானிடவியலாளர்கள். அவர்களின் ஆய்வுகளில் மானிடவியல் அம்சங்கள் துலக்கமாகின்றன. அரசரத்தினம் வேளாளரின் மேலாதிக்கம் தோற்றம் பெற்ற அரசியல் பின்னணியை அலசுகிறார். அவருடைய கருத்துப் படி வேளாளர் சாதியில் பலசாதிகள் சங்கமிக்கின்றன. அவை யாவும் வேளாளர்களுக்கு சமதையான அந்தஸ்து உடையவை என்று சொல்ல முடியாவிடினும் உள்ளீர்ப்பதற்குத் தகுதியுடையனவாக இருந்தன என்றே கருதமுடியும். 1619ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்த இந்த ஒருங்கிணைவும், கலப்பும் 400 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் வேளாளர் என்ற பெரும்பான்மைச் சாதி உருவாகியது. இச்சாதியின் அந்தஸ்துக் கட்டமைப்பை நான்கு நிலைகளாக வகுக்கலாம். உயர் படியில் முதலியார், தலையாரி, மணியகாரர், விதானை குடும்பங்கள் அமைந்தன. இரண்டாம் படியில் பெருமளவில் காணிகளை உடைமையாகக் கொண்டவர்களும் நெல் உற்பத்தியில் ஈடுபட்டவர்களுமான காணிக்காரர்கள் இருந்தனர். அடுத்தபடியில் நடுத்தர, சிறு உடமையாளர்கள் இருந்தனர். அதற்கும் அடுத்த நிலையில் சிற்றுடமை உழுகுடிகள் (Peasants) இருந்தனர். மடப்பள்ளிகள் என்போர் வேளாளர்களுடன் சேர்ந்து கொண்ட ஒரு குழுவினராவர். 1827ம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்கள் 10 வீதத்தினராவர் (12,995) அரசனின் அரண்மனையில் பணியாட்களாக இருந்தவர்கள் இச்சாதியினர். இவர்கள் யாழ்ப்பாணம் முழுவதிலுமாக பரவி இருந்தனர். 18ம், 19ம் நூற்றாண்டுகளில் மேலும் ஐந்து குழுக்கள் வேளாளருடன் இணைந்தன. இக் குழுக்களும் பொருளாதார நிலையில் உயர்வு பெற்றிருந்தன.
அ) அகமுடையர் – இவர்கள் அரண்மனைக் காவலர்கள். மெய்ப் பாதுகாவலர்கள். நிலங்களை மானியமாகப் பெற்றனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
ஆ) தனக்காரர் இவர்கள் கோவில் சொத்துக்களின் பாதுகாவலர்களாக இருந்தவர்கள். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே உள்ள காடுகளில் யானை பிடித்தல், யானை வர்த்தகம் என்பவற்றில் ஈடுபட்டனர்.
இ) செட்டிகள் – இவர்கள் வர்த்தகம் செய்தனர்.
ஈ) பரதேசிகள் – மதுரையில் இருந்து அரசர்களால் கொண்டு வரப்பட்டவர்கள். பலவித தொழில்களில் திறன்மிக்கவர்கள், பரதேசிகள் என்றால் பிறதேசத்தவர் என்பது பொருள்.
உ) மலையாளிகள் – கேரளத்தில் இருந்து வந்த மலையாளிகள் அரசர்களுக்கு சேவை செய்பவர்களாக இருந்து பொருளாதார நன்மை பெற்றவர்கள்.
- Indian Economic and Social History Review’ என்ற பருவ இதழில் (தொகுதி XVIII இல 3 மற்றும் 4) அரசரத்தினம் எழுதிய ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century’ என்ற கட்டுரையை ஆதாரம் காட்டி வில்சன் விபரிக்கும் இந்த வரலாற்றுத் தகவல்கள் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கத்தைப் புரிந்து கொள்ள மிகவும் உதவியானவை.
பிராமணர்
பிராமணக் குடும்பங்கள் அங்குமிங்குமாக தனிமைப்பட்டு இருந்தன. கிராமங்களில் ஒரு சில பிராமணக் குடும்பங்களே வசித்து வந்தனர். பிராமணர்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் அன்று கோவில் பணியாளர்களாக அமர்த்தப்பட்ட நிலையில் தான் இருந்தனர். வேளாளர்கள் தம் கோவில்களில் இவர்களைக் கொண்டு சமயச் சடங்குகளைச் செய்வித்தனர். பிராமணர் செல்வாக்கும், அவர்களது தூய்மை, துடக்கு பற்றிய கருத்தியலும் இல்லாத சூழலில் வேளாளரும் பிற சாதிகளும் ஒன்று சேர்வதற்கு தடையான அக நிலைக் காரணங்கள் யாழ்ப்பாணத்தில் அன்று இருக்கவில்லை என்று அரசரத்தினத்தை ஆதாரம் காட்டி வில்சன் குறிப்பிடுகிறார்.
சூத்திரர்களான வேளாளரும் அவர்களுடன் இணைந்து ஒன்றாகச் சங்கமித்த ஆறு சாதிகளும் ஒன்றிணைவதற்கு சமயக் கருத்தியல் தடையாக இருக்கவில்லை. ‘தூய்மை’, ‘துடக்கு’ பற்றிய எண்ணம் வலிமையாக இருக்கவில்லை. இதனை ‘the absence of a strong adherence to the ideology of Brahmanical orthodoxy with its concepts of purity and pollution’ என்று அரசரத்தினத்தின் வார்த்தைகளை வில்சன் மேற்கோள் காட்டுகிறார்.
பிற சாதிகள்
கட்டுரையின் எஞ்சிய பகுதியில் யாழ்ப்பாணத்தின் பிற சாதிகள் பற்றி ஆராய்கிறார். கரையார் யாழ்ப்பாணத்தின் வேளாளர் தலைமையிலான சாதிக் கட்டமைப்பில் இருந்து விலகி நிற்கும் சாதி என்பதை ஆர்.எஸ். பேரின்பநாயகம் என்னும் ஆய்வாளரை மேற்கோள் காட்டி எடுத்து கூறிவிட்டு கரையார் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சியை விரிவாக எடுத்துரைக்கிறார். தமது விளக்கங்களிற்கு வரலாற்றுப் பேரறிஞர் அரசரத்தினத்தின் கருத்துக்களையே ஆதாரமாகவும் கொள்கிறார். வேளாளருக்கு அடுத்தபடியில் இருப்பவர்கள் கோவியர் சாதியினர், இவர்கள் வேளாளரின் வீட்டுப் பணியாட்களாக இருந்தவர்கள். இந்த இரு சாதிகளுக்குமிடையே இருந்த ‘விநோதமான அந்தஸ்து உறவை’ (A Curious Status Relationship) பாங்ஸ் குறிப்பிடுகிறார். வேளாளர் சாதி அந்தஸ்தில் உயர்ந்தோராய் இருந்தனர். குறிப்பாக உலகியல் (சமூக, பொருளியல்) நிலையில் கோவியர் குறைந்த அந்தஸ்தில் இருந்தனர். ஆனால் சடங்கு நிலையில் இவர்கள் வேளாளருக்கு சமதையானவர் (Ritual Equals) என பாங்ஸ் கூறுகிறார். கோவியர் என்ற சாதியை (இலங்கையின்) வேறு எந்த சாதி முறையிலும் காணமுடியாது. (அரசுகளிற்கு இடையே நடந்த போர்களின் கைதிகளாகப் பிடிபட்ட சிங்கள ‘கொவிகம’ சாதியினரே கோவியராயினர் என்றொரு விளக்கமும் உள்ளது). சடங்கு நிலையில் சமதையான இவர்கள் உலகியல் மட்டத்தில் தாழ் நிலையில் இருந்தனர். வேளாளர் கோவியர் கலப்பு மணத்திற்கு சான்றுகள் உள்ளன. இரு பகுதியினரும் ஒன்றாக இணைவதற்குரிய அளவு எண்ணிக்கைக்கு இக்கலப்பு மணங்கள் உயரவில்லை. கோவியர்கள் இன்று சமூக ஏணிப்படியில் உயர்ந்து சென்றுவிட்டனர். வீட்டுப் பணிகளை அவர்கள் இன்று செய்வதில்லை. மரபு வழிப்பட்ட சடங்குகள் இதற்கு விதிவிலக்கானவை.
தட்டார் (பொற் கொல்லர்), தச்சர், கொல்லர் (இரும்பு வேலை), கன்னார் (தகரம், செம்பு) ஆகியோர் கைவினைத் தொழில்களைச் செய்தனர். வண்ணார், அம்பட்டர், நளவர் (மரம் ஏறுதல்), பள்ளர் (நிலமற்ற அடிமை தொழிலாளர்), வள்ளுவர் ஆகிய பல சாதியினர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். சிலர் ‘தீண்டத் தகாதவர்’ என்றும் கூறப்படுவர். வேளாளருக்கு அடுத்த படியில் உள்ள இந்த சாதிகள் ‘அடிமை’ ‘குடிமை’ என்ற இரு பிரிவுள் அடங்குவர். அடிமைகளை முற்காலத்தில் விலைக்கு விற்கலாம், வாங்கலாம். குடிமைகள் என்போர் அவர்களது தொழில் சார்ந்த சேவைகளை வழங்குவோராவர்.
ஆங்கிலக் கல்வி
ஆங்கிலக் கல்விமுறை புகுந்ததும் அதன் வழியாக அரச, தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அந்தக் கல்வியையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதில் வேளாளர் முந்திக் கொண்டனர். வேளாளர் அல்லாத பிற சாதியினரும் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு கற்பதற்கான உரிமை துணை புரிந்தது. சாதி பேதங்கள் தளர்வதற்கு செல்வாக்குமிக்க கத்தோலிக்க திருச்சபையும், ஏனைய புரட்டஸ்தாந்திய மத அமைப்புக்களும் காரணமாக இருந்தன. இருந்த போதும் யாழ்ப்பாணத்தின் பெரும்பான்மையினர் மதம் இந்து மதமே ஆகும். இந்து மதத்தின் சைவம் என்ற பிரிவு (Sect) இங்கு முக்கியமானது. பவ்வன் பேர்கர் எனும் மற்றொரு மானிடவியலாளரும் தமது நூலில் சாதிகளின் சனத்தொகை விகிதாசாரத்தை தந்துள்ளார். இக்கணிப்பிற்கு அவர் பாங்ஸ்ஸை ஆதாரமாகக் கொள்கிறார். மொத்த சனத்தொகையில் வேளாளர் 50 வீதம், கரையார் 10 வீதம், பள்ளர் 9 வீதம், நளவர் 9 வீதம். கோவியர் 7 வீதம், வள்ளுவர் 2.7 வீதம் என்ற தகவல்களை பவ்வன் பேர்கர் தந்துள்ளார். ஏனைய சாதிகள் ஒட்டு மொத்தமாக 12.3 வீதமாக இருந்தன. இவை மிகக் குறைந்த விகிதாசாரமாகும்.
மீன்பிடியும் கடல் வர்த்தகமும்
‘கரையார் ‘தனித்துவமான சாதி’ (An Independent Caste). அவர்கள் எவருக்கும் சேவைகளை (Service) வழங்குபவர்களாக இருக்கவில்லை. சொத்துக்கள், சலுகைகளை அனுபவிக்கவும் அடிமைகளை வைத்திருக்கவும் அவர்கள் உரிமை கொண்டிருந்தனர்’ என ஆர்.எஸ். பேரின்பநாயகத்தின் மேற்கோளை எடுத்துக் காட்டும் வில்சன், கரையார் சாதியினர் பற்றி விரிவான தகவல்களை தந்து அவர்களின் பொருளாதார சமூக எழுச்சியினையும் விபரிக்கிறார். பாங்ஸ் தமது ஆய்வுகளில் கரையார் பற்றி எதுவும் குறிப்பிடாத காரணத்தால் வில்சன் தரும் தகவல்கள் பயன் உடையனவாய் உள்ளன. கரையார் மீன் பிடித் தொழிலிலும், கப்பல் ஓட்டுதல், கடல் சண்டை ஆகியவற்றிலும் வல்லவர்களாய் இருந்தனர். இவர்களுள் கடலோடிகள் என்ற பிரிவினர் முயற்சியாண்மை மிக்கவர்களாயும் பணம் படைத்தவர்களாகவும் இருந்தனர். இந்தியா, பர்மா ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் இவர்கள் ஈடுபட்டனர். புகையிலை, சங்கு ஆகியவற்றை கப்பல்களில் ஏற்றி அனுப்பினர். அரிசியை பர்மாவிலிருந்து கொண்டு வந்தனர். கடலோடிகள் குடும்பங்களின் உடைமையான மூன்று சைவக் கோவில்கள் வல்வெட்டித்துறையில் உள்ளன. இது யாழ்ப்பாணத்தில் கோவில் உடைமைச் சாதி அந்தஸ்தின் வெளிப்பாடாகும்.
காணி உடைமையும் இன்னொரு வகை அந்தஸ்து அடையாளம் ஆகும். கிழக்கு மாகாணத்தில் காணிகள் புதிதாக பயிர்ச் செய்கைக்கு உட்பட்ட காலத்தில் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நெல் வயல்களிலும், தென்னந் தோட்டங்களிலும் முதலீடு செய்தார்கள். மட்டக்களப்பின் கரையார் நில உரிமையாளர்களுடன் பிணைப்புகளை ஏற்படுத்த இது உதவியது. மட்டக்களப்பில் கரையார் பண பலமும் அரசியல் பலமும் உள்ள குழுவாக உருவாகிக் கொண்டிருந்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் என்னும் சைவ அறிஞர் கரையார் சாதியின் செல்வந்தர்களிடம் தம் சமய பணிகளுக்காக பொருள் உதவி பெற்றார். இருந்த போதும் கரையார் சமூகத் தலைமைக்கான எதிர்ப்பை இவர் கொண்டிருந்தார். வைத்தியலிங்கம் பிள்ளை என்ற கல்வியாளர் எழுதிய `சாதி நிர்ணய புராணம்’ இதற்கான பதிற்குறியாக அமைந்தது. கரையார் பிராமணர்களின் வழித் தோன்றல்கள் என்றார் வைத்தியலிங்கம் பிள்ளை.
பிரித்தானிய அரசின் கொள்கை
கரையார் தலைமையின் எழுச்சிக்கான ஆபத்து வேறு இடத்தில் இருந்து தான் வெளிப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் நடவடிக்கைகள் தான் அவர்களை கட்டுப்படுத்தின. 1930 களின் பிற்பகுதியில் பர்மாவின் நெல் வர்த்தகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றது. இரண்டாம் உலகயுத்தம் சில ஆண்டுகளின் பின் ஆரம்பித்தது. அப்போது பர்மாவை யப்பான் கைப்பற்றியது. பர்மாவுடனான வர்த்தகத்தின் முற்றுப் புள்ளியாக இது அமைந்தது. உலக யுத்த முடிவில் பர்மாவுடனான அரிசி வர்த்தகத்திற்கான அனுமதியை கடலோடிகள் கோரியபோது பிரிட்டிஷ் ஆட்சி அதனை நிராகரித்தது. கடலோடிகளின் கப்பல்களுக்கான இன்சுரன்ஸ் காப்பு போதியதாக இல்லை என்பது இதற்கு காரணமாகக் காட்டப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின்னால் இந்தியா இலங்கை வர்த்தகத்தில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்னர் இந்திய ரூபா, இலங்கை ரூபா இரண்டையும் ஒன்றிற் கொன்று மாற்றும் (Rupee Trade) முறைமை இருந்தது. இதை அரசாங்கம் நிறுத்தாதிருந்தால் கடலோடிகள் நிலை மோசமாகியிருக்காது.
கடலோடிகள் யாழ்ப்பாணத்தில் நிலங்களில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால் போதிய நிலம் இருக்கவில்லை. இருந்த நிலமும் வேளாளர் உடைமையாக மாறிவிட்டது. கடலோடிகளின் தொழில் மீன்பிடித்தல் அன்று. சுதந்திரத்தின் பின்னர் வல்வெட்டித்துறை ஏன் சட்ட விரோத கடத்தல் வர்த்தகத்திற்குப் பிரபல்யம் பெற்றது? என்பதற்கான பின்னணியை வில்சன் தெளிவாக்குகிறார். இன்றைய அரசியல் போக்கின் பின்னணியையும் அடுத்து விளக்குகிறார்.
திருமணம்
சாதிக் கட்டமைப்பின் இன்னோர் பிரிக்க முடியாத அம்சம் திருமணம் என்ற நிறுவனம் ஆகும். அது அகமணம் என்ற விதிக்கு அமையச் செயற்படுகிறது. யாழ்ப்பாணம் பற்றி ஆராய்ந்த மானிடவியலாளர்கள் உபயோகிக்கும் ‘சொந்தக்காரர்’ என்ற சொல்லை வில்சன் உபயோகிக்கிறார். சொந்தக்காரர் அல்லது உறவினர்களிடையே தான் திருமணம் நிகழும். நெருங்கிய உறவுடையவர்களிடையே திருமணத்திற்கான தகுதியுடைய ஆட்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் போது சோடிகளைத் தேடிக்கொள்வது கஷ்டம். அதற்காக முன்பின் தெரியாத அந்நியர்களை கல்யாணம் செய்ய முடியாது. இதனால் உறவுத் தொடர்புகளை தேடும், கண்டுபிடிக்கும் தேவை இருந்தது. “சொந்தக்காரர்” முறைமையை வட்டத்திற்குள் வட்டம் என்ற மாதிரியில் விளக்கலாம். சொந்த மச்சான் – மச்சாள் திருமணம் பெருவழக்காக இருந்தது. அடுத்த நிலையில் ஒன்றுவிட்ட சகோதரன் சகோதரி பிள்ளைகளிற்கிடையிலான திருமணபந்தம் இருந்தது. இந்த இரண்டும் சாத்தியம் இல்லாதவிடத்து சொந்தக்காரர் யார் யார் என்று வெளியே (பிற கிராமங்களிலும்) தேடுதல் ஆரம்பிக்கும். பெண்ணிற்கு கொடுப்பதற்கு போதிய சீதனம் இல்லாதவிடத்து மாற்று சம்பந்தம் நிகழும். சீதனமுறை யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடர்கிறது என்கிறார் வில்சன்.
மரபு வழிச் சமூகத்தின் அகமணமுறையின் செயல்முறையைச் சுருங்கிய வார்த்தைகளில் விளக்கிய பின்னர் சாதிக் கட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் அரசியல் போக்கைப் பாதித்த விதம் பற்றியும் தமது குறிப்பு ஒன்றைக் கூறுகிறார். அவரது கருத்தை எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பாக பின்வருமாறு கூறலாம்:
அரசியல் ஒருங்கிணைவு
‘கிராமம் நெருங்கிய உறவுப் பிணைப்புக்களைக் கொண்டது. நபர்களிற்கிடையிலான விசுவாசம் அங்கு உண்டு. அகமண உறவுகள் இன்னொரு வகைப் பிணைப்பு. சாதிக் கட்டமைப்பு கிராமத்தைப் பிளவுபடுத்தும் அம்சம் ஆகும். பிரிவும், ஒட்டும் நிறைந்த இந்த கட்டமைப்பில் அரசியல் ஒருமைப்பாடு என்பது தாண்ட முடியாத தடையாகவே இருக்கும். இருந்த போதும் புறத்தில் இருந்து எழும் காரணிகள் சில இந்தத் தடைகளையும் மீறி அரசியல் மயப்படுத்தலையும், ஒற்றுமையையும் உருவாக்கக் கூடும். சமூகப் பண்பாட்டையும் உருவாக்க கூடும். சமூகப் பண்பாட்டு நிலைகளில் பிளவுண்ட ஒரு சமூகத்தின் அரசியல் ஒருங்கிணைவு பின்வரும் காரணிகளால் தூண்டப்படும்:
- வெளியில் இருந்து வரும் ஆபத்து அல்லது பொது எதிரி.
- நவீன மயமாதல்.
- அச்சு இயந்திரமும், தமிழ் மொழி வெகுஜன ஊடகம் ஆதலும்.
- வெகுஜன ஊடகங்களின் விருத்தி.
- நவீன போக்குவரத்து.
- வர்த்தகமும் பணப் பொருளாதாரமும்.
ஒப்பீடு
மட்டக்களப்பின் சாதியமைப்பை பற்றி மக்ஜில்வ்ரே (Mcgilvray) என்ற மானிடவியலானரை ஆதாரம் காட்டி வில்சன் எழுதுகிறார். மட்டக்களப்பு யாழ்ப்பாணம் இரண்டிற்குமிடையே உள்ள சாதியமைப்பு தொடர்பாக வில்சன் குறிப்பிடும் ஒற்றுமை வேற்றுமைகளை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.
மட்டக்களப்பின் பெரும்பான்மைச் சாதி முக்குவர்கள். இவர்கள் அப்பகுதியின் உயர் சாதியினராவர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் வேளாளர்களுக்கு சமதையானவர்கள். மட்டக்களப்பின் வேளாளர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அதே சாதியினர் திருமண உறவு மூலம் ஒன்றிணைவதற்கு தடைகள் இருக்கவில்லை. ஆனால் அகமண முறை வழக்கங்கள் முக்குவர் வேளாளர் திருமண உறவுகளுக்கு இடம் தரவில்லை. அதனை விட யாழ்ப்பாணத்தவர்கள் சைவர்கள். ஆளால் முக்குவர்களில் கணிசமானவர்கள் வைஷ்ணவர்கள். சமய வேறுபாடுகளும் உறவுக்கு தடையாக இருந்தன.
வேளாளர், முக்குவர் என்ற இருசாதிகள் மட்டக்களப்பில் மேலாதிக்கம் உள்ள சாதிகள். இவை நில உடமைச் சாதிகளுமாகும். இவற்றிடையே போட்டி, பூசல் இல்லை. மட்டக்களப்பில் பிராமணர் குறைவு. அவர்கள் முக்கிய முடையவர்களும் அல்லர். பிராமணரல்லாத வீரச் சைவக் குருக்கள் என்ற சிறிய சாதியினர் உள்ளனர். வேளாளர், முக்குவர், குருக்கள் சாதிகள் அந்தஸ்தில் ஏறக்குறைய சமதையானவர்கள். இவை மூன்றும் உயர் சாதிகள்.
- அடுத்த நிலையில் உள்ள சாதிகளிடையே யாழ்ப்பாணத்தில் இருந்தது போல் ‘அடிமை’ ‘குடிமை’ என்ற தெளிவான பகுப்பு இருக்கவில்லை.
- முக்குவர் கேரளத்தில் இருந்து வந்தவர்கள். யாழ்ப்பாணத்தவர்களும் கேரளத் தொடர்பு உடையவர்கள், ஆதலால் பொதுத் தொடர்பு ஒன்று உள்ளது.
- தாய் வழிக் குடியுரிமை அமைப்பு மட்டக்களப்பின் தனித்துவமான அம்சம்.
ஆதாரம்
வில்சன்.ஏ.ஜே. இலங்கை தமிழ் தேசியவாதம்: பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி, லண்டன், 2000.
தொடரும்.