அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் - கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வு கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் - பகுதி 1
Arts
18 நிமிட வாசிப்பு

அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும் – கலாநிதி சரத் அமுனுகம அவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒரு சுருக்க அறிமுகம் – பகுதி 1

August 18, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் : கலாநிதி சரத் அமுனுகம

அரசாளும் தொழில் மரபு வழிச் சமூகத்தில் சத்திரியர்க்கு உரியது. இராச வம்சத்திற்குரிய இந்த அரசாளும் தொழிலில் புத்த துறவிகள் ஈடுபடுதல் ‘விநய’ ஒழுக்கங்களுக்கு முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும். இலங்கையின் நவீன கால அரசியல் வரலாற்றில் இவ்வாறான முரண் நிலைகள் தோன்றியதுண்டு. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் தேதி இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது. அவ்வேளை ‘மௌபிம சுறக்கீமே வியாபாரய’ (தாய்நாட்டை பாதுகாக்கும் இயக்கம்) என்னும் பௌத்தப் பிக்குகளின் அமைப்பு அந்த உடன்படிக்கையை எதிர்த்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பௌத்தப் பிக்குகளின் இந்த இயக்கத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி என்ற கிளர்ச்சிவாத அமைப்பு செயற்பட்டது. வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளோடு போர் நடத்திக் கொண்டிருந்த வேளையில் தென் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) அரசாங்கத்தின் படைகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நிகழ்ந்தன. இந்த மோதல்களில் ஜே.வி.பி.யின் ஆதரவு சக்தியாகச் செயல்பட்ட பிக்குகள் அமைப்பான தாய் நாட்டைப் பாதுகாக்கும் இயக்கத்தின் கொள்கைகள், நடைமுறைகள், அவ்வியக்கம் இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாடு என்பன குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரையை கலாநிதி சரத் அமுனுகம எழுதினார். 1989 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரையின் தலைப்பு ‘புத்தரின் புத்திரர்களும் மண்ணின் புத்திரர்களும்’ என்பதாகும் கட்டுரையின் துணைத் தலைப்பு ‘இலங்கையில் நவீன காலத்தில் சிங்கள பௌத்த துறவிகளும் இனப்பிரச்சினையும் அரசியல் மோதல்களும் தொடர்பாக அவர்களின் முரண்பட்ட கொள்கைகளும்’ (Dilemmas Of Modern Sinhala Buddhist Monks In Relation To Ethnic and Political Conflict) என்பதாகும்.

தமது ஆய்வின் நோக்கம் பற்றியும் கட்டுரைத் தலைப்பு உணர்த்தும் பொருள் பற்றியும் சரத் அமுனுகம கூறி இருப்பவை வருமாறு :

“இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பாக தீவிரவாத துறவிகள், குறிப்பாக மௌபிம சுறக்கீமே வியாபாரய என்னும் இயக்கத்தினர் என்ன கருத்தை உடையவர்களாக இருந்தார்கள்? உடன்படிக்கையின் இனக்குழு அரசியற் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு யாது? என்பதை நான் இக்கட்டுரையில் ஆராய உள்ளேன். அவ் உடன்படிக்கை பௌத்த துறவிகளின் நோக்கு நிலையை எவ்வாறு மாற்றியது, தேசிய பிரச்சினை தொடர்பாக சங்க அமைப்பின் நிலைப்பாடு யாது? அரசியலில் சங்க அமைப்பு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதால், குறிப்பாக துறவிகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் தம்மைப் பிணைத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் யாவை? இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது முதன்மைப்படுத்தப்பட்ட பௌத்த கருத்தியல் கூறுகளும், பௌத்த சமய குறியீடுகளும் (IDEOLOGY AND SYMBOLISM) எவை? என்பன இக்கட்டுரையில் ஆராயப்பட உள்ளன.  குறிப்பாக புத்தரின் புத்திரர்கள் (SONS OF THE BUDDHA) என்ற சமயம் சார்ந்த ஒழுக்க நிலைப்பாட்டிற்கும், மண்ணின் புத்திரர்கள் (SONS OF THE SOIL) என்ற தேசப்பற்று என்னும் அரசியற் கொள்கை நிலைப்பாட்டிற்கும் இடையிலான முரண்பாடும் குழப்பமும் பற்றி இவ்ஆய்வு கவனம் குவிப்பதாக உள்ளது.” (அமுனுகம பக் 246 – 247)

தமிழில் எழுதப்படும் இவ் அறிமுகக் கட்டுரையின் தலைப்பு ‘அரசாளும் தொழில் : மத ஒழுக்கமும் மண் பற்றும்’ என அமைகிறது.

Dreams of change
கலாநிதி சரத் அமுனுகமவின் இந்நூல் பன்னிரெண்டு ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாகும். இத்தொகுப்பு 2018-ம் ஆண்டு கொழும்பு விஜித யாப்பா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் ஏழாவது அத்தியாயமாக அமையும் 38 பக்கக் கட்டுரையையின் (பக் 243 – 280)  முக்கியமான கருத்துகளை சுருக்கித் தருவதாக இந்த ஆக்கம் அமைகிறது.

தாய் நாட்டை காக்கும் இயக்கத்தின் அரசியல் கொள்கைகள்

மேலே குறிப்பிட்டுள்ளவாறு  தமது கட்டுரையின் விடயப் பொருளையும் ஆய்வு நோக்கத்தையும் எடுத்துரைக்கும் கலாநிதி சரத் அமுனுகம, அடுத்து ‘மௌபிம சுறக்கீமே வியாபார’ எனும் தாய் நாட்டை பாதுகாக்கும் இயக்கத்தின் அரசியற் கொள்கைகளை விளக்கிக் கூறுகிறார். அக்கொள்கைகளைச் சுருக்கமாக பார்ப்போம்.

  1. வடக்கு கிழக்கு மாகாணங்கள் சனத்தொகை அடிப்படையில் தமிழர்களை பெரும்பான்மையினராகக் கொண்டவையாக இருக்கலாம். ஆனால் அம் மாகாணங்களைத் தமிழர்களின் தாயகம் என்று கூறுவதை ஏற்க முடியாது. தமிழர் தாயகம் என்ற கோரிக்கை பேரம் பேசுவதற்குரிய விடயம் அல்ல (Non-Negotiable).
  2. ஜனாதிபதி ஜயவர்த்தன, தாயகக் கோரிக்கை பேரம் பேசலுக்கு உரியதல்ல என்று கூறியவர். இப்போது பலம் வாய்ந்த மத்தியும், மரபு வழித் தாயகமும் (Strong Centre Vs Traditional Homeland) என்று சமரசம் செய்து விட்டுக் கொடுத்துவிட்டார். இதனை ஏற்கவே முடியாது.
  3. பௌத்த சமயச் சிந்தனை மரபு, மகாவம்சம் போன்ற இலக்கியங்கள், சிங்கள இனத்தினைத் தோற்றுவித்த விஜயன் கதை என்பன யாவும் உணர்த்தும் உண்மை, இலங்கை ‘தம்ம தீபகம்’ (The Island Of Faith) என்பதாகும். புத்தர் இறந்த தினத்தன்று அவர் எதிர்வு கூறியதற்கு அமைய, பௌத்தத்தின் காவல் தீவான இலங்கையில் விஜயன் கால் பதித்தான்.
  4. புத்தபெருமான் தன் திருப்பாதங்களைப் பதித்த இடமான நாக தீபம் (நயினாதீவு) இலங்கையின் தெற்கு பகுதியில் மகியங்கனை, களனி போன்றவற்றிற்கு சமமான முக்கியத்துவம் உடையது. நயினாதீவு பௌத்தர்களுடைய யாத்திரைத் தலம். திருகோணமலையின் கோகன்ன ஆலயமும் பௌத்தர்களின் வழிபாட்டுக்குரிய யாத்திரைத் தலமாகும். இத்தலங்கள் பௌத்தர்களின் உணர்வு நிலையில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. இப்பௌத்த தலங்கள் பற்றிய “வந்தனகதா” என்று அழைக்கப்படும் துதிப்பாடல்கள் பௌத்தர்களுக்கு இத்தலங்களை நினைவூட்டிய வண்ணம் உள்ளன.

பௌத்தப்பிக்குகளின் தீவிரவாத பிரிவினரின் அரசியல் நிலைப்பாட்டை மேற்குறித்தவாறாக எடுத்துரைக்கும் சரத் அமுனுகம அவர்கள், இவ்வாறான அரசியற் கருத்துக்கள் பிக்குகள் மனதில் வேரூன்றிய நவீன கால அரசியல் வரலாற்று பின்னணியையும் எடுத்துக் கூறுகிறார்.

புனிதத் தலங்கள் : பௌத்தர்களின் முதுசொம்

india stamp (1)

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவரான அநகாரிக தர்மபாலவின் சமயம் சார்ந்த நடவடிக்கைகள், 20 ஆம் நூற்றாண்டில், புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் சிந்தனையை பௌத்தர்கள் மனதில் ஆழப்பதித்தது. தர்மபால, இந்தியாவில் அழிபாடுகளாக இருந்த புத்தகயா போன்ற பௌத்தத் தலங்களை மீட்டெடுத்து அவற்றை புனரமைக்கும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இலங்கையில் அவரது சீடரான வலிசிங்க ஹரிச்சந்திர என்பவர் இலங்கையின் அனுராதபுரம் என்னும் புனித நகரில் அழிபாடடைந்த நிலையில் காணப்பட்ட ‘அட்டமஸ்தான’ (எட்டு புனிதத் தலங்கள்) எனும் புத்த கோவில்களைப் புனரமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். அக்காலத்தில் தென்னிலங்கையில் தெற்கு, தென்மேற்கு மாகாணங்களில் செறிந்து வாழ்ந்த பௌத்தர்கள் தமது பௌத்த புனித கோவில்களில் பெரும்பாலானவை வடமத்திய மாகாணத்திலும் (அனுராதபுரம், பொலன்நறுவை) வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய பகுதிகளிலும் இருப்பதைக் கண்டு கொண்டனர்.              

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட பௌத்தத் தலங்களின் புனருத்தாரணப் பணி, அரசு ஆதரவின்றி பௌத்த சமயத்தவர்களின் நிதிப் பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டது. உதாரணமாக ருவன் வெலிசாய (அனுராதபுரம் பௌத்த ஆலயம்) இவ்வாறு புனரமைக்கப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் அரசு, நேரடியாகவும் அரச உயர் அதிகாரிகள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டியும் புனருத்தாரண வேலைகளை நிறைவேற்றியதாக சரத் அமுனுகம குறிப்பிடுகிறார். சிவில் சேவை உத்தியோகத்தர்களான மூவர் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் இப்பகுதிகளில் ஆற்றிய சேவைகளை அவர் குறிப்பிட்டிருப்பது முக்கியம் வாய்ந்ததாகக் கருதலாம்.

  • நிசங்க விஜயரத்தின – இவர் அனுராதபுரம் புனிதநகர் திட்டத்தை நிறுவினார்.
  • றிட்ஜ்வே திலகரத்தின – பொலன்நறுவை சோமாவதி சைத்தியத்தைப் புனரமைத்தார்.
  • சோமபால குணதீர – திருகோணமலை மாவட்டத்தின் பௌத்த கோவில்களைப் புனரமைத்தார்.

இவ்வதிகாரிகள் அரசாங்கப் பிரதிநிதிகளாக மக்களைத் திரட்டி, புனிதப் பணியைச் செய்வித்தமை பௌத்தர்களின் உணர்வு நிலையில் மிக முக்கியமான பதிவாக அமைந்தது.

“இவ்வாறாக பெரும்பான்மையான பௌத்த சமயிகளுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் தமது மூதாதையர்கள் விட்டுச் சென்ற தந்தை வழிச் சொத்து (Patrimony) அல்லது முதுசொம் என்ற எண்ணமும், அந்த நிலப் பகுதியில் இருந்து வம்சக் கதைகளில் கூறியிருப்பதைப் போன்று தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்டோம் என்ற கருத்தும் மனதில் பதிந்திருந்தன” (பக் 247)

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

மேற்குறித்த பின்னணியிலேயே, இந்திய – இலங்கை உடன்படிக்கையின் படி, ஜே.ஆர். ஜயவர்த்தன தமிழர்களின் தாயகக் கோரிக்கையில் இளகிக் கொடுத்தமை ஒரு துரோகம் எனக் கருதப்பட்டது. ஜே.ஆர் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலிய இடதுசாரி கட்சிகளும் மத்தியின் அதிகாரத்தைக் குறைத்து வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரித்து வாக்களிக்கத் தயாராயின. இவை கடும் விமர்சனத்துக்குள்ளானது. மார்க்சிய இடதுசாரிகள் அல்லாத கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தினேஷ் குணவர்த்தனவின் மகாஜன எக்சத் பெரமுன (MEP) என்ற இரண்டும் தேசியவாதக் கட்சிகள் ஆயினும், அவை கட்சிகளின் தேர்தல் கூட்டு என்ற அடிப்படையில் சிந்திப்பனவாக செயற்பட்டன. தாயகத்தை காப்பாற்றும் இயக்கத்தின் பிக்குகள் இடது, வலது என்ற கட்சிகள் சாராத ஒரு அணியை உருவாக்கினால் துறவிகள் அந்த அணியின் தலைமைத்துவத்தின் மீது அரசியல் செல்வாக்கை செலுத்தக் கூடியவர்களாக இருக்க முடியும் எனக் கருதலாயினர் என்று சரத் அமுனுகம கூறுகிறார். மௌபிம சுறக்கீமே வியாபாரய என்ற அரச எதிர்ப்பு அணியில் மூன்று அங்கங்கள் உள்ளடங்கி இருந்தன. இம் மூன்று அங்கங்களினால் அதற்கு பரவலான ஆதரவு உருவாகியது.

  • அரசியல் கட்சிகள் – சிறிலங்கா சுதந்திர கட்சி, மகாஜன எக்சத் பெரமுன முதலியன
  • பௌத்த சங்க அமைப்புகள்
  • பௌத்த சமய அமைப்புகள்

இந்த மூன்று அங்கங்களின் ஈர்ப்பால் ஒருங்கிணைந்த கட்சிகளதும், அமைப்புக்களதும் நீண்ட பட்டியல் ஒன்றை சரத் அமுனுகம தந்துள்ளார். (அமுனுகம பக். 249-250) இதனைப் பின்னிணைப்பாகத் தந்துள்ளோம். இந்த நிறுவனங்களது ஆதரவை விட சட்டவாளர்கள், சிவில் சேவை உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், வர்த்தகர்கள் என்ற சிங்கள – பௌத்த தொழிலர் வகுப்பினர்  (Professionals) ஆதரவையும் உதவிகளையும் மௌபிம சுறக்கீமே வியாபாரய பெற்றுக் கொண்டது. அஸ்கிரிய பீடாதிபதி வண. பலிப்பனே சந்தானந்த மகா நாயக்கத் தேரரின் ஆதரவையும் மௌபிம சுறக்கீமே வியாபாரயவின் பிக்குகள் பெற்றுக் கொண்டனர் என்றும் அமுனுகம கூறுகிறார். இவ்வாறு ஜே.வி.பி இன் ஓர் அங்கமாக அமைந்த இவ்வமைப்பு, குறுகிய காலத்திற்குள் தன்னை நன்கு ஒழுங்கமைப்புச் செய்து கொண்டதை காண முடிகிறது. அது தனது கொள்கைகளை ஒரு பிரகடனமாக வெளியிட்டது. அப் பிரகடனத்தில் நாட்டின் ‘ஐக்கியம்’, ‘இறைமை’ என்ற இரண்டு விடயங்கள் அழுத்தம் பெற்றன. இந்தியப் பேரரசின் காலனியாக இலங்கை மாறுவதை தடுத்தல் என்பது அதன் பொது வேலைத் திட்டத்தில் ஒன்றாகக் குறிப்பிட்டது. நாட்டின் ஐக்கியத்தை,

  • சுதந்திரம்
  • நாட்டின் புவிப்பிரதேச ஒருமைப்பாடு
  • மக்களின் இறைமை
  • ஜனநாயகம்
  • விடுதலை
  • மனித உரிமைகள்

என்பவற்றின் அடிப்படையில் உருவாக்குதல் நோக்கமென்றும் குறிப்பிட்டது. மௌபிம சுறக்கீமே வியாபாரயவின் இச்சொற்களுக்கும் நடைமுறை செயற்பாடுகளுக்கும் இடையிலான தர்மசங்கட நிலை ஆராய்வதற்குரிய விடயம் என சரத் அமுனுகம குறிப்பிடுகிறார்.

இந்தியா பற்றிய மனப்பிம்பம்

சிங்கள பௌத்த கருத்தியலில் இந்திய எதிர்ப்புணர்வு ஊறிச் செறிந்திருந்தது உண்மையே. ஆயினும் இந்தியா பற்றிய நல் அபிப்பிராயமும் இக்கருத்தியலில் உள்ளடங்கி இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவின் உத்தம புதல்வர் கௌதம புத்தர்; அவரின் வழியைப் பின்பற்றுபவர் நாம் என்பது சிங்கள பௌத்த சிந்தனையின் ஒரு முக்கியக் கூறு. ‘ஆரிய வர்த்த’ எனப்படும் இந்தியா ஆரியரின் பூமி. ஆரியருடன் இரத்த உறவு உடையவர்கள் நாம் என்பதும் இச்சிந்தனையின் ஒரு முக்கியக் கூறு. இந்த இரத்த உறவில் இருந்து திராவிடத் தமிழர்கள் ‘பிறர்’ (the other) என விலக்கப்பட்டனர் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும். இதைவிட பௌத்தம் என்ற பெரும் கொடையை மகிந்த தேரர் இலங்கைக்குக் கொண்டுவந்து தந்தார் என்பதும் மறந்துவிடக்கூடிய ஒன்றன்று. பௌத்தர்களின் ‘ஜெருசலேம்’ எனக் கருதக்கூடிய புத்தகயாவிற்கு யாத்திரை செய்தல் பௌத்தர்களுக்கு ஒரு புனிதக் கடமையாகும். இந்தியாவின் பௌத்த புனிதத் தலங்களை இந்துக்களிடம் இருந்து மீட்டெடுத்துப் புனரமைக்கும் பெரும் பணியை உயர் இலட்சியங்களாகக் கொண்டு அநகாரிக தர்மபால செயற்பட்டார். அவர் இலங்கையின் இளம் பிக்குகள் மனதில் அந்த இலட்சியப் பணியில் தம்மை ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். அக்காலத்தில் இளம் பிக்குகள் பலர் வங்காளத்திற்குச் சென்று பயிற்சி பெற்றதுமல்லாமல் அங்கு வாழ்ந்து, வங்கத்தின் புரட்சிகர இந்திய விடுதலை இயக்கத்திலும் தம்மை ஈடுபடுத்தினர். களனி வித்தியாலங்காரப் பிரிவு வங்காளத்துடன் உறவுப் பிணைப்பை வளர்த்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலேயே விரிசல் அடைந்து வரும் இந்திய – இலங்கை உறவுகளைப் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சரத் அமுனுகம ‘இந்தியாவின் வகிபாகம்’ குறித்து விரிவாக எடுத்துச் சொல்கிறார். விரிவஞ்சி அவற்றை முழுமையாக எடுத்துரைப்பது தவிர்க்கப்படுகிறது.

அரசியற் செயற்பாட்டாளர்களாகத் துறவிகள்

பௌத்த துறவிகளின் அமைப்பான ‘சங்க’ வை சமூகவியலாளர் மக்ஸ் வெபர் ‘உலகைத் துறந்தோர்களின் சமுதாயம்’ (COMMUNITY OF RENOUNCERS) என வரைவிலக்கணம் செய்தார். ஆயினும் பௌத்த சமயத்தின் தொடக்க காலம் முதல், துறவிகளுக்கு ஒரு சமூக வகிபாகமும் உலகியல் தொடர்பும் இருந்து வந்தது என்பதை மறுப்பதற்கில்லை. பௌத்த சமய மரபில் ‘சங்க’ வின் வகிபாகம் குறித்த இரு மரபுகள் இருந்து வந்தன என சரத் அமுனுகம எடுத்துக்காட்டுகிறார்.

  1. மறைநூல் பண்பாடு வழி வரும் மரபு: இதனை “CANONICAL CULTURE” என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
  2. சமூக விடயங்களில் தலையிடும் பண்பாடு: இதனை “SOCIAL INTERVENTIONIST CULTURE” என்னும் ஆங்கிலத் தொடர் விளக்குகின்றது.

இவ்விரு மரபுகளுக்கும் பௌத்த சமயிகளிடம் ஏற்புடைமை இருந்து வந்துள்ளது. இவை இரண்டும் தனித்துவமுடைய மரபுகள் ஆயினும் இரண்டிற்கும் இடையே தொடர்பும் நெருக்கமும் இருந்து வந்தன. முதல் வகைப் பண்பாடு, வனவாசிகளான துறவிகளுக்குரியது. தியானத்தில் தமது முழுக் கவனத்தையும் குவித்தபடி வாழ்ந்தவர்களான வனவாசிகளான துறவிகள், உலகியல் விடயங்களில் தம்மை ஈடுபடுத்த  விரும்பாதவர்களாக இருந்தனர்.

‘வம்ச கதா’ எனப்படும் மகாவம்சம் போன்ற நூல்களிலும் பிற பௌத்த சமயப் பனுவல்களிலும் கூறப்பட்ட சமூக விடயங்களில் தலையிடும் பண்பாடு, இருபதாம் நூற்றாண்டில் முதன்மை இடத்தை பெற்றது. 1946 ஆம் ஆண்டின் வித்யாலங்கார பிரகடனம், சமூக விடயங்களில் பிக்குகள் தலையிடுதல் பண்பாட்டின் உச்சபட்ச அங்கீகாரமாக அமைந்தது. வித்யாலங்காரப் பிரகடனம் பின்வருமாறு கூறியது.

“இன்று பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகள் புத்தர் வாழ்ந்த காலத்தை விட வேறுபட்டனவாக உள்ளன. ஆகையால் இன்று பிக்குகளின் வாழ்க்கை புத்தர் காலத்து பிக்குகளின் வாழ்க்கையை விட வேறுபட்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

மேற்படி மேற்கோளை எடுத்துக்காட்டும் சரத் அமுனுகம, பிக்குகள் அரசியல், பொருளாதாரம், சமூக விடயங்களில் தலையிடுவதை வித்யாலங்கார பிரகடனம் ஆதரிப்பதை குறிப்பிடுகிறார். பிக்குகள் சுய விசாரணையிலும் தாம் வாழும் சமூகத்தில் தமது வகிபாகம் யாது என்பது பற்றிச் சிந்திப்பதிலும் ஈடுபட வேண்டும் என வேண்டப்பட்டனர். பிக்குகளுக்கு 1940 களில் இரு மாற்று வழிகள் இருந்தன.

  1. கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
  2. அரசியலில் ஈடுபடுதல்

அரசியலில் ஈடுபடுவதை தமது வழியாகத் தேர்ந்து கொண்ட வித்யாலங்காரப் பிக்குகள், சிங்கள பௌத்த கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். 1956 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவிய காரணிகளில் பிக்குகளிடமிருந்து கிடைத்த ஆதரவு முக்கியமானதாகும். 1956 இன் பின்னர், சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று தமது அரசியல் செல்வாக்கைப் பலப்படுத்த முயன்ற அனைத்து கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சார மேடைகளில் பிக்குகளுக்கு முதன்மை இடத்தை வழங்கினர். இவ்வாறாக இலங்கையின் அரசியலில் பிக்குகளின் பங்கேற்பு அதிகரித்தது.                

JR

இந்திரா காந்தியின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான பார்த்தசாரதி, இலங்கைக்கு வந்தபோது, ஜே.ஆர் ஜயவர்த்தன அவரைப் புத்த பிக்குகளுடன் இனப் பிரச்சினைத் தீர்வு பற்றி கலந்து பேசுமாறு கூறியதோடு தமது ஆலோசகர்களான பிக்குகளை “THEY ARE MY PARTHASARATHIS” என்று கூறினாராம். இத் துணுக்குச் செய்தியை எடுத்துக் கூறும் சரத் அமுனுகம, ஜயவர்த்தன அவர்கள், பிக்குகள் இனப் பிரச்சனையில் கொண்டிருக்கும் வகிபாகத்திற்கு அரச அங்கீகாரத்தையும் நியாயப்பாட்டையும் வழங்கியதைக் குறிப்பிடுகின்றார். 1980 களில் இரண்டாம் நிலைக் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் “முதல் தெரிவு எம் தாய் நாடு, அடுத்துதான் பாடசாலை” என்று கூறினர். ‘பிரிவேனா’க்களில் கல்வி பயின்று கொண்டிருந்த இளம் புத்த பிக்குகள் “முதல் தெரிவு எம் தாய் நாடு, அடுத்துதான் பிரிவேனா” என்றும் கூறத் தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் துறவிகளில் ஒரு பிரிவினர், ‘நிர்வாணம்’ என்ற இலட்சியத்தை, அடுத்த பிறவிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, அரசியலில் இறங்குவதற்கு முன்வந்தனர். சரத் அமுனுகம அவர்களின் கட்டுரைத் தலைப்பான ‘புத்தரின் புத்திரர்’களும் ‘மண்ணின் புத்திரர்’களும், சங்க அமைப்பு எதிர்நோக்கிய இருதலைவாத பொறிநிலையைத் (Dilemma) தெளிவாக்குகிறது.                                                                                                           

பின்னிணைப்பு 1 : சரத் அமுனுகம நூல் பக். 249 – 250 களில் தரப்பட்ட பட்டியல்

அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்

  1. சிறிலங்கா சுதந்திரக் கட்சி – சிறிமாவோ பண்டாரநாயக்க, லக்ஸ்மன் ஜயக்கொடி.
  2. மகாஜன எக்ஸத் பெரமுன – தினேஸ் குணவர்த்தன.
  3. சிங்கள பலமண்டலய (S.B.M.) – நாத் அமரக்கோன்.
  4. சிங்கள ஜனதா பெரமுன.
  5. சிறிலங்கா தேசப் பிறேமி பெரமுன – ஜே.வி.பி. சார்புடையது.

பௌத்த சங்க அமைப்புகள்

  1. தேசப் பிறேமி தருண பிக்கு சங்விதானய – ஜே.வி.பி. சார்புடையது.
  2. மானவ ஹிதவதி பிக்கு சங்விதானய – ஜே.வி.பி சார்புடையது.
  3. சமஸ்த லங்கா பிரகதிசீலி பிக்சு பெரமுன – எம். ஈ. பி. சார்புடையது.

பௌத்த சமய அமைப்புகள்

  1. லோக சமா மகா சம்மேளனய – எஸ்.எல்.எவ்.பி. சார்புடையது.
  2. சிறிலங்கா எக்ஸத் பௌத்த சம்மேளனய.
  3. சிங்கள சங்வர்த்தன சங்விதானய (ஒரு வர்த்தக அமைப்பு) – சேனநாயக்காவின் யு. என். பி சார்புடையது.
  4. எக்ஸத் திரிசிங்கள விமுக்தி சங்விதானய.
  5. டட்லி சேனநாயக்கா குணசுமறன சங்கமய – சேனநாயக்காவின் யு. என். பி சார்புடையது.
  6. சிங்கள தருண பெரமுன – எஸ். எல். எவ். பி சார்புடையது.
  7. சிங்கள ஜனதாவரு கம்கறு சங்கமய.
  8. பௌத்த சபா சம்மேளனய.
  9. களனிபுர பௌத்த பலமண்டலய.
  10. அநகாரிக தர்மபால தருண சமிதிய.
  11. சிறிலங்கா பௌத்த சமிதி நியோஜித சம்மேளனய.
  12. பௌத்த தியோசொபிக்கல் சொசைற்றி – (காமினி இரியகொல்ல)
  13. சிங்கள காந்தா பெரமுன – (திருமதி. இந்திராணி இரியகொல்ல)

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7605 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)