ஜே.வி.பி விதைத்த விஷக் கருத்துக்கள்
Arts
9 நிமிட வாசிப்பு

ஜே.வி.பி விதைத்த விஷக் கருத்துக்கள்

September 4, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இவர்களுடன் கூட்டு அரசாங்கத்தில் ஈடுபட்ட பிரதான இடதுசாரிக் கட்சிகள்; இவைகள் அனைத்துமே இனவாதத்தைக் கக்கித்தான் இந்த நாட்டை ஆட்சி செய்தன. இவற்றுக்கு மேலதிகமாக அதிதீவிர இடதுசாரித்தத்துவம் என்று கூறிக்கொண்ட, மார்க்சிய-லெனினிய-மாவோவிய-சேகுவேராக் கொள்கைகளை துல்லியமாகக் கடைப்பிடிக்கிறோம் என்று கூவிக்கொண்டு செங்கொடியை தூக்கிப்பிடித்துக் கொண்டுவந்த ஜே. வி. பி என்றழைக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, இந்திய வம்சாவழித் தமிழர்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றுகூறி அவர்களை முற்றிலும் இந்தியாவுக்கே துரத்தி அடித்துவிட வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பியது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி இந்நாட்டு அப்பாவி இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஏப்ரல் இளைஞர் கிளர்ச்சி என்ற ஒன்றை ஏற்படுத்தி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்ற எத்தனித்த போதும் அது படுதோல்வியில் முடிந்ததுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பலி கொடுக்கவும் வேண்டியேற்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1988, 1989 ஆண்டுகளில் அதே விதமான ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை முன்னெடுத்தபோதும் அதனையும்கூட அப்போதிருந்த பிரேமதாசவை ஜனாதிபதியாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியது.

JVP rally (2)

இந்திய வம்சாவழித் தமிழ் தொழிலாளர்கள் தொடர்பாக என்னவிதமான கொள்கையை இந்த ஜே.வி.பி இனர் கடைப்பிடித்தார்கள் என்று சற்றே உன்னித்துப் பார்க்கவேண்டியது இந்த கட்டுரைத் தொடருக்கு மிக அவசியமானதாகும். ஏனென்றால் இவர்கள் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் தொடர்பாக அன்றைய இளைஞர் மத்தியில் விதைத்த இனவாதமும் துவேஷமும் கொண்ட கருத்துக்கள் இன்றும்கூட இந்த மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு அரசியல் தீர்வொன்றை எட்டமுடியாமல் இருப்பதற்கும் இது இப்போதும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

இந்தக் காரணியை மேலும் உக்கிரம் ஆக்குவதற்கு தூண்டுகோலாக இருந்த வரலாற்றில் நிகழ்ந்துள்ள சில நிகழ்வுகளையும் நாம் சேர்த்துப் பார்க்கவேண்டும். இவர்கள் தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொண்டாலும் அவர்களது ஒட்டுமொத்தமான கொள்கை, சிங்கள -பௌத்த அதிதீவிர தேசியவாதமாகவே இருந்தது. அவர்கள் இலங்கையில் வசித்து வரும் இந்திய வம்சாவழித் தொழிலாளர்களைக் காரணமாக வைத்து இந்தியா தனது ஆக்கிரமிப்பை இலங்கையில் விஸ்தரிக்கின்றது (Indian Expansionism) என்று பெரும் குற்றச்சாட்டை இந்தியா மீது சுமத்தியதோடு இலங்கையில் வசிக்கின்ற சகல இந்திய வம்சாவழி மக்களையும் இந்தியாவுக்கே துரத்திவிட வேண்டுமென்பதை தமது கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். இந்தியர்களை இலங்கையில் விட்டுவைப்பது இலங்கையின் சுதந்திரத்துக்கு எப்போதும் தடையாக இருந்துகொண்டே இருக்கும் என்று அவர்கள் கருதினர். அவர்கள் தமது கொள்கைப் பிரகடனத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தனர்: 

“பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் தொடர்ந்தும் இந்திய ஏகாதிபத்தியத்துக்கே சேவை ஆற்றுகின்றனர். அவர்கள் இலங்கையின் மிகவும் செழிப்பான பிரதேசமான மத்திய மலைநாட்டின் உயர் மலைப்பிரதேசங்களில் வசிக்க இடமளிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவசமாக வசிப்பிடங்கள், கல்வி கற்றல் வசதிகள், சுகாதார வசதிகள் என்பவையெல்லாம் போதுமான அளவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய வாழ்க்கைத்தரம் சிங்களப் பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கை செய்து ஓலைக்குடிசைகளில் வாழ்கின்ற சாதாரண சிங்கள மக்களைவிட மிக உயர்ந்த தரத்தில் உள்ளது. அவர்கள் இப்போதுகூட தமது தாய் நாடான இந்தியாவுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு கலை, கலாசார, சமூக உறவுகளைப் பேணி வருவதுடன் இந்தியாவுக்கே விசுவாசமானவர்களாகவும் இருக்கின்றனர். “

1960 களை அடுத்து வந்த ஆண்டுகளில்  ஜே. வி . பி, தமது கட்சிக்கான இளைஞர் படையைக் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜே. வி. பி இன் தலைவர் ரோகண விஜயவீர தனது தெரிந்தெடுத்த அரசியல் போராட்டக்காரர்களுக்கு காடுகளில் வைத்து அரசியல்பாடம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது ஐந்து பாடங்கள் (Five Lessons) என்ற விரிவுரைவரிசை அந்தக்கட்சியின் அரசியல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்தகைய விரிவுரை ஒன்றின்போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டார் என்று ஆய்வாளர் கலாநிதி ஜயதேவ உயங்கொட தனது குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்:

rohana (1)

“தேயிலைப் பயிர்ச் செய்கையானது நெற் பயிர்களைக் கொன்று குவித்து அழித்துவிட்டு அதன் இடத்தை தான் பிடித்துக்கொண்டது. அதே போல் றப்பர் பயிர்ச்செய்கையானது குரக்கன் பயிர்ச்செய்கையை கொன்று குவித்து அழித்துவிட்டு, அதன் இடத்தை தான் பிடித்துக் கொண்டது. அதன் காரணமாக தேயிலைத் தொழில்துறையை முற்றாக அழித்துவிட்டு அது இருந்த இடத்தில் சுயதேவைப்பூர்த்தி பொருளாதாரமுறை ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.”

இவ்விதம் ரோகண விஜயவீர குறிப்பிட்டபோது அது தொடர்பான கேள்வி நேரத்தில் ஒரு சிலர் “தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்கூட பாட்டாளி வர்க்கத்தினர் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்கும் குழுவினரே. அப்படி இருக்கும்போதுஅவர்களை எப்படி விரட்டி அடிப்பது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குபதிலளித்த விஜயவீர “அவர்கள் வேண்டுமென்றால் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நமது நாட்டைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர் அல்லர். அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள எம். ஜி. ஆர் (எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் பிரபல நடிகரும், பின்னர்முதலமைச்சராக பதவி வகித்தவரும் ஆவார்.) போன்ற தலைவர்களையே தமது தலைவர்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் உண்மையான பாட்டாளி வர்க்கத்தினராக இருந்தால் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கேயுள்ள முதலாளித்துவத்துக்கு எதிராக அவர்கள் போராட வேண்டும்” என்று கூறி அவ்விதம் கேள்வி கேட்டவர்களின் வாயை அடக்கிவிட்டார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் சார்பு பத்திரிகையான ஜனதா சங்கமய, ”அவர்கள் (மலையக மக்கள்) இந்தநாட்டில் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி இந்த நாட்டில் சோஷலிச அரசாங்கம் ஒன்றை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அப்படியே இந்த நாட்டின் அரசாங்கத்தை கைப்பற்றினால் கூட அவர்கள் அதனை இந்தியாவிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகிறது. அல்லது அவர்கள் இந்த நாட்டை எம்.ஜி.ஆர் இடமோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திடமோ ஒப்படைத்துவிடுவார்கள். அதன்பின் இந்த நாடு எம்.ஜி.ஆர் இன் ஆட்சியின்கீழ் வந்துவிடும். ஆதலால் அவர்களை இந்த நாட்டில் வைத்திருப்பதா, இல்லையா? என்பது பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு நாம் வரவேண்டும். அவர்கள் இந்த நாட்டில் சட்டபூர்வமற்ற முறையில் நுழைந்து பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்த நாட்டை ஆக்கிரமித்தவர்கள்.” என்று குறிப்பிடுகிறது.

plantation people

ஜே.வி.பி கட்சியினர் இக்காலப் பகுதியில் பெருந்தொகையான இளைஞர்கள் மத்தியில் சிங்கள-பௌத்த அதிதீவிர தேசியவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் என்பன தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் அவை இலங்கை வாழ் இந்தியவம்சாவழித் தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு இலங்கை நாட்டையும் ஆக்கிரமிக்கக்கூடும் என்று எச்சரிக்கை செய்தனர். அவர்கள் இந்த நாட்டின் சிங்கள இளைஞர்களுக்கு கற்பித்த பாடங்களில் இரண்டாவது பாடம், இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற தலைப்பின் கீழ் போதிக்கப்பட்டது. அந்தக் கொள்கை, பின்னர் அந்தக் கட்சியால் கைவிடப்பட்டபோதும் அவர்கள் விதைத்துவிட்ட அந்த நச்சுக் கருத்துக்கள் இப்போதும்கூட இந்த மக்களின் வாழ்க்கையில் எந்தவித உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுவிடாதபடி முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

14027 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்