பயன்பல கொடுக்கும் பப்பாளி மரம்
Arts
11 நிமிட வாசிப்பு

பயன்பல கொடுக்கும் பப்பாளி மரம்

September 14, 2023 | Ezhuna

நாள்தோறும் நாம் உணவாகக் கொள்ளும் தானியங்கள், காய்கறிகள், சுவையூட்டிகள், பாலுணவுகள் என்பவற்றின் குணங்கள் மற்றும் பயன்பாடு பற்றிக் கூறும் நூல் பதார்த்தகுணம் என்று அறியப்படும். அகத்தியர், தேரையர் முதலானோரின் பெயர்களில் பதார்த்தகுணம், குணபாடம் போன்ற தலைப்புகளில் பலநூல்கள் கிடைக்கின்றன.  இவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற நூல்களுள் ஒன்றே இருபாலைச்செட்டியார் என்று அறியப்படும் ஒரு மருத்துவரால் ஆக்கப்பெற்ற பதார்த்தசூடாமணியாகும். இற்றைக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் இலங்கை வருகைக்குப் பின்னர் ஆக்கம் பெற்ற இந் நூலில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு உணவு வகைகள் தொடர்பில் கூறப்பட்டுள்ளவற்றை ‘பதார்த்த சூடாமணி’ என்ற இத் தொடர் ஆராய்கின்றது.

உலகில் அதிகளவில் பயிரிடப்படும் வெப்பமண்டலப் பயிர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது பப்பாளி ஆகும். வெப்பமண்டல அமெரிக்காவில் அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அதன் தோற்றம் மற்றும் வளர்ப்பின் மையமாக மத்திய அமெரிக்கா அல்லது மெக்சிகோ இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஐரோப்பியரால் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமாவில் பப்பாளி கண்டறியப்பட்டது. மத்திய அமெரிக்காவிற்கு அப்பால் பப்பாளி பரவியதற்கு ஸ்பெயின் நாட்டவர்கள் தான் காரணம். பொது ஆண்டு 1535 இல் ஸ்பானியர்கள் பிலிப்பைன்ஸ்சிற்கு பப்பாளி விதைகளைக் கொண்டு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்பானியர்களும் போர்த்துக்கீசியர்களும் மலாய் தீபகற்பம் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில் பப்பாளிப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தார்கள்.

papaya tree

பூக்கள் மற்றும் பழத்தின் அளவு ஆகியவற்றில் உள்ள இரண்டு முக்கியமான வேறுபாடுகள், காட்டு மற்றும் வளர்ப்பு பப்பாளி இனங்களை வேறுபடுத்துகின்றன. பப்பாளிகளில் ஆண், பெண், இருபால் என்று மூன்று வகையான மரங்கள் உள்ளன. இவற்றுள் பெண் பூக்கள் உள்ள மரங்களும் , இருபால் பூக்கள் உள்ளவையும் மட்டுமே பழங்களைத் தரக்கூடியன. பப்பாளியில் மகரந்தச் சேர்க்கை, அந்துப்பூச்சிகளால் செய்யப்படுகிறது. பறவைகள், வெளவால்கள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் சிறிய பாலூட்டிகளால் விதைபரவல் மேற்கொள்ளப்படுகிறது.

விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட், நியாசின், தயாமின், ரைபோஃப்ளேவின், இரும்பு, கல்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களுள் பப்பாளி முன்னிலையில் உள்ளது. மேலும், பப்பாளியின் காய், பழம், தண்டு, இலை மற்றும் வேர் என்பன பரந்த அளவில் மருத்துவத்திலும் பாப்பைன் (papain) என்னும் நொதிய உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பப்பாளித் தண்டு மற்றும் காய்களில் பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் எனப்படும் புரதத்தை ஜீரணிக்கும் நொதியங்கள் உள்ளன. காய் மற்றும் அதன் பாலில் இருந்து புரதப்பகுப்பு நொதியங்கள் வணிகப் பயன்பாட்டிற்காகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. பாப்பைன் நொதியம் வணிகரீதியாக புரதச்சமிபாட்டுக்கும், குறிப்பாக இறைச்சியை மென்மையாக்கவும், பியர் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

papaya fruit

இறைச்சியை மென்மையாக்கும்பொருட்டு பப்பாளிக்காயுடன் இறைச்சியைத் தேய்ப்பது அல்லது சமைக்கும் போது இறைச்சியுடன் சேர்த்துக்கொள்வது வழக்கம். சில சமயங்களில், ஓர் இரவு முழுவதும் இறைச்சியை பப்பாளி இலைகளில் மூடி வைத்துவிட்டு மறுநாள் சமைப்பார்கள். இறைச்சிக் கூடம் (slaughter house) வைத்திருப்பவர்கள் இறைச்சியை வெட்டுவதற்கு முன், கால்நடைகளுக்கு வணிகரீதியான பாப்பைனை ஊசி மூலம் செலுத்துகின்றனர். இறைச்சியை மென்மையாக்க இது உதவுகின்றது. இது தவிர, பாப்பைன் பல்வேறு தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுபவர்கள், மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் ’சூயிங் கம்’ உற்பத்தியாளர்கள் இவர்களுள் அடங்குவர். ஏழை நாடுகளில் வாழும் மக்கள் சோப்புக்கு மாற்றாக பப்பாளி இலைகளைப் பயன்படுத்துகின்றனர்.

பப்பாளிப் பழம் நீரிழிவுப் பிரச்சினை உள்ளவர்கள் உட்பட எல்லோரும் சாப்பிடக் கூடிய பழங்களுள் ஒன்று. பப்பாளி சிறுநீரகச் செயற்பாடு குறைவாக உள்ளவர்களுக்கும் நலம் தரக்கூடிய உணவாகும்.

கனிந்த பப்பாளி பொதுவாக இனிப்புப் பழமாக அல்லது லெமன் சாற்றுடன் குளிர்ச்சியாக உண்ணப்படுகிறது. இருப்பினும், தென்கிழக்கு ஆசியாவின் உள்ளூர்க் கடைகள் மற்றும் சந்தைகளில் படிகப்படுத்தப்பட்ட பப்பாளித் துண்டுகள் அல்லது வெயிலில் உலர்த்தப்பட்ட கீற்றுகள் விற்கப்படுகின்றன. ஓரளவு பழுத்த பப்பாளியை சர்க்கரை மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து பிசைந்து பப்பாளி ஜாம் செய்யலாம். மற்ற உணவுகளில் பப்பாளி சாறு, ப்யூரி, தயிர் மற்றும் குழந்தை உணவு ஆகியவை அடங்கும்.

தென் கிழக்கு ஆசியநாடுகளில் காய்கறிகளுள் ஒன்றாகப் பப்பாளிக்காய் பயன்படுகிறது. முதிர்ச்சியடையாத பழங்கள் வேக வைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன அல்லது ஊறுகாய்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. கிழக்கிந்தியத் தீவுகளில் இளம் இலைகள் சில சமயங்களில் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பப்பாளித்தண்டு கறிகளுள் ஒன்றாக சமைத்து உண்ணப்படுகின்றது.

பெண்கள் கர்ப்பகாலத்தில் பப்பாளிக்காயை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். உண்மையில், பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் (latex) மற்றும் பாப்பைன் நிறைந்துள்ளது. இது கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளையும், கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவதன் மூலம் ஆரம்பகால பிரசவவலியையும் தூண்டும். மாதவிடாய் காலங்களிலும் பழுக்காத பப்பாளி சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதேசமயம் பப்பாளிப்பழம் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை தரும். பப்பாளி கர்ப்பப்பை சதைகளுக்கு, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பப்பாளி சாப்பிடுவதால் கர்ப்பப்பை விரிந்து, சுருங்கும் தன்மை அதிகரிக்கும். இதில் இருக்கும் கெரோட்டினி என்ற சத்து, ஈஸ்டோஜன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் மாதவிடாய் சரியான நேரத்தில் வரவும் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் பப்பாளிப்பழம் உதவுகின்றது.  இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் தண்ணீர்ச்சத்து வயிற்றுப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறது. இதனால் மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் ஏற்படாது.

பப்பாளிப்பழத்தை சாப்பிட்டதும் விதைகளைக் கீழே தூக்கி வீசத் தேவையில்லை. அவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளலாம். 100 கிராம் உலர்ந்த பப்பாளி விதைகளில் சுமார் 558 கலோரிகள் கிடைக்கும். அதில் புரதமும் நல்ல கொழுப்பு அமிலங்களும் அதிகம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த எனப் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க பப்பாளி விதை உதவுகிறது. தொடக்கத்திலேயே அதிக அளவில் பப்பாளி விதைகளைச் சாப்பிடுதல் கூடாது. படிப்படியாகவே அவற்றின் அளவைக் கூட்டவேண்டும். தினமும் கால் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் போதுமானது. பொறுப்பில்லாத சிலவியாபாரிகள் மிளகில் கலப்படம் செய்வதற்கு பப்பாளி விதைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அறியமுடிகின்றது. பப்பாளி விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் உயர்தரமானது; சாலட் டிரஸ்ஸிங்கிற்கு சிறந்தது. பப்பாளி விதையின் உள்ளடக்கம் இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின், யூரிக் அமிலம் மற்றும் யூரியா ஆகியவற்றின் செறிவுகளில் குறிப்பிடத்தக்க குறைவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சிலவற்றின் மூலம் அறியப்பட்டுள்ளது. பப்பாளியின் விதைகள் நாட்டுப்புற மருத்துவத்தில் புழு நீக்கியாக அல்லது கருக்கலைப்பைத் தூண்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

Papaya seeds

பப்பாளி எய்ட்ஸ் வைரஸைக் குணப்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. பப்பாளி சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சில நோயாளிகளுக்கு எச்.ஐ.வி வைரஸ் சுமையைக் குறைக்கவும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பப்பாளி வேகமாக வளரும், குறுகிய கால, வெப்பமண்டல மரமாகும். அது  பழங்களுக்காகவும் பப்பேன், பெக்டின் மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பொருட்களுக்காகவும் பயிரிடப்படுகிறது. அதன் விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான அறுவடை மற்றும் பல பயன்பாடுகள் காரணமாக, வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள வீட்டுத் தோட்டங்களில் பப்பாளி பரவலாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தாழ்நிலப் பகுதிகளில் பப்பாளி பரவலாக வளர்க்கப்படுகிறது.

பிரேசில், இந்தியா என்பன பப்பாளியின் மிகப்பெரிய உற்பத்தி நாடுகளாக உள்ளன. இருப்பினும் மெக்சிகோ முக்கியமான ஏற்றுமதியாளராக உள்ளது. சாகுபடியின் கீழ் பப்பாளி மரங்கள், வேகமாக வளர்ந்து, நடவு செய்த 9-12 மாதங்களுக்குள் முதிர்ந்த பழங்களை உற்பத்தி செய்யும். வணிக ரீதியாக, ஒரு ஹெக்டேயருக்கு 1,500 – 2,500 மரங்களின் அடர்த்தியில், ஒரு ஹெக்டேயருக்கு 125,000 முதல் 300,000 பவுண்ட் வரை உற்பத்தி செய்யலாம்.

Papaya அல்லது papaw என்பது பப்பாளியின் ஆங்கிலப் பெயர். Carica papaya L. என்பது அதன் தாவரவியற் பெயர்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

17459 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)