இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், கருப்பின இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தப்பியோடவிடாமல் தடுக்கும்பொருட்டு நிலத்தில் சரித்து வைத்துக் கழுத்தை முட்டிக்காலால் நசுக்கியவாறு இருந்ததால் கைதுசெய்யப்பட்ட கருப்பின இளைஞர் இறக்க நேரிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் வழமையானவை; அவற்றுக்கு எதிராக கருப்பின மக்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் அமைதி வழிப்போராட்டங்களை நடாத்தி வந்தவாறுள்ளனர். இந்தச் சம்பவம் தொலைபேசிப் பதிவாகிச் சமூக வலைத்தளங்களில் பரவலானதைத் தொடர்ந்து அமெரிக்காவெங்கும் உள்ள பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரெழுச்சிகள் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கத்துக்கு மாறாக இந்தத் தடவை முதல் முறையாக வெள்ளை இனத்தவர்கள் மிகப்பெரும்பான்மையாக கலந்துகொண்டு காவல்துறையையும் அரசையும் கண்டித்துக் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றனர். அதனை முதலில் கிண்டல் செய்த வெள்ளை இன இளைஞனை அவனது சகபாடிகள் கடுமையாகச் சாடிய பின்னர் தனது தவறை உணர்ந்து “வெள்ளைத்தோல் தந்த வாய்ப்புடன் தான் நடப்பாக எனது செயற்பாடுகள் இருந்தது என்பதனை அறிந்து வெட்கப்படுகிறேன்” என மன்னிப்பைக் கோரியதோடு தொடர்ந்த போராட்டங்களில் பங்கேற்கவும் முன்வந்தான். இவையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவைச் சேர்ந்த சமூகநீதி ஆர்வலர்கள் பெரிதும் உற்சாகமடைந்தனர். ‘அமெரிக்காவில் கருப்பின மக்கள் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுவதைப் போல இந்தியாவில் தலித் மக்கள் இன்னமும் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்; பல இடங்களிலும் அவமதிப்புகளும் கொலைகளும் இடம்பெற்றவாறு உள்ளன. அத்தகைய கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்களேதான் போராட வேண்டியுள்ளதே அல்லாமல் அவற்றுக்கெதிரான கண்டனப் போராட்டங்களில் ஆதிக்க சாதியினர் பங்கேற்பதில்லை. கருப்பினத்தவருக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வெள்ளையின மக்கள் போல உயர்சாதியினரெனச் சொல்லிக்கொள்வோர் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்ப முன்வராத காரணத்தால் சாதியத்தைத் தகர்ப்பதே இந்தியாவுக்கான முதல் பணியாக இருக்க வேண்டும்’ என்ற குரல்களை அப்போது கேட்க இயலுமாக இருந்தது.
தலித் அரசியலைத் தொடக்கி வைத்தவரான அம்பேத்கர் முதலாக இன்று வரை இந்துசமயத்தை ஒழிப்பதன் வாயிலாகவே சாதியத்தைத் தகர்க்க இயலும் என்ற எடுகோள்கள் முன்னிலைப்பட்டுள்ளது. ‘சாதியச் சழக்குகள் இந்து சமயத்தினுள் இடையிட்டு வந்தவை; இந்து மதத்தவராகச் செயற்பட்டவாறே சாதிபேதங்களை ஒழித்துவிட இயலும்’ எனக் காந்தி முன்வைத்த கருத்துக்களை அம்பேத்கர் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்ததோடு இந்து மதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முன் அடையாளமாகப் பௌத்தத்தைத் தழுவியிருந்தார். அவ்வாறு அவர் மதம் மாறியபோது பல்லாயிரக்கணக்கானோர் பௌத்தத்தைத் தழுவினர்; அவ்வளவு பேரும் அம்பேத்கரின் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே. இன்றுவரை சாதியத்துக்கு எதிரான இயக்க முன்னெடுப்புகள் ஒவ்வொரு தலித் சாதியப் பிரிவினராலும் தனித்தனி அமைப்புகளாகவே முன்னெடுக்கப்படுகின்றன. ‘ஆதிக்க சாதி எதிர்ப்பு’ என்ற கருத்தியல் நிலைப்பாடு காரணமாக அருகிலுள்ள ஒவ்வொரு சாதியுடனான முரண்பாட்டை முகங்கொள்ளும்போது அதனை எதிர்நிலைப்படுத்திச் சாதிகள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான ஒவ்வொரு அமைப்புகளும் தனிமைப்பட்டவாறு இயங்குகின்றன.
அமெரிக்காவில் ஆரம்பகால எதிர்ப்பு அரசியலில் வெள்ளையர் அனைவரையும் எதிரிகளாகக் காணும் கருப்பின அதிதீவிரச் செயற்பாடுகள் ஆங்காங்கே வெளிப்பட்டதுண்டு; இருந்தபோதிலும் காந்தியத்தால் ஆகர்ஷிக்கப்பட்ட மாட்டின் லூதர் கிங் முன்னெடுத்த பரந்துபட்ட வெகுஜன எழுச்சி மார்க்கமே பிரதான செல்நெறியாக அமைந்து கருப்பின மக்களின் வழிகாட்டு நெறியாக அமைந்தது. அதன் காரணத்தாலேயே கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைச் செயற்பாட்டைக் கண்டித்து வெள்ளை இனத்தார் மிகப் பெரும்பான்மையானோராகக் கலந்துகொள்ளும் போராட்டம் சாத்தியப்பட்டிருந்தது. சாதிப் பேராட்டங்களாக அன்றி சாதி அமைப்பைத் தகர்க்கும் போராட்டங்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் ஆதிக்க சாதியினர் உட்பட அனைத்துச் சாதியினரும் கலந்துகொண்டு சாதியத்துக்கு எதிராகப் போராட இயலும் என்பதற்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் முன்னுதாரணம்.
வரலாற்று இயக்கு விசையின் மாற்று வடிவம்
சமூக அமைப்பு மாற்றம் ஒன்று இந்துசமய எழுச்சியுடன் ஏற்பட்டது என்பதையே இந்தியவியலாளர்கள் பலரால் புரிந்துகொள்ள இயலாதுள்ளது. அத்தகைய மாற்றத்தை வென்றெடுக்க அனைத்துச் சாதியினரும் (எந்தச் சாதியினரது அதிகாரம் தகர்க்கப்பட வேண்டியிருந்ததோ அந்த ஆதிக்க சாதியினரும் மாற்றத்துக்கான அணியில்) இணைந்து போராடியிருந்தனர் எனும் வரலாற்றைப் பக்திப் பேரியக்கத்தின் வாயிலாகத் தமிழகம் வெளிப்படுத்தியிருந்தது. இது குறித்து அடுத்த இயலில் விரிவாகப் பேச இயலும். வட இந்தியாவில் அதுபோன்ற சமூக அமைப்பு மாற்றம் தெளிவுற வெளிப்பட்டு இருக்கவில்லை; நிலப்பிரபுத்துவ அமைப்பாக்கம் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர் வணிகக் கருத்தியல் அணி மீளவும் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க இயலுமாக இருந்த வரலாற்று ஊடறுப்பு வட இந்திய வரலாற்று அனுபவம், அதற்கான காரணங்கள் பற்றி இந்த இயலில் பார்ப்பது அவசியம்.
சென்ற நூற்றாண்டில் 1917 ஒக்ரோபர் புரட்சி வாயிலாக முதலாளி வர்க்கத்தை வீழ்த்திப் பாட்டாளி வர்க்கம் அரசதிகாரத்தை வென்றெடுத்திருந்தது; பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசுமுறைமையின் கீழ் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகாலம் சோசலிச அமைப்பு சோவியத் ருஷ்யாவில் கட்டியெழுப்பப்பட்ட போதிலும் 1991ஆம் ஆண்டில் சோவியத் சோசலிச அமைப்புத் தகர்ந்து மீண்டும் முதலாளித்துவம் ருஷ்யாவில் மீளுருவாக்கம் பெற்றுள்ளது. மேலைத்தேசம் இனிப் பாட்டாளி வர்க்கப் புரட்சிவாயிலாக சமூக அமைப்பு மாற்றத்தை வென்றெடுக்கப்போவதில்லை எனும் வரலாற்றுச் செல்நெறி மாற்றமும் நேர்ந்துள்ளது. அதற்காக நிகழ்ந்தேறிய சமூக அமைப்பு மாற்றம் மாயைத் தோற்றம் எனக் கூறலாகுமா?
முதலாளித்துவச் சமூக அமைப்புக்குரிய வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டவாறுள்ள பாட்டாளி வர்க்கம் ஆளும் சக்தியாகி சோசலிச சமூகத்தை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவியது. காலனித்துவத்துக்கு ஆட்பட்டிருந்த எமது நாடுகளில் அபகரிக்கப்பட்ட மூலதனமும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாள வர்க்க உழைப்பைச் சுரண்டிப் பெற்ற மூலதனமும் அங்குள்ள முதலாளி வர்க்கத்தை அபரிமிதமாக வளர்த்து வந்தது. சில முதலாளிகள் ஒன்றிணைந்து கூட்டுறவாக உருவாக்கிய ஏகபோக மூலதனம் அங்குள்ள ஏனைய முதலாளிகளையும் ஒடுக்கும் நிலை; ஏகபோக மூலதனம் தேச எல்லை கடந்து ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு உருவாகிவிட்ட ஏகாதிபத்திய அமைப்பு இருபதாம் நூற்றாண்டுக்கு உரியது. அத்தகைய உலக மூலதனம் மேற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் கையூட்டாக தவறவிடப்பட்ட நிலையில் சமூக மாற்ற உந்துசக்தி மேற்கிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கு ஐரோப்பா நோக்கி நகர்ந்தது.
அத்தகைய சூழலிலேயே ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் 1917 ஒக்ரோபர் புரட்சியை வெற்றிகொண்டு சோசலிசத்தைக் கட்டியெழுப்பியது. முதலாளித்துவ வளர்ச்சியை இன்னமும் பெறாதவகையில் ஏகாதிபத்தியம் பலவீனப்பட்டிருந்த கண்ணியாக ஜாரிச ருஷ்யா அமைந்திருந்த காரணத்தால் அத்தகைய புரட்சி அங்கே சாத்தியப்பட்டதாகக் கணிக்கப்பட்டது. அதைவிடவும் புரட்சியலை இன்னும் கிழக்கே நகர்ந்து உலக மூலதனத்துக்கு (ஏகாதிபத்தியத்துக்கு) எதிரான போராட்டத்தின் வாயிலாக ஒடுக்கப்பட்ட தேசங்கள் வெற்றிகொள்ளும் விடுதலைத் தேசிய நீடிப்பினூடாகவே சோசலிச நிர்மாணிப்பை ஏற்படுத்த இயலுமாக இருப்பதான வரலாற்றுச் செல்நெறி மாற்றம் ஏற்பட்ட கண்ணியாகவும் ஒக்ரோபர் புரட்சி அடையாளப்பட்டிருந்தது என்பது போதியளவு கவனங்கொள்ளப்படாதுள்ளது. ஜாரிச ருஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தேசங்களாக இணைக்கப்பட்ட நாடுகள் பல ருஷ்ய எல்லைப்புறத்திலேயே இருந்தன; ருஷ்யப் பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் அதனைத் தலைமையேற்று நடாத்திய லெனினிசச் சித்தாந்த அடிப்படையிலான சுயநிர்ணய உரிமை கோட்பாட்டைக் கையேற்று ஒன்றிணைந்த அந்த ஒடுக்கப்பட்ட தேசங்களும் முன்னெடுத்து நடாத்திய புரட்சி வாயிலாகவே உலகின் சோசலிச சகாப்தத்தை உருவாக்கிய சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் நிதர்சனமாகியிருந்தது.
இவ்வகையில் வரலாறு படைக்கும் சக்தியாக சுரண்டப்படுகிற வர்க்கம் மட்டும் இருக்கவில்லை. முழுச் சமூக சக்தியான (திணையாகிய) ஒடுக்கப்பட்ட தேசமும் அத்தகைய ஆற்றலுக்கு உரியது என்பதனைக் கவனங்கொள்ளவைக்கும் வரலாற்று ஆதாரம் திணை மேலாதிக்கம் வாயிலாக ஏற்றத்தாழ்வுச் சமூக முறையை தொடக்கிவைத்த தமிழகத்தின் மூலமாகவே தெளிவுற வெளிப்பட்டிருந்தது என்பது பற்றி பேசிவருகிறோம். திணை தொடக்கி வைத்த தமிழர் வாழ்வியலில் சமூக அமைப்பு மாற்றங்களும் திணை அரசியல் செயலொழுங்குப் பிரகாரம் முன்னகர்ந்து வந்துள்ளது. பக்திப் பேரியக்கத்தின் ஊடாக வெற்றியீட்டிய வெள்ளாளர் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பைக் கட்டியெழுப்பும் பொருட்டு அனைத்துச் சாதியினரையும் அப்போது ஐக்கியப்படுத்தியிருந்ததில் திணை அரசியலின் பங்கு உள்ளடங்கியிருந்தது என்பதனைப் பார்த்துள்ளோம்.
நிலப்பிரபுத்துவம் வலுக்குன்றி இருந்த பிரதேசங்கள்
இன மரபுக்குழுக்கள் வர்க்கங்களாகப் பிளவுறாமல் முழுத்திணையாக மேலாதிக்கம் புரிந்து ஏனைய திணைகளை வென்றடக்கிச் சுரண்டலை மேற்கொள்ளும் இன்னொருவகைச் சமூக முறைமையும் அதன் வரலாற்று போக்கும் தனி வகைக்குட்பட்டன; இத்தகைய சமூக மாற்றப் போக்கினை வட இந்திய வரலாற்றினூடாகக் காண இயலாதிருப்பது ஏன்? தமிழகத்தினை வாழ்வியல் சாத்தியப்பட்டதன் பேரில் கி.மு 6 ஆம் நூற்றாண்டு ஆசீவகம் இங்கே எழுச்சிபெற்றுத் தமிழர் பண்பாட்டைத் தொடக்கி வைத்தது. அதற்கமைவாக விவசாய விருத்திக்கு முந்திய வணிக வளர்ச்சியும் கைத்தொழில்நுட்பத்திறனும் ஏற்கனவே இங்கே சாத்தியப்பட்டு இருந்தது. அதே சமகால (முற்பட்ட) வரலாற்றுத் தொடக்கத்தில் வட இந்திய வரலாற்றுப் போக்கு மற்றொரு தனித்துவத்தை வெளிப்படுத்தியது; சத்திரியர் வெற்றிகொண்டு ஆக்கிரமித்த நிலப்பரப்பையும் அதன் பின் விவசாய எழுச்சியுடன் பிராமண மேலாதிக்கம் ஏற்படுவதாக அமைந்தவகையில் ழுழுச் சமூக சக்தியின் சுரண்டல் அமைப்பு தோற்றம் பெற்றிருந்தது. அந்த விவசாய மேலாண்மையைத் தகர்த்து வணிக சக்தியின் மேலாதிக்கம் வெற்றிபெறும் வகையில் அவைதிக மதங்களான பௌத்த, சமண எழுச்சி கி.மு 6 ஆம் நூற்றாண்டில் சாத்தியப்படத் தொடங்கியிருந்தது. அதன்பேறாக விவசாயச் சமுதாயத்தினரை விட வணிக சக்தி ஆளும் நிலையையடைந்து கி.மு 3 ஆம் நூற்றாண்டு – கி.பி 4 ஆம் நூற்றாண்டுகள் வரையான காலத்தில் அரசதிகாரம் வணிகத் தரப்புக்கு உரியதாகியது. கி.மு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்து பிராமண மேலாதிக்கத்தைச் சாத்தியப்படுத்திய விவசாய எழுச்சி, விவசாய நலன்சார்ந்த அரசு முறைமை என்பவற்றுடன் ஊடாடி வளர்ந்துவந்த வணிக விருத்தி கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் (மௌரியப் பேரரசு வீறுடன் இயங்கிய போது) வணிக மேலாதிக்கத்துக்கு உரியதாகத் திகழ்ந்தமையை இந்தியவியலாளர்கள் வலியுறுத்தத் தவறுவதில்லை.
இது தொடர்பில் “வணிகச் சமுதாயத்தின் எழுச்சி கி.மு 200 – கி.பி 300” எனும் தனி அத்தியாயம் ஒன்றில் ரோமிலா தாப்பர் வெளிப்படுத்தியிருக்கும் இந்தக் கருத்து மனங்கொள்ளத்தக்கது. : “மௌரிய ஆட்சி சாலைகள் கட்டியதன் மூலமும், தொலைதூர பிரதேசங்களையும் இணைப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியாலும் துணைக் கண்டத்தைத் திறந்துவிட்டது. பிற்காலத்தில் வடமேற்கு இந்தியா உள்ளூர் ஆட்சியாளர்கள் அல்லாதவர்களால் பிடித்துக்கொள்ளப்பட்டது மக்கள் புலம்பெயர்ந்து வருவதற்கு வசதியைக் கொடுத்துது. இது வியாபாரிகளுக்கும் பயனுடையதாக ஆகிவிட்டது. வணிகர்கள் இதுவரை எட்டிப் பார்க்காத இடங்களுக்குத் துணிந்து சென்றார்கள். இந்திய – கிரேக்க அரசர்கள் மௌரியர்கள் காலத்தில் துவக்கிவைத்த தொடர்பினை மத்திய ஆசியாவிற்கும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கும் வணிகர்கள் ஊக்குவித்தார்கள். சாகர்கள், பார்த்தியன்கள், குஷாணர்கள் மத்திய ஆசியாவை இந்திய வியாபாரிகளின் வட்டத்திற்குள் கொண்டு வந்தனர். அது தன் சுழற்சியில் சீனாவுடன் வணிகத்தை ஊக்குவித்தது. மணப்பொருள்கள், துணிவகைகள், அரைமதிப்பு வாய்ந்த கற்கள் மற்றைய ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றிற்கு இருந்த உரோமானிய கிராக்கி, யாவன வணிகர்களை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகளிலிருந்து தென்னிந்தியாவிற்கும் மேற்கு இந்தியாவிற்கும் செலுத்தியது. மேலும் இந்திய வணிகர்களையும் தென்கிழக்கு ஆசியாவிற்கு தொழில்முனைவோராக ஆற்றுப்படுத்தியது. வணிக சமுதாயத்தாரின் செல்வ வளம் அவர்கள் மத நிறுவனங்களுக்குக் கொடை வழங்கியதிலிருந்து சான்றாகியது. அக்காலத்தில் இலக்கியங்களும் செல்வம்மிக்க வணிகர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. வணிகர்களால் ஆதரிக்கப்பட்ட மதங்கள் – ஆதரவுபெற்ற புத்த மதமும் சமண மதமும் அந்நூற்றாண்டுகளில் விஞ்சிய நிலையில் மலர்ச்சி அடைந்தன என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. எப்படியிருப்பினும் பொருளாதாரச் செயற்பாடுகள் வணிகத்தோடு மட்டும் குறுக்கப்பட்டதாகவோ அல்லது விவசாயம் குறைந்துவிட்டதாகவோ பொருள் அல்ல. விவசாயம் தொடர்ந்து வருவாயைக் கொடுத்தது. ஆனால் அதிகமான நாடக பாணி செயல்பாடு என்பது வியாபார நடவடிக்கையில் இருந்தது. (ரோமிலா தாப்பர், “முற்கால இந்தியா தொடக்கத்திலிருந்து கி.பி 1300வரை” NCBH, சென்னை.2017.பக்,446-7)
இவ்வகையில் பிராமண மேலாண்மையை சாத்தியப்படுத்திய விவசாயத் தரப்பை தகர்த்து வணிக மேலாதிக்கம் ஏற்பட்டமையும் அதன்பொருட்டு அவைதிக மதங்கள் புரட்சிகரப் பங்காற்றியமை பற்றியும் பெரும்பாலான வரலாற்றியலாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். வணிக அதிகாரம் வீழ்ச்சி அடைந்த பின்னர் கி.பி 4ஆம் நூற்றாண்டு முதலாக நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தைப் பெறும் சமூகமாற்றம் ஒன்று வடஇந்தியாவில் ஏற்பட்டமையை எவரும் கண்டு காட்ட முற்படுவதில்லை. இந்த மாற்றம் ஏற்பட்டு இந்து சமயம் அதிகார நிலையை பெற்றது குப்தர் ஆட்சியின் கீழ்; குப்தர்கள் ஆட்சியை பெற்றபோது வணிக சார்பினராக இருந்து அதிகார நிலை பெற்றபின்னரே நிலப்பிரபுத்துவத்தை ஆதரித்து முன்னெடுத்தனர் என வரலாற்றியலாளர்களால் கருதப்படுவதாக ரோமிலா தாப்பர் கூறுவார். நிலப்பிரபுத்துவம் ஆளும் அதிகாரம் இவ்வகையில் நாலாம் நூற்றாண்டில் சாத்தியப்பட்ட போதிலும் ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஸன் ஆட்சியின் கீழ் (கி.பி606-647) பௌத்த மதம் வட இந்தியாவில் அதிகார நிலையை பெற இயலுமாக இருந்தது. பௌத்தச் சிந்தனை முறைமையின் இயங்கியல் அணுகுமுறை காரணமாக அதிகாரம் பெற்றுவிட்ட நிலப்பிரபுத்துவத்துக்கு அனுசரணையாக பௌத்த தத்துவம் இயங்க முற்பட இடமுண்டாயினும் பின்னர் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மதமாக இந்து சமயமே மீளெழுச்சி பெற்றது. இந்தக் குழப்பம் போதாமல் 12ஆம் நூற்றாண்டில் கர்நாடகம் முற்றிலும் வணிகக் கருத்தியலுக்கே உரிய சமண மன்னர்களது ஆட்சிக்கு ஆட்பட்டிருந்தது.
பௌத்தம் இயங்கியல் அணுகுமுறைக்கு முக்கியத்துவம் வழங்கி நிலப்பிரபுத்துவச் சமூக முறைமைக்கான ‘முழு முதல் கடவுள்’ எனும் நிலைக்கு புத்தரை பரிணமிக்கச் செய்திருந்ததைப் போலச் சமணம் தனது கடவுள் கோட்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை; தொடர்ந்தும் வணிகச் சமுதாயத்தினருக்கான கருத்தியல் தளத்துடன் இருந்த காரணத்தால் இந்தியாவினுள் தொடர்ந்தும் வணிகரில் சிறுதொகையினரது ஆதரவுடன் சமண மதத்தால் நீடித்து நிலவ இயலுமாக இருந்தது. பௌத்தத்தை விடவும் இந்துமதம் இந்திய நிலப்பிரபுத்துவத்துக்கு கூடுதல் பொருத்தம் உடையதாக இருந்த காரணத்தால் இந்தியாவில் பௌத்தம் அழிந்தபோது பிராமணரல்லாத இந்து மதம் போலத் தூர கிழக்கு ஆசியா வரை பிற்காலப் பௌத்தம் பரவலடைந்து உலக மதமாக நீடித்துள்ளது.
அந்தவகையில், வடஇந்தியாவின் ஹர்சர் ஆட்சியின் கீழான பௌத்தம் வணிகத் தரப்பு வலுப்பெற்றதைக் காட்டுவதாகக் கொள்ள இயலாது என்ற போதிலும் பின்னர் வணிகக் கருத்தியலுக்கான இஸ்லாமியரது ஆட்சிக்கு ஆட்பட்டதாகவே நீண்டகாலமாக வட இந்தியா இருந்துள்ளது. வட இந்திய நிலப்பிரபுத்துவம் வலிமையுடன் இருந்திருப்பின் ஆட்சியை கி.பி 4ஆம் நூற்றாண்டில் பெற்ற பின்னர் தொடர்ந்தும் தனக்கான பேரரசுகள் வாயிலாக இந்துசமயம் தொடர்ந்தும் மேலாதிக்கத்துடன் இருந்திருக்கும். முஸ்லிம் மன்னர்களது ஆட்சியின் கீழ் இந்துசமயம் அழிந்துவிடாமல் சமரசத்துடன் நீடித்து நிலைக்க முடிந்தவகையில் அங்குள்ள நிலப்பிரபுத்துவச் சமுதாய ஆதரவைப் பெற்றிருந்த போதிலும் அதன் வலுக்குன்றிய நிலை காரணமாகவே அங்குள்ள கடவுள் கோட்பாடு சைவசித்தாந்தத்தின் பதிபோல அதியுச்ச நிலையைப் பெற்றுக்கொள்ளாதிருந்தது.
கர்நாடகாவில் சமண மதம் கி.பி 12 ஆம் நூற்றாண்டு அதிகாரம் பெற இயலுமாக இருந்ததில் அங்குள்ள நிலப்பிரபுத்துவம் வலுவுடன் இருந்திருக்கவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைகிற ஒருவிடயம் அதன்போது அங்கே எழுச்சிபெற்ற வீர சைவம் எனும் புதிய மத இயக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. அதியுயர் நிலப்பிரபுத்துவ மேலாண்மையை வெற்றிகொள்ளப் பிராமணியம் முன்னிறுத்திய அடிப்படைகளுக்கு எதிரானதாகவே வீரசைவத்தின் கோட்பாடுகள் அமைந்திருந்தன. சாதிய ஏற்றதாழ்வுகளை பசவரின் வீர சைவம் நிராகரித்ததோடு பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் செயற்பட்ட காரணத்தால் அக்கமாதேவி உட்பட பெண் சமயக்குரவர்கள் பலர் வீரசைவ இயக்கத்தில் இணைந்து இயங்க வாய்ப்பாக அமைந்தது. இது குறித்துப் பின்னர் தனி இயலொன்றில் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
சமூக அமைப்பு மாற்றத்தில் அக – புற தாக்கங்கள்
இன மரபுக்குழுக்கள் வர்க்கங்களாகத் தகர்ந்து உருவான ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமையில் ஆண்டான் – அடிமைச் சமூக அமைப்பைத் தகர்த்து நிலப்பிரபுத்துவ அமைப்பு எழுச்சி பெறுவதற்கான அடிமைப் புரட்சி கிரேக்கத்திலும் ரோமிலும் நிகழக் காரணம் என்ன? நிலப்பிரபுத்துவ அதிகாரத்தைத் தகர்த்து முதலாளித்துவப் புரட்சிக்கான களமாக பிரான்ஸ் திகழ முடிந்தது எதனால்? ருஷ்ய ஒக்ரோபர் (1917) புரட்சி முதலாளித்துவத்தை வீழ்த்திப் பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசக் கட்டுமான விருத்திக்கு அடித்தளமிட இயலுமானது எவ்வாறு?
வர்க்க சமூக அமைப்பு மாற்றங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளில் நடந்தேறி உள்ளன. மாறாக வர்க்கப் பிளவுறாத திணை மேலாதிக்கச் சமூக உருவாக்கம், அதற்கான சமூக அமைப்பு மாற்றங்கள் என்பவற்றுக்கு உதாரணமான களமாகத் தமிழகமே திகழ்கிறது. திணை வாழ்முறை இங்கு சாத்தியப்பட்ட காரணம், திணை மேலாதிக்கம் வாயிலாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமைக்கானதே சாதியம் என்பவை குறித்து இந்தத் தொடரின் ஆரம்பத்தில் பார்த்து வந்துள்ளோம். அடுத்த இயல் பக்திப் பேரியக்கம் சமூக அமைப்பு மாற்றத்துக்கானதே என்பது பற்றிப் பேசும். அதன்போது அதியுச்ச நிலப்பிரபுத்துவ விருத்தி தமிழகத்துக்கு வாய்த்தமைக்கும் வர்க்கப் பிளவுறாத முழுச் சமூக சக்தியின் வரலாற்று இயங்குமுறைக்குத் தமிழகம் உதாரணமாக இயலுமானமைக்கான அடிப்படைகள் பற்றியும் பேசலாம்.
வட இந்தியாவில் பிராமண மேலாதிக்கம் சாத்தியப்பட்டு வர்ணாசிரம தர்மம் பேசுபொருளாக இயலுமாக இருந்ததில் சாதியத்துக்கான அனைத்து அம்சங்களும் வட இந்தியப் பிராமணர்களுக்கே உரியது என்ற கருத்துப் பலரிடமும் உள்ளது. இந்திய நிலப்பிரபுத்துவம் குறித்த தனது நூலில் R.S சர்மா நிலவுடைமைச் சமுதாயத்துக்கான அவசியத்துடன் எழுந்த பல சாதிய இறுக்கங்கள் பொதுவாகத் தென்னிந்தியாவின் ஊடாக, குறிப்பாகத் தமிழகம் மூலமாகவே வலுப்பட்டிருந்தன என்பதனை எடுத்துக்காட்டியிருந்தார்.
“முற்கால இந்தியா” எனும் மேலே காட்டப்பட்டிருந்த ரோமிலா தாப்பரின் நூல் முந்திய பதிப்புகளில் தமிழகம் பற்றி அதிகம் கரிசனம் கொள்ளவில்லை; புதிய மிலேனியத் தொடக்கத்தில் இறுதியாக வெளியிட்ட பதிப்பில் அந்தத் தவறைத் திருத்திக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரோமிலா தாப்பர் இந்தியாவில் அசோகனது மௌரியப் பேரரசை விடவும் அக்பரின் மொகாலயப் பேரரசை விடவும் அளவில் மிகப்பெரியதாகச் சோழப்பேரரசே இருந்துள்ளது என்பதை வலியுறுத்தி இருந்தார். இந்தப் பிற்காலச் சோழப்பேரரசே மிக நீண்டகாலம் ஆட்சிசெலுத்தி இருந்தது என்பதோடு அது மட்டுமே தனக்கான வலிமையான கடற்படையைக் கொண்டிருந்ததுடன் நீண்ட தொலைவிலான பேரரசைக் கடற்படைகொண்டு தாக்கி வெற்றியீட்டியதாகவும் கூறுவார்.
மிகப்பலமுடைய நிலப்பிரபுத்துவ சமூக எழுச்சி வழங்கிய வளப்பெருக்கமே சோழப் பேரரசை வெளிப்படுத்தி இருந்தது. அதன் மறுபக்கம், சாதியத்தின் இறுகிய வலுமையையும் தமிழகம் வழங்குவதாக அமைந்தது. பெருமைகளைப் பேசுவதற்கானதல்ல வரலாற்றுக் கல்வி, எமது சமூக முறைமையைப் புரிந்துகொண்டு அதனை மாற்றுவதற்கானதே வரலாற்றுணர்வு என்ற வகையில் சாதிய இறுக்கத்தில் பிராமணருக்கும் அப்பால் சைவசித்தாந்தத்துக்குரிய தமிழக மண்ணின் பங்களிப்பையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
வட இந்தியா சாதியத்தைப் பேசுபொருள் ஆக்கியதற்கு அப்பால் அதனை இறுக்கமுடையதாக்குவதற்கு உரிய வாய்ப்பை அப்போது பெற்றிருக்கவில்லை. அதற்கான வலிய அகக்காரணியாக நிலப்பிரபுத்துவப் பலம் போதுமாக இல்லாதிருந்தது என்பதோடு வெளிச்சக்திகள் ஊடுருவ ஏற்ற புவியியல் அமைப்பும் கவனிப்புக்குரியது. இந்திய சமூகத்துக்கான மாற்றங்கள் வெளிச்சக்திகளால் ஏற்படுத்தப்பட்டனவே என்ற கருத்து ஏற்படுவதற்கு இந்தத் தலையீடுகள் காரணமாகின. அவை குறித்து தொடர்ந்து பேசுவோம்!
தொடரும்.