தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 1
Arts
26 நிமிட வாசிப்பு

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 1

October 6, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன

குமாரி ஜயவர்த்தன (Kumari Jayawardena – பிறப்பு 1931)

 இலங்கையின் முன்னணி கல்வியாளரும் பெண்ணிய ஆர்வலரும் ஆவர். இவர் கொழும்புப் பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் இணைப் பேராசிரியாராகப் பணியாற்றியவர். ஓய்வு வயதை அடையும் முன்னரே பல்கலைக் கழகப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் ஒரு முழுநேர ஆய்வாளராகச் செயற்பட்டார். இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA) என்ற ஆய்வு நிறுவனத்தின் தொடக்க கால உறுப்பினரான இவர் இந்நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார். இலங்கையில் பெண்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சிவில் உரிமை இயக்கங்களின் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 

Kumari Jeyawardana

“முழு ரஷ்யாவினதும் அரசியல் சூழல் ரஷ்யப் பெருந்தேசியவாதத்தால் நஞ்சாக்கப்படுகிறது. (ரஷ்யர்கள் என்ற) ஒரு தேசியம் (Nation) பிறதேசியங்களை அடிமைப்படுத்த முனைகிறது. இது அடக்கும் தேசியத்திற்கே பெருந்தீங்காக முடியும். ரஷ்யா முழுவதிலும் இந்த அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினைகள் தோன்றுகின்றன. எல்லாத் தேசியங்களுக்கும் பூரண சமத்துவம், அவையாவற்றுக்கும் சுயநிர்ணய உரிமை, எல்லாத் தேசியங்களின் தொழிலாளர்களும் ஐக்கியப்படுதல் என்பனவே மார்க்சீய தேசியக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படைகள் என்பதை உலகத் தொழிலாள வர்க்கத்தின் அனுபவமும், ரஷ்யாவின் அனுபவமும் எமக்குக் கற்றுத் தந்துள்ளது.”

லெனின், ‘தேசங்களின் சுயநிர்ணய உரிமை 1914’ என்ற நூலில் இருந்து.

தேசங்களின் சுயநிர்ணய உரிமை – மார்க்சிஸ்டுகளிடையே நடைபெற்ற விவாதம்

முதலாம் உலகயுத்தம் ஆரம்பித்த வேலையில் ஐரோப்பாவில் சோஷலிஸ்டுகள் மத்தியில் தேசியவாத இனவாத உணர்வுகள் கிளப்பப்பட்டன. பெரும்பாலான சோஷலிசக் கட்சிகள் தத்தம் தந்தையர் நாட்டுக்காக (தாய் நாட்டிற்காக) போரில் ஈடுபடும்படி தொழிலாளர்களைக் கேட்டன. நாடுகளின் தேசிய எல்லைகளை தாண்டிய உலகத்தொழிலாளர் ஐக்கியம் என்ற கருத்து குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டினதும் ஆளும் குழுக்களின் சார்பாக தொழிலாளர்களை பீரங்கித் தீனியாக்குவதில் ஐரோப்பாவின் சோஷலிசக் கட்சிகள் முன் நின்றன. அவ்வேளையில் றோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg) அவர்களின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.

Rosa Luxemburg

“உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு தந்தையர் நாடு என ஒன்று உள்ளதா? அப்படியாயின் உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய மக்கள் திரள் தான் அத் தந்தையர் நாடு” என்ற பொருள்தரும் கேள்வியை அவர் கேட்டார். (“What other Fatherland is there than the Great mass of working men and Women?”)

1914 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் சோஷலிசமும் தேசியவாதமும் ஒன்றோடொன்று இணங்கிப் பயணிக்க முடியாதவை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தன. தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க உணர்வு, அதன் உலகத் தொழிலாளர் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் சர்வதேசியம் (Internationalism) ஆகிய இரண்டும் ஒருபுறம் ஒன்றாக வைத்து நோக்கப்படத்தக்கன. ஐரோப்பாவில் அக்காலத்தில் கிளர்ந்தெழுந்த தேசியவாதமும், நாட்டுப்பற்றும் இன்னொருபுறம் வைத்து நோக்கப்பட வேண்டியன. தேசியவாத இலக்குகளை குறியாக வைத்துக் கொண்டு நாட்டுப்பற்றுடன் செயற்படும்படி தொழிலாளர் வர்க்கத்தைக் கேட்கும் போது வர்க்க சமரசத்தையும் வர்க்க இணைவையும் கோருவதாகவே அது அமையும். அது மட்டுமன்றி இனவாதம், பாசிசம், சந்தர்ப்பவாதம் ஆகியனவற்றையும் தழுவிக் கொள்ளும்படி இடதுசாரிக் கட்சிகளை கேட்பதாகவே பொருள்படும். ஐரோப்பிய சோஷலிஸ்ட் கட்சிகள் இச்சந்தர்ப்பவாதத்தை ஏற்றுக் கொண்ட வேளையில் மார்க்சிஸ்டுகள் தேசியங்களின் சுயநிர்ணயம் என்ற சிக்கலான பிரச்சினைக்கு விடைகாணும் தேவை எழுந்தது.

தேசியவாத உணர்வு என்ற விடயம் 1914 ஆம் ஆண்டில்தான் மார்க்சிய விவாதங்களில் புகுந்தது என்று கூறுவது தவறு. மார்க்சிய இயக்கம் அதன் தொடக்க காலத்தில் இருந்தே தேசிய உணர்வு என்னும் விடயம் பற்றிக் கருத்துச் செலுத்தி வந்தது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் (Nation States) உருவாகிக் கொண்டிருந்த போதும், காலனிகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் எழுந்த போதும் தேசிய உணர்வு கிளர்ந்தெழுந்தது. தேசிய உணர்வின் வளர்ச்சி தொடர் இயக்கம் ஒன்றின் ஒரு கூறாகும். தேசிய அரசு (Nation State) முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தோன்றியது என்பதே மார்க்ஸ் எங்கல்ஸ் கருத்தாகும். தேசிய அரசுகளின் தோற்றக் கட்டத்தில் உருவாகிய தேசிய உணர்வு, முதலாளித்துவம் உலக மட்டத்தில் விரிவாக்கம் பெறும் போது, தொழிலாளர் வர்க்கத்திடையே மங்கி மறைந்து செல்லும் என்று மார்க்ஸ் எங்கல்ஸ் கருதினார்கள். மூலதனம் உலகமட்டத்தில் வியாபித்து வளரும் போது தொழிலாளர் வர்க்கத்திடம் நாடுகள் கடந்த உலகமட்டத்திலான சோஷலிச சர்வதேசியம் என்ற கருத்து வளர்ச்சி பெறும். வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர் வர்க்கங்களிடையே உறவும் ஐக்கியமும் வளரும் என்றும் அவர்கள் கருதினர். மார்க்ஸ் – எங்கல்ஸ் நோக்கின்படி தேசியவாதம் என்பது குட்டி முதலாளித்துவத்தை கவரும் கருத்தியல் ஆகும். மார்க்ஸ் – எங்கல்ஸிற்குப் பின்வந்த மார்க்சியக் கோட்பாட்டாளர்களும் தேசியவாதத்தை குட்டி முதலாளித்துவக் கருத்தியலாகவும், தொழிலாளர் இயக்கத்திற்கு ஆபத்தானதாகவும் கருதினர். தேசியமட்டத்தில் சோஷலிஸ்டுகள் எல்லா இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் ஒன்றுமையின் அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அவ்வாறே சர்வதேச மட்டத்தில் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக அனைத்து நாடுகளினதும் தொழிலாளர் வர்க்கத்தினரை இணைத்து போராடவேண்டும். ஆகையால் உள்நாட்டில் முதலாளிகளுக்கு எதிராகவும், சர்வதேச மட்டத்தில் உலக முதலாளித்துவ முறைமைக்கு எதிராகவும் போராடும் கடப்பாடு சோஷலிஸ்டுகளுக்கு உள்ளது. இவ்வாறிருக்கையில் உள்நாட்டில் எல்லாத் தேசிய இனங்களினதும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுவதை விடுத்து, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் அல்லது இனக்குழுமத்திற்கான போராட்டமாகக் குறுக்கிக் கொள்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?’

மேற்குறித்த விவாதம் மார்க்சிஸ்டுகளிடையே தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இவ் விவாதத்தில் பங்குகொண்ட முக்கியமான மார்க்சிஸ்ட் சிந்தனையாளர்களாக கோட்ஸ்கி, ஒட்டோ பவர் (Ollo Bauc), றோசா லக்சம்பேர்க், லெனின் ஆகியோர் விளங்கினர். இவர்களிடையேயான விவாதத்தின் மையப்பொருளாக போலந்து மக்களின் சுதந்திரத்திற்கும் அவர்களின் சுயநிர்ணய உரிமைக்குமான போராட்டம் அமைந்தது. இவ்விடயம் தொடர்பாக றோசா லக்சம்பேர்க் போலந்துத் தேசியவாதத்திற்கு எதிரான கருத்தை முன்வைத்தார். மார்க்ஸிட்டுகள் தேசிய சுயநிர்ணய உரிமை போன்ற அருவமான (கருத்து வடிவிலான) உரிமைகள்’ (Abstract Rights) பற்றிய நம்பிக்கை அற்றவர்கள். இவ்வாறான அருவமான கருத்துக்கள் தொழிலாளர் வர்க்கத்தை பொருத்தவரையில் அர்த்தம் இல்லாதவை. ஏனெனில் வர்க்க எதிரிக்கு எதிரான அவர்களது போராட்டத்தை இது திசைதிருப்பிவிடும். இனம், மொழி போன்ற விடயங்கள் காரணமாக முதலாளிகளுடன் ஒன்று சேர்வது தொழிலாளர்களுக்கு ஏற்புடையதல்ல. றோசா லக்சம்பேர்க் அவர்கள் நோக்கில் முதலாளிகளும், தொழிலாளர்களும் எந்த ஒரு விடயத்திலும் ஓரணியில் ஒன்று சேர முடியாது. போலந்து மக்களின் சுதந்திரம் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில் போலந்து தொழிலாளி வர்க்கம் போலந்து முதலாளிகளுடன் ஒன்றிணைய முடியாது என்பதே றோசா லக்சம்பேர்க் நிலைப்பாடு.

லக்சம்பேர்க் நிலைப்பாட்டை “தொழிலாளவர்க்க சர்வதேசிய வாதம்” (Proletarian Internationalism) எனலாம். அவரது நிலைப்பாடு தேசியவாதத்தை நிராகரிப்பதும், முற்று முழுதாக சர்வதேசியத்தை ஆதரிப்பதுமான கருத்து. ஆகையால் “முழுமுதல் சர்வதேசிய வாதம்” (“Exclusive- Internationalist”) என்றும் குறிப்பிடுவர்.

றோசா லக்சம்பேர்க் கருத்துக்கு மாறாக தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை லெனின் அங்கீகரித்தார். லக்சம்பேர்க் – லெனின் விவாதம் மார்க்சிய சிந்தனை வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்தது. இவ்விவாதத்தில் தேசியவாதம் சம்பந்தமான அடிப்படை பிரச்சினைகளும். வர்க்கப் போராட்டம் பற்றிய கருத்துகளும் அலசப்பட்டன. லச்சம்பேர்க் போலந்து நாட்டில் பிறந்தவர். போலந்துக்காரரான அவர் போலந்தின் சுதந்திரம் என்பது, முதலாளித்துவ அமைப்பின் கீழ் அடையப்பட முடியாத இலக்கு எனக் குறிப்பிட்டார். போலந்து ரஷ்யாவின் பிடியில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு தனிநாடு ஆகினால் போலந்தின் கைத்தொழில்களுக்கு ரஷ்யாவின் சந்தை கிடைக்காமல் போய்விடும். இதனால் வர்க்கப் போராட்டம் பாதிக்கப்படும் நாட்டுப்பற்று, தேசியப்பற்று என்பதை “சோஷல் நாட்டுப்பற்று” (Social Patriotism) என வருணிக்கும் லக்சம்பேர்க் முன்னேற்றமடையாத போலந்துத் தொழிலாளர் வர்க்கத்தை தேசியவாதம் குழப்பமடையச் செய்து சோஷலிச இயக்கத்தை பலவீனப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். தேசியவாதத்தை அவர் பின்நோக்கிப் பார்க்கும் பழமைவாதக் கருத்தியல் (Backward Looking ideology) எனக் கண்டித்தார். றோசா லக்சம்பேர்க்கின் கருத்துக்கு மாறாக தேசியவாதத்தின் தேவையை லெனின் வலியுறுத்தினார். லெனின் ரஷ்யாவின் பெரும்பான்மை இனமான வெள்ளை ரஷ்சியன் (White Russian) இனத்தவர். அவ்வினம் ரஷ்யாவின் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதை அவர் கண்டார். இதனைவிட றோசா லக்சம்பேர்க் போன்ற பிற சமகால மார்க்சிஸ்டுகளை விடத் தூரநோக்குமிக்கவராக விளங்கிய லெனின் ஆசிய நாடுகளில் கிளர்ந்தெழும் தேசியவாத விழிப்புணர்வையும், அங்கு நடைபெறும் சுதந்திர எழுச்சியையும் சுட்டிக்காட்டியதோடு ஆசியாவின் தேசியவாதத்தை ஆதரித்தார். லக்சம்பேர்க் கருத்துக்களை நிராகரித்த லெனின் பின்வருமாறு வாதிட்டார்.

Lenin

“ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்தின் முன்னே இரு பணிகள் உள்ளன. தத்தம் நாட்டு எல்லைகளுக்கும் வாழும் சிறுபான்மை தேசியங்களின் உரிமைகளை மறுக்கும் ரஷ்ய தேசியவாதம் போன்ற எல்லாவகைத் தேசியவாதங்களுக்கும் எதிராகப் போராடுதல் ஒரு பணி. இப்பணியோடு இணைந்ததாக ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டும் என்பதும், அவற்றின் சுயநிர்ணய உரிமையையும் பிரிந்து செல்வதற்கான உரிமையை ஏற்றலும் உள்ளடங்கும். அதே வேளை பாட்டாளி வர்க்கம் அனைத்து நாடுகளின் தேசியவாதங்களுக்கும் எதிராகப் போராடுவதோடு பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுமைக்காகவும், பாட்டாளி வர்க்க அமைப்புக்கள் யாவற்றின் ஒற்றுமைக்காகவும் போராடுதல் வேண்டும். அத்தோடு பாட்டாளிவர்க்க அமைப்புகள் யாவற்றையும் ஐக்கியப்பட்ட சர்வதேச அமைப்பின் கீழ் ஒன்றிணைப்பதற்காகவும் உழைத்தல் வேண்டும்.”

(லெனின்: தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை – (1914) The Right of Nations to Self-Determination)

தேசியவாதமும், வர்க்கப்போராட்டமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை; அவை ஒன்றிணைந்து பயணிக்க முடியாது என்னும் றோசா லக்சம்பேர்க் கருத்து சரியானது; அதில் உண்மையுள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மார்க்சிஸ்டுகளிடையிலான இந்த விவாதத்தில் றோசா லக்சம்பேர்க் கருத்துக்கு மாறுபட்ட போக்கிலேயே வரலாற்று நிகழ்வுகள் அமைந்தன. றோசா லக்சம்பேர்க் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு தேசியவாதத்தால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டினார். சோஷலிஸ்ட் இயக்கம் தேசியவாதம் தொடர்பாக எடுக்கும் நிலைப்பாடு காரணமாக சந்தர்ப்பவாதத்தைத் தழுவும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்டியவர் என்ற சிறப்பு லக்சம்பேர்க் அவர்களுக்கு உரியது.

10 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை மார்க்சிஸ்டுகளிடையே தேசியவாதம் குறித்த பிரச்சினை பற்றிய விவாதம் தொடர்ந்து வந்துள்ளது. மார்க்சிஸ்டுகள் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியாகத் தவறு இழைத்து வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை மார்க்சிஸ்டுகள் சிலர் முன்வைத்தனர். இப்போக்கு மார்க்ஸ்—எங்கல்ஸ் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. மார்க்ஸ்- எங்கல்ஸ் சில தேசியவாதங்களை ஆதரித்தார்கள். சிலவற்றை எதிர்த்தார்கள். உதாரணமாக ஐரிஸ் மக்கள் இங்கிலாந்துக்கு எதிராக நடத்திய தேசிய இயக்கத்தை அவர்கள் ஆதரித்தனர். அவ்வாறே போலந்தின் தேசியவாதத்தை ஆதரித்தனர். பிற்போக்குநாடான ரஷ்யாவை பலவீனப்படுத்தும் என்பதால் போலந்தின் கிளர்ச்சியை மார்க்ஸ்-எங்கல்ஸ் ஆதரித்தனர். அவ்வேளை பால்கன் நாடுகளில் துருக்கிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுந்த தேசியவாதங்களை அவர்கள் எதிர்த்தனர். இதற்கான காரணம் பால்கன் நாடுகளின் தேசியவாதம் துருக்கியைப் பலவீனப்படுத்தும். அதனால் சார் மன்னனின் பிற்போக்கு ரஷ்யாவிற்கே அது நன்மை பயப்பதாக ஆகிவிடும் என்று கூறப்பட்டது. ஆகவே அவர்களுடைய நோக்கில் பயன்வாதம் (Pragmatism) என்ற போக்கு இருந்தது. இப்பயன்வாதம் திட்டவட்டமான தேசியவாதக் கோட்பாட்டை வகுத்துக் கொள்வதற்குத் தடையாக இருந்தது. மார்க்சியத்தின் தேசியவாதம் பற்றிய இப்பலவீனத்தை சுட்டிக் காட்டிய ரொம் நயர்ண் (Tom Nairn ‘மார்க்சியத்தின் தேசியவாதக் கோட்பாடு மார்க்சியத்தின் பெரும் வரலாற்றுத்தோல்வி” (Theory of Nationalism Represents Marxism’s Great Historical Failure) என்றார்.

வரலாற்றுத் தேசங்கள் (Historical Nations)

முதலாளித்துவத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பயனாக ஐரோப்பாவில் நிலமானியத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கான மாற்றம் (Transition from Feudalism to Capitalism) நிகழ்ந்தது. அம்மாற்றத்தின் போது ஐரோப்பாவில் நவீன தேசிய அரசுகள் (Modern National States) உருவாகின. அத்தகைய அரசுகள் “வரலாற்றுத் தேசங்கள்” (Historical Nations) ஆகும். இவை தவிர்ந்த “வரலாற்றுத் தேசியங்கள் அல்லாதவை” (Non-historic Nations) வரலாற்றின் மிச்ச சொச்சங்களாக உள்ளன. இவை பிற்போக்கானவை. எங்கல்ஸ் கருத்துப்படி “These relics of a nation mercilessly trampled under foot in the course of history”; வரலாறு தன்போக்கில் முன்னேறிச் செல்கின்ற போது இரக்கம் காட்டாமல் சிறு தேசியங்களை தன் காலடியில் போட்டு மிதித்துச் செல்கிறது. இத்தேசியங்களின் சிதைவுகளே மிஞ்சியுள்ளன என்பதே இக்கூற்றின் பொருள். ஹெகல் இவை பற்றிக் கூறியவற்றை எப்பிரஹாம் நிம்னி என்பவர் பின்வருமாறு மேற்கோள் காட்டியுள்ளார்.

“These residual Fragments of People’s (Volkerab False), always become Fanatical Standard Bearers of Counter-Revolution”

இத்தேசியங்கள் “மிஞ்சியிருக்கும் துண்டங்கள்” (Residual Fragments) என்றும் எதிர்ப்புரட்சியின் அணியில் இவை சேர்ந்து கொள்கின்றன என்பதே ஹெகலின் கருத்தாகும்.

வரலாற்றுத் தேசியங்கள் அல்லாதவற்றுக்கு உதாரணமாக ஸ்பெய்ன் தேசத்தின் பஸ்குகள் (Basques), ஸ்கொட்லாந்தின் கேல்ஸ் (Gaels), பிரான்சின் பிரிட்டன்கள் (Bretons), தென்சிலாவியர்கள் ஆகியன குறிப்பிடப்பட்டன. குடியான் – நிலமானிய (Peasant-Feudal) சமூக அமைப்பை உடைய தேசிய சமூகங்கள் முதலாளித்துவத்தின் சர்வதேசமயமாதலின் மாற்றங்களுக்கும் கொந்தளிப்புகளிற்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து போகக் கூடியன எனக் கருதிய மார்க்ஸ் – எங்கல்ஸ் அவற்றிற்கு சுயநிர்ணய உரிமை இல்லை என நிராகரித்தனர்.

இலங்கையின் இடதுசாரிகளும் தேசிய இனப்பிரச்சினையும்

இலங்கை பல இனக்குழுமங்கள், பல்சமயத்தவர்கள், பலமொழிகளைப் பேசுவோர் எனப் பன்மைத்துவம் உடைய மக்களை கொண்ட நாடு. இங்கு தொழிலாளர் வர்க்கம் பல் இனக்குழும மக்களை உள்ளடக்கியதாய் உள்ளது. சுதேசிகளான தொழிலாளர்களும், அந்நிய நாட்டில் இருந்து வந்தோரும் பல் இனக்குழுமங்களைச் சேர்ந்தோரும் உள்ளனர். இவ்வாறு நிலைமை இருந்த போதிலும் இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கோட்பாட்டு விவாதம் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது. தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறதா அல்லது இல்லையா என்ற கேள்வி கூட எழுப்பப்படவில்லை. “அரசியல், கருத்தியல், பொருளாதாரம், சட்ட உறவுகள் சார்ந்து தேசிய சமூகங்களிடையே எழும் உறவுகளின் ஒட்டு மொத்தமான முழுமையே தேசிய இனப்பிரச்சினை.” என மார்க்சிஸ்டுகளால் வரையறை செய்யப்பட்ட இந்த விடயம் பற்றி இலங்கையின் இடது சாரிகள் கோட்பாட்டு விவாதத்தை நடத்துவதில் அக்கறை செலுத்தவில்லை.

1935 இல் இலங்கைச் சமசமாஜக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை. கட்சியின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய உரையாடல்கள் தெளிவற்றனவாகவும் இருண்மை உடையனவாகவும் இருந்து வருவதையும் காணலாம். 1935 இற்குப் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், இவற்றில் இருந்து பிரிந்து சென்ற வேறு பல இடதுசாரிக்கட்சிகளும் இந்த இடைக்காலத்தில் தோன்றின. இவையாவும் லெனினின் சுயநிர்ணய உரிமை, பிரித்து செல்வதற்கான உரிமை, சர்வதேசியம் ஆகியனவற்றை அருவமான கருத்து மட்டத்தில் (Abstract Level) ஏற்றுக்கொண்டிருந்தன. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினின் தேசிய இனம் (Nalion) என்ற வரையறையையும் ஏற்றுக்கொண்டிருந்தது. ‘மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்’ என்ற நூலில் ஸ்டாலின் தேசிய இனம் என்பதை மொழி, வாழிடம், பொருளாதாரம், உளவியல் இயல்புகள் என்பனவற்றை ஒன்றிணைத்து பண்பாட்டின் ஊடாக வெளிப்படுத்தும் நிலைபேறுடைய, வரலாற்று ரீதியில் உருவாகிய சமூகம்’ (A historically evolved, stable community of language, territory, economic life, and psychological make- up manifested in a community of culture) என்றே வரையறை செய்தார். ஆனபோதும் தமிழர்களும், முஸ்லிம்களும் தனியான தேசிய இனங்கள் என்ற அந்தஸ்துக்கு உரியவர்களா என்ற விவாதத்தையோ உரையாடலையோ இடதுசாரிக் கட்சிகளோ, அறிவாளிகளோ முன்னெடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சமசமாஜக்கட்சி தொடக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட செயல்திட்டத்தில் தேசிய இனப்பிரச்சினை (National Question) என்ற விடயம் பற்றிக் குறிப்பு எதுவும் இருக்கவில்லை. ஆயினும் ஆங்கிலத்திற்குப் பதில் சிங்களமும், தமிழும், கீழ்நிலை நீதிமன்றுகள், பொலிஸ் நிலையங்கள். அரசாங்க திணைக்களங்கள் என்பனவற்றில் உபயோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமசமாஜக்கட்சி செயல்திட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இந்த மொழிபற்றிய கோரிக்கை ஜனநாயகத்தேவை என்றே பார்க்கப்பட்டது; இலங்கையின் இனக்குழுமங்களிற்கிடையிலான உறவு பற்றிய கொள்கை என்ற நிலையில் பார்க்கப்படவில்லை. 1935 இற்கு பிந்திய காலத்தில் இடம்பெற்ற உரையாடல்களில் கூட தேசிய இனப்பிரச்சினை என்ற விடயம் இடம்பெற்றதற்கு சான்றுகள் இல்லை. இலங்கையின் ஸ்தூலமான நிலைமைகளின் பின்னணியில் தேசியப் இனப்பிரச்சினை அலசப்படவில்லை. ஆகையால் தேசியவாதம் பற்றி லெனின், ஸ்டாலின் என்போர் கூறியவற்றை வெறும் கடப்பாடாக மீண்டும் மீண்டும் சொல்வதாகவே இக்கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்தன.

இலங்கையில் பல்இனக்குழுமங்கள் வாழ்ந்து வந்திருக்கின்றன என்ற யதார்த்தத்தின் பின்னணியில், அவ்வப்போது எழுந்த பிரச்சினைகளின் போது, இக்கட்சிகள் கையாண்ட கொள்கைகளும், தந்திரோபாய் நடவடிக்கைகளும் தேசிய இனப்பிரச்சினை பற்றிய தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாமலே வகுக்கப்பட்டிருந்தன என்பது வெளிப்படையானது. கட்சிகளின் நடவடிக்கைகளும், கொள்கைகளும் பாரபட்சத்திற்கு உள்ளாகும் ‘சிறுபான்மை’யினரின் தேவைகள் என்ற முறையிலேயே அமைந்தன. ஒவ்வொரு பிரச்சினையும் தனித்தனியாக எடுக்கப்பட்டு குறித்த சூழ்நிலையின் நடைமுறை அரசியல் பயன், விளைவு என்ற முறையில் நோக்கப்பட்டனவே அன்றி பிரச்சினைகளிற்கிடையே உள்ள உறவு என்ற முறையில் பரிசீலிக்கப்படவில்லை; ஒவ்வொன்றிற்கும் இடையிலான பொருத்தமுடமை நோக்கப்படவில்லை. பாராளுமன்ற அரசியல் நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பாக கட்சிகள் எடுக்கும் முடிவுகள் பெரும்பான்மையிலான சிங்கள சமூகத்தில் என்ன எதிர்வினையை உருவாக்கும் என்பதே கவனத்தில் கொள்ளப்பட்டது.

தமிழ் பூஷ்வா தலைவர்களும் இக்காலகட்டத்தில் தம் மக்களின் குறைகளை சிறுபான்மையினர் உரிமைகள்’ (Minority Rights) என்ற வகையிலேயே முன்வைத்தார்கள் என்பது உண்மையாகும். தமிழர் ஒரு தனித்துவம் உடைய தேசிய இனம் என்ற அடையாள உணர்வு உருவாக்கம் பெறும் செயல்முறை அப்போது தொடர்ந்து கொண்டிருந்தது என்பது தான் இதற்கான காரணமாகும். ஆயினும் தமிழ் மக்களின் குறைகளாக அமைந்த பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்பதும் அவை யாவும் தமிழர் தனித்துவமான தேசிய இனம், தனியான இனக்குழுமம் என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்தவை என்பதும், தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஆழமான அலசல் நிகழ்த்தப்பட்டிருந்தால் துலக்கமாகியிருக்கும். இவை சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்.

1970 களில் தமிழ்த் தீவிரவாதம் எழுச்சியுற்றது. தமிழர் தரப்பில் இருந்து தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. இக்காரணத்தால் இடதுசாரிகள் தேசிய இனப்பிரச்சினை பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்தது. ஆயினும் அதுவரை இருந்து வந்த கொள்கைகளும் நடைமுறைகளும் மாறவில்லை. இடதுசாரிகள் 1970 களில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதில் இருகூறுகள் இருந்தன.

  1. வெளிப்படையாக பேசாதும் விவாதிக்கப்படாதும் மௌனமாக ஏற்கப்பட்ட வாய்ப்பாடு ஒன்று இருந்தது: தேசிய இனங்களுக்குச் சுயநிர்ணய உரிமை உள்ளது; அவை பிரிந்து செல்வதற்கான உரிமையையும் உடையவை.
  2. பெரும்பான்மை இனத்தின் கோரிக்கைகளோடு இணங்கிப்போதல், கொள்கைகளை விட்டுக்கொடுத்தல்.

இவற்றுள் இரண்டாவது கூறினால் இடதுசாரிகள் சுயநிர்ணய உரிமை ‘ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பிராந்திய சுயாட்சி’ என்பதாகவே இருக்க முடியும் என்று சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார்கள். இத்தடவை மீண்டும் விடயங்களைத் தனிமைப்படுத்தி ஒவ்வொரு பிரச்சினையையும் பிறவற்றின் தொடர்பு இன்றி நோக்கும் போக்கு பின்பற்றப்பட்டது. உதாரணமாக காணிகள் தொடர்பாக எந்தளவுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம்? சட்டமும் ஒழுங்கும் பற்றிய அதிகாரம் பகிர்ந்தளிக்கலாமா? எந்தளவு கொடுக்கலாம்? என்றவாறு நோக்கப்பட்டது. பிறவிடயங்களும் இவ்வாறு தனித்தனியாக நோக்கப்பட்டன. ஓர் இனக்குழுமத்தின் அரசியல், பொருளாதார உரிமைகள் யாவை என்பதே அடிப்படையான பிரச்சினை. இந்த விடயம் ஒட்டு மொத்தமான முழுமையாக (Totality) நோக்கப்படவில்லை.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்ப்பதற்குச் சிக்கலான ஒரு பிரச்சினை எனக் குறிப்பிட்டிருந்தேன். இடதுசாரிகள் இப்பிரச்சினை பற்றி சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் முயற்சிகூட எடுக்கவில்லை என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம். இந்த பலவீனம் காரணமாக இடதுசாரி கட்சிகளின் பிரசன்னம் தமிழ்ப் பகுதிகளில் இன்று இல்லாமலே போய்விட்டது.

இன்று ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் ஏன் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்வதற்கு இலங்கையின் இடது சாரி இயக்கத்தின் முந்தைய வரலாற்றுக்கட்டங்களை மீண்டும் அலசிப்பார்க்க வேண்டும். முந்திய வரலாற்றுக் கட்டங்களில் 1. வர்க்கங்களும் இனக்குழுமங்களும், 2. தேசியவாதம் சோஷலிசம் என்ற கருத்தியல்கள் என்ற இருவகை விடயங்களுக்கும் இடையிலான இடைத்தொடர்புகள் பற்றி எவ்விதம் நோக்கப்பட்டது என்பதை ஆராய்தல் வேண்டும்.

1930 – 1946 காலம்

1930 – 1946 காலத்தை இடதுசாரி இயக்கத்தின் தொடக்ககாலம் எனக்கூறலாம். இக்காலத்தில் இலங்கையின் இனக்குழுமங்கள் பற்றி இடதுசாரிகள் கொண்டிருந்த கொள்கையைத் தீர்மானித்த காரணிகளாக மூன்றைக் குறிப்பிடலாம்.

  1. இலங்கையில் அக்காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் இனக்குழுமக் கட்டமைப்பு.
  2. இடதுசாரித் தலைவர்களதும், இடதுசாரி அறிவாளிகளினதும் வர்க்கப் பின்புலமும், இயல்புகளும்.
  3. இடதுசாரி இயக்கத்தின் மீது குட்டி முதலாளித்துவ வர்க்கக் கருத்தியலின் தாக்கம்.

பிரித்தானிய காலனி ஆட்சியின் போது பெருந்தொகையான தொழிலாளர்கள் தென்இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் பெருந்தோட்டங்களிலும், நகரப்பகுதிகளிலும் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்தனர். 1921 இல் பெருந்தோட்டங்களின் இந்திய தொழிலாளர்களதும் அவர்களில் தங்கியிருப்போரதும் சனத்தொகை 490000 ஆக இருந்தது. பெருந்தோட்டத்துறை அல்லாத பிறதுறைகளின் இந்தியர்களின் சனத்தொகை 47000 ஆகும். 1946 ஆம் ஆண்டில் இந்தியர்களின் மொத்த சனத்தொகை 780000 ஆக இருந்தது. இத்தொகையில் பெரும்பங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், அவர்களது தங்கியிருப்போரையும் உள்ளடக்கியிருந்தது. இந்தியத் தொழிலாளர்கள் இவ்வாறாக நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பங்கினராக இருந்தனர். ஆயினும் பெருந்தோட்டத்துறையில் இந்தியத் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு உள்ளேயே அடைத்து வைக்கப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் தொழிற்சங்கங்கள் மூலமோ வேறு வகையிலோ ஒழுங்கமைக்கப்பட்டவர்களாகவும் இருக்கவில்லை. அவர்களிடம் 1930 வரை தொழிலாளர் வர்க்க உணர்வும் இருக்கவில்லை.

1930 களில் நகரத் தொழிலாளர் வர்க்கத்தினரில் இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர்களின் வீதாசாரம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக இந்தியத் தமிழர்களும், கேரளத்தில் இருந்து வந்த மலையாளிகளும் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பங்கினர் அரசாங்க திணைக்களங்களில் பயிற்றப்படாத தொழிலாளர்களாக வேலை செய்தனர். துறைமுகம், ரெயில்வே என்பவற்றிலும் முனிசிப்பல் சபையின் சேவைத் துறைகளிலும் இவ்விந்தியர்கள் பயிற்றப்படாத தொழிலாளர்களாக வேலை செய்தனர். இதனைவிட தனியார் தொழிற்சாலைகள், பொதுவான சமயாசமய ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்கள் என்ற வகையினராகவும் இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றினர். 1936 ஆம் ஆண்டில் அரசாங்க திணைக்களங்களின் தொழிலாளர்களில் 26 வீதத்தினர் இந்தியர்களாக இருந்தனர். (தமிழர்களும், மலையாளிகளுமான) இவ் இந்தியர் தொகை 1939 இல் 9 வீதமாகக் குறைந்தது. இவ்வாறு குறைவடைந்ததற்குக் காரணம் இந்தியத் தொழிலாளர்கள் 1931 – 1936 இற்கு இடையில் திருப்பி அனுப்பப்பட்டமையாகும். நகரத்தொழிலாளர்களில் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களும் இருந்தனர்.

1930 களில் சிங்களவர் அல்லாதவர் கூடிய வீதாசாரத்தில் தொழிலாளர்களாக இருந்தமையும், அவர்களின் வேலையின் இயல்பும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சில விசேட தாக்கங்களை ஏற்படுத்தியது. தோட்டத்தொழிலாளர்கள் கூலி உழைப்பாளர்கள் என்ற வகைமைக்குரியவராய் இருந்தனர். ஆயினும் கூலி உழைப்பாளர்க்ளுக்குரிய இயல்புகளில் சில இவர்களிடம் காணப்படவில்லை. அத்தொழிலாளர்கள் வேலைசெய்யும் தோட்டங்களிலேயே ‘லைன்’ வீடுகளில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். வேலையிடத்துடன் இவ்வாறு பிணைக்கப்படுதல் அரைநிலமானிய உறவுகளின் தன்மையுடையது. அவர்களின் கூலியின் ஒரு பகுதி பண்டங்களாக வழங்கப்பட்டது; கங்காணிகளின் மேற்பார்வைக்கு கட்டுப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர். அத்தியாவசியப் பொருட்கள் தோட்ட முதலாளிகளால் அல்லது கங்காணியால் வழங்கப்பட்டது. அதன் பெறுமதி கூலியில் இருந்து கழிக்கப்பட்டது. இவையாவும் கூலித்தொழிலாளர் (Wage Labour) என்ற தன்மையில்லாத அரைநிலமானியப் பண்புகளைக் கொண்டிருந்தன. இத்தொழிலாளர்கள் நகரத் தொழிலாளர் வர்க்கத்துடன் திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். தோட்டங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தன. இதனால் இவர்கள் வெளியே செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. ‘தோட்டத்திற்கு அந்நியமானவர்கள்’ அங்கு நுழைவதற்கு சட்ட ரீதியான தடை இருந்தது. இத்தொழிலாளர்கள் கல்வியறிவு அற்றவர்களாகவும் இருந்தனர். தோட்டங்களிற்குள்ளேயே கள்ளுத் தவறணைகளையும் கோவில்களையும் அமைத்துக் கொடுத்து தொழிலாளர்களை தோட்டத்திற்குள்ளேயே தடுத்து வைத்திருந்தனர். முகாமைத்துவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை அமைந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் அணி சேர்ப்பது மிகவும் கடினமான பணியாக இருந்தது.

plantation people (2)

மேற்குறித்தவற்றில் இருந்து ஓர் உண்மை வெளிப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்கம் இனக்குழுமப் பன்மைத்துவம் உடையதாக இருந்தது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் பிரத்தியேகமான இயல்புகள் வரக்கம் – இனக்குழுமம் தொடர்பை சிக்கலாக்கியது. தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பங்கினர்,

  • இறக்குமதி செய்யப்பட்ட இடம் பெயர்ந்த தொழிலாளர்களாய் இருந்தனர்.
  • அவர்கள் பெருந்தோட்டங்களின் எல்லைக்குள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

மேற்குறித்த இரு காரணங்களாலும் இத்தொழிலாளர்களின் பிரச்சினைகள் பொதுவான பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டிருந்தன.

அ. இத்தொழிலாளர்களின் குடியுரிமை

ஆ. வாக்குரிமை

இ. வேலை நிபந்தனைகள்

என்பன பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளில் இடதுசாரிகள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இந்தியத் தொழிலாளர்களின் மேற்கூறிய பிரச்சினைகள் சுதேசிகளின் நலன்களிற்கும் எதிரானவையாக இருந்தன. சிங்கள அரசியல்வாதிகளும், ஏ.ஈ. குணசிங்க போன்ற தொழிற்சங்கத் தலைவர்களும் அந்நியத்தொழிலாளர்களிற்கு எதிரான கூச்சலை கிளப்பினர். இக்கூச்சல்கள் 1920 களிலும் 1930 களிலும் கிளம்பின. அந்நியத் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்றனர்; அந்நியர்களை வேலையில் நிரந்தரமாக்குவதிலும், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதிலும் உள்ள அரசியல் ஆபத்துக்கள் என்கிற ரீதியில் கூக்குரல் எழுந்தது. இனவாதக் கூச்சல்கள் எழுந்த பின்னணியில் இடதுசாரிகள் இக்கட்டான நிலை ஒன்றிற்குத் தள்ளப்பட்டனர். மார்க்சிய, இடதுசாரி இயக்கத்தின் தொழிலாளர் வர்க்க சர்வதேசியம் என்ற கொள்கைக்கு ஏற்ப அந்நிய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பணியாற்றுவதா அல்லது இலங்கை மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக சிங்களத் தொழிலாளர்களின் நலன்களுக்கு அமைவாக இனவாதக் கொள்கைகளை ஆதரிப்பதா என்பதே இடதுசாரிகள் எதிர்நோக்கிய இக்கட்டான நிலையாகும். 1930 இற்கு முந்திய காலத்தில் இலங்கையின் இடதுசாரி இயக்கம் இவ்விரண்டு கொள்கைகளில் தொழிலாளர் வர்க்க சர்வதேசியம் என்ற கொள்கையை ஏற்றுச் செயற்பட்டது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11401 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)