நெருக்கடிக் காலத்தில் பெருந்தோட்டம்
Arts
9 நிமிட வாசிப்பு

நெருக்கடிக் காலத்தில் பெருந்தோட்டம்

October 9, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறை ஒட்டுமொத்தமாக அரசுடைமை ஆக்கப்பட்டபோது அங்கிருந்த ஒரு சாராரும் அரச சார்பு தொழிற் சங்கத்தினரும், இனிமேல் தோட்டத் தொழிலாளிகள் எல்லோருமே அரச உத்தியோகத்தர்கள் ஆகிவிட்டார்கள் என்று கொண்டாடினார்கள். ஆனால் அந்த எல்லா கொண்டாட்டங்களும் ஒருசில மாதங்களிலேயே சூரியனைக் கண்ட பனித்துளிகள் போல் கரைந்து போய்விட்டன. தோட்டங்கள் வெறுமனே வெள்ளை தோல் போர்த்த வெள்ளைக்காரனிடம் இருந்து கருப்புத் தோல் போர்த்த கருப்பு துரைகளிடம் மாறினவே அன்றி, அங்கே உண்மையான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இதன்மூலம் அரசாங்கத்துக்கு இருந்த மறைமுக நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மலைநாட்டின் அடிவாரத்தில் எல்லைப்புற சிங்கள குடியேற்றங்கள் அமைந்திருந்த 1000 அடி சம உயர கோட்டையை அண்டிய பகுதிகளில் தொளஸ்பாகை, குறுந்து வத்தை, உலப்பனை, கம்பளை தொடங்கி அவிசாவளை, ஹொறணை, இங்கிரியா வரை நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. இவ்விதம் கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலப்பரப்பில் தேயிலை நிலம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 267 ஏக்கர், தெங்கு பயிர் செய்கை நிலம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 350 ஏக்கர், ரப்பர் பயிற்செய்கை நிலப்பரப்பு 82 ஆயிரத்து 994 ஏக்கர், பயிரிடப்படாத காணி ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 267 ஏக்கர் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

இந்தக் காணிகள், இளைஞர்களுக்கு விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும் காணி அற்றவர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசுடமையாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்கு ஒரு துண்டுக் காணிகூட வழங்கப்படவில்லை என்பதிலிருந்து, மேற்படி நடவடிக்கை மலையக தமிழ் மக்களின் வாழ்விடப் பிரதேசங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி ஆக்கிரமிப்புச் செய்யும் செயலாகவே இருந்தது என்பது புரியும். இதனால், மலையக மக்கள் வசிக்கின்ற தேர்தல் தொகுதிகளில் அவர்களின் செறிவு குறைப்பட்டது. மலையக மக்கள் எந்த ஒரு தேர்தலிலும் தமக்காக ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்பதில் இனவாதிகள் மிகக் கவனமாக இருந்தார்கள்.

1970 களை அடுத்து வந்த தசாப்தத்தின் முதல் அரைப்பகுதி முழுவதும் இலங்கையைச் சூழ்ந்து கொண்ட பஞ்சம், வறுமை, பட்டினி மரணங்கள் தொடர்பிலும் அதில் எவ்வாறு மலையகத் தமிழ் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பிலும் சிங்கள எழுத்தாளர் உப்பாலி லீலா ரட்ண தனது ‘தே கஹட்ட’ ( தமிழில் :   ‘தேத்தண்ணி’ – இரா. சடகோபன்) என்ற நாவலில் பின்வருமாறு விபரிக்கின்றார் : 

” நாட்டில் புதிய கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தலைகீழாக மாற்றமடைந்தது. உள்ளூரில் தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. தேயிலைத் தோட்டங்களின் உரிமை தனியாரிடம் இருந்து பறிக்கப்பட்டு தேசிய உடமையாக்கப்பட்டதால் தமக்கு நன்மை கிடைக்கும் என்று கருதிய தோட்டத்தொழிலாளரின் நம்பிக்கை வீணானதாக மாறியது. அவர்களின் வாழ்க்கைத்தரம் முன்பை விட அதல பாதாளத்தை நோக்கிச் சரிந்தது. அவர்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த நிலைக்குத்தள்ளப்பட்டனர். அரசாங்கம் நாட்டின் இறக்குமதிப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதித்தது. உணவுப்பொருள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அரிசி, மாவு என்பனவற்றுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. உள்நாட்டு உணவுப்பொருட்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டாலும் அதன் சாத்தியப்பாட்டுக்கு உறுதியளிக்கப்படவில்லை.”

” உணவு மானியம் நிறுத்தப்பட்டது. உணவுப் பொருட்கள் கூப்பன் முறைமை மூலம் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மட்டும் விநியோகிக்கப்பட்டன. கோதுமை மா, பாண் என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவியது. அரிசி மற்றும் உணவுப்பொருட்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்துக்கு கொண்டு செல்வது குற்றமென பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் எந்தப் பொருட்கள் வாங்கச் சென்றாலும் கூட்டுறவு  சங்கங்களுக்கு முன்னாலும் கடைகளிலும் நீண்ட நேரம் வரிசைகளில் கால்கடுக்க நிற்க வேண்டி ஏற்பட்டது.”

” அப்படி பெற்ற உணவுப் பொருட்களும் போதுமானதாக இருக்கவில்லை. ஹோட்டல்களில் வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு மாத்திரமே அரிசிச் சோறு சமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலைமை பொதுவாக நாட்டு மக்கள் அனைவரையும் அரைப்பட்டினியில் இருக்க வைத்தது. அவர்கள் உடுத்தும் துணிகளுக்குக் கூட கூப்பன் முறை கொண்டுவரப்பட்டது. விவசாயிகள் கிடைத்த இடங்களில் எல்லாம் விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். இதனால் மக்களின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டது. சோற்றுக்குப்பதிலாக மரவள்ளி, வற்றாளை, சேமங் கிழங்கு, சோளம் என்பவற்றை உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய நிலையால் பெரிதும் துன்பப்பட்டவர்கள் தோட்டத் தொழிலாளர்களே. இவர்கள் உணவில் பெரிதும் இடம் பிடித்திருந்தது பாணும் ரொட்டியுமே. கோதுமை மாவு தட்டுப்பாட்டால் இவர்கள் இரண்டு வேளை உணவை இழந்தனர். ஒரு ராத்தல் பாணைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் குடும்ப அங்கத்தவர்கள் பாண் கியூ வரிசைகளில் சென்று பகல் பத்து மணிவரை நிற்க வேண்டி ஏற்பட்டது. அல்லது பட்டினிதான். “

” பணம் படைத்தோர் கறுப்புச்சந்தையில் பொருட்களை களவாக வாங்கினர். கூட்டுறவுச் சங்க கடைகளுக்கு வந்த பொருட்களும் களவாக கறுப்புச் சந்தைக்கு விற்கப்பட்டன. தோட்டத் தொழிலாளரும் கறுப்புச் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக தம்மிடமிருந்த சொற்ப நகை நட்டுக்களை அடகு வைத்து விரைவிலேயே ஓட்டாண்டி ஆனார்கள். நகை நட்டுக்கள் தீர்ந்த உடன் தத்தம் வீடுகளில் இருந்து செம்பு, பித்தளைப் பண்டங்களான அண்டா, குண்டா, கும்பா, குடம், குத்துவிளக்கு முதலானவற்றையும் அடகு வைத்தோ விற்றோ தீர்த்தனர். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அடகுக்கடைக்காரர்கள், மிகச் சொற்ப தொகைக்கு அவற்றை வாங்கி பணம் பெருக்கினார்கள்.”

அன்றைய நிலவரம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம். எஸ். செல்லச்சாமி தெரிவித்திருந்த ஒரு கருத்தை காங்கிரஸ் செய்தித்தாள் ( செப்டம்பர் 1976) பின்வருமாறு பிரசுரித்திருந்தது : 

” தோட்டங்கள் வெள்ளைக்கார துரைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த போதுகூட இத்தகையதொரு மோசமான துன்பகரமான நிலைமையை தொழிலாளர்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை. தொழிலாளர்கள் உழைப்புக்கான சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை. உணவுப் பண்டங்கள் விலை மிக அதிகமாக இருப்பதுடன் அவை கிடைக்கப் பெறுவதும் இல்லை. பாடசாலைகளும் டிஸ்பென்சரிகளும்கூட மூடப்பட்டுவிட்டன. இதில் மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால் முன்பு தனியார் துறையினர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளை விட இப்போது அரசாங்கம் இந்த மோசமான அக்கிரமமான நடவடிக்கைகளை இந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதுதான்.”

1970 முதல் 1974 வரை உள்ள காலப்பகுதியில் தின்பண்ட பொருட்களின் விலை 5 மடங்காக அதிகரித்தது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதன் பிரகாரம் அரிசியின் விலை 1 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக அதிகரித்தது. தேங்காய் ஒன்றின் விலை 15 ரூபாய் 20 சதத்திலிருந்து 75 ரூபாய் 90 சதமாக அதிகரித்தது. சீனி ஒரு ராத்தல் 72 சதத்திலிருந்து 5 ரூபாய்களாக அதிகரித்தது. மண்ணெண்ணெய் ஒரு கலன் 72 சதத்தில் இருந்து 3 ரூபாய் 60 சதமாக அதிகரித்தது. பயறு ஒரு ராத்தல் 70 சதத்தில் இருந்து 6 ரூபாயாக அதிகரித்தது.

வீதி எங்கும் பிச்சைக்காரர்கள் அலைந்து திரிந்தனர். வீட்டிலிருந்த 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டுப் பணியாளர்களாக அனுப்பும் பழக்கம் அதிகரித்தது. பட்டினி மரணங்களும் பரவலாக அதிகரித்தன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வா, சாவா என்ற நெருக்கடிநிலைக்கு தள்ளப்பட்டனர்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9308 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)