தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 2
Arts
24 நிமிட வாசிப்பு

தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் – பகுதி 2

October 11, 2023 | Ezhuna

ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன

மலையாளிகளுக்கு எதிரான இனவாதம்

1930 களில் முதற்தடவையாக கொழும்பு நகரின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரான மலையாளிகளுக்கு எதிரான இனவாத கூக்குரலை தொடக்கினர். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் எழுந்த இந்த இனவாத எதிர்ப்பை இடதுசாரி இயக்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. அக்காலத்தின் பொருளாதார மந்தம் வேலையின்மையை அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அந்நியர்கள் ‘மண்ணின் புதல்வர்களான’ சிங்களவர்களின் வேலைகள், வர்த்தக முயற்சிகள் என்பனவற்றை தட்டிப் பறிப்பதாகவும் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்நியர்கள் சிங்களப் பெண்களைக் கவர்ந்து கொள்வதாகவும் கூறப்பட்டது. (ஐயவர்த்தன 1985: 25-37)

விஷமத்தனமான இந்தப் பிரசாரம் 1930 களில் உச்சக்கட்டத்தை எய்தியது. ஏ.ஈ. குணசிங்கவின் தினசரியான ‘விராய’ இப்பிரசாரத்தை முன்னின்று தொடர்ந்தது. மலையாளிகளை ‘கொச்சியா’ என்று ஏளனம் செய்து, அவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. மலையாளித் தொழிலாளர்களுக்குச் சார்பாகச் செயற்பட்ட சமசமாஜக் கட்சித் தலைவர்களையும் ஏ.ஈ. குணசிங்க தாக்கிப் பேசினார். மலையாளிகளுக்கு எதிரான இயக்கத்தில் இன்னொரு அம்சமும் கவனிப்புக்குரிய ஒன்றாகியது.

கேரளாவின் கம்யூனிஸ்ட்டுகளுடன் லங்கா சமசமாஜக்கட்சியில் இருந்து 1940 இல் விலக்கப்பட்ட ‘ஸ்டாலினிசவாதிகள்’ தொடர்புகளை வைத்திருந்தனர். சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொழும்பு தொழிலாளர் கழகம் (Colombo Workers Club) என்ற அமைப்பை உருவாக்கினர். பின்னர் இக்கழகம் ஐக்கிய சோஷலிசக் கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. இறுதியில் 1943 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என இது பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கத்தின் அரைப்பங்கினர் மலையாளிகளான தொழிலாளர்களாக இருந்தனர். கொழும்பு நகரின் மலையாளித் தொழிலாளர்களும், மலையாளிக் கள்ளிறக்கும் தொழிலாளர்களின் தொழிற் சங்கமும் (அகில இலங்கை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம்) கம்யூனிஸ்ட் கட்சியின் ‘இலங்கை தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தின்’ (இ.தொ.ச.ச) முக்கிய தூண்போன்று 1940 களில் விளங்கின.

பெருந்தோட்டங்களின் இந்தியத் தமிழ் தொழிலாளர்கள்

இந்தியத் தொழிலாளர்கள் தமது கூலி, வேலைத்தல நிலைமைகள் முதலியனவற்றிற்காகவும், வாக்குரிமை போன்ற அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கு இடதுசாரிகள் உதவத் தொடங்கினர். சிங்கள முதலாளி வர்க்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது. அதற்கு தமிழ், முஸ்லிம் முதலாளி வர்க்கங்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உள்ளூராட்சி மட்டத்திலும் சட்டசபை தேர்தல்களின் போதும் வாக்குரிமையை வழங்கக் கூடாது என்பதில் சிங்கள முதலாளிவகுப்பு உறுதியாக இருந்தது. இதற்கு அத்தொழிலாளர்கள் தமிழர்களாக இருந்தமை ஒரு காரணம், மற்றது அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினராக இருந்தமை இன்னொரு காரணம். இவ்விதமாக வர்க்கம், இனக்குழுமம் என்ற இரண்டு காரணங்களின் அடிப்படையில் வாக்குரிமையை மறுக்கும் இனவாதப் பிரசாரம் தொடங்கப்பட்டது. இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டால் கண்டியின் சிங்களவர்களை அரசியல் ரீதியாக தமிழர்கள் பின் தள்ளிவிடுவர் எனப் பிரசாரம் செய்யப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழு விசாரணையைத் தொடக்கியபோது மேற்கண்டவிதமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் முன்மொழிவை ஆணைக்குழு முன்வைத்தது. 1936 இல் உள்ளூராட்சி தேர்தல்களில் இந்தியத் தமிழரின் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டது. பின்னர் 1948 இல் அவர்களின் குடியுரிமை அநீதியான சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டது. 1947 தேர்தலின் பின் Red Peril என்ற கோஷம் எழுப்பப்பட்டது. இந்தியத்தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற ஏழு சட்டசபை உறுப்பினர்களும் எல்லா விடயங்களிலும் பாராளுமன்றத்தில் இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட்டனர். 1947 நவம்பரில் ஆளுநர் உரை மீதான வாக்களிப்பில் இடதுசாரிகளுடன் ஏழு உறுப்பினர்களும் இணைந்து எதிராக வாக்களித்தனர். 1947 டிசம்பரில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்படுதலை வரவேற்று வாக்களிப்பு நிகழ்ந்தபோது வாக்களிப்பில் இவ் ஏழு உறுப்பினர்களும் கலந்து கொள்ளாது தவிர்த்தனர். 1948 இல் இந்திய குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது 52 வாக்குகள் ஆதரவாகவும் 32 வாக்குகள் எதிராகவும் இடப்பட்டன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷெவிக் லெனினிஸ்க் கட்சி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பனவும், தனி அங்கத்தவர்கள் சிலரும் எதிராக வாக்களித்தனர்.

1948 இன் குடியுரிமைச் சட்டம் இடதுசாரிகளின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தியத் தமிழ் தொழிலாளர்கள் வாக்குரிமையை இழந்தமையால் பாராளுமன்ற அரசியலில் அவர்கள் முக்கியத்துவம் அற்றவர்கள் ஆயினர். சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வா இது பற்றிச் சுட்டிக் காட்டியிருந்தார்.

“வாக்குரிமையைப் பறித்தமை ‘இந்திய எதிர்ப்பு’ நடவடிக்கையாகும். இதுவே அந்நடவடிக்கையின் பிரதான அம்சம் ஆயினும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் இயக்கத்திற்கு அது பலமான ஒரு அடியாகவும் இருந்தது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் மிகப் பெரிய அங்கமாக விளங்கிய இத்தொழிலாளர் பிரிவினர் பாராளுமன்ற அரசியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன் மூலம் இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் தேர்தல் அரசியலின் அடித்தளம் தகர்க்கப்பட்டது. இலங்கை முதலாளித்துவத்தின் எதிரியான தொழிலாளர் வர்க்கத்தின் பலம் குறைக்கப்பட்டு முதலாளிவர்க்கம் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.” (எளிமைப்படுத்திய தமிழாக்கம்).

1948 ஐ அண்மித்த ஆண்டுகளில் பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்கள் தமக்கான தொழிற்சங்கங்களை அமைத்து அவற்றில் இணைந்து கொண்டனர். அத்தொழிற் சங்கங்களின் தலைவர்களாக இந்தியத் தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விளங்கினர். தேசிய அரசியல் கட்சிகளான இடசாரிக் கட்சிகளின் தலைமைத்துவம் தமக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாடு பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் வெளிப்பட்டபோது இடதுசாரிகளுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ‘குறுகிய’ நோக்குடைய ‘இனவாதிகளான’ தலைவர்களை இத்தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டு, அரசியல் உணர்வும் வர்க்க உணர்வும் உடைய தேசியத் தலைமையை அவர்கள் கைவிட்டு விட்டதை இடதுசாரிகள் உணர்ந்தனர்.

தேசியக் கொடி

இடதுசாரிகள் தேசியம் பற்றிய ஏற்றுக்கொள்ளபட்ட வரையறைகளை மீறிச் சென்றதற்கு இன்னொரு உதாரணமாக தேசியக் கொடி என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். தேசியக் கொடி ‘நாட்டுப்பற்று’, தேசியவாதம் போன்ற உணர்வுகளை உடையவர்களுக்கு மனஎழுச்சியை தூண்டும் விடயமாகும். இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொடி ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. அவ்வேளை சிங்களவர் தமது சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கவேண்டும் என்று அழுங்குப்பிடியாக வாதாடினர். சிறுபான்மை இனத்தவர்கள் இதற்கு இணங்கவில்லை. இந்த விடயம் முதன்முதலாக பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிலிப் குணவர்த்தன அவர்கள் “சிங்களவர், டச்சுக்காரர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று இனக்குழு அடிப்படையில் பேசப்படும் கொடிகளில் எதனிலும் எனக்கு விருப்புக் கிடையாது. அவற்றைப் பற்றி நான் அக்கறைப்படப் போவதில்லை” என்றார், அத்தோடு “ஓர் இனக்குழுவின் தலைவர்கள் சிறுபான்மை மக்கள் மீது ஒரு குலக்குழுவின் கொடியைத் திணிக்க முயல்கிறார்கள். அது உண்மையில் ஒரு குறுகிய இனவாதத்தினை வெளிப்படுத்தும் கொடி ஆகும்.” என்றும் கூறினார். (ஹன்சாட் தொகுதி 2, 1918 : 3, 193). 1951 இல் மீண்டும் தேசியக் கொடி பற்றி விவாதிக்கப்பட்ட போது இடதுசாரிகள் பிலிப் குணவர்த்தன குறிப்பிட்டது போன்ற கருத்துக்களையே வெளிப்படுத்தினர். அவ்வாண்டில் சிங்கக் கொடியில் மஞ்சள், பச்சைக் கோடுகள் சேர்க்கப்பட்டு தேசியக் கொடியாக ஏற்கப்பட்டது. மஞ்சள் தமிழர்களையும், பச்சை முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களாக கொடியில் சேர்க்கப்பட்டன. அப்போது பிரேமலால் குமாரசிறி எள்ளி நகையாடும் வகையில் பின்வருமாறு கூறினார். அவரின் பேச்சில் இடதுசாரி கிளர்ச்சிவாதம் வெளிப்பட்டது.

” இக்கொடி சிங்களவர்களில் மிகவும் மோசமான இனவாதிகளின் ஆதரவுடன் ஏற்கப்பட்டுள்ளது. அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்யான வரலாற்றின்படி தம்மைச் சிங்கத்தின் வழி வந்தவர்கள் என நம்புகிறார்கள். இப்பொழுது வடிவமைக்கப்பட்டுள்ள கொடி சிங்களவர்களுக்குள் இருக்கும் இவ் இனவாதிகளுக்கு கொடுத்த விட்டுக் கொடுப்பு ஆகும். அவர்கள் பிரித்தானியரின் யூனியன் கொடியின் கீழ் வாழ விரும்புவார்கள். ஆனால் சிறுபான்மையினருக்கு நீதியான சலுகைகள் எதனையும் வழங்கமாட்டார்கள்.”  (ஹன்சாட் தொகுதி 9, 1951 : 1670 – 1)

1918 – 1951 காலத்தில் பிலிப் குணவர்த்தனவும், பிரேமலால் குமாரசிறியும் இனவாத எதிர்ப்புக் கருத்துக்களை உறுதியோடு எடுத்துக் கூறியதைக் காணலாம். இவ்விருவரும் சில ஆண்டுகளுக்கிடையில் சிங்களம் மட்டும் உத்தியோக மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தை தீவிரமாக ஆதரிப்போராக மாறிவிட்டனர். 

இடதுசாரிகளும் சர்வதேசியமும் : 1940 களில்

மலையாளிகள், பெருந்தோட்டத் தொழிலாளர், தேசியக் கொடி போன்ற விடயங்களில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டை மேலே குறிப்பிட்டோம். இவற்றுக்கு அப்பால் சென்று சில விடயங்களில் இடதுசாரிகள் கறாரான மார்க்சிய – சர்வதேசிய நிலைப்பாடுகளை எடுத்திருந்ததையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். BL1 என்ற சுருக்க எழுத்துக்களால் குறிப்பிடப்படும் ‘இந்திய போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி’ (இலங்கைக் கிளை), இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற இரு கட்சிகளும், 1940 களில் தேசிய இனப்பிரச்சினை (National Question) தொடர்பாக வெளியிட்ட கொள்கைகள், கருத்துக்கள் என்பன பற்றி இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது. அக்காலத்தில் இவ்விரு கட்சிகளும் தேசிய இனப்பிரச்சினையை அரசியல் புறச்சூழலில் வைத்துப் பார்க்காமல் அருவமான கருத்தாக, கோட்பாட்டு நிலைநின்று நோக்கினர். போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி தாம் ரொட்ஸ்கிச கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள் என்று ரொட்ஸ்கிச நான்காவது அகிலத்தின் நிலைப்பாட்டை எடுத்தனர். கம்யூனிஸ்ட் கட்சி ஸ்டாலினின் மூன்றாம் அகிலத்தின் கொள்கையை ஆதரித்தனர். ஒரு கட்சி ரொட்ஸ்கிசத்தையும், மற்றக்கட்சி ஸ்டாலினிசத்தையும் ஆதரித்தன. இவ்வாறு இரு கட்சிகளும் தேசிய இனப் பிரச்சினையை சர்வதேசிய நிலையில் வைத்துப் பார்த்தனரே தவிர, இலங்கையின் பிரத்தியேகமான யதார்த்த நிலையில் வைத்துப் பரிசீலனை செய்யத் தவறினர்.

1940 களில் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியன், பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தது. இக்கட்சி குறிப்பாக 1942 இல் தேசிய இனங்களின் பிரச்சினை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முஸ்லிம்கள் இந்தியாவின் தனித்துவமான தேசிய இனம் எனவும், அம்மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையும், பிரிந்து போவதற்கான உரிமையும் உள்ளது எனவும் கூறியது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் 1944 இல் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் வழியிலேயே சிந்தித்ததோடு இலங்கைக் தமிழர்களுக்கும் அதே போன்ற உரிமைகள் (சுயநிர்ணய உரிமை) உண்டு என்ற கருத்தை உள்ளடக்கிய சீர்திருந்தங்களை சிபாரிசு செய்தனர். அக்காலத்தில் தமிழர்கள் கோராத உரிமையை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. தமிழர் ஒரு தேசிய இனம் (Tamil Nation) என்ற கருத்தை சமஷ்டிக் கட்சி 1951 ஆம் ஆண்டிலேயே முன்வைத்தது. ஆனால் 1914 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த திட்டம் இலங்கைக்கு சமஷ்டி முறையையும், சுதந்திரத்தையும் கோரியதோடு இலங்கையில் வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் தனித்துவமான தேசிய இனங்கள் அவை வரலாற்று ரீதியாக உருவான தேசிய இனங்கள்’ என்றும் குறிப்பிட்டிருந்தது. (Distinct Nation Distinct, historically Evolved Nationalities – இக்கூற்றை மைக்கல் றொபர்ட்ஸ் 1979:15 மேற்கோள் காட்டியுள்ளார்.)

இலங்கையின் ரொட்ஸ்கிசவாதிகளிடம் 1940 களில் சர்வதேசியம் செல்வாக்குப் பெற்றிருந்தது. சமசமாஜக் கட்சியின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தன, டொரிக் டிசூசா ஆகியோர் தலைமையில் பிரிந்து சென்று, இந்திய போல்செவிக் லெனிலிஸ்ட் கட்சியை ஆரம்பிப்பதற்கு ஆதரவு வழங்கினர். இக்கட்சி நான்காவது அகிலத்தின் ஒரு பிரிவாக இருந்தது. மேற்குறித்த தலைவர்கள் இந்திய போல்செவிக் லெனினிஸ்ட் கட்சியின் இலங்கைக் கிளை அலகாக செயற்பட்டனர். 1946 இல் போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி ஒரு அறிக்கையை ‘இலங்கைக்கான திட்டம்’ (Program for Ceylon) என வெளியிட்டது. இவ் அறிக்கை இலங்கை சமசமாஜக் கட்சியின் 1941 இன் சமசமாஜக் கட்சியின் திட்டத்தை (Program of The LSSP) கண்டித்து விமர்சனம் செய்தது. சமசமாஜக் கட்சி “இலங்கையில் தேசியப் புரட்சி பற்றிப் பேசுகிறது. இது கோட்பாட்டு ரீதியில் தவறான ஒரு கருத்து” என்று விமர்சிக்கப்பட்டது. சமசமாஜக் கட்சியின் 1941 திட்டத்தை விமர்சித்த போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி பின்வருமாறு தனது வாதத்தை முன்வைத்தது.

” இலங்கையின் புரட்சி ஏகாதிபத்திய ஆட்சியைத் தூக்கி வீசும் முறையில் இலங்கைக்குள் உள்ள சக்திகளின் முயற்சியினால் மட்டும் தனிமைப்பட்டு நின்று வெற்றியடைய முடியாது. இலங்கை இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. இப்புவியியல் பிணைப்பு மட்டுமல்லாமல் பொருளாதார பண்பாட்டு நிலையிலும் நெருங்கிய பிணைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ளன. அத்தோடு இவ்விரு நாட்டு மக்களும் பொது எதிரியால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளனர். பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியப் புரட்சியில் இலங்கையிள் வெகுஜனங்கள் பங்கு பெறுவதைத் தவிர்க்க முடியாத நியதியாக்கியுள்ளது. இலங்கை மக்கள் இந்திய மக்களுடன் சேர்ந்து பிரித்தானிய ஏகாதிபத்திய நுகத்தடியை தூக்கி வீசுவது உறுதியாகிவிட்டது.” (நான்காவது அகிலம் ஒக் 1946 : 316)

” இலங்கை பிரித்தானியாவின் பலம் வாய்ந்த கோட்டையாக இருக்கும் வரை பிரித்தானியா கிழக்குலகை ஆதிக்கம் செய்யும்” என்றும் ஆகையால் இந்தியாவின் விடுதலையை இலங்கையின் விடுதலையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றும் போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி கருதியது. ஆகையால் இலங்கையின் புரட்சிப் போராட்டம் இந்திய துணைக் கண்டத்தின் விடுதலைப் போரின் ஒவ்வொரு கட்டத்துடனும் பிணைக்கப்பட்டிருப்பதோடு இந்தியப் புரட்சியின் முழுமையான பரிமாணத்தின் பிராந்திய அம்சம் என்ற நிலையில் இந்தியப் புரட்சியோடு தொடர்புபட்டும் உள்ளது.” (மேலது) எனக் கூறப்பட்டது.

மேற்குறித்த பின்னணியில் இலங்கை மக்களின் சுயநிர்ணய உரிமையையும் போல்செவிக் லெனினிஸ்ட் கட்சி வலியுறுத்தியதோடு, இலங்கை மக்களின் நலன்கள் இந்தியர்களின் நலன்களுக்குக் கீழ்ப்பட்டதாக இருக்க முடியாது என்றும் அக்கட்சி கூறியது.

” இந்தியப் புரட்சியினால் ஏகாதிபத்தியம் அழித்தொழிக்கப்பட்ட பின்னரே இலங்கை மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்த முடியும். அதன் பின்னர் இலங்கை மக்கள் தமது எதிர்காலம் பற்றித் தாமே முடிவு செய்வர். இந்தியாவுடன் சமஷ்டியின் ஒரு அலகாக இணைந்து கொள்வதா அல்லது அவ்வாறான சமஷ்டியில் இணைந்து கொண்ட பின்னர் அச்சமஷ்டியில் இருந்து ஏதேனும் ஒருகட்டத்தில் பிரிந்து செல்லவேண்டுமா என்பதையும் இலங்கை மக்களே தீர்மானிப்பார்கள்.” (மேலது பக். 317)

போல்செவிக் லெனினிஸ்ட் கட்சியின் நிலைமாறு காலத்திட்டம் ‘இலங்கைத் தேசத்தின் பிரத்தியேகமான நிலைமைகள்’ பற்றியும் பின்வருமாறு குறிப்பிட்டது.

” இலங்கை, இந்தியாவில் இருந்து அரசியல் நிலையில் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பூஷ்வா வர்க்கத்திற்கும் அதன் குட்டி பூஷ்வா வர்க்கத்திற்கும் இடையே முரண்பாடுகள் வலுத்துள்ளன. இலங்கைக்கு தனியான தேசிய பண்பாட்டுப் பாரம்பரியமும் உள்ளது. இம்மூன்று காரணிகளும் ஒன்றிணைந்து இலங்கையில் இந்திய எதிர்ப்பு உணர்வையும் பலமான தேசியவாதப் போக்கையும் உருவாக்கியுள்ளது. இவ் இந்திய எதிரப்புத் தேசியவாதம் தொடர்ச்சியாக தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் புகுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் இனவாதத்தை அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்க்க வேண்டியதும், விட்டுக் கொடுக்காது போராடுவதும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிப் போராட்டத்தில் இந்தியாவுடன் இலங்கை ஐக்கியப்பட்டு நிற்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுவதும் எமது கட்சியின் கட்டாய பணியாகும். அத்தோடு இலங்கை மக்களின் சுயநிர்ணய உரிமையை உரத்துக் கூறுவதும் போல்செவிக் லெனினிஸ்டுகளின் கடமையாகும்.” (மேலது பக்: 319).

மொழிகளின் சமஅந்தஸ்து

உத்தியோக மொழிகள் பிரச்சினை தொடர்பாக இடதுசாரிகள் 1956 ஆம் ஆண்டளவில் அரசின் கொள்கைகளுக்கு மாறாக முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டம் இனவாத எதிர்ப்பின் உச்சநிலையைத் தொட்டது. அவ்வேளை பாராளுமன்றத்தில் இவ்விடயம் விவாதிக்கப்பட்ட போது இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களிடையே பல மட்டங்களிலும் கொள்கை சார்ந்த சந்தேகங்கள் நிலவின. இருந்தபோதும் மக்கள் மத்தியில் தாம் செல்வாக்கு இழக்கப் போகிறோம் என்பதையும் பொருட்படுத்தாது சிங்களம் மட்டும் சட்டத்தை, தமிழை ஒதுக்குவதை எதிர்த்து பாராளுமன்ற விவாதத்தில் சமசமாஜக் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைவர்கள் உரையாற்றினர். அவ்வேளை நாட்டில் இனவாதமும் மொழிவெறியும் தலைவிரித்து ஆடின என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

1940 ஆம் ஆண்டு சட்டசபையில் நியாயமான கால எல்லைக்குள் ‘சிங்களத்தை இலங்கையின் உத்தியோக மொழியாக ஆக்க வேண்டும்’ என்ற பிரேரணையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்மொழிந்தார். அப்போது சட்டசபையில் இருந்த தமிழ் உறுப்பினர்கள் தமிழையும் உத்தியோக மொழியாக ஆக்கவேண்டும் என்ற திருத்தத்தைச் சிபாரிசு செய்தனர். அத்திருத்தத்துடன் கூடிய பிரேரணை 27 வாக்குகள், எதிர் 2 வாக்குகளால் நிறைவேறியது. அவ்வேளை ஜே.ஆர். ஜெவர்த்தனவால் பிரேரிக்கப்பட்ட பிரேரணை ‘சிங்களம் மட்டும்’ என்பதாகவே இருந்ததைக் கவனித்தல் வேண்டும். 1955 ஆம் ஆண்டு வரை சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளும் உத்தியோக மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்கப்பட்டிருந்தது. ஆயினும் சிங்கள மக்களிடையே நடைபெற்று வந்த ‘சுயபாஷா’ பிரச்சாரம் உண்மையில் சிங்கள மொழியை உத்தியோக மொழியாக ஆக்கவேண்டும் என்பதாகவே இருந்தது.

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் சிற்றளவு உற்பத்தியாளர்கள் என்ற பல்வகையினரையும் உள்ளடக்கிய குட்டி முதலாளி வர்க்கம் மொழிக் கொள்கை விடயத்தில் உணர்வு ரீதியாக ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தது. சிங்கள மொழியில் கற்றவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் உயர்ந்த சம்பளத்தை பெறக்கூடிய பதவிகள் கிடைக்கும் என்றும் இவ்வர்க்கத்தினர் நம்பினர். இவ்வர்க்கத்தினரின் சிங்களமொழி இயக்கத்தை தலைமை தாங்கி நடத்துவதில் சிங்கள ஆசிரியர்கள், பௌத்த பிக்குகள் என்ற இருபிரிவினர் முன்னணியில் நின்றனர். இவர்களுள் சிங்கள ஆசிரியர்களில் பெரும் எண்ணிக்கையினர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும், இடதுசாரிக் கட்சிகளிலும் அங்கத்தவர்களாக இருந்தனர். பௌத்தபிக்குகள் பெளத்த சமயத்திற்கும், சிங்கள மொழிக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருப்பதாக நம்பினர். இப்பின்னணியில் ‘சுயபாஷா பெரமுன ‘ (சுயமொழி முன்னணி) என்ற இயக்கம் ‘பாஷா பெரமுன’ என மாற்றம் பெற்றமை கவனிக்கத்தக்கது.

1951 ஆம் ஆண்டளவிலேயே ‘அகில இலங்கை சுயபாஷா ஆசிரியர் தொழிற் சங்கம்’ உத்தியோக மொழிப் பிரச்சினை (ராஜ்யபாஷா பிரஸ்யை) என்ற பெயரில் சிங்களத்தில் ஒரு சிறுபிரசுரத்தை வெளியிட்டது. அப்பிரசுரத்தில் சிங்களம், தமிழ் என்ற இரு மொழிகளும் உத்தியோக மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்துக் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு அவை உத்தியோக மொழிகளாக ஆக்கப்படுதல் மூலம் அவை கல்விக்கான பயிற்று மொழிகளாக ஆக்கப்படும். அதன் மூலம் தமது உயர் இலக்கு அடையப்படும் என ஆசிரியர் தொழிற் சங்கத்தினர் கருதினர். அவர்கள் மக்களைத் தமது இயக்கத்தில் அணிதிரட்டுவதற்காக பண்பாட்டு அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டனர். உத்தியோக மொழியாக ஏற்புடமை பெறுவதால் அரசாங்க நிர்வாகம் மக்களின் மொழியிலேயே நடத்தப்படும். அது ஒரு ஜனநாயகத் தேவையும் ஆகும். ஆயினும் இவ்வியக்கத்தினர் ஜனநாயகத் தேவை என்பதை மட்டும் தமது இலட்சியமாகக் கொள்ளவில்லை. உத்தியோக மொழி விடயம், தேசிய அடையாளத்தை நிறுவுதலும் அவ்வடையாளத்தை பாதுகாப்பதும் ஆகும் என்பதே அவர்களின் இலட்சியமாக இருந்தது. மேற்குறித்த ‘ராஜ்ய பாஷா பிரஷ்யை’ என்ற பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

“எமது இப்போராட்டம் அரசியல் போராட்டம் மட்டுமன்று, இது பண்பாட்டு உரிமைகளைப் பெறுவதற்குமான போராட்டமாகும். ஆகையால் இந்நாட்டின் எந்தவொரு குடிமகனும் இவ்வியக்கத்தில் பங்கேற்காது, விலகியிருப்பார் என்று நாம் கருதவில்லை! “

இப்பிரசுரத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கும் ‘அந்நிய செல்வாக்கு’ போன்ற சொற்பதங்களும், அந்திய எதிர்ப்புச் சொல்லாடலும் குட்டி முதலாளித்துவக் கருத்தியலின் பண்புகளை வெளிப்படுத்துவனவாய் உள்ளன. ஆங்கிலம் பேசும் ஆட்சியாளர்களான உயர் குழாம் தமது கோரிக்கைக்கு எதிராக இருப்பதாகவும் இப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் இனவாதத்தைத் தொடக்கிவைத்தவராக சிங்கள் பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவரான அநகாரிக தர்மபாலவைக் குறிப்பிடலாம். அவரின் தந்தை தளபாடங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றைக் கொழும்பில் நடத்தி வந்தார். இவர் அக்காலத்தின் கொழும்பு நகரின் சிங்கள வர்த்தகர்கள் சிலரில் ஒருவராவர். அநகாரிக தர்மபாலவின் சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் பண்பாட்டு மறுமலர்ச்சி இயக்கமாகும். அது அந்நியப் பண்பாட்டுத்தாக்கத்திற்கு எதிரானது ஆயினும் அதன் எதிர்ப்பு ஏகாதிபத்தியத்தை நோக்கியதாக இருக்கவில்லை. மேற்குலகின் பண்பாட்டு ஊடுருவலை எதிர்ப்பதாகவே இருந்தது. அவரின் சொல்லாடல் சிங்கள பௌத்த வர்த்தகர்கள், கடைவியாபாரிகள், எழுதுவினைஞர்கள், குட்டி முதலாளித்துவ புத்திஜீவிகள் ஆகியோரைக் கவரும் மக்கள் வாதமாக (Populism) இருந்தது. அவரது கருத்துக்கள் நவீன காலத்தின் பெருந்தேசிய வாதம், அந்நியர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் எதிரான இனவாதம் என்பனவற்றின் தோற்றத்தை எடுத்துக் காட்டுவன.

அவை பிறசமயங்களை ஒதுக்கும் இனவாதமாகவும் இருந்தது. அந்நிய பண்பாட்டு தாக்கங்களை எதிர்க்கும் இயக்கங்கள் வெகு ஜனங்களை அணிதிரட்டும் வல்லமை உடையனவேனும், அவை இனவாதமாகச் சீரழிவதும் உண்டு. பெரும்பான்மை இனக்குழுமத்திற்கு அல்லது சமயக் குழுமத்திற்கு வெளியே நிற்கும் அந்நியராக சிறுபான்மை இனமக்களை இனங்காட்டும் இவ்வியக்கங்கள் மக்கள் திரளை சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகச் செயற்படத் தூண்டிவிடுகின்றன.

அந்நிய எதிர்ப்பு, சிறுபான்மை மக்கள் மீதான எதிர்ப்பு என்ற இரு போக்குகள் பண்பாட்டு ‘மறுமலர்ச்சி’ இயக்கத்தில் வெளிப்பட்டதை மேலே குறிப்பிட்டோம். 1920 களில் இலங்கையில் தீவிரவாத இளைஞர் குழுக்கள் ஏ.ஈ. குணசிங்க தலைமையிலும் பிற இயக்களின் தலைமையிலும் அணி திரண்டபோது, அக்குழுக்கள் அந்நிய எதிர்ப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை உணர்வு என்ற இரு போக்குகளையும் வெளிப்படுத்தின. குணசிங்கவின் மதிப்புக்குரிய வீரபுருஷராகவும், குருவாகவும் தர்மபால விளங்கினார். 1920 களில் குணசிங்க முன்னெடுத்த தொழிற்சங்க வேலை நிறுத்தங்கள் போன்ற போராட்டங்களின் போது அந்நிய எதிர்ப்புத் தீவிரவாதமும் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமும் வெளிப்பட்டன. காலனிய ஆட்சியாளர்களையும், முதலாளிகளையும் தனது தொழிற்சங்கப் போராட்ட நடவடிக்கைகள் ஊடாகத் துணிச்சலோடு எதிர்கொண்ட ஏ.ஈ. குணசிங்க 1930 களில் தன் கொள்கைகளையும் நடைமுறைகளையும் தலைகீழாக மாற்றிக் கொண்டார். இனவாதத்தைக் கிளப்பியதோடு மட்டுமன்றி முதலாளிகளோடு கூட்டுச் சேர்ந்து தொழிலாள வர்க்கத்திற்குத் துரோகம் இழைக்கவும் ஆரம்பித்தார். இறுதியில் அவர் வலதுசாரி அரசியலில் முக்கிய பங்காளி ஆகினார்.

1930 களில் இடதுசாரிகள் அரசியல் அரங்கிற்கு வந்தனர். அவர்களது வரவுடன் தொடக்க காலத்தின் தேசியவாதம், அந்நிய எதிர்ப்புத் தீவிரவாதம் என்பனவற்றில் சோஷலிசம் கலப்புற்றது. 1935 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி வெளியிட்ட கொள்கைப் பிரகடனத்தில் சோஷலிசக் கலப்புடைய தேசியவாதமும், தீவிரவாதமும் கோரிக்கைகள் வடிவில் வெளிப்பட்டன. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் கிராமப்புறக் குட்டி முதலாளிவர்க்கக் குடும்பங்களில் தோன்றியவர்கள். பௌத்த பாடசாலைகளில் கல்விகற்று தர்மபாலவின் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கருத்துக்களை உள்வாங்கியவர்களாயும், இந்தியாவினதும் ஆசிய நாடுகளினதும் தேசியவாதங்களால் கவரப்பட்டவர்களாகவும் விளங்கினர். இலங்கையின் குட்டி முதலாளி வர்க்கத்தினரிடையே தேசியவாதம், பண்பாட்டு மறுமலர்ச்சி, இனவாதம், சோஷலிசம் ஆகியன தொடர்பாக 1930 களில் மூன்றுவித போக்குகள் வெளிப்பட்டன. அவை:

அ) ஏ.ஈ. குணசிங்கவின் இனவாதம்

குணசிங்க இனவாதத்தை வெளிப்படையாகப் பேசினார். அவரின் கருத்துக்களிற்கு சிங்கள புத்திஜீவி வகுப்பினரின் ஆதரவு கிடைத்தது. சிங்களவர்களான தொழிலாளர்களிடமும் அவரது இனவாதக் கருத்துக்கள் ஆதரவைப் பெற்றன.

ஆ) எஸ்.டபிள்யு. ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிங்கள மகாசபை இயக்கம்

இவ் இயக்கம் சிங்களவர் என்ற அடையாள உணர்வை அழுத்திக் கூறியதோடு சிங்களவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியது.

இ) சோஷலிசம்

1935 தொடக்கம் லங்கா சமசமாஜக் கட்சியும், 1940 களில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோஷலிசக் கருத்துக்களை முன்வைத்தன. இக்கட்சிகள் குட்டி முதலாளி வகுப்பின் தீவிரவாதப் பிரிவினரை வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க வைத்ததுடன் தமது அணியினருக்கு சர்வதேசியம் சார்ந்த கொள்கைத் திட்டத்தையும் வழங்கினர்.

1935 தொடக்கம் 90 வரையான காலப்பகுதியில் இலங்கையின் இடதுசாரிகள் சர்வதேசியம் (Internationalism) என்ற கொள்கையை பின்பற்றினர். ஆயின் 1960 களில் இடதுசாரிகளுக்குள் இருந்த குட்டி முதலாளித்துவப் பிரிவினரின் செல்வாக்கு மேலோங்கியது. அவர்களின் இனவாதக் கருத்துக்கள் அரசியல் அரங்கங்களில் வெளிப்பட்டன. தர்மபாலாவின் இனவாதச் சொல்லாடல் வெளிப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து பிலிப் குணவர்த்தன பிரிந்து சென்று விப்ளவக்கார லங்கா சமசமாஜக்கட்சி (VLSS) என்னும் கட்சியை உருவாக்கினார். இதற்கு பின்னரும் 1963-1976 காலத்தில் இரு இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டமைத்து ஐக்கிய முன்னணி ஆட்சியை அமைத்தனர்!

சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தமையை ‘வலதுசாரித் திசைவிலகல்’ என்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிற்காலத்தில் வருணித்தது. 1960 களிலும் 1970 களிலும் குட்டி முதலாளி வகுப்பைச் சேர்ந்த தனி நபர்கள் புகுந்து கொண்டு அவ்வர்க்கக் கருத்தியலை உள்நுழைத்ததே இதற்கான காரணம் என அக்கட்சி கூறியது.

” எமது கட்சியில் ஆரம்பித்தில் இருந்தே வலதுசாரி போக்குடையோர் சேர்ந்திருந்தனர். கட்சியின் கட்டமைப்பில் குட்டி முதலாளித்துவ சக்திகள் பலம் பெற்றிருந்தமையே இதற்கான காரணமாகும். சுயமொழியில் கல்வி கற்றவர்களான, கிராமப்புறத்துக் குட்டி முதலாளிகள் கடந்த இருபது ஆண்டு காலத்தில் முற்போக்கு இடதுசாரி இயக்கத்தின் அரசியல் தலைமைத்துவத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நகரம் சார்ந்த ஆங்கிலம் கற்ற பிரிவினரிடம் இருந்து கட்சியின் தலைமைத்துவம் கிராமப்புறக் குட்டி பூர்ஷ்வாப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.”

கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணி இக்கால அனுபவம் பற்றி சுயவிமர்சன முறையிலான அறிக்கையை பின்னர் வெளியிட்டது (On our experience of work in the SLFP – LSSP – CPSI United front and its Government P.5). அவ்வறிக்கையில் இருந்து பெறப்பட்ட மேற்கோள் மேலே தரப்பட்டுள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10504 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)