நாட்டில் எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தலைவிரித்து தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவிதமான திட்டமும் இருக்கவில்லை. அவர்களின் உள்நாட்டு தேசிய பொருளாதாரத் திட்டமெல்லாம் பொய்யாகிக் கொண்டிருந்தது. அக்காலத்தில், மலையக மக்களுக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த ஏ.அசீஸ் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரால் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். தோட்டத் தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியாலும் செத்து மடிவதை பொறுக்கமுடியாமல், அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் குறைந்தபட்சம் அரிசியும் மாவுமாவது வழங்க வேண்டுமென்றும் அவர் பாராளுமன்றத்தில் கொடுத்த குரல், யாருடைய செவியையும் எட்டவில்லை.
இது தொடர்பாக ஒரு ஆய்வில் தனது குறிப்பை பதிவு செய்திருக்கும் ஆய்வாளர் கே. எம். டி. சில்வா தெரிவித்திருப்பதாவது :
” பொதுவாக நாடுமுழுவதும் பஞ்ச நிலைமை காணப்பட்ட போதும் அது தோட்டத்தொழிலாளர்களை மிக ஆழமாகப் பாதித்ததற்கு காரணம் அவர்களுடைய வருமானம் மிகக் குறைந்ததாக காணப்பட்டமையாகும். ஏனைய நகர்ப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கம் சற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையால், அரிசிக்கு பதிலாக அவர்கள் பல்வேறு உணவுப் பண்டங்களையும் வாங்கி உண்ணக் கூடியதாக இருந்தது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரிசியையும் மாவையும் மட்டுமே பெரிதும் நம்பி இருந்தார்கள். அந்த இரண்டுமே கிடைக்கப்பெறாத நிலையில் அவர்களின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அவர்கள் வறிய மக்கள் என்பதற்கு பதிலாக ‘பஞ்சப் பரதேசிகள்’ என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டனர். “
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத தொழிற்சங்கங்கள், தங்கள் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த தொழிற்சங்க போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். இந்த தொழிற்சங்க போராட்டத்தில் 2 தொழிற்சங்க கூட்டமைப்புகளைக் கொண்ட 13 தொழிற்சங்கங்கள் பங்குபற்றின. பெருந்தோட்டத்துறை தொழிற் சங்கங்களின் கூட்டு கமிட்டி பின்வரும் போராட்ட கோரிக்கைகளை அறிவித்தது :
- தொழிலாளர் குடும்பங்களுக்கு போதுமான அளவுக்கு உணவு பண்டங்கள் வழங்கப்பட வேண்டும்.
- மாதச் சம்பளம் 180 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
- மாதாந்தம் அலவன்ஸ் கொடுப்பனவாக 20 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்க கூட்டு கமிட்டியில் பின்வரும் தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்தன.
- இலங்கை தோட்ட சேவையாளர் யூனியன்.
- இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன்.
- தேசிய தொழிலாளர் காங்கிரஸ்.
- செங்கொடிச் சங்கம்.
- இலங்கை விவசாய தோட்டத் தொழிலாளர் யூனியன்.
- இலங்கைத் தொழிலாளர் கழகம்.
- மலைநாட்டு தொழிலாளர் யூனியன்.
ஏனைய தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியில்,
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
- இலங்கை மேர்க்கன்டைல் யூனியன்
- தொழிற்சங்கங்களின் மத்திய கமிட்டி
- லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன்
- லங்கா விவசாயத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ்
- பொதுச்சேவை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு
என்பவை இணைந்திருந்தன.
இவர்களது கோரிக்கைகள் முற்றிலும் உள்வாங்கப்பட்டு அதற்கான பரிகாரங்கள் வழங்கப்படவில்லை. அற்பத்தனமான 10 சதவீத சம்பள அதிகரிப்பை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது. தொழிலாளர் வாழ்வில் தொடர்ந்தும் அரைப்பட்டினி நிலைமை அதிகரித்துக் கொண்டிருந்தது. அவர்களது பிரதான உணவாக இருந்த அரிசி, மா, பாண் ஆகியன கிடைக்காத நிலையில் அவர்கள் இலைகுழைகளை அவித்துத் தின்னும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். தாய்-சேய் மரணம் உச்ச சதவீதத்தில் காணப்பட்டது. ரத்தசோகை, மந்த போசணம் ஆகிய நோய்நிலமைகள் ஏற்பட்டன. பசி தாங்க முடியாத சிலர் கரையான் புற்று மண்ணைக் கூட விட்டுவைக்கவில்லை.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப் பத்திரிகையான ‘எத்த’ 1973 நவம்பர் 8 ஆம் திகதி தனது ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தது :
” அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டு இருக்கின்ற உணவுப்பொருள் கட்டுப்பாட்டு காரணமாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தொழிலாளர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த உணவு பஞ்சத்தின் மத்தியில் வாழ்கின்றார்கள். கிராமத்து மக்களோ பலாக்காயையோ ஈரப்பலாக்காயையோ அவித்து சாப்பிட்டு தம் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். நகரப்புற மக்களோ கிராமங்களில் இருந்து வந்து சேரும் உப உணவுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி பசி தீர்க்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் தோட்டத் தொழிலாளர் மத்தியில் இந்த நிலைமை காணப்படவில்லை. அவர்கள் முற்றிலும் கூப்பன், ரேஷன் பொருட்களிலேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு விதமாக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் மார்க்கங்கள் எல்லாமே அடைக்கப்பட்டு விட்டன. ஆதலால் இந்த மக்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் மேலும் அக்கறை செலுத்த வேண்டும்.”
இந்த நிகழ்வுகள் எல்லாம் இணைந்து இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு தீர்க்கமான நிலையை அடைந்திருந்தன. தோட்டத் தொழிலாளர்களால் ஆரம்பிக்கபட்ட தொழிற்சங்க போராட்டத்துக்கு நாட்டின் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க முன்வந்தன. மேற்படி தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்து 1973 நவம்பர் 13 ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதென்று அறிவித்தனர். நுவரெலியா நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பங்கு கொண்டனர். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் ஆகியோருடன் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களுமான மத்திய கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆர். பிரேமதாச, காலி தேர்தல் தொகுதி உறுப்பினர் டபிள்யூ. தஹாநாயக்க, ஹபரதுவ தேர்தல் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் குணசேகர, கண்டி பாராளுமன்ற உறுப்பினர் இ.எல். சேனநாயக்க, நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் காமினி திசாநாயக்க, உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் எம். அருணாசலம், அதன் செயலாளர் எம்.எஸ். செல்லசாமி, தெடிகம தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ருக்மண் சேனாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் பின்வருமாறு :
தோட்டத் தொழிலாளர்களுக்கான உணவுப் பொருட்களின் விநியோகத்தை அரசாங்கம் இந்த அளவுக்கு குறைத்து இருக்குமாயின் அதன் பின்னணியில் சதித்திட்டம் ஒன்று காணப்பட வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. இது முற்றிலும் அவர்களை கொன்று தீர்த்து விடுவதற்கான ஒரு திட்டமாகவே காணப்படுகிறது. அப்படி அவர்களை முற்றாக கொன்றொழித்துவிட்டால் இந்திய நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் ஊசலாடுகின்ற மலையகத்தவரின் ‘நாடற்ற மக்கள்’ என்ற நிலையை இல்லாதொழித்துவிடலாம் என்று அரசாங்கம் கருதுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வியில் எந்த அளவுக்கு உண்மைகள் உள்ளன என்று தீர்மானிப்பதற்கு பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
தொடரும்.