சோனகர் தொன்மங்கள்
கீழைக்கரையின் சிறப்புமிக்க சமூகங்களுள் ஒன்றான ஈழத்துச் சோனகரின் தோற்றத்தில், தமிழகத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் குடிவந்த மரைக்காயர்கள், மாப்பிள்ளைகள், லெப்பைகள், ஆப்கானின் ப`ச்தூன் பிராந்தியத்துப் பட்டாணியர், துருக்கி நாட்டின் துலுக்கர்கள், மத்திய கிழக்கு நாடுகளினின்று வந்த வணிகர்கள், மார்க்க அறிஞர்கள் என்றவாறு பலருக்கும் பங்குண்டு (McGilvray, 1998: 433 – 481). கீழைக்கரையில் மீளமீளப் பதிவாகியுள்ள திமிலர் – முக்குவர் முரண்பாட்டில் பட்டாணியர் கொண்டிருந்த வகிபாகத்தின் மூலம் இவர்களுக்கு முக்குவரோடு இருந்த நெருங்கிய தொடர்பு தெரியவருகின்றது. கீழைக்கரையின் ஏனைய தமிழ் பேசும் சமூகங்கள் போல, சோனகரின் வரலாறும் எழுத்திலோ பொறிப்பிலோ தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை. எனினும் சோனகர்களின் கீழைக்கரைக்கான வருகையும் வாழ்வியலும் அவர்கள் மத்தியில் நீடித்த வாய்வழிப் பாடல்கள், “கவி” பாடல்கள், தொன்மக்கதைகள் என்பனவற்றின் ஊடே சில இடங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது ( |செமீல் 1997, காசிம்|சி, 2002, இத்ரீ|ச் 2011).
இந்தவகையில் காசிம்|சியால் 2002 இல் தொகுத்து வெளியிடப்பட்ட நூல் சோனகத் தொன்மங்கள் அடங்கிய முதன்மையான நூலாகக் கருதப்படவேண்டியது,. அதன் முதற்பாகத்தில் 1918.06.12 திகதியிட்டு கல்முனைக்குடி அசனார் லெவ்வை ஆதம்பாவா எழுதிவைத்த குற்று இல்லாத கையெழுத்துப்பிரதிப் பாடல்களும், இரண்டாம் பாகத்தில் பதிப்பாசிரியரின் சாச்சா (சிற்றப்பா) கல்முனைக்குடி காசிம்பாவா அகமதுலெவ்வையால் கூறப்பட்ட கவிப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன (காசிம்|சி 2002).
இவற்றில் கீழைக்கரையை சோனக மன்னர்கள் ஆட்சி செய்தமை, பாண்டிய – சோழ மன்னர்கள் சோனக மக்களின் வழிபாட்டிடங்களை அழித்தமை, சோனகரின் ‘குடி’ உட்பிரிவுகள், அவுலியாக்கள் முதலிய மார்க்க அறிஞர்கள் வருகை தந்த சம்பவங்கள், சோனகர்கள் யாத்திரை சென்ற சியாரங்கள், கபுறுக்களின் அமைவிடங்கள் உள்ளிட்ட செய்திகள் இடம்பெறுகின்றன.
சன்னாதபுரம் (பொலனறுவை, இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் சனநாதபுரம்), ஃக`ச்திசெயிலாபுரம் (குருநாகல்) [1] முதலிய நகரங்கள் பற்றிய குறிப்புகள் வருவதால், பொலனறுவை அரசு, குருநாகல் அரசு என்பன அரசிருக்கைகளாக இயங்கிய 11 – 13ஆம் நூற்றாண்டுகளிலேயே சோனகர்கள் குறிப்பிடத்தக்க சமூகமாக கீழைக்கரையில் வசித்தார்கள் என்பதாக இத்தொன்மங்களை வாசிக்கமுடியும். அவர்களது வணிகம், தமிழர் – சிங்களவரோடான நல்லுறவும் முரணும், ஐரோப்பியருடனான இடைத்தொடர்புகள், மார்க்கத்தில் அவர்களுக்கிருந்த பற்று, அன்றாட வாழ்வியல் முதலிய பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சோனகத் தொன்மங்களிலிருந்து சேகரிக்க முடிகின்றது ( |செமீல் 1997: 16).
ஆனால் சோனக மன்னர்கள் [தென்கிழக்கிலங்கையை] ஆண்டு வந்தார்கள் என்ற நம்பிக்கையை, “தமிழகத்துக்குப் படையெடுத்துச் செல்லுமளவு வலிமையான தமிழ் அரசர்கள் கிழக்கிலங்கையில் ஆட்சிபுரிந்தார்கள்” என்ற மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தின் நம்பிக்கைக்கு சிறிதும் குறையாத ஒன்று என்றே கருதவேண்டும். ஏனெனில், கீழைக்கரையில் தமிழர்களிடமோ சோனகர்களிடமோ பலம்வாய்ந்த பேரரசுகள் நீடித்ததற்குச் சான்றில்லை. தமிழரசுகளும் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளாகவே இருந்தன.
எவ்வாறெனினும் கருங்கொடித்தீவு (இன்றைய அக்கரைப்பற்று நகர்) மீராலெவ்வை வன்னுமை, கரைவாகில் (இன்றைய சாய்ந்தமருது) வாழ்ந்த அலியார் லெவ்வைப்போடி முதலியோரைப் பற்றிப் பாடும் பாடல்கள் நம்பகத்தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன. எனவே இலங்கையின் பொலனறுவை அரசுக்குப் பிந்திய காலத்திலும் கண்டி அரசு காலத்திலும் அரசியல் செல்வாக்கு மிக்க பிரபுக்கள், அதிகாரிகள் சோனக சமூகத்திலும் புகழோடு வாழ்ந்தார்கள் என்று ஊகிக்கலாம்.
ஆனால் “திருக்கோவிலில் சோழர்கள் வாழ்கிறார்கள், பாண்டிருப்பில் பாண்டியர்கள் வாழ்கிறார்கள்” முதலான செய்திகளிலும் “சோழ பாண்டியர் சோனக சியாரங்களையும் பள்ளிவாசல்களையும் அழித்தொழித்தார்கள்” என்றவாறு பாடல்களிலும் வரலாற்றுண்மை இருப்பதாகத் தெரியவில்லை (காசிம்|சி 2002:1, 13-18). எனினும் அவற்றை நெடுங்காலமாக கிழக்கிலங்கையில் நீடித்த தமிழ் – சோனக முரண்பாட்டைக் குறிப்பிடுவதாக வாசிக்க இயலும். இதே தொகுப்புகளில் தமிழ் – சோனக முரண்பாடுகளின் அவலத்தை விளக்கமுயலும் “உதுமான் – சிவகாமி காதல்” முதலிய பாடல்கள் காணப்படுவதை இதற்கு மேலதிக ஆதாரமாகக் கொள்ளலாம் (காசிம்|சி 2002:30-36).
மதம்சார் முரண்கள் நீடித்திருக்க வாய்ப்புள்ள போதும், மேற்படி நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள சில சோனகத் தொன்மங்கள் தமிழ் – சோனக மதமுரணை மிகைப்படுத்துவதாகத் தென்படுகின்றது. ஏனெனில் இனத்தேசியவாதங்கள் முனைவாக்கமடைந்த 19ஆம் நூற்றாண்டு வரை, கீழைக்கரையின் சைவ – இ`ச்லாமிய சமயங்கள் தமக்குள் நல்லிணக்கத்தோடு நீடித்துவந்ததற்கே சான்றுகள் கிடைக்கின்றன. கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் காத்தான்குடிப் பட்டாணியர், திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி கோவிலில் கருங்கொட்டித்தீவு பட்டாணியர், பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோவிலில் கரைவாகுப் பட்டாணியர் கொண்டிருந்த சமூக வகிபாகம் இன்றும் இருதரப்பு வாய்மொழிச் செய்திகளிலும் நினைவுகூரப்பட்டு வருகின்றது. நாடுகாட்டுக்கு வந்த சோனகக்குடித் தலைவனான அவுக்கனுக்கு கண்டி அரசைச் சார்ந்த இரட்டவரிசை முதலியார் திருக்கோவிலில் திருவேட்டைப்பானை ஒன்று முன்னீடாகக் கொடுத்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம் (Nevill, 1887:139).
தமிழ்ச் சைவர்கள் பள்ளிவாசல் கந்தூரி வைபவங்களில் கலந்துகொண்டமையும் சியாரங்களில் வழிபாடு நடத்தியமையும், கடந்த காலத்தில் பதிவாகி இருக்கிறது. சிவன் – முருகன் உள்ளிட்ட பெருந்தெய்வக் கோவில்களில் முன்னீடு, மாரியம்மன் – கண்ணகி – நாகம் முதலிய தமிழ் நாட்டார் வழிபாடுகளில் நம்பிக்கை, தண்ணீர் ஓதுதல், மாந்திரீகம் முதலிய சடங்குகளில் ஈடுபாடு முதலியன கீழைக்கரைச் சோனகரின் வாழ்வியலில் இரண்டறக் கலந்திருந்ததை மேற்படி தொகுப்புகளில் கிடைக்கும் பாடல்களும் உறுதி செய்கின்றன. கடந்துபோன தசாப்தங்களில் கீழைக்கரை தமிழ் – சோனக உறவைக் குறிப்பிடப் பயன்பட்ட “பிட்டும் தேங்காய்ப்பூவும்” என்ற உவமையையும் இங்கு நாம் ஒப்புநோக்கலாம். ஆக, தமிழ் – சோனக உறவென்பது, அவ்வப்போது தம்முள் மதம்சார் வாழ்வியலால் முரண்பட்ட ஆனால் ஏனைய நேரங்களில் பெரும்பாலும் தமக்குள் கொண்டும் கொடுத்தும் வாழ்ந்த நெருக்கமான பிணைப்பாகவே தொடர்ந்திருக்கிறது என்பதை உய்த்துணரலாம்.
இதற்கு மாறாக காசிம்|சியின் நூலில் தமிழ் – சோனக முரணை இன்றுள்ளவாறு இரண்டு இனத்தேசியங்களின் நெடுநாள் பெருமோதலாகப் பார்க்கும் பிரிவினை நோக்கே தென்படுகின்றது [2]. இத்தொன்மங்கள் தொகுக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டு இலங்கையில், சமூக – அரசியல் பொருளாதார களங்களில் மூவினங்களின் தேசியவாதம் ஆழமாக வேரூன்றத் தொடங்கிய காலகட்டமாகும். எனவே இங்கு கூறப்படும் தமிழ் – சோனக முரண் சார்ந்த செய்திகளை மிகக்கவனமாக ஆராய்ந்தே வரலாற்றாதாரங்களாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஏற்கனவே சீர்குலைந்துபோயுள்ள தமிழ் – மு`ச்லிம் உறவில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியதாகப் போய்விடும்.
கரையோர வேடர் தொன்மங்கள்
கீழைக்கரையின் இன்னொரு குறிப்பிடத்தக்க சமூகம் வேடர்கள். இலங்கையின் பூர்விகக் குடியினரான வேடர் வேடமொழியைப் பேசி வந்தபோதும், கீழைக்கரை வேடர் புவியியல் காரணத்தால் தமிழையும் தம் பேச்சுமொழியாகக் கொண்டு “கரையோர வேடர்” எனும் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளனர். சமூக மேல்நிலையாக்கம், அதிகார வர்க்க ஒடுக்குமுறை முதலியன காரணமாக தங்கள் அடையாளத்தை சில இடங்களில் இழந்து அல்லது மறைத்து (உதாரணம்: வேடவேளாளர் ) தம்மை வேறு சமூகங்களுடன் அடையாளப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு வேடர்கள் ஆளாகியுள்ளனர். எனவே மற்ற எல்லா சமூகங்களையும் விட அதிகமான தொன்ம இழப்புகளைச் சந்தித்த சமூகமாக கரையோர வேடர் காணப்படுகின்றனர்.
கரையோர வேடர் சார்ந்த தொன்மங்கள் அவர்களை ஆராய்ந்த செலிக்மன் தம்பதியர் (Seligmann & Seligmann, 1911), சேர். |சேம்`ச் எமர்சன் |டெனன்|ட் (Tennent, 1860:441-448) முதலிய மிகச்சில சமூகவியலாளர்களாலே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
கரையோர வேடரில் சிலர் தம் தமிழ்த் தொடர்பை மறுக்க, இன்னும் சிலர் தம் உள்நாட்டு வேடருடனான உறவை நினைவுகூர்கின்றனர். ஆனால் உள்நாட்டு வேடரைப் பொறுத்தவரை, கரையோர வேடர் தம்மிலும் வேறானவர்கள் என்கிறார்கள். கரையோர வேடரின் தனித்துவங்களாக உள்நாட்டு வேடரை ஒத்து நீடித்த “வறுகை” எனும் சமூக உட்பிரிவு காணப்படுகின்றமை, தமிழுக்கு மேலதிகமாக சிங்கள மொழியும், வேட மொழியும் பேசும் வல்லமை, பறவையிறைச்சி உண்ணாமை, முன்னோர் வழிபாடு (உத்தியா) உள்ளிட்ட பல தனித்துவமான சிறப்புகள் செலிக்மனால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தாம் கீழைக்கரையில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் குடியினர், வேறெங்குமிருந்து புதிதாகக் குடிவரவில்லை என்ற கருத்தும் கரையோர வேடரிடமுள்ளது.
கல்குடாவுக்கு அருகே பள்ளச்சேனையில் வாழ்ந்த வேடர் ஐரோப்பியர் பயன்படுத்திய சாயலில் வடிக்கப்பட்ட இரண்டடி நீளமான கப்பலின் சிலை வேடக்கோவிலில் காணப்பட்டதையும், அத்தெய்வம் “கப்பல் பேய்” என்று அழைக்கப்பட்டதையும், குமாரதெய்வம், அம்மாள் ஆகியோரையும் அவர்கள் வழிபட்டதையும் செலிக்மன் தம்பதி குறிப்பிட்டுள்ளனர் (Seligmann Seligmann; 1911:336 – 337 ). வெளிநாட்டிலிருந்து வந்த தெய்வமான கப்பல்பேய் இன்றைய கரையோர வேடரிடமும் கப்பல் தெய்வம் அல்லது பெரியசாமி என்ற பெயரில் அழைக்கப்படுவதையும், அத்தெய்வ வழிபாட்டில் சின்ன உலாந்தா, பெரிய உலாந்தா, பறங்கிநாச்சி முதலிய தெய்வங்கள் வழிபடப்படுவதும், கப்பல் தெய்வத்தின் தோற்றம், வழிபாடு பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கும், கரையோர வேடரின் பூர்விகம் தொடர்பான சுவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கால்கோளாக அமையக்கூடிய செய்திகள்.
நாட்டார் வழிபாட்டு இலக்கியத் தொன்மங்கள்
கீழைக்கரையின் நாட்டார் வழிபாட்டுத் தெய்வங்களில் கண்ணகி, காளி, மாரி, வைரவர், குமாரர் உள்ளிட்டோர் அடங்குகின்றனர். இந்தத் தெய்வங்களில் சிலர் குறிப்பிட்ட சமூகங்களாலேயே வழிபடப்படுவதால் அச்சமூகங்கள் சார்ந்த சில தொன்மங்களை தங்கள் வழிபாட்டுப் பாடல்களில் ஆவணப்படுத்த உதவியிருக்கின்றன. உதாரணமாக கரையோர வேடரின் தெய்வங்களான குமாரர், பெரியசாமி, நீலியம்மன், குஞ்சிமாப்பா, மீன்நாச்சிமார், முதலியோர், சலவைத்தொழிலர் சமூகத்தால் வழிபடப்படும் பெரியதம்பிரான், நீலாசோதையன் போன்ற தெய்வங்கள், குருகுலக் கரையார் உள்ளிட்ட சமூகங்களால் வழிபடப்படும் கடல்நாச்சி அம்மன், முதலிய தெய்வங்களின் சடங்குப் பாடல்களில் வரலாற்றாதாரங்களாகக் கொள்ளக்கூடிய சிலதொன்மங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக சலவைத் தொழிலாளரின் பெரியதம்பிரான் – நீலாசோதையன் ஆகிய தெய்வங்களை, வேடரின் பெரியதெய்வம் – நீலியம்மன் ஆகிய தெய்வங்களுடன் ஒப்பிடமுடியும். அப்படியே இத்தெய்வங்களை தமிழ்க் கோணேசர் கல்வெட்டு – சிங்கள இராசாவழி ஊடாக நீலாசோதையன் / நீலன் / நீல யோதைய என்ற வரலாற்றுக் கதாபாத்திரத்தோடு இணைத்துப்பார்க்க முடியும்.
கீழைக்கரையின் முக்கியமான நாட்டார் தெய்வமான கண்ணகி மற்றும் திரௌபதி சார் பாடல்கள் பெருமளவு வரலாற்றுச் சான்றுகளைத் தம் வசம் கொண்டுள்ளன. பாண்டிருப்பு திரௌபதி அம்மன் தொன்மத்தில் நினைவுகூரப்படுபவன் விமலதர்மசூரிய மன்னன். அப்பெயரில் இருமன்னர்கள் கண்டியை ஆண்டுள்ள போதும், இவன் முதலாம் விமலதர்மசூரியனாக இருக்கலாம் (1591 – 1604) என ஊகிக்கப்படுகின்றான்.
தம்பிலுவில், பட்டிமேடு, செட்டிபாளையம் முதலிய கோவில்களில் கிடைத்த கண்ணகி வழிபாட்டு இலக்கியங்களில் மட்டக்களப்பு பண்டார வன்னியர்கள், நரேந்திரசிங்கன், இராசசிங்கன் முதலிய கண்டி மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். பழுகாமத்தை ஆண்ட செல்லப்பண்டாரம் எனும் வன்னியன் ஒல்லாந்துக் குறிப்புகளில் இடம்பெறுகின்றான். பண்டாரம் என்ற ஈற்றுப்பெயர் கொண்ட இன்னொரு வன்னியர் பட்டியலை கீழைக்கரைத் தொன்மங்கள் கொண்டிருக்கின்றன [3]. மட்டக்களப்பை ஆண்ட மன்னர்களும் பண்டார வன்னியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று இதன் மூலம் ஊகிக்கலாம். இரண்டாம் இராசசிங்கன் (1629 – 1687), நரேந்திரசிங்கன் (1707 -1739), காலத்தில் கீழைக்கரை அவர்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததை ஐரோப்பியக் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறு பல்வேறு சமூகம் சார்ந்த மற்றும் வழிபாடுகள் சார்ந்த தொன்மங்களைத் தொகுக்கும் போது, இன்னும் பல வரலாற்று இடைவெளிகளை நிரப்புவதற்கான சான்றாதாரங்கள் எழுந்துவருவதைக் காணமுடியும். இவற்றை அவ்வப்போது பொருத்தமான இடங்களில் பிரயோகித்து கீழைக்கரையின் வரலாற்றை கட்டியெழுப்புவோம், வாருங்கள்.
அடிக்குறிப்புகள்
[1] குருநா+கல் என்றால் யானைமலை என்று பொருள். அதன் வடமொழிப்பெயர் ஃக`ச்திசைலபுரம், Hastiṣailapuram. கொழும்பிலிருந்து சுமார் 100 கிமீ வடகிழக்கே அமைந்துள்ள குருநாகல் அண்ணளவாக ஐம்பதாண்டுகள் 1290களிலிருந்து 1340கள் வரை இலங்கையின் முக்கியமான அரசிருக்கையாக நீடித்தது.
[2] சோனகரில் நிகரற்ற தமிழறிவு கொண்ட ஏராளமான அறிஞர்கள் கடந்த காலத்தில் தோன்றியிருக்கிறார்கள். பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மருதமுனை சின்ன ஆலிம் அப்பா (1850கள்), அட்டாளைச்சேனை அப்துர் ரகுமான் ஆலிம் புலவர் (1850கள்), அக்கரைப்பற்று சேகுமதாறு சாகிப் புலவர் (1900கள்) போன்றோரை குறிப்பாகச் சொல்லலாம் (கந்தையா 1965: 275 – 300). ஆனால், இந்நூலில் அசனார் லெவ்வை மற்றும் காசிம்பாவா அகமதுலெவ்வை ஆவணப்படுத்திய பாடல்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளவை கவித்துவ அழகோ ஓசைநயமோ இல்லாதவை. அவற்றைப் பாடியவர்கள் பாமரர்கள் என்றாலும், அதே பாமரர்கள் பாடிய சோனகக் கவிகளில் உள்ள சந்த இனிமையும் எளிமையும் இப்பாடல்களில் இல்லை. எந்தவொரு வரலாற்று அல்லது தொன்ம நூலிலும் காணமுடியாத விந்தையாக, சோழர் படையெடுப்பு முதல் ஐரோப்பியர் காலம் வரையான சகல வரலாற்றுச் சம்பவங்களும் தொடர்ச்சித்தன்மை அறுபடாது வரிசையாக இடம்பெறும் இந்நூலின் பதிப்பு ஒழுங்கில் ஒரு செயற்கைத் தன்மை தென்படுகின்றது. இப்பாடல்கள் சிங்கள வரலாற்று நூல்களும் தமிழ் தொன்ம இலக்கியங்களும் அச்சுவாகனம் ஏறிவிட்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் அவற்றை மாதிரியாகக் கொண்டு சோனகருக்கென ஒரு தனி வரலாற்றுப் பாரம்பரியத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவானவையா என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. 1960களில் கீழைக்கரைத் தமிழரிடையே வரலாற்று எழுச்சியை ஏற்படுத்திய தொன்மங்களின் தொகுப்பு நூலான “மட்டக்களப்பு மான்மியம்” மற்றும் 1955 முதல் 1970கள் வரை தமிழ் பேசும் மாணவர்களுக்கு இலங்கை வரலாற்றுக்கான பள்ளிப் பாடநூலாக விளங்கிய |சி.சி.மெண்டி`சின் புகழ்பெற்ற “நம் முன்னோரளித்த அருஞ்செல்வம்” ஆகிய இரு நூல்களின் தலைப்பையும் இணைத்து இந்நூலுக்கு “தென்கிழக்கிலங்கை மு`ச்லிம்களின் மான்மியத்திற்கு முன்னோரளித்த அருஞ்செல்வம்” என்று நூலாசிரியர் சூட்டியிருக்கும் பெயர், இந்த ஐயத்தை வலுப்படுத்துகின்றது.
[3] பூபால கோத்திர வன்னிமைகள்: 1. கற்பகப் பண்டார வன்னிமை – கோரைக்களப்பு, 2. செல்லப்பண்டார வன்னிமை – சிங்காரத்தோப்பு, 3. அருணாச்சலப் பண்டார வன்னிமை – மலுக்கம்புட்டி, 4. ஆனந்தப் பண்டார வன்னிமை – சம்மாந்துறை, 5. அம்பக்கப் பண்டார வன்னிமை – நாதனை, 6. அழகரெட்ணப் பண்டார வன்னிமை – மண்டபத்தடி, 7. கனகரெட்ணப் பண்டார வன்னிமை – விளாவெட்டுவான்.
உசாத்துணை
1. இத்ரீ`ச், ஏ.பி.எம். (2011). சோனகத் தேசம் : மிகச்சுருக்கமான அறிமுகம், வாழைச்சேனை : சோனகம் வெளியீடு.
2. காசிம்|சி, எம்.எம்.எம். (2002). தென்கிழக்கிலங்கை மு`ச்லிம்களின் மான்மியத்துக்கு முன்னோரளித்த அருஞ்செல்வம், கொழும்பு : உலக இ`ச்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2002.
3. |செமீல், எ`ச்.எச்.எம். (1997). அம்பாரை மாவட்ட மு`ச்லிம்கள் : வரலாறும் பாரம்பரியமும், கொழும்பு : மு`ச்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
4. McGilvray, D.B. (1998). Arabs, Moors and Muslims: Sri Lankan Muslim ethnicity in regional Perspectives, in Contributions to Indian Sociology, 32; 433 – 81.
5. Seligmann, C.G. and Seligmann, B.Z. (1911). The Veddas. London: Cambridge University Press.
6. Tennent, J.E. (1860). Ceylon : an account of the island, physical, historical, and topographical with notices of its natural history, antiquities and productions. London : Longman, Green, Longman and Roberts.
இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.
தொடரும்.