சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி
Arts
10 நிமிட வாசிப்பு

சிவபூமி அருங்காட்சியகம் : ஈழத் தமிழர் வரலாற்றின் புதிய முகவரி

November 1, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

யாழ்ப்பாண நுழைவாயிலான நாவற்குழியில் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படும் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் ஆரம்ப நிகழ்வை ஈழத் தமிழர் வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறப்போகும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன். இவ் அருங்காட்சியகத்தின் மூலம் எம் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு எம்மோடு வாழ்ந்துவரும் பாரம்பரிய மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் அடுத்து வரும் சந்ததியினருக்கு கையளிப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட இவ் அரும்பொருள் காட்சியகத்தில் வடஇலங்கை மக்களின் பூர்வீக வரலாற்று அடையாளங்கள், மரபுரிமைச் சின்னங்கள், பயன்பாட்டிலிருந்து மறைந்து போகும் பாரம்பரிய பாவனைப் பொருட்கள், தமிழ் மக்களின் கடந்தகால வரலாற்றையும், பண்பாட்டையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் புகைப்படங்கள், ஓவியங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவற்றைப் பார்வையிடுவோருக்கு எமது சந்ததியினர் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போகின்றார்கள், எங்கே போக வேண்டும் போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண வழிபிறந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் மட்டுமல்ல, அதை தூரநோக்குடன் கடின உழைப்பால் உருவாக்கித்தந்த கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய சொத்தாவார். 

sivapumi entrance

தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஒரு முழுமையான அருங்காட்சியகம் வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டகாலக் கனவாகும். 1971 இல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கந்தரோடையில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த பல நூற்றுக்கணக்கான தொல்பொருட் சின்னங்கள் வெளிவந்தன. அவற்றைப் பார்வையிட்ட அன்றைய அரச அதிபர் போல் பீரிஸ் அநுராதபுரத்திற்கு அடுத்த புராதன நகரம் கந்தரோடை எனக் குறிப்பிட்டு இம்மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க தமிழர் ஒருவரைத் தொல்லியல் ஆணையாளராக நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 1940 ஆம் ஆண்டுக்குரிய பிரித்தானியர் கால ஆவணம் சாவகச்சேரி பழைய நீதிமன்றத்தின் கீழ் புதையுண்டிருந்த புராதன ஆலயத்தின் அழிபாடுகள் பாதுக்கப்படவேண்டும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டெழுந்த பத்திரிகைள் தமிழர்களின் மரபுரிமைகள் கவனிப்பாரின்றி அழிவடைந்து வருகின்றன, பணத்திற்காக பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்ற குற்றச் சாட்டுக்களை முன்வைத்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் முன்வரவேண்டும் என அறைகூவல் விடுத்து வந்தன. இந்நிலையில் 1970 களில் பேராசிரியர் கா. இந்திரபாலா, வி. சிவசாமி, திரு.ஆ. சிவனேசச்செல்வன் ஆகியோரின் முயற்சியால் யாழ்ப்பாணத் தொல்லியற்கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அவ்வமைப்பில் ஆர்வத்துடன் இணைந்து கொண்ட ஆசிரியர்களான பொன்னம்பலம், திருவள்ளுவர், நிலஅளவையாளர். சேயோன், பூநகரி உதவி அரசாங்க அதிபர் கிருஷ்ணமூர்த்தி, கலைறூனி, குரும்பசிட்ட கனகரட்ணம் போன்ற பெரியவர்கள் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிவதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் பணியாற்றினர். அவர்களின் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழக மட்டத்திலும் சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆயினும் மரபுரிமைச் சின்னங்களைச் சேகரித்த பலர் இன்று அமரத்துவம் அடைந்துவிட்ட நிலையில் அம்மரபுரிமைச் சின்னங்களுக்கு என்ன நடந்ததென்பதை யாருமே அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. 2009 இற்குப் பின்னர் முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு வடஇலங்கை மரபுரிமைச் சின்னங்கள் தென்னிலங்கைக்கும், பிற நாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 2010-2011 காலப்பகுதியில் தென்னிலங்கை வர்த்தகர்கள் தனியார் வீடுகளை வாடகைக்கு எடுத்து வீடுவீடாகச் சென்று குறைந்த விலையில் மரபுரிமைச் சின்னங்களைக் கொள்வனவு செய்த சம்பவங்களும் உண்டு. அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மரபுரிமைச் சின்னங்கள் இன்றும் அநுராதபுரம், பொலநறுவை, கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் உள்ள கடைகளில் வெளிநாட்டவருக்கு உரிய விற்பனைப் பொருட்களாக உள்ளன. கடந்த வாரத்தில் கூட வடஇலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட இருந்த இரண்டு கோடி ரூபா பெறுமதியான மரபுரிமைச் சின்னங்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இவ்வாறு எமது இனத்தின் மூலவேர், இன-மத அடையாளங்கள், பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்கள் எம் கண் முன்னேயே கடத்தப்பட்டும், அழிவடைந்தும் வருவதை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியிடம் கையளிப்பதற்கான அருங்காட்சியகங்கள் இல்லாதிருப்பதுமே முக்கிய காரணங்களாகும். இவற்றைச் செய்து கொடுக்க அரச அமைப்புக்களோ, பொது நிறுவனங்களோ முன்வரவில்லை. தென்னிலங்கையைப் போல் இங்குள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இவற்றைச் செய்வதில் அதிக அக்கறை காட்டி வருவதாகவும் தெரியவில்லை. இதனால் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து எமது மரபுரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளன. ஆயினும் அந்தக் கனவு இப்போது பலித்திருக்கிறது. அது தனிமனிதனாக இருந்து அல்லும்பகலும் உழைத்த கலாநிதி ஆறுமுகம் திருமுருகன் வடிவத்தில் கைகூடியுள்ளது. அதுவே நாவற்குழில் தலைநிமிந்து நிற்கும் சிவபூமி அரும்பொருள் காட்சியகமாகும்.

Sivapoomi museum artifacts

அரும்பொருள் காட்சியகம் அமைக்கப்பட ஆவண்டும் என்பது கலாநிதி திருமுருகன் அவர்களின் திடீர் கனவு அல்ல. அவர் துர்க்கையம்மன் ஆலயத் தலைவராக பதவியேற்ற காலத்தில் இருந்து எமது மரபுரிமைச் சின்னங்களைச் சிறுகச் சிறுக சேமித்து வந்ததை நான் அறிவேன். அவை வலிகாமத்தில் மூன்று இடங்களில் பாதுகாக்கப்பட்டும் வந்தன. ஆயினும் அதற்கொரு அருங்காட்சியகம் தோன்றும் என நான் கனவு காணவில்லை. அதனால் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணர்ந்து அம்மரபுரிமைச் சின்னங்களை எமது தொல்லியல் இறுதி வருட மாணவியூடாக  ஆவணப்படுத்தி வைத்துள்ளோம். அது தனியொரு நூலாகவும் விரைவில் வெளிவரவுள்ளது. அப்போது சிவபூமி அரும்பொருள் காட்சியகம் தோன்றிய வரலாற்றுப் பின்னணியும் தெரியவரும். 

Sivapoomi construction work

இன்றைய உலகில் நேரம், பணச் செலவு என்பவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு நாட்டின் அல்லது ஒரு இனத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு அங்குள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்வதையே பெரிதும் விரும்புகின்றது. தற்போது தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு புதிய வழி திறக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டு பரப்பில் மூன்று தளங்களில் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியகத்தின் கட்டிட அமைப்பு, காட்சிப்படுத்தலில் பின்பற்றப்பட்டுள்ள ஒழுங்குமுறை, காட்சிப்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுச் சின்னங்கள், சிலைகள், சிற்பங்கள், பாரம்பரிய பாவனைப் பொருட்கள், அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் என்பன அருங்காட்சியகத்தைப் பார்க்க வருபவர்களுக்கு இதுவரை தெரிந்திருக்காத, தமிழர் பற்றிய புதிய வரலாற்றுச் செய்திகளைச் சொல்லப்போகின்றன. அவற்றுள் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மன்னர்களின் சிலைகள் பலரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. இதுவரை எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்ற தமிழ் மன்னர்களுக்கே சிலை வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு 350 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த 21 தமிழ் மன்னர்களுக்குச் சிலைகள் வைக்கப்படவில்லை. அக்குறைபாட்டைப் போக்கும் வகையில் முதன் முறையாக  சிவபூமி திறந்தவெளி அருங்காட்சியகத்தில் 21 மன்னர்களுக்கும் கடவுளருக்கு அடுத்த நிலையில் பீடங்கள் அமைத்து அவற்றின் மேல் மன்னர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அவற்றின் கீழ் ஆட்சியாண்டுகள் பொறிக்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆர்வலர்களுக்கு மனமகிழ்வை அளிப்பதாக உள்ளது. 

kings Statues

கடந்த இருவாரங்களாக முகநூல்களில் பகிரப்பட்ட செய்திகளில் சிவபூமி அருங்காட்சியகம் பற்றிய செய்திகளே அதிக அளவில் காணப்படுகின்றன. இது தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதன் பிரதிபலிப்பாகும். இதன் சாதனைக்கும் நன்றிக்கும் உரியவர், அரசியல் கலப்பற்ற சொல்லின் செல்வர் ஆர். திருமுருகன் அவர்கள். துடிப்புள்ள இளைஞராக ஆன்மீகப் பணியில் ஈடுபட்ட அவர் படிப்படியாக சமூகப் பணியில் அகலக் கால்பதித்து சாதனை படைத்துவரும் ஒருவர். பலர் சிந்திக்க முன்னரே செயலில் காட்டி பிறரைப் புதிதாகச் சிந்திக்கத் தூண்டியவர். இதற்கு, தனிமனிதனாக இருந்து கிழக்கிலங்கை வரை இன்று வியாபித்துள்ள அனாதைச் சிறுவர்களுக்கான கல்விக்கூடம், விழிப்புணர்வற்றவர்களுக்கான காப்பகம், வயோதிபர் மடம், நாய்களுக்கான காப்பகம் முதலான அவரது பணிகள் கட்டியம் கூறி நிற்கின்றன. தூரநோக்குடன் நாவற்குழியில் அவர் உருவாக்கிய திருவாசக அரண்மனை இலங்கை வரும் ஆன்மீகவாதிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் யாழ்ப்பாணத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. இன்று அதற்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள சிவபூமி அரும்பொருள் காட்சியகம் தமிழர் பண்பாட்டை மேலும் தலைநிமிரச் செய்துள்ளது. இன்று, யாழ்ப்பாணத்தின் நுழைவாயில் என அடையாளப்படுத்தப்படும் நாவற்குழி விரைவில் யாழ்ப்பாண இராசதானியின் நுழைவாயில் என அழைக்கப்படுவதற்கு இவ்வருங்காட்சியகம் வழிவகுக்கலாம்.

குறிப்பு : இக்கட்டுரை சிவபூமி அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டது. 


ஒலிவடிவில் கேட்க

10751 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)