குணமாக்கல்
இன்றைய காலகட்ட நடைமுறைச் சூழலானது மனிதருட்பட உலகின் அனைத்துக் கூறுகளினையும் இயல்பிறந்த இயைபற்ற தன்மையுள் சிக்கித் தவிக்க விட்டுக் கொண்டே இருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவராலும் முடியாது, காரணம் வெள்ளம் கடந்து விட்ட பின் அணை கட்டுதல் சாத்தியமற்றதல்லவா. இவ்வாறான போக்குகள் மலிந்து விட்ட இவ்வுலகியல் போக்கிலே மனிதரையும், மனித மனங்களையும் ஓரளவாவது மீட்டெடுக்கும் செயற்பாட்டுத் திறனைக் கொண்டதாகவே குணமாக்கல் கலை என்பது நடைமுறையில் கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு நாம் காணப்போகின்ற குணமாக்கல் என்பதனை நாம் சரியான புரிதலில் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுண்டு. குணமாக்கல் என்றால் நோய்வாய்ப்பட்ட நபரொருவர், தான் பெற்றுக்கொண்ட சிகிச்சை காரணமாக நல்ல நிலைக்குத் தேறி வந்துவிடுதல் மட்டுமல்ல. அது ஒருவகையான மாத்திரைகளுடன் சம்பந்தப்பட்ட குணங்குறிகளின் மாற்றத்துடன் கூடிய குணமாக்கல் தன்மையும், புரிதலும் ஆகும். ஆனால் இங்கு நாம் பார்க்கப் போகின்ற குணமாக்கல் என்பது மனித மனதுள் புதைந்து கிடக்கின்ற உளநெருக்குதல் விளைவுகளில் இருந்து விடுபடும் நிலையைக் கொடுக்கின்ற குணமாக்கல் தன்மையும் செயற்பாடுகளும் ஆகும். இவ்வாய்வில் பெருவாரியாக சடங்காற்றுகைகளில் காணப்படுகின்ற குணமாக்கல் தன்மைகளும் விளைவுகளும் தான் விவரிக்கப்படுகின்றன.
குணமாக்கல் என்பது ஒரு மீட்புக்குச் சமனான விடயமாகும். உளப்பாதிப்புற்ற ஒருவரை அவரது முன்னைய தொழிற்பாட்டு நிலைக்கு சகல வழிகளிலும் இட்டுச் செல்ல வைக்கும் நடைமுறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்ற மீட்புச் செயன்முறையினையே நாம் குணமாக்கல் என்கின்றோம். பாதிக்கப்பட்ட நபர்களினை ஒரு இயல்பான தொழிற்பாட்டு நிலைக்குச் செயற்பட ஆளாக்கி, அவர்களின் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, அவர்களினை சமூகத்திற்கு உபயோகம் உடையவர்களாக மாற்றும் நடவடிக்கைகளினை பொதுவில் குணமாக்கல் செயன்முறை என்பர். இச் செயற்பாடானது ஒவ்வொரு தரப்பிலும் ஒவ்வொரு விதமாகக் காணப்படுகின்றது. குணமாக்கலானது நம்பிக்கை, பாதுகாப்பு, அமைதி, செயற்பாட்டுத்திறன், மகிழ்வு போன்ற உணர்வுகளைப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மிகையாகக் கொடுக்கின்றது எனலாம்.
பிணியானது (உடல், உளம் சார்ந்த) நபரொருவரின் சிந்தனைச் செயற்பாட்டினைப் பாதிக்கும் போது அவரின் நடத்தை சார் தொழிற்பாடுகள் அனைத்தும் பாதிப்படைவதோடு. சமூகத்தில் அவருக்கான வெளியும் குறைவடைந்து விடுகின்றது. ஒருவர் தான் வாழும் சூழலிலே பதற்றமான, பயங்கரமான, பயந்த சூழ்நிலைகளுக்கு ஆட்கொள்ளப்படுகின்ற போது அவர் அவ்வாறான வெளிப்பாடுகளினையே தான் சார்ந்த சூழலில் தன்னூடாக வெளிக்காட்ட முனைகின்றார். இவ்வாறானவர்கள் வெளியில் செல்லாதிருத்தல், எதற்கும் பயப்பிடும் தன்மையுடன் காணப்படல்,பிறருடன் முரண்படல் தன்னைத் தாழ்வாக அல்லது உயர்வாக எண்ணல் போன்ற எதிர்வினைகளை ஆற்றுவோராகக் காணப்படுவர். இதற்கு ஒவ்வொரு தனிமனிதருள்ளும் காணப்படுகின்ற மனஅழுத்தமே காரணமாகின்றது. இவ்வாறான பாதிப்புக்கு உள்ளானவர்களை மீட்கும் செயன்முறைகளையே குணமாக்கல் செயன்முறைகளானது செய்கின்றன.
இவ்வாறான குணமாக்கல் செய்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு குணமாக்கல் உறவுமுறை என்பது மிக முக்கியமான விடயமாகும். அவ்வாறான உறவுமுறையானது சமூக உறவுகள் மூலமோ அல்லது வேறு வழிவகைகளில் இருந்தோ கிடைக்கப் பெறலாம். எமது மக்கள் ஆரம்ப காலங்களில் தம்மைத் தாமே ஆடல் பாடல்கள், சடங்குகள் மூலம் ஒவ்வொரு உள நெருக்குதல்களில் இருந்தும் குணப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் பின்னைய காலங்களில் வந்த மேலைத்தேய சிந்தனைகட்கு ஆட்பட்டு ஒவ்வொரு விடயங்களினையும் இயக்கும் அல்லது மேலாண்மை செய்யும் தன்மை கொண்டவர்களாக, ஒவ்வொன்றையும் கோட்பாட்டுக்குள் விளங்க முற்படுபவர்களாக மாறிவிட்டனர். ஆனால் ஆரம்ப கால வாழ்க்கை முறைகளானது இவ்வாறெல்லாம் இல்லாமல் மனித நடத்தைக் கோலங்கள் அனைத்தையும் குணமாக்கல் தன்மைகள் கொண்டு செவ்வனே வழி நகர்த்திச் செல்லும் வழிமுறைகளைக் கொண்டதாகவே இருந்தன.
குணமாக்கல் செயற்பாடானது உளப்பாதிப்புற்ற மனிதனை மீண்டும் முழுமையாக பழைய நிலைக்குத் திருப்பி எடுத்தல் அல்லது அவரை சமூகத்திற்கு இயைபாக மாற்றுதல் போன்ற வேலைகளினைச் செய்வதாகும். மருந்து மாத்திரைகள் என்பது ஒருவருடைய குணங்குறிகளிலே மாத்திரம் தான் தாக்கம் செலுத்தும் ஆனால் ஒருவரை முழுமையாகக் குணமாக்குவதில் அவரின் நம்பிக்கையுடன் தொடர்புடைய சடங்குகள் வழிபாட்டு முறைகள் களியாட்டங்கள் என்பன மிகப்பிரதான பங்கு வகிப்பவையாகக் காணப்படுகின்றன. அநேகருக்கு தனது பிரச்சினை குணமாக வேண்டும் என்கின்ற தேவையானது உணரப்பட வேண்டும். இவ்வுணர்தலினை சடங்காற்றுகைகள் அபரிமிதமாகச் செயற்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. ஆனால் இன்றைய கால காலனியச் சிந்தனைகளும் அதனோடு இணைந்த செயற்பாடுகளும் சடங்காற்றுகைகளை நாகரிகமற்ற வினைப்பாடுகள் என எளிதில் புறந்தள்ளி விடுகின்றமை வேதனைக்குரியது.
சடங்காற்றுகை ஒன்று இடம்பெறுகின்ற போது அங்கு எதுவித உள்மனக் கட்டுப்பாடுகளோ தனிமனித உளச்சிக்கல்களினைப் பாதிக்கின்ற காரணிகளோ இடம் பெறுவதென்பது பெரும்பாலும் குறைவாகவே காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுகின்ற சடங்காற்றுகைகளினை நாம் ஏலவே வகைப்பிரித்தது போன்று வழிபாட்டுச் சடங்குகள், வாழ்வியற் சடங்குகள் என கொள்ளமுடியும் போது, வாழ்வியற் சடங்குகளிலும் குணமாக்கல் தன்மையானது மிகையாகவே காணப்படுகின்றது. திருமணச் சடங்கொன்றினை ஒரு சமூகம் செய்கின்ற போது, பங்கொள்கின்ற அனைத்து அங்கத்தவர்களும் ஏதோவொரு உள்முக சந்தோசம், திருப்தி, நிம்மதி, பெருமிதம், மகிழ்வானந்தம் முதலானவற்றை அடைந்து விடுகின்றனர். இவை போன்ற உணர்வுகளினைக் கொடுக்கும் கலைதான் குணமாக்கலின் உச்சகட்ட வேலையும். இதனை மேலைத்தேய வைத்திய முறைகள் போல் கூவி விற்காமல் (கூவி விற்றும் பயனில்லை.) மிகவும் சாதாரணமாக வாழ்வியற் சடங்காற்றுகைகள் மனிதர்களுக்கு கொடுத்து விடுகின்றன. அதுவும் ஆற்றுவோரால் ஆற்றுவோருக்கும் பங்குகொள்வோர்க்கும் என இரட்டைச் சமனிலையுடன் கொடுக்கப்படுகின்றன; எடுக்கப்படுகின்றன.
வாழ்வியற் சடங்குகளில் குணமாக்கல் தன்மைகள்
வாழ்வியற் சடங்குகளினை வாழ்க்கை வட்டச் சடங்குகள் என்றும் அழைக்கும் வழக்கமுண்டு. மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரையான காலப்பகுதிகளுக்கும் மற்றும் இறப்புக்கு பின்னரும் செய்யப்படுகின்ற சடங்கு நடவடிக்கையாக நாம் இவற்றினைக் கொள்ள முடியும். அவ்வகையிலே பிறப்புச்சடங்கு சாமத்தியச் சடங்கு, திருமணச்சடங்கு, வளைகாப்புச் சடங்கு, மரணச்சடங்கு போன்றவற்றினை பொதுவாக வாழ்க்கை வட்டச்சடங்குகள் எனலாம். மனிதருடைய வாழ்க்கைச் சுழற்சியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சடங்குகள் அனைத்தும் மனித வாழ்வினை பல தொடர் நிலைகளாகப் பகுத்து ஒவ்வொரு நிலைக்கும் ஓர் அர்த்தப்பாட்டடினைக் கொடுத்து அதை இன்னொரு நிலைக்கு இட்டுச் செல்லும் பொருட்டு அமைவதாகக் காணப்படுகின்றது எனலாம். வாழ்க்கை இன்பத்தைப் பெற்றுக்கொள்ளவும், துன்பத்தைப் பகிரந்து கொள்ளவும், கடமைகளை உணர்ந்து செயலாற்றி வெற்றிகண்டு வாழ்வினைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளவும், மக்கள் ஒப்புரவு முறையில் உதவியும் துணையுஞ் செய்து, உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் வாழ்வியற் சடங்குகள் உதவுகின்றன.
திருமணச் சடங்கில் குணமாக்கல்
மனிதருடைய வாழ்வியல் வெளிகளிலே திருமணச் சடங்கென்பது ஓர் இன்றியமையாத திருப்புமுனையாகவே அமைந்து விடுகின்றது எனலாம். உலகவாழ் சமூகத்திலே பல்வகைமையான மனித கூட்டங்கள் காணப்பட்டாலும் ஒவ்வொரு கூட்டங்களின் மரபுக்கும், பண்பாட்டுக்கும் அமைய இத்திருமணச் சடங்கானது வேறுபட்டும், தனித்துவமாகவும் காணப்பட்டு வருகின்றது எனலாம். இந்து சமயப் பாரம்பரியத்தில் பார்க்கப்போனால் இவ்வாறான வகைப்பாடுகளுடன் கூடிய பல நிகழ்வுகள் நடந்தேறுபவையாக இருக்கும். அதாவது பொருத்தம் பார்த்தல், திருமணப் பேச்சு, கேட்டுப் போதல், நாள் குறித்தல், கூறை உடுப்பு வாங்குதல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண அழைப்பு, பால் தப்புதலும் நீராட்டுதலும், மணமகனை அழைத்து வரச்செல்லல், மணமகனை வரவேற்றலும் திருமணச் சடங்கும், பால் பழம் பருகுதல், கலத்தில் போடுதல், கால் மாறிச்செல்லல், சம்பந்தி வருதல் போன்ற இதர நிகழ்வுகள் இதனோடு இணைந்தவையாகக் கட்டமைக்கப்பட்டுச் கொண்டாடப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் சிலவை முன்பின் மாறியோ அல்லது தவிர்த்தோ பிரதேசத்திற்குப் பிரதேசம் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது நடைபெறுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு ஆற்றுகையாக மிகச்செம்மையாக செய்யப்படுவனவாக இருக்கும். அதனதன் தன்மைகளுக்கு அமைவாக ஒவ்வொரு நிகழ்வுகளும் அதனைப் புரிவோருக்கும் அதில் பங்கெடுப்போருக்கும் அதிக பட்ச உளத்திருப்தியைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறான மகிழ்வின் விளிம்பில் ஆற்றுகைசார் பண்புகளுடன் செய்யப்படுவவையாகத் திருமணச்சடங்குகள் அமைந்து விடுகின்றன. இத்தன்மைகள் கொண்ட திருமணச் சடங்கிலே புதுவாழ்வை ஆரம்பிக்கின்ற தம்பதிகள், அவர்கள் சார்ந்த பெற்றோர் உட்பட்ட உறவுகள், அதனுடன் இணைந்த அயல் சமூகம் போன்ற அனைத்து மனித சமூகமும் மனதளவில் பெருவாரியான உளத்திருப்தி நிலையனை மிகச் சாதாரணமாக அடைந்து விடுகின்றனர். தனது மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் ஒன்றினைச் சிறப்பாக நடத்தி விடுகின்ற போது பெற்றோர்கள் அடைந்து விடுகின்ற மனத்திருப்தி, ஆறுதல் பெருமிதம் என்பன அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்ட நிலைக்கு தமது சமூகத்தே பெரு மதிப்புடன் நகர்த்தி விடுவதாக அமைந்து விடுகின்றன. பெரும்பான்மையான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்யாணத்தை சிறப்புடன் நடத்தி விடுவதற்காகவே வாழ்நாளைக் கழிப்பவர்களாக இருந்து விடுகின்றனர்.
பூப்புச் சடங்கில் குணமாக்கல்
தமது வீட்டுப் பிள்ளை சாமத்தியம் அடைந்தவுடன் உறவினர்கள் மற்றும் ஊரவர்களுக்கு அச்செய்தி பரப்பப்படும். இதனை “முதல் விசளம்” என்பர். சாமத்தியம் அடைந்த அன்றைய மாலையிலேயே பிள்ளைக்கு முதல் முழுக்கு நீராட்டல் நடைபெறும். இவ்வாறு முதல் நீர் வார்த்தல் ஆனது குப்பைத் தண்ணீர் வார்த்தல்,முதல் தண்ணீர் வார்த்தல் என்னும் பெயர்களாளும் அழைக்கப்படும். முதலாவது நீர் வார்ப்பவர் மாமி அல்லது பாட்டி உறவுமுறையில் உள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். அதன் பின்னரே ஏனையவர்கள் தண்ணீர் வார்க்க வேண்டும். இவ்வாறு ஆரம்பமாகும் இச்சடங்கு முறையானது இன்னும் பல உள் நிகழ்வுகளைத் தன்னுள் கொண்டதாகவே காணப்படுகின்றது. அதாவது கூறை முடியும் அறைக்கும்பமும் வைத்தல், விசேட உணவு செய்தல், சடங்கு நிகழ்வு, நீராட்டல், கண்ணூறு கழித்தல், பலகாரம் பறித்தல், மஞ்சள் விளையாட்டு போன்றனவாக அமைகின்றன. இதில் மஞ்சள் நீராட்டு என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமையும். அதிலே மைத்துன உறவுமுறையில் அமைந்த ஆண், பெண் இருபாலாரும் தத்தமக்கிடையில் மஞ்சள் நீரூற்றி மகிழ்ந்து விளையாடுவர். அங்கே அனைவரும் தத்தமது தனிப்பட்ட கவலைகளை மறந்து அச்சமயத்தில் மிகவும் சந்தோசமாக இருப்பர். அதன் மூலம் மிகப்பெறுதியான ஓர் உளத்திருப்தி நிலை அங்கு மேலோங்கி ஓய்வதாக அமைந்து விடும். சங்க இலக்கியப் பாடலான புறநானூற்றில் பூப்புச்சடங்கு பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.
“பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறுமபுகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந் தனளே வாணுதல்….”
என பெண் பூப்பு அடைந்தால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவொடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகிலின் நறும் புகை கமழும் கபில நிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று பெண்ணின் பூப்புச் சடங்கினை இப்பாடல் வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம். இவ்வாறான தன்மைகளைக் கொண்டமைந்ததான இச்சாமத்தியச் சடங்கானது ஒரு சமூகம் ஒன்றினுள் வளர்க்கின்ற பெண்ணொருத்தியின் பெறுதியினையும், ஒரு இளம் பெண் சார்ந்தும், அவளது உறவுகள் சார்ந்தும் பெருவாரியான உளத்திருப்பதி நிலையினைக் கொடுப்பதாகவே இன்றும் கீழைத்தேய நாட்டாரிடம் காணப்படுவதாக அமைந்து விடுகின்றது எனலாம்.
மரணச்சடங்கில் குணமாக்கல்
மரணச்சடங்கிலே குணமாக்கலா? மரணம் என்றாலே அது அவலம் நிறைந்த நிகழ்வல்லவா? இதில் எப்படி குணமாக்கல் தன்மைகள் காணப்படும்?. முதலான கேள்விகள் தோன்றலாம். பார்க்கப் போனால் ஏனைய சடங்கு வழிமுறைகளில் கிடைக்கப் பெறுகின்ற குணமாக்கல் விளைவுகளை விட மரணச்சடங்கின் வாயிலாக ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய குணமாக்கல் விளைவுகளே மனித சமூதாயத்துள் மிகத்தேவையான விடயமாகும். இச்சடங்கானது துன்ப உணர்வுடன் தொடர்புடையதாக அமைந்து விடுவதாகும். ஒரு நபர் இறந்து விட்டால் அவரைச் சார்ந்து இருக்கின்ற அத்தனை உறவுகளும் ஆட்டம் கண்டு விடும். தனது உறவுகளின் பிரிவைத் தாங்க முடியாத உறவுகள் தாங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும், சில உறவுகள் பித்துப்பிடித்து அலையும். சிலவை வாழ்வைத் தொலைத்து விட்டுத் திரியும். இவ்வாறான நிலைமைகளில் இருந்து விடுபடும் குணமாக்கல் நிலைமைகளைச் செய்வதாகவே இறப்புச் சடங்குகள் அமைந்து விடுகின்றன எனலாம்.
தமிழர் பண்பாட்டில் இறந்தவரின் மரணச்சடங்கிலே எண்ணெய் வைத்தல், நீராட்டுதல், இறந்தவரின் உடல் வைக்கப்படும் திசை பற்றிய நம்பிக்கை, பிரேதம் வைக்கும் இடத்தின் மேல் வெள்ளை கட்டுதல், உடலின் தலைமாட்டில் குத்து விளக்கேற்றல், பிரேதம் வீட்டில் வைக்கப்படும் நாட்கள், வாசகங்கள் ஓதல், வாய்க்கரிசி போடுதல், பிரேதத்தை அடக்கம் செய்யும் முறைகள், மரணமும் தீட்டும், பிரேதத்தை அடக்கிய பின்னர் செய்யப்படும் சடங்குகள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. என்னதான் இருந்தாலும் இவ்வாறான மரணச்சடங்கு நடவடிக்கைகளானது ஒவ்வொரு மனிதச் சமூகப் பிரிவுகளுக்கு அமைவாக வெவ்வேறு விதமாகவும் அமைந்து விடுகின்றமையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமாகும்.
மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு சடங்கு நிகழ்வுகளிலும் இடம் பெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் இறந்தவரின் ஆத்ம சாந்தியை வேண்டிச் செய்யப்படுகின்ற போர்வையில் அவர் சார்ந்த உறவுகளின் மனச்சாந்தியை ஈடு செய்வதாகவே அமைந்து விடுகின்றமையை ஆழ்ந்து நோக்கின் விளங்கும். பிரேதம் வீட்டில் இருக்கும் போது அவர் சார்ந்த உறவுகள் படுகின்ற உள அவதியானது அடக்கம் செய்யப்பட்ட மூன்றாவது நாள் பால் ஊற்றுதலின் மூலம் சற்றுக் குறைவதாகக் காணப்படுகின்றது. பின்னர் எட்டாவது நாள் நிகழ்வின் மூலம் இறந்தவர் பற்றியதான மன எண்ணப்பாடுகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து கொண்டே போகும். அன்றைய நாள் நிகழ்விலே இறந்தவருக்கு பிடித்தமான உணவுகளை தயாரித்து அவருக்குப் படைத்த பின்னர் நிகழ்வில் பங்கொண்ட அனைவரும் சேர்ந்து அதை உண்பர். இவ்வாறான இறப்புக்குப் பின்னரான ஒவ்வொரு சடங்கு நிகழ்வுகளின் மூலம் இறந்த நபர் பற்றியதான உறவினர்களின் நிலைப்பாடானது ஒரு சீரான நிலைக்கு வந்துவிடுவதான குணமாக்கல் நிலைமைகள் தோன்றி விடுவதையும் அவதானிக்க முடியும்.
ஆகவே இதுவரைப் பார்க்கப் பட்ட திருமணம், பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு என்பவைகள் பொதுவான வாழ்வியற் சடங்குகளாகும். இதனை விட தொழில் முறைச்சடங்குகள், பருவகாலச் சடங்குகள், சமூகச் சடங்குகள் என்பனவும் இதனுள் அடங்கும். இவற்றிலும் குணமாக்கல் தன்மை என்பது காணப்படுகின்றது. மனிதருக்கு ஏற்படுகின்றதான திருப்தி, சந்தோசம், மன நிறைவு, அமைதி, ஆனந்தம் , சாந்தம் போன்ற உணர்வலைகளைக் கொடுக்கும் நடவடிக்கையாகவும் குணமாக்கல் என்பது அமைந்து விடுகின்றது எனலாம்.
வழிபாட்டுச் சடங்கில் குணமாக்கல்
மனிதரிடையே காணப்படுகின்ற கடவுள் வழிபாடானது ஒருவகையான பாதுகாப்பு நம்பிக்கை இணைப்பாக மனிதர்களுக்குக் காணப்படுகின்றது. அதாவது கடவுள் நம்பிக்கை எனப்படுவது ஒருவருக்கு நான் என்னிலும் மேலான பாதுகாப்புத் தன்மையுடன் இணைக்கப் பட்டுள்ளேன் என்னும் உறுதியான எண்ணப்பாட்டினை கொடுப்பதாகும். இவ்வாறான இணைப்பைக் கொண்ட கிராமிய வழிபாட்டுச் சடங்குகள் மூலம் மக்கள் தமக்கு நெருக்கமான கடவுளர்களுடன் இன்னும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சடங்காற்றுகை ஒன்றிலே எவரும் இன்னொருவரினை வற்புறுத்தி இணைத்துக் கொள்வது கிடையாது. பங்குகொள்கின்ற அனைவரும் தம் விருப்பின் பெயரில் சுயமாகவே இணைந்து, சடங்காற்றுகையின் வழிமுறைகளில் பங்கெடுத்து தாமாகவே குணமாக்கலினை அடைந்து விடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினைக் கொண்ட சடங்காற்றுகை என்பது ஒரு நடத்தைக் கோல சிகிச்சை முறையாகும்.
ஒரு வழிபாட்டுச் சடங்காற்றுகை செயற்றிறனில் சடங்காற்றுகையின் தன்மையினைப் பொறுத்து பல வழக்குகள் காணப்படும். குறிப்பிட்ட சமூகம் மற்றும் அதன் பண்பாட்டு மரபுகளில் நோய் நீக்கல் அல்லது குணமாக்கல் குறித்து உறுதியான நம்பிக்கைப் பாத்திரமாக சடங்குகள் அமைந்து விடுகின்றன. பொதுவாகப் பார்ப்போமானால் சடங்கொன்றின் மூலம் மனித சிந்தனையை வலுப்படுத்தும் ஒன்றுடனொன்று தொர்பு படுத்துகின்ற வேலைப்பாடுகள் சமூகத்துள்ளே காணப்படுகின்றமையை உணரமுடியும். வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றினை நடத்துகின்ற நபரானவர் அடிப்படையில் மற்ற மனிதர்களுடன் பிரிக்க முடியாத வகையில் மனித மற்றும் மனிதரல்லாதவராக புலப்படும் அதே சமயம் கண்ணுக்குப் புலப்படாத அதிமானுட சக்தியுடன் தொடர்பு கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார். அவரிடம் காணப்படுகின்ற அச்சக்தியானது நம்பிக்கை உறவு பாதுகாப்பு மகிழ்வு, அமைதி போன்ற உளத்திருப்தி நிலைமைகளை சடங்கில் பங்குகொள்வோருக்கு கொடுத்து விடுகின்றதான குணமாக்கல் செயன்முறைகளினைச் செய்துவிடுகின்றன.
இவ்வாறான வேலைப்பாடுகளுடன் கூடிய சடங்காற்றுகைகளிலே பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது சமூக மட்டத்திலே உயர்ந்த அல்லது தாழ்ந்த என்னும் வர்க்க பேதம் கொண்ட மனித கூட்டங்கள் அனைத்தும் ஒன்றாகச் சங்கமிக்கும் வழிபாட்டுச் சடங்கு நடவடிக்கை ஒன்றிலே அதுவரை காலமும் சமூகத்தில் சாதாரண மனிதராகக் காணப்பட்ட ஒருவர் குறித்த சடங்கினை நடத்துபவராகக் காணப்படும் போது அங்கு அவர் அனைவரிலும் கூடிய அதிமானுட தன்மை கொண்டவராகப் பார்க்கப்படுகின்றார், மதிப்புக் கொடுக்கப்படுகின்றார். அத்தருணம் அவரும் அவர் சார்ந்த சமூகமும் ஓர் உயரிய தன்மை கொண்ட பாத்திரங்களாக மாற்றப்படுகின்றனர். இது அச்சமூகம் சார்ந்த அனைவருக்குமான குணமாக்கல் வெளிப்பாடாகும். சடங்குகளின் செயற்பாட்டு விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தினை ஆய்வு செய்த விக்டர் டெர்னர் இவ்வாறான சடங்கு செயற்பாட்டினை மீவியல் என்னும் சொல்லின் மூலம் விளக்குகின்றார். இவர் தன் கூற்றுப்படி “சடங்கு சூழலில் தொழிற்படும் சமூக அமைப்பு இயல்பான சமூக அமைப்பிற்கு நேரெதிரான ஒழுங்கமைப்பைக் கொண்டிருக்கின்றது” என்றார். இதனாலேயே விக்டர் டெர்னர் சடங்கின் மையமான இடைவெளியை ‘தலைகீழாக்கம்’ அதாவது இயல்பான சமூக அமைப்பிற்கு தலைகீழான ஒழுங்கமைப்பு உடையது என்ற பொருளில் அழைக்கின்றார். இந்நிலையில் சடங்கில் பங்குபெறுபவர்கள் ஏற்கனவே சமூகத்தில் பெற்றுள்ள அடையாளம் அதிகாரம் போன்றவற்றை விடுத்து புதிய அதிகாரத்தினையும் அடையாளத்தினையும் பெறுகின்றனர் என்னும் கருத்தியலை முன்வைத்தார்.
இவ்வாறான தன்மையினை சடங்கு ஆற்றுகைகளினால் மாத்திரமே தான் கொடுத்து விட முடியும் எனலாம். வழிபாட்டுச் சடங்குகளில் உளவியல் நடத்தைகள் வெளிப்படுகின்றவானக் காணப்படும். அச்சூழலில் குறிப்பிட்ட நோக்குடனான உடல் அசைவுகள், சொற்கள் பொருட்கள் பாடல்கள் வாத்திய ஓசைகள் மன்றாட்டுகள் போன்றவை மூலமும் குணமாக்கல் தன்மையானது அவரவருக்கு வெளிப்பட்டு உதவுவதாகக் காணப்படும். இவ்வாறான சடங்காற்றுகைகளின் போது கூட்டு நிலையிலான ஈடுபாடானது பங்குபற்றுவோரிடம் காணப்படுகின்றது. இங்கு ஒரே மனவெழுச்சியில் பங்கொள்வோர் ஒன்றுபட்டு விடுகின்றனர். இதுவும் ஓர் உளவியல் திருப்தியைக் கொடுப்பதாக அமையும். வழிபாட்டுச் சடங்காற்றுகை ஒன்றிலே தீயில் எரித்தல், நீரில் கரைத்தல் ,பலியிடல் முதலான செயற்பாடுகள் இடம் பெறும். இவ்வேளையில் பங்குதாரர்கள் குறியீட்டு நிலையில் தமது எதிர்ப்படிமங்களை எதிர்க்கவும் கரைக்கவும் பலியிடவும் வல்ல உளவியல் சார் குணமாக்கல் நிலையானது ஏற்பட்டு விடுகின்றது.
இவ்வாறான வழிபாட்டில் உளவியல் மற்றும் உடலியல் பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஒரு தனிமனித உளச்சுகமானது மேற்கண்ட வழிபாட்டு முறைகளின் மூலம் எட்டப்படுகின்றது. மனதுள் புழுங்கிக் கிடந்த உளநெருக்கீடு தணிக்கப்பட்டு விடுகின்றது. இது போன்ற மிகப் பெரும் குணமாக்கல் நிலைமைகளினை மக்கள் அடைந்து விடுவதற்குக் காரணம் தமக்குண்டான அனைத்து பிணிகளினையும் தம்மை விஞ்சிய ஓர் அதிமானுட சக்தியிடம் கொட்டித் தீர்த்து அதனிடம் இருந்து பாதுகாப்பினைப் பெற்றுவிட்டோம் என்ற எண்ணப்பாட்டினைப் பெற்றுவிடுதலே ஆகும். சமூகத்திற்கு இயைபான சமூக இணக்கத்தையும் நேரான சமூக நடத்தைகளையும் வழிபாடுகள் வளர்த்து விடுகின்றன. மனதினைச் சுகமாக்கும் குணமாக்கல் செயல்முறைகள் மேற்கண்ட வழிபாடுகளினால் வலிதாக்கப்படுகின்றன.
இத்தன்மைகள் கொண்டதாக நாம் வழிபாட்டுச் சடங்குகளினைப் பார்க்கும் போது மனித உளவள விடுபடல் நிலைக்கான பெருவாரியான சந்தர்ப்பங்களினை வழங்கும் வழிபாட்டுச் சடங்கு முறைகள் என்பது கிராம மக்களிடையே காணப்படுகின்ற கிராமிய வழிபாட்டு முறைகளிலேயே அபரிமிதமாகக் காணப்படுவதனை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவ்வகையான வழிபாட்டு முறைகளினை பொதுவில் சிறு தெய்வ வழிபாடு எனக்கொள்வர். இவ்வகையான வழிபாடு சார் ஆசாரங்கள் கொண்ட மரபுச் சூழலிலே பாரம்பரியமாக குணமாக்கல் செய்வோர் கலையாடல் ,வாக்குச் சொல்லல், பேயோட்டல், கழிப்புச் சடங்கு, காவல் செய்தல், பரிகாரம் செய்தல் போன்ற நடைமுறைகள் ஊடாகவே மக்களை அதியுச்ச உள நெருக்கீட்டு நிலைகளில் இருந்து விடுபடச் செய்கின்றனர். தமிழ் சமுதாயச் சூழலிலே இந்து சமய நடைமுறைகளுடன் சேர்த்து கிறிஸ்தவம், முஸ்லிம் சமூகக் குழுக்களிடமும் இவ்வகையான வழிபாட்டுச் சடங்காசாரங்களினைப் பரவலாகக் காண முடியும்.
வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் (Worship healers)
வழிபாடுகள் வேண்டுதல்களின் மூலம் குணமாக்கல் வேலைகளைச் செய்கின்றவர்களான பூசாரிமார், மந்திரவாதிகள், கப்புறாளைமார் (வேடமரபில்), கலையாடுவோர், பரியாரிமார், பாதிரிமார்கள், மௌலவிகள், பிக்குமார்கள் போன்ற வழிபாட்டு மூலதாரர்கள் சமய வழிபாடு, சமூக நடத்தைகளில் தாம் கண்ட அனுபவங்கள், உளவியல் சார் நடத்தைக் கோல வழிகளை அறிந்தோ, அறியாமலோ தம்மை நாடி வருகின்ற மக்களுக்கு உதவியளிப்பவர்களாக, பல காலங்களாகத் தாம் தமது குருவிடம் இருந்து கொண்டு கற்ற அனுபவங்களைப் பயன்படுத்தி, மனித உளச்சிக்கல் பிரச்சினைகளைக் குணமாக்குவதில் பெயர் பெற்று விளங்குகின்றார்கள்.
இவர்கள் கடவுளருக்கு அபிஷேகம் செய்தல், அர்ச்சனை போடுதல் போன்ற கிரியைகளைச் செய்து விபூதி, சந்தனம், தீர்த்தம், பூ போன்ற பிரசாதங்களைக் கொடுத்து ஆசீர்வதிக்கின்றனர். இவை தவிர விபூதி போடல் நூல் கட்டுதல், நீர் ஓதிக் கொடுத்தல் போன்றவைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் மந்திர உச்சாடனங்கள், வேதம் ஓதல் சாந்தி செய்தல் முதலிய வழிபாட்டு முறைகளைச் செய்தும் பாதிப்புற்ற மக்கள் தமது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு செல்வதற்கு உறுதுணையாகச் செயற்படுகின்றார்கள். இதுபோலவே பாதிரிமார்கள் பூசைகள் செய்தும் திருப்பலி கொடுத்தும் நீர் ஓதிக் கொடுத்தும் ஆசீர்வாதப் பெருவிழா விடுதலைப் பெருவிழா உயிர்ப்பித்தல் நிகழ்வுகள் போன்ற தமது சமய ஆசாரங்களின் மூலம் பாதிப்புற்ற மக்களுக்கு உதவுகின்றார்கள். முக்கியமாக கிறிஸ்தவ மக்கள் தனிப்பட்ட ரீதியாக தமது பிரச்சினைகளை உணர்ச்சிகளை குற்றவுணர்வுகளைப் பாவ மன்னிப்பு என்னும் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறான நடைமுறைகளின் மூலம் குணப்படுத்தும் திறன் பெற்றவர்களாக வழிபாட்டினூடே குணப்படுத்துவோர் பாரம்பரிய வழிபாட்டு மரபிலே மிகையாகவே விளங்குகின்றார்கள் எனலாம்.
இவர்கள் பல நற்கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். தம்மை நாடி வரும் நோயாளர்களைத் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாதிருத்தல் ,அவர்களிடமிருந்து அதிக பணத்தையோ (நோயாளர்கள் விரும்பிய சன்மானத்தினைக் கொடுக்கலாம்) வேறு எந்தப் பொருட்களையும் அறவிடாது இருத்தல், தமது குணப்படுத்தும் அறிவினை மற்றவர்களை வசப்படுத்தவோ தமது செல்வாக்கை பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கோ பயன்படுத்தாது இருத்தல் போன்ற பல நல்ல ஒழுக்கக் கோட்பாடுகளினைக் கடைப்பிடிப்பவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வகையாகக் குணமாக்கலினைச் செய்யும் அநேகர் பரம்பரை பரம்பரையாக சிறப்பான வழிகளில் பயிற்சி பெற்றுத் தத்தமது திறன்களை விருத்தி செய்து கொண்டவர்களாக இருப்பர். உதாரணமாக சிலர் சிறுவர்களின் நோய்களைக் குணப்படுத்துவதில் பெயர் பெற்றவர்களாக இருப்பர். இன்னும் ஒருசாரார் செய்வினை, சூனியம் முதலியவற்றால் ஏற்படுவதாக நம்பப்படும் (Sorcery) தீவினைகளை அகற்றுபவர்களாக இருப்பர். அநேகமான பரியாரிமார் மருந்து, மூலிகைச் செடிகளைச் சேகரித்து, மருந்துகளைத் தாமே தயாரித்து அவற்றின் மூலம் மருத்துவம் செய்வதில் சிறந்து விளங்குகின்றனர்.
கிறிஸ்தவப் பாதிரிமார்களின் வழிபாட்டின் ஊடான குணமாக்கல் முறைகளும் நோக்க வேண்டியதே. உதாரணமாக விடுதலைப் பெருவிழா போன்ற குணமாக்கல் வழிபாட்டு முறைகளானது அங்கே மலிந்து காணப்படும். அவ்வாறான ஆராதனை நிகழ்வின் போது ஆயிரக்கணக்கானவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி குறிப்பிட்ட நோயாளிக்காக (உடலுளம் சார்ந்த எந்த நோயாக இருப்பினும்) தமது மனவாற்றலைக் கொண்டு வேண்டிக் கொள்கின்றனர். இத்தருணம் பல்லாயிரக்கணக்கான மனித மன ஆற்றலானது ஒருவருக்காக ஒன்று சேரும் போது அங்கு பாதிக்கப்பட்டவர் உண்மையாகவே அதிசயமாகக் குணமடைந்து விடுகின்றார். இத்தன்மை கொண்ட வழிபாட்டினை நெறிப்படுத்தும் வேலையினைச் செய்பவர்களாகவே பாதிரிமார்கள் காணப்படுகின்றனர். கடவுளென்னும் எண்ணப் பொருள் உண்டோ இல்லையோ அவ்வாறான விடயப் பொருளினை துணையாகக் கொண்டு நடைபெறுகின்ற வேண்டுதல்களினால் அபரிமிதமான குணப்படுத்தல் வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
கலையாடுவோர்- பேயாடுவோர் (மட்டக்களப்பு வழக்கில்)
கலையாடுபவர்களை உருவாடுபவர்கள், பேயாடுபவர்கள், தெய்வமாடுபவரகள், சாமியாடுபவர்கள் மற்றும் சன்னதம் ஆடுபவர்கள் என்றும் அழைப்பர். கலையாடுபவர்களில் பலர், கலையாடத் தொடங்கும் முன் ஆழமான உளசமூகத் தாக்கங்களுக்கு ஆளாகித் தேறியவர்களாக இருப்பர். பொதுவாக சாமி ஆடுபவர்கள் முதலில் அதற்கான தயாரிப்புப் படிமுறைகள் பூசை போன்றவற்றைச் செய்துவிட்டு, சடங்கு வழிபாட்டிற்கு வந்திருப்பவர்களின் முன்னே வந்து, தன்னுணர்வை இழந்து, வேறு ஒரு சக்தியின் துணையுடன் அநேகமான சந்தர்ப்பங்களில் காளி அம்மன், வைரவர் பரிசுத்த ஆவி போன்றதான ஏதாவது ஒரு கடவுளின் கட்டுப்பாட்டில் இயங்கி, உருக்கொண்டு ஆடுகிறார். அவரின் குரலில் மாற்றம் ஏற்பட்டு, உறுதியான குரலில், ஆணித்தரமாகப் பேசத்தொடங்குவார். மக்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் கேட்பவற்றிற்குப் பதில் சொல்வார். இவ்வாறு கலையாடுபவர்கள் குறித்த சடங்கிற்கான வழிபாட்டுச் சக்தியினைப் பெற்றவராக அங்கு காணப்படுவார்.
அவ்வாறு அதிமானுட நிலைக்குச் சென்றவர்களினை மக்கள் தம்மைக் காக்கின்ற பாதுகாப்பு சக்தி என நம்பி, அவரிடம் தமது குறைகளைக் கொட்டித் தீர்த்து, தாம் வணங்கும் கடவுளருடன் ஒட்டி உறவாடும் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்நடவடிக்கைகளே உடலுளப் பிணியோடு சென்றவர்களுக்கு ஆரம்ப கட்ட குணமாக்கல் விளைவினைக் கொடுத்து விடும். அங்கு இன்னும் பல நிகழ்வுகளும் நடந்தேறும். தெய்வ உருவேறியவரைச் சூழ பக்தர்கள் காணப்படுவர். அச்சமயம் அக்கலையாடுபவர் ஒவ்வொருவராக தண்ணீர் தெளித்து தம்மிடம் அழைத்து அவர்களின் குறைகளினைக் கேட்டு அதற்கான பரிகாரங்களினையும், நிவர்த்திகளினையும் சொல்லிக் குணமாக்குபவராகக் காணப்படுவார். தெய்வம் உருப்பெற்றவரே தம்மைக் கூப்பிட்டு வாக்குகள் சொன்னால் அது மிகப் பெரிய விடயமாக மக்களுக்கு அமைந்து விடுகின்றது. அதிகமான மக்கள் இவ்விதமான கலை ஆடுபவர்களை நாடி தமது குறைகளையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும், ஏனைய குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முனைகின்றார்கள். கலை ஆடுபவர்கள் இத்தகையவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுகின்றார்கள். அத்துடன், இப்படியான நிகழ்வுகளில் மக்களுக்குத் தமது பிரச்சினைகளைச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒர் ஆதரவான சூழலில் வெளிக்கொண்டுவரவும் சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.
வாக்குச் சொல்லல் (கட்டுச் சொல்லல்)
மேலே கலையாடுபவர்கள் பகுதியில் குறிப்பிடப்பட்ட நடைமுறையோடு தொடர்புடைய குணமாக்கல் முறையின் அடுத்த கட்ட முன்னெடுப்பாகவே வாக்குச் சொல்லல் என்பது காணப்படுகின்றது. உருக்கொண்டு ஆடுபவர்கள் தமது அதிமானுட சக்தியினை வாக்குச் சொல்லல் என்னும் உரையாடல் வெளிப்பாடாகவே வெளிப்படுத்துகின்றனர். பல்வகையான குறைகளுடனும், உடலுளப் பிரச்சினைகளுடனும் வருகின்றவர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் வேண்டுகோளினைச் செவிமெடுத்து அதற்கான தீர்வினையும், ஆலோசனைகளினையும் கூறுவார்கள். இது ஒரு ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாகக் காணப்படும். மக்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளான பெறுமதியான பொருட்கள் தொலைதல், களவு போதல், வளர்த்த மிருகங்கள் காணாமல் போதல், தனிநபர் குடும்பப் பிரச்சினை மற்றும் தொழில் தொடர்பாக, திருமணம் தொடர்பாக தீர்வுகாண முடியாதிருத்தல் போன்ற பலவகையான நிலைமைகளில் மனம் குழம்பிய படி வழிபாட்டுச் சடங்குகளில் பங்கு கொண்டு வாக்குக் கேட்டலில் ஈடுபடுவர். இதன் போது வாக்குச் சொல்பவர் தம்முள் உருக்கொண்ட சக்தியினை வெளிக்காட்டும் வண்ணம் உடல் பாவனைகள், குரல் வளம், அசாதாரண சைகைகள் மூலம் உரத்த தொனியில் பாதிக்கப்பட்டவருடன் உரையாடுவார்.
இங்கு மிக நுணுக்கமான குணப்படுத்தல் செயற்பாடுகள் வெளிப்படுவதைக் காண முடியும். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வாக்கும் சொல்லும் போது அவர் சார்ந்த குடும்பப் பிரச்சினைகளுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகளினையும் வாக்குச் சொல்பவர் கூறுவார். உதாரணமாக குடும்பத்தவர் ஒருவரின் ஏதாவது உடமைகள் காணாமல் போன சந்தர்ப்பத்தில் அவர் வாக்குச் சொல்லலுக்கு உட்படுகின்ற வேளையில் பாதிக்கப்பட்டவர் ஆவேசத்தில் “இதற்கு யார் காரணம் அவரை நீ அடையாளம் காட்ட வேண்டும்” என்று தமது கடவுள் உருவேறப்பட்டவரை உரிமையாகவும், பகிரங்கமாகவும் கேட்பார் அப்போது உருவேற்றப்பட்டவர் “நான் யார் காரணம் என்று சொன்னால் நீ அவருடன் சண்டை சச்சரவுகளுடன் ஈடுபடுவாய் ஆகவே நான் யார் என்று கூறமாட்டேன்” என்று கூறி பாதிக்கப்பட்டவரை ஆசுவாசப் படுத்துவார். இவ்வேளை அதுவரை நேரமும் பழிவாங்கும் உணர்வுடன் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர் சாமியின் கட்டயை ஏற்று சாந்தமடைந்து விடுவார். இதுவோர் குணப்படுத்தல் உத்தியினதும் வழிபாட்டு குணமாக்கலினதும் பாரதூரமான நன்மை பயக்கும் நடைமுறை எனலாம். இவ்வாறான நடைமுறைகளில் வாக்குச் சொல்லுதல் மூலம் குணமாக்குவோர் சரியான நடைமுறைகளைக் கையாளவிடின் பாதிப்புற்றவர்கள் இன்னும் அதிகபட்சமான நோய்படு நிலைக்கு ஆளாகி விடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கதே.
பேயோட்டுவோர்(Exorcism)
பேயோட்டல் செயற்பாடு என்பது பேய்கள் அல்லது இதர ஆவிகள் என்று நம்பப்படுகின்றவற்றை ஒரு நபரிடமிருந்தோ அல்லது ஒரு இடத்திலிருந்தோ விரட்டும் நடவடிக்கை ஆகும். இப்பழக்கம் மிகப்பழமையானதாகும். இது பல் பண்பாடுகளின் வழிபாட்டு நம்பிக்கைகளின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது. தமிழர் கலாசாரத்தில் பேய்கள் பற்றிய நம்பிக்கைகள் நிறையவே இருக்கின்றன. பேய் பிடித்தல் பேய்க்குணம் பேயாடுதல் பேயோட்டுதல் எனப் பேய்களுடன் தொடர்புடைய சொற்பிரயோகங்களும் நடைமுறையுடன் கூடிய வழக்கங்களும் இருக்கின்றன. ஒருவரின் இயல்புக்கு மீறிய நடவடிக்கையினை அவதானிக்கும் சுற்றத்தோர் அவரை பேய் பிடித்து விட்டதாக நம்புகின்றனர். குறித்த அந்நபரின் உடல் இளைப்பினையும் முகப்பொலிவின்மையினையும் மற்றும் சில வழமைக்கு மாறான நடவடிக்கைகளினைப் பார்த்தும் ஒருவருக்கு பேய் பிடித்திருப்பதாக இவர்கள் ஓரளவு நம்பி விடுகின்றனர். ஆனால் என்ன பேய் பிடித்துள்ளது, ஏன் பிடித்துள்ளது என்பதனை அறிய மிகவும் பரிச்சயமும், அனுபவமும் கொண்ட பேயோட்டு வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் காணப்படுகின்றனர்.
சில உளநலத் தாக்கங்களுக்கு ஒருவரை அல்லது ஓர் இடத்தை பேய் பிடிப்பதுதான் காரணம் என்று கிராமப்புறங்களில் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இப்பேய்கள் ஆனது தமக்கு எதிரானவர்களினால், மந்திரவாதிகளினால் ஏவப்படுவதாக நம்பப்படுகின்றது. சாதாரண மனிதர்களின் பலவீனமான சந்தர்ப்பங்களாகக் கொள்ளப்படுகின்ற பல தருணங்களில், இடங்களில் ஒருவரை பேய்பிடித்துக் கொள்வதாகக் கருதப்படுகின்றது. அதாவது இரவு வேளைகளில் தனியே செல்லும் போது, பயங்கரமான அல்லது பிரச்சினைக்குரிய இடங்களுக்கு ஊடாகச் செல்லும் போது ( சுடலை, பாழடைந்த வீடுகள், முச்சந்திகள், கழிப்பு கொடுக்கப்பட்ட இடங்கள் போன்றன.) முதலியவற்றின் மூலம் ஒருவரில் பேய் இருப்புக் கொள்வதாக நம்பப்படுகின்றது. கிறிஸ்தவ வழிபாட்டு நடைமுறைகளிலும் இப்பேய்கள், ஆவிகளுடன் தொடர்புடைய வழிபாட்டுக் குணமாக்கல் நடைமுறையானது காணப்படுகின்றது.
பிரதேசத்திற்குப் பிரதேசம் வெவ்வேறான பெயர்களில் அழைக்கப்படும் பல்வேறுபட்ட பேய்கள் இருந்தாலும், பேயோட்டும் சடங்கானது அடிப்படையாகச் சில அம்சங்களைக் கொண்டிருக்கும். ஒரு விசேட பூசை நடக்கும். பேய்கள் ஆனது வாழ்வதாகக் கருதப்படும் இடங்களில் ஆறு, குளம், கடல் அல்லது சுடலையை அண்டிய பகுதிகளில் நடக்கும். பின்பு பேயோட்டுதல் ஆட்டிக் கழித்தல் என்னும் அமானுட சக்தியின் துணை கொண்டு நடைபெறும். இங்கு பேய் ஓட்டுபவர் பேய் பிடித்தவரை அதிமானுட நிலைக்குச் செல்ல வைத்து அவரில் வந்த நிற்கும் பேயுடன் உரையாடுவார். அச்சமயம் குறித்த நபரில் பிடித்திருக்கும் அந்தப் பேய் எது என்பதையும் அது என்ன காரணத்திற்காக அந்நபரில் வந்தது என்பதையும் பாதிக்கப்பட்ட நபரில் இருந்து செல்ல என்ன வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வார். அநேகமான சந்தர்ப்பங்களில் அந்த தேவை நிறைவேற்றப்படும்.
“பேய் பிடித்தவரிலிருந்து பேய் விலகிக்கொள்ளும், அவர் குணமடைவார் அல்லது முதற்காட்டிய அறிகுறிகளிலிருந்து விடுபடுவர். பேய்கள் கேட்கும் பொருட்கள் ஆழ் மனதில் நனவிலிப் பகுதியில் இருக்கும், பூர்த்தி செய்யப்படாத, ஆசைகளைப் பிரதிபலிக்கலாம் அல்லது ஆழ் மனதிலிருக்கும் உளச்சிக்கல்கள், தாக்கங்கள், இயக்கப்பாடுகளைக் குறிக்கலாம் என்று மேற்கத்தேய அறிஞர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வுகளில் அநேகமானவை சமூகமட்டப் பார்வையாளர் முன் அதாவது குடும்பத்தவர், சமூகம், சுற்றத்தார் என்பவர்கள் முன்னிலையிலேயே நாடகத் தன்மையோடு நடத்தப்படுவதனையும் குறிப்பிட்டாக வேண்டும். இதனால் சமூகமட்டப் பயன், ஆதரவு, மதிப்பு, இயக்கப்பாடு என்பன பாதிக்கப்பட்டவருக்குக் கிட்டுகிறது. இவ்வாறான கலாசார செயற்பாடுகளின் பயனாக தனிப்பட்ட ரீதியிலும் குடும்ப மட்டங்களில் குற்றவுணர்வு அற்றுப்போதல் கவலை குறைதல்; திருப்தி ஏற்படுதல்; உணர்ச்சி வெளிப்பாடு நிகழுதல் என்பவற்றுடன் நிம்மதி ஆறுதல்; மற்றவர்களின் ஆதரவு அங்கீகாரம் ஏற்கப்பாடு புரிந்துணர்வு கரிசனை முதலியனவும் கிடைக்கின்றன. அதனால் இவற்றைச் சரிவர சம்பிரதாய முறைகளில் செய்யும் பொழுது அது பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுகின்றது. உளசமூக சேவையாளர் இவற்றுக்கு இடமளித்து,வழிகாட்டுவது பொருத்தமானது.”
வழிபாட்டின் மூலம் குணமாக்குவோரின் தன்மைகள்
பெரும்பாலான வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் முதியோராகவும், அறிவுடையோராகவும் அனுபவத் தேர்ச்சி கொண்டவர்களாகவும் வழிபாட்டுச் சூழலிலே இருப்பார்கள். அவர்கள் தங்களை நாடி வருகின்ற மக்களோடு எவ்விதம் உரையாடுவது அவர்கள் சொல்லுவதை எவ்விதம் செவிமடுப்பது என்பவற்றைத் தெரிந்து இருப்பார்கள். அத்துடன் அதற்கு ஏற்றாற்போல் மிகவும் நல்ல பொருத்தமான ஆலோசனைகள், கருத்துகள் விளக்கங்களைக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக சடங்காசாரங்கள் ஆனது வழிபாட்டின் மூலம் குணமாக்குவோரின் துணை கொண்டு உளவளத்துணை குற்றவுணர்வு கவலை போன்றவற்றையும் ஓர் இறப்பின் பின்னர் அனுபவிக்கும் இழவிரக்கம் அல்லது ஒரு மனதைத் தாக்கும் சம்பவங்களின் பின் ஏற்படும் கசப்பான உணர்வுச் சிக்கல்கள் போன்றவற்றையும் குறைக்கிறது அல்லது முற்றாக அகற்றி விடுகிறது.
தனி மனிதர்கள் தமது குடும்பப் பிணக்குகள் போன்ற இக்கட்டான சில சமயங்களில் மிகவும் குழப்பமான நிலையில் காணப்பட்டு பல பாரிய கெடுவிளைவுகளுக்கு ஆளானவர்களாக, ஆளாகத் தயாரானவர்களாகக் காணப்படுவர். அவ்வேளை பாரம்பரிய உளவளத்துணையாளர்கள், குழப்பமான நிலையில் இருக்கும் மனிதர்கட்கும், அயலவர்களுக்கும் இந்த நிலைமைகளை விளங்கிக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், சீராக்கவும் உதவி செய்வார்கள். ஆகவேதான் மக்கள் பாரம்பரிய குணமாக்கல் உதவியாளரை நம்புவதோடு தமது அந்தரங்கமான, தனிப்பட்ட விடயங்களைக் கூட அவர்களிடம் மிக இலகுவாக வெளியிடக் கூடியவர்களாகவும், அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு மதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். “மக்களுக்கு உளவளத்துணை அளிப்பதில் பாரம்பரிய குணமாக்குவோரை ஈடுபடுத்துவது நன்மை பயக்கும். பாரம்பரிய பகுதியின் நன்மைகளில் ஒன்று என்னவெனில், குணமாக்குவோருக்கும் மக்களுக்குமிடையே உளசமூகப் பிரச்சினைகள் பற்றிப் பெரும்பாலும் நல்ல புரிந்துணர்வு இருக்கும். குறிப்பாக மக்கள் ஒன்றை ஆழமாக நம்பும் போது, உளரீதியாக அவர்கள் நன்மை அடைகிறார்கள்.”
“18 வயதுடைய மாணவன் பிரதிஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அப்போது உயர்தரம் படித்துக் கொண்டிருந்தார். உயர்தரப் பரீட்சைக்கு சில மாதங்களே இருக்கும் போது அவருடைய நடத்தைகளில் மாற்றம் வருகின்றது. அவர் திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுகின்றார். அப்போது அவருடைய முகத்தோற்றம் மாறி வாயினால் நுரை வருகின்றது. மயக்கம் தெளிந்த பின்பும் சில வினாடிகளுக்கு அவர் மாறாட்டமாகக் கதைக்கின்றார். இவ்வாறு அடிக்கடி நடக்க குடும்பத்தார் பயந்து விடுகின்றனர். குடும்பத்துள்ளும், அயல் பகுதியிலும் இவருக்கு நன்றாகப் படிப்பதினால் படிப்பைக் கெடுக்க சூனியம் செய்து விட்டனர் என கதைக்கின்றார்கள். குடும்பத்தினர் இவரின் நிலைமையினால் பதறிப்போகின்றனர். அவரின் நண்பர், ஏனைய உறவுகளின் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் தொடர்பினை மறுத்து விடுகின்றனர். பிரதிஸ் தனிமைப்படுத்தப்படுகின்றார். ஒரு நாள் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு அந்த நோயானது வருகின்றது. அவர் தனது பற்களினால் நாக்கைக் கடித்து நாக்கு காயமாகின்றது. இவ்வாறு பல நாட்கள் நடக்கின்றது.
ஒரு நாள் உறவினர்கள் அவரை ஒரு வழிபாட்டுத் தளத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு காணப்படும் குணமாக்குபவர் நாகத்தினை தன்னுள் உருக்கொள்ளப் பண்ணி அதன் மூலம் குணமாக்கலைப் புரிவோராகக் காணப்படுகின்றார். அவர் உறவினர்களின் மூலம் பிரதிஸ் இந் நிலைமையை அறிந்து கொள்கின்றார். பிரதிஸ் கொண்டு செல்லப் பட்டதும் குறித்த குணமாக்குபவர் உருவேறி சில நடைமுறைகளைச் செய்து பிரதிஸின் நாக்கிலே தனது நாக்கினால் மருந்தைத் தடவுகின்றார். மக்கள் கூட்டம் பரவசத்தால் அரோகரா சொல்கின்றது. அன்று மாலையே பிரதிஸின் நாக்கினுடைய காயம் அசறு பிடிக்க ஆரம்பிக்கின்றது. மறுநாள் பிரதிஸ் வழிபாட்டுத் தளத்திற்கு அழைத்து செல்லப் படுகின்றார். வழிபாட்டுப் பூசைகள் நடந்து கொண்டிருக்கும் போது பிரதிஸுற்கு வழமையாக வருவது போல் அந்நோய் அறிகுறி வருகின்றது. அனைத்து நடவடிக்கையினையும் நன்கு அவதானித்த குணமாக்குபவர் இனிமேல் இவர் இங்கு வரத்தேவையில்லை .இவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அறிவுரை கூறிவிடுகின்றார். பிரதிஸ்ஸை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கின்றனர். அவருக்கு வலிப்பு நோய் இருப்பது நோய்ப் பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. சில நாட்கள் பின் பிரதிஸ் குணமடைந்து உயர்தரம் எழுதி பல்கலைக்குத் தெரிவாகின்றார்.”
பல உளசமூகப் பிரச்சினைகளைக் கையாளுவதில் பாரம்பரிய வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றார்கள். பிரச்சினைகள் உள்ளவர்கள் அவற்றிற்கு தீர்வுகளைத் தேடும்போதுஇ குணமாக்கக் கூடியவர்களை நாடுவதோடு, அந்தப் பிரச்சினைகளை உண்டாக்கிய காரணிகளைக் கண்டறியவும் முயலுவர். வழிபாட்டின் ஊடாக குணமாக்குவோர் இவற்றிக்கும் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமது உளச்சிக்கல் நிலைமைகளுக்கான காரணிகளை அகற்றவோ, கையாளவோ துணைபுரிவார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆகவே மக்கள் தமது உளவிடுபடு நிலைமைக்கு அர்த்தம் காணவும், பரிகாரம் பெறவும் பலவித உதவிகளை நாடுவர். அவர்களின் நம்பிக்கைகள், வசதிகள், பொருளாதாரம், சமூக நிலை மற்றும் படிப்பறிவு மற்றவர்களின் ஆலோசனை அனுபவத் தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையிலே பெயர் பெற்றஇ புகழ் பெற்ற உதவக்கூடியவர்களைத் தேடிப்போவார்கள். இவ்வாறானவர்களினை இனங்கண்டு அவர்களின் நிலைமைகளினை நன்கறிந்து உதவி செய்வோராக வழிபாட்டின் மூலம் குணமாக்குவோர் காணப்படுகின்றார்கள். இதற்கு மேலே கூறப்படுள்ள பாதிக்கப்பட்டு குணமானவரின் அனுபவப் பகிர்வு சான்றாகும்.
தேவை நிறைவேறல் வழிபாட்டு முறைகள்
(மறைமுக குணமாக்கல் தன்மைகள்)
வழிபாட்டுச் சடங்குகளிலே இவ்வாறான வழிபாட்டு நடைமுறைகளும் உண்டு. அதாவது மேலே நாம் பார்த்தது தனி மனித உள்மன உளச்சிக்கல்களினை வழிபாடுகளின் மூலம் குணமாக்கிக் கொள்வது பற்றியதாகும். அது போலவே இங்கு குறிப்பிட்ட சமயத்தினை அல்லது வழிபாட்டு முறைகளினைப் பின்பற்றுவோர் அவர் தம் வழிபாட்டுச் சடங்கு நடவடிக்கைகளின் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மறைமுக குணமாக்கல் நிலைமைகள் பற்றிப் பார்க்கலாம். அதாவது மக்கள் தமது ஊர்கள்,குழுக்கள் சார்ந்து பொதுவாக வேண்டுகின்ற தேவைகளான மழை வேண்டல், கடும் வெப்பம் தணிய குளிர்த்திச் சடங்கு, கும்பத் திருவிழா, பாண்டவர் வனவாசம், சூரன் போர், வேட்டைத் திருவிழா, கொம்புமுறி விளையாட்டு முதலிய வழிபாட்டுச் சடங்காசாரங்களின் மூலமும் குணமாக்கல் தன்மையானது மக்களின் பொதுவகையான பிரச்சினைகளில் இருந்து விடுபட வழிவகுக்கின்றது எனலாம். மழை வேண்டலுக்காகவே மாரி, காளி, கண்ணகி போன்ற தெய்வங்களுக்கு மக்கள் திருவிழாச் சடங்குகளினைச் செய்வதையும் காணமுடிகின்றது. இவ்வாறு மேலே சொல்லப்பட்டது போன்று மக்கள் தம் பொதுவான தேவைகளினை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு செய்கின்ற வழிபாட்டுச் சடங்குகளிலும் குணமாக்கல் தன்மைகளானது மறைமுகமாகக் காணப்படுகின்றதே உண்மை எனலாம்.
தொடரும்.