அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் - பகுதி 1
Arts
13 நிமிட வாசிப்பு

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 1

November 10, 2023 | Ezhuna

இலங்கை முஸ்லிம்கள் குறித்து பண்பாட்டு மானிடவியல் ரீதியான ஆய்வுகளை மானிடவியல் ஆய்வு மரபுகளைப் பின்பற்றி முறையான பரந்துபட்ட வகையில் மேற்கொண்டவர் பேராசிரியர் டெனிஸ் மெக்கில்ரே. அமெரிக்கரான டெனிஸ் மெக்கில்ரே கொலராடோ பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைப் பேராசிரியர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த பரந்துபட்ட மானிடவியல் ஆய்வுகளை மேற்கொண்ட மேற்கத்தேயப் பேராசிரியர்களுள் மிக முக்கியமானவர் மெக்கில்ரே. குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பண்பாட்டு மானிடவியல் மரபுகள், தொன்மங்கள், பண்பாட்டுக் கூறுகள் குறித்த விரிந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதனை உலகப் பரப்புக்குக் கொண்டு சென்றவர் என்ற வகையில் இலங்கைத் தமிழர்களும், முஸ்லிம்களும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, மானிடவியல் மரபுகள், தொன்மங்கள் பற்றிய அவரது சமூகவியல் நோக்கிலான ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ‘டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு‘ எனும் தலைப்பில் வெவ்வேறு உப தலைப்புகளுடன் வெளிவரும்.

18 வீதமான தமிழர்களுடன் ஒப்பிடும் போது, இலங்கை சனத்தொகையில் கிட்டத்தட்ட 8 வீதமானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் இந்த எளிய சிறுபான்மை அடையாளங்கள் தீவின் இனச் சிக்கலை வெளிப்படுத்துவதை விடவும் உண்மையில் மறைக்கவே செய்கின்றன. கடந்த 100 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தின் நகர்ப்புற தலைவர்களும் அரசியல் பேச்சாளர்களும், முஸ்லிம்கள் வீட்டில் தமிழ் பேசினாலும் பல தமிழ் உறவுகளையும் உள்நாட்டு நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டாலும், அவர்களை தமிழ் முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் தமிழர்கள் என்று பார்க்க முடியும் என்ற எந்த கருத்தையும் கடுமையாக மறுத்து வந்துள்ளனர். தவிர, முஸ்லிம்கள் பற்றிய மதிப்புரைகள் மற்றும் மதம் சார்ந்த நூல்களை தமிழில் இயற்றியுள்ளனர், அவற்றில் சில அரபு-தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன (Uwise 1986, 1990). காலனித்துவ ஐரோப்பிய, தமிழ் மற்றும் சிங்களச் சூழல்களில் பல நூற்றாண்டுகளாக அவர்கள் எதிர்கொண்ட அடையாளப் பிரச்சினைகளின் சமிக்ஞையாக இலங்கை முஸ்லிம்களுக்கான திகைப்பூட்டும் சொற்களின் பட்டியல் உள்ளது.

16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அதாவது காலனித்துவ காலத்தின் தொடக்கத்தில் இருந்து, இலங்கையில் பெரும்பான்மையான தமிழ் பேசும் முஸ்லிம்கள் Moor (மூர்) (Mouro, Moroccan) என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டனர். போர்த்துக்கேயர் தங்களது ஆபிரிக்க மற்றும் ஆசியப் பேரரசுகளில் காணப்பட்ட முஸ்லிம்களைச் சுட்ட இந்தப் பதத்தைப் பயன்படுத்தினர். அத்துடன் ‘முகமதியன்’ அல்லது ‘முசல்மான்’ போன்ற பழக்கமான ஐரோப்பிய சொற்களாலும் அழைக்கப்பட்டனர்.

1970 களின் தொடக்கத்தில், கிழக்கிலங்கையின் சோனகர்கள் (Moors) மத்தியில் எனது களப்பணியைத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் சொந்தத் தமிழில் பேசும்போது ‘முஸ்லிம்’ என்பது மிகவும் பொதுவான வார்த்தையாக இருப்பதைக் கண்டேன். உறுதியாகச் சொல்வதானால், ‘முஸ்லிம்’ என்ற மதச் சொல் சோனகரிலிருந்து இனரீதியாக தெளிவான வேறுபாட்டைக்கொண்ட மலாய்க்காரர்கள் மற்றும் சிறிய குஜராத்தி வர்த்தக சமூகத்தினர் போன்றவர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். Conakar/ கோணாகர் (சோனகர், ஜோனகர்) என்ற சொல் பழமையான தமிழ் மற்றும் மலையாளச் சொல்லாகும். இச்சொல் தொடக்கத்தில் மேற்கு ஆசியர்களை, குறிப்பாக அரேபியர்கள் அல்லது கிரேக்கர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இலங்கைச் சோனகர்களுக்கான இனப்பெயராக ‘லங்கா யோனகா’ (Lanka Yonaka) எனும் சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டாலும், அது வழக்கொழிந்து வருவதாகவே தெரிகிறது. பொதுவாக ஆங்கிலத்தில், ‘மூர்’ (சோனகர்) மற்றும் ‘முஸ்லிம்’ ஆகிய இரண்டு பதங்களும் ஒன்றுக்கொன்று மாற்றாக இன்று தமிழ் பேசும் முஸ்லிம் இலங்கையர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தீவில் உள்ள மொத்த இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானோர் அதாவது 93 சதவீதம் பேர், வைதீக மரபைச் (Orthodox) சேர்ந்தவர்கள். அதாவது சுன்னத் (Sunni) ஜமாஅத்தினர்/ உறுப்பினர்கள். முஸ்லிம் மத்ஹப் (சட்டவியல் சிந்தனைப் பள்ளி) சார்ந்து ஷாஃபி சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்கள்.

இலங்கை முஸ்லிம்கள் தங்கள் இனத்தோற்றம் தொடர்பில் திராவிடத்தை விட ஐரோப்பிய அல்லது இஸ்லாமிய இன முத்திரையை விரும்புகிறார்கள் என்பது இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மையினரிடையே உள்ள முக்கிய பிளவுகளில் ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. அண்மையில், ஒரு சில வரலாற்றாசிரியர்களும், முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளும் கூட, ‘முஸ்லிம்களுக்கு எந்த குறிப்பிட்ட மொழியிலும் அர்ப்பணிப்பு இல்லை’ என்று வலியுறுத்தினர். சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களில் வசிக்கும் சோனகர்கள் தங்கள் குழந்தைகளை சிங்கள மொழிவழிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு விருப்பம் காட்டுகின்றனர் (எம்.ஏ.எம். சுக்ரி 1986b: 70; மற்றும் கே.எம். டி சில்வா 1988: 202). சிங்கள மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் இளைய தலைமுறையினர் தமிழுக்கு பதிலாக சிங்கள மொழியில் படிப்பதனால் முஸ்லிம்கள் ‘மொழி ரீதியாக பிளவுபட்ட சமூகமாக’ மாறி வருகிறார்கள் என்று ஓர் எழுத்தாளர் வாதிடுகிறார். (அமீர் அலி 1986-87: 167). இச்செயல்முறை விரைவில் தமிழின் இழப்பையும், சோனகரின் வீட்டு மொழியின் மாற்றாக சிங்கள மொழி பரந்துபட்ட வகையில் அமையும் என்பதிலும் எனக்கு சந்தேகம் தோன்றுகிறது. காரணம், சிங்கள மொழியில் போதிய தகைமை பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களின் நீண்டகால பற்றாக்குறையாகும். (மோகன் 1987: 107; உவைஸ் 1986).

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இன அடையாளமும் அரசியல் நிலைப்பாடும், இன்று உலகில் பாதுகாப்பான இடத்திற்காகப் போட்டியிடும் பல கலாச்சார ரீதியாக வரையறுக்கப்பட்ட குழுக்களைப் போலவே, காலனித்துவ மற்றும் பின்-காலனிய அழுத்தங்களினதும், முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த இயக்கவியலினதும் பிரதிபலிப்பாக கடந்த நூற்றாண்டில் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை அரசியலில் சோனகர்கள் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர், 1983 இற்குப் பிறகு தமிழீழத்திற்கான ஆயுத மோதல்கள் திடீரென ஆரம்பமானதுடன் இது மேலும் உறுதியாகியது. இந்த சூழல் அவர்களில் பலரை ​​இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிகவும் இறுக்கமான ஓர் இடத்தில் சிக்க வைத்தது.

இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையின் வேர்களை வெளிப்படுத்தும் வகையில், சோனக இனத்தவர் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கிற இரு தென்னிந்திய முஸ்லிம் குழுக்களான கேரளா மாப்பிள்ளாக்களுடனும், தமிழ்நாட்டு மரைக்காயர்களுடனும் ஒப்பிட்டு இலங்கைச் சோனகரின் இன அடையாளத்தின் வரலாற்று வளர்ச்சியை நான் முதலில் கண்டறிவேன். பின்னர், இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு, இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பதட்டமான உறவுகளை இனவியல் ரீதியாக ஆராய்வேன். அங்கு இப்போது சமநிலையிலுள்ளது இனரீதியான இணக்கப்பாடா? அல்லது இனப் பிளவா? எதிர்கால விளைவு பற்றியும் முன்வைப்பேன்.

இலங்கைச் சோனகரின் தொடக்க கால வரலாறு

இலங்கையில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகால சான்றுகள் துண்டு துண்டான பயணிகளின் பதிவுகள், ஆரம்பகால இஸ்லாமிய நாணயங்கள், இங்குள்ள சில கல்லறைகள், அவற்றிலுள்ள சில கல்வெட்டுகள் ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் தோற்றம் இஸ்லாத்துக்கு முந்தைய – தெற்கிற்கும், தென்கிழக்காசியாவிற்கும், மத்திய கிழக்கிற்கும் இடையிலான – கடல்வழி வர்த்தகத்துடன் தெளிவாகத் தொடர்கிறது. அரேபியர்கள் மட்டுமல்ல, பாரசீகர்களும் (பெர்சியர்கள்) கூட, இந்த தீவுக்கு அடிக்கடி வருகை தந்தனர் (அலி 1981a: 71-76; Effendi 1965; Kiribamune 1986). 7 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் அரேபிய தீபகற்பத்தில் இஸ்லாத்தின் வருகையுடனும், பெர்சியாவின் அடுத்தடுத்த வெற்றியுடனும், இந்தியப் பெருங்கடல் முழுவதுமான வர்த்தகம் 8 ஆம் நூற்றாண்டிலிருந்து மிகப் பெரியளவில் அரபு முஸ்லிம் வணிகர்களின் செல்வாக்குக்குள்ளானது. பிரதான மாநில அரசுகளையும், பேரரசுகளையும் நிறுவிய வட இந்தியாவின் பாரசீக, துருக்கிய படையெடுப்புகளைப் போலல்லாமல், 8 ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவினதும், இலங்கையினதும் கரையோரங்களில் முக்கியமாக அரபு கலாச்சாரத்தினது தாக்கமும், அரபு வணிக உந்துதலுமே மேலோங்கியதாக இருந்தது. (விங்க் 1990: அத்தியாயம் 3).

Vasco da Gama

கேரளாவினதும், இலங்கையினதும் இடைக்கால இந்து மற்றும் பௌத்த சாம்ராஜ்யங்கள், கடல்கடந்த வர்த்தகத்தில் இருந்து வருவாயைப் பெற ஆர்வத்துடன், அரபு வணிகர்களை அனுமதித்தன. அவர்களில் பலர் உள்ளூர் மனைவிகளைப் பெற்றனர். அவர்களால் இந்தோ-முஸ்லிம் வம்சாவளியைப் இங்கு உருவாக்க முடிந்தது. கோழிக்கோடு, கொழும்பு போன்ற துறைமுக குடியிருப்புகளில் அவர்கள் பொருளாதார நிலையில் மேம்பட்ட இடத்தில் இருந்தனர். (அரசரட்ணம் 1964; டேல் 1980; கிரிபாமுனே 1986). அப்போது மொழிவாரியாக கேரளாவுடன் இணைந்திருந்த தென்கிழக்கு இந்தியாவின் சோழ மண்டல கரையோரப் பகுதி அரேபிய முஸ்லிம் வணிகர்களையும் ஈர்த்தது. அவர்கள் காயல்பட்டிணத்தில் தாம்பிரபாணி ஆற்றின் முகப்பில் ஒரு உறைவிடத்தை நிறுவினர் – அதே போல் கீழக்கரை, அதிராம்பட்டினம், நாகப்பட்டினம் மற்றும் பிற கடலோரக் குடியேற்றங்களையும் நிறுவினர். வடக்கே இருந்து அவர்கள் ஏனைய பொருட்களோடு தமிழ் இந்து மன்னர்களின் படைகளுக்குத் தேவையான அரேபியக் குதிரைகளை இறக்குமதி செய்தனர். அத்துடன் இங்கிருந்து அவர்கள் இந்திய ஆடைகளை ஏற்றுமதி செய்தனர் (பேலி 1989). 1498 ஆம் ஆண்டு வாஸ்கொடகாமா தனது போர்த்துகீசிய கடற்படை சிலுவைப்போரை, கோழிக்கோட்டில் நன்கு நிலைபெற்ற ‘மூர்’களுக்கு எதிராகத் தொடங்கியபோது, எஞ்சியிருந்த பெரும்பாலான அரேபியர், உள்நாட்டில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட மாப்பிளா முஸ்லிம்களை ஏதோ ஒரு வடிவில் சண்டையைத் தொடர விட்டுவிட்டு மலபார் கடற்கரையிலிருந்து வெளியேறத் தொடங்கினர். (Bouchon 1973; Dale 1980:47).

அதே நேரத்தில், போர்த்துகீசியர்கள், தென்னிந்தியாவின் மலபார் மற்றும் கோரமண்டல் கரையோர முஸ்லிம்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்த தமிழ் பேசும் ‘மூர்’களை (சோனகர்களை) இலங்கையில் எதிர்கொண்டனர். அவர்கள் (மூர்கள்) கோட்டேயின் உள்ளூர் சிங்கள மன்னர்களின் மேலாதிக்கத்தின் கீழ் வரும் முக்கிய தென்மேற்கு துறைமுக குடியிருப்புகளில் சுங்க வரி வசூலிக்கவும், கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் அரச அனுமதி பெற்றவர்களாக இருந்தனர். (அலி 1980; இந்திரபால 1986; அபேயசிங்க 1986).

Muslim Maapilla

போர்த்துகீசிய, ஒல்லாந்து காலனித்துவ ஆட்சிக் காலம் என்பது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் கடுமையானதாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக மூர்கள் (சோனகர்கள்), தங்களின் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தின் ஐரோப்பிய ஏகபோகத்திற்கு அவர்கள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக கடுமையான அபராதங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். இறுதியில், போர்த்துகீசியக் கொள்கைகளின் விளைவாக, (1626 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ ஆணையின்படி) பல கரையோர சோனகர்கள் உள்நாட்டில் கண்டிய இராச்சியத்திற்கு இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அங்கு அவர்கள் தாவலம் எனும் மாட்டு வண்டிப் போக்குவரத்திலும், ஏனைய தொழில்களிலும் ஈடுபட்டார்கள். (அலி 1980: 337ff; சி.ஆர். டி சில்வா 1968; தேவராஜா 1986). 1626 ஆம் ஆண்டு கண்டி அரசன் செனரத், போர்த்துகீசிய கோட்டையான புளியந்தீவிலிருந்து தனது கிழக்குப் பகுதியைப் பாதுகாப்பதற்காக 4,000 சோனகர்களை கிழக்குக் கடற்கரையின் மட்டக்களப்புப் பகுதியில் மீள்குடியேற்றியதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில், அது மட்டுமே இந்தப் பகுதிக்கு சோனகர்கள் இடம்பெயர்ந்தமைக்கான ஒரே வரலாற்றுக் குறிப்பாக இருக்கிறது. (சி.ஆர். டி சில்வா 1972: 88; எம்.ஐ.எம். மொஹிதீன்)

செனரத்தின் மீள்குடியேற்றம் பற்றி எந்தவொரு உள்ளூர் ஆவணங்களிலும் வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், உறுதியாக 17 ஆம் நூற்றாண்டிலும், ஏராளமான சோனக விவசாயிகள் கிழக்குக் கடற்கரையில் நன்கு நிலைநிறுத்தப்பட்டனர். இன்று நாட்டின் முஸ்லிம் சனத்தொகையில், அதிக முஸ்லிம் விகிதத்தைக் கொண்ட பகுதி, எனது சொந்த களப்பணியை நான் செய்த இந்தப் பகுதியே ஆகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

17329 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்