வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை
Arts
15 நிமிட வாசிப்பு

வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கை

November 22, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

எழுதப்பட்ட ஆவணங்களே வரலாற்றுக்கு ஆதாரம். எழுத்துக் கிடையாத காலத்தில் வேறு தொல்லியல், மானுடவியல் எச்சங்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் போது அது ‘முன்னை-வரலாறு’ (Pre-History) என்று அழைக்கப்படும். முன்னை-வரலாற்றின் குறைந்தபட்ச எல்லை என்பது அங்கு எழுத்துச் சான்று கிடைத்த காலமே. நாம் வரலாறை எப்போதும் மனிதனை மையமாகக் கொண்டே வரைவதால், ஒரு நாட்டின் முன்னை-வரலாறானது அங்கு முதல் மாந்தன் தடம் பதித்த காலத்திலிருந்து, அங்கு கிடைத்த முதல் எழுத்துச் சான்று வரையான காலம் என்று மதிப்பிடப்படுகிறது.

முன்னை-வரலாற்றுக் காலமானது மனிதன் அந்தந்த இடங்களில் குடியேறி தன் வரலாற்றை எழுத்தில் பொறிக்க ஆரம்பித்த காலத்தைப் பொறுத்து இடத்துக்கிடம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. உதாரணமாக அவு`ச்திரேலியக் கண்டத்தில் இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் குடியேறிவிட்டான். ஆனால் அவு`ச்திரேலியப் பழங்குடிகளின் மொழிகளுக்கு எழுத்து இருக்கவில்லை. அங்கு முதல் காலனித்துவக் குடியேற்றம் ஏற்பட்ட 1788 இல் தான் ஐரோப்பியக் குடியேறிகள் மூலம் எழுத்து ஆரம்பமானது. எனவே அவு`ச்திரேலியாவின் முன்னை-வரலாறு 1788 உடன் முடிவடைகின்றது.

இந்தியத் துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை முன்னை-வரலாற்றுக் காலமானது அங்கு இன்றைய மனிதன் குடியேறிய இற்றைக்கு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி அங்கு எழுத்துப்பொறிப்புகள் கிடைக்கின்ற பொமு. 500 களில் முடிவடைகின்றது. இற்றைக்கு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் புத்தேள் மாந்தனின் வருகையுடன் ஆரம்பமாகும் இலங்கையின் முன்னை-வரலாற்றுக் காலம், பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்க ஆரம்பிக்கும் சுமார் பொபி 500 ஆம் ஆண்டுடன் முடிவடைகின்றது.  

இலங்கையில் முன்னை வரலாற்றின் தொடக்கம்

மனித இனம் உலகில் தோன்றியதும் அது உலகமெலாம் பரந்ததும் மிகுந்த சிக்கலான அதேவேளை மர்மம் மிகுந்த விஞ்ஞானக் கருதுகோள்களுள் ஒன்று. பொதுவாகச் சொல்லப்படும், “மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான்” என்ற சொலவடையை விட, குரங்கும் மனிதனும் தங்களுக்குப் பொதுவான ஒரே மூதாதையிலிருந்து கூர்ப்பால் தோன்றின என்று சொல்வதே சரி. இந்தப் பொதுமூதாதைக்கு “மாமந்தி” (Great Ape) என்று பெயர். மாமந்தியிலிருந்து தான் மனிதனும், சிம்பன்சி, கொரில்லா, ஒரங்குட்டான் உள்ளிட்ட குரங்கு இனங்களும் தோன்றின (உரு. 01).

ஃகோமோ சபியன்`ச் (Homo sapiens) என்பது இன்றைய மனிதனைக் குறிக்கும் அறிவியற் பெயர். மனிதனைப் போல “ஃகோமோ” பேரினத்தைச் சேர்ந்த பல மாந்த மூதாதைகள் வாழ்ந்து மறைந்துவிட்டார்கள். நியாண்டதால் மாந்தன் (Neanderthal), நிமிர் மாந்தன் (H. erectus), டெனிசோவ மாந்தன் (Denisovan)  முதலிய இந்த மாந்த மூதாதையரை “தொல்மாந்தர்”  (ஃகொமினினா, Hominina) என்பது வழக்கம். இந்த ஃகோமோ பேரினத்தை சேர்ந்த மாந்தர் உலகில் 2.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றினர். ஃகோமோ பேரினத்தில் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மறைந்த நிமிர் மாந்தன் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறிய முதல் தொல்மாந்தனாகக் கருதப்படுகிறான். நிமிர் மாந்தரது உயிர்ச்சுவடுகள் ஐரோப்பா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இன்றைய புத்தேள் மாந்தன் (Modern Human) அல்லது ஃகோமோ சபியன்`ச், இற்றைக்கு மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவினான்.

sapiens table 1

எவ்வாறெனினும் தொல்மாந்தன் என்றதும் நாம் கற்பனையில் தோன்றுகின்ற, “அவர்கள் குகையில் அம்மணமாக வாழ்ந்த காட்டுமிராண்டிகள்” என்ற சித்திரம் தவறு என்பதை சமகால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நிமிர் மாந்தனே முதன்முதலில் தீயைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியவன். நிமிர் மாந்தரும் ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, உ`ச்பெகி`ச்தான் பகுதிகளில் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை வாழ்ந்து மறைந்த நியாண்டதால் மாந்தரும் (Neanderthal Human, Homo neanderthalensis )  உணவைப் பதப்படுத்தி வைக்கவும் ஆடை நெய்யவும் கடலோடி மீன் பிடிக்கவும் காயங்களைக் குணப்படுத்தவும் அறிந்திருந்தனர்.

நிமிர் மாந்தர் மற்றும் நியாண்டதால் உயிர்ச்சுவடுகளிலிருந்து அவர்கள் கலையுணர்வு மிகுந்தவர்கள் என்பதும் அரிய மணிகளை சேமித்து அலங்கரிக்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தது என்பதும் அறியப்பட்டிருக்கிறது. நியாண்டதால்கள் புல்லாங்குழல் முதலிய இசைக்கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்தியதுடன் 65,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில பழங்கற்கால ஓவியங்கள் நியாண்டதால் மாந்தரால் வரையப்பட்டவையாகக் கருதப்படுகின்றது. மிகக்குறைவான சான்றுகளிலிருந்து அவர்கள் தொடர்பாடலுக்கென மொழியைப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்பதும், சமய நம்பிக்கைகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்பதும் கூட ஊகிக்கப்படுகிறது.

புத்தேள் மாந்தன் (Modern Human) இற்றைக்கு மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்காவில் தோன்றினான். அவனது குறிப்பிடத்தக்கதும் முக்கியமானதுமான ஆசியாவுக்கான பரம்பல் 70,000 தொடக்கம் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது (உரு. 02). இன்றைய ஆபிரிக்காவுக்கு வெளியேயுள்ள சகல புத்தேள் மாந்தரும் இந்த இறுதிப் புலம்பெயர்வின் பிரதான விளைவே என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நிமிர்மாந்தன், நியாண்டதால் மாந்தன் ஆகியோருடன் இடைத்தாக்கம் புரியும் வாய்ப்பு புத்தேள் மாந்தனுக்குக் கிடைத்திருக்கும் என்பதால் ஏனைய மாந்த இனங்களின் மறைவுக்கு இவன் காரணமாயிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகின்றது.

sapiens migration

இந்தியத் துணைக்கண்டத்தில் தொல்மாந்தன் எப்போது குடியேறினான் என்பது சரியாகத் தெரியவில்லை. நிமிர் மாந்தன் இங்கு இரண்டு அல்லது ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியிருக்கலாம் என்று பாகி`ச்தானில் கிடைத்த கல்லாயுதங்களைக் கொண்டு ஊகிப்பார்கள். தொல்மாந்தரின் மறைவுக்கு அதுவும் ஒரு காரணம் என சிலர் ஊகிப்பர். எவ்வாறெனினும் தமிழகத்தின் அத்திரம்பாக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கிடைத்த தொல்லியல் எச்சங்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் புத்தேள் மாந்தன் அல்லது தொல்மாந்தன் 2.85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே குடியேறியிருக்கவேண்டும் என்று ஊகிக்கவைக்கின்றன (Kumar et al, 2017:97-101).

ஆனால் தெற்காசியாவிலேயே திருத்தமாகக் காலம் கணிக்கப்பட்ட மாந்த உயிர்ச்சுவடு என்று புகழ்பெற்ற “பலாங்கொடை மனிதன்” எச்சங்கள், இலங்கையில் இரத்தினபுரிக்கு அண்மையிலுள்ள பலாங்கொடையிலேயே கண்டறியப்பட்டன (உரு.03). இவை இற்றைக்கு நாற்பதாயிரம் ஆண்டுகள் முற்பட்டவை.

balangoda

பெல்லன்பெந்திபலசை, பாத்ததொம்பலேனை உள்ளிட்ட இடங்களில் இருந்த குகைகளில் பலாங்கொடை மனிதனின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. பாத்ததொம்பலேனையில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களிடையே அம்பு அல்லது வேல்முனைகள் என எண்ணத்தக்க கல்லாயுதங்கள், நெருப்புக்கோழி முட்டையோட்டிலிருந்து தயாரான மணிகள் என்பன குறிப்பிடத்தக்கவை. பலாங்கொடைக்கு வெளியே சுமார் 3500 பேர் ஒரே நேரத்தில் வசித்திருக்கக்கூடிய தெற்காசியாவின் மிகப்பெரிய இயற்கைக்குகையான கல்லுத்துறை பாகியன் குகையிலும் பலாங்கொடை மனிதனின் எச்சங்கள் கண்டறியப்பட்டன. எச்சங்கள் கண்டறியப்பட்ட இடங்களில் மாத்திரமன்றி இவர்கள் இலங்கைத்தீவு முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கடல்மட்டம் தாழ்ந்து இந்தியப்பெருநிலம் இலங்கையோடு இணைந்திருந்தபோது அல்லது கடல்வழிப் பயணத்தின் மூலம் இலங்கைத்தீவை வந்தடைந்திருக்கலாம்.

கற்காலம்

முன்னை-வரலாற்றை கற்காலம் (Stone Age), இரும்புக்காலம் (Iron Age), வெங்கலக்காலம் (Bronze Age) என்று பிரிப்பது உலகளாவிய ஆய்வு நடைமுறை. இலங்கையில் கற்காலத்தின் முடிவிலேயே எழுத்துச் சான்றுகள் கிடைக்க ஆரம்பிப்பதால், இலங்கையின் இரும்புக்காலத்தையும் வெங்கலக்காலத்தையும் தனித்து ஆராயத்தேவையில்லை. எனினும் இலங்கையின் தொடக்க இரும்புக்காலம் (Early Iron Age) பற்றி விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்காப்பு, குடியிருப்பு, அலங்காரம் முதலிய பல்வேறு தேவைகளுக்காக கல்லை உடைத்து பல்வேறு பொருள்களை புத்தேள் மாந்தன் அமைக்க ஆரம்பித்த காலம் கற்காலம் (`ச்டோன் ஏ|ச், Stone Age). கல்லை உடைப்பதற்கு தீயைக் கையாளும் மனிதனின் இயலுமை பெருமளவு உதவியது. பாறைகளைச் சூடாக்கி நீரை ஊற்றிக் குளிர்வித்து அவற்றை வெடிக்கச் செய்வதன் மூலமோ, மர ஆப்பு, அல்லது வேறு கற்களைச் செருகி அடித்துப் பிளப்பதன் மூலமோ, இந்தக் கல்லாயுதங்கள் உருவாக்கப்பட்டன.  இலங்கையின் கற்காலம் இற்றைக்கு முன் 3500 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. இதை பழம்பாறைக்காலம் (பலியோலிதிக், Paleolithic), நடுப்பாறைக் காலம் (மீசோலிதிக், Mesolithic), பூப்பாறைக்காலம் (நியோலிதிக், Neolithic) என்று மூன்றாகப் பிரிப்பர்.

பழம்பாறைக் காலம், எளிமையான கல்லாயுதங்களையும் கல்லணிகளையும் மாந்தன் பயன்படுத்தத் தொடங்கிய காலம். இலங்கையில் இது இற்றைக்கு முன் மூன்று இலட்சம் ஆண்டுகளில் தொடங்கி 35,000 ஆண்டுகள் வரை நீடித்தது. பழம்பாறைக் காலச் சான்றுகளில் முக்கியமானது பளிங்குக்கல்லில் செய்யப்பட்ட ஆயுதங்களும் ஆபரணங்களும். இவை இலங்கை முழுவதும் பரவலாகக் கிடைத்துள்ளன.

கிளிநொச்சி இரணைமடுவில் கிடைத்த பழம்பாறைக் கால எச்சங்கள் நன்கு ஆய்வுசெய்யப்பட்டுள்ளன (Pichumani, 2004). இக்கால மக்கள் வேடுவோர் – சேகரிப்போராக நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததுடன், இவர்களுக்கு சமய நம்பிக்கை இருந்ததாகவும் இறப்போரைப் புதைக்கும் வழக்கம் தோன்றிவிட்டதாகவும் நம்பப்படுகின்றது. இலங்கையில் ஒப்பீட்டளவில் வடக்கு மற்றும் தென்கிழக்கு உலர் வலயப் பகுதிகளில் இந்தத் தொல்மாந்தர் வாழ்ந்திருப்பதற்கான அதிக சாத்தியங்கள் காணப்படும் போதும் (Dereniyagala, 1991:178-82), கீழைக்கரையில் அவர்களது வதிகை தொடர்பாக விரிவான ஆய்வுகளெதுவும் இடம்பெறவில்லை.

இலங்கையின் நடுப்பாறைக்காலம், இற்றைக்கு முன் 34,000 ஆண்டுகளில் தொடங்கி இற்றைக்கு முன் 5000 ஆண்டுகளில் முடிவடைகின்றது. இக்காலத்துக் கல்லாயுதங்களும் அணிகலன்களும் நுட்பமும் திருத்தமும் பெறுகின்றன. செதுக்கப்பட்ட பூகோளவடிவ குறுணிக்கற்கள் இந்தக் காலத்தில் அதிகம் கண்டறியப்பட்டதால் நடுப்பாறைக் காலம், “குறுணிக்கற்காலம்” என்றும் அழைக்கப்படும். ஐரோப்பாவை விடப் பழைமையான குறுணிக்கற்கள் இலங்கையிலேயே கிடைத்துள்ளன (Deraniyagala, 1998).

நாடோடியாகத் திரிந்த பழம்பாறைக்கால மாந்தனை விட, நடுப்பாறைக் கால மாந்தன் சிற்சில இடங்களில் குறிப்பிட்ட நாள் தங்கியிருக்க ஆரம்பிக்கின்றான். நாம் முன்பு பார்த்த பலாங்கொடை மனிதன் இந்தக் காலத்தைச் சேர்ந்தவன் தான். பலாங்கொடை மனிதன் வாழ்ந்த பாகியன்கல் மலையில் தான் ஆபிரிக்காவுக்கு வெளியே மிகப்பழைய வில்லம்பு பயன்படுத்தப்பட்டதற்கான சான்று கிடைத்தது. நாய், கோழி, பன்றி முதலியவற்றையும் நடுப்பாறைக்கால மாந்தனே வீட்டு வளர்ப்புக்குப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான்.

வேடுவர், சேகரிப்போர், மீன்பிடிப்போராக விளங்கிய மாந்தர், விவசாயத்தையும் விலங்கு வளர்ப்பையும் கற்றுக்கொண்டு நிரந்தரக் குடியிருப்புகளை உருவாக்கிக்கொண்ட காலம், பூம்பாறைக்காலம். நெடுநாள் தங்கியிருப்பதற்கும் பொருட்களைச் சேமித்து வைக்கவும் உதவியாக, மட்பாண்டங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் செப்பு பயன்பட்டதற்கான சான்றுகளும் கிடைப்பதால், பூப்பாறைக்காலத்தை செப்புப்பாறைக்காலம் (Chalcolithic) என்றும் அழைப்பதுண்டு. பெரிய கற்கள் (பெருங்கல் அல்லது மாப்பாறை – megalith) வெட்டப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழிபாட்டுப்பொருட்களும் அமைக்கப்பட ஆரம்பித்த காலமும் இது தான். பூப்பாறைக்காலத்திலிருந்து வரலாற்றுக் காலமான பொமு. 200 ஆம் ஆண்டு வரை அமைக்கப்பட்ட மாப்பாறை அமைப்புக்கள் தென்னகத்திலும் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளன.

இலங்கையின் பூப்பாறைக்காலம் (அல்லது புதிய கற்காலம்) இற்றைக்கு முன் 5000 இலிருந்து 1000 ஆண்டுகள் வரை என்று மதிப்பிடப்படுகின்றது. இலங்கைக்கும் தென்னகத்துக்கும் பூப்பாறைக்காலச் சான்றுகள் தொடர்பில் நிரம்ப ஒற்றுமைகள் கண்டறியப்பட்டுள்ளன (Senaviratne, 1989) பூப்பாறைக்காலத்தில் பொமு 1800 இல் தயாரிக்கப்பட்ட செம்பாலான கலைப்பொருட்கள் மன்னார் மாந்தையில் கண்டறியப்பட்டன  (Deraniyagala, 1998). மாந்தைக்கு மேலதிகமாக, அனுராதபுரம், பொன்பரப்பி, சிகிரியா, உள்ளிட்ட இடங்களில் பூப்பாறைக்காலச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

விலங்குகளின் வீட்டுவளர்ப்பு இயல்பாகியமை, நிரந்தர வசிப்பிடங்கள், நெற்பயிர்ச்செய்கை என்பன பூப்பாறைக்காலத்தின் முதன்மை அடையாளங்கள். ஈமச்சடங்குகள் மற்றும் வானியல் நோக்கம் என்று ஊகிக்கப்படும் பெரும்பாறைகளும் இக்காலத்தில் அமைக்கப்படலாயின.

கீழைக்கரையின் வடஅந்தத்தில் வாகரைப்பகுதியில் பூப்பாறைக்காலத்துக்குரிய பெரும்பாறைகள் சிலவற்றை க.தங்கேஸ்வரி அடையாளம் கண்டிருந்தார். அங்கு கதிரவெளியிலிருந்த குரங்கு படையெடுத்த வேம்பு என்ற இடத்தில் கற்பதுக்கைகள், கற்கிடைகள் என்பன அவரால் அவதானிக்கப்பட்டிருந்தன (தங்கேஸ்வரி, 2007:43) தென் அந்தத்தில் பாணகை, உகந்தைப்பகுதியிலும் பெரும்பாறைகள் அவதானிக்கப்பட்டுள்ளன (Ranawella, 2018:12). 1880 களில் சம்மாந்துறைக்கருகே மல்கம்பிட்டியில் கல்மூடி கொண்ட ஈமத்தாழியொன்றை கியூ நெவில் கண்டுபிடித்தார் (Nevill, 1887:129). இவை பூப்பாறைக்காலத்தின் இறுதியில் பயன்பட்டிருக்கக்கூடும்.

உசாத்துணை

  1. தங்கேஸ்வரி, க. (2007). கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு, சென்னை : மணிமேகலைப் பிரசுரம்.
  2. Deraniyagala, S. U. (1998). Pre- and protohistoric settlement in Sri Lanka. In XIII UISP congress proceedings, 5, pp. 277–285.
  3. Kumar, A., Pappu, S., Haresh, M.R., Yanni, G., Anil, D.S., Ashok, K.S. (2017). Early Middle Palaeolithic culture in India around 385–172 ka reframes Out of Africa models, Nature, 554, pp. 97–101.
  4. Nevill, H. (1887). The Taprobanian, pp. 129-130.
  5. Pichumani, K., Subramanian, .T.S., Deraniyagala, D.U. (2004), “Prehistoric basis for the rise of civilisation in Sri Lanka and southern India”, Frontline, 21 (12).
  6. Ranawella, G.S. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.
  7. Seneviratne, S. (1989). Pre-State Chieftains And Servants of the State: A Case Study of Parumaka, Sri Lanka Journal of Humanities vol. XV 1989, pp. 99-131
இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

26533 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)