பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும்
Arts
17 நிமிட வாசிப்பு

பால் மா உற்பத்தியும் மனித நுகர்வும்

November 23, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இலங்கை மக்களில் பெரும்பாலானவர்களின் காலைத் தேநீரில் பால் சேர்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் பொதி செய்யப்பட்ட பால் மா வடிவிலேயே சேர்க்கப்படுகிறது. திரவப் பால் வடிவில் அது சேர்க்கப்படுவது மிக மிகக் குறைவு. அதற்கு பல காரணங்கள் உள்ளன. 

Highland

இலங்கையில் நுகரப்படும் பால் மா நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டே உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது. பால் மா இறக்குமதிக்கே பல பில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. இது  நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. Highland, பெலவத்தை போன்ற உள்ளூர் பால் மா நிறுவனங்கள் தமது உற்பத்திகளை உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கின்ற போதும் அவை நியூசிலாந்தின் fonterra போன்ற நிறுவனங்களின்  பால் மா உற்பத்திகளை விட மிக மிக குறைவே. மக்களும் உள்ளூர் உற்பத்திகளை விட வெளிநாட்டு இறக்குமதிக்கே அதிக விருப்பத்தைக் காட்டுகின்றனர். சுதேசிய உணர்வுள்ள சில படித்த சிங்கள மக்கள் மாத்திரமே இலங்கையின் உள்ளூர் பால் மாவை அதிகமாக  வாங்குவதைக் காணமுடிகிறது. உள்ளூர் பால் மா வகைகள் உள்ளூரின் சகல இடங்களிலும் கிடைப்பது குறைவு என்பதோடு வெளிநாட்டுப் பால் மா வகைகள் கிராமத்தின் பட்டி தொட்டி எங்கும் கிடைப்பது கிராம மக்களையும் அவற்றை நோக்கி நகர்த்துகிறது .

சில வருடங்களாக அரச அனுசரணையுடன் கால்நடை வைத்திய அலுவலகங்களின் ஊடாக  பாடசாலை மாணவர்களுக்கு திரவப் பால் நுகர்வு தொடர்பாக விழிப்பணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். இதன் போது மாணவர்களுக்குத் திரவப் பாலையும்  வழங்குவோம். கறவை மாடுகள் வைத்திருக்கும் பண்ணையாளர்களின் பிள்ளைகள் கூட திரவப் பாலை விட பால் பவுடரை விரும்புவதை இதன்போது அவதானிக்க முடிந்தது. அதாவது, பாலைக் கறந்து பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு, பால் மாவை கடைகளில் விலை கொடுத்து வாங்குவதை விரும்புகின்றனர். பசுப்பாலின் சுவை குறைவாகவும் ஒருவித மணம் வீசுவதாகவும் சளி பிடிப்பதாகவும் காரணங்கள் சொல்கிறார்கள். பல இடங்களில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை நிறுத்திவிட்டு, பால் மா ஊட்டுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்தக் கட்டுரை, பிணக் கூராய்வு (post mortem) செய்வது போல இந்த விடயங்களை ஆராயப் போகிறது.

Fonterra Factory

விலங்குகளின் பாலை கறந்து அருந்திய மனிதன், மித மிஞ்சிய பாலைச் சேமிக்க வேண்டிய தேவை ஏற்பட, அதற்கென பல வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினான். அதில் ஒரு முறைதான் பாலின் தண்ணீரை அகற்றி அதனை மாவாகச் சேமித்தலாகும் (பாலில் 87% வரை தண்ணீர்தான் உள்ளது என்பதுடன் பாலிலுள்ள தண்ணீர் பல நுண்ணங்கிகள் வளரக் கூடிய ஊடகமாக உள்ளது). ஆசியா, மத்திய கிழக்குப் பகுதிகளில் சூரிய ஒளியில் நீரை ஆவியாக்கி, பாலை சில காலம் பழுதடையாமல் சேமித்தமைக்கான வரலாற்றுக் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் நவீன பால் மாவின் தொடக்கம் ஆரம்பமாகியது. 1802 ஆம் ஆண்டளவில் பிரான்ஸ் நாட்டின் Francois Appert என்பவர், தகரத்தில் அடைத்து பாலைச் சேமித்திருக்கிறார். 1864 இல் Gail borden என்பவர் செறிவூட்டிய (condensed milk) பாலை உற்பத்தி செய்திருக்கிறார். இவ்வாறான நடவடிக்கைகள், நவீன பால் சேமிப்பு மற்றும் பால் பவுடர் உற்பத்திக்கு வழிகோலின.

19 ஆம் நூற்றாண்டின் கடைசியில் சூடான இடத்தினூடு பாலைச் செலுத்தி பாலின் நீர்த்தன்மையை இழக்கச் செய்யும் யுக்தி பயன்படுத்தப்பட்டது. அதன்பின், பல நவீனத் தொழில் நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்து இன்றைய நவீன Spray drying முறை உருவாகியது எனலாம்.

Spray drying

2 ஆம் உலகப்போர் காலத்தில் பால் மாவின் தேவை கணிசமாக உணரப்பட்டது. யுத்த முனைக்கு திரவப் பாலை கொண்டு செல்வதை விட பால் மாவாக கொண்டு செல்வது இலகுவாக இருந்தது என்பதுடன் நீண்ட நாட்களுக்கும் அதனை கெடாமல் பாதுகாக்கவும் முடிந்தது.

உலகப்போரின் பின், குழந்தைகளின் மாற்று உணவாக பால் பயன்படத் தொடங்கியது. பல நாடுகளில் குழந்தைகளுக்கான பால் உணவுகள் தயாரிக்கப்பட்டன. மித மிஞ்சியவை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

இலங்கையும், முற்று முழுதாகவே உள்ளூரில் உற்பத்தியாகும் திரவப் பாலை நுகரும் நாடாகவே இருந்தது (நாட்டின் மொத்தக் குடித்தொகையில் மிக குறைவானவரே பாலை அருந்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது). ஆரம்பத்தில், வெளிநாடுகளின் பல்தேசிய நிறுவனங்கள் இலங்கைக்கு இலவசமாக பால்மாவை வழங்கின; குறிப்பாக குழந்தைப் பால் மா. இதற்காக கடுமையான பணச் செலவுடன் விளம்பரங்கள் செய்து மக்களிடம் பால் மா உற்பத்திகளைக் கொண்டு சேர்த்தனர். இதன் காரணமாக மக்கள் திரவப் பால் நுகர்வைக் கைவிட்டு பால் மா நுகர்வுக்கு அடிமையாகினர். பாலை அருந்தாத மக்களும் பால் நுகர்வுக்கு மாறினர். இலங்கையின் பாற்பண்ணைத் துறையும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் வகையாக மாறியது. மக்களின் தேவைக்கு உள்ளூர் உற்பத்தி போதியதாக இருக்கவில்லை. இன்றும் அந்த நிலை தொடர்கிறது.

இந்தியாவுக்கும் இதே போன்று பல்தேசிய நிறுவனங்கள் இலவசமாக பால் மாவை வழங்கிய போதும் அதை நேரடியாக மக்களுக்கு இலவசமாக  வழங்காமல் தமது பால் கட்டமைப்பு வலையமைப்பின் ஊடாக திரவப்படுத்தியே வழங்கினர் (இதனை வர்கீஸ் குரியன் அவர்களின்  I too had a dream சுயசரிதையின் ஊடாக அறிந்து கொண்டேன்). இது அவர்களின் இன்றைய தன்னிறைவுக்கு வழிகோலியது.

பால் மாவை உற்பத்தி செய்தல் 

நாம் தினமும் நுகரும் பால் மா, பல மாற்றங்களுக்கு உட்பட்டே எம்மிடம் வந்து சேர்கிறது. திரவ நிலைப் பாலில் உள்ள நீர்த்தன்மை பல செயற்பாடுகளினூடாக நீக்கப்பட்டு பால் மா உருவாகிறது.  பண்ணைகளில் கறக்கப்படும் பால், சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்பட்டு பால் மா உற்பத்தித் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகின்றது. அங்கு பாலிலுள்ள வெளித்  தூசு – துணிக்கைகள் அகற்றப்பட்டு, நுண்ணங்கிகள் – அவற்றின் நொதியங்கள் அகற்றப்பட்டு (Heat treatment) அடுத்தகட்டச் செயற்பாட்டுக்கு தயாராகிறது.

இதன்பின், பாலின் நீர்த் தன்மையை நீக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. வெப்பம் மிகுந்த வெற்றிடத்தினூடாகச் செலுத்தப்படும் பாலிலுள்ள நீரின் பெரும் பகுதி ஆவியாக்கப்படுகிறது. சில இடங்களில் மென் சவ்வூடான பிரசாரண முறையில் நீர் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு நீர் குறைந்து செறிவாக்கப்பட்ட பால் அதிக அழுத்தம் மிக்க கலன்களினூடாக செலுத்தப்பட்டு சிறு சிறு துணிக்கைகளாக உடைக்கப்படுகிறது. பின்னர், அதி வெப்பமான பகுதிகளின் ஊடாக விரைவாக செலுத்தப்பட்டு, நீர்த் தன்மையை மேலும் இழக்கின்றது. இந்த முறையை spray drying என்பார்கள். இது பால் மா உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். தற்காலத்தில் spray drying தொழில்நுட்பத்திலும் பல மேம்பட்ட முறைகள் உள்ளன.

உலர்ந்த பால் துணிக்கைகள் குளிர்விக்கப்பட்டு பால் மாவாக பிரித்தெடுக்கப்படுகின்றன. தேவைகளுக்கு ஏற்ப துணிக்கைகளில் சேர்வைகள் சேர்க்கப்பட்டு பொதியிடப்படுகின்றன. சிலவகை பால் மாக்கள் சுவையூட்டப்படுகின்றன; ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன (உதாரணம் : குழந்தைகளின் பால்மா). இப்படியாக தயாரிக்கப்படும் பால் மா களஞ்சியப்படுத்தப்பட்டு தரப் பரிசோதனைகள் பலவற்றுக்கு உட்பட்டு சந்தைக்கும் விடப்படுகிறது. இலங்கையின் பால் மா சந்தையில், அதிகளவில் வெளிநாட்டுப் பால் மா வகைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன (0.63 மில்லியன் அமெரிக்க டொலர்). அண்மைக் காலத்தில் இறக்குமதிக்குரிய பணக்கையிருப்பு இல்லாத காரணத்தால் கணிசமான அளவு உள்ளூர் பால் மா வகைகளும் சந்தைக்குள் வரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பால் மா வர்த்தகம்

இன்றைய திகதியில் சர்வதேச பால் மா ஏற்றுமதி வர்த்தகத்தில் ஐக்கிய அமெரிக்கா, நியூசிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளும் பால் மா இறக்குமதியில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளும் உள்ளன. இலங்கையும் கணிசமான அளவு பால் மாவை இறக்குமதி செய்கிறது. இலங்கைக்கு நியூசிலாந்தின் Fonterra நிறுவனம் தான் அதிகளவு பாலை இறக்குமதி செய்கிறது. பால் மாவில், முழு ஆடைப் பால்மா (Full cream milk powder), ஆடை நீக்கிய பால் மா (Non fat milk/skimmed milk powder), குழந்தைகள் பால்மா (infant milk), புரதப் பால் மா (whey protein milk  powder) என பல வகை உண்டு.

Fontera பால் கூட்டுறவு பல் தேசிய நிறுவனம்

நியூசிலாந்து பாற் பண்ணையாளர்களால் நிர்வகிக்கப்படும் பல்தேசிய பால் கூட்டுறவு அமைப்பு இலங்கையின் பால்மா தேவையின் பெரும் பகுதியை நிறைவு செய்கிறது. உலக பால் வியாபாரத்தில் 30% இதன் வசமே உள்ளது. உலகின் 6 வது பால் உற்பத்தி நிறுவனமான இது தென்னரைக் கோளத்திலுள்ள மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாகும். பலதரப்பட்ட பால் பவுடர் வகைகள், ஏனைய பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் இந்த நிறுவனம் வருடாந்தம் 22 பில்லியன் நியூசிலாந்து டொலரை வருமானமாகப் பெறுகிறது. இலங்கையின் அங்கர், றத்தி என்பன Fonterra நிறுவனத்தின் பால் மா உற்பத்திகளே. 

new zeland

பால்மா தொடர்பான சர்ச்சைகள்

1. குழந்தைகளுக்கு வழங்கும் பால் உணவுகள் (infant formula) தொடர்பான சர்ச்சைகள் : குழந்தை உணவில் பால் மா முக்கியமான உள்ளீடு. அடிக்கடி நிகழும் உள்ளீடுகளின் தரம் தொடர்பான சர்ச்சைகள் மக்களை அச்சுறுத்துகின்றன. சீனாவில் இடம்பெற்ற மெலமைன் எனும் புரதம் போன்ற பதார்த்தத்தை குழந்தைப் பால் உணவில் சேர்த்ததன் காரணமாக சில பச்சிளம்  குழந்தைகள் இறந்தன. இதன்பின் உலகளாவிய ரீதியில் குழந்தை உணவுகளை நுகர்வது குறைந்தது. இன்றை வரைக்கும் சீனாவில் உள்ளூர் பால் மா சேர்ந்த குழந்தை உணவுகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர். சீனாவில், சீன பால்மாவில் செய்யப்பட்ட குழந்தை உணவுகளை விட நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் குழந்தைப் பால் உணவுகளுக்கு நல்ல கிராக்கி உண்டு. பால் மாவின் சர்வதேசக் கேள்வி முறையில் நியூசிலாந்தின் பால் மாவினை அதிக விலைக்கு வாங்குகின்றனர். இதனால் சீனாவுக்கான ஏற்றுமதி அதிகரித்து இலங்கை போன்ற நாடுகளின் இறக்குமதியின் செலவு அதிகரிக்கிறது.

மேலும், குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள், உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) பரிந்துரைக்கப்பட்ட  குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டலை குறைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மனிதர்களின் வசதிக்காக குழந்தைகளுக்கு அவசியம் கிடைக்க வேண்டிய தாய்ப்பால் கிடைக்காத நிலைக்கு இந்த பால் மா சேர்த்த குழந்தை உணவுகளே காரணம் எனும் சர்ச்சை நிலவுகிறது. இது காரணமாக எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பல உடல் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

2. ஊட்டச்சத்து தொடர்பான சர்ச்சைகள் : பாலில் காணப்படும் புரத மற்றும் கொழுப்புப் பொருட்கள் அகற்றப்பட்டு பன்றிக் கொழுப்புகள், பாம் எண்ணை, மெலமைன் போன்றவை சேர்க்கப்பட்டு பொய்யாக புரத மற்றும் கொழுப்பு பொருட்களின் சதவீதம் காட்டப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. பல பால் நிறுவனங்கள் இதனை மறுத்தாலும் இந்த சர்ச்சை பாரதூரமானது.

மேலும், பாலை வெப்பப்படுத்தி நீரை அகற்றும்  செயன்முறை காரணமாக முக்கிய ஊட்டச்சத்துக்கள் அழிவடைவதும் மாற்றமடைவதும் பால் மா உற்பத்தியில் நிகழ்வதால் அதன் தரம் தொடர்பாகவும் கேள்வி எழுகிறது. அத்துடன் அமைப்பு மாற்றமடையும் உள்ளீடுகள் பல நோய்களைத் தரக்கூடிய நிலையை தோற்றுவிப்பதாக மருத்துவத் துறையினர் கூட குற்றம் சாட்டுகின்றனர்.

3. ஒவ்வாமை மற்றும் lactose intolerance : பொதுவாகவே மனித குடித்தொகையில், குறிப்பிட்ட சதவீதமானவர்களுக்கு பாலின் முக்கிய ஊட்டச்சத்தான lactose காரணமாக ஏற்படும் ஒருவித ஒவ்வாமை (intolerance) உள்ளது. இந்த வகையினர் பால்மாவுக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்றனர். இது ஒரு சிக்கல் வாய்ந்த நிலையாகும்.

4. சேர்க்கப்படும் சேர்வைகள் தொடர்பான சர்ச்சைகள் : பாற் பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில், குறிப்பாக பட்டர் செய்யும் போது கொழுப்பும், Whey புரதம் தயாரிக்கும் போது புரதமும் எடுக்கப்பட்டு, அவற்றை பிரதியீடு செய்ய பன்றிக் கொழுப்பு மற்றும் பாம் எண்ணை, மெலமைன் சேர்க்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது சுகாதார பிரச்சனைகளை மட்டுமின்றி சமய, கலாச்சார சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

5. தரம் மற்றும் பாதுகாப்பு : நியூசிலாந்து மேய்ச்சல் புல் வெளிகளுக்கு பாவிக்கப்படும் DCP போன்ற இரசாயனங்கள் பாலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இது நுகர்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சரியான தரக்கட்டுப்பாடு சகல பால் மா வகைகளுக்கும் பார்க்கப் படுகிறதா எனும் சர்ச்சையும் அடிக்கடி எழுவதுண்டு. பல நாடுகளில் இந்த தரக் கட்டுப்பாடுகள் எதுவும் செய்யப்படாது நேரடியாகவே சந்தைக்கு விடப்படுகிறது எனும் குற்றச்சாட்டு உள்ளது.

6. சூழலியல் பிரச்சனைகள் : பால் மாவை உற்பத்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மாடு வளர்ப்புச் செயன்முறைகள் பச்சை  வீட்டு வாயுவான மெதேனை அதிகம் வெளிவிடுகின்றன. இது உலக வெப்பமுறலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகதிகமான பால் மாவை உற்பத்தி செய்யும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பச்சை வீட்டு விளைவைத் தவிர நீர் நிலைகள் மாசுபடுதல் பயிர் நிலங்கள் மாசு படுதல் போன்ற பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

6. விலை தொடர்பான பொருளாதாரப் பிரச்சனைகள் : இலங்கை போன்ற நாடுகளில் பால் மாவை நம்பித்தான் 60% ஆன பால் தேவை நிறைவு செய்யப்படுகிறது. இலங்கைக்கு பால் மாவை இறக்கும் பல்தேசிய நிறுவனங்கள் பால் மாவின் விலையை அடிக்கடி உயர்த்துவதும்  உள் நோக்கத்துடன் சந்தைக்கு விடாமல் பதுக்குவதும் நுகர்வோரைக் கடுமையாகப் பாதிக்கிறது.

வர்கீஸ் குரியனும் இலங்கை பால் உற்பத்தி நிலவரமும்

சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்த வெண்மைப் புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியனை அழைத்திருந்தார். இலங்கையினை கள ஆய்வு செய்தபோது நியூசிலாந்து நாட்டின் fonterra நிறுவனத்தின் செல்வாக்கை அவரால் உணர முடிந்தது. பலம் மிக்க மலையகத் தமிழ் அரசியல்வாதி உட்பட இலங்கையின் பல அரசியல் பிரமுகர்கள் அந்தந்த பல்தேசிய நிறுவனங்களின் முகவர்களாகவே செயற்படுவதைக் காணுற்றார். யாராலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. இதன் பாரதூரத்தை தனது ‘எனக்கும் ஒரு கனவு’ எனும் சுயசரிதையில் இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.

vergues kurian

அது தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலம். இலங்கை சென்ற குரியனுக்கு ஆயுதப் படையின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இது குரியனுக்கு பிடிக்கவில்லை. அசௌகரியமாக உணர்ந்தார். அதிபர் சந்திரிக்காவிடம் “நான் தமிழில் பேசக் கூடியவன் என்றபடியால் விடுதலைப் புலிகள் என்னை எதுவும் செய்ய மாட்டார்கள். தயவுசெய்து இந்த பாதுகாப்பை எடுங்கள்” என்றிருக்கிறார். அதற்கு அதிபர் சந்திரிக்கா” இது விடுதலைப்புலிகளிடம் இருந்து உங்களைப் பாதுகாக்க அல்ல. பால் பல் தேசிய நிறுவனங்களின் கூலிப்படைகளில் இருந்து உங்களைக் காக்க. சிறு தொகை பணத்துக்கே உங்களைக் கொன்றுவிடக் கூடும். அவர்களுக்கு இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்பது விருப்பமில்லை” என்றாராம். இது தவிர இந்தியாவிலிருந்த நியூசிலாந்தின் பல் தேசிய பால் நிறுவன பிரதிநி கூட இலங்கையின் பால் உற்பத்தி தன்னிறைவு காண்பதை விரும்பாமல் வர்கீஸ் குரியனுடன் தர்க்கித்திருக்கிறார். இலங்கை பாற் சந்தை மிகச் சிறியது. அதைக்கூட கைவிடும் நிலையில் பால் வழங்கும்  பல் தேசிய நிறுவனங்கள் இருந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.

இலங்கையில் இன்றை வரைக்கும் பாலில் தன்னிறைவு காண முடியவில்லை. 40-50% உள்ளூர் உற்பத்தி. ஏனையவை இறக்குமதி. இது ஒரு மிகப் பெரிய சதி வலை போன்றது. இலகுவில் மாற்ற முடியாது. இது இப்படியிருக்க, இலங்கை பாலில் தன்னிறைவு காண, கறவை மாடுகளை நியூசிலாந்தில் இருந்து இறக்கியதுதான் முரண் நகைச்சுவை. ஆயிரக்கணக்கில் இறக்குமதியாகிய மாடுகள் கடைசியில் செத்து மடிந்ததுதான் மிச்சம். அதை இறக்கிய அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் உழைத்துக் கொண்டார்கள் என்பது வேறுகதை.

பாகிஸ்தானும் குரியனும் 

எண்பதுகளில் வர்கீஸ் குரியனை அழைத்து பாக்கிஸ்தான் அரசு, அந்த நாட்டு பாலுற்பத்தி துறையை மேம்படுத்த ஆலோசனை கேட்டிருந்தது. உலகில் கணிசமானளவு பாலுற்பத்தியை செய்யவல்ல நாடான பாகிஸ்தான் கூட தன்னிறைவு காணாத நிலையிலேயே இருந்தது. அன்றைய திகதியில்  வெளிநாட்டிலிருந்து கணிசமான பால் மாவை பாக்கிஸ்தான் இறக்குமதி செய்திருந்தது. எனினும் இறக்குமதித் தீர்வை மிகக் குறைவாகவே அறவிட்டிருந்தது. இதன் காரணமாக உள்ளூர் பாற் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இதனை தவிர்க்கும் படி குரியன் பாக்கிஸ்தான் அரசுக்கு கூறினார். தீர்வையை அதிகரிக்கும்படி பரிந்துரைத்தார். ஊழலும் அரசியல் துஷ்பிரயோகமும் கொடிகட்டிப் பறந்த பாக்கிஸ்தானில் பல்தேசிய நிறுவனங்கள் சகலரையும் விலைக்கு வாங்கியிருந்தபடியால் இந்தியாவின் வெண்மைப் புரட்சியை அங்கு நிகழ்த்த முடியவில்லை என குரியன் தெரிவித்திருப்பார்.

இங்கு நான் இலங்கை, பாக்கிஸ்தானைப் பற்றி குரியனுடன் தொடர்புபடுத்திக் கூறியதற்கு ஒரு காரணமுண்டு. இந்தியா வெண்மைப் புரட்சியின் மூலம் தன்னிறைவு கண்டுள்ளது. ஏனெனில் பல் தேசிய பால் நிறுவனங்களின் வியாபார மூலோபாயத்துக்குள் சிக்காமல், சுயமாகச் சிந்தித்து தமது நாட்டின் பால் உற்பத்தி துறைக்கு முன்னுரிமை கிடைக்கும் வகை செய்திருந்தார்கள். அறுபதுகளில் உலக உணவுத் திட்டம் மூலம் கிடைத்த ஒரு தொகை பால் மாவையும் நாட்டின் திரவப் பால் கட்டமைப்புக்குள் இணைத்தனரே தவிர மக்களுக்கு நேரடியாக வழங்கி உள்ளூர் பாற் துறையை பாதிக்கவிடவில்லை. இன்று கூட பால் மாவை யுத்தம் போன்ற அவசர  தேவைக்காகவும் மித மிஞ்சிய பால் உற்பத்தியை சேமிக்கும் வழியாகவுமே இந்தியா பயன்படுத்துகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உதவிக்கும் இந்தியா பால் மாவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பால் உற்பத்தி குறையும் போது பால் மாவை திரவமாக்கி மக்களுக்கு வழங்குகிறார்கள். இந்திய மக்களும் பால் மாவை விட திரவப் பாலுக்கே பழகியுள்ளனர். பசு மட்டுமல்ல எருமையிலிருந்தும் பால் மாவை இந்தியா உற்பத்தி செய்கிறது. உண்மையில் திரவப் பாலை பெருந்தொகையில் இறக்குமதி செய்யமுடியாது. அதற்கு மக்களை பழக்க வேண்டும். தற்போது இலங்கையை விட பாக்கிஸ்தான் பாலுற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது. இலங்கையின் பாலுற்பத்தியின் தன்னிறைவுப்  பயணம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

12831 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)