ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே
கேரளா, தமிழ்நாடு, இலங்கை முஸ்லிம்களின் வித்தியாசமான இனத்துவ வளர்ச்சி
இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் பொதுவாகத் தங்களை தமிழ்க் கிறிஸ்தவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்களிடையே அப்படியொரு எண்ணம் இல்லை. தம்மை இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுகின்ற தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில் விருப்பமற்றுள்ளனர். இஸ்லாமிய இறையியல் தவிர, தமிழ் இலக்கியம், பண்பாட்டு மரபு போன்றவற்றுக்கு முழுமையான பங்களிப்புச் செய்வதாக தங்களை கருதுகிற தமிழ்நாட்டு மரைக்காயர்களிடமிருந்து இலங்கை முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்களாக உள்ளனர். இன்னும் ஒரு முஸ்லிம் குழுவைச் சேர்த்தால், அதாவது – வரலாற்று ரீதியான போராட்டக்காரர்களும், புரட்சியாளர்களுமான கேரள மாப்பிளாக்கள்- தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள முஸ்லிம் இனத்தை ஒரு சுவாரஸ்யமான மும்முனை ஒப்பீட்டை நடத்த வாய்ப்பு உள்ளது. மூன்று முஸ்லிம் சமூகங்களும் மலபார் கரையோர தாய்வழி இந்து சாதிகளுடனும், ராமநாதபுரத்தின் தாய்வழி இந்து மறவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை (திருமணப் பிணைப்பு மற்றும் மதமாற்றம் இரண்டையும் உள்ளடக்கியது) பரிந்துரைக்கின்ற தாய்வழி மரபுகளை மற்றும்/அல்லது தாய்வழி சமூகக் கட்டமைப்பின் கூறுகளைப் பாதுகாக்கின்றன. இன்றைய கேரளாவின் மொழி மலையாளம். ஆனால் 14 ஆம் நூற்றாண்டு வரை அதாவது இஸ்லாம் தோன்றிய பின்னும் 7 நூற்றாண்டுகள் வரை தமிழ்தான் கேரளாவின் பேச்சு மொழியாக இருந்தது. (ஷேக்கிள் 1989: 405). கடந்த 700 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்குள் பரவிய ‘வணிகப் பண்டங்கள், பணிக்குழுக்கள் மற்றும் தொன்மங்களின்’ ஒரு பகுதியாக, கோழிக்கோடு, காயல்பட்டினம் மற்றும் கொழும்பு முஸ்லிம்களுக்கு இடையேயான தொடர்பும், சமூக இடைவினையும் இன்று இருப்பதை விட ஒரு காலத்தில் மிகவும் சுதந்திரமாக இருந்தன (ரொபர்ட்ஸ் 1980).
உலக முறைமைகள் அல்லது பேரண்ட-பொருளாதார (Macro-economic) வரலாற்று அணுகுமுறை இந்த மூன்று முஸ்லிம் சமூகங்களும் உருவான வரலாற்றுச் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது என்று கணிக்கக்கூடும் (போஸ் 1990; வொலர்ஸ்டீன் 1976; வூல்ஃப் 1982). இந்த சமூகங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரபு மற்றும் பாரசீக வணிகர்களால் நிறுவப்பட்டன. அவர்கள் மத்தியதரைக் கடல் சந்தைக்கு சுவையூட்டிகள், இந்திய ஆடைகள் போன்றவற்றை வழங்கினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, மூன்று முஸ்லிம் சமூகங்களும் ஆப்பிரிக்க, ஆசியப் பகுதிகளில் உள்ள வளங்களை சுரண்டுவதற்காக அப்போது ஐரோப்பிய மையத்திலிருந்து விரிவடைந்த காலனித்துவ சக்திகளான போர்த்துக்கேய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளிடமிருந்து, ஒரேமாதிரியான வெற்றிகளையும், அடக்குமுறைகளையும் அனுபவித்தன. இத்தகைய ஆரம்ப ஒற்றுமைகள் இருந்தபோதிலும், இந்த மூன்று நெருங்கிய புவியியல் பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஒப்பிடும்போது இங்கு விருத்தியான நவீன முஸ்லிம் இன அடையாள உருவாக்கத்தின் வழிமுறையில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகளும் வெளிப்படுவதைக் காணலாம்.
கேரள மாப்பிளாக்கள்
மாப்பிளாக்கள் (Mappilla, Moplah) என அறியப்படும் கேரள முஸ்லிம்கள் இனத்தோற்றம் சார்ந்து அரபு முஸ்லிம் மசாலா வியாபாரிகளின் (Spice traders) வழித்தோன்றல்களும், மதம் மாறியவர்களுமாவர். அவர்கள் மலபார் கடற்கரையின் இந்து ஆட்சியாளர்களால், குறிப்பாக கோழிக்கோடு ஸமோரின்களால் தீவிரமாக ஆதரவளிக்கப்பட்டனர். அவர்கள் மாநிலத்தின் சனத்தொகையில் 23 சதவீதத்தினராக அமைந்திருந்தனர். (ஹசன் 1997: 2-3). இச் சூழல் அவர்களை இலங்கை அல்லது தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களை விட மிகவும் ஸ்திரமான அரசியல் குழுமமாக ஆக்கியது. இன்று மாப்பிளாக்கள் வர்த்தகர்களாகவும், கடலோர மீனவர்களாகவும் மட்டுமன்றி, வடக்கு கேரளாவின் சில உள் மாவட்டங்களில், குறிப்பாக தெற்கு மலபார் பகுதியில் கிராமப்புற வறிய விவசாய குடியான் வர்க்கமாகவும் உள்ளனர். இந்த வறியவர்களே, மாப்பிளாக்களின் சனத்தொகையில் கணிசமான எண்ணிக்கையில் (25-60 சதவீதத்தினர்) உள்ளனர். (கேப்ரியல் 1996; மில்லர் 1976). உள்ளூர் இந்து சாதிகளைப் போலவே, சில மாப்பிளாக்கள் தாய்வழிச் சமூகமாக உள்ளனர். சிலர் தங்கள் பரம்பரையை தந்தை வழியில் தேடுகின்றனர். ஆனால் அனைத்து மாப்பிளாக்களினதும் வாழ்க்கை முறை திருமணத்திற்குப் பிறகு தாய்வழி மரபையே சார்ந்திருக்கிறது.
மாப்பிளா சமூகத்தினுள் தெளிவான பல்வேறு படித்தரங்கள், அகமணமுறை, சாதி போன்ற உப பிரிவுகள் என உள்ளன. இந்த தரப்படுத்தலானது ‘தங்கல்’ இல் (அல்லது தன்னால், நபி வழித்தோன்றல்கள்) இருந்து சமூகத் தரத்தில் குறைந்துகொண்டு செல்கிறது. இரண்டாம் நிலையில் அரேபியர்களின் வழித்தோன்றல்கள் (அதாவது ‘சுத்த அரேபிய’ வம்சாவளியினர்), அடுத்து மலபாரிகள் (சாதாரண மாப்பிளாக்களில் பெரும்பான்மையினர்), அடுத்து பூசலர்கள் (Pusalars) (‘புதிய முஸ்லிம்கள்’, தாழ்த்தப்பட்ட இந்து சாதிகளில் இருந்து, குறிப்பாக முக்குவர் மீனவர்களில் இருந்து சமீபத்தில் மதம் மாறியவர்கள்’) அடுத்து ஒஸ்ஸான்கள் (பரம்பரை பரம்பரையாக முடிதிருத்தும்/விருத்தசேதனம் செய்பவர்கள், மருத்துவச்சிகள் போன்றோர்) என அந்தப் படித்தரம் இறங்கிக் கொண்டு செல்கிறது. (டி. சொய்சா 1959, 1973; இப்ராஹிம் குஞ்சு 1989: 178-80).
மாப்பிளாக்களின் அதிகாரம் நிலவிய கண்ணனூர், பொன்னானி போன்ற கரையோர மையங்களில் போர்த்துகீசியர்கள் சமநிலையை சீர்குலைக்கும் வரை, முஸ்லீம் ராஜாக்களும், கடற்கொள்ளையர்களும் இந்து ஆட்சியாளர்களின் கீழ் அரை-தன்னாட்சி நிலையை அனுபவித்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்ற மைசூரியர்களின் படையெடுப்புகளின் கீழ் மாப்பிளாக்கள் இந்து-விரோத ஆட்சியாளர்களுடன் இணைக்கப்பட்டனர் (கேப்ரியல் 1996). தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள அனைத்து கரையோர முஸ்லிம் குழுக்களிலும், மாப்பிளாக்கள்தான் மிகவும் போர்க்குணம் மிக்கவர்களாக இருந்தனர். காலனித்துவ சக்திகளுக்கும், மேலாதிக்க உயர்சாதி இந்து நிலப்பிரபுக்களுக்கும் எதிராக வன்முறை, தற்கொலை தாக்குதல்கள் (ஜிஹாத்) மூலம் இஸ்லாமிய தியாகத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த முயன்றனர். கடைசியாக, 1922 இல், தெற்கு மலபாரில் ஒரு இஸ்லாமிய இறையியல் சுல்தானகத்தை நிறுவ நாடினர்.
ஒரு சில சமய வசீகரமிக்க (Charismatic) புனிதர்கள், நம்பிக்கையாளர்கள் அல்லாத (இஸ்லாமிய மதம் சார்ந்து – மொ.பெ.) அதிகார சக்திகளுக்கு எதிரான இந்த தற்கொலைத் தாக்குதல்களை தீவிரமாக ஊக்குவித்தார்கள். இந்த மாப்பிளாத் தியாகிகளை இன்றும்கூட ஆண்டுதோறும் நடைபெறும் நிர்க்கா (Nercca) மசூதி திருவிழாக்கள் நினைவுகூறுகின்றன (டேல் மற்றும் மேனன் 1978). இந்திய சுதந்திரத்தின் போது ‘மாப்பிளாஸ்தான்’ என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான வீண் முயற்சிக்குப் பிறகு, முஸ்லிம் லீக் மூலம் மாப்பிளாக்கள் திறம்பட தங்கள் அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியதோடு, கேரளாவின் வெற்றிகரமான நிலச் சீர்திருத்த இயக்கத்திற்கு அடிமட்ட ஆதரவை வழங்கினர் (கேப்ரியல் 1996, ஹெர்ரிங் 1991). அப்போதிருந்து, மாப்பிளா அரசியல் தந்திரோபாயங்கள் பிரமாதமாக நடைமுறையில் இருந்து வருகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு மாறி மாறி கூட்டணியை அமைக்கின்றனர் (மில்லர் 1976: 158-72; ரைட் 1966), (டேல் 1980: 225-26). முதல் மாப்பிளா பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியான மல்லபுரம் மாவட்டத்தை 1969 இல் உருவாக்கியமை மாப்பிளாக்களின் நவீன கால முக்கிய சாதனையாகும் (டேல் 1980: 225-26).
தமிழ்நாட்டு மரைக்காயர்களும் லெப்பைகளும்
கேரளாவில் பல கடலோர மாப்பிளாக்கள் நேரடியாக உள்நாட்டில் பரவி, ஏராளமான குத்தகை விவசாயிகளை உருவாக்கினர். ஆனால் தமிழ்நாட்டின் முஸ்லிம் சமூகம் கேரளாவைப் போலல்லாமல், இரண்டு தோற்றப் புள்ளிகளைக் கொண்டிருந்தனர். அதாவது ஷாஃபி எதிர் (vs) ஹனஃபி சட்டப் பள்ளிகள் எனும் இரு உப உள்ளகப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர் (Fanslow 1989). ஆரம்பகால அரபுக் குடியேற்றங்கள் சோழ மண்டல கடற்கரையில் இறுக்கமாகப் பிணைக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தக சிற்றூர்களில் (enclaves) வளர்ச்சியடைந்தன. சற்றுப் பின்னர், தக்காணத்தைச் (Deccan) சேர்ந்த முஸ்லிம் படைகள் 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆற்காட்டின் நவாப்களின் (Nawabs of Arcot) கீழ் முகலாய பாணி நீதிமன்றம் ஒன்றை நிறுவினர். அவர்கள் ஒரு சிறிய உருது மொழி பேசும் தக்காணி முஸ்லிம் நிர்வாக மற்றும் வர்த்தக உயர் குழாத்தினருக்கு ஆதரவளித்தனர் (மெக்பேர்சன் 1969; வட்டுக் 1989).
காயல்பட்டினம், கீழக்கரை, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் உள்ள பிற ஆரம்பகால இந்திய-அரபு துறைமுகக் குடியிருப்புகளைச் சேர்ந்த செழிப்பான முஸ்லிம்கள் தங்களை மரக்காயர் (மரைக்காயர், மரைக்கார், அதாவது படகு அல்லது ‘மரக் கப்பல்கள்’ என்பதைக் குறிக்கும் மரக்கலம் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து இது உருவாகி இருக்கலாம்) என்று அழைக்கிறார்கள். அகமண முறையை வலியுறுத்தும் அவர்கள் மொத்த தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் தங்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்தைக் கோருகின்றனர் (மோரே 1991). ஒரு அடித்தட்டுக் குழுவான காயலர்கள் (Kayalars) மரக்காயர்களுடன் கூட்டு வைத்துள்ளனர் ஆனால் அவர்களது சொந்த தெருக்களை ஆக்கிரமித்துள்ளனர் (மைன்ஸ் 1972: 28; தேர்ஸ்டன் மற்றும் ரங்காச்சாரி 1909). தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையினராக விளங்கும் கைவினைஞர்கள், நெசவாளர்கள், தோல் பதனிடுபவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் லெப்பைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் சிறு எண்ணிக்கையினரான நவாயத்துகள் (Navayats), ராவுத்தர்கள், பதான்கள் போன்ற போர்த் திறமைசாலிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் (பேலி 1989: 71-103; ஃபேன்செலோ 1989; மைன்ஸ் 1973). ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 5.5 சதவீதத்தை முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் (ஹசன் 1997: 2-3). இன்று லெப்பைகள் தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையினராக இருந்தாலும், மரக்காயர்களான வர்த்தக உயர் குழாத்தினரே இலங்கைச் சோனகருடன் ஆரம்பகால வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருந்தனர்.
காயல்பட்டிணத்தின் மரக்காயர்கள் சில மேலோட்டமான தாய்வழி மரபுகளைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கேரளா அல்லது கிழக்கு இலங்கை போன்ற முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட தாய்வழி குலங்கள் அவர்களிடம் இல்லை. திருமணத்திற்குப் பிந்தைய வாழிடம் என்பது திருமணத்திற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கும் மேலான காலத்திற்கு தாய்வழியில் இருக்கும். திருமணமான தம்பதிகள் மணமகளின் பெற்றோருடன் அவரது பிறந்த வீட்டில் அல்லது அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரதட்சணை வீட்டில் அல்லது கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள்.
எப்படியிருந்தாலும், மகள்மார் திருமணத்தின் போது நகைகள், பிற அசையும் பொருட்களுடன் ஒரு வீட்டைப் பெறுகிறார்கள் (தனிப்பட்ட களப்பணி 1983; பேலி 1986: 42; மோரே 1991; காயலர்’ இல் தர்ஸ்டன் மற்றும் ரங்காச்சாரி 1909, v.3: 267). பொதுவாக ஹனஃபி சட்டத்தைப் பின்பற்றும் லெப்பைகளைப் போல் அல்லாமல், வணிக மற்றும் இரத்தின வியாபார உயர் குழாத்தினரான மரக்காயர்கள் கேரளாவின் மாப்பிளாக்கள், இலங்கைச் சோனகர்கள் போன்று ஷாஃபி சட்டப்பள்ளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாப்பிளாக்களைப் போலவே மரக்காயர்களுக்கும் கடல் பயணத்தில் நீண்ட வரலாறு உண்டு. ஆனால் போர் வீரப் பாரம்பரியத்திற்கு பதிலாக மரக்காயர்கள் மதம், பரோபகாரம் மற்றும் இலக்கியம் சார்ந்து ஒரு நற்பெயரை வளர்த்தனர். மரக்காயர் நகரங்கள் பெருமளவிலான மசூதிகளுக்கும், சூஃபி ஞானிகளின் அடக்கஸ்தலங்களுக்கும் பேர்போனவை. அவற்றில் சில தமிழ் இந்து மன்னர்களால் போஷிக்கப்பட்டன. தவிர, அவர்களின் செல்வம் மற்றும் கறுப்பு வர்த்தக (Smuggling) நடவடிக்கைகளுக்காகவும் புகழ் பெற்றன (பேலி 1986; ஃபேன்செலோ 1989: 276). 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில், இராமநாதபுரத்தின் இந்து மன்னர்களான சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மரக்காயர் பிரிதிநிதிகள் வரிசையிடம் பெரும் அதிகாரம் இருந்தது. சீதாக்காதி (அப்துல்-காதிர்) இவர்களுள் மிகவும் பிரபலமானவர். (அரச பதவிப் பெயரான விஜய ரகுநாத பெரிய தம்பி மரக்காயர் என்றும் அழைக்கப்படுகிறார்). இவர் தமிழ் கவிஞர்களை ஆதரித்ததோடு, தமிழ் இஸ்லாத்தின் முதிர்ந்த கலாச்சார சொற்றொடர்களை வகைப்படுத்தும் பணியையும் செய்தார் (ராவ் மற்றும் பலர். 1992: 264-304). சீதாக்காதியின் அனுசரணையோடு ஹிந்து ராமாயணத்தின் தமிழ்ப் பதிப்பை முன்மாதிரியாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கைக் காவியமான சீறாப்புராணம் உட்பட அரபுத் தமிழில் சமயப் படைப்புகளையும், பல ஆய்வுரைகளையும் எழுதியதில் மரக்காயர்கள் பெருமை கொள்கின்றனர் (கேசி சிட்டி 1853-55; மஹ்ரூஃப் 1986a: 87; மஹ்ரூஃப் 1972: 67-68; ரிச்மேன் 1993; ஷுல்மன் 1984; உவைஸ் 1990). தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கான மிகவும் புகழ்பெற்ற பிராந்திய யாத்திரை மையமாக விளங்கும் நாகூரில் உள்ள சூஃபி ஆன்மீகவாதி அப்துல் காதர் ஷாகுல் ஹமீதின் தர்கா (அடக்கஸ்தலம்) மரக்காயர்களால் நிறுவப்பட்டதாகும் (பேலி 1986, 1989: அத்தியாயங்கள் 2-3). சில நகர ‘இஸ்லாமியமயமாக்கல்’ செயற்பாடுகள் இப்போது நிகழ்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் தமிழ் இலக்கிய, கலாச்சார பாரம்பரியத்துடன் வலுவாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளதுடன், பங்களிப்பாளர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் (கட்லர் 1983: 280, 286; உவைஸ் 1990).
இந்தி மொழியில் கட்டாயப் பள்ளிக்கல்வி என்பதை எதிர்க்கும் வகையில் 1920 கள் மற்றும் 1930 களில் தமிழ் முஸ்லிம்களுக்கும், நாத்திக பிராமணர் அல்லாத சுயமரியாதை இயக்கத்திற்கும் இடையே நிகழ்ந்த புதுமையான இணைவும், உருது பேசும் தக்காணி முஸ்லிம் பிரிவினரிடமிருந்து வந்த தலைமைத்துவ சவாலும் இந்த தமிழாக்கப் போக்கை மேலும் வலுப்படுத்தியது. (மேக்பெர்சன் 1969; மைன்ஸ் 1983: 112; மோரே 1993a, 1997). அவர்களின் அரசியல், கேரளாவில் உள்ள மாப்பிளாக்களுடையதைப் போல், வெளிப்படையாக வகுப்புவாதமாகவோ அல்லது மோதலாகவோ இருக்கவில்லை. அவர்கள் பெரும்பாலும் திராவிட தேசியக் கட்சிகளையோ (திமுக, அ.தி.மு.க.) அல்லது காங்கிரஸையோ ஆதரித்தனரே ஒழிய, முஸ்லிம் லீக்கிற்கு அதிக விசுவாசம் காட்டவில்லை (மேக்பெர்சன் 1969; மைன்ஸ் 1981: 72-74; ரைட் 1966). தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்கள் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள தமிழ் கலாச்சாரத்துடனும், இனத்துவத்துடனுமே தங்களை வலுவாக அடையாளப்படுத்துகின்றனர். தமிழ் இந்துக் கோவில்களுக்கு அவ்வப்போது பங்களிக்கவும் செய்கின்றனர் (மணி 1992). கோயம்புத்தூரில் 1997-98 இல் இந்து அடிப்படைவாதத்துக்கும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கும் இடையில் வெடித்த வன்முறை தமிழ்நாட்டு முஸ்லிம்களின் திராவிட ஒற்றுமையின் முறிவைக் குறிக்கலாம் (கோபாலன் 1998). ஆனால் இந்து-முஸ்லிம் வன்முறை இதுவரை லெப்பை மற்றும் தக்காணி மக்களின் உள்நாட்டு மையங்களிலிருந்து மரக்காயர்களின் கடற்கரை நகரங்களுக்கு பரவவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கைச் சோனகர்
கேரளாவின் மாப்பிளாக்களுக்கும், தமிழகத்தின் மரக்காயர்களுக்கும், இலங்கைச் சோனகர்களுக்கும் இடையே பல கலாச்சார ஒற்றுமைகள் உள்ளன. மூன்று குழுக்களும் ஷாஃபி சட்டப் பள்ளியைச் சேர்ந்த சுன்னா முஸ்லிம்கள். இது அவர்களின் ஆரம்பகால தென் அரேபிய முன்னோர்களின் பரம்பரைத் தாக்கமாகும். (ஃபேன்செலோ 1989).
இந்த மூன்று குழுக்களும் உள்ளூர் இந்து, பௌத்த மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் வர்த்தக சமூகங்களாகத் தொடங்கியவை. இன்றுவரை அவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாக வர்த்தகமே இருந்து வருகிறது. சூஃபி ஞானிகளினதும், அறிஞர்களினதும் வலுவான செல்வாக்கு முதலில் மலபாரையும் சோழ மண்டல கரையோரங்களையும் இணைத்து, பின்னர் இலங்கை வரை பரவியது (அலி 1980: அத்தியாயம் 4; பேலி 1989; இப்ராஹிம் குஞ்சு 1995; மஹ்ரூஃப் 1972; ஷுக்ரி 1986c). உண்மையில், இலங்கை முஸ்லிம்கள் மீதான மிகப் பரவலாக அறியப்பட்ட இரண்டு சூஃபி ஞானிகளின் ஆழமான செல்வாக்கு கேரளாவுடனும் தமிழ்நாட்டுடனும் இலங்கை முஸ்லிம்களுக்கிருந்த தொடர்புகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவர்களில் முதன்மையானவர், தமிழில் ‘முஹயத்தீன் ஆண்டவர்’ (‘Lord Mohideen’) என பிரபலமாக அறியப்பட்ட ஷேக் முஹயத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (இ. கி.பி. 1166) ஆவார். காதிரிய்யா ஒழுங்குமுறையை நிறுவிய, பிறப்பால் பாரசீகரான இவரது புகழ் தெற்காசிய முஸ்லிம் உலகம் முழுவதும் பரவியது (சன்யால் 1994: 48). அவர் கேரள அரபு மலையாள இலக்கியத்தின் மிகவும் தொடக்க காலத்துக்குரிய (கி.பி. 1607), மிக உயர்வாக மதிக்கப்பட்ட முஸ்லிம் புனிதர்களின் புகழ் பாடும் கவிதைகள் அல்லது Malappatt எனும் நூலின் முதன்மைக் கதாபாத்திரமாக இருந்தார் (இப்ராஹிம் குஞ்சு 1989: 198-200). தவிரவும், அவரது தர்கா தலங்கள் தமிழ்நாட்டில் மிகப் பரவலாக உள்ளன (மைன்ஸ் 1981: 69). அவர் ஆதம் மலைக்கு (Adam’s peak) யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, இலங்கையின் பலாங்கொடைக்கு அருகில் கூரகலயில் அமைந்துள்ள பிரபலமான குகை-பள்ளிவாசலான தஃப்தர் ஜெய்லானிக்கு விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது (அபூசாலி 1975).
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிரபலமான இரண்டாவது சூஃபி மகான் 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி ஷாகுல் ஹமீது ஆவார். இலங்கையில் சில சந்தர்ப்பங்களில் மீரான் சாஹிப் என்று குறிப்பிடப்படுகிறார். நாகூரில் சோழமண்டல கடற்கரையில் உள்ள சூஃபியின் அடக்கஸ்தலத்துக்கு சிறப்புப் பாத்திரத்தில் (சந்தனக்கூடு) கொண்டு வரப்படும் குளிர்ச்சியூட்டும் சந்தனக் கட்டையால் அபிஷேகம் செய்யப்படும் மரண ஆண்டு விழாவை (கந்தூரி) காண இலங்கை, தென்னிந்தியா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வரும் முஸ்லிம் யாத்ரீகர்கள் மனமுவந்து இதற்கு கொடையளிக்கின்றனர் (பேலி 1986; நம்பியார் மற்றும் நாராயண குருப் 1968).
நாகூர் சூஃபி, அப்துல் காதர் ஜீலானியின் அடியொட்டி பக்தாத், பலாங்கொடை, மாலைதீவு, தென்கிழக்காசியா போன்ற இடங்களுக்கு வருகை தந்தாக நம்பப்படுகிறது (ஷேக் ஹசன் சாஹிப் 1980). ஷாகுல் ஹமீதின் நினைவு தினத்தை, இலங்கை மற்றும் சிங்கப்பூரில் உள்ள உடல் ரீதியாக வெறுமையான ஆனால் ஆன்மீக ரீதியில் நிரப்பப்பட்ட ‘கிளை அடக்கஸ்தலங்கள்’ நாகூரில் நடப்பதைப் போன்றே கொடி ஏற்றி, கந்தூரி வழங்கி கொண்டாடுகின்றன (மெக்கில்ரே 1988b; ஷம்ஸூத்தீன் 1881). துறவி கடலில் மூழ்கும் கப்பல்களின் கசிவை அடைக்கும் அற்புத சக்திக்காக புகழ்பெற்றவர். இந்த அற்புதம் அவரது முக்கிய புரவலர்களாகவும், பக்தர்களாகவும் இருந்த கொழும்பு மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த கடல் வணிகர்களான மரக்காயர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் (ஷரீஃப் 1921: 199; வேன் சந்தன் 1926: 31).
இந்த கலந்துரையாடலிலுள்ள மாப்பிளாக்கள், மரக்காயர்கள், சோனகர்கள் ஆகிய இந்த மூன்று குழுக்களையும் போலவே, உண்மையில், வடகனராவில் உள்ள பட்கலின் கடலோர நவாயத் முஸ்லிம்களும் (டி சொய்சா 1955), ஒருவகைத் தாய்வழி திருமண முறையையும், வாழிட முறையையும் பின்பற்றுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அதனை விரும்புகிறார்கள். தவிர, அவர்களில் பலர் தாய்வழி வம்சாவளி முறையை அங்கீகரிக்கவும் செய்கின்றனர். இலங்கைச் சோனகரின் தாய்வழி முறையின் தன்மை கிழக்குக் கரையோரத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சோனகரை அடிப்படையாகக் கொண்டு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தமிழ் இந்துக்களிடம் காணப்படுவது போல் வீடு மற்றும் நிலபுலன்களை மகளுக்கு சீதனமாகக் கொடுக்கிற முறை தொடர்ந்து இருந்து வருகிறது (மெக்கில்ரே 1989; யால்மன் 1967). இலங்கையின் மத்திய மற்றும் மேல் மாகாண சோனகர்களின் உறவுமுறை பற்றிய ஆய்வுகள் மிகக் குறைந்தளவே வெளிவந்துள்ளன. ஆயினும், வெல்லஸ்ஸ எனும் முஸ்லிம் கிராமத்தில் தாய்வழி வசிப்பிடம் பற்றி அவதானிக்கப்பட்டுள்ளது (டி மன்க் 1993, 1996; யால்மன் 1967; அத்; 13). 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலியின் மேல்தட்டு சோனகர்கள் மத்தியிலும் (பாவா 1998) மற்றும் நவீன கொழும்பில் பன்னிரண்டு சோனகக் குடும்பங்களில் எட்டுக் குடும்பங்களில் அவதானித்து ரஹீமினால் மொழியியல் ரீதியாக செய்யப்பட்ட ஆய்வுகள் போன்றனவே இந்தப் புலத்தில் கிடைக்கின்றன. 1993 இல் கொழும்பு, காலி ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தபோது, நான் சென்ற நடுத்தர வர்க்க சோனக குடும்பங்கள் அனைத்திலும் தாய்வழி வசிப்பிடத்தைக் கண்டேன். தந்தை வழி மரபைப் பின்பற்றி வருகின்ற குஜராத்தி மொழி பேசும் போஹ்ராக்கள் போன்ற ஏனைய முஸ்லிம்களைப் பற்றியும் இதில் சில சோனகர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
மரக்கார் அல்லது மரக்காயர் என்ற பட்டம், கனரா கடற்கரையின் நவாயத்துகள் (Navayats) (டி சொய்சா 1955: 43ff) முதல் இலங்கையின் சோனகர் வரையிலான முஸ்லிம் கடல் வணிகக் குழுக்களிடையே காணப்படுகிறது. இப்பட்டம் ஸமோரின் (Zamorins) கடற்படையின் தைரியமான முஸ்லிம் குஞ்சாலி அட்மிரல்களாலும், கேரளாவின் மிகவும் பணிவான இந்து முக்குவர் படகோட்டிகளாலும் தாங்கப்பட்டது (கேப்ரியல் 1996: 121 ff; நாராயண் 1995: 94; தர்ஸ்டன் மற்றும் ரங்காச்சாரி 1909 v.5: 112).
தொடரும்.