இலங்கை நாட்டினுடைய 63 சதவீதமான கடற்கரைகளை கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் வட மாகாணத்தில் 40 சதவீதமான கடற்கரைகளும் கிழக்கு மாகாணத்தில் 23 சதவீதமான கடற்கரைகளும் காணப்படுகின்றன. இவ்விரு மாகாணங்களும் மிகச் சிறந்த மீன்பிடி வளத்தை கொண்ட கடல்பரப்பை தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இக்கடற்கரைகள் மீன்பிடி, மீன் வளர்ப்பு, சுற்றுலா ஆகியவற்றுக்கு பொருத்தமாக உள்ளன. மீன்பிடித் தொழிலானது இவ்விரு மாகாணங்களிலும் விவசாயத்துறைக்கு அடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் துறையாகும். நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 22 சதவீதத்தையும் வடக்கு மாகாணம் வழங்கி வருகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் காணப்படும் பாரிய, நடுத்தர, சிறு குளங்களை அடிப்படையாகக் கொண்டு நன்னீர் மீன்பிடியானது இடம்பெறுவதுடன் களப்பு, குடாக்களில் காணப்படும் ஆழம் குறைந்த பகுதிகளில் பல்வேறு வளர்ப்புத்திட்டங்களும் நடைபெறுகின்றன. இந்த வகையில் கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி, வளர்ப்புத்திட்ட மீன்பிடி ஆகிய மூன்று மீன்பிடி முறைகள் இவ்விரு மாகாணங்களிலும் வளர்ச்சி பெற்றுள்ளன.
மீன்பிடிசார் சனத்தொகை
மீன்பிடித்தொழில் துறையினை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் 97,790 முழுநேர மீன்பிடியாளர்களும் வட மாகாணத்தில் 41,667 முழுநேர மீன்பிடியாளர்களும் காணப்படுகின்றனர். மாவட்ட அடிப்படையில் இம் மீனவர்களின் தொகையினை நோக்கும் போது,
இதேபோல மீன்பிடித்துறையில் தம் வாழ்வாதாரத்துடன் பிணைக்கப்பட்டு மீன்பிடி மற்றும் அத்துறைசார்ந்த துணைத்தொழில்களுடனும் காணப்படும் மீனவச் சனத்தொகையை பார்க்கும் போது,
இந்த அடிப்படையில் நோக்கும் போது 12,0378 செயல்திறன் வாய்ந்த மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் துறையாக மீன்பிடித்துறை காணப்படுகின்றது. இதில் இவர்கள் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
கடல் மீன்பிடி
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதான வளங்களில் ஒன்றான கடல், இந்து சமுத்திரத்தின் பெருங்கடலை தனது வளமாகக் கொண்டிருக்கின்றது. உலகளாவிய மட்டத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் நீலப்பொருளாதாரம் என்பது இப்போதும் பெரிதும் முன்னிலைப்படுத்தப்படும் ஒரு துறையாக காணப்படுகின்றது. கடல் மீன்பிடியில் ஆழ்கடல் மீன்பிடி, கரையோர மீன்பிடி என இரு முறைகள் காணப்படுகின்றன. ஆழம் குறைந்த கரைகளுக்கு நெருக்கமாக உள்ள கடல் பகுதியில் முதலீடு குறைந்த சிறிய வள்ளங்கள், தெப்பங்கள், மிதவைகள் போன்ற கலங்களை பாவித்து மீன்பிடிக்கும் முறை காணப்படுகின்றது. இந்த வகைப்பாட்டின் கீழ் பாரம்பரியமான, அதே நேரம் இயந்திரமயப்படுத்தப்படாத மீன்பிடிக் கலங்களும் ஓரளவுக்கு இயந்திரமயப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலங்களும் உள்ளடங்குகின்றன. இவர்கள் கரையிலிருந்து 20 கடல் மைல்களுக்குள் மட்டுமே தொழில் செய்வதனாலும் அதிகளவிலான மீனவர்கள் இந்த வகைப்பாட்டுக்குள் உள்ளடங்குவதனாலும் இவ்வகை மீன்பிடியில் ஈடுபடுவோரது வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பெருந்தொகையானவர்கள் இந்த வகைத் தொழிலில் ஈடுபடுவதால், மீனினங்களின் இருப்புக் குறைந்த கடல்பரப்பில் அதிகளவு போட்டியிட்டு மீன்பிடிப்பதால், மீன்கள் உரிய நிறை பெறுவதற்குள் பிடிக்கப்படுவதுடன் அவற்றின் பெருக்க அளவும் முழுமை பெறாத சூழல் நிலவுகின்றது. வடமாகாணத்தில் கரையோரம் 2,592 இயந்திரமயப்படுத்தப்படாத பாரம்பரிய கலங்களும் 1660 இயந்திரமயப்படுத்தப்பட்ட கலங்களும் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
கிழக்கு மாகாணத்தில், 529 இயந்திரமயப்படுத்தப்படாத பாரம்பரிய கலங்களும் 7,812 இயந்திரமயப்படுத்தப்பட்ட பாரம்பரிய கலங்களும் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. வளம் குறைந்த பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட மீன்பிடிக் கலங்களை பாவித்து அதிகளவில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதனால், இது சுய தேவைப்பூர்த்தி, அயல் சந்தைகளில் மட்டும் விற்பனை செய்வதற்கான உற்பத்தித் துறையாகவே செயற்படுகின்றது. இதன் தேறிய வருவாய் வீதம் குறைவாகவே காணப்படுகின்றது. மீனவர்களைப் பொறுத்து, தம் குடும்ப வருமானத்துக்கு மட்டுமே இத்தொழிலில் வருமானம் கிடைப்பதால் சேமிப்பு, முதலீட்டு நடவடிக்கைகளில் இக்குடும்பங்களால் ஈடுபட முடியாதுள்ளது. இதனால் தான் இம் மீன்பிடிமுறை செயற்றிறன் குறைந்த தொழிலாக மீனவர்களால் பார்க்கப்படுகின்றது.
அதிகளவு மீன்பிடிப் பரப்பை கொண்டுள்ள இவ்விரு மாகாணங்களிலும் உள்ள மக்கள் இதன் நன்மையைப் பெற முடியாதுள்ளதால், பன்னாட்டு அரசுகளும் ஆதிக்கச் சக்திகளுமே எமது கடலில் சட்ட விரோத ஊடுருவலை மேற்கொண்டு நன்மை பெற்றுச் செல்கின்றன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் பர்மியா பன்னாட்டுப் படகுகள் எமது கடற்பிரதேசம் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளன.
வடமாகாணத்தில், வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 11,043 படகுகளும் கிழக்கு மாகாணத்தில் 6,166 படகுகளும் காணப்படுகின்றன. இப்படகுகள் மூலம் 50 கடல்மைல்களுக்கு சென்று தொழில் செய்ய முடியும். அதிகளவான மீனவர்கள் இவ்வகை படகுகளில் தான் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்; 2-4 தொழிலாளர்கள் கூட்டாகச் சென்று ஒரு இரவு மட்டுமே கடலில் தங்கி மீன்பிடிக்கின்றனர். பிடித்த மீன்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தால் மட்டுமே வருமானம் கிடைக்கும் என்பதால் இவர்களின் வினைத்திறனும், விளைபயனும் மட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. இவர்களது பாவனையிலுள்ள வலைகளும் சிறியதொகை மீன்களை பிடிக்கக் கூடியதாகவே உள்ளது. நிறைந்த வருமானத்தையும் தொழில் பாதுகாப்பையும் தரக்கூடிய தொழிலாக காணப்படும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் எண்ணிக்கை இவ்விரு மாகாணங்களிலும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இந்திய இழுவை மடிப் படகுகளினால் இத் தொழிலாளர்களின் வலைகள் அழிக்கப்படுவதனால், ஆழ்கடலில் மீன்பிடிப்பது மிகவும் சவாலான தொழில் வகையாக காணப்படுகின்றது.
நவீனமயப்படுத்தப்பட்ட மீன்பிடி முறைகளில், பல்நாள் படகுகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபடும் 145 படகுகள் வடபகுதியில் காணப்படுகின்றன; கிழக்கில் 971 படகுகள் காணப்படுகின்றன. பல் நாள் படகுகளை மீனவர்கள் பயன்படுத்தும் போது அதற்கு உகந்த உட்கட்டுமான வசதிகளைக் கொண்ட துறைமுகங்கள் தேவைப்படுகின்றன. கிழக்கில் திருகோணமலை, வாழைச்சேனை, ஒலுவில் ஆகிய துறைமுகங்களும் வடக்கில் காங்கேசன்துறை, மன்னார் ஆகிய துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன. இப் பல்நாள் படகில் ஆழ்கடலுக்குச் சென்று பல நாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபட முடியும் என்பதுடன் பாதுகாப்பாக மீனை எடுத்து வரும் குளிர் அறைகள், நீர் தொட்டிகள் என்பனவும் வசதிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் பல்நாள் படகினை பயன்படுத்துவதற்கு தேவையான துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படாததனால் இத்தொழில்துறையின் வளர்ச்சி தொடர்ந்து மந்தமடைந்து வருகிறது.
ஓரளவு வசதியுடன் கூடிய ஒரு நாள் படகுகளை நோக்கும் போது, வடக்கில், யாழ்ப்பாணத்தில் 411 படகுகளும் மன்னாரில் 197 படகுகளும் கிழக்கில், திருகோணமலையில் 12 படகுகளும் மட்டக்களப்பில் 18 படகுகளும் அம்பாறையில் 71 படகுகளும் காணப்படுகின்றன. இப்படகுகளில் மீன்களை பாதுகாத்து வைப்பதற்கும் ஒரு நாள் கடலில் தங்கியிருந்து தொழில் செய்வதற்குமான வசதிகள் காணப்படுகின்றன. எனினும் இப்படகுகளையும் ஆழம் குறைந்த கரைகளைக் கொண்ட இறங்கு துறைகளுக்கு எடுத்து வர முடியாது என்பதனால், இவற்றிற்கும் தரமான துறைமுகங்கள் தேவைப்படுகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் மீன்பிடியின் பிரதான உட்கட்டமைப்பாக அமைந்திருப்பது இறங்கு துறைகளாகும். இறங்கு துறைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவைக்க முடிவதுடன் அனர்த்த காலங்களிலும் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள இயலும். எனினும் கடல்நீர் மாறுபாட்டுக்கேற்ப இந்த இறங்கு துறைகளும் சில சவால்களை எதிர் கொண்ட வண்ணமேயுள்ளன. வட மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 107 இறங்கு துறைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 27 இறங்கு துறைகளும் மன்னார் மாவட்டத்தில் 53 இறங்கு துறைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 இறங்கு துறைகளும் செயற்பாட்டிலுள்ளன. வடமாகாணத்தில் மொத்தமாக 220 இறங்கு துறைகள் காணப்படுகின்றன.
மீனை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வருவதற்கும் நாடு முழுவதிலுமுள்ள நுகர்வோருக்கு கொண்டு சேர்ப்பதற்குமான மற்றுமொரு இடையீட்டு சேவையாக ஐஸ் உற்பத்தியைக் குறிப்பிட முடியும். அரசு, தனியார் ஆகியன இணைந்து இம்முதலீட்டில் ஈடுபட்டுள்ளன. கிழக்கில், திருகோணமலையில் 8 தொழிற்சாலைகளில் இருந்து 284 மெற்றிக்தொன் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மட்டக்களப்பில் 6 தொழிற்சாலைகள் மூலம் 175 மெற்றிக்தொன்னும் அம்பாறையில் 04 தொழிற்சாலைகளிலிருந்து 72 மெற்றிக்தொன்னும் யாழ்ப்பாணத்தில் 06 தொழிற்சாலைகள் மூலம் 145 மெற்றிக்தொன்னும் முல்லைத்தீவில் 02 தொழிற்சாலை மூலம் 48 மெற்றிக்தொன்னும் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
மீன்பிடித் தொழில்துறையில் ஐஸ் உற்பத்தி என்பது மிக மிக அவசியமானதாகும். மீனை கடலிலிருந்து கரைக்கு கொண்டு வருவதிலும் சந்தைப்படுத்தல் நோக்கம் கருதி தூர இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் ஐஸ் உற்பத்தியின் தேவை அத்தியாவசியமானது. அபிவிருத்தி செய்யப்படாத கரைகளையும் நீண்ட தூர இடைவெளிகளையும் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில், ஆங்காங்கே பிடிக்கப்படும் கடல்சார் உற்பத்திகளை கொழும்பு போன்ற மைய நகரச் சந்தைக்கு எடுத்துச் சென்றாலே விற்க முடியும். இங்கிருந்து மீன் விற்பனைக்காகச் செல்லும் கூலர் வாகனங்களுக்கு இத்தொழிற்சாலைகள் மூலமே ஐஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. பேலியகொடை சந்தையிலிருந்து வரும் கூலர் வாகனங்கள் அப்பகுதியில் இருந்தே ஐஸ் எடுத்து வருவதும், உள்ளூர் முகவர்களுக்கும் அவர்களே விநியோகம் செய்வதும் இங்கு கவனிக்கப்படத்தக்கது.
தொடரும்.