ஆங்கில மூலம் : ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்
நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளன் என்ற தமிழ் அரசனைப் பற்றி ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீபவம்சம்’ என்னும் பாளி நூல் “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல் அறவழி நின்று செங்கோல் ஓச்சினான்” என்று புகழ்ந்துரைக்கிறது. அம் மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு, மன்னன் எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து, மக்கள் அதனை வழிபாடு செய்வதற்கு வழிசெய்தான். 2200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் சிங்கள பௌத்தர்களால் போற்றப்பட்ட எல்லாளன், 75 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையின் தொல்லியல் ஆணையாளராக இருந்த செனரத் பரணவிதான அவர்கள் எடுத்த முடிவின் விளைவாக, போற்றுதலுக்கு தகுதியற்ற ஒருவனாக ஆக்கப்பட்டான். இச் சர்ச்சைக்குரிய விடயம் குறித்து வரலாற்றாசிரியரும் தொல்லியல் அறிஞருமான ஜேம்ஸ். ரி. இரத்தினம் ஆய்வுக்கட்டுரை ஒன்றை 1981 ஆம் ஆண்டில் எழுதினார். இக் கட்டுரை ‘The tomb of Elara at Anuradhapura’ என்ற சிறுநூலாக அவ்வாண்டு பிரசுரிக்கப்பட்டது. 31 பக்கங்களைக் கொண்ட அந்நூலின் முதல் எட்டுப் பக்கங்களில் (பக் 1-8) அவர் கூறியிருப்பவற்றை இங்கே தமிழில் மொழிபெயர்ப்பாக வழங்குகின்றோம்.
மகாவம்சம் என்ற புராண காவியத்தின் கதாநாயகனான துட்டகைமுனுவிற்கும் எல்லாளனுக்கும் நடந்த போர் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கி.மு 161 இல் நடைபெற்றதாகக் கொள்ளப்படுகிறது. இப்போர் பற்றி மகாவம்சம் விபரித்துள்ளது. வீரனான எல்லாளன் வயதில் முதியவன், துட்டகைமுனு அவனைவிடப் பலமடங்கு வயதில் இளையவன். அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதினர். இறுதியில் எல்லாளன் களத்தில் வீழ்ந்து உயிர் துறந்தான். அவ்வீரத் தலைவனுக்கு உரிய மரியாதையை வழங்கி அவனின் மரணச் சடங்கை நிகழ்த்தும்படி துட்டகைமுனு கட்டளையிட்டான்.
எல்லாள மன்னன் இலங்கையில் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் ‘நண்பனுக்கும் எதிரிக்கும் சமத்துவமான நீதி வழங்கப்பட்டது’ என மகாவம்சம் புகழ்ந்துரைக்கிறது. தீபவம்சமும் எல்லாளனைப் புகழ்ந்துரைக்கிறது. “ஆசை, குரோதம், அச்சம், தற்பெருமை ஆகிய மாயைகள் சூழ்ந்த வழிகளில் தன் மனதைச் செலுத்தாமல், அறவழி நின்று செங்கோல் ஓச்சினான் எல்லாளன். அவனது ஈடு இணையற்ற நல்லாட்சியில் வான்மழை கூட இரவுநேரம் பொழிந்து, பகல் நேரம் முழுவதும் ஓய்வு கொடுத்தது. இயற்கை கூட அம்மன்னனுக்குத் துணை செய்தது” என அந்நூலும் கூறுகின்றது. எல்லாள மன்னன் அறவழி நின்றவன். அவன் பொய்யான சமய நம்பிக்கைகளை உடையவனாய் இருந்தபோதும் தீமையின் வழியில் சென்று தனக்குப் பாவத்தைத் தேடிக்கொண்டவன் அல்லன். அதனால் அவனுக்கு வியத்தகு ஆற்றல்கள் கிடைத்தன என்று மகாவம்சம் அவன் பெருமை பற்றிக் கூறுகின்றது.
துட்டகைமுனு எல்லாளனின் மரணத்தால் மனம் கலங்கினான். குற்ற உணர்வும், மனச்சாட்சியும் அவனைத் துன்புறுத்தின. அவன் போர்க்களத்தில் இருந்து நேரே தன் மதிப்புக்குரிய எதிரியின் மரணச்சடங்கிற்குச் சென்றான். எல்லாளன் வீழ்த்தப்பட்ட இடத்தின் அருகே அவனது மரணச்சடங்கு நடைபெற்றது. அங்கே துட்டகைமுனு ஒரு நினைவுச் சின்னத்தையும் எழுப்பி மக்கள் அதனை வழிபாடு செய்யவும் வழி செய்தான். ‘இன்றும் கூட லங்காதீபத்தின் இளவரசர்கள் இவ்விடத்தை அண்மித்ததும் வாத்திய இசையை நிறுத்தச்செய்து வழிபாடு செய்தே செல்வதுண்டு’ என்றும் மகாவம்சம் கூறுகிறது. மேற்குறித்த கூற்றிலே ‘இன்றும்கூட’ என்ற தொடர் கவனத்திற்குரியது. ஒரு தமிழ் அரசனுக்கு ஏறக்குறைய 700 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்களால் கொடுக்கப்பட்டு வந்த தனி மரியாதையை அவர் இவ்வாறு பதிவு செய்கிறார்.
மகாவம்சம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் எழுந்த நூலாகக் கொள்ளப்படுகிறது. கி.மு. 161 இல் நடைபெற்ற துட்டகைமுனு – எல்லாளன் போர் பற்றி மக்களிடம் வழங்கிய பழமரபுக் கதைகளையே மகாவம்ச ஆசிரியர் எடுத்துக் கூறினார். துட்டகைமுனு எல்லாளன் போர் நடைபெற்று 700 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தபின்னும் எல்லாளன் நினைவு போற்றப்பட்டதையும், எல்லாளன் சமாதிக்கு மரியாதையும் வணக்கமும் செலுத்தப்பட்டதையும் காணலாம்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்
வம்சத்பகசினி என்னும் நூல் மகாவம்சத்தின் விளக்கவுரை போன்று அமைந்த நூலாகும். இதனைப் பதிப்பித்தவரான ஜி.பி. மலலசேகர என்ற அறிஞர், இந்நூல் கி.பி. 8 ஆம் அல்லது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கூறியுள்ளார். வில்கம் கைகர் என்ற அறிஞர் இந்நூல் கி.பி 11 ஆம் நூற்றாண்டுக்கும். 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த நூல் எனக் கூறினார். எவ்விதம் இருப்பினும் வம்சத்பகசினி எல்லாளன் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின் தோன்றிய நூல் என்பதைக் கவனித்தல் வேண்டும். இந்நூலில் துட்டகைமுனு – எல்லாளன் போர் நடைபெற்ற இடம் ‘புரதக்கினத்வரகமி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடம் ‘எல்லாரப்பட்டி மகரவிற்கு’ கிழக்கிலும், அனுராதபுரத்தின் தெற்குப் பகுதியில் உள்ள குயவர் குடியிருப்புக்கு மேற்கிலும் உள்ளது எனவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. வம்சத்பகசினி ஆசிரியர் இச்செய்திகளைக் கூறும் முறையில் அவ்விடம் யாவருக்கும் தெரிந்த ஓர் இடம் என்பதும், அவரது தலைமுறையினருக்கு மிகவும் பரிச்சயமான ஓர் இடம் என்பதும் தெரிகிறது. வம்சத்பகசினி ஆசிரியர் குறிப்பிடும் ‘எல்லாரப்பட்டி மகர’ என்பதன் பொருள் யாது? எல்லாளன் உருவம் வைக்கப்பட்டுள்ள மனை (Elara Image House) என்பதே இதன் பொருளாகும். துட்டகைமுனுவின் கட்டளைப்படி அமைக்கப்பட்டதும், மகாவம்சத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதுமான எல்லாளனின் நினைவிடம் பற்றியே வம்சத்பகசினி ஆசிரியர் கூறுகிறார். “இலங்கையின் இளவரசர்கள் அவ்விடத்தை அண்மித்ததும் இசைக் கருவிகள் ஒலிக்கப்படுவதை நிறுத்தி அமைதி பேணினர்” எனவும், “அந்நினைவிடத்தினைச் சுற்றி வலம் வந்து மலர்களைத் தூவியும், நறுமணத் தூபம் இட்டும் வழிபட்டனர்” எனவும் வம்சத்பகசினி ஆசிரியர் கூறுகிறார். ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரும் எல்லாளன் சமாதியில் வழிபாடு இயற்றப்பட்டதை, தமது அனுபவப் பதிவாகவே வம்சத்பகசினி ஆசிரியர் கூறியுள்ளார்.
14 ஆம் நூற்றாண்டு சத்தர்மலங்காரய என்ற நூல்
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘சத்தர்மலங்காரய’ என்ற நூலிலும் எல்லாளன் நினைவிடம் பற்றிய வெளிப்படையான குறிப்பு ஒன்று உள்ளது. எல்லாளனின் உடலை எரித்த இடத்தில் தாது கோபம் (Dagaba) அமைக்க வழி செய்யப்பட்டது எனக் கூறப்படுவதோடு 6 ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்ததாக மகாவம்சம் கூறும் வழிபாட்டு முறைகள் 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்ததை ‘இக்காலம் வரையும்’ என்ற சொற்களால் சந்தர்மலங்காரய அழுத்திக் கூறுகிறது. இளவரசர்கள் இவ்விடத்தை அணுகும்போது பறையொலி முழங்குவதில்லை என்று இந்நூல் குறிப்பிடுகிறது. அனுராதபுரத்தின் மீது சோழர் படையெடுப்பு நிகழ்ந்த பின்பும் கூட எல்லாளன் தாது கோபம் அங்கு இருந்தது. யுத்தத்தின் அழிவுகள் கூட அதனை மங்கச்செய்யவில்லை.
போத்துக்கேயர், டச்சுக்காரர் காலம்
போத்துக்கேயர், டச்சு ஆட்சிக் காலங்களின்போது அனுராதபுரத்தின் சில பகுதிகளைச் சுற்றிக் காடுகள் வளர்ந்தன. உதாரணமாக பொலன்னறுவ காடுகளால் சூழப்பட்டு எவராலும் அணுகமுடியாத பகுதியாக ஏறக்குறைய 500 ஆண்டுகாலம் இருந்துள்ளது. ஆயினும் அனுராதபுரம் பற்றிய நினைவுகள் மக்கள் மனதில் நிலைத்திருந்தன. கீர்த்தி ஶ்ரீராஜசிங்கன் அங்கிருந்த நினைவுச் சின்னங்கள் சிலவற்றைப் புனரமைப்புச் செய்ய முயற்சித்தான்.
அனுராதபுரத்தில் எல்லாளன் சமாதி இருந்த இடம் வணக்கத்திற்கு உரியதொன்று என்ற விடயம் மக்கள் நினைவில் நிலைத்திருந்தது. அவ்விடத்தினைக் கடந்து செல்லும்போது, அரசர்கள் முதல் சாமானியர்கள் வரை யாவரும் மதிப்பும் மரியாதையும் செலுத்தாமல் செல்லக்கூடாது என்ற விதி பின்பற்றப்பட்டு வந்தது. இது வாய்மொழியாகவே அடுத்த தலை முறையினருக்கு மக்களால் சொல்லப்பட்டு வந்தது. போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலும் கூட எல்லாளன் சமாதியின் அமைவிடம் பற்றிய அடையாளம் காணுதலில் தவறு நிகழ்வதற்கு இடம் இருக்கவில்லை.
எல்லாளன் சமாதிக்கு மரியாதை செய்த பிலிமத்தலாவ
19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பிலிமத்தலாவ கண்டியில் இருந்து தப்பியோடும்போது அனுராதபுரத்தை அடைந்தான். பிலிமத்தலாவ எல்லாளன் சமாதியிருந்த இடத்தை அண்மித்தபோது, அதற்கு மரியாதை செலுத்தத் தவறவில்லை. பிலிமத்தலாவ அனுராதபுரம் ஊடாகத் தப்பி ஓடிய ஆண்டு 1818 ஆகும். அந்நிகழ்வில் இருந்து 22 ஆண்டுகள் கடந்த பின் 1840 இல் போர்பஸ் (Forbes) என்ற ஐரோப்பியர் ‘இலங்கையில் பதினொரு ஆண்டுகள்’ (Eleven Years in Ceylon) என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் போர்பஸ் எல்லாளன் சமாதி பற்றிக் குறிப்பிடுகிறார்.
‘எல்லாளன் இறந்து 2000 ஆண்டுகள் கடந்துவிட்டன. அஞ்ஞானியாகிய ஒருவனின் சமாதி இன்று பௌத்த யாத்திரிகர்களால் புனித சின்னம் ஒன்றின் எச்சமாகக் கொள்ளப்படுகிறது’ என போர்பஸ் குறிப்பிட்டார். கண்டியின் மிகப் பழைய பிரபுக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவனான பிலிமத்தலாவ, கண்டி அரசனுக்கு எதிரான கலகத்தைச் செய்வித்தான் என்றும் அவனது முயற்சி தோல்வியுறவே கண்டியை விட்டுத் தப்பியோடியபோது அனுராதபுரத்தைக் கடந்து சென்றான் என்றும் போர்பஸ் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாளன் சமாதி இருக்கும் இடம் எது என்பதைச் சரியாக நிச்சயிக்க முடியாத நிலையில் பிலிமத்தலாவ இருந்தான். அவன் அப்போது மிகுந்த களைப்புற்றிருந்தான். தன் உடலை அசைக்கவே சக்தியற்றவனாக இருந்த பிலிமத்தலாவ தான் பயணித்த பல்லக்கில் இருந்து கீழே இறங்கினான். எல்லாளன் சமாதி உள்ள இடத்தைத் தான் தாண்டிச் சென்று விட்டேன் என்று நிச்சயமாகும் வரை அவன் கால்நடையாகவே நடந்து சென்றான்’ (போர்பஸ் கூற்றின் எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பு).
எமர்சன் ரெனன்ற் 1860 இல் செய்த பதிவு
எமர்சன் ரெனன்ற் ‘இலங்கை’ (Ceylon) என்ற நூலை 1858 இல் வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பு 1860 இல் வெளியாயிற்று. இந்நூலின் தொகுதி 1 பகுதி 3 அத்தியாயம் 5 இல் ‘சிங்கள வீரப்பண்பு – எல்லாளனும் துட்டகைமுனுவும்’ என்ற தலைப்பில் உள்ள பகுதியில் ரெனன்ற் கூறியிருப்பது வருமாறு:
“தம்மிடையே முரண்பட்டு நின்ற அரசர்கள் இருவரிடையே நடைபெற்ற மோதல் இலங்கையின் வீரப்பண்பிற்கு உதாரணமான தனித்துவம்மிக்க கதையாகும். எல்லாளனின் வீரத்தை போற்றும் உணர்வோடு அவன் வீழ்ந்து இறந்த இடத்தில் அவனுக்கு மரியாதை செய்யும் நினைவுச் சின்னத்தை அவன் எதிராளி நிறுவினான்”.
ரேர்ணர், எல்லாளன் நினைவுச் சின்னத்தின் வழிபாடுகள் பற்றிக் கூறியவை பின்வருமாறு:
“The ruins remain to the present day and the sinhalese still regard it with respect and veneration” (எல்லாளன் சமாதியின்) அழிபாடுகள் அங்கு இன்றும் கூடக் காணக்கூடியதாக உள்ளன. சிங்களவர்கள் அதனை மதிப்போடு வணக்கத்திற்குரியதாகப் போற்றி வருகின்றனர்.
‘இலங்கையின் புதையுண்ட நகரங்கள்’ நூல் 1885
எஸ்.எம். பரோஸ் (S.M. Burrows) என்பவர் 1884 ஆகஸ்ட் முதல் 1886 பெப்ரவரி வரை இலங்கையில் தொல்லியல் ஆய்வாளராகக் கடமையாற்றினார். பறோஸ் 1885 ஆம் ஆண்டில் இலங்கையின் புதையுண்ட நகரங்கள் (Buried Cities of Ceylon) என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்.
தனது போர் வெற்றியினால் துட்டகைமுனு திருப்தியடைந்த போதும் அப்போரினால் சிந்தப்பட்ட இரத்தம் குறித்துக் கழிவிரக்கம் கொண்டான். தன் செயலுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதென அவன் முடிவு செய்தான். அவனது முதலாவது நடவடிக்கையாக எல்லாளனுக்குப் பொருத்தமான நினைவுச் சின்னத்தை நிறுவுவது அமைந்தது. அந்த நினைவுச் சின்னத்தைத் தாண்டிப் பயணிக்கும்போது இசை, ஒலி எழுப்பக்கூடாது என்றும், அரசர்கள் பல்லக்கில் இருந்து இறங்கி மரியாதை செய்ய வேண்டும் என்றும் (துட்டகைமுனு) ஆணையிட்டான். கண்டியில் இருந்து தப்பி ஓடிய போது பிலிமத்தலாவ, எல்லாளன் சமாதிக்கு மரியாதை செய்யும் வகையில் பல்லக்கில் இருந்து இறங்கி, நடந்துபோன நிகழ்வு பற்றியும் பரோஸ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச்.சி.பி. பெல்
பரோஸின் பின்னர் தொல்லியல் ஆய்வாளராக நியமனம் பெற்றவர் எச்.சி.பி. பெல் (H.C.P. Bell) ஆவர். இவர் அவதானம் மிக்க ஆய்வாளர் எனப் புகழ்பெற்றவர். பெல், எல்லாளன் சமாதி இருந்த இடத்தில் அகழாய்வு வேலைகளைத் தொடக்கி வைத்தார். போதிய பணம் ஒதுக்கப்படாததால் அவரால் அகழாய்வு வேலைகளை நிறைவு செய்யமுடியவில்லை. ‘எல்லாள சோகன’ (எல்லாளன் சமாதி) என அழைக்கப்பட்ட எல்லாளனின் நினைவுத்தூபி பற்றி எச்.சி.பி. பெல் 1896, 1897, 1898, 1899, 1900 ஆகிய ஆண்டு அறிக்கைகளிலும் குறிப்பிட்டுள்ளார் (தொல்லியல் திணைக்கள ஆண்டு அறிக்கைகளில் பெல் ‘எல்லாள சோகன’ பற்றிக் கூறியிருப்பவற்றைத் தொகுத்து ஜேம்ஸ் ரி. இரத்தினம் அவர்கள் 1981 இல் வெளியிட்ட நூலில் பின்னிணைப்பாகத் (பக். 28-30) தந்துள்ளார்). 1900 ஆம் ஆண்டளவிலும் எல்லாளன் சமாதி பற்றிய நினைவுகள் அழியாமல் தொடர்ந்தன. நூலாசிரியர்களும் இதனைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தனர்.
எச்.டபிள்யூ. கேவ் – 1912
எச்.டபிள்யூ. கேவ் (H.W. Cave) 1912 இல் The Book of Ceylon (இலங்கை பற்றிய நூல்) என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் 548 ஆம் பக்கத்தில் கேவ் அவர்கள் எல்லாளன் நினைவுச் சின்னம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
”(போரின்) பின்னர் துட்டகைமுனு எல்லாளன் இறந்த இடத்திலே நினைவுத்தூபி ஒன்றை எழுப்பினான். அத்தோடு அத்தூபி மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய இடம் எனவும் அறிவித்தான். அவனது இச்செயல் இருபது நூற்றாண்டுக்கும் மேலாகப் புகழ்ந்து பாராட்டப்படும் மாண்புக்குரிய செயலாக அமைந்தது. அவ்விடத்தைக் கடந்து செல்வோர் அத்தூபிக்கு மரியாதை செலுத்திச் செல்லவேண்டும் எனவும் கட்டளையிட்டான். அவனது கட்டளை இன்றும்கூட மதிக்கப்பட்டு வருகிறது. நினைவுத்தூபி இருந்த இடம் மண் மேடாகக் காணப்படுகிறது.”
ஜி.பி. மலலசேகர -1928
கலாநிதி ஜி.பி. மலலசேகர என்னும் அறிஞர் The Pali. Literature of Ceylon (இலங்கையின் பாளி மொழி இலக்கியம்) என்ற நூலை 1928 ஆம் ஆண்டில் எழுதினார். அந்நூலில் அவர் இவ்விடயம் பற்றிக் கூறியிருப்பதை பின்வருமாறு கூறலாம்.
“(எல்லாளன்) ஒரு தலைசிறந்த வீரன். அவன் உயர் பண்புகளை உடையவன். நீதி தவறாது ஆட்சி செய்தவன். துட்டகைமுனுவின் கட்டளைப்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்கள் எல்லாளனுக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். இது இலங்கை மக்களுக்குப் பெருமை தரும் விடயமாகும்.” (எளிமைப்படுத்திய தமிழ் மொழிபெயர்ப்பு).
1948 ஆம் ஆண்டில் கூறப்பட்ட புதிய கதை
கலாநிதி ஜி.பி. மலலசேகர ‘இலங்கை மக்களுக்குப் பெருமைதரும் விடயம்’ என்று குறிப்பிட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் போற்றப்பட்டு வந்த ஒரு வழமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற முடிவை கலாநிதி செனரத் பரணவிதான மேற்கொண்டார். அவர் எல்லாளன் சமாதி இருந்த இடம் ‘எல்லாளன் சோகன’ என்று அழைக்கப்படும் இடம் அல்ல என்று கூறினார். எல்லாளன் சமாதி இருந்த இடத்தைப் பற்றி ஒரு ஊகத்தை 1948 ஆண்டு தமது அறிக்கையில் அவர் எழுதினார். அத்தோடு நில்லாது எல்லாளன் சமாதி என மக்களால் நம்பப்பட்டு வந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி என்ற பெயர்ப் பலகையை நாட்டும்படி கட்டளையிட்டார். அவரது கட்டளைப்படி அப்பெயர்ப் பலகை அங்கு நாட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் இது பற்றி எழுதிய ஜேம்ஸ். ரி. இரத்தினம் என்ற அறிஞர் “இப்போது யாரும் அவ்விடத்தில் தமது வாகனத்தை நிறுத்திக் கீழே இறங்கி மரியாதை செய்வது கிடையாது” எனக் குறிப்பிட்டார்.
முடிவுரை
‘அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி’ (‘The Tomb of Elara at Anuradhapura) என்னும் ஆங்கில நூலை ஜேம்ஸ். ரி. இரத்தினம் 1981 ஆம் ஆண்டில் பிரசுரித்தார். 31 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் முதல் எட்டுப் பக்கங்களில் உள்ள தகவல்களை ஆதாரமாகக்கொண்டு அனுராதபுரத்தின் எல்லாளன் சமாதி பற்றிய கதையை மேலே எடுத்துக் கூறினோம். இந்நூலின் 8-31 பக்கங்களில் கலாநிதி செனரத் பரணவிதான அவர்களின் வாதங்களை, ஜேம்ஸ். ரி. இரத்தினம் மறுத்துரைக்கின்றார். ஜேம்ஸ். ரி. இரத்தினம் அவர்களின் நூலின் பிற்பகுதியில் கூறப்பட்ட இக் கருத்துக்கள் தனியாக நோக்கப்படவேண்டியன.
மொழிபெயர்ப்பாளரின் பிற்குறிப்பு : அழிபாடடைந்த நிலையில் இருந்த அனுராதபுரம் சுதந்திரத்தின் பின்னர், இலங்கை அரசினால் புனரமைக்கப்பட்டது. அந்த நகரம் இருகூறாகப் பிரிக்கப்பட்டது. பழைய நகரப் பகுதி புனித நகர் (Sacred City) என பிரகடனப்படுத்தப்பட்டது. அலுவலகங்கள், சந்தை, பஸ் தரிப்பிடம், கடைகள் என்பன கொண்ட உலகியல் சார் நகரம் (Secular City) புதிய நகரம் (New City) என்ற பெயரில் உருவானது. புவிவெளி (Territorial Space), புனிதம், புனிதம் அல்லாதது எனப் பிரிக்கப்பட்டது. இப் பின்னணியில் எல்லாள மன்னன் நினைவுச் சின்னம் அனுராதபுரத்திலிருந்து காணாமல் போனதில் வியப்பேதும் இல்லை. பல்சமய, பல்பண்பாட்டு வெளியாக இருந்துவந்த பழைய அனுராதபுரம், ஒற்றைச் சமய வெளியாகவும் (Mono Religious Space) ஒற்றைப் பண்பாட்டு வெளியாகவும் மாறியது.
ஜேம்ஸ். ரி. இரத்தினம் (1905 – 1988)
யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய் கிராமத்தினைச் சேர்ந்த ஜே. எம். எஸ். இரத்தினத்தின் தந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர். தாயார் (டுவைட்) மானிப்பாயைச் சேர்ந்தவர். ஆரம்பக்கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கற்ற இரத்தினம் பின்னர், கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, புனித தோமையார் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். 1924 இல் இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் சேர்ந்த இவர் அங்கு சில ஆண்டுகள் பயின்று பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இடதுசாரி அரசியல் ஆர்வத்தினால் படிப்பை இடையில் நிறுத்திய இவர் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றினார். வாழ்நாள் முழுவதையும் கல்வி, ஆராய்ச்சி, எழுத்து ஆகிய பணிகளில் செலவிட்டார். வரலாறு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். பத்திரிகைகளில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிவந்தார்.
ஆதாரம்
The Tomb of Elara at Anuradhapura Dr. James. T. Ratnam, Jaffna Archaeological Society (1981).
தொடரும்.