மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளமும் ஆரியச்சக்கரவர்த்திகளும்
Arts
13 நிமிட வாசிப்பு

மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளமும் ஆரியச்சக்கரவர்த்திகளும்

January 5, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வெளிவந்த தமிழ் ஊடகங்கள் தூரநோக்குடன் தமிழ் மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களைக் கண்டறிந்து அவற்றைப் பாதுகாக்க மக்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை முன்னெடுத்து வந்திருந்திருப்பதைக் காணமுடிகின்றது. அவ்வேண்டுதலில் ஒன்றை நிறைவு செய்திருக்கும் அரிய வரலாற்றுப் பணியாகவே இன்று யாழ்ப்பாண மாநகர சபையால் முன்னெடுத்துள்ள ஆரியகுளம் மீள்புனரமைப்புப் பணியைப் பார்க்கின்றோம். இது யாழ்ப்பாண நகரை அழகுபடுத்தும் இயற்கை சார்ந்த மரபுரிமைச் சின்னம் என்பதற்கு அப்பால் அது யாழ்ப்பாண அரசுகால வரலாற்றையும், பண்பாட்டையும் நினைவுபடுத்திக்காட்டும் மரபுரிமைச் சின்னம் என அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. ஆரியகுளத்தை யாழ்ப்பாண அரசுடனும், அதன் ஆட்சியாளருடனும் தொடர்புபடுத்திக் கூறும் போது ஆரியகுளம் என்ற பெயர் எவ்வாறு வந்தது, எப்போது வந்தது, எந்த மன்னன் காலத்திற்கு உரியது, இக்குளம் யாருக்குச் சொந்தமானது? என்பன தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களும், பல கேள்விகளும் மக்களிடமும், வரலாற்று ஆர்வலர்களிடமும் நீணடகாலமாக இருந்து வருவதை நாம் அறிவோம். அதுவும் இக்குளத்தின் மீளுருவாக்கப் பணி தொடங்கிய காலத்தில் இருந்து இவ்வாறான கேள்விகள் ஊடகங்கள் பலவற்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு வந்ததையும் காணமுடிகின்றது. இந்த வரலாற்று மயக்கத்திற்கு ஆரியகுளம் என்பதன் முன்னொட்டுச் சொல்லாக வரும் “ஆரிய(ர்)” என்ற சொல் பயன்பாட்டிலிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் அண்மையில் பொருத்தமான பதிலையும், விளக்கத்தையும் வழங்கியிருந்ததுடன் இதையிட்டு வரலாற்று ஆசிரியர்கள் மௌனமாக இருக்கிறார்கள் என்ற தனது நியாயமான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் கருத்திற்கு மேலும் நம்பகரமான சான்றுகளையும், விளங்கங்களையும் எடுத்துக் கூறுவதே இச்சிறுகட்டுரையின் நோக்கமாகும்.

ஆரியச்சக்கரவர்த்திகளும் ஆரியகுளமும்

தமிழகத்தில் சோழரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சியடைந்த இரண்டாம் பாண்டியப் பேரரசு அதன் சமகாலத்தில் தென்னிலங்கைமீதும், வடஇலங்கைமீதும் ஆறு தடவைகளுக்கு மேல் படையெடுத்தது பற்றி அவர்கள் வெளியிட்ட சாசனங்கள் கூறுகின்றன. இப்படையெடுப்புக்களின் தளபதிகளாக இருந்தவர்களே ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தனர். இப்பட்டங்களை படைத்தளபதிகள் அல்லது சேனாதிபதிகள் மட்டுமன்றி அரச நிர்வாகத்தில் உயர்பதவிகளில் இருந்தவர்களும் பெற்றிருந்தனர் என்பதனைப் பாண்டியர்காலச் சாசனங்கள் உறுதிசெய்கின்றன. அவற்றுள் இலங்கைமீது படையெடுத்த ஆரியச்சக்கரவர்த்திகள் யார், எந்த நாட்டவர், எந்ந அரச வம்சத்திற்கு உரியவர்கள், எந்த மொழிக்குரியவர்கள்? என்பன தொடர்பான கேள்விகளுக்கு விடைகூறுவதாகவே சிங்கள வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான சூளவம்சத்தில் வரும் பின்வரும் கூற்றுக்கள் காணப்படுகின்றன:

“முன்பு பஞ்சம் ஒன்று நிலவியகாலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சிபுரிந்த சகோதரர்களான ஐந்து மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ்ச் சேனாதிபதியின் தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார்கள். அவன் ஆரியனல்லானாயினும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரதானியாக விளங்கினான். இராச்சியத்தின் எல்லாப் பக்கங்களையும் அழித்துவிட்டு அரண்கள் பொருந்திய சுபபட்டணத்தினுள் (யப்பகூவாவிற்குள்) அவன் புகுந்தான். அங்கிருந்த தந்ததாதுவையும், விலைமதிக்கமுடியாத செல்வங்களையும் கவர்ந்து கொண்டு ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாட்டுக்குச் சென்றான். அங்கு பாண்டிய மன்னர் குலமெனும் தாமரையை மலர்விக்கின்ற கதிரவனையொத்த குலசேகர மன்னனுக்கு அவற்றைக் கொடுத்தான்”. 

மேற்கூறப்பட்ட கூற்றிலிருந்து ஆரியச்சக்கரவர்த்திகள் ஆரியர்கள் அல்லாத தமிழர் என்று கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. தமிழ்ப் பேரகராதியில் ஆரியன் என்ற சொல்லுக்கு தலைவன், பிராமணன் என்ற பொருள்களும் உள்ளன. 

aariya kuazhan before

கி.பி.13 ஆம் நூற்றாண்டிள் நடுப்பகுதியில் வடஇலங்கைமீது மேற்கொள்ளப்பட்ட இன்னொரு படையெடுப்பு பற்றிய விரிவான செய்திகளை தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியாமலையிலுள்ள 1262 ஆண்டுக்குரிய பாண்டியரது கல்வெட்டு கூறுகின்றது. அக்கல்வெட்டு, தென்னிலங்கையிலும், வடஇலங்கையிலும் இரு அரசுகள் இருந்ததாகவும், சிங்கள அமைச்சன் ஒருவனது வேண்டுதலின் பேரில் பாண்டியர் வடஇலங்கைமீது படையெடுத்து ஆட்சியில் இருந்த சாவகனை அடிபணிந்து திறைசெலுத்துமாறு கோரியபோது அதை அவன் ஏற்க மறுத்ததால் அவனைக் கொன்று அவனின் மைந்தனை ஆட்சியில் அமர்த்திவிட்டு இந்த வெற்றியின் நினைவாக தமது அரச இலட்சனையான இரட்டைக்கயல் (மீன்கள்) பொறித்த கொடிகளை கோணாமலையிலும், திரிகூடகிரியிலும் (திருகோணமலையில்) ஏற்றிவிட்டுத் திரும்பியதாகக் கூறுகின்றது. ஆயினும் இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் சாகவனின் மைந்தனை ஆட்சியில் அமர்த்திய பாண்டியப்படைகளே அவனை அகற்றிவிட்டு கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகரகக் கொண்ட யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்தனர். இதனால்; இவ்வரசு பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களில் ஆரியச்சக்கரவர்த்திகள் அரசு என்றே அழைக்கப்படுகின்றன. இதனால் யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த தொடக்ககால மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்திகள் என்பதை ஒரு வம்சப் பெயராகக் கொண்டு தமது பெயருடன் ஆரியன் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டனர். இதற்கு உதாரணமாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ள குலசேகர சிங்கையாரியன், விக்கிரம சிங்கையாரியன், வரோதய சிங்கையாரியன், மார்த்தாணட சிங்கையாரியன், குணபூஸண சிங்கையாரியன், செயவீர சிங்கையாரியன், குணவீர சிங்கையாரியன், கனகசூரிய சிங்கையாரியன் முதலான எட்டு மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம். மேலும் ஆரியச்சக்கரவர்த்தி மன்னன் ஒருவன் கம்பளை அரசு மீது படையெடுத்தது பற்றிய தமிழ்க் கல்வெட்டொன்று தென்னிலங்கையில் கொணட்டகம என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலும் படையெடுத்த மன்னனை “பொங்கொலிநீர்ச் சிங்கையாரியன்” என்றே கூறப்பட்டுள்ளது. இது மேலும் யாழ்ப்பாண வைபவமாலையில் சொல்லப்பட்ட செய்தியை உறுதிசெய்வதாக உள்ளது. இவ்வாதாரங்கள் யாழ்ப்பாண அரசுகால மன்னர்களின் பெயர்களுடன் ஆரியன் என்ற சொல்லும் இணைந்துள்ளதைக் காட்டுகின்றது. 

ஆரியச்சக்கரவர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண அரசைக் காலப்போக்கில் சுதேச மன்னர்களும் ஆட்சி செய்தனர். இவ்வரசு போத்துக்கேயரால் வெற்றி கொள்ளப்படும் வரை (1619 இல்) ஏறத்தாழ 350 ஆண்டுகள் சுதந்திர தமிழரசாக ஆட்சியில் இருந்துள்ளது. இவ்வரசின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் சி. பத்மநாதன் இலங்கைத் தமிழர் பண்பாடு தனித்துவமாக வளர்வதற்கு யாழ்ப்பாண அரசு ஒரு முக்கிய காரணம் எனக் கூறியிருப்பதுடன் அவ்வரசு காலத்தில் தமிழ் மொழி, சைவசமயம், இலக்கியம், இசை, நடனம், நாடகம், சோதிடம், வைத்தியம், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம், இராணுவக்கட்டமைப்பு என்பனவும் வளர்சியடைந்திருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் எழுந்த ராஜாவலிய என்ற சிங்கள வரலாற்று இலக்கியம் சமகாலத்தில் ஆட்சியிலிருந்த றைகம, கம்பளை, யாழ்ப்பாண அரசுகள் பற்றிக்குறிப்பிட்டு, அவற்றுள் யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசே படைப்பலத்திலும், பொருளாதார வளத்திலும் மேலோங்கி இருந்ததாகவும் அவ்வரசு மலைநாடு தொட்டு தாழ்நிலப்பகுதிவரை ஒன்பது துறைமுகங்களில் இருந்து திறை பெற்றதாகவும் கூறுகின்றது.

பொதுவாக ஒரு நாட்டில் அல்லது ஒரு வட்டாரத்தில் ஆட்சிபுரிந்த அரச வம்சங்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெயர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களுடனும், அவர்களது வரலாற்றுப் பணிகளுடனும் இணைந்துப் பேசப்படுவதுண்டு. இவ்வாரலாற்று நினைவுகள் பிற்காலத்தில் தொடர்ந்ததற்கும், காலப்போக்கில் மறைந்ததற்கும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.

aariya kuazham after

இவர்கள் இராமேஸ்வரம் சேதுதலத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தால் இவர்கள் சேதுகுலம் எனவும் அழைக்கப்பட்டனர். இச்சேதுகுலத்தையும், சேது தலத்தையும் நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்திகள் தாம் வெளியிட்ட நாணயங்களிலும், கல்வெட்டுக்களிலும், அரச கொடிகளிலும் சேதுவை ஒரு மங்கல மொழியாகப் பயன்படுத்தினர். இச்சொல் இன்றும் யாழ்ப்பாண அரசில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்திகளின் முக்கிய வரலாற்று அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. மேலும் ஆரியச்சக்கரவர்த்திகள் வாழ்ந்த தென்தமிழகத்தில் அதிலும் குறிப்பாக பாண்டியரின் ஆதிக்கம் நிலவிய இடங்களில் ஆரியகுளம், ஆரியநல்லூர், ஆரியச்சக்கரவர்த்தி நல்லூர், ஆரியகவுண்டனனூர், ஆரியக்கவுண்டன் வளவு முதலான பெயர்கள் பரந்த பிரதேசத்திற்குரிய இடப்பெயர்களாக உள்ளன. வரலாற்றுப் பழமைவாய்ந்த இவ்விடப்பெயர்கள் தற்காலத் தமிழகத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் பெயர்களாகவும் இருந்துவருகின்றன. இப்பெயர்கள் ஆரியச்சக்கரவர்த்திகளின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்ததன் காரணமாகத் தோன்றியவை எனக் கூறப்படுகின்றது. அதிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் என்ற அதே பெயர் தென்தமிழகத்தில் ஒரு உள்ளுராட்சி மன்றத்தின் பெயராக இருப்பது யாழ்ப்பாணத்தில் உள்ள ஆரியகுளம் ஆரியச்சக்கரவத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்த தோன்றியதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இற்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் (1913ஆம் ஆண்டு) “ஈழநாடும் தமிழ்ச் சங்கமும்” என்ற நூலில் அமரர் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குணபூஸணசிங்கையாரியனின் அமைச்சன் ஒருவன் ஆற்றிய பணிகள் பற்றி விரிவாகக் கூறும் போது குணபூஸணசிங்கையாரியனின் பெயரில் ஆரியகுளமும், அவனது மனையும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் இம் மன்னன் காலத்திலேயே 63 நாயன்மார்களுக்கு நாயன்மார்க்கட்டில் ஆலயம் அமைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அண்மையில் நாயன்மார்க்கட்டு ஆலயத்திருக்குளம் மீளுருவாக்கம் செய்யப்பட்டபோது ஒரு அரிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு அது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு காலத்தால் சற்றுப் பிற்பட்டதாக இருப்பினும் அக்கல்வெட்டில் இவ்வாலயத் திருக்குளத்தை அமைத்தவன் சிங்கையாரியன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதை மறுதலித்துக் கூறுவதற்கு வேறு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை.  

மரபுரிமைச் சின்னம் என்பது அது சார்ந்த இனத்தின், பண்பாட்டின் அடையாளம், ஆணிவேர் எனப் பார்க்கப்படுகின்றது. விலைமதிக்க முடியாத இம்மரபுரிமைச் சொத்துக்களைச் சிறிதும் பிசகாமல் எதிர்காலச் சந்ததியிடம் கையளிக்க வேண்டிய நம்பிக்கை நாற்றுக்களாவும் இவை காணப்படுகின்றன. தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமது மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் ஒருமித்த கருத்துக்கள் இருப்பதையே காணமுடிகின்றது. இது அவர்களுடன் எனக்குள்ள நீண்டகாலத் தொடர்பின் வெளிப்பாடு. இன்று நிறைவு பெற்றுள்ள ஆரியகுள மீளுருவாக்கம் என்பது எமது மரபுரிமைச் சின்னங்களை நாமே பாதுகாக்கமுடியும் என்பதன் ஒரு அடையாளமாகவும், தொடக்கப்புள்ளியாகவும் பார்க்கப்படலாம். எதிர்காலத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆரியகுள மீளுருவாக்கப்பணி ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதே அனைத்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தொடரும். 


9022 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)