யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் - பகுதி 2
Arts
14 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 2

January 9, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் 1598 ஆம் ஆண்டு யான் கிறிஸ்டியான்ஸ் தூர்சி வரைந்த நிலப்படத்தில் உள்ள சில தகவல்கள் குறித்தும், அவை வரலாற்று நிகழ்வுகளோடு கொண்டுள்ள தொடர்புகள் பற்றியும் விளக்கினோம். குறிப்பாக, மேற்படி நிலப்படம் காட்டும் நிர்வாகப் பிரிவு எல்லைகள், வீதிகள், கோட்டைகள் என்பவற்றைப்பற்றிய ஒரு விளக்கமாக அக்கட்டுரை அமைந்தது. அதே நிலப்படத்திலுள்ள ஆறுகள், ஊர்கள், மடங்கள் முதலிய பல்வேறு அம்சங்கள் தொடர்பிலான தகவல்களை இந்தக் கட்டுரையில் ஆராயலாம். 

ஊர்கள்

இந்நிலப்படத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட ஊர்களைப் பெயர்குறித்துக் காட்டியுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாடு ஒல்லாந்தர் காலத்தில் 26 கோயிற்பற்றுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோயிற்பற்றிலும் ஒரு தேவாலயம் அமைந்திருந்தது. இத்தேவாலயங்கள் வண்ணார்பண்ணை, சுண்டிக்குழி, நல்லூர், உடுவில், மானிப்பாய், சங்கானை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, மல்லாகம், தெல்லிப்பழை, மயிலிட்டி, அச்சுவேலி, புத்தூர், கோப்பாய், பருத்தித்துறை, உடுப்பிடி, கட்டைவேலி, நாவற்குழி, சாவகச்சேரி, கச்சாய், வரணி, எழுதுமட்டுவாள், முகமாலை, புலோப்பழை, தம்பமை, முள்ளிப்பற்று ஆகிய ஊர்களில் அமைந்திருந்தன.1 இந்த 26 ஊர்களும் நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இவை தவிர அராலி, காங்கேசந்துறை, நந்தாவில், கப்பூது முதலிய சில ஊர்களையும் நிலப்படத்தில் குறித்துள்ளனர். இலங்கையில் பழைய நிலப்படங்கள் சிலவற்றில் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள பல ஊர்கள் முக்கியத்துவம் கொடுத்துக் குறிக்கப்பட்டிருப்பது பற்றி இத்தொடரின் முன்னைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலப்படத்திலும் கற்கோவளம், குடத்தனை, அம்பன், நாகர்கோயில், செம்பியன்பற்று, மருதங்கேணி முதலிய கிழக்குக் கரையோர ஊர்களைக் குறித்துக் காட்டியுள்ளனர். 

தீவுப்பகுதியில் மக்கள் வாழும் தீவுகளின் பெயர்களும் நிலப்படத்தில் உள்ளன. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், அதன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தீவுகளுக்குத் தங்கள் நாட்டிலுள்ள நகரங்களின் பெயர்களை இட்டது பற்றி முந்திய கட்டுரையொன்றில் குறிப்பிட்டோம். அவர்களின் பழைய நிலப்படங்களில் அப்புதிய பெயர்களைத் தனியாகவோ உள்ளூர்ப் பெயர்களுடன் சேர்த்தோ பயன்படுத்தியதையும் பார்த்தோம். அந்த நடைமுறைக்கு மாறாக, தமிழில் புழங்கிய வடிவத்துக்கு நெருக்கமாக, தீவுகளின் உள்ளூர்ப் பெயர்கள் மட்டுமே இந்நிலப்படத்தில் காணப்படுகின்றன. தீவுகளின் தமிழ்ப் பெயர்களும் நிலப்படத்தில் அவை எழுதப்பட்டுள்ள விதமும் பின்வருமாறு: நெடுந்தீவு (Nerrintive), புங்குடுதீவு (Pongeretive), நயினாதீவு (Naÿnative) அனலைதீவு (Anelletive), எழுவைதீவு (Velloewantive), காரைதீவு (Karretive), வேலணை (Welene), ஊர்காவற்றுறை (Kais), அல்லைப்பிட்டி (Alanpitty), மண்டைதீவு (Mandative). இங்கே ஊர்காவற்றுறையின் பெயராகக் குறித்துள்ள “கைஸ்” (Kais), போர்த்துக்கேய மொழியில் “துறை” என்னும் பொருள் கொண்ட சொல்லாகும். இதுவே மருவி இன்று ஆங்கிலத்தில் “கைட்ஸ்” (Kayts) என வழங்குகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், தீவுப்பகுதியிலும் குறிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ எல்லாப் பெயர்களுமே இன்றும் வழக்கில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

வன்னிப் பகுதியில் ஏராளமான ஊர்களின் பெயர்களைக் காணமுடிகிறது. (படம்-1) கரையோரங்களில் அமைந்த ஊர்களையும் முக்கியமான வீதிகளை அண்டியுள்ள ஊர்களையுமே நிலப்படம் காட்டுகிறது. உட்புறங்களிலும் குடியிருப்புகள் இருந்திருக்கக்கூடும். அவற்றைப்பற்றிய தகவல்கள் நிலப்படத்தில் இல்லை. ஒல்லாந்த மொழிக்குரிய எழுத்துகளில் அம்மொழியின் ஒலிப்புக்கு ஏற்ப எழுதியுள்ள பெயர்களுள் பெரும்பாலானவற்றை இலகுவாக வாசித்து அடையாளம் காண முடிகின்றது. இவற்றிலிருந்து இன்று இப்பகுதியிலுள்ள பல ஊர்களின் பெயர்கள் ஒல்லாந்தர் காலத்திலும் வழக்கிலிருந்ததை அறியமுடிகிறது. கல்முனை, கௌதாரிமுனை, பூனகரி, ஆலங்கேணி, வேராவில், பல்லவராயன்கட்டு, இலுப்பைக்கடவை, கோயில்குளம், அரிப்பு, அகத்திமுறிப்பு, மறிச்சுக்கட்டி, முறிகண்டி, மல்லாவி, ஐயம்பெருமாள், நெடுங்கேணி, புளியங்குளம், மருதமடு, பூவரசங்குளம், ஒதியமலை, தண்ணிமுறிப்பு, புதுக்குடியிருப்பு, கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு முதலிய பெயர்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். இன்று பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள குருந்து மலை, குருந்தூர் ஆகிய பெயர்களும் நல்ல தமிழ்ப் பெயர்களாகவே நிலப்படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

jaffna map 1

அதேவேளை, நிலப்படத்திலுள்ள பல பெயர்கள், தற்காலத்தில் பரவலாக அறியப்பட்டவையாக இல்லை. பல பெயர்கள் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஊர்களின் பட்டியலில் இல்லை.2 எடுத்துக்காட்டாக, இந்த நிலப்படத்தில் பூனகரிக்கு அண்மையாக தியாகம் (Tiagem) என்னும் ஊரைக் குறித்துள்ளனர். வேறு சில ஒல்லாந்தர்கால நிலப்படங்களிலும் இப்பெயர் ஊர்ப்பெயராக மட்டுமன்றித் துணைப் பிரிவுப் பெயராகவும் உள்ளது. இது தற்காலத்தில் பெரு வழக்கில் இல்லை. 1690 களில் குறிப்பிடத்தக்கனவாக இருந்த இவ்விடங்கள் காலப்போக்கில் தமது முக்கியத்துவத்தை இழந்திருக்கலாம் அல்லது வேறு பெயர்கள் பெற்றிருக்கலாம். ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியிலும் பிரித்தானியர் காலத்திலும் இப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சிகளினால் புதிய வளர்ச்சி மையங்கள் உருவாகி முக்கியத்துவம் பெற்றதால் அவற்றுக்கு அருகில் இருந்த பழைய குடியிருப்புகள் புதிய ஊர்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட புதிய வீதிகள், தொடர்வண்டிப் பாதை, குளங்கள் புனரமைப்பு போன்றவற்றால், வன்னிப்பகுதியின் குடியிருப்புகளின் பரம்பலில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கும்.

தற்காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் சில ஊர்களும் இந்த நிலப்படத்தில் இல்லை. கிளிநொச்சி, பரந்தன், வவுனியா என்பன இவ்வாறான ஊர்களுட் சில. இவை பிரித்தானியர் காலத்திலும் அதற்குப் பின்னரும் குடியேற்றத் திட்டங்களினூடாகவும் பிற காரணங்களுக்காகவும் முக்கியத்துவம் பெற்றவை அல்லது புதிதாக உருவானவை.

வன்னியின் ஏராளமான ஊர்களையும் அவற்றின் பெயர்களையும் குறித்துக் காட்டும் மிகப் பழைய நிலப்படங்களில் இதுவும் ஒன்று. இதனால், இந்நிலப்படத்தில் காணப்படும் ஊர்கள் தொடர்பான தகவல்கள் வன்னிப் பகுதி தொடர்பான பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியவை. எடுத்துக்காட்டாகக் குடியிருப்புகளின் பரம்பல் தொடர்பான வரலாறு, குறிப்பான ஊர்களின் வரலாறு, இடப்பெயர் ஆய்வு போன்ற இன்னோரன்ன ஆய்வுத் தேவைகளுக்கு இவை உதவும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சில இடப்பெயர்களின் மொழி மூலம் குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் யாழ்ப்பாணத்து இடப்பெயர்கள் பல சிங்கள மொழி மூலங்களைக் கொண்டவை என்கின்றனர். வேறு சிலர் இவை தமிழ் மொழி மூலங்களைக் கொண்டவைதான் என வாதிடுகின்றனர். ஆனால், வன்னிப் பகுதியின் இடப்பெயர்கள் பெரும்பாலும் ஐயத்துக்கு இடமின்றித் தமிழே என்பதை நிலப்படத்திலுள்ள பெயர்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இங்குள்ள இடங்களின் பெயர்களில் பின்னொட்டுகளாக உள்ள பொதுக் கூறுகள், குளம், கேணி, மடு, முனை, தொடுவாய், கழி, குழி, தாழ்வு, ஊர், குடியிருப்பு, கோட்டை, வயல், புலவு, வெளி, திடல், கட்டு, மலை, கண்டல், கடவை முதலிய தூய தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்களிலும் காணப்படுகின்றன.3 பெயர்களின் முன்னொட்டுகளாக வருகின்ற சிறப்புக் கூறுகளும் தாவரங்கள், விலங்குகள், நிகழ்வுகள், ஆட்கள், இயற்கை அம்சங்கள், செயற்கை அமைப்புகள், அளவுகள் முதலியவற்றைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்களாகவே பெரும்பாலும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. இது வன்னிப் பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களின் மிக நீண்டகாலப் பங்களிப்பைக் காட்டுகிறது எனலாம். 

இன்றைய வட மாகாணத்தின் தெற்கெல்லைக்கு அப்பால் ஏறத்தாழ அனுராதபுரம் வரை குறித்துள்ள சில இடப்பெயர்களிலும் வயல், குளம், மடு, புளி, பூவரசு போன்ற தமிழ்க் கூறுகள் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பத்தொன்பது ஆண்டுகள் கண்டியரசனால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து தப்பி 1670 களின் இறுதியில் அனுராதபுரத்துக்கு வந்த ரொபேர்ட் நொக்ஸ் என்னும் பிரித்தானியர், அவரெழுதிய நூலில், அனுராதபுரம் பற்றிய தகவல் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதன்படி அனுராதபுரம் காடுகளால் சூழப்பட்ட ஒரு பரந்த வெளியாக இருந்தது. நடுவில் ஒரு பெரிய ஏரியும் ஆங்காங்கே பல சிறிய நகரங்களும் இருந்துள்ளன. அங்கே சிங்களவரிலிருந்து வேறுபட்ட மலபார் (தமிழ்) மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் கண்டி இராச்சியத்தின் குடிமக்களாயினும் சிங்கள மொழி அறியாதவர்கள். அவர்களுடைய ஆளுநரும் தமிழே பேசினார்.4 இந்தக் கூற்றுக்கும், அப்பகுதியில் ஊர்ப்பெயர்கள் பல தமிழாக இருப்பதற்கும் உள்ள தொடர்புகளை ஆராயவேண்டும்.

தேவாலயங்கள்

ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 26 தேவாலயங்கள் இருந்ததுபற்றியும் அவை இருந்த ஊர்களைக் குறித்துக்காட்டியிருப்பதைப் பற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். இவற்றுள் முதன்மைத் தேவாலயம் தெல்லிப்பளையில் அமைந்திருந்தது. (படம்-2) யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிய தீவுப்பகுதியிலும் ஊர்காவற்றுறை, வேலணை, அல்லைப்பிட்டி, காரைதீவு (காரைநகர்), புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் மொத்தம் எட்டுத் தேவாலயங்கள் இருந்தன.5 இதைப்போலவே மன்னார்த் தீவிலும் ஏழு தேவாலயங்கள் இருந்தன. இவை, நகரம், தோட்டவெளி, எருக்கலம்பிட்டி, கார்செல், மீனவர் குடியிருப்பு (புனித பீட்டர் தேவாலயம்), பேசாலை, தலைமன்னார் ஆகிய இடங்களில் இருந்தன. மன்னார்த்தீவை அண்டிய கரையோரப் பகுதியில் மேலும் ஏழு தேவாலயங்களையும் சேர்த்து அப்பகுதியில் 14 தேவாலயங்கள் இருந்துள்ளன.6 ஆனால், பெருங்கழிப்பற்றில் புதுக்காடு என்னும் இடத்தில் இருந்த தேவாலயத்தை மட்டுமே நிலப்படத்தில் பெயர்குறித்துக் காட்டியுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதி, மன்னார்த் தீவு ஆகிய பகுதிகளில் தேவாலயங்கள் என்று சொற்களால் குறிக்காவிட்டாலும் அவை காணப்படும் ஊர்களின் அருகில் வரைந்துள்ள கட்டடக் குறியீடுகள் தேவாலயங்களைக் குறிப்பதாக இருக்கக்கூடும்.

thellipalai church

மடங்கள்

இந்நிலப்படத்தில் “மடம்” என்ற ஈறுகளுடன் கூடிய சில பெயர்களைக் காண முடிகின்றது. இவை உண்மையில் மடங்களைக் குறிக்கின்றனவா அல்லது மடங்களால் பெயர் பெற்ற ஊர்களைக் குறிக்கின்றனவா என்பது தெளிவில்லை. எவ்வாறாயினும், இவ்விடத்தில் மடங்கள் இருந்ததை இப்பெயர்கள் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை. இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலில் மடங்கள் முக்கிய பங்கு வகித்ததைக் காட்டும் மிகப் பழைய சான்றுகளில் ஒன்றாக இந்நிலப்படம் விளங்குகிறது. யாழ்ப்பாணப் பண்பாட்டில் மடங்கள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்பட்டன. கோயில் மடங்கள், சுடலை மடங்கள், சந்தை மடங்கள், அன்னதான மடங்கள், வீதியோர மடங்கள் (போக்குவரத்துப் பயன்பாடு) என அக்கால மடங்களை வகைபிரித்துப் பார்க்கமுடியும். இந்த நிலப்படத்தில் குறித்துள்ள மடங்கள் பெரும்பாலும் போக்குவரத்து வசதிக்கான மடங்களாகவே தோன்றுகின்றன.

இம்மடங்களுட் சில கடல்நீரேரிக் கரையோரமாகக் கடவைகளை அண்டிக் காணப்படுகின்றன. இவற்றை இப்பகுதிகளூடாகப் பயணம் செய்வோரின் வசதிக்காக அமைத்திருக்கக்கூடும். சுண்டிக்குளத்தில் மடம், குளவியாதன்குழி மடம், கார்த்தியன் மடம் ஆகியவை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் வன்னிக்கும் இடையிலான கடல்நீரேரிகளை அண்டி அமைந்துள்ளன. பள்ளிக்குடா மடம் பூனகரிக்கு அண்மையில் மேற்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. கிழக்குக் கரையோரமாக அமைந்த பைல் கடவைக் கோட்டைக்கு அண்மையிலும் கடல்நீரேரிக் கரையோரமாக வல்லியன் மடம் என்ற மடம் ஒன்று உள்ளது. இவ்வாறான மடங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் காணப்பட்டதைப் பற்றி இத்தொடரின் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இவ்வாறான மடங்களுட் சிலவற்றை மீனவர்களின் தேவைகளுக்காகவும் அமைத்திருக்கக்கூடும். 

முக்கிய வீதியோரமாக அமைந்திருந்த மடங்கள் சிலவற்றையும் நிலப்படத்தில் காணமுடிகிறது. பூனகரிக்கு அண்மையிலுள்ள நல்லூரிலிருந்து வலைவச்சபுலோவுக்குச் செல்லும் வீதியில் சிரத்தென் மடம் என்ற பெயரில் ஒரு மடம் உள்ளது. குளவியாதன்குழி மடம், வலைவச்சபுலோ என்பவற்றை இணைக்கும் வீதியில் கொட்டடி மடம், புதுமடம் என இரு மடங்கள் உள்ளன. குளவியாதன்குழி மடத்திலிருந்து ஒட்டன்கட்டுக்குச் செல்லும் வீதியிலும் கொல்லன் அம்பலம் என்ற பெயரில் ஒரு மடம் உள்ளது. நந்திக்கழியை (நந்திக்கடல்) அண்டி கேப்பாய்க் கோட்டை மடம், குமார மடம் ஆகியவை காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் அல்லது அதற்கு முன்னர் இம்மடங்களை அமைத்தது யார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. இவற்றுட் சிலவற்றை அந்தந்தக் காலத்து ஆட்சியாளர்கள் அமைத்திருக்கலாம். நிலப்படத்திலுள்ள மடப் பெயர்களுட் சில ஆட்களின் பெயர்களைச் சிறப்புக்கூறாகக் கொண்டிருப்பதால், அவற்றைத் தனிப்பட்டவர்கள் அமைத்திருக்கக்கூடும். இம்மடங்களின் அமைவிடங்களைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் வேறுபடக்கூடும். இவற்றைப்பற்றி ஆழமான ஆய்வுகளுக்கு இடமுண்டு.

ஆறுகள்

இந்நிலப்படத்தில் பல ஆறுகளின் பெயர்களைக் காணமுடிகின்றது. (படம்-3) பெரும்பாலும் ஆறுகள் கடலில் அல்லது நீரேரிகளில் கலக்கும் இடங்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. உட்பகுதிகளில் சில இடங்களில் ஆறுகள் வீதிகளைக் குறுக்கிடும் இடங்கள் குறிக்கப்பட்டு, அவ்விடங்களில் ஆறுகளின் பெயர்களும் தரப்பட்டுள்ளன.

ancient jaffna rivers name

நிலப்படத்தில் மோதரகம் ஆறு, கல் ஆறு, முசலி ஆறு, பெருங்கழி ஆறு, மட்டி ஆறு, சந்தன் ஆறு, பாலி ஆறு, குமிழங்குழி ஆறு, மண்டாட ஆறு என்பன இலங்கையின் மேற்குக் கரையூடாகக் கடலில் கலக்கின்றன. வட்டக்கச்சி ஆறு, தேவர் ஆறு, பள்ளன் ஆறு என்பன யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் தலைநிலத்துக்கும் இடையிலுள்ள கடல்நீரேரியுட் கலக்கின்றன. குருவிச்சை ஆறு, நாயாறு, பட்டியன்வெளி ஆறு, சூரிய ஆறு, பணிக்கனூர் ஆறு, கட்டுக்குளத்தில் ஆறு, ஆனைவிழுந்தான் ஆறு ஆகிய ஆறுகள் கிழக்குக் கரையை அண்டியுள்ள குடாக்கடல்களினூடாக வங்காள விரிகுடாக்கடலில் கலக்கின்றன. குளவியாதன்குழி மடத்திலிருந்து ஒட்டன்கட்டு என்னும் இடத்துக்குச் செல்லும் வீதியைக் கொல்லன் ஆறு, ஆனைவிழுந்தான் ஆறு, சங்கலவன் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் குறுக்கிடுவதை நிலப்படத்தில் காணமுடிகின்றது. இன்னும் பல ஆறுகளை வீதிகள் கடக்கும் இடங்கள் குறிக்கப்பட்டுள்ளபோதும் அவ்வாறுகளின் பெயர்கள் நிலப்படத்தில் இல்லை.  

நிலப்படத்திலுள்ள ஆறுகளுள் மோதரகம் ஆறு, கல்லாறு, பாலி ஆறு, நாயாறு (கிழக்குக்கரை) ஆகியவை இன்றும் அதே பெயர்களிலேயே வழங்குகின்றன. முசலி ஆறு, பெருங்கழி ஆறு, குமிழங்குழி ஆறு, மண்டாட ஆறு, வட்டக்கச்சி ஆறு, குருவிச்சை ஆறு, ஆகிய ஆறுகளை முறையே இன்றைய நாயாறு (மேற்குக்கரை), பறங்கியாறு, பல்லவராயன்கட்டு ஆறு, மண்டக்கல் ஆறு, கனகராயன் ஆறு, பேராறு ஆகியவற்றுடன் அடையாளங்காண முடியும். 

கம்பனியின் விதைப்பு வயல்கள்

ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி நேரடியாகவே நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டது தொடர்பான குறிப்புக்களை அக்கால ஆவணங்கள் சிலவற்றில் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதியாக இருந்த அந்தனி பவ்லியன், எழுதிய வழிகாட்டற் குறிப்பில் கம்பனியின் விதைப்பு வயல்களிலிருந்து கிடைக்கும் வருமானங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.7 இவ்வயல்கள் வன்னி, பூநகரி, இலுப்பைக்கடவை, வேரவில் ஆகிய பகுதிகளிலும் மன்னாருக்குச் செல்லும் பாதையை அண்டியும் குளக்கரைகளிலும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலப்படத்தில் சில இடங்களில் Zaaÿ Velt (விதைப்பு வயல்) எனக் குறித்துக் காட்டப்பட்டுள்ளவை இவ்வாறான வயல்களாக இருக்கக்கூடும். பிற இடங்களில் விதைப்பு வயல் என்று பொதுவாகக் குறித்துள்ளபோதும் ஒரு இடத்தில் மட்டும் அது இருக்கும் இடத்துடன் சேர்த்து மன்னாகண்டல் விதைப்பு வயல் (Zaaÿ Velt van Manna Candel) எனக் குறித்துள்ளனர். எனவே இது மன்னாகண்டல் என்னும் இடத்தில் இருந்தது தெளிவு.

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 318-336.
  2. Department of Census and Statistics, Alphabetical and Numerical Lists of the Villages in the Northern Province (Colombo: Government Printer, 1926)
  3. கு. பகவதி, தமிழகம் – இலங்கை – ஊர்ப்பெயர்கள் – ஓர் ஒப்பாய்வு (சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1991), 102-104.
  4. Robert Knox, An Historical Relation of the Island Ceylon in the East-Indies (London: 1681), 256.
  5. Baldaeus, “A True and Exact Description of Ceylon,” 336-340.
  6. Baldaeus, “A True and Exact Description of Ceylon,” 287, 294.
  7. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 108, 109.

தொடரும். 


7891 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)