இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு - பகுதி 1
Arts
10 நிமிட வாசிப்பு

இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 1

January 19, 2024 | Ezhuna
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன.

மலையக தமிழரின் வருகை தொடர்பான கால முரண்கள் 

தெற்காசியாவின் மிக முக்கியமான தேசிய இனங்களில் ஒன்றாக விளங்கும் ‘மலையக சமூகம்’ இருநூறு வருட வரலாற்றைக் கொண்ட ஒரு இனமாகும். காலனித்துவ பொருளாதார முறைமையின் காரணமாக சமூக அசைவுக்குட்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக மலையக சமூகத்தை நாம் வரையறை செய்யலாம். இன்று இருநூறு வருட வரலாற்றை தொடும் மலையகத் தமிழ்ச் சமூகமானது இன்னும் தமக்கென சரியானதொரு இலக்கிய வரலாற்று எழுதியலை உருவாக்கிக்கொள்ள முடியாத நிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

upcountry community srilanka

மலையக மக்களது வரலாற்றை எழுதவிளைந்தவர்கள் அவர்களது வருகைக்காலத்தை பல்வேறு விதமாக வரையறைச் செய்துள்ளனர். மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய அம்பலவானர் சிவராஜாவின் கட்டுரையில் இவ்விடயம் பற்றி அவர் கலந்துரையாடுகிறார். அக்கட்டுரையில் எஸ். நடேசன் அவர்கள் 1838ம் ஆண்டென்றும், பஸ்தியாம்பிள்ளை 1824 – 1931ம் ஆண்டுக்குமிடையில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் வருகை தந்ததாகவும் எடுத்துக்காட்டுகிறார்கள். (1966-77) கோப்பிகால வரலாற்றை எழுதும் இரா. சடகோபன் அவர்கள் தனது ‘கண்டிச்சீமையிலே’ என்ற நூலில் கோப்பிப் பயிர்ச்செய்கை தொடங்கிய 1823 ஆண்டை மலையகத் தொழிலாளர்களது வருகையின் ஆரம்பகாலம் எனத் துணிகிறார் (2014). இவ்வாறு துணியும்போது, ஜோர்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் 1823ம் ஆண்டு கம்பளை சிங்கப்பிட்டிய என்ற இடத்தில் முதலாவது கோப்பித்தோட்டத்தை உருவாக்கும்போதே உத்தியோகபூர்வமாக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதாகவும், அக்காலப்பகுதியே மலையக தமிழர் வரலாற்றின் தொடக்க காலம் என்றும் பெரும்பாலான ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 1823ம் ஆண்டை வரலாற்றின் தொடக்க காலம் என்று நாம் கணித்தால் அதற்கு முற்பட்ட  டச்சுக் காலத்திலும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக நோர்த் (1798-1805) 30,000 பவுண்ட் செலவழித்து தொழிலாளர்களைக் கொண்டுவந்ததாகவும் 1818ம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆளுநர் ரொபட் பிறவுண்ட்ரிக் 5000 தென்னிந்திய தொழிலாளர்களை வரவழைத்ததாகவும் எட்வட் பார்ன்ஸ் காலத்தில் (1824-1931) 150 தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டதாகவும், தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் புகையிரத பாதைகள் அமைப்பதற்காக வரவழைக்கப்பட்டதாகவும் ஆங்கிலேய துரைமார்களின் குறிப்புகளில் கிடைப்பதாக சாரல்நாடன் அவர்கள் எழுதுகிறார் (2011:09).

ஐரோப்பியர் காலத்திற்கு முன்பே தமிழகத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் இலங்கையில் கறுவாப்பட்டை உரித்தல், அதனை பாடம் செய்தல் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்ததாகவும் இவர்கள் ‘சாலியர்’ என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் கரையோரச் சிங்களவர்களுடன் கலந்துவிட்டதாகவும் குமாரி ஜெயவர்த்தனா குறிப்பிடுகிறார் (2009:04).

தென்னிந்தியாவிலிருந்து வெவ்வேறு தொழில்களுக்காக தொழிலாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் அழைத்துவரப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றிய விரிவான குறிப்புகள் கிடைக்காத நிலையும் பெருந்தோட்டத்துறைக்குள் அவர்கள் நிலைப்படுத்தப்படாத தன்மையும் சிலர் குறிப்பிட்ட காலப்பகுதியில் வந்து மீண்டும் சென்றதாலும் மலையக சமூக வரலாற்றில் அவர்களை இணைத்துப்பார்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இரண்டாவதாக மலையகத்தவர்கள் பற்றிய ஆங்கிலத் துரைமார்கள் எழுதிய குறிப்புகளை விரிவாக ஆராயாத நிலைமை தற்போதைய எமது ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆகவே அவற்றை மீள்வாசிப்புச் செய்யும்போது மலையகத் தமிழர்களின் வருகையின் ஆரம்பகாலம் தொடர்பான காலமுரண்பாடுகளைப் பார்க்கலாம். தற்போதைய நிலையில் கோப்பிப் பயிர்ச்செய்கையின்போது அவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலைப்படுத்தப்பட்ட 1823ம் ஆண்டு காலப்பகுதியினையே மலையகத் தமிழர்களது வரலாற்றின் தொடக்க காலமாக கொள்ளவேண்டியுள்ளது.

கோப்பிக் காலச் சமூகமும் இலக்கியமும் 

மலையகத் தமிழ்ச் சமூகத்தின் இருப்பின் ஆரம்ப அடையாளமாகவும், இலங்கையில் அவர்களது தொழிற்துறை மற்றும் வாழ்வியல் பண்பாட்டு நிலைமைகளை உருவாக்கிக்கொள்ளவும், இங்கு வசிக்கின்ற ஏனைய இனக்குழுக்களைப் போல தம்மையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கும் கோப்பிப் பயிர்ச்செய்கை பிரதானமான தொழிற்துறையாக அமைந்தது. இலங்கையில் கோப்பிக்கு முன்னதாக பல சிறு பயிர் செய்கைகளை டச்சுகாரர் மேற்கொண்டிருந்த போதிலும் பாரியளவான நிலம் கோப்பிக் காலப்பகுதியிலேயே பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது (1865-1869). இக்காலத்தில் கோப்பி பயிரிடப்பட்ட அளவு 2,43,000 ஏக்கராகும். பெருந்தோட்டத்துறை (Plantation Sector) என்றதொரு பிரிவு கோப்பிக்கு பின்னரே எமது வாழ்வியலுடன் ஒன்றிணைகிறது. ஜோர்ஜ் போட் கம்பளையில் (1823) கோப்பியை பயிரிட்டது முதல் கண்டி, நுவரெலியா, பலாங்கொடை, பதுளை என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தோட்டங்கள் கோப்பி பயிர்ச்செய்கைக்காக விஸ்தரிக்கப்பட்டதாக பேர்குஸன் தனது நூலில் குறிப்பிடுகிறார் (1859). இவ்விஸ்தரிப்பினையடுத்தே இலங்கைக்கு ஒப்பந்த அடிப்படையிலும் முறையற்ற விதத்திலும் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வருகை தந்தனர். கோப்பி பயிர்ச்செய்கை வளர்ச்சியுடன் பெருந்தோட்டத்துறை வளர்ச்சிபெறத் தொடங்கியதுடன் பெருந்தோட்டத்துறை சார்ந்த கைத்தொழில்களும் பல்வேறு உப தொழிற்துறைகளும் உருவாகத் தொடங்கின.

tea estate ceylon

கோப்பிச் செய்கை ஆரம்பத்தினையடுத்து இந்தியாவிலிருந்து கட்டம் கட்டமாக பெரும்பாலான தொழிலாளர்கள் வருகை தந்தனர். அவர்களது வருகையின்போதே, விபத்தில் பலர் இறந்தமையை ஆங்கிலத் துரைமார்களின் குறிப்புகளின் ஆதாரங்களுடன் இரா. சடகோபன் ஆராய்ந்துள்ளார். கோப்பி காலத்திலேயே தொழிலாளர்களை அடிமைகளாக நடத்த ஆரம்பித்தனர். குறிப்பாக அதிக நேரம் வேலை வாங்கப்பட்டமை, முறையான குடியிருப்பு இல்லாமை, கழிவகற்றல் கட்டமைப்பின்மை போன்ற நிலைமைகளால் கொலரா நோய்ப்பரவல், காடுகளில் பாம்புக்கடி, மிருகங்களுக்கு பலியாதல், விசக்கடிகளுக்கு உள்ளாதல் போன்ற காரணங்களினால் பலர் உயிரிழந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. “1837ம் ஆண்டுக்கு பின்னர் சுமார் பத்து இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களில் 2,50,000 பேர் வரை கல்லறைகளில் சமாதியாகிவிட்டனர்” பேர்கூஸன், (1859, சடகோபன் 2014:71). இவ்வாறு கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பம் முதல் அதன் அழிவு வரை தொடக்ககால மலையகத்தில் பெரும் மனித அவலங்களும், மரணங்களும் மலிந்திருந்தமை பிரதான கணக்கெடுப்பாக அமைகிறது.

கோப்பிக் காலத்து இலக்கியச் சாட்சியங்கள் : வாய்மொழிப் பாடல்கள், துரைமார் குறிப்புகள், படைப்பு முயற்சிகள் 

தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் இலங்கை வந்து கண்டிச்சீமையில் (மலையகத்தில்) குடியேறிய பின்னர், அவர்கள் படைத்த முதலாவது மக்கள் இலக்கியம் நாட்டார் பாடலாகும். வாய்மொழி இலக்கியமான இந் நாட்டார் பாடல்களை மக்கள் நேரடியாகவே பாடியுள்ளனர். இந்தியாவிலிருந்து கண்டிச்சீமையை அவர்கள் வந்தடையும் வரை அனுபவித்த துயரங்கள் (கடல் காத்து வீசையில கண்ணுரெண்டும் சுத்துதடி, குடிச்சு வந்த  கஞ்சி கொட கொமட்டு வெளியாச்சுதடி), கண்டிச்சீமையில் அனுபவித்த துயரங்கள், கோப்பிக் காலத்து வாழ்வியல் நிலைமைகள், கங்காணி, கண்டாக்கு, துரைமார்களின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் பாடல்களையும் தமிழ் நாட்டில் இருந்தபோது அனுபவித்த சுதந்திரமான வாழ்க்கைமுறை கண்டிச்சீமைக்கு வந்ததும் எவ்வாறு மாறுபடுகின்றதென்பதையும் பல்வேறு கொடுமை நிலைமைகளின் சாரத்தையும் இப்பாடல்கள் வெளிப்படுத்தின. குறிப்பாக அவர்கள் பாடிய நாட்டார் பாடல்களில் இறுதி வரிகள் ஒவ்வொன்றும் இதனை தெளிவுபடுத்துகின்றன. 

“ஒதைச்சான்யா சின்னதொர”
“மூட்டெலும்ப முறிக்கிறானே”
“பொல்லாப்பு நேர்ந்ததையா”
“வேகுதையா என் மனசு”
“ஏண்டி வந்த கண்டிச்சீமை”
“பெத்த தாயே நா மறந்தேன்”
“அண்ணனை தோத்த மலை”

போன்ற வாய்மொழிப் பாடல்களின் இறுதித் தொடர்கள் இதற்குரிய சான்றுகளாய் அமைகின்றன.

இன்றைய மலையகத் தமிழர்களின் ஆரம்பகால வாய்மொழி இலக்கியங்களாக காணப்பட்ட நாட்டார் பாடல்கள் இலங்கை வருகையையும் கோப்பிக்கால அவலங்களையும், பின்னால் தேயிலைக் காலத்து வாழ்வியலையும் வெளிப்படுத்தியவையாக அமைந்தன. தமிழகத்தில் அவர்கள் பாடிவந்த பாடல்களே இலங்கை வாழ்வியல் மாற்றங்களுக்கேற்ப மாற்றிப் பாடப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.

“ஏத்தமடி கோட்டமலை”
“ஏத்தமடி பெத்தராசி”

ஆரம்பகால மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் வலிகளையும் அதன் உயிரோட்டத்தையும் முழுமையாக வெளிப்படுத்துபவையாகவே இந்நாட்டார் பாடல்கள் காணப்படுகின்றன.

மலையகத்தின் முதல் நூல் பற்றிய கணக்கெடுப்பு 

வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட மலையகச் சமூகத்தில் எழுதப்பட்ட முதலாவது நூலாக 1869ம் ஆண்டு ஆபிரஹாம் ஜோசப் என்ற தோட்டத்து கண்டக்டர் எழுதிய ‘கோப்பி கிருஷிக் கும்மி’ எனும் நூலை அடையாளப்படுத்துகின்றார் மு. நித்தியானந்தன் (2014). இந்த நூலை மலையகத்தின் முதலாவது நூலாக கொள்வது பெரும் அபத்தமாகும். கோப்பிப் பழம் பழுத்து அதனைப் பிடுங்கும் பருவத்தில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக கும்மிக்கொட்டிப் பாடுவதையும், தொழிலாளர்கள் தமது உள்ளத்தில் எழும் உணர்வுகளை தொழில் களத்தில் பாடுவதையும் ஆட்சேபகரமான பாடல்களாக எழுதுகிறார் ஜோசப் (கண்டக்டர்). அதனை ஆதரித்து, ஆபாசகரமான பாடல்களாக குறிப்பிடுகிறார் அந்நூல் பற்றி எழுதும் மற்றொரு கண்டக்டர். இது இவ்வாறிருக்க உண்மையான கும்மிப்பாடல்களின் அமைப்பு, உள்ளடக்கம் முதலியவற்றிலிருந்து வேறுபட்ட பாடல்களை ஆபிரகாம் ஜோசப் இயற்றி எழுதியிருப்பதோடு இப்பாடல்கள் மக்கள் சார்பற்றதாகவும் அவர்களுக்கு எதிரானதாகவும் அமைவதோடு தோட்டத்து அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய ‘அரசாதரவு’ நூலாகவே அதனை கொள்ளக்கூடியதாயுள்ளது. கோப்பிப் பயிர்ச்செய்கையை திறம்பட மேற்கொள்வதற்கான வழிகாட்டி நூலாகவே கோப்பி கிருஷிக் கும்மியை ஆபிரகாம் ஜோசப் கருதுகிறார்.

“பெரிய கண்காணிமாரே யென்னச்
சின்ன கண்காணிமார்களே நீர்
வரியொழுங்காய்ச் சனங்கள் யாரையும்
வருத்தி வேலைகள் கொண்டுவீர்”

என்று ஜோசப் எழுதும் வரிகளில் இக் கும்மிநூல் யாரை முதன்மைப்படுத்துகிறதென்பதை விளங்கிக்கொள்ளமுடியும். அதுபோலவே காடுவெட்டும் போது, முதல் நீர் ஓடியும், வேலைசெய்யப் பல, நட்டிடு கண்கள், சாயாமல் வை போன்ற பாடல்களையும் நாம் எடுத்துக்காட்ட முடியும். தொழிலாளர்களுக்கெதிராக கங்காணிகளை வழிநடத்தும் கண்டாக்டர் ஒருவரின் குரலாக ஒலிப்பதால் ஜோசப்பின் இந் நூலை ஆதரித்து எழுதியவர்களும் அதுபோன்ற ஒரு நூலை வரவேற்க துணிபவர்களும் அவ் வர்க்கத்தினராகவே (கண்டக்டர், துரைமார்) விளங்குகின்றனர். இதே காலத்தில் 1869 கொழும்பிலிருந்து வெளியாகிய ‘முனியாண்டி இதழ்’ தொழிலாளர்களின் குரலாக ஒலித்தமையை பலர் சுட்டிக்காட்டுகின்றனர். மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல் பற்றி மதிப்பீடு செய்யும் எல். சாந்திகுமார் அவர்கள், அவரது முதல் நூல் பற்றிய ஆய்வானது மக்களின் செழுமைமிக்க வாழ்வியல் சார்ந்த கலாசாரங்களை பின்தள்ளி அல்லது திரிபுபடுத்தி மலையக மக்களை ஒரு கூலிக் கலாசாரிகளாக உருவகிப்பதில் போய் முடியுமென்கிறார் (2022:259).

ஆங்கிலத் துரைமார் எழுத்தாக்கங்கள் 

மலையகத்தின் முதல் நூல் பற்றிய தேடலை சற்று விரிவுபடுத்தி பார்க்கின்றபோது கோப்பிக் காலத்தையொட்டி எழுதப்பட்ட பல்வேறு ஆவணங்களை துழாவ வேண்டியுள்ளது. 1900 ஆண்டுகள் வரை துரைமார்களால் எழுதப்பட்ட டயறிக் குறிப்புக்கள், வரலாற்று குறிப்புக்கள், கட்டுரைகள், களக்குறிப்புக்கள், பயணக் குறிப்புக்கள் முதலிய புனைவுசாராத (அபுனைவு) எழுத்துக்களையும், வில்லியம் நைட்டன் எழுதிய ‘இலங்கையில் காட்டு வாழ்க்கை’, டொனவன் மோல்ட்ரிச் எழுதிய கசந்த  கோப்பி (Bitter Berry Bontage) முதலிய புனைவுகலந்த எழுத்துக்களையும் நாம் எந்த வரிசையில் இணைப்பது? இவர்களது எழுத்துக்களும் பதிவுகளும் கோப்பிக் காலத்தில் வாழ்ந்த மலையகத் தொழிலாளர்களது பிரச்சனைகளையும் அவர்களது அவல வாழ்க்கையையும் மையமாகக் கொண்டவை. ‘டொரிங்டன்’, ‘தோமஸ் பெர்விக்’, ‘வெண்டோர்ட்’ முதலிய பிரித்தானிய துரைமார்களின் எழுத்துக்கள் மக்கள் சார்பானவையாகவே அமைகிறது. தோட்டத்து துரைமார்களால் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அநீதிகள் அவர்களது வாழ்க்கை முறையில் காணப்படும் அவலங்கள், மரணித்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை இந்த ஆவணங்களே எமக்கு தருகின்றன. குறிப்பாக கோப்பிக்கால வரலாறு பற்றி எழுதிய இரா. சடகோபனது நூலும் இந்த ஆவணங்களையே ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை.

upcountry srilanka

டொனவன் மோல்ட்ரிச் அவர்கள் பத்திரிகை நிருபராகப் பணியாற்றியபோது தோட்ட மக்களின் அவலங்களை நேரடியாகவே அவதானித்து எழுதினார். அவர் Times of  Ceylon பத்திரிகையில் “தொழிலாளர் உடல் நலத்திற்கு காட்டிய ஆர்வத்தை அந்த மக்களுடைய சமூக முன்னேற்றத்தில், பொதுநலம் சார்ந்த ஆர்வமாக காட்டுவதற்கு அவர்கள் தவறிப்போயினர்” என்று துரைமார் குறித்து எழுதுகிறார். ஏனஸ்ட் ஹக்கால் (Ernst – Haeckel, 1860 – 1870) என்பவர் “கோப்பித் தோட்டங்களில் தொழில் புரியும் பெண்கள் இயற்கை வனப்பு மிகுந்தவர்கள் எனினும் அவர்களது முகங்களில் சோகம் குடிகொண்டிருப்பதை என்னால் காணமுடிந்தது. கிராமத்துச் சிங்களக் கன்னியர்களிடம் கண்ட சிரிப்பை கோப்பி நிலத்து கோதையரிடம் நான்  கண்டதில்லை” என்று எழுதுகிறார். ஆங்கிலத் துரைமார்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் கோப்பிக் கால மலையக சமூகம் பற்றிய மதிப்பீட்டுக்கு மிகவும் அவசியமானவை. இயற்கை எழில், பயன் அனுபவம், பொருளாதார நடவடிக்கை, தொழிலாளர் பற்றிய பதிவுகள் என்பவை மீள ஆய்வு செய்யப்படவேண்டும். ஆங்கிலத் துரைமார்களின் இராச்சியமாக இருந்த கோப்பிக் காலத்தில் துரைமார்கள் அனைவரும் தொழிலாளர்களுக்கு எதிராகவே இருந்தார்கள் என்று கூற முடியாது. பலர் தோட்டங்களில் நடக்கும் அவல நிலையைக் கண்டு அத்துரைமார்களுக்கு எதிராகக் கருத்துக்களை தெரிவிப்பதோடு தொழிலாளர்கள் சார்பான பல கருத்துக்களையும் வெளிக்கொண்டு வந்தவர்களாகவே மதிப்பிடப்படுகின்றார்கள்.

கோப்பிக்காலத்து மலையகச் சமூகம் மற்றும் இலக்கியங்கள் பற்றிய கணிப்புத் தொடர்பில்  மேற்கூறப்பட்ட மூன்று விதமான இலக்கியங்களில் வாய்மொழிப்பாடல்கள் மக்கள் இலக்கியமாகவும், துரைமார்களால் எழுதப்பட்டவை மக்கள் சார்புடைய எழுத்தாவணங்களாகவும், ஆபிரகாம் ஜோசப் முதலியோரால் எழுதப்பட்டவை மக்களுக்கு எதிரான எழுத்தாகவும் அவதானிக்க முடிகிறது.

தேயிலைச்சமூகம் : தொடக்ககால எழுத்து முயற்சிகள்

1823ம் ஆண்டு ‘ஜோர்ஜ்பேர்ட்’ கோப்பிப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தது போலவே 1867ம் ஆண்டு ‘ஜேம்ஸ் டெய்லர்’, ஹோஹெட்ட பிரதேசத்தில் லூல்கந்தலா தோட்டத்தில் தேயிலைப் பயிர்ச்செய்கையை 50 ஏக்கரில் ஆரம்பித்தார். மலையகத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலைப் பயிர்ச்செய்கை மிக விரைவில் 3000 அடி முதல் 6000 அடி வரையான உயர்மலைப் பிரதேசங்களிலும் பயிரிடப்பட்டது. 1870ம் ஆண்டுகளில் அட்டன் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை 1924ல் இரத்தினபுரிவரை பரந்த பயிர்செய்கையானது. 1978ம் ஆண்டு 4700 ஏக்கராக இருந்த தேயிலைப் பயிர்நிலம் 1971ம் ஆண்டில் 5,97,171 ஏக்கராக விஸ்தரிக்கப்பட்டமையால் தேயிலைப் பயிர்ச்செய்கை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பல தொழில்கள் ஆண்டு முழுவதும் நடைபெற்றது. இதனால் மீண்டும் பல்வேறு காலகட்டங்களில் தொழிலாளர்கள் கண்டிச் சீமைக்கு வருகைத்தர ஆரம்பித்தனர். கோப்பிக் காலத்தைப் போலவே தேயிலைக் காலத்திலும் தொழிலாளர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். எனினும் தேயிலைப் பயிரிடலுக்குப் பின்னரே பெருந்தோட்டத்துறை என்ற ஒரு பொருளாதாரத் துறை உருவாகத் தொடங்கியது. பெருந்தொகையான தொழிலாளர்களது எண்ணிக்கை பெருந்தோட்டத் துறைகளில் நிலைப்படுத்தப்பட்டதுடன் இலங்கையை நிரந்தர வாழிடமாகக் கொள்ளக்கூடிய மனநிலைகளும் தொழிலாளர்களிடையே உருவாகத் தொடங்கியது. 1911ம் ஆண்டு மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 5,28,024 ஆக இருந்ததாகக் கூறப்படுகிறது (க.மோகன்ராஜ், 1984:29). தேயிலை பயிரிடப்படும் நிலப்பரப்பு, தொழிற் துறையின் விரிவாக்கம், தொழிலாளர்களின் எண்ணிக்கை முதலிய அடிக்கட்டுமானம் சார்ந்த கூறுகளால் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் (தேயிலை) உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் பெருந்தோட்டத் தொழிற் துறையில் இறப்பர், தெங்கு போன்ற பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளத் தொடங்கியமையால் பெருந்தோட்டங்கள் விஸ்தாரணம் மிக்கதாக அமைந்தன.

கோப்பிக் கால இலக்கியத் தோற்றுவாயின் சாட்சியங்களாக அக்கால வாய்மொழிப்பாடல்கள் விளங்கியதைப்போல தேயிலையுடனான வாழ்க்கை நிலைமைகளையும் இப்பாடல்களுக்கூடாக மக்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை. இன்று எமக்கு கிடைக்கக்கூடிய பெரும்பாலான வாய்மொழிப்பாடல்களில் அதிகமானவை தேயிலைத் தோட்டத்துப் பாடல்களாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

  1. “கொழுந்து வளர்ந்திருச்சு
    கூட போட நாளாச்சு”
  2. “சேந்து நெரே புடிச்சு
    சிட்டா பறக்குறாளே”
  3. “காலையிலே நெரே புடிச்சு
    காட்டு தொங்க போய் முடிச்சு
    கூடே நெறயலயே இந்த
    கூனப்பய தோட்டத்திலே”
  4. “இஸ்டோரும் கட்டியாச்சு
    இஞ்சிநீரும் பூட்டியாச்சு
    இளவட்டப் பெண்டுகளா எலே
    பொறுக்க வந்திடுங்க”
  5. “ஓடி நெற புடிச்சு
    ஒரு கூடே கொழுந்தெடுக்க
    பாவி கணக்கப்புள்ள
    பத்துராத்த போடுறானே”

(தொகுப்பு : சி.வி. வேலுப்பிள்ளை,1983)

தேயிலை பெருந்தோட்ட உருவாக்கம், அதன் தொழிற்துறை விரிவாக்கம், தொழிற்சாலைகள் உருவாக்கம், தொழிலாளர்களது ஈடுபாடு, அவர்கள் அனுபவித்த துன்பங்களை தேயிலைக் காலத்து வாய்மொழிப் பாடல்கள் யதார்த்தமாகவே வெளிப்படுத்தின.

பத்திரிகை எழுத்தின் தொடக்கம் 

கோப்பிக் காலம் முதல் தேயிலை உற்பத்திக் காலத்தின் கால் நூற்றாண்டுகள் வரை மலையக சமூகத்தின் இலக்கிய முயற்சிகள் பிரித்தானியர்களது  இலக்கிய எழுத்துகள் மற்றும் தொழிலாளர்களின் வாய்மொழிப் பாடல்களாகவே அமைந்திருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் இந்நிலை சற்று மாறுகின்றது. மலையகத்தின் ஆரம்ப காலத்து எழுத்து முயற்சிகள் பத்திரிகை எழுத்துகளாகவே அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மலையகத் தொழிலாளர்களை மையமாகக்கொண்டு அவர்களது வாழ்க்கை பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தும் வகையிலே பல்வேறு பத்திரிகைகள் வெளிவந்தன. இவை கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கின. அச்சுப் பதிப்புகளும், சிறு பிரசுர முயற்சிகளும் இக்காலத்தில் வெளிப்படத் தொடங்கியதும் பத்திரிகைகளுடன் சிறிய பதிப்பு முயற்சிகளும் வெளிவரத் தொடங்கின.

thesapakthan magazine

தேயிலைத் தோட்டத் தெம்மாங்கு (1912), தேயிலை கொய்யும் தெம்மாங்கு (1908), கும்மியோ கும்மியோ கும்மி கோப்பிக் காட்டுக் கும்மி (1918), குலவிளக்கு கும்மி (1922), தொழிலாளர் சட்ட கும்மி (1931), முத்துமாரியம்மன் கும்மி (1938), பஞ்சக் கொடுமைச் சிந்து (1919), நொண்டிச் சிந்தும் கும்மியும் (1920) என்ற தலைப்புகளில் பி. பண்டாரம், கே.எம். ஜபார், வில்சன் ஆகியோர் மக்கள் படும் துன்பங்களையும் பஞ்சக் கொடுமையினால் ஏற்பட்ட பரிதவிப்புகளையும், இரவில் வண்டிப்பாதை அமைப்பதில் படும் துயரங்களையும் புத்தக வடிவில் வடித்துள்ளனர். இவ்விதம் வெளியான பிரசுரங்கள் எல்லாமே கும்மி, தெம்மாங்கு, சிந்து என்ற பாடல் வடிவங்களில் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். தமிழ் மக்களிடையே ஆழ வேரூன்றியிருக்கும் பண்பாட்டு அம்சங்களையும் நாட்டுப்பாடல்களின் செல்வாக்கையும் அடியொற்றியே மலையகத்து ஆரம்ப எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன (சாரல்நாடன்: 2014,20).

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மலையக தொழிலாளர்களது பிரச்சனைகளும் அவர்களைப் பற்றிய விடயங்களும் எழுத்துப் பதிவுகளாக வெளிவரத் தொடங்கின. அவ்வாறான தொடக்கத்தை உருவாக்குவதில் அக்கால பத்திரிகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. லங்காமித்திரன் (1916), ஜனமித்திரன் (1918), தேசநேசன் (1921), தேசபக்தன் (1924), இலங்கை இந்தியன் (1928), ஜனநேசன் (1928) போன்ற பத்திரிகைகள் தோன்றி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கின (மேலது: பக்.22). லோரி முத்துகிருஷ்ணா, சத்தியவாகீஸ்வரய்யர், நெல்லையா ஆகிய பத்திரிகையாசிரியர்கள் செயற்பட்டதுடன் நல்லம்மா போன்ற பெண் ஆளுமைகளும் இப் பத்திரிகைகளில் தொழிலாளர்களைப் பற்றி தொடர்ந்து எழுதினர். குறிப்பாக இலங்கை இந்தியன் (1928) பத்திரிகையில் இலங்கையில் வாழும் இந்தியப் பெண்கள் பற்றியும் அவர்களது வாக்குரிமைப் பிரச்சனை பற்றியும் நல்லம்மாவினது தொடர் கட்டுரைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதே பத்திரிகையில் என்.எம். ஹைதரி அவர்கள் ‘இலங்கை வாழ் இந்தியரின் நிலை’ என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகளை எழுதினார். ‘இந்தியத் தமிழர்களுக்காக குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர்’ என்ற தலைப்பில் மு. நித்தியானந்தன் அவர்கள் கருமுத்து தியாகராச செட்டியாரைக் (1893-1974) குறிப்பிடுகிறார். 1918ம் ஆண்டு அவர் குடிவரத்து தொழிலாளர் கமிட்டியின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் “நான் இலங்கைத் தோட்டங்களில் இந்திய தொழிலாளர்கள் பற்றி மூன்று பிரசுரங்களையும், மண்டபம் நோய்த்தடுப்பு முகாம் கஷ்டங்கள் பற்றி ஒரு பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளேன். இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய பிரச்சனையைக் கடந்த 3 ஆண்டுகளாக ஆராய்ந்து வந்திருக்கிறேன்” என்று கூறியதை அறிய முடிகிறது (மு.நித்தியானந்தன்:2014:99).

தேயிலைக் காலத்தின் தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு வரையில் மலையகத் தொழிலாளர்கள் பற்றிய எழுத்துப் பதிவுகள் பத்திரிக்கையிலும் சிறுநூல் பிரசுரங்களிலுமே வெளிவந்தன. இம்முயற்சிகள் கொழும்பில் வணிகம் செய்யவந்த செட்டிமார்கள், தோட்டத் தொழிற்துறை சாராத, மற்றும் அங்கு வசிக்காத ஒரு பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே ஆரம்பகால எழுத்து முயற்சிகள் கல்விகற்ற, தோட்டத் தொழிலாளர்கள் பற்றி அக்கறை கொண்ட ஒரு சாராரினாலே மேற்கொள்ளப்பட்டமையை இங்கு அறியமுடிகிறது.

பெருந்தோட்டத்துறை விரிவாக்கம் : சிறுமுதலாளிகளின் வருகையும் தொழிலாளிகளின் வாழ்க்கையும்

இருபதாம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்தில் மலையகத் தோட்டப்பகுதிகளில் கல்வியறிவற்றோர் எண்ணிக்கை 100% இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறை விரிவாக்கபட்டமையால் போக்குவரத்துத் துறை, ரயில்வே பாதை அமைப்பு, வண்டிப்பயணம், தேயிலையோடு இணைந்த கைத்தொழிற்துறைகள் உருவாக்கம் பெறத் தொடங்கின. இதே சந்தர்ப்பத்தில் கரையோரப் பகுதி சிங்களவர்கள் இக்கைத்தொழில் முயற்சியில் ஈடுபட்டதுடன் சிலர் பெருந்தோட்டத்துறையில் முதலீடு செய்யக் கூடிய முதலீட்டாளர்களாகவும் இருந்தனர். சால்ஸ் டீ சொய்சா, யெரொனிஸ் பீரிஸ் ஆகியோர் பிரதானமாக பெயர் குறிப்பிடக்கூடிய முதலாளிகளாக காணப்பட்டதோடு சைமன் பெர்னான்டோ, ரிச்சர்ட் ஸ்டுவார்ட் பீரிஸ், ஹரமானிஸ் சொய்சா, சுசூ சொய்சா, யொகான்ஸ் டிமெல், அண்ட்ரிஸ் பீரிஸ், யக்கோப் டிமெல், யே.பி ஒபய சேகர, ஜி.எல். ஒபயசேகர, சொலமன் டயஸ் பண்டார நாயக்க ஆகியோர் மலையகப் பகுதியில் முதலீட்டுச் செயற்பாட்டில் ஈடுபட்ட கரையோரச் சிங்களவர்களாக காணப்பட்டனர் (குமாரி ஜெயவர்த்தனா, 2009).

கரையோரச் சிங்களவர்களான சிறுமுதலாளிகள் நிலங்களைக் கொள்வனவு செய்ததுடன் தமது முதலீட்டை நிறுத்திக் கொள்ளவில்லை. அதுவரையில் கரையோரப்பகுதிகளில் தாம் மேற்கொண்டிருந்த சாராயம் வடித்தல் மற்றும் அதன் விற்பனைகளை பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரித்து சாராயத் தவறணைகளையும் குத்தகைப் பெற்றனர். 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் 7,00,000 மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட பெருந்தோட்டத்துறையில் மதுபான விற்பனை அதிக இலாபத்தை ஈட்டுவதற்கு வாய்ப்பாயமைந்தது. நாளாந்தம் அதிகமாக தனது உடலுழைப்பை வழங்கிய தொழிலாளர்களது கடினமான உடலுழைப்பு அவர்களை மதுவுக்கு அடிமையாக்கியது. தொழிலாளர்களுக்கு சுதந்திரமற்றதொரு சுரண்டல் முறையை உருவாக்கிய பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்கள் அடிமை முறையாகவே நடத்தப்பட்டனர். இந்த அடிமைமுறையை நீட்சிபெறச் செய்வதில் சாராய விற்பனையும் இணைத்துக்கொள்ளப்பட்டது. தோட்டப்புறங்களில் சாராயத் தவறணைகள் அமைத்தமை பற்றியும் தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையானமை பற்றியும் பெர்கூஸன், அக்கால கவர்னர் வில்லியம் கிரகெரி, ஹயூ டிங்கர் போன்ற பிரித்தானியர்கள் பல்வேறு தளங்களில் குறிப்புகளை எழுதியுள்ளனர். அக்கால பத்திரிகையான ‘சிலோன் ஒப்சேவர்’ பத்திரிகையாசிரியர் பெர்கூஸன் தொழிலாளர்களின் குடிப்பழக்கம் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தோட்டத்துரைமார்களிடமிருந்து வந்த பல கடிதங்களில், தனது தோட்டத்தில் சாராயத் தவறணையை தாமே நடத்துவதற்கு அனுமதி கேட்டு எழுதப்பட்டிருந்ததாக கவர்னர் வில்லியம் கிரகெரி குறிப்பிடுகிறார். சாராயத் தவறணைகளால் ஏற்பட்ட தொல்லைகள் பற்றிய குறிப்பொன்று இவ்வாறு அமைகின்றது.

“மது மலிவாகவும் தாராளமாகவும் கிடைத்தது. அது சக்திவாய்ந்ததொரு வஸ்து. வேலை முடிந்ததும் தொழிலாளர்களில் பலர் அது தரும் வெறிமயக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். கூலியாட்களுக்கு உயிர்பாற்றலைத் மது வழங்கவில்லை. அது அவர்களை மதிமயக்கம் செய்து மறதி எனும் மாய உலகிற்கு இட்டுச்சென்றது” (ஹியு டிங்கர்,1920). 

பெருந்தோட்டத்துறை விஸ்தரிப்புடன் இலங்கையிலுள்ள சுதேசிகளின் முதலாளித்துவச் சிந்தனையும் வளர்ச்சிபெறத் தொடங்கியது. அதன் துரித வளர்ச்சியில் சாராய வியாபாரம் முன்னிலை வகித்ததாக அறியமுடிகிறது. ஒரு புறம் தொழிலாளர்களின் உழைப்பை கங்காணிகளின் ஊடாக பிரித்தானிய காலனியம் உரிந்ததென்றால் மறுபுறம் அவர்களது கூலிகளை சுதேச முதலாளித்துவம் அபரிமிதமாகச் சுரண்டியது. ஆகவே, இக்கால மலையகத் தொழிலாளர்களது வாழ்க்கை சீரழிந்த நிலையை உருவாக்கியதோடு அவலங்களின் மேல் அவலங்கள் நிறைந்ததொன்றாகவே மாறியது.

தொழிலாளர் போராட்டங்களின் ஆரம்பமும் தொழிற்சங்கம் பற்றிய சிந்தனைகளும் 

பெருந்தோட்டத்துறையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் இலங்கையில் பல்வேறு தொழிற்துறைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொழிலாளர்கள் தமது முதலாவது எதிர்ப்பு நடவடிக்கையாக வேலை நிறுத்தங்களை மேற்கொண்டிருந்தனர் (சுருட்டுத் தொழிலாளர்கள் (1896), அச்சுத் தொழிலாளர்கள் (1896), துறைமுகத் தொழிலாளர்கள் (1898)). இதன் தொடர்ச்சி 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வெவ்வேறு துறைசார்ந்த தொழிலாளர்களும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வழிகோழியது. 1901ம் ஆண்டு துறைமுகத் தொழிலாளர் போராட்டம், 1906ம் ஆண்டு வண்டித் தொழிலாளர்களது போராட்டம் (5000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்) என்பவற்றோடு இடம்பெற்ற 1912ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் போராட்டமானது பெருந்தோட்டத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள தொழிலாளர்களிடையே அதிர்வலைகளை உருவாக்கத் தொடங்கின. தொழிலாளர்களது வேலைநிறுத்தப் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அணிதிரளும் செயற்பாடுகள் அமைப்புரீதியாக ஒன்று திரள்வதற்கனான சூழ்நிலைகளை உருவாக்கின. இலங்கை தொழிலாளர் இயக்கம், இலங்கை தொழிலாளர் நலச்சங்கம் (1919), சமூக சீர்த்திருத்தச் சங்கம், சமூக சேவா சங்கம், தொழிலாளர் நலச் சங்கம் (1920), இலங்கை தேசிய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கூட்டுக்கழகம் (1920) முதலிய தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் அமைப்புகள் தோன்றியதோடு பொன். அருணாசலம், ஏ.ஈ. குணசிங்க, ஜோர்ஜ்.டி. சில்வா, பெரி சுந்தரம், சி.எச்.செட். பெர்னான்டோ முதலியோர் இவ்வமைப்புகளை தலைமைத்துவம் கொண்டு நடத்தியதோடு அதன் செயற்பாட்டாளர்களாகவும் விளங்கினர். தொடர்ந்து 1920ம் ஆண்டு இலங்கை முழுவதுமுள்ள ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்டனர். 1922ம் ஆண்டு ஏ.ஈ. குணசிங்க தலைமையில் இலங்கை தொழிற்சங்கம் உருவாகியது.

19ம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் முதலாம் கால் நூற்றாண்டு வரையான காலப்பகுதி பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்கள் இலங்கையின் ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு தொழிற்சங்கமாக உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகிய காலமாகும். எனினும் இக்காலப்பகுதியில் மலையகச் சமூகத்தின் எழுத்துப் பதிவுகளைப் பொறுத்தவரையில் கொழும்பு போன்ற நகரங்களில் இயங்கிய பத்திரிகைத் துறை சார்ந்ததாகவும் சிறுபிரசு வெளியீடுகளுமாகவே காணக்கிடைக்கின்றன. இக்காலப்பகுதியில் பெருந்தோட்டத் துறை சார்ந்த எழுத்தாவணங்களோ இலக்கிய முயற்சிகளோ எமக்குக் கிடைப்பது அரிதாயுள்ளது. அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் எழுதிய கவிதைகள் எமக்குக் கிடைத்தாலும் அவை ஓரிரு பாடல்களே கிடைத்துள்ளன.

மலையக தொழிற்சங்க உருவாக்கமும் எழுத்து முயற்சிகளும் : கோ.நடேசய்யர், கோ.ந. மீனாட்சியம்மாள் 

nadesaiyar

இலங்கைத் தொழிற்சங்க உருவாக்கத்தில் மலையகத் தொழிலாளர்களையும் அதில் இணைத்துக்கொள்வதில் ஏ.ஈ. குணசிங்காவின் பணி முக்கியமானதாகும். 1923ம் ஆண்டு முதன் முதலாக பொது வேலைநிறுத்தத்தை ஏற்படுத்தி தொழிலாளர்களை அணித்திரட்டினார்கள். 1923ம் ஆண்டு அகில இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறுவப்பட்டதோடு 1933ம் ஆண்டு இலங்கையில் தொழிலாளர்களின் வலிமையை தீவிரமாக எடுத்துக்காட்டினர். இலங்கையின் பல்லின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களும் அவ்வமைப்பில் இணைந்தனர். இலங்கையில் தொழிற்சங்க தோற்றம் தொடர்பான சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கிய காலத்திலேயே கோ. நடேசய்யரும் மலையக மக்களது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இலங்கையிலுள்ள பல்வேறுபட்ட தொழிலாளர்களிடமும் தொழிற்சங்க  சிந்தனைகளைப் பரப்புவதில் ஏ.ஈ. குணசிங்காவின் பங்களிப்பு முக்கியமானதென்றால், மலையக மக்களை தொழிற்சங்கமயப்படுத்துவதில் நடேசய்யரே பிரதான செயற்பாட்டாளராக விளங்கினார். நடேசய்யர் 1922ம் ஆண்டு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனத்தை ஆரம்பித்ததோடு ஏ.ஈ. குணசிங்காவுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1925ம் ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய எதிர்ப்புவாதம் மேலோங்க, நடேசய்யர் குணசிங்காவின் தொழிற்சங்கத்திலிருந்து பிரிந்து  தனியாகச் செயற்படத் தொடங்கினார்.

கோ. நடேசய்யர் : மலையகத்தின் முன்னோடி முயற்சிகள் 

மலையக அசைவியக்கத்தில் 1930 – 1950 வரையான காலப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுமார் ஒரு நூற்றாண்டுகாலம் காலனித்துவ அடிமைகளாகவும், கங்காணித்துவ அதிகாரத்திற்குட்பட்டவர்களாகவும் இருந்த இலங்கையில் குடியேறிய இந்தியத் தொழிலாளர்களை முதன் முறையாக தொழிற்சங்க அடிப்படையில் ஒன்றுதிரட்டும் வேலையை நடேசய்யர் தொடங்கினார். வரலாற்றில் இது முதல் சந்தர்ப்பமாகவும் அமைகிறது. தொழிலாளர்களது உரிமைகளுக்காக பல்வேறு கால கட்டங்களில் போராட்டங்களை நடத்தினார். தோட்டங்களுக்குச் சென்று கூட்டங்களை நடத்துதல், மக்களை விழிப்புணர்வடையச் செய்தல் முதலிய களச் செயற்பாடுகளை தொடங்கிவைத்தவர் நடேசய்யர்.

நடேசய்யரின் எழுத்துக்கள்

nedesaiyar's book

நடேசய்யரின் எழுத்துக்கள் பலவகைப்பட்டவை. வணிகம் சார்புடையவை, பத்திரிகை எழுத்துக்கள், பயணக்குறிப்புகள், ஆய்வு நூல்கள், பத்தி எழுத்துக்கள், கவிதைகள், புனைவுகள், நாடகம் என்று அவை விரிகின்றன. இலங்கையில் நடேசய்யர் செயற்பட்ட காலத்தில் பல நூல்களை எழுதினார். அவற்றில் மலையக தொழிலாளர்களுக்குரிய வழிகாட்டல்களை மேற்கொள்ளல், தொழிற்சங்க சட்டங்கள் பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளல் முதலிய அம்சங்களை அவரது புனைவு சாரா எழுத்துக்களில் அவதானிக்க முடிகிறது. பதினொரு பத்திரிகைகளை நடேசய்யர் நடத்தியிருந்தார். இலங்கையில் இருந்து வெளிவந்த அவரது ‘தேசபக்தன்’ அக்காலத்தில் குறிப்பிடத்தக்க பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கியதுடன் தொழிலாளர்களைப் பற்றிய பல விடயங்களை அப்பத்திரிகை கவனப்படுத்தியிருந்தது. நடேசய்யரின் புனைவு சார்ந்த இலக்கிய முயற்சிகள் மலையக இலக்கிய உருவாக்கத்தின் ஆரம்ப முயற்சிகளுக்கு அடித்தளமிடுகின்றன. ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘நரேந்திரபதியின் நரக வாழக்கை’, ‘மூலையில் குந்திய முதியோன்’ போன்ற படைப்புகளில் புனைவுப் பண்புகளை அவர் கையாளுகிறார். அவரது ‘தொழிலாளர் அந்தர பிழைப்பு நாடகம்’ இலங்கையில் வெளிவந்த நாடக நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நடேசய்யரது எழுத்துக்களில் பெரிதும் கங்காணித்துவ எதிர்ப்பே மேலோங்கியிருந்தது. தொழிலாளரை தொழிற்சங்க மயப்படுத்துவதும் அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும் இந்திய எதிர்ப்புவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும் அவரது கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. எவ்வாறிருந்தும் நடேசய்யர் மலையக சமூகத்தின் முன்னோடி அரசியல் சமூக செயற்பாட்டாளர் என்பதோடு மலையக இலக்கியத்தின் முன்னோடியாகவும் அவரை நாம் மதிப்பிட முடிகிறது. மலையக இலக்கிய உருவாக்கத்திற்கான ஆரம்ப முயற்சிகள் நடேசய்யரிலிருந்தே தொடங்குகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10205 பார்வைகள்

About the Author

சுப்ரமணியம் தவச்செல்வன்

‘மலையம் 200’ நிகழ்வுகளை முன்னிட்டு, விம்பம் அமைப்பினரால் எழுநாவின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சுப்ரமணியம் தவச்செல்வம் அவர்களால் எழுதப்பட்ட ‘இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு’ எனும் இக் கட்டுரை முதற் பரிசைப் பெற்றது. இக் கட்டுரை எழுநாவில் மூன்று பகுதிகளாக வெளியாகின்றது.